Share

Dec 29, 2012

Very badly in need of moneyசரி என்றோ தவறு என்றோ இரண்டு விஷயம்.
Akrasia என்று ஒரு கிரீக் கான்செப்ட். எது சரியோ அதைச்செய்யாமல் இருப்பது. தவறானது எதுவோ அதைச் செய்வது. Akrasiaவால் பாதிக்கப்பட்டவர்களை தூக்கத்தில் இருப்பவனோடு,குடிபோதையில் இருப்பவனோடு  அரிஸ்டாட்டில் உதாரணப்படுத்துவாராம்.

கிரேக்க துன்பவியல் நாடகங்களில் கதாநாயகனுக்கு நன்மையோ,தீமையோ தேர்ந்தெடுக்கும் உரிமையை தெய்வங்கள் கொடுத்திருக்கும்.அவன் எப்போதுமே தீமையைத்தான் தேர்ந்தெடுப்பான்.The worse I do, the more popular I get என்று குதூகலமா?

நன்மை,தீமையென்று இல்லாமல் உணர்வுகளை அடையாளம் காண்பதில் கூட சிக்கல். தி.ஜானகிராமன் :”நாம அனேகமா வருத்தத்தைச் சந்தோஷம்னு நெனச்சுக்கிறோம்.சந்தோஷத்தை வருத்தம்னு நெனச்சுக்கிறோம்.”


அந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள்.சுதாகர் கதாநாயகன். தயாரிப்பாளர் ’கௌரவம்’ படத்தை எடுத்த ஹிண்டு ரங்கராஜன்.இயக்குனர் பி.ஆர்.சோமு.
ஹிண்டு ரங்கராஜன் வீட்டிலேயே முன்னறையில் ஆஃபிஸ்.

 ஒரு நடிகையின் அப்பா வருகிறார். ஒரு ஃபோன் பேசவேண்டும் என்று டைரக்டரிடம் சொல்லி விட்டு டயல் செய்கிறார். “நான் ...நடிகயோட அப்பா.. என்னங்க இப்படி செய்றீங்க…போன மாதமே சம்பளம் செட்டில் பண்றேன்னு சொன்னீங்க….இப்படி இதோட நாலு தடவை சொல்லிட்டீங்க. என்னது..அடுத்த மாசமா?..No..No..No..No..I’m very badly in need of money now..This is the limit.. I’m very badly in need of money.. No..No excuses..I’m very badly in need of money…No..No.. I’m very badly in need of money…” கோபத்தோடு ஃபோனை டக்கென்று வைக்கிறார்.
டைரக்டர் “யார் கிட்ட பேசினீங்க.?”
”சலீம் கிட்ட தான்.பைலட் பிரேம்நாத் புரொட்யூசர் சலீம். ”அவர் எடுத்த இன்னொரு படம் என் மகளுக்கு payment இன்னும் கடைசி செட்யூலுக்கு செட்டில் பண்ண மாட்டேங்கிறாரு..”
டைரக்டர் பதறி ”என்னங்க அவர் கிட்டப்போய் இவ்வளவு வெரப்பா பேசறீங்க..இது நியாயமே கிடையாது.”
“யாரா இருந்தா என்னங்க…I’m very badly in need of money.”
“சலீம் சார் கிட்டப்போய் இப்படி பேசறீங்க.” டைரக்டர் புலம்புகிறார்.

 பைலட் பிரேம்நாத் புரொட்யூசர் தயாரித்து அரைகுறையாய் நின்று போனது ஒரு படம். இப்படி அறைகுறையாய் படம் நின்று போய்விட்டால் தயாரிப்பாளரை தரித்திரம் பீடித்து விட்டது என்று அர்த்தம்.மோகன் பாபு நடித்த படம். மோகன்பாபுவுக்கு பிராமணர் வேடம். ஷாட்டின் போது பூணூல் மாட்டவேண்டும். கொல்ட்டி மோகன் பாபு பூணூல் வேண்டி அசிஸ்டண்ட் டைரக்டரிடம் ”ப்பூல்..?ப்பூல்..?”என்று கூப்பாடாம்! ’ணூ’ dropped. ”தூக்கிக்காட்டனுமா?”என்று ஒரு புரடக்‌ஷன் அஸிஸ்டண்ட் சொன்னானாம்.

ஆஃபிஸில் போன் பேசி விட்டு நடிகையின் தந்தை மேலும் பல கதை பேசிவிட்டுப் போனவுடம் “பைலட் ப்ரேம்நாத்” சலீம் கிட்டப்போய் இப்படி இந்தாளு ரஃப்பா பேசுறாரே..”ன்னு மீண்டும் டைரக்டர் புலம்ப ஆரம்பிக்கிறார்.

மறு நாள் ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் இரண்டாவது ஃப்ளோரில் ஷூட்டிங்.சுதாகருடன் நடிகை நடிக்கிற காட்சிகள்.
ஷூட்டிங் ஒரு வழியாக முடிந்து இரவு கம்பெனி கார் நடிகையை வீட்டிற்கு அழைத்துப்போன சிறிது நேரத்தில் ஸ்டுடியோவுக்கு ஒரு போன்.
” நடிகையோட அப்பா  இறந்து விட்டார்.உடனே அவர வீட்டுக்கு அனுப்புங்க.”

மறு நாள் பிணத்தை அந்த டவர் ப்ளாக்கிலிருந்து படி வழியாக இறக்கும்போது அந்த நடிகை தன்னை தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கிற பெண்கள் சூழ அழுதவாறு “இருங்க.. ஒரு நிமிஷம்.. என்னை விடுங்க…”
” என்னம்மா..”
” என்னை விடுங்க.. ஒரு நிமிஷம்..”
பிணத்தை இறக்கிக்கொண்டு இருப்பவர்கள் சற்றே நிற்கிறார்கள்....சூழ நிற்பவர்கள் கவனம் முழுவதும் இப்போது நடிகை மீது தான்..

  “ அப்ப்பா.. போயிட்டு வர்றேன்னு ஒரு வார்த்த சொல்லிட்டுப் போங்கப்பா”

An actress has an enormous opinion of herself !

Dec 21, 2012

எங்க எம்.ஜி.ஆரா இருந்தா’மிஸ்ஸியம்மா’ படத்தில் முதலில் பானுமதி தான் நடித்திருக்கிறார். ஆனால் அவர் பின்னர் மாற்றப்பட்டு சாவித்திரி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.தமிழில் ஜெமினி கணேசன், எஸ்,வி.ரங்கா ராவ், தங்கவேலு, ஜமுனா ஆகியோரும் நடித்த இந்தப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்ட போது இரண்டு பெரிய ஹீரோக்கள் நடித்தார்கள். என்.டி.ராமாராவ் கதாநாயகன்.அக்கினேனி நாகேஸ்வர ராவ் தமிழில் காமெடியன் தங்கவேலு நடித்த பாத்திரத்தில் நடித்தார்! ’தேவதாஸ்’ நாயகன் அதன் பிறகு காமெடி ரோல் செய்திருக்கிறார்!

’குறவஞ்சி’ படத்தில் முதலில் எஸ்.எஸ்.ஆர் கதாநாயகனாக ஒப்பந்தமாகிய நேரத்தில் அவர் விஜயகுமாரியை திடீர் திருமணம் செய்திருக்கிறார்.அதனால்  தயாரிப்புத்தரப்புக்கு ஏற்பட்ட இடைஞ்சலால் சிவாஜி கணேசன் நடிக்க நேர்ந்திருக்கிறது. ‘மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள்! வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்!’

’வேட்டைக்காரன்’ படத்தில் சரோஜாதேவி தான் நடிப்பதாக இருந்திருக்கிறது. ஆனால் அவருடைய அம்மா செய்த பந்தாவால் சாண்டோ சின்னப்பா தேவர் மனம்புண்பட்டுப் போனார். அதனால் எம்.ஜி.ஆருக்கு சாவித்திரி கதாநாயகியாகியிருக்கிறார்.

’பணமா பாசமா’ 1968ம் ஆண்டு வந்த படம். இயக்குனர் திலகம்  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கம்.ஜெமினி கணேசன்,சரோஜாதேவி, நாகேஷ் நடித்த படம்.
பணமா பாசமா எஸ்.வரலட்சுமி, டி.கே பகவதி, விஜய நிர்மலா ஆகியோருக்கு புது வாழ்வு கொடுத்த படம்.
குறிப்பிட்ட முந்தைய கால கட்டத்தில் எஸ்.வரலட்சுமி, டி.கே.பகவதி அந்த நேரத்தில் மறக்கப்பட்ட கலைஞர்கள்.
எஸ்.வரலட்சுமி வீரபாண்டிய கட்டபொம்மனில் சிவாஜிக்கு ஜோடி.அப்புறம் கந்தன் கருணையில் இந்திராணியாக “வெள்ளிமலை மன்னவா வேதம் நீயல்லவா” என்று தன் குரலில் பாடி நடித்திருந்தார்.
டி.கே.பகவதி சம்பூர்ண ராமாயணத்தில் ராவணன். சிவகெங்கைச் சீமையில் பெரிய மருது.
விஜய நிர்மலா ’எங்க வீட்டுப் பெண்’ தமிழ் படம் மூலம் அறிமுகம்.அடுத்து கே.எஸ்.ஜியின் ‘சித்தி’படத்தில் எம்.ஆர்.ராதா மகளாக,முத்துராமனுக்கு ஜோடியாக (சந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா?பாடல்)
பணமா பாசமா படத்தில் எஸ்,வரலட்சுமி, பகவதி, விஜய நிர்மலா மூவரும் பின்னியெடுத்திருப்பார்கள்.
 அந்த பணத்திமிர் மாமியார் வரலட்சுமி பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
’அலேக்’ நிர்மலா என்று பேர் பெற்று ‘எலந்த பயம் எலந்த பயம்’ பாட்டின் மூலம் கொடி கட்டினார் விஜய நிர்மலா.
அமெரிக்கையான கண்ணியமான அப்பாவாக எல்லோர் மனதிலும் பகவதி இடம் பிடித்தார்.
அதன் பிறகு தமிழ்ப்படங்களில் சிலவருடங்கள் பிசியாக நல்ல ரவுண்டு வந்தார்கள்.
பணமா பாசமா மாமியார் ரோலுக்கு எஸ்.வரலட்சுமி நடிப்பு முதலில் இயக்குனர் கே.எஸ்.ஜிக்கு கொஞ்சமும் திருப்தியே இல்லையாம். சாவித்திரியிடம் போய் “வரலட்சுமி சரியில்லை.நீ தான் அந்த ரோலை பிரமாதமாக செய்யமுடியும்” என்று கெஞ்சியிருக்கிறார். ஜெமினி கணேசனுக்கு மாமியாராக சாவித்திரி!
சாவித்திரி பதில்: வாத்யாரே! நான் தான் அந்த மாமியார் ரோல் செய்தே ஆக வேண்டும் என்று நீங்க நினைச்சா ஹீரோவ மாத்திடுங்க.
கே.எஸ்.ஜிக்கு ஹீரோவை மாற்ற விருப்பமே இல்லை. அந்த ரோலுக்கு ஜெமினி தான் சரியான சாய்ஸ்.
சாவித்திரி உடனே ’வரலட்சுமியை மாற்ற வேண்டாம். நான் அவளுக்கு கவுன்சலிங் செய்கிறேன்.இனி பிரமாதமா அவ நடிப்பா’ என்று எஸ்.வரலட்சுமியை நேரில் சந்தித்து கோச்சிங் கொடுத்திருக்கிறார்.

ராஜேஷ் கன்னா தூள் கிளப்பிய ‘சச்சா ஜூட்டா’ படத்தை வாங்கி ரீமேக் செய்ய ரொம்ப பிரயாசைப்பட்டவர் நடிகர் பாலாஜி. ஆனால் எம்.ஜி.ஆர் அந்தப்படத்தின் மீது கண் வைத்து விட்டார். பாலாஜி வாங்கியிருந்தால் சிவாஜி கணேசன் தான் நடித்திருப்பார்.எம்.ஜி.ஆர் தான் ’நினைத்ததை முடிப்பவன்’ ஆயிற்றே! படத்திற்கு ’நினைத்தை முடிப்பவன்’ என்றே தான் பெயரும் வைத்தார்.

சின்ன அண்ணாமலை சிவாஜி ரசிகர் மன்றங்களை வழி நடத்தியவர்.
’சொன்னால் நம்ப மாட்டீர்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அதில் ஒரு சுவாரசிய நிகழ்வை எழுதியிருக்கிறார்.
இவர் காரில் வந்து கொண்டிருந்திருக்கிறார். ஒரு தியேட்டரில் ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்திருக்கிறது. படம் ’வீரபாண்டிய கட்டபொம்மன்.’ இவர் காரிலிருந்து இறங்கி பார்த்திருக்கிறார். எல்லோரும் கவலை தோய்ந்த முகத்துடன் நடந்து வந்து கொண்டிருந்திருக்கிறார்கள். இவர் ரொம்ப சோகமாய் வந்து கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி ’படம் எப்படி இருக்கு?’ என்று கேட்டிருக்கிறார். அந்த ரசிகர் உடனே ரொம்ப வேதனையுடன் சொல்லியிருக்கிறார் “ என்னங்க படம் இது. சிவாஜி சரியில்லீங்க. இதுவே எங்க எம்.ஜி.ஆரா இருந்தா சண்டை போட்டு அவ்வளவு வெள்ளைக்காரனுங்களையும் அடிச்சி விரட்டியிருப்பாரு! பானர்மேன தூக்குல தொங்கவிட்டுருப்பாரு! இப்படி சிவாஜி மாதிரி தூக்குல தொங்கியிருக்கவே மாட்டாரு.”

நாம், மதுரை வீரன், பாசம் போன்ற படங்களில் எம்.ஜி.ஆர் இறப்பதாக காட்சி உண்டு. அதனால் இடை வேளையிலேயே ரசிகர்கள் பலர் தியேட்டரை விட்டு கிளம்பி விடுவார்கள். இடைவேளைக்கு பிறகு படம் பார்த்தாலும் க்ளைமாக்ஸ் பார்க்காமல் எழுந்து சென்று விடுவார்கள்!

Dec 18, 2012

M.D.ராமநாதன்M.D.ராமநாதன் பாடும்போது......


ஓவியத்தில் ஒரு கோபுரத்தின் உயரத்தைக் காட்ட வேண்டுமானால் அந்த கோபுரத்தின் பக்கதில் ஒரு தென்னை மரத்தை வரைந்து விட்டால் போதும். எம்.டி.ராமநாதன் பாவத்தோடு பாடும்போது இப்படி இசை சித்திரமாக விரியும்.
 
youtubeல் Why this கொலவெறி தாண்டி Gangnam style செம ஹிட் ஆகி இருக்கிற வேளையில் M.D.ராமநாதன் பற்றி எழுதுகிற பிடிவாதம்..

டைகர் வரதாச்சாரியின் சீடன் M.D.ராமநாதன். டைகர் மாறுகண் கொண்டவர். ராமநாதன் எந்த அளவுக்கு குருவை உள்வாங்கி செரித்துக்கொண்டார் என்றால்,அவருடைய மாறுகண் கூட இவருக்கும் வந்து விட்டது.The best example of a true devotee to Guru! The relationship was so noble that the student inherited even the squint in the eyes.
தேவச பாகவதரின் மகனாக பாலக்காடு மஞ்சப்பராவில் பிறந்து பிசிக்ஸில் பி.எஸ்.சி பட்டம் பாலக்காடு விக்டோரியா கல்லூரியில். கலாசேத்ராவில் இசையில் பட்டம். முதல் பேட்சில் இவர் ஒரே மாணவர் தான்.
டைகர் வரதாச்சாரியின் இசை ஞானத்தை  முழுவதுமாக உறிஞ்சிக்குடிப்பதைக் கண்டு (கிட்டத்தட்ட கொள்ளை)செல்லமாக ராமநாதனை “திருடன்!” என்றே சொல்வார். A Fitting recognition of merit!
இவருடைய வாய்ப்பாட்டு ஸ்லோ டெம்போ.
Speed is a hindrance and never a help.
Be very relaxed, and much will happen.
-         - Osho
சஹானா, யதுகுல காம்போதி, ஸ்ரீ, கேதாரம் இதெல்லாம் இவர் பாடக்கேட்க பிரபல வாய்ப்பாட்டுக்காரர்கள் தவம் இருப்பார்கள்.
இவர் ஒரு ம்யூசிக் தெரபிஸ்ட் என்று சொல்லப்படுவதுண்டு. ரத்தக்கொதிப்பு குணமாகி விட்டதாக இவர் பாடல்களைக் கேட்ட ஒரு ரசிகர் சொன்னதுண்டு.
மயிலை கபாலீசுவரர் மீது ‘பரமகிருபாநிதே’ என்றும் ‘சம்போ மஹாதேவா’ என்றும் கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார்.
பாகேஸ்வரி ராக ’சாகர சயனா’ இவர் இயற்றியது.
இந்திய அரசாங்கம் எம்.டி.ராமநாதனுக்கு பத்மஸ்ரீ பட்டம்1974ல் வழங்கி கௌரவித்தது. சங்கீத நாடக அகாடமி விருது, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் சங்கீத கலாசிகாமணி விருது வாங்கியவர்.
 முத்துசாமி தீட்சிதரின் நாட்டை ராக ’மஹா கணபதிம்’
ஸ்ரீ வரத தாசாவின் அடானா ராக ’ஹரியும் ஹரனும்’ இவர் பாடியதை கேட்பது ரசானுபவம்.
தியாகய்யரின் ஹிந்தோளம் ‘சாமஜ வரகமனா’ ஓராயிரம் தடவை ஒரு நூறு பேர் பாடக்கேட்டிருக்கிறேன்.ஆனால் எம்.டி ராமநாதன் பாடுவது மட்டும் ஒரு புது அனுபவம் தான்.
தியாகய்யரின்  சஹானா ’கிரிபை நெல’ இவர் பாடி மட்டுமே கேட்கவேண்டும். ஆத்மீக அனுபவம்.
காபி தில்லானா தரும் ஆசுவாசம்.
1984ல் இவர் மறைந்த போது வயது 61.
...........

M.D.ராமநாதன் பற்றிய கவிதை
ராமநாதன் பாடும்போது
(இசை மேதை M.D.ராமநாதனுக்குச்
சமர்ப்பணம்)
ராமநாதன் பாடும்போது
ஏதோ பனிமூடிய பூமியில்
புதைந்து போன
புராதன நகரத்தெருக்களில் திரியும் ரசிகன்
இப்போதும் வற்றாது தவழ்ந்தோடும் மனித
சப்தத்தின்
தெளிந்த நீர்ச்சுனையைக் கண்டடைகிறான்.

ராமநாதன் பாடும்போது
இறந்து கொண்டிருக்கும் பூமியிலிருந்து
பறந்துயரும்
கடைசி விண்வெளிவீரன்
வேறொரு நட்சத்திரத்தில் இலை விரித்து
முளைக்கும்
உயிரின் தளிரைக் கண்டடைகிறான்

-        - சச்சிதானந்தன் எழுதிய கவிதை
  மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு 1991ல் மீட்சி 35வது இதழில்       வெளியானது

.......

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_31.html

http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_29.html