Share

Apr 29, 2020

எல். ஆர். ஈஸ்வரி

'பட்டத்துராணி பார்க்கும் பார்வை'  பாட ரொம்ப உழைத்திருக்கிறார்.
அத சொன்னா சில இசை ரசிகர்களுக்கு கோபம் கூட வரும்.
சாதாரணமா ஒரு பாட்டு ரொம்ப ரீச் ஆனாலே
 இசை ரசிகர்கள் பலருக்கு பிடிக்காமல் போகும்.

பட்டத்து ராணிக்கு முற்றிலும் மாறுபட்ட                மென்மையான பாணியில்
அவருடைய மாஸ்டர் பீஸ் ' காதோடு தான் நான் பாடுவேன்' பற்றி நான் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியம்
இங்கு யாருக்கும் இல்லை

'ஒற்றுமையாய் வாழ்வதாலே என்றும் நன்மையே'  சீர்காழியோடு எல். ஆர். ஈஸ்வரி சேர்ந்து
பாடும் போது சிலிர்க்க வைக்கும்படி
அவர் குரல் இருக்கும்.

'தாழம்பூவே தங்க நிலாவே தலையேன் குனிகிறது'
என்று டி. எம். எஸ் கேட்கும் போது ஈஸ்வரியின் பதில் துள்ளலாக வரும்.

'முள்ளில் ரோஜா, கள்ளூறும் ரோஜா ' பி. பி. ஸ்ரீநிவாஸ் சுகிர்த முனகலுடன் சேர்ந்து குழையும் பெண் குரல்.

'கண்ணுக்கு தெரியாத அந்த சுகம்'
எடுத்துக் கொடுத்து
பி. பி. எஸ் குரலோடு இழைவார்.

'பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது ' அடி பட்டு தத்துவமாக புலம்பும் சந்திர பாபுவுக்கு எள்ளலான எல். ஆர் ஈஸ்வரியின் குறும்பு எதிர்வினை.

' மலருக்கு தென்றல் பகையானால்'
தவித்த சுசிலாவுக்கு, தவி தவிப்பாக சவாலாக ஈடு செய்யும் சோக ஈஸ்வரி.

' நம்பள் கி பியாரி நம்பள் மஜா பண்ணலாமா' நூல் விடும் அதே பாபுவுக்கு 'கோடையில் காஷ்மீர் சென்றால் வாடை காற்றும் உண்டு' என்று ஜெயலலிதாவுக்காக மாலீஷ் பண்ணும் சேட்டை.

தட்டு தடுமாறி நெஞ்சம், கை தொட்டு விளையாட கெஞ்சும் பாட்டில் 'இரவென்றும் பகலென்றும் அறியாத உலகில் இரு பேரும் விளையாட வேண்டும்' என்ற தூண்டலும், தூண்டிலும்.

'வாடைக்காற்றம்மா, வாடைக்காற்றம்மா, வாலிப மனதை நாளுக்கு வாட்டுவதென்னம்மா '

' சித்திர பூவிழி வாசலிலே இங்கு யார் வந்ததடி?'
தோழியின் அந்தரங்க ரகஸ்யத்தில் அத்து மீறி நுழையும் அடாவடி குரல்.

'அன்னை போல என்னையாண்ட
அன்பு தெய்வமே ' கண்ணிய நெகிழ்ச்சி.

நினைத்தாலே இனிக்கும் ' இனிமை நிறைந்த உலகம் இருக்கு ' துறு துறுப்பு

ஆங்கில உச்சரிப்பு சிருங்காரமாக செய்வார்

குறும்பு எனும் பாவத்தை இளமை துள்ளலுடன்
மிக சிறப்பாக வெளிப்படுத்தியவர் ஈஸ்வரி.

தாபக்குரலில் பாடுவதில்
அதிக பட்ச சாதனை செய்தவர்.

' ஆஹா, இது நள்ளிரவு, ஓஹோஹோ இது புது உறவு '

மங்கலமாய் மாறு பட்ட குரலில்
பிரபலமானவர் இவர்.  கல்யாண பாக்கியமில்லாத பாடகியின் இந்தப் பாடல் தான்
எல்லா கல்யாண வீட்டிலும்.
' மணமகளே மணமகளே வா, வா,
உன் வலது காலை எடுத்து வைத்து வா, வா'

மெஸ்மரைஸ் பண்ணுகிற மாதிரி
'அம்மம்மா கேளடி தோழி'

டப்பாங்குத்து என்றாலும் கொடி கட்டியவர் ஈஸ்வரி தானே?

இலந்த பயம்

'அமமனோ சாமியோ'
ஜெயலலிதாவுக்கு தான் ஈஸ்வரியின்
எத்தனை பாடல்கள்.

'பளிங்கினால் ஒரு மாளிகை '

'நான் ரோமாபுரி ராணி, புது ரோஜா மலர் மேனி,'

சரணத்தில் தூள் கிளப்புவார்
' யார் யாரோ வந்தார் என்னை சந்திக்க,
 ஏதோதோ சொன்னார் உள்ளம் தித்திக்க
இல்லாத எண்ணம் எல்லாம் சிந்திக்க
நான் என்ன செய்வேன் ஐயா, மன்னிக்க '

கோயில் திருவிழாக்களில் ஆம்ப்ளிஃபயரை கூட்டி வைத்து இவர் மீது வெறுப்பு வரும்படி பக்தர்களுக்கு கடும் தண்டனை
 கொடுக்க வேண்டும்.

மாரியம்மா எங்கள் மாரியம்மா என்று கூப்பாடு போடும் ஈஸ்வரி ஒரு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பெண்மணி

' சகாயத்தாயின் சித்திரம் நோக்கு, அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு 'என்று பி. பி. எஸ்ஸோடு சேர்ந்து தேவ மாதாவையும் பாடியவர்.

' ஆரோக்ய மாதாவே, உமது புகழ் பாடி புகழ்ந்திடுவோம்'

எஸ். பி பாலசுப்ரமணியத்துடன் ஈஸ்வரி பாடுவது தனி சுவை.

'ஆரம்பம் இன்றே ஆகட்டும் '

சந்தப்பாடல் ' அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் மன்மதனென்றும் வணங்கும் என்னுயிர் மன்னவா '

' அங்கம் புது விதம், அழகினில் ஒரு விதம், நவரச நிலவு, அதிசய கனவு

சுசிலா பிடிக்கும், ஜானகி பிடிக்கும் என்று சொல்பவர்களுக்கு ஈஸ்வரியை பிடிக்கும் என்று சொல்ல தயக்கம். இது ஒரு வகை Snobbery.

நிஜமாகவே சிலருக்கு ஈஸ்வரி குரல் பிடிக்காமல்
போகலாம். அவர்கள் மீது வருத்தப்படவோ, கோபப்
படவோ கூடாது. Taste differs.

அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும், பேட்டி கொடுக்கும் போதும் அவரிடம் வெள்ளந்தியாக கொப்பளிக்கும் உற்சாகம். பழைய நினைவுகளில்
மூழ்கி ஊறும் பாந்தம்.

அவரே எப்போதும் பெருமைப்படுவது போல
'எல்லோர்க்கும் ஈஸ்வரி''தான்.

கவுண்டமணியின் கிண்டல் இவரையும் விடவில்லை.

ஒரு படத்தில் பானுப்ரியா பாடகி.
அவர் பாட வேண்டிய பாட்டு ஈஸ்வரி பாடி ரிக்கார்ட் செய்யப்பட்டு விடும்.

சத்யராஜிடம் கவுண்டர் கமெண்ட் : "இந்த கிழவிக ரவுசு தாங்க முடியலப்பா"

Apr 28, 2020

Convictions and lies

Nietzsche said that Convictions are
 more dangerous foes of truth than lies

சார்வாகன் என்ற டாக்டர் ஹரி ஸ்ரீநிவாசன்
 பத்மஸ்ரீ பட்டம் வாங்கியவர்.
அவருடைய மருத்துவ முயற்சிகளுக்கான விருது.

சார்வாகன் எழுதிய நல்ல சிறுகதை
"போன ஜன்மங்களும் வேறு உலகங்களும் "

சாமியார் பைத்தியங்களைப் பற்றிய எள்ளல்.

ஒரு சாமியார் தன் குருஜியின் மகாத்மியம் பற்றி
டாக்டர் நாகராஜனிடம் சொல்வார் :

" ஒரு பிரம்மச்சாரி குருஜியை கேட்டார். 'போன ஜன்மத்தில் நான் யாராக இருந்தேன்'

குருஜி அந்த பிரம்மச்சாரியின் வலது கண்ணுக்குள் உற்றுப்பார்த்து விட்டு பகர்ந்தார்
 ' ஒரு கிழவி நூல் நூற்றுக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். உன் முன் ஜன்மத்தில் நீ தான் அந்தக் கிழவியாயிருந்தாய்'

குருஜி பகவானின் அவதாரம். அதனாலே தான் அவருக்கு இதெல்லாம் சாத்தியமாகிறது. "

போர்ஹேஸ் எழுதிய கதை “Dr.Brodie’s Report”

“Dr.Brodie’s Report” கதையில் வரும் யாஹூ இன பழங்குடி மக்கள் பழங்குடிக்கே உரிய
 நம்பிக்கை பல கொண்டவர்கள்.

பில்லி சூனியக்காரர்கள் விரும்பினால்
 யாரையும் கடல் ஆமைகளாக, எறும்புகளாக            மாற்றக்கூடிய சக்தி படைத்தவர்கள்.
யாஹூக்கள் உறுதியாக நம்பினார்கள்.

இதை பிராடி நம்ப மறுக்கும் போது
ஒருவன் உடனே பரபரப்பாக தேடி
அவருக்கு ஒரு எறும்பு புற்றை காட்டுவான்.
 ஏதோ அது தான் பிராடி நம்புவதற்கு
ஆதாரம், நிரூபணம் என்பதாக.


இசைப்பேரறிஞர் மதுரை சோமுவின் விழா - 2019


மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸ் கட்டிடத்திற்கு நான் 1983ம் ஆண்டு மதுரை சோமு கச்சேரி கேட்பதற்காக போயிருக்கிறேன்.
அதன் பிறகு 36 வருடங்களுக்குப்பிறகு
சென்ற 2019 ஏப்ரல் 28ம் தேதி மதுரை சோமு நூற்றாண்டு விழாவில்
தொடக்கவுரை நிகழ்த்துவதற்காக.

சிலிர்ப்பு ஏற்பட்டது.
Everything is governed by an intelligence and not by chance.

சோமு கச்சேரியின் போது ஜெயகாந்தன் முதல் வரிசையில். அதே வரிசையில் ஒரு இரண்டு சீட் தள்ளி தான் நானும் A.K.ரவியும் அமர்ந்திருந்தோம்.
சோமு பாடும் போதே பாடலில் ஒரு வரியாக 'எங்கள் ஜெயகாந்தா' என்று முன் வரிசை எழுத்தாளரை பார்த்து பாடினார். ஜெயகாந்தன் அதற்கு தலை வணங்கி சோமுவை அப்போது நமஸ்கரித்தார். மறக்க முடியாத காட்சி.
சோமு பாடும் போது ரொம்ப அற்புதமான அனுபவமாய் எப்போதும் இருக்கும். ஒரு கீர்த்தனையின் போது பக்கவாட்டில் ஒரு சில வினாடிகள் படுத்து விட்டார்.
”என்ன கவி பாடினாலும்” பாடினார்.
நாட்டக்குறிஞ்சி 'மாணிக்க மூக்குத்தி அலங்காரி'யும்.
சோமு கச்சேரி காட்சியின்பம். குருநாதா என்பார். முருகா என்பார். வயலின் வாசிப்பவரை பார்த்து பாராட்டாக “ஐயோ” என்பார். எதிரே உட்கார்ந்திருப்பவரோடு பேசுவார். சமிக்ஞை செய்வார். குழந்தைமையும் கள்ளமின்மையும் கொண்ட ஜீவன்.
The child in him was battling with the man in him.
நாடகக்கலையையும் இசைப்பாட்டில் இணைத்தவர்.
 Undoubtedly, Madurai Somu was a theatre personality.
2019 சோமு நூற்றாண்டு விழாவில்
நீதியரசர் அரங்க மஹாதேவனின் சந்திப்பு
இனிய நிகழ்வு.

என்னை சந்தித்தவுடன் நான் முப்பது வருடங்களுக்கு முன் எழுதிய கடிதம் பற்றி குறிப்பிட்டு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
விழா முடிந்தவுடன் என்னிடம் “உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ். நீங்கள் எழுதிய கடிதம் என்னிடம் இருக்கிறது” என்று நீதியரசர் சொன்ன போது என்ன பதிலும் சொல்ல முடியாமல்
அசந்து போய் விட்டேன்.
அவருடைய தந்தை ம.அரங்கநாதனின் ”வீடு பேறு” சிறுகதை தொகுப்பு எத்தகைய கனமான ஒன்று. ”பொருளின் பொருள் கவிதை” என்ற மற்றொரு நூலும்.
அரங்கநாதன் நடத்திய ”முன்றில்” பத்திரிக்கையின் சந்தாதாரர் நான்.
(மா.அரங்கநாதன் மொத்த படைப்புகள்
இப்போது நற்றிணை பதிப்பக வெளியீடு.)
க.நா.சு முன்றில் பத்திரிக்கையில் அப்போது எழுதிய கட்டுரையொன்றில் “ஊரெல்லாம் விபச்சாரிகள் என்று தி.ஜானகிராமன் மாதிரி கதையெழுதி விடுகிறார்கள்” என்ற ஒரு வரியால் துடித்துப்போய் நான் அந்த வயதின் ஆவேசத்தை காட்டி
ஒரு கடிதம் 1988 டிசம்பர் 1ம்தேதி அவருக்கு எழுதி அதை ஜெராக்ஸ் செய்து முன்றில் உட்பட 200 பேருக்கு போஸ்ட் செய்தேன்.
டிசம்பர் 16ம் தேதி க.நா.சு மறைந்தார் என்பதெல்லாம் மறக்க முடியுமா?
முன்றில் பத்திரிக்கையின் முழுப்பொறுப்பும் அன்று அரங்கநாதனின் மகன் மகாதேவன் தான் சுமந்தார்.
பிழை திருத்தம் துவங்கி தபாலில் பத்திரிக்கை பிரதிகளை சேர்ப்பது வரை பார்த்து பார்த்து பத்திரிக்கையை நடத்தியவர் தான் இன்றைய உயர் நீதி மன்ற நீதிபதி மஹாதேவன்.
இன்னொரு விஷயம். பிரமிளின் நெருங்கிய நண்பர்.
விழாவில் நீதியரசர் மஹாதேவனின் பேச்சு மிகவும் பிரமிக்கும்படி அமைந்தது.
தெளிந்த நீரோடை போல அப்படி ஒரு அருமையான பிரசங்கம்.
மதுரை சோமுவிற்கு முழுமையான அஞ்சலி.
என்னிடம் மொபைலில் பேசும்போது சொன்னார் ”சார் என்று கூட வேண்டாம். மஹாதேவன் என்றே சொல்லலாம்.
” A great man is always willing to be little.
வழக்கறிஞர் பா.அசோக் என்னிடம் காட்டிய அன்பு பற்றி நான் விவரிக்கவே கூடாது. ஸ்தம்பித்துப்போய் அவரிடம் என்ன பேசுவது என்று திகைத்து நிற்கிறேன்.

எனக்கு ஒரு மகன் தான் அசோக்.
என்னை ரொம்ப நேர்த்தியாக சபைக்கு அறிமுகப்படுத்திய அழகு. 
“ குடத்தில் இட்ட எரிமலை ராஜநாயஹம்”

அசோக் அவர்களின் சித்தப்பா பி.வரதராஜன் விழாவை பிரமாதமாக நடத்தினார்.
இந்த விழாவின் மூலமாக அறிமுகமான வழக்கறிஞர் விக்டோரியா கௌரி    அவர்களைப் பற்றியும் இங்கே குறிப்பிட வேண்டும்.
இன்னொருவர் ஜி.நாகராஜனின் நண்பர்
எழுத்தாளர் டெய்லர் கர்ணன்.

Apr 26, 2020

நிராதரவும் சக்தி படைத்த ஒன்று தான்


'நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள்'
 நேர்த்தியான வார்த்தைகள்.

"மா. அரங்கநாதன் படைப்புகள் வெறும் இலக்கியமாக நின்று விடுவதில்லை. உண்மையில் அவை நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள் "
அசோகமித்திரனின் கணிப்பு.

 மா. அரங்கநாதனின் 'தேட்டை' சிறுகதை
காட்டும் காட்சி.


'நான் இவரோடு வாழ மாட்டேன் ' உதறி விட்டு
இங்கே பாண்டிச்சேரி வந்து சமையல் வேலை செய்து காலம் தள்ளும் அந்த நாகம்மாவை பார்த்து விட தேடிக்கொண்டு வரும் அத்தை என்றழைக்கப்படும் மூதாட்டி

'ஒன்னக் கட்டிக்கிட்டதாலே எனக்கு இந்த நிலை ' என்ற கணவனையும், பெற்ற மகனையும் விட்டு விலகிய நாகம்மா,

யாருமில்லை - ஒன்றுமில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டால் -
அவ்வாறு உணரப்பட்டு விட்டால் - இன்னொன்று வருவதற்கு வழி வகை ஏற்படும் என்கிறார்
 மா. அரங்கநாதன்.

பல கதைகள் இந்த வட்டத்துக்குள் தானே சுழலும்.
ஆனால் இதில் வெகு இயல்பாக தலை காட்டும் அந்த முத்துக்கறுப்பன் ஸ்டோர்ஸ்
 பலசரக்கு கடைக்காரர் மூலம்
ஒரு அற்புத தரிசனம்.

இந்த அபூர்வம் தான் மகத்தான மா. அரங்கநாதன்.

அரங்கநாதன் கதைகளில் தொடர்ந்து வரும் முத்துக்கறுப்பன் யார்? என்று கேட்டால்
 "என்னால் விளக்கிச் சொல்ல முடியாத சில உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவதற்கு                  உதவி செய்கிறவன் முத்துக்கறுப்பன்."
என்று தான் சொன்னார்.

அஸ்திரம் தான் முத்துக்கறுப்பன்.

மற்றவரைப்பற்றி கவலைப்படுபவர் இல்லை என்று  சொல்லி விட முடியாது.
நிராதரவும் சக்தி படைத்த ஒன்று தான்.

Apr 25, 2020

எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய்


 Edward Nirmal Mangat Rai

எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய்  ஒரு ஐ சி எஸ் அதிகாரி. கிறிஸ்தவர்.
குஷ்வந்த் சிங்குடன் டெல்லி செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் படித்தவர். அதி புத்திசாலி மாணவன்.
 ’பன்ச்சி’ என்ற செல்லப்பெயர் கொண்ட எட்வர்ட் நிர்மல் மங்கத்.

 இண்டர்மீடியட் முடித்தவுடன் லாகூர்
அரசு கல்லூரியில் படிக்க குஷ்வந்த்
 செல்ல இருப்பதை அறிய வந்தவுடன்
மங்கத் பிரிவாற்றாமையில் அழுதிருக்கிறார்.

குஷ்வந்த் ஐ.சி.எஸ் பரிட்சையில் தோற்றவர்.
 மங்கட் ரெய் நல்ல ரேங்கிலெ ஐ.சி.எஸ் தேறியவர்.

குஷ்வந்த் சிங் மிக க்கடுமையான போட்டியில் கவல் மாலிக் மனம் கவர்ந்து திருமணம் செய்ய இருந்த போது Wrong choice என்று மங்கத்  அபிப்ராயப்பட்டவர்.
” இவ என்ன பெரிய அழகியா? அறிவிலும் ரொம்ப சுமார்” என்று ஏகடியம் பேசியிருக்கிறார்
 மங்கத் ராய்.

File:Sir Sobha Singh (1890-1978).jpg
குஷ்வந்த் சிங்கின் தந்தை சர். ஷோபா சிங் டெல்லியில் பெரிய கட்டிட காண்ட்ராக்டர்.

 இந்தியா கேட், சௌத் ப்ளாக் உள்ளிட்டவையெல்லாம் ஷோபா சிங்
 கை வண்ணம் தான்!

பகத் சிங் டெல்லி அசெம்பிளி குண்டு வெடிப்பில் ஷோபா சிங் தான் பகத் சிங்கிற்கு எதிராக சாட்சியம் சொன்னவர்.

குஷ்வந்த் சிங்கின் அப்பாவும் ரொம்ப பெரிய ஆள்.

 Khushwant singh's father and father-in-law were knighted by British.

குஷ்வந்த் சிங்கின் சொந்த சித்தப்பா உஜ்ஜல் சிங் தான் அண்ணாத்துரை தமிழக முதல்வரான போது இங்கே கவர்னர்.

குஷ்வந்த் சிங் பாகிஸ்தான் ஹடாலியில் பிறந்தவர்.

கவல் மாலிக்- குஷ்வந்த் திருமணம் டெல்லியில் விமரிசையாக நடந்தது.
முகம்மது அலி ஜின்னா  இந்தத் திருமணத்தில் முக்கிய விருந்தாளியாக கலந்து கொண்டார்.
   

குஷ்வந்த் வக்கீல் ப்ராக்டிஸ் செய்ய புதுப்பெண்ணுடன் லாகூரில் குடியேறிய போது எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய் ஐ.சி.எஸ்க்கு
 அங்கே உத்யோகம்.
பல கிறிஸ்தவ குடும்பங்களுக்கு எலிஜிபிள் பேச்சிலர் எட்வர்ட் மங்கத் மீது கண்.

மங்கத் இலக்கிய ஆர்வம் கொண்டவர். எழுத்தார்வம் மிக்கவர். தன் வீட்டிற்கு நண்பர்களை அழைத்து தான் எழுதியவற்றை வாசித்துக்காட்டுவதுண்டு.

மங்கத் ராய் ஆபீஸ் வேலை முடிந்து சைக்கிளில் ( கவனிக்க : ஐ.சி.எஸ் அதிகாரி சைக்கிளில்!)  திரும்பும் போது குஷ்வந்த் வீட்டிற்கு வர ஆரம்பித்தார்.
கவல் பற்றி லண்டனில் மங்கத் கொண்டிருந்த அபிப்ராயம் மறைந்தே விட்டது.
கவல் மீது கவனம் அதிகமாகி மையல் ஏற்பட்டுப் போனது. குஷ்வந்த் சிங்கிற்கே மங்கத் ராய் கடிதம் எழுதுகிறார். “ உன் மனைவியை நான் காதலிக்கிறேன். உன் மனைவியை தினமும் தரிசிக்க உன் அனுமதி வேண்டுகிறேன்.”

கவல் மாலிக்கிற்கோ பெருமை பிடிபடவில்லை.

ஓவியம் வரைவதில் கவல் அந்த நேரத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
அவர் செல்லும் ஸ்டுடியோவிற்கே மங்கத் போய் ‘ஓவியம் அத்துனை சிறந்த பொழுது போக்கே அல்ல’ என்று தூபம் போட,
 கவல் ஓவியம் வரைவதை கை விட்டு
டென்னிஸ் விளையாடப் போகிறார்.
மங்கத் அப்போது சைக்கிளிங் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்.
சீக்கிய மதச் சடங்குகளைத் தவறாது கடை பிடிக்கும் கவலிடம்’ இதெல்லாம் என்ன மூட நம்பிக்கை!’ (கிறிஸ்தவ புத்தி!)  என மூளைச் சலவை செய்கிறார்.
 கவல் மத பிரார்த்தனையைக் கை விடுகிறார்.

லாகூரில் ஒரு கிறிஸ்தவப் பெண். ரயில்வே ஸ்டேசனில் இருந்து மங்கத் ராய் அவளுக்கு லிப்ட் கொடுத்தால் அந்தப்பெண் ஃப்ரண்ட் பாரில் உட்கார்ந்து விடுகிறாள்.
அதனால் கிளர்ந்தெழுந்த காமம் இருவரையும் அன்றே மங்கத் படுக்கை வரை
கொண்டு சென்று விட்டது.

மங்கத் ராய் மனசாட்சி அவரை கொல்கிறது. குற்றவுணர்வால் தவிக்கிறார். எப்படி?
“ அடடே, குஷ்வந்த் மனைவி கவல் மீது காதல் கொண்ட நான் இப்படி இன்னொரு பெண்ணுடன் படுத்து விட்டேனே!”

கவல் இது பற்றி கோபப்படாமல்,
அவமதிப்பாக எடுத்துக்கொள்ளாமல்
மங்கத் ராயின் Frankness பற்றி
பூரித்துப் பெருமிதம் கொள்கிறார்.
லாகூரில் கவல் -மங்கத் ராய் தொடர்பு அதிகம் பேசப்படும் விஷயமாகியிருக்கிறது.

குஷ்வந்த் சிங்கை விட கவல் இரண்டு வயது இளைய பெண்.
அறுபது வருடங்களுக்கும் மேலாக மனைவியுடன் தாம்பத்யம் நடத்தியவர். தன் மனைவி பற்றி சொல்வது : “ இந்திரா காந்தி இந்தியாவை ஆட்சி செய்த அதே சர்வாதிகாரத்துடன் குடும்பத்தை கவல் ஆட்சி செய்தார்.”

பள்ளி பருவத்திலேயே குஷ்வந்த்
டெல்லி மாடர்ன் ஸ்கூலிலேயிருந்து
 மனைவியை அறிந்திருந்தார்.
ஒரே பள்ளியில் இருவரும் படித்தவர்கள்.

“ She was very possessive and aggressive, and resented it when I, even very casually, met a woman friend. She would sulk. This in spite of the fact that my wife had, from the very beginning of the marriage, probably from the very first year, got close to one man in particular. Their relationship carried on for about TWENTY YEARS and this was something that affected me deeply, snapping something inside me, changing something within me for ever." - Khushwant Singh.

எட்வர்ட் நிர்மல் மங்கத்  ராய்க்கு
ஒரு உடன் பிறந்த தங்கை ஷீலா.
இவளுடைய கணவர் ஆர்தர்லால்
ஒரு ஐ.சி.எஸ் தான்.

வி.கே.கிருஷ்ணமேனன், பிஜு பட்நாயக் என்று ஆரம்பித்து ஷீலாவின் காதலர்கள்
லண்டனிலேயே எண்ணி முடியாது.

பிஜு பட்நாயக் திமுகவையும் அதிமுகவையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் ஒரிசா முதல்வர். இன்றைய ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் தந்தை.

மங்கத் ராய் பெண் தேட ஆரம்பித்தார்.
 கிறிஸ்தவப்பெண் வேண்டும்.
வனத்தில மேஞ்சாலும் இனத்தில அடையனுமே!

லஜ்வந்தி என்ற கிறிஸ்தவப் பெண்.
ஆங்கில இலக்கியம் படித்தவள். கல்யாணப் பத்திரிக்கை அடித்து விநியோகம் செய்த பிறகு மங்கத் ராய் கல்யாணத்தை நிறுத்தி விட்டார்.

 லஜ்வந்தி “ போடா போ” என்று முகமது யூனுஸ்ஸை கல்யாணம் செய்து விட்டாள்.

இந்த முகமது யூனுஸ் பின்னால் இந்திரா காந்தியின் கை பாணம்.
இந்திராகாந்தியின் அத்யந்த பக்தன்.
 எமர்ஜென்சியின் போது ரொம்ப பிரபலம்.

அடுத்து சாம்பா என்ற இன்னொரு கிறிஸ்தவப் பெண். ஆங்கில இலக்கியம் படித்தவள் தான். சர்ச் சம்பிரதாயங்களுடன் மங்கத் திருமணம் செய்து கொண்டார்.

 இந்தத் திருமணத்திற்கு பின்னரும் மங்கத் ராய் மீண்டும் கவல் மாலிக்கை சந்திக்க குஷ்வந்த்தின் வீட்டிற்கு வருவது, காதல் கடிதம் எழுதுவது என்று ஆரம்பித்துவிட்டார்.

சாம்பா- மங்கத் திருமண தோல்வி  ’முறை கெட்ட’ விசித்திரமானது.

ஒரு கோடையில் சிம்லாவில் குஷ்வந்த் தம்பதியர் இருந்த போது அங்கே லக்கர் பஜாரில் மங்கத் ராய் - சாம்பா தம்பதியர்  மங்கத் ராயின் தங்கை ஷீலா- ஆர்தர் லால் தம்பதியர் வந்திருந்திருக்கிறார்கள்;

சிம்லாவில் ஒரு Trekking programme.
ஒரு வாரம் போய் வர ஏற்பாடு.
கடைசி நேரத்தில் அண்ணன் மங்கத்,
தங்கை ஷீலா இருவரும் போகவில்லை.

 அண்ணன் மனைவி சாம்பாவும் தங்கை கணவர் ஆர்தர் லாலும் மட்டும் ஜாலியாக ஹிமாலய வெளியில் நடை பயணம் போயிருக்கிறார்கள்.

 திரும்பி வரும்போது ஆர்தரும் சாம்பாவும் Made for each other என்ற காதல் போதையில் திருப்தியடைந்த நிலையில் இருந்திருக்கிறார்கள்.

மங்கத் ராய் மனைவியை விவாகரத்து செய்ய உடனே,உடனே ஒத்துக் கொண்டாகிவிட்டது.ஷீலாவுக்கும் ஆர்தரிடம் இருந்து தப்பித்து விடுதலை ஆகிற திருப்தி.

 ஆனால் சாம்பாவின் பெற்றோர் விஷயம் கேள்விப்பட்டு பதறிப் போய் ஓடிவந்து சாம்பாவை ‘குலத்தை கெடுக்க வந்த கோடாரி காம்பே, நீயெல்லாம் ஒரு பெண்ணா?
உன்ன பெத்த வயித்தில
பெரண்டையைத் தான் அள்ளி வச்சி கட்டனும்’ என்று கண்ட படி திட்டி கண்டித்து விட்டார்கள்.

 சாம்பா உடனே திருந்தி கணவன் மங்கத்திடம் மன்னிப்பு கேட்டிருக்கிறாள்.

” மேயா குல்ப்பா, மேயா குல்ப்பா,
 மேயா மாக்சிமா குல்ப்பா...
என் பாவமே, என் பாவமே,
என் பெரும் பாவமே...
எனக்கிதுவே துக்கமில்லாமல்
வேறே துக்கமில்லை. எனக்கிதுவே வெட்கமில்லாமல் வேறே வெட்கமில்லை...”

மங்கத் ராய் விவாகரத்துக்கு ஒத்துக்கொண்ட அதே வேகத்திலேயே இப்போது மனைவியை மன்னித்து அருளி ஏற்றுக் கொண்ட அதிசயம் நடந்தேறியிருக்கிறது!

என்றாலும் பின்னர் இந்தத் திருமணம் நீடிக்கவில்லை.

குஷ்வந்த் சிங்கிற்கு இரண்டு குழந்தைகள்.
ராகுல் சிங், மாலா.

ராகுல் சிங்கிற்கு எழுபத்தஞ்சு வயதிற்கு மேல் ஆகி விட்ட நிலையில் திருமணமே செய்து கொள்ளவில்லை. இப்பவும் சிங்கிள் தான்.

குஷ்வந்த் சிங்கிற்கு OUTLOOK பத்திரிக்கையில் இரங்கல் எழுதிய பாய்சந்த் பட்டேல் ஒரு சுவாரசிய சம்பவம் பற்றி குறிப்பிடுகிறார்.
” நானும் ராகுல் சிங்கும் வெளி நாட்டில் இருந்து திரும்பியவுடன்
ஒரே பெண்ணை விரட்டிக்கொண்டு திரிந்தோம். ஆனால் அவள் எங்கள் இருவருக்குமே பெப்பே காட்டி விட்டு இன்னொருவனை மணந்து கொண்டாள்.
ஆனால் நானும் ராகுல் சிங்கும்
நண்பர்களாகவே இருக்கிறோம்.”
 

குஷ்வந்த் சிங் மகன் ராகுல் சிங் ஒரு ஜார்னலிஸ்ட். தன் தாயார் பற்றி வெளிப்படையாக ‘ In the name of the father' நூலில் குறிப்பிடுகிறார்.

“ என் அம்மா ஒரு கட்டத்தில் என் தந்தை குஷ்வந்த் சிங்கை விவாகரத்து செய்து விட்டு
எட்வர்ட் நிர்மல் மங்கத் ராயை திருமணம் செய்ய முடிவே கட்டி விட்டார். ஆனால் இது என் மேலும் என் தங்கை மாலா மீதும் ஏற்படுத்த நேரும் பயங்கர பின் விளைவுகளை எண்ணியே அந்த முடிவை என் பெற்றோர் நிராகரிக்க நேர்ந்திருக்கிறது.
Mangat Rai was something of an enigma to me."



எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய் வாழ்வில் மிக சுவாரசியமான விஷயம் அவர் ஜவஹர்லால் நேரு குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர்
 ஆகியது தான்.

நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட் .

விஜயலட்சுமி பண்டிட்டின் மகள் நயன்தாரா சாகல்.

அழகான இந்தப் பெண் நாவலாசிரியர்.

(1986ல் Rich like us என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கினார்.
ஆனால் 2015ல் தீவிரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதை நிராகரித்து விட்டார்.)
 தாரா வயதில் மங்கத் ராயை காட்டிலும் மூத்தவர் என்று ராகுல் சிங் தன் அப்பா பற்றி எழுதியுள்ள நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இப்போது உயிருடன் இருக்கும் தாராவுக்கு 92 வயது தான் ஆகிறது!(Born 10 May 1927)



ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த நயன்தாராவும் மங்கத் ராயும் காதல் வலையில் வீழ்ந்து விட்டனர்.

தெய்வீகக் காதல்.
 ஆனால் குஷ்வந்த் சிங் போல தாராவின் கணவர் கௌதம் சாத்வீகமானவர் அல்ல.
மங்கத் ராய் அவர்கள்  அன்னார் கௌதமால் வெளுத்து விரியக் கட்டப்பட்டார்.
கௌதம் பின்னியெடுத்துவிட்டார்.
மங்கத் படுகாயம்.
ஆனால் நயன்தாராவோ தன் காதலில்  உறுதியாக நின்று கௌதமை ’ச்சீ..காலிப்பயலே போடா’ என்று  விவாகரத்து செய்து விட்டு
மங்கத் ராயுடன் போய் விட்டார்.
நயனும் மங்கத் ராயும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆக, மங்கத் இப்போது ஜவஹர்லாலின் உறவினராக ஆகி விட்டார்.

எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய்
இந்திய சிவில் சர்விஸ் பணியில்
 மிகச் சிறந்த அதிகாரி.
அப்பழுக்கற்றவர்.
மிகச் சிறந்த நேர்மையாளர்.

பஞ்சாப்பில் பிரதாப் சிங் கெய்ரோன் முதலமைச்சராக இருந்த போது மாநிலத்தின் தலைமைச் செயலர் மங்கத் ராய் காஷ்மீர் மாநிலத்திலும் தலைமைச் செயலராக பணியாற்றியவர்.
பஞ்சாபிலும்,காஷ்மீரிலும் பல சீர்திருத்தங்கள், சாதனைகள் புரிந்தவர் என்றே கருதப்படுபவர்.
 இவர் தலைமைச் செயலராக பணிபுரிந்த காலம் பொற்காலம் என்றே கணிக்கப்படுகிறது.

நேருவின் தங்கை மகள் நயன்தாராவை சந்திக்கும் வரை எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய் துயரமான,நிறைவில்லாத வாழ்க்கை வாழ்ந்தவர்.

மொரார்ஜி பிரதமராக இருந்த போது நயன் தாராவை ரோமுக்கு (வாட்டிகனுக்கும் சேர்த்து) தூதராக அப்பாயிண்ட் செய்த போது பதவி விலக நேர்ந்து விட்டது.
சரண்சிங் ஏக் தீன் கா சுல்தான் பதவி காலியாகி ஒரு வழியாக தேர்தலில் மீண்டும் இந்திரா ஜெயித்தவுடன் உடனே, உடனே ரோமுக்கு நயன்தாரா தூதராகப் போக வேண்டாம் என்று கேன்சல் செய்தார்.
 எட்வர்ட் நிர்மலையும் பணியிலிருந்து விலகச் சொல்லி வற்புறுத்தி வெளியேற்றி விட்டார்.

இந்திராவிற்கு எட்வர்ட் நிர்மல் மங்கத் ராய் போன்ற நேர்மையான, திறமையான அதிகாரி தேவையில்லை.
விஜயலட்சுமி பண்டிட்டின் மகளையும் அவள் கணவரையும் பழி வாங்குவது தான் முக்கியம்.

டேராடூன் அருகில் நயன்தாராவுடன் வாழ்ந்து மறைந்த மங்கத் ராய் முதுமையில்
அல்சைமர் வியாதியால் அவதிப்பட்டார்.

குஷ்வந்த் சிங் மனைவி வாழ்வும் அல்சைமர் வியாதியில் தான் முடிவுக்கு வந்தது.

....

பூவை செங்குட்டுவன்


நான்கு வருடங்களுக்கு முன்பு குமுதத்தில்
 பூவை செங்குட்டுவன் பேட்டி பார்த்து விட்டு அந்த பேட்டியெடுத்த அருண் சுவாமிநாதன் மூலம் கவிஞரிடம் பேசினேன்.

அந்த நேரம் குமுதம் ஸ்பெஷலில் நான் எழுதியிருந்த 'நடிகை சாவித்திரி'யை அவரும் படித்திருந்தார்.
"ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க " என்றார்.
(அருண் சுவாமிநாதன் மூலம் தான்
எனக்கு கிடைத்த வாய்ப்பும்)

பூவை செங்குட்டுவன் பேட்டி
மனதை பாதிக்கும்படி இருந்தது.

அவருக்கு அடிமைப்பெண் பட த்திற்காக
  எம். ஜி.ஆர் மூலம் வந்த அபூர்வமான வாய்ப்பை ஒருவரின் கவனக்குறைவால் இழந்திருக்கிறார்.

இவர் எழுதி கொடுத்த பாடலை தொலைத்து விட்டு 'செங்குட்டுவன் பாடலே எழுதி தரவில்லை' என்று சின்னவரிடமே இவர் பெயரை கெடுத்து விட்டிருக்கிறார்.

A slip between the cup and lip.

'  நான் உங்கள் வீட்டு பிள்ளை ' பாடல் முன்னதாக
 புதிய பூமிக்காக பூவை செங்குட்டுவன் எழுதி
   எம். ஜி.ஆர் பேரியக்கத்திற்கு எப்படி பயன்பட்டது
 என்பது சரித்திரம்.

' திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மேலே எதிரொலிக்கும். '

கேட்க திகட்டாத சத்தான பாடல்.

அதிமதுர மதுரயிலே குருவி மண்டையன் மாற்றி பாடுவான் ' திருத்தணி மல மேல எலி கொறிக்கும் '
மதுர வக்ரம்.

' திருப்புகழை பாட பாட வாய் மணக்கும் ' பகுத்தறிவு வாதிகளின் கிண்டலுக்கும், கவுண்டமணி ஜோக்குக்கும் பயன்பட்டது.

' தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ' டி. கே. கலாவுக்கு முதல் பாடல்.

கண்ணதாசன் தான் கந்தன் கருணை படத்தில்
' திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' பாடல் இடம்
பெற செய்திருக்கிறார்.

ஏ. பி. நாகராஜன் பல வாய்ப்பு தந்திருக்கிறார்.
'ஆடுகின்றானடி தில்லையிலே '

' ஏடு தந்தானடி தில்லையிலே' எஸ். வரலட்சுமி பாடினார். பாடல் கடைசியில் சீர்காழி கோவிந்தராஜன் இணைந்து முடிப்பார்.

குன்னக்குடி இவருக்காக இசைந்திருக்கிறார்.

இங்கே அவர் பாடல்களை பட்டியலிட தேவையில்லை.

கணக்கற்ற பக்திப் பாடல்கள் எழுதியவர்.
'முத்தமிழை பாட வந்தேன்
 முருகனையே வணங்கி நின்றேன். '

' முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே'

'தண்ணீரில் மீன் அழுதா
கண்ணீரை கண்டது யாரு'
இது பூவையாரின் பல்லவி.
 இதை ஒரு ஆல்ரவுண்டர்
தான் எழுதிய பாடலாக
எடுத்துக்கொண்டார். அறிவு திருட்டு.

திருக்குறள் வரிகளை பாடல்களாக மாற்றிய பெரும் பணியில் பூவை செங்குட்டுவன்
 பங்கு உண்டு.

 இவருக்கு 84 வயது.
இயற் பெயர் முருக வேல் என்பது
அவருடைய personal legend பற்றி
 தெளிவாக சுட்டுகிறது.

'வணங்கிடும் கைகளின் வடிவத்தைப்
பார்த்தால் வேல் போல் இருக்குதடி '
கருத்தாழமிக்க வரிகளை எழுதியவர் இளமைக்காலத்தில் பகுத்தறிவு வாதி.

தன் வாய்ப்புகளை தட்டிப் பறித்த ஒருவர் பற்றி           பூவை செங்குட்டுவன் என்னிடம் நயமாக சொன்னார்.
'நல்ல கவிஞர் தான். ஆனால்
போற்றத் தக்க மனிதர் அல்ல '

Apr 23, 2020

ரஞ்சன்

ரஞ்சன் அமெரிக்காவில் இறந்தார் .

ரஞ்சன் நாமக்கல் சேஷையங்காரிடம் கர்நாடக சங்கீதம் பயின்றார்.
டைகர் வரதாச்சாரியாரிடமும்
 சங்கீத அத்யயனம்.

பரதம் நாராயணஸ்வாமி ஐயரிடம் நாட்டியம் பயின்றார்.

இந்திய இசையையும் மேற்கத்திய இசையையும் ஆராய்ச்சி செய்து சென்னை பல்கலை கழகத்தில் M.Litt பட்டம் பெற்றார்.

ரஞ்சன் - மயிலாப்பூர் ரமணி.

ரஞ்சன் நிஜமாகவே ஏரோப்ளேன் ஓட்டுவார்.

ஏரோப்ளேன் ஓட்டுவது போல
நடிக்கும் நடிகர்களைத் தான் பார்த்திருக்கிறோம்.

நாற்பதுகளில் திரைப்பட பரபரப்பான நடிகர்.Action King!
மங்கம்மா சபதம்(1943) படத்தில்
 (வைஜயந்திமாலாவின் தாயார்) வசுந்திராதேவியுடன்.

அசோகமித்திரன் சொல்லி
வசுந்தரா தேவி பற்றி,
ரஞ்சன் பற்றி கேட்க வேண்டும்.
அவ்வளவு ரசனையோடு
வேறு யாராலும் பேசவே முடியாது.

சந்திரலேகா(1948) வில் வில்லன்.

கத்தி சண்டை பிரமாதமாக போடுவார்.

அந்த காலத்தில் ரஞ்சன்
தமிழ் நவீன இலக்கிய வாசகர்.
இதுவும் கூட அவரின் தனித்தன்மைக்கு உதாரணம்.

ஹிந்தி படங்களில் நடித்தார்.

பின்னால் 'நீலமலை திருடன் ' (1957)படத்தில் நடித்தார்.அஞ்சலி தேவி ஜோடி.

"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா,
தலை நிமிர்ந்து உன்னை உணர்ந்து செல்லடா "
டி எம் எஸ் பாட்டு
 குதிரையில் ரஞ்சன் பாடிக்கொண்டு வருவார்.

இன்றைக்கு எழுபது வயதுடையவர்கள்
 பள்ளியில் படிக்கும் காலத்தில்
சினிமா பற்றிய பேச்சில்
'எம்ஜியாருக்கும் ரஞ்சனுக்கும் கத்தி சண்டை வைத்தால் யார் ஜெயிப்பார்கள்'
இது பற்றி எப்போதும் சூடான விவாதம்.
 ஒரு எழுபது வயதுக்காரர் சொன்னார் இதை.

நீலமலை திருடன் படத்தில் அஞ்சலி தேவியிடம் காதல் காட்சியில் ரஞ்சன் பேசும் ஒரு வசனம்-

" நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா?
நாக்கை அறுத்து போட்டுட்டு
பாயாசத்தை குடிச்சு பாருன்னு
சொல்ற மாதிரி இருக்கு!
மூக்கை அறுத்து போட்டு ரோசா பூவை மோந்து பாருன்னு சொல்ற மாதிரி இருக்கு!"

காதல் வசனம் !!

...

Apr 21, 2020

Carnal Thoughts - 50



கரமுண்டார் வூடு
தஞ்சை ப்ரகாஷ் நாவல்

காத்தாயம்பா, செல்லி, உமா மஹேஸ்வரி

காத்தாயாம்பா " ஏய் செல்லி, ஏங்கிட்ட வந்து படு "

" வாண்டாம்மா, யாராச்சும் பாத்தா "

" ஒர்த்தரும் பாக்க மாட்டாங்க,
வர்ரியா இல்லியாடி, நான் வரவா? முண்டெ"

செல்லி அவளருகே வந்து படுத்தாள்.
பகல் முழுவதும் காத்தாயம்பா
இவளுக்கு எஜமானி.
தழுவிப்புரண்டு செல்லிக்கு யாரும் தூண்டாமலே இயங்கினாள்.
காத்தாயம்மாளின் கூந்தலை முறுக்கி இழுத்து ஏறினாள்.
ஒருவரை ஒருவர் அழுந்தப் புதைந்து மேலேறிப் புரண்டு கொண்டனர்.
..

சித்தி உமா மஹேஸ்வரி தன்னோட நீளமான சாட்டை மாதிரியான கைகளால காத்தாயம்பாவ வாரி கட்டி அணைத்துக் கொண்டாள்.
ருசியான விளையாட்டு. அப்பறம் பசியான தேவை.
ரெண்டு பெண்கள் இறுகி முறுக்கி ரெண்டு பாம்பாய், சாரையாய்..

"சின்னம்மா, வேண்டாம், வேண்டாம் "

அவள தேடிக்கிட்டு ராத்திரி உமா வர்றெப்ப
திக்கு திக்குன்னு நெஞ்சுக்குள்ற பயமா இருக்கும்.
உமா கைய பிடிச்சி இழுத்து கட்டிக்கும் போது தப்பிச்சு ஓடவே முடியாது.

.....

நோபெல் பரிசு வாங்குவதற்கு கூட
 நேரில் போக மறுத்து விடியோ கொடுத்து விட்ட விசித்திர எழுத்தாளர் எல்ஃப்ரைட் ஜெளினிக்
(Elfriede Jelinek). ஆஸ்திரிய பெண்.

இவருடைய "பியானோ டீச்சர்"
 பெண் பாலியல் நாவல்.

Piano Teacher Stabs at social convention and
 sexual oppression, reveals the absurdity of society’s clichés.

இது மைக்கில் ஹேனக் இயக்கி La Pianiste (2001 film)பிரஞ்சு படமாக வந்திருக்கிறது.
 நாவல் Beautiful Dark Poetryஎன்றால்
சினிமா Dark Poetry.

இந்த பியானோ டீச்சர் என்று கிடையாது.
எந்த ஒரு இலக்கியப்படைப்புக்கும் திரைப்படமாக்கப்படும்போது
எப்போதும் ஒரு இழப்பு உண்டு.
அது வாசகனாய் இருக்கும் சினிமா ரசிகனுக்கு மட்டுமே புரியும்.

பியானோ டீச்சர் எரிக்காவின் வாழ்வு
 ஒரு பாலியல் யுத்தம். Battle of the Sexes.

தன் மாணவி தன் மாணவ காதலனுடன் பழகுவதை கூட பொறுக்க முடியாமல் அவள் இசை எதிர்காலத்திற்கே குந்தகம் விளைவிக்க முயலும் சேடிஸ்ட்.
 வால்டேர் தன்னை துன்புறுத்த வேண்டும் என விரும்பும் Masochist.
 வால்டர் -எரிக்கா பால் உறவு Sadomasochism.

 எரிக்கா தன் தாயை கற்பழிக்கிற லெஸ்பியன்.

 லெஸ்பியன் ரேப் காட்சியில் தாயாக
ஆன்னி என்ற நடிகை,
மகள் பியானோ டீச்சர் எரிக்காவாக நடிகை இசபெல் இருவரும் நடிக்க வேண்டியிருந்திருக்கிறது.
படம் முழுவதும் பியானோ இசை விருந்து தான்.

இந்த படத்தில் வரும் Lesbian Rape காட்சி
ஒரு தமிழ் சிறுகதையை நினைவிற்கு கொண்டு வருகிறது.

ஐம்பது வருடங்களுக்கு முன் ஜி.நாகராஜன் எழுதிய "மிஸ் பாக்கியம் "
அதில் வரும் பேராசிரியை பாக்கியம்
 தன் மாணவியை ரேப் செய்து விடுவார்.

.....

Apr 19, 2020

தஞ்சை ப்ரகாஷ் பதிப்புரை

கிரா கன்னிமை, அம்பை சிறகுகள் முறியும் போன்றவை தஞ்சை ப்ரகாஷ் பதிப்பித்தவை.

ப்ரகாஷ் பிரசுரித்த க. நா. சு. வின் 'பித்தப்பூ'
நாவலுக்கு ஒரு பதிப்புரை எழுதியிருந்தார்.
 இதில் அவர் வாசகனை மிரட்டுகிறார் என்று அந்த காலத்தில் கிண்டலும் ஏளனமுமாக இலக்கிய பத்திரிக்கையிலேயே எழுதப்பட்டிருக்கிறது.

ப்ரகாஷ் பதிப்புரையை படித்துப் பார்த்தால் அவருடைய பரிதவிப்பு, ஆதங்கம், உன்னத நோக்கம் சார்ந்த துயரம் தான் காணக்கிடைக்கும்.

நேரில் அவர் வாய் விட்டு சொல்லாத தன் போராட்டமான முன்னெடுப்புகளைப் பற்றிய Tormentation.

" நல்ல ஒரு வாசகனைத் தேடியடையும் இன்பத்துக்காகவே நான் பதிப்பாளனானேன்.

மனிதர்களிடம் மனிதனைத் தேடுவது அத்தனை சுலபமாயில்லை.

நல்ல புஸ்தகங்களை வாசகர்களுக்குத் தேடித்தர பல ஆண்டுகளாய் முயன்று வருகிறேன். ஆனால் உருப்படியான தொழிலாய் வெற்றியாய் இதுவரை வாழ முடியவில்லை என்பது தான் கண்ட பலன்.

நல்ல பதிப்பாளர்கள் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம். (என்னையும் சேர்த்து தான்.)
நல்ல படைப்பாளிகள் இனியும் படைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இருப்பார்கள்.
நீங்கள் யாருமே ஆதரிக்காவிட்டாலும் கூட
இவை நிகழ்ந்து எரிந்து கொண்டே தானிருக்கும்.

விமர்சகராகிய க. நா. சு. வுக்கு விமர்சகரில்லை.

புதுமைப்பித்தன் எழுதினார் - ' தமிழ் இலக்கிய உலகம் பாரிச வாதமும், பக்க வாதமும் போட்டலையும் அவதி'

விற்பனை சாத்தியமற்ற சூழலில் வியாபாரம் தொடங்கியிருக்கிறேன்.

சொந்தமாய்ப் பணம் கொடுத்து வாங்க தமிழில் இருநூறு பேர் கூட இல்லை.

க. நா. சு வின் இந்த புதிய நாவல் 'பித்தப்பூ' வை நீங்கள் ரசித்து படிக்க வேண்டும். நிறைய சிந்தித்து நாலுபேருக்கும் சொல்ல வேண்டும்.
நான் வெளியிட்ட வெளியீடு வெற்றி பெற வேண்டும்.

மேலும் நல்ல புது இலக்கியங்களை வாழும் காலத்தில் தமிழுக்கு அறிமுகம் செய்ய எனக்கு வாசகரின் துணை வேண்டும்.

பதிப்பாளன் என்கிற என் வாழ்வின் தளம் அத்தனை சுகமானதோ, சுலபமானதோ அல்ல. "

ப்ரகாஷின் மேற்கண்ட பதிப்புரை மற்றுமொருமுறை இப்போது படித்த
என்னை வெகு நேரம்
 செயலோயச் செய்து விட்டது.

....

1990ல் நான் புதுவையில் இருந்த போது
பல்கலைக்கழக துணைவேந்தர் வேங்கட சுப்ரமணியம் 'பித்தப்பூ' நாவலை படிக்க எண்ணி முயன்றிருக்கிறார். கிடைக்கவில்லை. 1987ல் வெளிவந்த நாவல்.
இந்திரா பார்த்தசாரதி வீட்டிற்கே போய் உரிமையுடன் "பித்தப்பூ நாவல எடுங்க" என்று வலது கையை நீட்டியிருக்கிறார்.
இ.பா சொன்னாராம் " பித்தப்பூ என்னிடம் இல்லையே..
உங்க எதிர் விட்டில தான் ராஜநாயஹம் இருக்கிறாரே.
கையில வெண்ணெயை வச்சிக்கிட்டு நெய்க்கு அலையிறீங்களே."

வீட்டிற்கு வந்தவுடன் துணை வேந்தர்
எனக்கு
ஒரு கடிதம், பித்தப்பூ கேட்டு

'அன்பு மிக்க அறிஞர் ராஜநாயஹம் ' என்று விளித்து

நான் வந்த அட்டெண்டரிடம் பித்தப்பூவோடு
 ஒரு பதில் கடிதம் ரெண்டு பேரா எழுதி கொடுத்தனுப்பினேன்.
' என்னைப் போய் அறிஞர் என்கிறீர்களே '

இன்னொரு கடிதம் சுடச்சுட எழுதி கொடுத்தனுப்பினார்.

"ராஜநாயஹம், அறிந்தவர் அறிஞர். நீங்கள் அறிஞர் என்பதற்கு உங்கள் கடிதமே சாட்சி.
சரி, துணை வேந்தர் தானே பட்டம் கொடுக்க முடியும்? "

அவர் படித்து விட்டு திருப்பித் தந்த பித்தப்பூ
 என் கையில் இதோ இருக்கிறது.

முன்னாள் துணை வேந்தர் வேங்கடசுப்ரமணியனும் இப்போது இல்லை.
பதிப்பித்த ப்ரகாஷும் இல்லை.

Apr 15, 2020

காருக்குறிச்சி அருணாசலத்தின் கோவில்பட்டி பங்களாவில்

 புகைப்படத்தில் ஏ. பி. நாகராஜன், காருக்குறிச்சி அருணாசலம், சிவாஜி கணேசன்
மூவரும் இருக்கிறார்கள்.
கொஞ்சம் சலங்கை 1962.
இப்படி இது போல அவர்கள் மூவரும் சௌஜன்யமாக பேசிக்கொண்டிருப்பது
அதற்கும் முந்தைய காலம்
என்று தெரிய வந்துள்ளது.
ஏ. பி. என் இயக்கத்தில் சிவாஜி, சாவித்திரி நடித்த வடிவுக்கு வளைகாப்பு கூட 1962 தான்.
அடுத்த வருடம் சிவாஜியை குலமகள் ராதையில் சிவாஜியை ஏ. பி. என் இயக்கினார்.
1964 ல் சிவாஜியின் நூறாவது ரன் நவராத்திரி
ஏ. பி. என் கை வண்ணம் தான்.
அந்த வருடம் தான் காருக்குறிச்சியின்
அகால மரணம்.
இந்த புகைப்படம்.

Every picture tells a story.
காருக்குறிச்சி அருணாசலத்தின்
கோவில்பட்டி பங்களாவில்
இந்த உரையாடல்.
ஏ. பி. நாகராஜன் வரும் போதெல்லாம் காருக்குறிச்சியின் மனைவி
ராமலட்சுமி அம்மாளிடம்
வத்தக்குழம்பு கேட்பாராம்.
நாகராஜனும், கணேசனும், அருணாசலமும்
கொத்தமங்கலம் சுப்புவின் 'தில்லானா மோகனாம்பாள்' நாவலை படமாக்குவது பற்றி விவாதித்து இருக்கலாம்.
The possibility of the future.
விகடனில் தொடராக வந்த போது
வாசகர்கள் ஒன்றிப் போன தொடர்கதை.
கடைசியில் கதை நாயகனுக்கும், நாயகிக்கும் திருமண பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு விகடன் இதழோடு தரப்பட்டது.
விகடனுக்கு ஏகப்பட்ட கல்யாண வாழ்த்து தந்திகள் குவிந்தன என்று சொல்வார்கள்.
1968 ம் ஆண்டு தான் தில்லானா மோகனாம்பாள் வெளி வந்தது.
நிச்சயம் ஏ. பி. நாகராஜனும், சிவாஜி கணேசனும்
அந்த சமயத்தில் நாதஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாச்சலத்தை நினைவில்
பெரு மூச்சு விட்டிருப்பார்கள்.
Life is what happens when you make other plans.

Apr 14, 2020

சிவாஜியும் காருக்குறிச்சியும்

'சிங்கார வேலனே, தேவா'
பாடல் ஜானகியும், காருக்குறிச்சியும் பாடி பதிவு செய்யப்பட்டிருந்தது. பாடலின் தரம் ஜானகியின் குரலோடு காருக்குறிச்சியின் ராட்சச வாத்தியத்தின் காற்றால் உன்னத உச்சத்தை எட்டி விட்டது.
(இன்றும் அந்த ஆபேரி ராக பாடல் கேட்கும்போதும் கண்ணீரை கட்டுப்படுத்த முடிந்ததில்லை.)

தமிழ் திரையுலகமே இந்த பாடல் பற்றி பேச்சு. ஜெமினி கணேசனின் அந்த கொஞ்சும் சலங்கை பாடலை நான் அமெரிக்காவுக்கு போவதற்கு முன்னர் கேட்டே ஆக வேண்டும் என்று சிவாஜி விரும்பியிருக்கிறார்.
When Caesar says do it, it is performed.
பாடலை கேட்டு விட்டு தான் விமானத்தில் ஏறினாராம்.
'வச்சிக்றேன். இதுக்கு என் பாணியில் பதில் சொல்றேன்'என்று தானே நினைத்திருப்பார்.
பிரபலமான மார்லன் ப்ரான்டோ - சிவாஜி கணேசன் புகைப்படம் அந்த அமெரிக்க விஜயத்தின் போது எடுக்கப்பட்டது தான்.
பின்னால் அந்த அசுர வாத்தியத்தை இந்த தமிழ் திரையுலகின் அசுர குழந்தை தில்லானா மோகனாம்பாளில் எத்தகைய உச்சத்திற்கு தன் நடிப்பால் உயர்த்தி சாதனை புரிந்தார்.

காருக்குறிச்சி அப்போது மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவரல்லவோ தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரம் வாசித்து உன்னத நிலைக்கு கொண்டு சென்றிருப்பார்.

தில்லானா மோகனாம்பாள் படத்தை எப்போது பார்க்க நேர்ந்தாலும் இந்த எண்ணத்தை தவிர்க்க முடிந்ததில்லை. 
சேதுராமன் - பொன்னுசாமி சகோதரர்களும் நிறைவாகவே செய்திருந்தார்கள்.
இந்த புகைப்படங்களில் சிவாஜி, காருக்குறிச்சி அந்நியோன்யத்தை பாருங்கள்.

நாதஸ்வர பெருங்கலைஞர் காருக்குறிச்சி அருணாச்சலம்


நாதஸ்வர பெருங்கலைஞர்
காருக்குறிச்சி அருணாசலம்
தன் மூன்று மனைவியருடன் இருக்கும்
அபூர்வ புகைப்படம் இது.
முதல் மனைவி ராஜலட்சுமி அம்மாள்.
இவர் தனக்கு குழந்தையில்லாததால் உறவிலேயே
ஒரு பெண்ணை கணவருக்கு
திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
அந்த பெண் உயிருடன் இருக்கவில்லை.
உடனே இறந்து விட்டார். அதனால் மற்றொரு உறவுப்பெண் பாக்யலட்சுமியை தன் கணவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
பாக்யலட்சுமி அம்மாள் மூலம் புத்ர பாக்யம்.
ஒரு மகன் சரவணபவன்.
மற்றும் ஐந்து பெண் புத்திரங்கள்.
காருக்குறிச்சி அருணாசலம் அடுத்து
மணம் புரிந்த ராஜலட்சுமி அவர்கள்
பழம்பெரும் நடிகை ஈ. வி. சரோஜாவின்
ஒன்று விட்ட சகோதரியாவார்.
இவர் மூலம் மூன்று ஆண் குழந்தைகளும்
மூன்று பெண் குழந்தைகளும்.
ஆக மொத்தம் காருக்குறிச்சிக்கு
பன்னிரெண்டு குழந்தைகள்.
நாற்பத்திரண்டு வயதில் பெருங்கலைஞர்
தன் மூச்சை நிறுத்திக் கொண்டார் என்பது பெருந்துயரம்.
ராஜலட்சுமியின் ஒரு மகளை பழம் பெரும் நடிகர்
எம். கே. ராதாவின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
மற்றொரு மகளை பழம்பெரும் நடிகை குசல குமாரியின் மகன் மணந்தார்.
பாக்யலட்சுமியின் மகள் சுப்புத்தாயின் கணவர் அக்ரிகல்சுரல் ஜாயிண்ட் டைரக்டர்.
இந்த சுப்புத்தாய் அம்மாளின் மகன் சதீஷ், சதீஷின் மகன் தீபக் இருவரோடும் நான் மொபைலில் பேசும் வாய்ப்பு  கிடைத்தது.
காருக்குறிச்சியின் மகள் சுப்புத்தாய் அம்மாளும்
என்னிடம் பேசினார் என்பது என் பாக்யம்.
காருக்குறிச்சியின் பேரன் சதீஷும்,
கொள்ளுப் பேரன் தீபக்கும் கொடுத்த அபூர்வ புகைப்படங்கள், தகவல்கள் விசேஷமானவை.
இதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
....

Apr 12, 2020

தஞ்சை ப்ரகாஷ் மிஷன் தெரு மன்னார்குடி

நான் மன்னார்குடியை பார்த்ததேயில்லை.

அரசியல் காரணங்களுக்காக 'மன்னார்குடி'
பல முறை உச்சரிக்கப்பட்டும், எழுதப்பட்ட வார்த்தையாகவும் இருந்திருக்கிறது.

தி. ஜானகிராமன் பிறந்த ஊர் தேவங்குடி கிராமம்
மன்னார்குடி அருகில் உள்ளதாம்.

மன்னார்குடி என்றால்
அ.மார்க்ஸ் ஞாபகமும் வரும்.

'மிஷன் தெரு' குறுநாவலில் தஞ்சை ப்ரகாஷ் மன்னார்குடி பற்றி சொல்வது நூறு வருஷத்திற்கு முந்தைய ஊர்.

"எங்கு பார்த்தாலும் குளங்களும், ஏரிகளும்,
பசுமை யான வயல்களும், தோப்புகளும், துறவுகளுமாய் மனத்திற்கு இன்பமான அற்புத பூமியாய் மன்னார்குடி இருந்தது. "

" தீவுப்பிரதேசம் போல் மன்னார்குடி.
 அறுபது குளங்களின் நடுவில் ஊர்.
எப்படிப் போனாலும் எதிர் படும் ஒரு குளம். "

தஞ்சை ப்ரகாஷ் பற்றி என் ஞாபக அடுக்குகளை சிக்கெடுத்து பார்க்கும் போது தன் இலக்கிய செயல் பாடு பற்றி, எழுத்து பற்றி எதுவுமே பேசியதில்லை.
'என் எழுத்து படிச்சிருக்கீங்களா? விகடன்ல என் கதை.. சுப மங்களாவில நான் எழுதின கதை..' இப்படி அவர் எதுவுமே பேசியதில்லை.

'இப்ப ஒரு நாவல்
எழுதிக்கிட்டிருக்கேன் 'ன்னெல்லாம் மூச்சு கூட விட்டதேயில்லை'

பதிப்பாளராக அவருடைய போராட்டங்கள் பற்றியும் புலம்பியதில்லை.

பிரபஞ்சனை இலக்கியம் எழுத்து என்று ஆளாக்கியவர் ப்ரகாஷ் என்பதை பிரபஞ்சன் புதுவையில் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

வேறு யாராயிருந்தாலும் " நம்ம பய தாங்க  பிரபஞ்சன்" என்று பீற்றியிருப்பார்.
ஆனால் ப்ரகாஷ் அப்படி ஒரு வார்த்தையும் சொன்னதில்லை.

அந்த ஆஜானுபாகுவான மனிதரின்
 இந்த இயல்பு காணக்கிடைக்காதது.

Apr 10, 2020

லாரி பேக்கரும் ரங்காராவும்

சென்ற வருடம் டிசம்பரில் ஒரு நாள் நடிகர் நாசர் அவர்களுடன் மொபைலில் நான் பேச வேண்டியிருந்தது.
என்ன, 'சினிமாவில் எனக்கு நடிக்க சான்ஸ் கிடைக்குமா?' என்பதற்காக தான்.

(கூத்துப்பட்டறையிலிருந்து அப்ப நான் வெளிய வந்தாச்சி)

இது மாதிரி சந்தர்ப்பங்களில் பிரபலத்திடம் வேறு விஷயங்களும் கூட 'பேக்கு' மாதிரி பேச வேண்டியிருக்கும்.

"சார், ஸ்பேசஸ்ல ஒரு நாடகம் பாக்கும் போது, நான் உங்க பக்கத்தில ஒக்காந்திருந்தேன். ஒங்க சட்டையில, காலர் பக்கத்தில ஒரு பூச்சி. நான் அத தட்டி விட்டப்ப நீங்க திரும்பி என்னன்னு கேட்டீங்க?  நான் 'பூச்சி' ன்னேனே"

நாசர் : அப்படியா?

" சார், ந.முத்துசாமி இறந்த போது நீங்க கூத்துப்பட்டறை வந்திருந்தப்ப உங்களோட  பேச முடியாமல் போயிடுச்சி "

நாசர் : ஓ

" ரெண்டு மாசம் முன்னால அருண்மொழியோட நீங்க ஒங்க வீட்டுக்கு பக்கத்தில டீ சாப்பிட்டுக்கிட்டு இருந்தப்ப, உங்கள பாத்துட்டு  வந்தேன். அருண்மொழி உங்களுக்கு 'ராஜநாயஹம்' னு அறிமுகப்படுத்துனாரே"

"அப்பறம் உங்க வீட்டுக்கு வந்தேன். நீங்க அப்ப இல்ல. நான் எழுதின புத்தகங்கள் நீங்க பார்க்க குடுத்துட்டு வந்தேன். "

நாசர் : ஓஹோ

இப்படியெல்லாம்" பூவாளுர் சந்தையில ஒங்க பொட்டியும் என் பொட்டியும் இடிச்சிண்டதே, ஞாபகமில்லையா" பாணியில அவர மன்றாடிப் பார்த்தேன்.

"ஆதாம் ஏவாள் மொறப்படி நம்ம ரெண்டு பேரும் சொந்தம், சார் " ன்னு தான்  இனி சொல்ல வேண்டியிருக்குமோ? ன்னு ஆகி விட்ட வேளையில் சட்டென்று ஒரு விஷயம் நினைவுக்கு வந்து விட்டது.

" ஆங்.. சார், இப்ப இந்த வருஷ விகடன்  தீபாவளி மலர்ல நீங்க லாரி பேக்கர் பத்தி எழுதியிருந்தீங்கள்ள? "

நாசர் சற்று இளகி " ஆமாம் "

" இதே விகடன் தீபாவளி மலர்ல நான்  எஸ். வி. ரங்காராவ் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கேன் சார் "

நாசர் : லாரி பேக்கருக்கும், எஸ். வி. ரங்காராவுக்கும் என்ன சம்பந்தம்??"

...

Apr 5, 2020

ஆதிநாராயண விஸ்வரூபம்


இன்று ஒரு இளம் இயக்குநருடன் மொபைலில் பேசிய போது என் அடி மனதில் இருந்து அவருடைய தந்தை மேலெலும்பினார்.
அந்த இளம் இயக்குநர் பெயர்
கார்த்திக் ஆதிநாராயணன்.
சீனு ராமசாமியிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றியவர்.
கார்த்திக் என் எழுத்தின் மீது அபிமானம் கொண்டவர்.
ராஜநாயஹம் எழுதியவற்றின் தனித்தன்மை, Sarcasm பற்றி பேசினார். ஆழ்ந்து வாசித்திருக்கிறார் என்பதை அவர் பேச்சு மூலம் அறிய முடிந்தது.
அவருடைய அப்பா ஆதிநாராயணன் ஒரு போலீஸ் ஆஃபிசராக இருந்தவர்.
அப்பா பற்றி கார்த்திக் இப்படி சொன்னவுடனேயே போலீஸ் அதிகாரி ஆதிநாராயணன் கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று நினைத்தேன்.
அடுத்த நொடியே என் sub conscious mind ல் இருந்து ஆதிநாராயணன் விஸ்வரூபம் எடுத்து நின்று விட்டார்.

Memory is my fate.
ஒரு சர்ச் லைட்டை ஒரு சிறுவன் கல்லெறிந்து உடைத்து விட்டான். சர்ச்சுக்கு சம்பந்தப் படாதவன்.
சர்ச் பாதிரியார் அந்த சர்ச்சுக்கு வருகிற இரண்டு கிறிஸ்தவ தி. மு. க இளைஞர்கள் மீது போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டார். அவருக்கு இந்த இருவர் மீது பகை இருந்திருக்கிறது. பழி வாங்கத் தான் புகார் கொடுத்திருக்கிறார்.
அந்த இருவரும் என்னிடம் வந்து போலீஸிடம் இருந்து காப்பாற்ற வேண்டினார்கள்.
நான் நன்கு விசாரித்தேன். கல்லெறிந்த சிறுவன் யாரென்று கண்டு பிடிக்க முடிந்தது. அவன் தன் தவறுக்காக மன்னிப்பு கேட்டான்.
அந்த திமுக இளைஞர்களை இந்த புகாரில் இருந்து மீட்க முடிவெடுத்தேன்.
நத்தம் ரோட்டிலிருந்த எஸ். பி. (மதுரை நார்த்) ஆஃபிஸில் ஸ்பெஷல் ஆஃபிசராக இருந்த என் நண்பர் பட்டாபியிடம் என் வேனில் அழைத்து சென்றேன்.
விஷயத்தை விளக்கிச் சொன்னேன்.
பட்டாபி போலீஸ் அதிகாரி என்பதை விட அற்புதமான மனிதர்.
அவர் என்னுடன் கிளம்பி போலீஸ் ஸ்டேசன் வந்தார். சப் இன்ஸ்பெக்டரிடம் முழு உண்மையை என்னுடன் சேர்ந்து விளக்கினார்.
பிரச்னை முடிந்தது என்று தான் நினைத்தேன்.
ஆனால் ஒரு அதிகாலை நேரத்தில் அந்த தி. மு. க இளைஞர்கள் என் வீட்டிற்கு வந்து புலம்பி கண் கலங்கினார்கள்.
போலீஸ் அவர்களின் வீட்டுக்கு தேடி வந்து விட்டார்கள். இவர்கள் ராத்திரியிலிருந்து தலை மறைவாக இருக்கிறார்கள். தூக்கமில்லை.
அப்போது என் வேன் டிரைவர் வந்து விட்டான். ஒரு ட்ரிப் தூத்துக்குடிக்கு போக வேண்டியிருந்தது. அதை கேன்சல் செய்தேன். நத்தம் ரோட்டுக்கு வண்டியை விடச் சொன்னேன்.
பட்டாபியோடு அப்போது ஆதிநாராயணனும் இருந்தார். ஏற்கனவே அவர் அறிமுகம் எனக்குண்டு.
விஷயத்தைக் கேட்டதும் பொங்கி விட்டார்.
போனை எடுத்தார். போலீஸ் ஸ்டேஷனுக்கு கால் போட்டார். போனை எடுத்த ரைட்டரிடம் 'சப் இன்ஸ்பெக்டரிடம் போனை கொடு' என்றார்.
எஸ். ஐ. லைனில் வந்ததும் அவர் பெயர் சொல்லி ஏகாரத்தில் ஆரம்பித்து ' ஏம்ப்பா, பட்டாபி நேர்ல வந்து சொல்லியும் ஏன் இப்படி செய்ற? ராஜநாயஹம் எனக்கும் தான்யா ஃப்ரெண்டு.
அந்த பாதிரியாரு சொந்த பகைக்காக தான் இப்படி செஞ்சிருக்கான்னு விவரமா சொன்னப்ப மாடு மாதிரி தலய ஆட்டியிருக்க. அப்பறம் ஏன் கேஸை போட்டு இழுக்கிற. ம். யோவ் ஏய்யா இவ்வளவு தான் எங்களுக்கு மரியாதயா? நம்மல்லாம் ஒரே பேட்ச்ல எஸ். ஐ ஆனவங்க. நீ எப்படியா பொது ஜனங்கள மதிப்ப? ஒழுங்கா கேஸ முடி '
"இந்த விஷயத்துல உண்மை இல்லன்னா ராஜநாயஹம் வந்திருக்க மாட்டாப்ல. பட்டாபியும் வந்திருக்க மாட்டாப்ல.
நானும் வந்திருக்க மாட்டேன்"
ஆதிநாராயணன் கோபமாகத் தான் போனை வைத்தார்.
பிரச்னை சுமுகமாக முடிந்தது.
பட்டாபி, ஆதிநாராயணன் போன்ற அற்புதமான காவல் அதிகாரிகள்.
என் வாசகரின் தந்தை எனக்கு அன்று அறிமுகமுள்ள ஆதிநாராயணனின் மகன்.
விட்ட குறை. தொட்ட குறை.
இந்த நிகழ்வை நான் சொன்னதும் ஆதிநாராயணன் மகன் கார்த்திக் இப்போது எல்லோரும் சொல்லும் வார்த்தையை நெகிழ்ந்து சொல்ல வேண்டியிருந்தது.
" உலகம் ரொம்ப சின்னது சார் "
தன் தந்தை D. S. P. ஆதிநாராயணன் 2010ல் இறந்து விட்டார் என்ற செய்தியை கார்த்திக் சொன்னார்.
....

Apr 4, 2020

Lady Macbeth and

The importance of washing hands

"Out, damned spot! Out, I say

Will these hands never be clean?
All the perfumes of Arabia will not sweeten this hand"

Feeling like Lady Macbeth
with all the frequent and Compulsive handwashing.
The state of loneliness.
Fighting against an irresistible fate.

Out damned Corona, Out, I say

Out aggravation, Out contamination

Washing hands are caring hands.

Apr 3, 2020

தஞ்சை ப்ரகாஷ்

'பொறா ஷோக்கு' தஞ்சை ப்ரகாஷ் சிறுகதை.
ஷம்ஷாத் பேகம் தன் மகள் 17 வயசு ஜைத்தூனை காசீம் மொகைதீன் ராவுத்தரோட கோர்த்து விடுறா.

ப்ரகாஷூடைய இன்னொரு கதை 'அங்கிள்'.
மிஷன் தெரு எலிசு தன் மகள் லிடியாவை சாமி பிள்ளையோட சேத்து விடுறா.

காலம் தான் என்னமாக ப்ரகாஷ் கைவண்ணத்தில் ஓவியமாக தீற்றப்பட்டு விடுகிறது.

பல பிள்ளைகளை பெற்று விட்ட ஷம்ஷாத்தும், எலிசும் பருவ வயது மகள்களின் வாழ்வை எத்தகைய வசதியான பெரிசுகளான காசீமோடும், சாளியோடும் இணைத்து இயல்பாய் தீர்வு காண்கிறார்கள்.

'மிஷன் தெரு ' குறுநாவல் காட்டும் சரித்திர காலம்.
எஸ்தர் இதில் லாசரஸை மணமுடிக்கும் நிர்ப்பந்தம்.

எஸ்தர் தன் பருவத்தில் காணும் வெள்ளைக்காரன் ஸ்டோன் துரை, மற்றும் காதலன் வில்லி,

மஸ்தானோடு ஓடிப்போகும் ஜைத்தூன்,

பாண்டிப்பயலோடு கல்லறைத் தோட்டத்தில் படுக்கும் லிடியா.

காசீம், சாளி, சேடிஸ்ட் லாசரஸ் மூவரும் அந்த குமருகளின் அந்தரங்கத்தை அறிந்த பின்னரே பெண்டாள்கிறார்கள்.

தஞ்சை ப்ரகாஷ் என்ற அதி மானிடனை நான் முதன் முதலாக கி. ரா மூலமே அறிந்தேன்.
சந்தித்த உடனேயே நான் தி. ஜானகிராமனுக்கு வெளியிட்டிருந்த நினைவு மதிப்பீட்டு மடலுக்காக பாராட்டினார். "சரியான நேரத்தில செஞ்சீங்க"

கி. ரா. வுடைய கன்னிமை, அம்பையின் 'சிறகுகள் முறியும்',  க. நா. சு. வோட 'பித்தப்பூ' எல்லாத்துக்கும் ப்ரகாஷ் தான் பப்ளிஷர்.
அந்த புத்தகங்கள் என்னிடம் இருந்ததால் அவரை பல காலமாக அறிந்திருந்தேன்.

அப்புறம் கி. ரா வருகை தரு பேராசிரியராக புதுவை பல்கலை கழகத்தில் நடத்திய' நாட்டுப் புறக்கதைகள் ' பற்றிய கருத்தரங்கத்தில்.
ப்ரகாஷ் அதில் ஒரு கட்டுரை வாசித்தார்.
அங்கே கி. ரா. பற்றி என்னிடம் ப்ரகாஷ் கரிசனத்துடன் சொன்னார் :" நைனா மெலிஞ்சிட்டார். சுகர் அவர படுத்துது. "

மூன்றாவதாக அவரை
டாக்டர் ச.வீரப்பிள்ளை வீட்டில்
அசோகமித்திரன் படைப்புகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வில்.

அவரைப் பற்றி ஒரு தெளிவான நினைவு என்னில் இன்றும் உண்டு. எப்பேர்ப்பட்ட ஆளுமை.

இன்னும் அதிகமாக அவரோடு பழகி நட்பு பாராட்ட முடியாம‌ல் போனது துரதிருஷ்டம்.

அதனாலென்ன. அவருடைய படைப்புகள் இருக்கின்றன. எஞ்சிய என் காலத்தில் அவரோடு உரையாட அவை போதும்.

"தஞ்சை பிரகாஷ் பற்றி  நான் நினைத்து வியக்காத நாளே கிடையாது. நிஷ்காம்ய கர்மம் என்று ஒன்று சொல்வார்கள். அப்பதத்துக்கு எனக்கு அவரைத்தான் நினைக்கத் தோன்றுகிறது" - அசோகமித்திரன் கணையாழியில் 2000 ஆண்டு ஜனவரியில் இப்படி எழுதினார்.


Apr 1, 2020

கி. ரா எழுதியுள்ள புதிய நாவல்

97 வயதான கி. ராஜநாராயணன் குரலில் கொஞ்சம் கூட முதுமையின் சுவடு தெரியாது.
அவர் போனை எடுத்து குரல் கொடுத்தவுடன்
 அவர் மகன் என நினைத்து "பிரபி, நான் ராஜநாயஹம் பேசுகிறேன்"
"ராஜநாயஹமா? நான் ராஜநாராயணன் தான் பேசுறேன் "
உற்சாகமான, கனிவான பாசக்குரல்.

வயதிற்கான அடையாளம், சிரமம், ஞாபக பிசகு எதுவுமே இல்லாத தெளிவான இளமைக்குரல்.

தங்கு தடையற்ற நிதான உரையாடல் நிகழ்த்துகிறார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்
நான் பேசியிருக்கிறேன்.

'இந்த இவள் ' என்ற அவருடைய நாவலையடுத்து இன்னொரு நாவல் எழுதி முடித்திருக்கிறார்.
இந்த புதிய நாவலை அச்சு பிரசுரத்திற்கு கி. ரா கொடுப்பதாக இல்லை.
பதிப்பகம் மூலமாக வெளிவரும் புத்தகம் அல்ல.

Byron "Emma letters" பற்றி நினைவு படுத்தினார்.

Byron's early poems to Emma?

இந்த வருடம் கி. ரா பிறந்த நாளில் புதிய புதினம் புது விதமாக வாசகர்களுக்கு படிக்க கிடைக்க இருக்கிறது.

ஞான பீட விருது அவருக்கு கிடைக்க வேண்டும்.
..