Share

Showing posts with label சசிகலா. Show all posts
Showing posts with label சசிகலா. Show all posts

Feb 12, 2017

Confusion’s Masterpiece


சசிகலா பொதுச்செயலாளர் ஆன போது மக்கள் எதிர்ப்பு கிடையாது. ஆனால் முதல்வர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட போது தான் மக்கள் எதிர்ப்பு ஏற்பட்டது என்பதாக பன்னீர் செல்வம் தந்தி டிவி பேட்டியில் சொல்லியிருந்தது உண்மைக்கு எதிரானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
ஏனெனில் ஜெயலலிதா இறந்த பின் சசிகலா பொதுச்செயலாளர் ஆனதிலிருந்தே அதிருப்தி மிகப்பெரிய அளவில் எல்லா மட்டத்திலும் ஏற்பட்டு விட்டது. அத்தோடு அப்போதே முதல்வராவது தான் அவரது உடனடி இலக்கு என்பதும் தெரிந்தே இருந்தது.

பன்னீர் தன்னை அவமானப்படுத்தி விட்டார்கள் எனபதே மிகப்பெரிய ஜோக். எப்பய்யா உன்ன அதிமுகவில கனப்படுத்தியிருக்காங்க!?
சீவி சிங்காரிச்சு, சிங்காரிச்சு மூக்கறுத்துக்கிட்டே தானே இருந்தாங்க.
கருப்பட்டி குடுத்துட்டு, செருப்பால அடிச்சிக்கிட்டே தான்.... 


ஒரு கல்யாண வீட்டில் பந்தி நடக்கும்போது பெண்ணின் அப்பாவின் ஒரு புறத்தில் மாப்பிள்ளையின் உறவினர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார். இதை கவனிக்காமல் மறு புறத்தில் உட்கார்ந்திருக்கும் தன் நண்பரிடம் பாமர மாப்பிள்ளை வீட்டார் பற்றி திட்டிக்கொண்டே இருப்பார். இங்க பாருய்யா சரியான காட்டுமிராண்டி கூட்டம்யா இது என்று இரண்டு கையாலும் சாப்பிடும் ஒருவனை சுட்டிக்காட்டுவார். அப்பளத்தை அடுக்கி கையால் குத்தும் ஒருவனை காட்டி பொருமுவார். ’இப்படி தரமில்லாத இடத்தில் பொண்ணை கொடுத்துட்டேனே.. என்னய்யா என் தலையெழுத்து…’. அதை மாப்பிள்ளை உறவினர் நன்கு கேட்டுக்கொண்டே “ இரு, உன்னை வச்சிக்கிறேன்” என்ற சைகையுடன் பெண்ணின் அப்பாவைப் பார்த்து கறுவிக்கொண்டே, பரிமாறுபவர்களிடம் ”யோவ் சாம்பார ஊத்துய்யா” ”யோவ் நெய் ஊத்துய்யா” “ ரசம் ஊத்துய்யா” “அப்பளம் இன்னொன்னு கொடுய்யா” “கூட்டு இன்னும் வை” ”மோர் கொண்டாய்யா” “ பாயாசம் எங்கய்யா” வேக, வேகமாக சாப்பிட்டு விட்டு இலையை மூடி விட்டு பெண்ணின் அப்பாவின் அருகிலிருந்த மாப்பிள்ளை வீட்டு ஆள் எழுந்து சொல்வான் “யோவ்! மாப்பிள்ளை வீட்டு ஆள் அவ்வளவு பேரும் எந்திருங்கய்யா. என்னய்யா மானங்கெட்ட சாப்பாடு வேண்டிக்கிடக்கு. நானும் பந்தியில உக்காந்ததுல இருந்து பாத்துக்கிட்டு இருக்கேன் மாப்பிள்ளை சொந்த பந்தத்தை கண்ட படி இந்த பொண்ணாட அப்பா திட்டிக்கிட்டே இருக்கான். அவ்வளவு பேரும் எந்திரிங்கய்யா. இன்னக்கி ரெண்டுல ஒன்னு பாக்கணும்”


ஜெகஜீவன் ராம் இருபத்தைந்தாண்டுகள் அரசாங்க உத்தியோகம் பார்ப்பது போல காங்கிரஸில் இருந்து மந்திரி உத்தியோகம் பார்த்தவர். எமெர்ஜென்சி காலத்திலும் மத்திய மந்திரியாய் இருந்து விட்டு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கடைசியில் கட்சியை விட்டு வெளியேறி
'Congress for Democracy ' கட்சி ஆரம்பித்து ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து இந்திரா காந்தியை எதிர்த்தவர்.
அப்போது " இந்தியாவின் பிரதமர் ஆவீர்களா?" என நிருபர்கள் கேட்ட போது பவ்யமாய், அடக்கமாய் சொன்னார் : “I never shirk any responsibility this country wants me to shoulder.”
முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமாரின் தந்தை!
இந்த பாபு ஜெகஜீவன் ராம் ஞாபகம் வருகிறது ’பவ்யம் பாவ்லா’ பன்னீர் செல்வத்தை பார்க்கும் போது.

’இப்பவாவது கலகம் செய்யனும்னு பன்னீருக்கு தோண்றியதே’ என்ற ஆசுவாசத்திற்கு இடையில் இதெல்லாம் நினைக்க வேண்டியிருக்கிறது.

வீரமணியும், சுப்ரமண்ய சுவாமியும், திருமாவளவனும் சொல்வது “உடனே சசிகலாவை ஆட்சி அமைக்க கவர்னர் கூப்பிடனும்”
கவர்னர் இப்படி தாமதப்படுத்துவது நல்லது தான். கூவத்தூர்(ஊர் பெயரே தமிழக அரசியலை பகடி செய்கிற metaphor போல இருக்கிறது!) இதனாலாவது அதிமுக எம்.எல்.ஏக்கள் புழுக்கம் தாங்காமல் வெளியேற வாய்ப்பு இருக்கிறது. அங்கே இருந்து அவர்கள் வெளியேறி ஒரு ‘சிதறல்’ நடந்தால் நல்லது.
கவர்னர் உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதே மிகச் சிறந்த நிர்வாக நடவடிக்கையாக இருக்க முடியும்.
சசிகலாவுக்கு எதிரான மன நிலையில் ஒட்டு மொத்த தமிழகமும் இருக்கிறது.

சசிகலாவின் பதற்றம் – “ சீக்கிரம் என்ன மனையில தூக்கி வைங்களேன். இதுகள எத்தன நாள் என்னால கட்டி மேய்க்க முடியும்”

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு...

ஜில்ப்பு ஜிப்பான் ஜிப்பான் ஜலாபத்ரி ரெய்டு. ’குப்பு, குப்புன்னு வேர்க்க விடுறாய்ங்களே தவிர கொஞ்சம் கூட காய விடவே மாட்டேங்கிறானுங்களேம்மா..’


கூந்தல விரிச்சிப்போட்டு, செலம்ப ஒடச்சி “ அத்தனையும் மாணிக்கப்பரல்டா டேய்!”
ஒத்த மொலய பிச்சி வீசி.. பத்திக்கிட்டு எரியுது!



கவர்னருக்கு பகீரங்க மிரட்டல்”ஓரளவுக்கு பொறுமை காப்போம். பிறகு செய்ய வேண்டியதை செய்வோம்”
கவர்னரை வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு போய் அப்பல்லோவில் அட்மிட் பண்ண மாஸ்டர் பிளான் ஏதாவது வைத்திருக்கிறார்களோ என்னமோ?


ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தாமல் உடனே தேர்தல் வைத்தால் தான் விமோசனம்.
ஜனாதிபதி ஆட்சி என்றால் ஆறு மாதம் பா.ஜ.க அதிகார ஆர்ப்பாட்டம் இருக்கவே செய்யும். ’தமிழகத்தில் தேர்தலுக்கான சூழ்நிலை இல்லை’ என்று சொல்லி ஆறு மாதம் கழித்தும் மீண்டும் ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்படாது என்பது என்ன நிச்சயம்? ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தித்தான் ஆக வேண்டும் உடனே, உடனே தேர்தல் நடத்த சட்ட சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும்.

"Confusion has made it's masterpiece now"
- Shakespeare in Macbeth (Macduff's popular dialogue)

………………………………………………..

http://rprajanayahem.blogspot.in/2017/01/cakewalk.html

Jan 1, 2017

Cakewalk?


அண்ணா திமுக என்ற கட்சிக்கு புதிய பொதுச்செயலாளர் பதவிக்கு நியமனம் பற்றி அறிவு ஜீவிகள், மற்றும் தங்களை கொஞ்சம் விவரமான ஆளாக நினைக்கும் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட என்ன இருக்கிறது? இந்த கட்சி எந்த நடைமுறை நியாயத்திற்கும் கட்டுப்படாத கட்சி என்பது ஊரறியத் தெரியக்கிடக்கிறது.
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலிருந்து இந்த கட்சி இப்படித்தான் இருந்திருக்கிறது. ஜெயலலிதா அரசியலுக்கு வந்த காலத்தில் தான் வெண்ணிற ஆடை நிர்மலா காரணமாக மேல் சபையே கலைக்கப்பட்டது.
கட்சியில் எம்.ஜி.ஆருக்கு பிறகு முன்னிறுத்த எந்த ஆண் தான் அப்போது இருந்தார்?
இன்று மட்டும் அந்த அதிமுகவிற்கு திடீரென்று ரட்சகர் எங்கிருந்து வந்து குதிக்க முடியும்?
தமிழகத்தில் ஜெயலலிதாவுடன் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறதே என்று சங்கடப்பட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிக்காரர்கள் வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள்.
திராவிட இயக்கம் பெரியாரில் ஆரம்பித்து பாப்பாத்தி ஜெயலலிதாவில் வந்து நிற்கிறதே என்று திகைத்து அங்கலாய்த்தவர்கள் எவ்வளவோ பேர்.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே ’மன்னார்குடிகள்’ கையில் தானே கட்சி இருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், பழ.கருப்பையா உள்பட மன்னார்குடி கும்பல் அட்டகாசம், ஆர்ப்பாட்டம் பற்றி பிலாக்கணம் வைக்கத்தானே செய்தார்கள்.
இன்று சசிகலா பொதுச் செயலாளர் என்பதில் என்ன பெரிய ஆச்சரியம்,திகைப்பு, அங்கலாய்ப்பு வேண்டியிருக்கிறது?
கருணாநிதியை எதிர்ப்பவர்கள் எல்லோருக்குமே, ஜெயலலிதாவை ஆதரிப்பவர்கள் அனைவருக்குமே, துக்ளக் சோ உள்பட மன்னார்குடி கூட்டத்தார் பற்றி ஒரு Wilful blindness இருக்கத்தானே செய்தது.

What areas of the skull must be traumatized to cause Selective Amnesia?!
ஜெயலலிதாவுடன் அவ்வப்போது கூட்டணி வைத்த காங்கிரஸ், பா.ஜ.க., நல்லகண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட்கள், ராமதாஸ், திருமாவளவன், வைகோ, விஜயகாந்த் போன்றவர்களுக்கும் மன்னார்குடி சசிகலா பற்றி ஒரு Selective Amnesia இல்லாமலா இருந்தது?

"O wonder !
How many goodly creatures are there here!
How beauteous Mankind is!
O brave new world!
That has such people in it!"

-Shakespeare in ‘ Tempest’

2011 டிசம்பரில் சசிகலா போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட போது இதற்கு காரணம் சோ ராமசாமி தான் என்றார் சசிகலா. ஜெயலலிதா திட்டி வெளியே போகச் சொன்ன போது அங்கே சிரித்துக்கொண்டு சோ நின்றிருந்தாராம். மீண்டும் ’ஜெயலலிதா- சசிகலா உத்தர ராமாயணம்’ 2012 மார்ச்சில் முடிவுக்கு வந்த போது அதை சோ எதிர்த்து விட்டாரா என்ன?
ஹெலி காப்டரை பார்த்து சாஸ்டாங்க நமஸ்காரம் செய்யும் போது அதிமுக மந்திரிகளும், எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலாவுக்கும் தான் மரியாதை செய்திருக்கிறார்கள்.

அதிமுக என்ற ஒரு கட்சி அகில இந்தியாவைப் பொருத்தவரை மிகவும் ஒரு விசித்திரமான அமைப்பு.
காமராஜர் உயிருடன் இருந்த போது ஸ்தாபன காங்கிரஸ் தான் எதிர்கட்சி என்றிருந்த போது, அடுத்த பொதுத் தேர்தலில் எப்படியும் காமராஜர் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருந்த நிலையில் எம்.ஜி.ஆர் அண்ணா தி.மு.க ஆரம்பித்து அமோகமாக கட்சி எழுந்தது.
கூத்தாடி கையில், தமிழன் அல்லாத ஆள் கையில் தமிழ் நாடு போகிறதே என்ற பதைப்பு, அங்கலாய்ப்பு, புலம்பல் தி.மு.கவுக்கு மட்டுமின்றி ஸ்தாபன காங்கிரசுக்கும் தான் அன்று இருந்தது. வலது கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம் மட்டும் எம்.ஜி.ஆருக்கு பக்கவாத்தியம்.
திட்ட திட்ட திண்டுக்கல், வைய,வைய வைரக்கல். திண்டுக்கல் இடைத்தேர்தலில் அண்ணா திமுகவின் விஸ்வரூபம் காண முடிந்தது. திண்டுக்கல் பெருவெற்றி என்பது நுட்பமானது. மக்கள் செல்வாக்கை அன்று சுத்தமாக இழந்திருந்த கருணாநிதியை அல்ல, நல்ல செல்வாக்கு பெற்றிருந்த காமராஜரையே பின்னுக்கு தள்ளி விட்டு எம்.ஜி.ஆர் எழுந்து நின்றார். காமராஜரின் அரசியல் வாழ்வை இல்லாமலாக்கியதில் பெரும்பங்கு அதிமுகவிற்கு தான்.
தீப்பொறி ஆறுமுகமும், வெற்றி கொண்டானும், சாதாரண லோக்கல் பேச்சாளனும் கூட கருணாநிதி ஆசியுடன் படு ஆபாச அர்ச்சனை செய்தது ஒரு பக்கம்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த பின் துக்ளக் சோ ராமசாமியால் எம்.ஜி.ஆர் எப்படியெல்லாம் நையாண்டி அர்ச்சனை செய்யப்பட்டார்.’எம்.ஜி.ஆர் ஒரு சரியான காமெடியன்!’
அன்று படிக்காத பாமரனும், கிராமத்துப்பெண்களும் மட்டுமே எம்.ஜி.ஆரை கொண்டாடி அதிமுகவை மனையில் தூக்கி வைத்து விட்டார்கள்.
எம்.ஜி.ஆர் காலத்தில் அவருடைய மந்திரிசபையிலிருந்த க.ராஜா முகமது முன்னாள் மந்திரியான பின் “வண்ண மயில்” என்று ஒரு பத்திரிக்கை நடத்தியதுண்டு. பல இலக்கியத்தரமான விஷயங்கள் அதில் பிரசுரமாகியிருக்கின்றன.
ஜி. நாகராஜனின் “ ஓடிய கால்கள்” கதை அதில் வெளியிட்டிருந்தார்கள்.

ஜெயலலிதா காலத்தில் நடராஜன் ( சசிகலாவின் கணவர்) ’புதிய பார்வை’ என்ற தரமான பத்திரிக்கை நடத்தியிருக்கிறார். நிறைய எழுத்தாளர்கள் இதிலும் எழுதியிருக்கிறார்கள்.
புதிய பார்வை இன்னும் வருகிறதோ என்னவோ? அவரை ’புதியபார்வை’ ஆசிரியர்  நடராஜன் என்று தான் இப்போதும் குறிப்பிடுகிறார்கள்.


ஜெயலலிதா போல் போராட வேண்டிய அவசியமே இல்லாமல் இன்று சசிகலா கையில் கட்சி.
Cake walk! It happened to be an easy accomplishment for her to become a leader of the biggest party! Very Strange! முதலமைச்சராகவும் வரவேண்டும் என்று முழு கட்சியும் மன்றாடுகிறது. மன்றாடாத யாரும் கட்சியில் இருக்கவே முடியாதே!
சசிகலாவான்னு முகம் சுளிக்கிறவனெல்லாம் அதிமுகவுக்கு வெளியே இருக்கறவனும், கட்சியை விட்டு வெளியேற வேண்டியவனும் தான்.
கருணாநிதி திமுக தலைவரானப்ப கூட முகம் சுளித்தவர்கள் இல்லையா என்ன? சோனியா காங்கிரஸ் தலைவர் ஆனப்ப வெளி நாட்டுக்காரியா தலைவி என்ற முக சுளிப்பும் அருவருப்பும். பிஜேபிக்கு மோடி தலைவரானப்ப முக சுளிப்பு இல்லையா?( பிஜேபிக்கு பிரசிடெண்ட் யாராயிருந்தாலும் பிரதமர் மோடிக்கு கீழே தானே? தலைமைப்பதவி மோடிக்குத்தானே?) எந்த கட்சியில் தான் தலைமைப் பதவி
ஆயாசமின்றி, சலிப்பின்றி நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
’சசிகலா குரல் கூட கேட்க கிடைத்ததே இல்லை. இவர் பேட்டி கொடுப்பாரா?கட்சி கூட்டத்தில் பிரசங்கம் செய்வாரா’ என்றெல்லாம் வியாக்னங்கள்…
பொதுச் செயலாளர் நியமனத்திற்குப் பின் மேடைப்பேச்சு. கன்னிப்பேச்சு. குரல் சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது!
அண்ணா திமுக ஒரு வினோத உலகம். கட்சியின் இரண்டாவது தலைவரும் பெண். இன்று மூன்றாவது தலைவரும் பெண்.
இன்றைய தமிழக முதல்வர் உட்பட கட்சியின் பிற இரண்டாம், மூன்றாம் மட்டத்தலைவர்கள் தரை மட்டமானவர்கள்.
கீழ் படிதல் என்பது இவர்களை பொருத்தவரை ”தலை” கீழ் படிதல். விசுவாசத்தின் விரிவான தன்மையை மட்டுமே போட்டி போட்டுக்கொண்டு வெளிப்படுத்தக்கூடியவர்கள். ஒருத்தன் தும்பிக்கய தரையில ஊனி நாலு காலையும் தூக்கி சங்கு சக்கரமா சுத்தினா, இன்னொருத்தன் மரத்தில வால தொங்கப் போட்டு ஊஞ்சலாடுவான்.
எதிர் நிலை எடுக்கவே மாட்டார்கள். புளி மூட்டைகள்.
Consistency is the hallmark of Mediocrity.

வைகோ தீவிரமாக அதிமுக ஏஜண்ட் ஆக செயல் படுவதால் தான் நாஞ்சில் சம்பத் வெளியேறும் நிலை! இது தான் உண்மை. ரோஷம், தன்மானம் எல்லாம் கிடையாது! ஏற்கனவே கட்சியில் ஜெயலலிதாவால் தலையில் குட்டுப்பட்டு இருந்தவர் தான் Innocent Innova!

பா.ம.க, மதி.மு.க, தே.மு.தி.க, போல Booth, Stall, kiosk என்றால் ரோஷப்பட்டு பெரும், கடும் அறிக்கை விட்டு மயிரே போச்சுன்னு வெளியேறலாம்.
(தமிழக) காங்கிரஸ், (தமிழக) பா.ஜ.க போல அதிமுக என்ன ஓட்டை வண்டியா?
துபாய் போல கொழிக்க வழி வகையுடைய ரெட்டை இலையை விட்டு வெளியேற பைத்தியமா பிடித்திருக்கிறது? என்ன வேண்டுமானாலும் எவன் வேண்டுமானாலும் “ அடிமை” என்று ஏசிக்கொள்ளட்டும்.
உண்மையில் அதிமுகவில் சுகம் அனுபவிக்கும் மந்திரிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களா அடிமைகள்? அவர்களால் ஆளப்படும் இழி நிலையிலிருக்கும் இந்த ’எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்’ அல்லவோ அடிமைகள்!
’சோரம் செய்திடாமே, தீமை செய்திடாமே ஊரை ஆளும் முறைமை ஓர் புரத்திலும் இல்லை’ பாரதி சொல்லியிருக்கிறானே?
சசிகலா ஒரு Soft Target. ஒரு வகையில் எவ்வளவு ஆண்டுகளாக மிகக் கடும் விமர்சனங்கள். இன்று அதன் உச்சம். எல்லார் வாயிலும் விழுந்து கொண்டு…
முதல்வர் ஓ.பி.எஸ் மற்றொரு soft target. ஆனாலும் பதிலுக்கு சவாலாக, கோபமாக ஒரு வார்த்தை பேசி இன்று வரை பார்த்ததில்லை. ’பவ்யம் பாவ்லா’ பன்னீர் செல்வம்!
வெட்டிபயலெல்லாம் என்னமா சவடால் விடுறான்.’ரத்த ஆறு ஓடும்’ சவால் வைகோவின் ஆவேசத்தையும் பார்க்கத்தானே செய்கிறோம்.
பன்னீர் எப்போதும் சித்தர் போல ஒரு பார்வை.
எப்போதும் VRS மன நிலையில்!
கருணாநிதி சகாப்தம் ஏறத்தாழ முடிவுக்கு வந்து விட்டது.
இனி தி.மு.க.வில் ஸ்டாலின் தான் ’இன்றைய நிலை’யில் சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்யப்போகிறவர். “ஆக, சசிகலா அம்மையார் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்றால்…………ஆக….ஆக….ஆக..”
ஆகாககாக!

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு –இது ஒரு cliché.
இந்த வாக்கியம் படு அபத்தமானது. இலவசங்கள் வாங்க தவித்து தக்காளி வித்து, தேர்தல் நேரத்தில் பணமும் வாங்கும் மக்களை மகேசனோடு ஏன் ஒப்பிட வேண்டும்.
ருக்மணி கிருஷ்ணன் – இந்தப்பெயர் யாருக்காவது இருக்கிறதா? அன்றைய ஜனாதிபதி முதல் இன்றைய ஆஃபீஸ் பாய் வரை ’ராதாகிருஷ்ணன்’ தானே!
 



“LIVE IN SECLUSION. SHOW NO INTEREST IN POLITICS AND THE COMMUNITY.”
- EPICURUS

...........................................................





http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_09.html

.................