Share

Oct 7, 2020

காலத்தை எதிர்த்து நீச்சு போடும் தி. ஜா

 தி. ஜானகிராமன் பற்றி ஆதவன் 

"புராதன இலக்கியக் கலை வடிவங்களுக்கும் நவீன இலக்கியக் கோட்பாடுகளுக்குமிடையே ஓர் ஒருங்கிணைப்பை உருவாக்க முயலும் நுட்பமான பரிசோதனைகளாக அவருடைய படைப்புகளில் பல எனக்குத் தோன்றுகின்றன. 

அதாவது இன்றையத் தேவைகளுக்கேற்ற 

ஓர் இந்திய இலக்கிய பாரம்பரியத் தொடர்ச்சியை இனம் கண்டு நிறுவும் முயற்சிகளாக. "


தி. ஜா இறந்த போது 'கணையாழி'யில் 

இப்படி ஆதவன் எழுதியிருந்தார். 


இதை 1989ல் ஜானகிராமனுக்கு நான் வெளியிட்டிருந்த நினைவு மதிப்பீட்டு மடலில் இணைத்திருந்தேன். 


ஆதவன் அப்போது இல்லை.

 1987ல் யதார்த்தமாகவே அவரை 

காலவெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டது. 


அந்த கணையாழி இரங்கலில்

 இன்னும் சில வார்த்தைகள் கூட சொல்லியிருந்தார். 

பசுமரத்தாணி போல பதிந்து விட்ட ஒரு வரி :

" ஜானகிராமன் என்ற மனிதர் பற்றியும் பேசத் தோன்றுகிறது. ஆனால் இந்த ரசனையற்ற உலகில் பவித்ரமான நினைவுகளை அரங்கேற்றுவானேன் என்றும் தோன்றுகிறது. "


க. நா. சு 'கொட்டு மேளம்' தி. ஜானகிராமன் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டதையும் நினைவு மதிப்பீட்டு மடலில் சேர்த்திருந்தேன். 

" காலத்தை எதிர்த்து நீச்சுப் போடுவதென்பது சிரமமான காரியம். அதை இலக்கியப் பூர்வமாகவும், ஒரு அலட்சிய பாவத்துடனும் செய்திருக்கிறார் ஜானகிராமன். " 


க. நா. சு 1950களில் சொன்ன வார்த்தைகள். 

காலத்தை எதிர்த்து எப்போதும் நீந்திக் கொண்டே இருக்கும் படைப்புகளை தந்துவிட்டுப் போயிருக்கிறார். தி. ஜா. 


இதே தி. ஜா நினைவு மதிப்பீட்டு மடலில் வண்ணதாசன் எழுதிய வரிகள் ஒரு கடிதத்தில் எழுதப்பட்டதாகும். 


வண்ணதாசனுக்கும், வண்ணநிலவனுக்கும் வாலிபக்காலத்தில் உற்சாகமாக கடிதம் எழுதியிருக்கிறேன். இருவரிடமும் இருந்து 

பதிலே வரவில்லை. 

வண்ணதாசன் அப்பா தி. க. சி 

அடிக்கடி கடிதம் எழுதுவார். 


பழனியில் நான் அக்கவுண்ட் வைத்திருந்த பேங்க் மேனேஜர் ஒருவர் ஆர்வமாக கவிதை எழுதிக்கொண்டிருந்தார். அவருக்கு அன்னம் 

நவ கவிதை வரிசையில் 

கல்யாண்ஜியின் 'புலரி' 

நம்பிராஜன் 'ஆகாசம் நீலநிறம்' 

வண்ண நிலவன் 'மெய்ப்பொருள்' 

மூன்றும் கொடுத்து படிக்கச் சொன்னேன். 


அப்புறம் நவ கவிதை வரிசையில் வராத         கலாப்ரியா 'மற்றாங்கே' 


படித்து விட்டு கவிதை வேறு மாதிரி என்று பேங்க்கர் புரிந்து கொண்டார். 


அப்புறம் அவர் எழுதிய கவிதையொன்றை மா. அரங்கநாதனின் 'முன்றில்' பத்திரிக்கை விலாசம் கொடுத்து அனுப்ப சொன்னேன். 

முன்றிலில் பிரசுரமானது. 


வண்ண தாசன் பேங்க் ஆஃபிசர். அம்பாசமுத்திரத்தில் வேலை பார்க்கிறார் என்று நான் சொன்னேன். உடனே பழனி பேங்க் மேனேஜர் அவருக்கு கடிதம் போட்டார். எனக்கு பதில் எழுதாத வண்ணதாசன் இவருக்கு உடனே பதில் எழுதினார். ஒரே மனவாடு. இவரும் பேங்க்க்கு. அவரும் பேங்க்க்க்க்கு. ஸ்டேட்டஸ். .?! 

நானோ பேக்கு. 


வண்ணதாசன் அந்த பழனி அமெச்சூர் கவிஞருக்கு எழுதிய பதிலில் எழுதியிருந்ததையும் 

தி. ஜானகிராமன் மதிப்பீட்டு மடலில் சேர்த்தேன். 


அந்த கடித வரிகள் " புதுமைப்பித்தனும் 

தி. ஜானகிராமனுமான மனமும் வாழ்வும் நமக்கு அமைந்தால் போதும். இரண்டு பேரின் அக்கறையையும் வீச்சையும் தாண்டி, நம் வாழ்வோ அல்லது இலக்கியமோ ஒரு அங்குலம் கூட அப்புறம் நகர்ந்து விடப்போவதில்லை."

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.