Share

Showing posts with label க. நா.சு. Show all posts
Showing posts with label க. நா.சு. Show all posts

Oct 7, 2020

காலத்தை எதிர்த்து நீச்சு போடும் தி. ஜா

 தி. ஜானகிராமன் பற்றி ஆதவன் 

"புராதன இலக்கியக் கலை வடிவங்களுக்கும் நவீன இலக்கியக் கோட்பாடுகளுக்குமிடையே ஓர் ஒருங்கிணைப்பை உருவாக்க முயலும் நுட்பமான பரிசோதனைகளாக அவருடைய படைப்புகளில் பல எனக்குத் தோன்றுகின்றன. 

அதாவது இன்றையத் தேவைகளுக்கேற்ற 

ஓர் இந்திய இலக்கிய பாரம்பரியத் தொடர்ச்சியை இனம் கண்டு நிறுவும் முயற்சிகளாக. "


தி. ஜா இறந்த போது 'கணையாழி'யில் 

இப்படி ஆதவன் எழுதியிருந்தார். 


இதை 1989ல் ஜானகிராமனுக்கு நான் வெளியிட்டிருந்த நினைவு மதிப்பீட்டு மடலில் இணைத்திருந்தேன். 


ஆதவன் அப்போது இல்லை.

 1987ல் யதார்த்தமாகவே அவரை 

காலவெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டது. 


அந்த கணையாழி இரங்கலில்

 இன்னும் சில வார்த்தைகள் கூட சொல்லியிருந்தார். 

பசுமரத்தாணி போல பதிந்து விட்ட ஒரு வரி :

" ஜானகிராமன் என்ற மனிதர் பற்றியும் பேசத் தோன்றுகிறது. ஆனால் இந்த ரசனையற்ற உலகில் பவித்ரமான நினைவுகளை அரங்கேற்றுவானேன் என்றும் தோன்றுகிறது. "


க. நா. சு 'கொட்டு மேளம்' தி. ஜானகிராமன் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டதையும் நினைவு மதிப்பீட்டு மடலில் சேர்த்திருந்தேன். 

" காலத்தை எதிர்த்து நீச்சுப் போடுவதென்பது சிரமமான காரியம். அதை இலக்கியப் பூர்வமாகவும், ஒரு அலட்சிய பாவத்துடனும் செய்திருக்கிறார் ஜானகிராமன். " 


க. நா. சு 1950களில் சொன்ன வார்த்தைகள். 

காலத்தை எதிர்த்து எப்போதும் நீந்திக் கொண்டே இருக்கும் படைப்புகளை தந்துவிட்டுப் போயிருக்கிறார். தி. ஜா. 


இதே தி. ஜா நினைவு மதிப்பீட்டு மடலில் வண்ணதாசன் எழுதிய வரிகள் ஒரு கடிதத்தில் எழுதப்பட்டதாகும். 


வண்ணதாசனுக்கும், வண்ணநிலவனுக்கும் வாலிபக்காலத்தில் உற்சாகமாக கடிதம் எழுதியிருக்கிறேன். இருவரிடமும் இருந்து 

பதிலே வரவில்லை. 

வண்ணதாசன் அப்பா தி. க. சி 

அடிக்கடி கடிதம் எழுதுவார். 


பழனியில் நான் அக்கவுண்ட் வைத்திருந்த பேங்க் மேனேஜர் ஒருவர் ஆர்வமாக கவிதை எழுதிக்கொண்டிருந்தார். அவருக்கு அன்னம் 

நவ கவிதை வரிசையில் 

கல்யாண்ஜியின் 'புலரி' 

நம்பிராஜன் 'ஆகாசம் நீலநிறம்' 

வண்ண நிலவன் 'மெய்ப்பொருள்' 

மூன்றும் கொடுத்து படிக்கச் சொன்னேன். 


அப்புறம் நவ கவிதை வரிசையில் வராத         கலாப்ரியா 'மற்றாங்கே' 


படித்து விட்டு கவிதை வேறு மாதிரி என்று பேங்க்கர் புரிந்து கொண்டார். 


அப்புறம் அவர் எழுதிய கவிதையொன்றை மா. அரங்கநாதனின் 'முன்றில்' பத்திரிக்கை விலாசம் கொடுத்து அனுப்ப சொன்னேன். 

முன்றிலில் பிரசுரமானது. 


வண்ண தாசன் பேங்க் ஆஃபிசர். அம்பாசமுத்திரத்தில் வேலை பார்க்கிறார் என்று நான் சொன்னேன். உடனே பழனி பேங்க் மேனேஜர் அவருக்கு கடிதம் போட்டார். எனக்கு பதில் எழுதாத வண்ணதாசன் இவருக்கு உடனே பதில் எழுதினார். ஒரே மனவாடு. இவரும் பேங்க்க்கு. அவரும் பேங்க்க்க்க்கு. ஸ்டேட்டஸ். .?! 

நானோ பேக்கு. 


வண்ணதாசன் அந்த பழனி அமெச்சூர் கவிஞருக்கு எழுதிய பதிலில் எழுதியிருந்ததையும் 

தி. ஜானகிராமன் மதிப்பீட்டு மடலில் சேர்த்தேன். 


அந்த கடித வரிகள் " புதுமைப்பித்தனும் 

தி. ஜானகிராமனுமான மனமும் வாழ்வும் நமக்கு அமைந்தால் போதும். இரண்டு பேரின் அக்கறையையும் வீச்சையும் தாண்டி, நம் வாழ்வோ அல்லது இலக்கியமோ ஒரு அங்குலம் கூட அப்புறம் நகர்ந்து விடப்போவதில்லை."

Apr 19, 2020

தஞ்சை ப்ரகாஷ் பதிப்புரை

கிரா கன்னிமை, அம்பை சிறகுகள் முறியும் போன்றவை தஞ்சை ப்ரகாஷ் பதிப்பித்தவை.

ப்ரகாஷ் பிரசுரித்த க. நா. சு. வின் 'பித்தப்பூ'
நாவலுக்கு ஒரு பதிப்புரை எழுதியிருந்தார்.
 இதில் அவர் வாசகனை மிரட்டுகிறார் என்று அந்த காலத்தில் கிண்டலும் ஏளனமுமாக இலக்கிய பத்திரிக்கையிலேயே எழுதப்பட்டிருக்கிறது.

ப்ரகாஷ் பதிப்புரையை படித்துப் பார்த்தால் அவருடைய பரிதவிப்பு, ஆதங்கம், உன்னத நோக்கம் சார்ந்த துயரம் தான் காணக்கிடைக்கும்.

நேரில் அவர் வாய் விட்டு சொல்லாத தன் போராட்டமான முன்னெடுப்புகளைப் பற்றிய Tormentation.

" நல்ல ஒரு வாசகனைத் தேடியடையும் இன்பத்துக்காகவே நான் பதிப்பாளனானேன்.

மனிதர்களிடம் மனிதனைத் தேடுவது அத்தனை சுலபமாயில்லை.

நல்ல புஸ்தகங்களை வாசகர்களுக்குத் தேடித்தர பல ஆண்டுகளாய் முயன்று வருகிறேன். ஆனால் உருப்படியான தொழிலாய் வெற்றியாய் இதுவரை வாழ முடியவில்லை என்பது தான் கண்ட பலன்.

நல்ல பதிப்பாளர்கள் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம். (என்னையும் சேர்த்து தான்.)
நல்ல படைப்பாளிகள் இனியும் படைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இருப்பார்கள்.
நீங்கள் யாருமே ஆதரிக்காவிட்டாலும் கூட
இவை நிகழ்ந்து எரிந்து கொண்டே தானிருக்கும்.

விமர்சகராகிய க. நா. சு. வுக்கு விமர்சகரில்லை.

புதுமைப்பித்தன் எழுதினார் - ' தமிழ் இலக்கிய உலகம் பாரிச வாதமும், பக்க வாதமும் போட்டலையும் அவதி'

விற்பனை சாத்தியமற்ற சூழலில் வியாபாரம் தொடங்கியிருக்கிறேன்.

சொந்தமாய்ப் பணம் கொடுத்து வாங்க தமிழில் இருநூறு பேர் கூட இல்லை.

க. நா. சு வின் இந்த புதிய நாவல் 'பித்தப்பூ' வை நீங்கள் ரசித்து படிக்க வேண்டும். நிறைய சிந்தித்து நாலுபேருக்கும் சொல்ல வேண்டும்.
நான் வெளியிட்ட வெளியீடு வெற்றி பெற வேண்டும்.

மேலும் நல்ல புது இலக்கியங்களை வாழும் காலத்தில் தமிழுக்கு அறிமுகம் செய்ய எனக்கு வாசகரின் துணை வேண்டும்.

பதிப்பாளன் என்கிற என் வாழ்வின் தளம் அத்தனை சுகமானதோ, சுலபமானதோ அல்ல. "

ப்ரகாஷின் மேற்கண்ட பதிப்புரை மற்றுமொருமுறை இப்போது படித்த
என்னை வெகு நேரம்
 செயலோயச் செய்து விட்டது.

....

1990ல் நான் புதுவையில் இருந்த போது
பல்கலைக்கழக துணைவேந்தர் வேங்கட சுப்ரமணியம் 'பித்தப்பூ' நாவலை படிக்க எண்ணி முயன்றிருக்கிறார். கிடைக்கவில்லை. 1987ல் வெளிவந்த நாவல்.
இந்திரா பார்த்தசாரதி வீட்டிற்கே போய் உரிமையுடன் "பித்தப்பூ நாவல எடுங்க" என்று வலது கையை நீட்டியிருக்கிறார்.
இ.பா சொன்னாராம் " பித்தப்பூ என்னிடம் இல்லையே..
உங்க எதிர் விட்டில தான் ராஜநாயஹம் இருக்கிறாரே.
கையில வெண்ணெயை வச்சிக்கிட்டு நெய்க்கு அலையிறீங்களே."

வீட்டிற்கு வந்தவுடன் துணை வேந்தர்
எனக்கு
ஒரு கடிதம், பித்தப்பூ கேட்டு

'அன்பு மிக்க அறிஞர் ராஜநாயஹம் ' என்று விளித்து

நான் வந்த அட்டெண்டரிடம் பித்தப்பூவோடு
 ஒரு பதில் கடிதம் ரெண்டு பேரா எழுதி கொடுத்தனுப்பினேன்.
' என்னைப் போய் அறிஞர் என்கிறீர்களே '

இன்னொரு கடிதம் சுடச்சுட எழுதி கொடுத்தனுப்பினார்.

"ராஜநாயஹம், அறிந்தவர் அறிஞர். நீங்கள் அறிஞர் என்பதற்கு உங்கள் கடிதமே சாட்சி.
சரி, துணை வேந்தர் தானே பட்டம் கொடுக்க முடியும்? "

அவர் படித்து விட்டு திருப்பித் தந்த பித்தப்பூ
 என் கையில் இதோ இருக்கிறது.

முன்னாள் துணை வேந்தர் வேங்கடசுப்ரமணியனும் இப்போது இல்லை.
பதிப்பித்த ப்ரகாஷும் இல்லை.

Sep 14, 2017

க.நா.சுவுக்கு ராஜநாயஹம் கடிதம் – 1988ல் எழுதப்பட்டது


’முன்றில்’ பத்திரிக்கையில் அப்போது க. நா.சு ஒரு கட்டுரையில் போகிற போக்கில் ஒரு வரி எழுதியிருந்தார்.
“ஊரெல்லாம் விபச்சாரிகள் என்று தி.ஜானகிராமன் மாதிரி கதை எழுதி விடுகிறார்கள்”
நான் மனம் புண்பட்டுபோனேன். உடனே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவருடைய டெல்லி விலாசம், மைலாப்பூர் விலாசம் மற்றும் முன்றில் பத்திரிக்கை விலாசம் மூன்றிற்கும் கடிதத்தை போஸ்ட் செய்தேன். மா.அரங்கநாதனின் ‘முன்றில்’ பத்திரிக்கைக்கு க.நா.சு அப்போது கௌரவ ஆசிரியர்.
அந்த கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து சி.சு.செல்லப்பா, சிட்டி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், கி.ரா, ந.முத்துசாமி, கோணங்கி உள்பட அனேகமாக எல்லா எழுத்தாளர்களுக்கும், இலக்கிய சிறுபத்திரிக்கைகளுக்கும், குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம் பத்திரிக்கைகளுக்கும் பல பிரசுரகர்த்தாக்கள், பல்கலைக் கழகங்கள், பேராசிரியர்கள், வாசகர்கள் என்று ஒரு இருநூறு பேருக்கு மேல் அனுப்பி வைத்தேன்.
இந்த கடிதம் 01.12.1988 அன்று எழுதப்பட்டது. பதினைந்து நாட்களில் க.நா.சு மறைந்து விட்டார்.
க .நா. சு . மரண செய்தி வானொலியில் ஒலிபரபபான அந்த நிமிடமே மணிக்கொடி சிட்டி ஒரு கடிதம் எனக்கு உடனே ,உடனே எழுதி போஸ்ட் செய்துவிட்டார் . மறு நாள் எனக்கு கிடைத்தது .
சிட்டி எழுதியிருந்தார் .
"உங்கள் அற சினத்தின் விழைவு போல் க.நா.சு மறைந்து விட்டார் போலும் ."
குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை!
கோணங்கி சொன்னான் " க. நா. சு உன் கடிதத்தை படித்திருப்பார் . மேல போயும் உன்னை நினைச்சிகிட்டு தான் இருப்பார்.
……………………………………

01.12.1988
அன்பிற்கும் மரியாதைக்குமுரிய க.நா.சு அவர்களுக்கு ராஜநாயஹம் என்ற வாசகன் எழுதுவது.
“ ஊரெல்லாம் விபச்சாரிகள்” என்று எழுதும் இன்றைய எழுத்தாளர்களை தி.ஜானகிராமனோடு நீங்கள் எப்படி ஒப்பிட முடியும்? Hyperion to a satyr?
தி.ஜா. மறைந்த நவம்பர் மாதத்தில் நான் தி.ஜா. நினைவு மதிப்பீட்டு மடல் ஒன்று தங்களுக்கு அனுப்பியுள்ள வேளையில் நீங்கள் இப்படி சேற்றை வாரி இறைத்திருப்பது shock valueக்காகத்தானா? தி.ஜா நினைவு நாளை கொண்டாடவோ அஞ்சலி செலுத்தவோ முடியாவிட்டாலும் இப்படி சாணி எறிந்து ஏன் திருப்திப்படவேண்டும்.

’இலக்கிய சாதனையாளர்கள்’ என்ற நூலில் தி.ஜா பற்றி நீங்கள் கூறியுள்ளதைப் பாருங்கள் : “ ஜானகிராமனுக்கு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்த போது அவர் பெண்களை இழிவு படுத்தும் கதைகள் எழுதுகிறார் என்று ஒரு பெண் எழுத்தாளர் ஆர்ப்பாட்டம் செய்தது ஜானகிராமனின் கதைகளில் உள்ள Ironyக்கு ஈடான Irony என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பெண்களைப் பற்றி மிகவும் உயர்வாக வாழ்க்கையிலும் சரி, எழுத்திலும் சரி நினைத்தவர் அவர்.”
ஆம். வாழ்க்கையின் அபத்தங்களை பரிவுடன் அணுகிய எழுத்துக்கு சொந்தக்காரரான தி.ஜானகிராமனை பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் புரிந்து கொள்ளாதது வியப்பல்ல. ஆனால் இவ்வளவு காலம் கழித்து க.நா.சு இப்படி அவதூறு செய்வது வேதனை தான்.
விமரிசனம் செய்வதில் தங்கள் முரட்டுப் பிடிவாதம், குழப்பம், பாரபட்சம் தமிழ் இலக்கிய உலகில் அனைவரும் அறிந்தே இருக்கின்றனர்.
தி.ஜானகிராமனின் மோகமுள்ளைப் பற்றி ”தமிழில் வெளி வந்த நாவல்களில் சிறந்ததொன்றாக இந்த நாவலைக் கருத வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. நாவல் கலை உன்னதங்கள் இதில் அதிகமாகவே தெரிகின்றன.. நாவல் கலையில் பொதுவாக அவர் பெறாத வெற்றியை அவர் நடை, மொழி என்பனவற்றில் கண்டார்” என்ற தங்களின் கூற்று ’நுகர்பவனுக்கு நாவல் கலை அம்சங்களில் நடையும், மொழியும் முக்கியக் கூறுகளல்லவா? என்ற எண்ணத்தை எழுப்ப வாய்ப்புண்டாகிறது’ என பு.சி.கணேசன் ‘ க.நா.சுவும் கைலாசபதியும்’ புத்தகத்தில் சொல்வது நினைவுக்கு வருகிறது.
’திறனாய்வுப் பிரச்னைகள்’ நூலில் க.கைலாசபதி கூறுகையில் “ விமர்சன முறையில் க.நா.சுவிற்கும் மற்றையோர் சிலருக்குமுள்ள நுணுக்கமான வேறுபாடும் நினைவிற்கொள்ள வேண்டியதாகும். உதாரணமாக கு.ப.ராவும் பெ.கோ.சுந்தரராஜன் என்ற சிட்டியும் 1937ல் வெளியிட்ட ‘கண்ணன் என் கவி’ என்னும் நூலின் முன்னுரையின் ஒரு பகுதியைக் குறிப்பிட்டு கு.ப.ராவும் சிட்டியும் பகுப்பாய்வுப் பண்புகளைத் துலக்கமாகக் கூறியுள்ளனர். நான் சொல்கிறேன். நீ கேட்டுக்கொள் அது தான் சரி என்னும் அசட்டு மமதை கு.ப.ரா, சிட்டி இருவரிடமும் இல்லை” என்று கூறியதையும் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
உங்களுடைய குழப்பமான தெளிவற்ற விமர்சனத்திறமை பற்றி வெங்கட் சாமிநாதன் நிறைய சொல்கிறார். உதாரணத்திற்கு ஒன்று. ‘சி.மணி டி.எஸ். எலியட் செய்ததை திரும்பச் செய்பவன். அதிலே என்ன இருக்கு’ என்று கேட்ட தாங்கள் வே.மாலி என்ற பெயரில் சி.மணி என்ற மினி மேதை எழுதிய கவிதைகள் பற்றி ‘இது யாரையா இது? நன்னாயிருக்கே’ என்ரு சிலாகித்தீர்கள். மேலும் வெ.சா. ’நடை’ பத்திரிக்கைக்காரர்களிடம் “ வே.மாலி சி.மணி தான் என வெளித்தெரியக்கூடாது. க.நா.சு காதுக்கு இது எட்டி விட்டால் வே. மாலி கவிதைகலைப் பற்றிய அபிப்ராயம் மாறி விடும்’ என்று எச்சரித்ததை ‘ஓர் எதிர்ப்புக்குரல்’ நூலில் ‘என்றும் வளைந்த வால்கள் எங்களது’ என்ற கட்டுரையில் படித்திருக்கிறேன்.
சுந்தர ராமசாமி க.நா.சுவின் விமர்சன முகத்தை எங்களுக்கு நன்கு X-ray எடுத்துக் காட்டியிருக்கிறார். ’க.நா.சுவை எனக்குப் பிடிக்கும்’ என்று சொன்ன நகுலனைக் கூட சு.ரா. சீண்டினார்.
மு.தளையசிங்கம் கூட ’வில்லை முறித்துப் போட்ட விதுரர்கள்’ என்று தரும் பட்டியலில் உங்களை சேர்த்திருப்பது உங்களுக்கு மிகவும் பொருந்தும்.
உங்களின் மற்றொரு குணம் பாரபட்சம்.
’ வ.ரா.என்றொரு உற்சாகி ’ கட்டுரையில் சிஷ்யர்கள் பட்டியலில் சிட்டியை தவிர்த்துள்ளது பாரபட்சம் தான். கு.ப.ரா பற்றி எழுதும்போது பி.ஸ்ரீ.ஆச்சார்யாவிற்கு பதில் கொடுக்க எழுதப்பட்ட ‘கண்ணன் என் கவி’யில் கு.ப.ரா.வுடன் சிட்டியும் இணைந்து பங்காற்றியதை மறைத்து எழுதியுள்ளீர்கள். மேலும் ந.சிதம்பர சுப்ரமண்யம், கி.ராமச்சந்திரன் பற்றியெல்லாம் எழுதிவிட்டு சிட்டியைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாதது prejudice தானே?
இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் முன்னுரையில் தற்கால இலக்கியகர்த்தாக்களை குறிப்பிடும்போது ஆதவனை ஒதுக்கியது இலக்கிய தீட்சண்யமிக்க செயல் தானா?
( இதே கேள்வியை சுந்தர ராமசாமியிடமும் கேட்க வேண்டியுள்ளது. ஆ.மாதவன் கதைகள் தொகுப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரைக்காக.)
ஐயா, நான் க.நா.சுவை அவமதிக்க எண்ணுபவனல்ல. நான் தங்களுக்கு அனுப்பிய தி.ஜானகிராமன் நினைவுக்கடிதமே இதனை நிரூபிக்கும்.
பூவை எஸ்.ஆறுமுகமோ அல்லது சு. சமுத்திரமோ உங்களைப் பற்றி கூறும் ஆவலாதிகளை நான் இந்தக் கடிதத்தில் எழுதி விடவில்லை.
’நவீனத் தமிழ் இலக்கியம் என்று கருதப்பட்டு வந்த பதரிலிருந்து உண்மையான கலைஞர்களை பொறுக்கி வைத்த முக்கியமான பணியை செய்தவர் க.நா.சு’ என்று சுந்தர ராமசாமியால் சிலாகித்து கூறப்படும் தாங்கள் இப்படி தி.ஜானகிராமன் என்ற இலக்கிய மகான் மீது சாணியடிக்கலாமா?
விமர்சகன் வேலை ரொம்ப risk ஆனது. நீங்களே ‘விமர்சனம் என்றால் என்ன?’ கட்டுரையில் குறிப்பிடுவது போல “ தன் அபிப்ராயங்களை மட்டும் விமர்சகன் சொல்கிறான் என்பதில்லை – தனது தத்துவ தரிசனத்திற்கே உரு தருகிறான். தன் இலக்கிய அறிவு பூராவையும் ரசனை பூராவையும் பணயம் வைத்து, காலம் செய்ய இருக்கும் காரியத்தை செய்து முடிக்கிறான்.”
விமர்சனம் பற்றிய தங்கள் கொள்கைக்கும் அதற்கு எதிர்மறையான நடைமுறை கொண்ட தங்களின் போக்குக்கும் உள்ள முரண்பாடு எல்லோருக்கும் கவலையளிக்கக்கூடியது.
Frailty! Thy name is Ka.Naa.Su alias S.Rajee.
……………………………………………………………







Jul 24, 2016

சிக்கலான இழைகள்

’அதே கண்கள்’ படத்தில் ”பொம்பள ஒருத்தி இருந்தாளாம், பூதத்தைப் பார்த்து பயந்தாளாம்” பாட்டில் வருகிற வார்த்தைகள்
“சொட்டிஜா சொட்டிஜா சொட்டிஜா, சொன்னவா சொன்னவா சொன்னவா சொன்னவா, தாக்கெரஸ் தாக்கெரஸ், ஜாவா டக்குனகோ டக்குனகோ” சௌராஷ்ட்ரா மொழி!
நான் காலேஜில் படிக்கும்போது என் நண்பன் A.K.ரவியிடம் அர்த்தம் கேட்டிருக்கிறேன். அவன் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.
(A.K.Ravi is standing behind R.P.Rajanayahem)

சொட்டிஜா – விட்டுப்போ
சொன்னவா – விடமாட்டேன்(டி)
தாக்கெரஸ் – பயமாருக்கு
ஜாவா டக்குனகோ – போடி, பயப்படாதே
சினிமாவில் பின்னணி பாடகர்கள் டி.எம்.சௌந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், எஸ்.சி.கிருஷ்ணன் ஆகியோர் சௌராஷ்டிர இனத்தை சார்ந்தவர்கள். நடிகர்கள்
வில்லன் டி.கே.ராமச்சந்திரன், வெண்ணிற ஆடை நிர்மலா
சௌராஷ்டிரா தான்.

நடிகை தேவிகாவின் கணவர் (கரகாட்டக்காரன் கனகாவின் அப்பா!) எஸ்.எஸ்.தேவதாஸ் கூட சௌராஷ்ட்ரா தான். பீம்சிங்கிடம் உதவி இயக்குனராக இருந்தவர் தேவதாஸ். ’வெகுளிப்பெண்’, ’முன்னூறு நாள்’ படங்களின் இயக்குனர். 

ஆண்டவன் கட்டளை படத்தில் தேவிகா நீராடிக்கொண்டே பாடும் பாடல் ”அழகே வா அருகே வா”

” ஆலயக்கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே” என்றவாறு தன் ’முலைகள்’ மீது சட்டென்று பெருமிதமாக பார்வையை ஓட்டுவார்.
என்னா பெருமை!
பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்!
………………………………………………
பன்றி மலத்தை தின்று முகம் சுளிக்க வைக்கிறது.
கரப்பான் பூச்சியோ டாய்லட்டில் முகம் சுளிக்க வைக்கிறது.
இங்கே பன்றி வால் பற்றி கவிஞர் கலாப்ரியாவும்
கரப்பான் பூச்சி கால் பற்றி க.நா.சுவும் எழுதியவை

‘இன்றைய தினத்தை
ஆரம்பித்து வைக்கிறது
பன்றியின் சுருட்டை வால்
அழகு’
- கலாப்ரியா


“கரப்பான் பூச்சியைப் போல, என் எண்ணக்கால்கள் இருந்த இடம் விட்டு நகராமல் சைக்கிள் விடுகின்றன……………..
கரப்பான் பூச்சி அருவருப்பு தரும் பூச்சி தான். ஆனால் அது மல்லாந்து கிடந்து காற்றிலே கால்களால் சைக்கிள் விடும்போது என்னால் அதைப் பார்க்காமல் இருக்க முடிவதேயில்லை. கவர்ச்சியும் தான் இருந்தது அதிலே!”
- க. நா.சு - ‘அசுர கணம்’ என்கிற பிரமாதமான நாவலில்
( நாவலா? குறு நாவலா?)
……………………………………….



Apr 18, 2013

அப்பா.. என் அப்பா

    
                                      அப்பா.... ....
என் அப்பா செத்துப்போய் விட்டார்....
                                      ஏப்ரல் 9ம் தேதியன்று...............

இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

தாயன்பை விடவும் தகப்பனின் ஆளுமையும் அன்பும் மகத்தான எல்லையை தொடக்கூடியது.

எதிர்மறையாக சுகுமாரன் எழுதிய அப்பா பற்றிய கவிதை நினைவுக்கு வருகிறது.
புதுமைப்பித்தனுக்கு மறுமணம் செய்துகொண்ட அப்பாவுடன் சீரான உறவு இருந்ததில்லை. 

ஜெயகாந்தன் அப்பா ஆஸ்பத்திரியில் இறந்த செய்தியை சாவகாசமாக வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு ஓரு தூக்கம் போட்டு எழுந்து அத்தையிடம் சொன்னதும் ,பின் சில மாதங்களுக்கு பின் இரவு தூக்கம் விழித்து "அப்பா அப்பா " என்று கதறி அழுதார் என்பதும் நினைவுக்கு வருகிறது .

 "அப்பா" ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தோற்றமளிக்கிறார். மறக்க முடியாத மற்ற சில அப்பாக்கள்

1.கநாசு வின் அப்பா 

2 . சுந்தர ராமசாமியின் அப்பா.

3. அசோகமித்திரனின் அப்பா (அப்பாவின் மரணம் பற்றி எவ்வளவு எழுதியிருக்கிறார் !)

4. ந. முத்துசாமியின் ஏழாவது வயதில் மறைந்த அப்பா



5. காலச்சுவடு கண்ணனின் அப்பா ( அப்பாவுக்கு சலிக்காமல்,தொடர்ந்து,விடாமல் கண்ணன் திவசம் கொடுத்துக்கொண்டே,கொடுத்துக்கொண்டே ..திவசம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் என்று பலரும் சலிக்கிறார்கள்.இருக்கட்டுமே. எனக்கு சந்தோசம் தான் .அப்படிப்பட்ட அப்பா! அப்படி ஓரு அபூர்வமான பிள்ளை கண்ணன்!)

பலவருடங்களுக்கு முன் புதுவையில் பிரபஞ்சன் ஓரு நாவல் -" மகாநதி " எழுதும்போது என்னிடம் சொன்னார். அப்போது அவருக்கு அப்பாவுடன் பேச்சு வார்த்தை கிடையாது. மனஸ்தாபம் !பாரதி வீதி அப்பா வீட்டில் பிரபஞ்சன் மாடியில் குடும்பத்துடன் குடியிருந்தார். "மகா நதி " நாவல் அவருடைய அப்பாவைப்பற்றி ! அப்பா மதுக்கடைகள் நடத்தியவர். ஆனால் ஒரே மனைவி தான் அவருக்கு.பிரபஞ்சனின் அம்மா ! புதுவை கலாச்சார சூழலில் மதுக்கடை முதலாளிகள் பல தாரங்கள் உள்ளவர்களாய் இருப்பது தான் இயல்பு. அப்பா எப்படி பல திருமணம் செய்யாமல் இருந்தார்! இந்த ஆச்சரியம் தான் தன்னை " மகாநதி " நாவலை எழுத தூண்டியதாக பிரபஞ்சன் புதுவையில் என்னிடம் கூறினார்.

.....................


Persona என்ற இங்க்மார் பெர்க்மன் படத்தில் ஒரு வசனம்.“ Life is trickled in everywhere and you are forced to react.”

பாரதி சொன்னது – “ மூட நெஞ்சே
தலையிலிடி விழுந்தால் சஞ்சலப்படாதே
ஏது நிகழினும் நமக்கேன் என்றிரு
கவலைப்படுதலே கருநரகம்
கவலையற்றிருத்தலே முக்தி ”
நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம் என்றும் பாரதியால் எழுதி விட முடிகிறது.

……

A few dark clouds appear on my horizan.
Make my bed softly for I am sick.

Am I too old to hunt up another job? A horse! a horse! my kingdom for a horse!
………..........................







 The thankless position of the father in the family -- the provider for all, and the enemy of all.The most unsung, unpraised, unnoticed, and yet one of the most valuable assets.....





The storm of feelings that accompanies my father’s death. The grief caused by the loss of my father….








......................................