Share

Apr 12, 2020

தஞ்சை ப்ரகாஷ் மிஷன் தெரு மன்னார்குடி

நான் மன்னார்குடியை பார்த்ததேயில்லை.

அரசியல் காரணங்களுக்காக 'மன்னார்குடி'
பல முறை உச்சரிக்கப்பட்டும், எழுதப்பட்ட வார்த்தையாகவும் இருந்திருக்கிறது.

தி. ஜானகிராமன் பிறந்த ஊர் தேவங்குடி கிராமம்
மன்னார்குடி அருகில் உள்ளதாம்.

மன்னார்குடி என்றால்
அ.மார்க்ஸ் ஞாபகமும் வரும்.

'மிஷன் தெரு' குறுநாவலில் தஞ்சை ப்ரகாஷ் மன்னார்குடி பற்றி சொல்வது நூறு வருஷத்திற்கு முந்தைய ஊர்.

"எங்கு பார்த்தாலும் குளங்களும், ஏரிகளும்,
பசுமை யான வயல்களும், தோப்புகளும், துறவுகளுமாய் மனத்திற்கு இன்பமான அற்புத பூமியாய் மன்னார்குடி இருந்தது. "

" தீவுப்பிரதேசம் போல் மன்னார்குடி.
 அறுபது குளங்களின் நடுவில் ஊர்.
எப்படிப் போனாலும் எதிர் படும் ஒரு குளம். "

தஞ்சை ப்ரகாஷ் பற்றி என் ஞாபக அடுக்குகளை சிக்கெடுத்து பார்க்கும் போது தன் இலக்கிய செயல் பாடு பற்றி, எழுத்து பற்றி எதுவுமே பேசியதில்லை.
'என் எழுத்து படிச்சிருக்கீங்களா? விகடன்ல என் கதை.. சுப மங்களாவில நான் எழுதின கதை..' இப்படி அவர் எதுவுமே பேசியதில்லை.

'இப்ப ஒரு நாவல்
எழுதிக்கிட்டிருக்கேன் 'ன்னெல்லாம் மூச்சு கூட விட்டதேயில்லை'

பதிப்பாளராக அவருடைய போராட்டங்கள் பற்றியும் புலம்பியதில்லை.

பிரபஞ்சனை இலக்கியம் எழுத்து என்று ஆளாக்கியவர் ப்ரகாஷ் என்பதை பிரபஞ்சன் புதுவையில் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

வேறு யாராயிருந்தாலும் " நம்ம பய தாங்க  பிரபஞ்சன்" என்று பீற்றியிருப்பார்.
ஆனால் ப்ரகாஷ் அப்படி ஒரு வார்த்தையும் சொன்னதில்லை.

அந்த ஆஜானுபாகுவான மனிதரின்
 இந்த இயல்பு காணக்கிடைக்காதது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.