Share

Showing posts with label ரஜினிகாந்த். Show all posts
Showing posts with label ரஜினிகாந்த். Show all posts

Apr 2, 2019

இயக்குநர் மகேந்திரன்


1989ம் வருடம். தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலை படமாக்க வேண்டும் என்ற வேட்கையில் பல காலமாக இருந்த மகேந்திரன் அதற்கான முயற்சியில் தி.ஜாவின் மூத்த மகன் சாகேதராமனை சந்திக்க சென்னை வரும்படி சொன்னார். 

சாகேதராமன் இது குறித்து மணிக்கொடி சிட்டியிடம் ஆலோசனை கேட்டார். தன்னுடன் மகேந்திரனை சந்திக்க சிட்டி உடன் வரமுடியுமா? என்று கேட்டார். நாவலை படமெடுக்க மகேந்திரனிடம் என்ன தொகை கேட்கலாம் என்று அவருக்கு குழப்பம் இருந்திருக்கிறது. சிட்டி “ monetary groundsல் நீ பேச வேண்டியிருப்பதால் நான் வர விரும்பவில்லை” என்று சொல்லி விட்டார். இதை அப்போது சிட்டி என்னிடம் தெரிவித்தார்.
சாகேதராமன் டெல்லியில் இருந்து சென்னை வந்து மகேந்திரனை சந்தித்தார். முப்பதாயிரம் தொகை நாவலுக்காக தரப்பட்டிருக்கிறது.
இதையும் சிட்டி என்னிடம் சொன்னார்.

அப்போது மகேந்திரனுக்கு விநியோகஸ்தர்களிடம், ஃபைனான்சியர்களிடம், தயாரிப்பாளர்களிடம் பெரும் மதிப்பு ஏதும் இருந்திருக்கவில்லை. அவரால் மோகமுள் படத்தை இயக்கவே சூழல் வாய்க்காமல் போய் விட்டது.
அதன் பின்னர் ஞான ராஜசேகரன் இயக்கத்தில் மோகமுள் வெளி வந்த போது அந்தப் படத்தை மகேந்திரன் பார்க்கவில்லை.
அவருடைய மன அவசம். “ நான் திரைப்படமாக உருவாக்கியிருக்க ஏங்கியிருந்த ஒரு நாவல் தி.ஜானகிராமனின் மோகமுள். அதை எப்படியெல்லாம் காட்சிப்படுத்த வேண்டும் என்று எவ்வளவு திட்டம் தீட்டியிருப்பேன். அந்த காவியத்தை இன்னொருவர் இயக்கத்தில் பார்க்க என் மனம் ஒப்பவில்லை.”
அலெக்ஸாண்டர் என்ற மகேந்திரன்.

 நாம் மூவர், சபாஷ் தம்பி,  பணக்காரப்பிள்ளை படங்களுக்கெல்லாம் கதை பங்களிப்பு இவருடையது தான். ஜம்பு இயக்கிய பாலன் பிக்சர்ஸ் படங்கள். 
 சோ திரைக்கதை வசனம் எழுதிய நிறைகுடம் படத்தின் மூலக்கதை மகேந்திரன் தான்.
இவர் வசனம் எழுதிய வெற்றிகரமான நாடகம் ’தங்கப்பதக்கம்’ திரைப்படமானது.
மகேந்திரன் ஒரு ஜர்னலிஸ்ட். சோவின் துக்ளக் பத்திரிக்கையில் பணி புரிந்திருக்கிறார்.
அவர் ஒருமுறை சொன்ன ஒரு ஆங்கில வாக்கியம். அவரே யோசித்து சொன்னாரா? ஒரு மேற்கோளா? தெரியவில்லை.
“ Life is like a snooker game. You hit one. That ball hits another. Ultimately some other ball gets into the pocket.”
பாரதிராஜாவுக்கும் பாக்யராஜுக்கும், எஸ்.பி.முத்துராமனுக்கும் இருந்த கமெர்சியல் வேல்யு மகேந்திரனுக்கு இருந்ததில்லை. கை கொடுக்கும் கையாக ரஜினி தந்த வாய்ப்பும் சோபிக்கவில்லை.
ரொம்ப காலம் கழித்து கே.பாலச்சந்தர் “ உனக்குப்பிடித்த இயக்குநர்?” கேள்விக்கு
“மகேந்திரன்” என்று ரஜினி உடனே, உடனே சொன்னதை எல்லோரும் பார்க்க முடிந்தது. பாலச்சந்தர் “ பாத்தியா? என் பேர சொல்ல மாட்டேங்கிற.”
ரஜினி இன்னும்  கூட  கொஞ்சம் கை கொடுத்து தூக்கி விட்டிருக்கலாமே. IFS and BUTS.
ரொம்ப வருடங்களுக்கு முன் ’விண் நாயகன்’ என்ற பத்திரிக்கையில் அனைத்து ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயணன் என்பவர் ‘ரஜினிக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் தி.ஜானகிராமன். அவருடைய எல்லா நாவல்களையும் ரஜினி படித்திருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது உண்மை தானா?

கமலும் மகேந்திரனும் ஏன் இணையவில்லை. 
கமலின் நிராகரிப்பா? மகேந்திரனின் புறக்கணிப்பா? அல்லது இணைந்து செயலாற்ற நினைத்தும் ஈடேறவில்லையா?
மகேந்திரனின் உறவினர் தான் ராஜேஷ். தன்னை மகேந்திரன் நிராகரித்து புறக்கணிப்பதாக வருத்தப்படாமல் இருந்திருக்க முடியாது. நடிக்க வாய்ப்பு ரொம்ப காலம் கழித்து ’மெட்டி’யில் தான் கொடுத்தார்.
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் எத்தனை முறை சலிக்காமல் பார்க்க முடிந்திருக்கிறது. இன்று கணக்கெடுக்க முடியவில்லை. ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே கூட.

Oct 21, 2008

சிவகுமாரும் குமாரர்களும்

"ஒரு நடிகன் அவனோட கேரியரில் அஞ்சு படமாவது பெயர் சொல்லும்படியா பண்ணனும்டா " ன்னு அப்பா சொல்வார் ! இப்படி மே மாத ஆனந்த விகடனொன்றில் சிவகுமாரின் சின்ன மகன் பருத்தி வீரன் கார்த்தி சொல்லியிருந்தார் .
" நீங்க ஏம்ப்பா அப்படி ஒரு அஞ்சு படம் பண்ணவே இல்லை பெயர் சொல்லும்படியா " ன்னு சூரியாவும் கார்த்தியும் கேக்கலையா ?

'சொல்லத்தான் நினைக்கிறேன் 'படத்தில் இவர் கதாபாத்திரம் இன்றும் நினைத்து பார்க்கும்படியா இருக்கு . ஆனா வேறு சொல்லும்படியா சிந்து பைரவி யை கூட சேர்க்க முடியுமா ? சும்மா நல்லா நடிச்சிருந்தாரு ன்னு சொல்ல நிறைய பேர் வரலாம் . வண்டிச்சக்கரம் குண்டிச்சக்கரம்னு ஆரம்பிச்சி பட்டியல் தயவு செய்து போடாதிங்க .
பிள்ளைகள் சூரியா , கார்த்தி இருவரும் நல்ல நடிகர்கள் என்பதை அருமையாக நிரூபித்து விட்டார்கள் . கார்த்திக்கு ஒரு படம் தான் வந்திருக்கு என்றாலும் கூட பிரமாதமான ஆரம்பம் . சூரியா முதலில் திறமையை வெளிப்படுத்தவில்லை என்றாலும் பின்னர் செமையா பிதாமகன் , கஜினி இரண்டிலும் தூள் பண்ணி விட்டார் .

பாவம் அந்த காலத்தில் ஜெய்சங்கர் வத வதன்னு நடிச்சி ஒன்னும் பண்ணலை . சினிமா படம் போர் அடிக்கும் என்பதே ஜனங்களுக்கு ஜெய் சங்கர் படம் பார்த்தப்ப தான் தெரிய வந்தது . அது மாதிரி தான் சிவகுமாரும் ஒரே குப்பை படங்கள் தான் . தாமதமாக ரொம்ப தாமதமாக கதாநாயகன் ஆனவர் . ஆனபின்பு சுதாரிக்கவே இல்லை .Monotonous acting! படங்களும் தரமில்லாதவை .ஒரு இருநூறு படம் நடித்திருப்பார் . டான்ஸ் செயற்கையாக ஆடுவார் . நடிப்பு நாடக பாணி .ஆனால் ஒரு ஐந்து நல்ல படம் .... சான்சே இல்லை !
அவர் ராகம் போட்டு இழுத்து உருக்கமாக பேசுவதை இப்போது பலரும் மிமிக்ரி செய்து காட்டுகிறார்கள் . ஸ்டீரியோ டைப் . கமல் ,ரஜினி எழுபதுகளில் சிவகுமாரை ரொம்ப சுலபமாக ஓவர் டேக் செய்து விட்டார்கள் .
புவனா ஒரு கேள்விகுறி படத்தில் நல்லவனாக நடிக்காமல் வில்லன் ரோல் செய்தார் . ரஜனிக்கு அந்த படத்தில் நல்ல க்ளாப்ஸ் !உடனே இவர் வருத்தப்பட்டு 'வில்லன் ரோல் செய்தது தப்பு . இனிமேல் கவனமாய் இருப்பேன் ' என பேட்டி கொடுத்தது நல்ல ஜோக். ரஜனி எந்த ரோல் செய்தாலும் சிவகுமார் அவர் பக்கத்தில்நிற்கவே முடியாது என்பதை அடுத்த சில வருடங்களில் புரிந்து கொண்டிருப்பார் .

சிவகுமார் மீது ஒரு விசயத்தில் எனக்கு மரியாதை. வாசிப்பவர். நல்ல வாசகர். தி .ஜானகிராமன் , கிரா என்று துவங்கி இன்றைய சாரு நிவேதிதா எழுத்து வரை வாசிக்கிறார். அதற்காக அவரை பாராட்டலாம்.
” இது ராஜபாட்டை  அல்ல” என்ற அவருடைய நூலுக்காகவும் ரொம்ப பாராட்டலாம். நடிப்புக்காக ...சான்சே இல்லை!

ஒரு Irony! சிவாஜி கணேசன் மகன் பிரபு பெரிய சாதனை செய்ய முடியவில்லை .
முத்து ராமன் மகன் கார்த்திக் மிக சிறந்த நடிகர் . ஆனால் தன் பழக்கவழக்கங்களால் வீணாக கெடுத்து கொண்டார் .
ஆனால் சாதாரண நடிகர் சிவகுமார் மகன்கள் சூரியா , கார்த்தி நட்சத்திர அந்தஸ்து பெற்று விட்டார்கள் .
ஹிந்தி யில் ராகேஷ் ரோஷன் சாதாரண நடிகர் . அவர் மகன் ஹ்ரித்திக் ரோஷன் நட்சத்திர அந்தஸ்து பெற முடிந்தது . ஷாருக் கான் இருக்கும் வரை அமிதாப் பச்சன் மகன் நல்ல அருமையான நடிகர் என்றாலும் அபிஷேக் முதலிடத்திற்கு வியாபார ரீதியில் வரவே முடியாது.