Share

Showing posts with label நாகேஷ். Show all posts
Showing posts with label நாகேஷ். Show all posts

Jun 17, 2019

நகைச்சுவை மகா கலைஞர்கள்


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது ஜெயகாந்தனுக்கு மிகுந்த பிரமிப்பு இருந்திருக்கிறது. ’நல்ல தம்பி’ படம் பார்த்து விட்டு ஒரு ரசிகனாக பாராட்டு கடிதம் கூட எழுதியிருந்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட தினத்தில் அவரை சந்திக்க வருவதாக அதில் தெரிவித்திருந்தார். ஏற்கனவே தோழர் ஜீவாவுடன் என்.எஸ்.கேயை சந்தித்தவர் தான் ஜெயகாந்தன். அதனால் தி.நகர் வெங்கட்ராமய்யர் தெருவில் இருந்த நட்சத்திர நடிகரின் இல்லத்துக்கு போயிருந்திருக்கிறார். அவருக்கு மிகவும் அதிர்ச்சி.

“நடிகர்கள், கலைஞர்கள் ஆகிய இந்தப் பிரபலங்கள் பிறருக்குச் சொல்லுகிற நெறிகளுக்கும் உபதேசங்களுக்கும், தாங்கள் அமைத்துக்கொண்டிருக்கிற சொந்த வாழ்க்கைக்கும் இடையே எவ்வளவு பெரிய இழிந்த இருண்ட பாதாளம் போன்ற இடைவெளியையும் அன்று கண்டேன். அங்கே நான் கண்ட காட்சியை என்னவென்று இங்கு விவரிக்கப்போவதில்லை” என்று ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ நூலில் சொல்கிறார் ஜெயகாந்தன்.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராய் இருந்த போது “என்.எஸ்.கே இன்று உயிரோடு இருந்தால் அவரல்லவோ முதலமைச்சர்” என்று பூரிப்புடன் பெருமைப்பட்டார்.

சந்திரபாபுவின் திறமைகளைப் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
அவருடைய ஸ்டைல், டான்ஸ், பாடல்கள் evergreen.
நகைச்சுவை நடிகர்களில் பாபு ஒரு peculiar phenomenon.

சந்திரபாபு தன்னை என்ன பாடு படுத்தினார் என்பதை கண்ணதாசனின் ‘மனவாசம்’ விரிவாக கூறுகிறது. சந்திரபாபுவை வைத்து ’கவலையில்லாத மனிதன்’ படம் எடுத்ததற்கு உலகத்தில் உள்ள அவ்வளவு கவலைகளையும் தான் அனுபவித்ததாக கவிஞர் எழுதியிருந்தார்.
சந்திரபாபு தான் என் குருநாதர் ந.முத்துசாமிக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை கலைஞர். அவரிடம் இருந்த தனித்துவத்தை மிகவும் முத்துசாமி சிலாகிப்பார்.

நாகேஷின் ஈடு இணையில்லாத சாதனை.
ஸ்ரீவித்யா முதல் முதலாக ராமண்ணாவின் ’மூன்றெழுத்து’ படத்தில் நடிக்க ஸ்டுடியோவிற்குள் நுழைந்த அன்று நாகேஷ் குடித்து விட்டு செய்த கலாட்டாவைப் பார்த்து மிரண்டு ச்சீ என்று அருவருத்து வெறுக்க நேர்ந்ததாக சொல்லியிருக்கிறார்.
1971ல் அவரை பெரிய இயக்குனர்கள் கைவிட்டார்கள்.
ஸ்ரீதர் அவரை ஓஹோ ப்ரொடக்ஸன்ஸ் செல்லப்பாவாக்கியவர். 1971ல் ’அவளுக்கென்று ஓர் மனம்’ நாகேஷிற்கு இடம் கொடுக்கவில்லை.
’பணமா பாசமா’வில் நாகேஷை தூக்கிப்பிடித்த கே.எஸ்.ஜி. 1971ல் ‘மாலதி’ யில் இடம் தரவில்லை.
திருவிளையாடல் தருமி, தில்லானா மோகனாம்பாள் வைத்தி என்று என்று அழகு பார்த்த ஏ.பி.என் 1971ல் சுருளிராஜனை வைத்து “கண்காட்சி’’ எடுத்தார்.
எம்.ஜி.ஆரே ரொம்ப முன்னரே நாகேஷை ஒதுக்கி வைத்திருந்தார். தேடி வந்த மாப்பிள்ளை, என் அண்ணன் படங்களெல்லாம் நாகேஷ் இல்லாமல் தான். 1971ல் குமரிக்கோட்டம், ரிக்‌ஷாக்காரன், நீரும் நெருப்பும். எதிலும் நாகேஷ் கிடையாது.
நாகேஷ் இயக்குனர் பாலச்சந்தரையே என்ன பாடு படுத்தினார். 1972ல் ’கண்ணா நலமா’வில் நாகேஷ் கிடையாது. எம்.ஆர்.ஆர். வாசு தான். ’வெள்ளி விழா’வில் தேங்காய் சீனிவாசனை நடிக்க அழைத்தார்.
நாகேஷின் கால பிரமாணம் எத்தகைய ஆச்சரியகரமானது. அவருடைய மின்னல் வேகம்.
இன்றும் தமிழ் திரையின் நகைச்சுவைக்கு ஒட்டு மொத்த சாதனை என்றால் நாகேஷ், கவுண்டமணி, வடிவேல் மூவரும் தானே.
எப்பவும் காண்ட்டுலேயே இருக்கும் கவுண்டமணி கலக்கல்.
எத்தனை தடவை நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு நகைச்சுவை காட்சிகளை பார்த்தாலும் சலிப்பதேயில்லை.
ஒரு ப்ரொடக்ஸன் அஸிஸ்டண்ட் அரண்டு சொன்ன விஷயம். “அய்யோ கவுண்டமணி தண்ணி போட்டுட்டா மிருகம். உயிர எடுத்துடுவான். கை நீட்டிடுவான். அடிச்சிடுவான்”

ஆர்.சுந்தர் ராஜனுக்கும் கவுண்டமணிக்கும் நிகழ்ந்த மோதல்.


வடிவேலு பற்றி இன்றைய காலத்தில் யாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அளப்பரிய சாதனை. பிரமிக்கத்தக்க நடிப்பு.
அனைவர் வாழ்விலும் ஒன்றி விட்ட கலைஞன்.
எல்லாருக்கும் vocabulary எவ்வளவு supply செய்து விட்டார் வடிவேலு.
எவ்வளவு சாதாரண படத்திலும் அவருடைய விஸ்வரூபம்.
மார்க்கெட் போய் விட்டதாம். தினமும் வடிவேலு தானே சஞ்சாரம்.
கதாநாயகர்கள் உட்பட இன்று வரை வந்துள்ள மிகப்பெரிய நடிகர்கள் அனைவரையும் நடிப்பில் மிஞ்சிய வடிவேலுவின் ஈடு இணையற்ற ஃபார்ம்.
எம்.ஆர்.ராதா ஒருவர் தான் இன்றும் வடிவேலுவுக்கு சவாலான அமரத்துவ கலைஞர்.

வடிவேலு பற்றி தான் எவ்வளவு பரபரப்பு.
நம்பிராஜன் என்ற சின்னாளப்பட்டிக்கார நடிகர், ஜெயமணி ஆகியோருடன் கைகலப்பு.
சிங்கமுத்து ரியல் எஸ்டேட் வில்லங்கம்.
விஜயகாந்த் வீட்டு இழவு ஒன்றில் காரை எடுக்கச்சொல்லி கலவரம். அடி கூட வடிவேலுக்கு விழுந்ததாமே.
வாழ்வு கொடுத்த ராஜ்கிரணிடம் நன்றி காட்டவில்லை.
ஜி.வி. தற்கொலை செய்து கொண்ட போது அவரிடம் வாங்கிய ஐந்து லட்சத்தை வடிவேலு பாவப்பட்ட ஜி.வி குடும்பத்திற்கு கொடுக்க மறுத்தது.
தயாரிப்பாளர் ஒருவரிடம் விமானத்தில் போய் வர எட்டு மணி நேரம் ஆனதற்கும் ஒரு கால்ஷீட் கணக்காக்கி ரெட்டை இலக்க இலட்சத்தில் வடிவேலு சம்பளம் கேட்ட விவகாரம்.







...

Mar 26, 2018

சுப்புவும் வைத்தியும்


கலைக் கோவில் 1964ம் வருடம் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளி வந்த படம்.
இதற்கு முன் ‘காதலிக்க நேரமில்லை’ அதே வருடம் சக்கை போடு போட்ட படம்.
கலைக் கோவில் படுதோல்வியடைந்த படம்.
இருபத்தி ஆறு நாளில் எடுக்கப்பட்டதாம்.
பாலமுரளி கிருஷ்ணாவின் ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ பி.பி.எஸ் “ முள்ளில் ரோஜா” “நான் உன்னை சேர்ந்த செல்வம்” பாடல்கள்.
”தேவியர் இருவர் முருகனுக்கு”
இன்ஸ்பெக்டர் சாந்தாவுக்கு ’வரவேண்டும் ஒரு பொழுது, வராமலிருந்தால் சுவை தெரியாது’ கிளப் டான்ஸ். நாகேஷுடன் சர்வர் சுந்தரம் படத்தில் ’அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடலில் கலக்கிய இன்ஸ்பெக்டர் சாந்தா.
சிட்டிபாபுவின் வீணை.
முத்துராமன் ரோலை செய்ய வீணை பாலசந்தர் ஆசைப்பட்டிருக்கிறார். ஸ்ரீதர் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் சிட்டிபாபுவின் வீணை படத்தில் இசை பொழிந்தது.
கலைக் கோவில் சுப்பு பாத்திரம் நாகேஷுக்கு.

”லோகம்னு இருந்தா துரோகம்னு இருக்கத்தான் இருக்கும். ஏன்டாப்பா முதல் முதல்ல உங்கிட்ட அவள அறிமுகப் படுத்தும் போது நளாயினின்னா சொன்னேன்”
நாகேஷின் கலைக் கோவில் சுப்பு பாத்திரம் அதன் பின்னர் நான்கு வருடங்களில் ஏ.பி.நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் செய்த வைத்தி மாஸ்டர்பீஸ் ரோலுக்கு அண்ணன்.

இரண்டு கதாபாத்திரமும் ஒன்றே எனும் அளவுக்கு ஒற்றுமை.
எஸ்.வி.சுப்பையா, முத்துராமன், ராஜஸ்ரீ, சந்திரகாந்தா, வி.கோபாலகிருஷ்ணன் யாரும் ஜொலிக்கவில்லை.
சுப்பையா, முத்துராமன் தூங்கு மூஞ்சித்தனமாக நடிப்பு.
நாகேஷ் மட்டும் அமர்க்களம். என்ன ஒரு Form! இந்த படம் ஓடியிருந்தால் வைத்தி பாத்திரம் சுப்புவின் காப்பி என்று கூட சொல்லியிருந்திருப்பார்கள்.
“இந்த வைத்தி இல்லன்னா இந்த லோகத்தில நல்லதும் நடக்காது..கெட்டதும் நடக்காது.”
’கலைக் கோவில்’ தயாரிப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ்.வி இசை பிரமாதம். அந்த அளவுக்கு ஸ்ரீதர் அவ்வளவாக மெனக்கிடவில்லை. தண்டவாளத்தை விட்டு தடம்புரண்ட மாதிரி இயக்கம்.
...................................

மாலியின் கச்சேரி ஒன்று நடந்து கொண்டிருக்கும் போது அவருடைய தந்தை அந்த சபாவுக்குள் நுழைகிறார். மாலி புல்லாங்குழல் வாசிப்பதை நிறுத்தி விட்டார். மூட் அவுட். சரியான கோபம். “ அவரை போக சொல்லுங்கள். அவர் போனால் தான் வாசிப்பேன்.” 
மாலியின் அப்பாவை அங்கிருந்தவர்கள் வெளியே அனுப்பி வைத்தாக வேண்டிய நிர்ப்பந்தம். அவர் வெளியேறிய பின்னர் தான் புல்லாங்குழல் மீண்டும் இசைத்திருக்கிறது.

வீணை எஸ். பாலசந்தருக்கும் கூட அவருடைய அப்பாவிடம் இப்படி விரோத மன நிலை இருந்திருக்கிறதாம்.

கலைக் கோவில் படத்தில் இப்படி ஒரு காட்சி உண்டு.
வீணை வாசிக்கும் முத்துராமன் அரங்கத்தை விட்டு எஸ்.வி.சுப்பையாவை வெளியேற்றச் சொல்வார்.
ஸ்ரீதர் இந்த மாலி சமாச்சாரம் பற்றி கேள்விப்பட்டு தான் அப்படி ஒரு காட்சி அமைத்திருப்பாரோ என்னவோ?
.....................................








Oct 21, 2017

காதலிக்க நேரமில்லை பிரபாகர்


காதலிக்க நேரமில்லை பிரபாகர் அந்த படத்தில் நாகேஷுக்கு சரியான கம்பானியன். சச்சுவின் அப்பா. அந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது முப்பதுக்குள் தான்.
'தம்பி! நான் காரு வாங்கணும் எஸ்டேட் வாங்கணும்.' ஏக்கமாய் நாகேஷிடம் சொல்வார். நாகேஷ் “விட்டா எங்கப்பனையே வாங்கிடுவே போலருக்கு.”

நாகேஷ் அவர் படத்தில் இவர் மகள் கதாநாயகியாய் நடித்தால்' எங்கப்பா (பாலையா ) முன்னாலே நீ கால் மேலே கால் போட்டு ..'என்று சொல்லும்போது பிரபாகர் குறுக்கிட்டு பதறி ' அது மரியாதை இல்ல .. அது மரியாதை இல்ல.." என்பது சுவையான காட்சி.
எஸ் வி சகஸ்ர நாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடக நடிகர் . தி ஜா வின் 'நாலுவேலி நிலம் ' நாடகம் சேவா ஸ்டேஜ் போட்ட போது அதில் 'கேப்ரியல்'என்ற பாத்திரத்தில் நடித்தவர்.
காதலிக்க நேரமில்லை படத்தில் அவருக்கு கிடைத்தது போல நல்ல காமெடி ரோல் அவருக்கு அதற்கு பின் கிடைக்கவில்லை. அவர் பிரபலம் ஆகவும் இல்லை.
ராமண்ணா இயக்கிய “குலக்கொழுந்து” பட ஷீட்டிங் விஜயா வாகினியில் நடந்து கொண்டிருந்த போது இவரை பார்த்தேன். இவருக்கு அதில் ஒரு ரோல். ஆனால் நாகேஷுக்கு படத்தில் வேலை இல்லை. அங்கே ஜாலியாக கலாட்டா செய்து கொண்டிருந்தார்.
ரயிலில் வரும் கனவான் அரியலூர் ரயில் நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட சௌகரிய குறை ஒன்றை பற்றி ஸ்டேசன் மாஸ்டரிடம் அவர் அறைக்கு வந்து கம்ப்ளைன்ட் செய்கிறார் .
பிரபாகர் வேகமாக ஓடி வந்து கிட்டத்தட்ட நாகேஷ் மேலே விழுந்து கோபத்துடன் கேட்கிறார் “ Who is the Station Master”

நாகேஷ் பதறி போய் கூப்பாடு “I is the Station Master ”

பிரபாகர் இந்த ஓட்டை இங்கலிஷ் கேட்டு எரிச்சலாகி “Are you the Station Master?”

நாகேஷ் அதே பதட்டத்துடன் “Yes Sir! Ariyalur Station Master!”

பிரபாகர் டென்சன் ஆகி “Stupid Station Master”

நாகேஷ் நீங்கா பதட்டத்துடன் சத்தமாக “ No sir , Ariyalur Station Master”

இந்த நகைச்சுவை காட்சி அங்கு இருவராலும் பலமுறை நடித்து காட்டப்பட்டது .பிரபாகர் கேள்வி , நாகேஷ் பதில் எல்லாம் மின்னல் வேகத்தில் !
நான் அவர் பெயரை கேட்டு அவர் 'பிரபாகர் 'என்று சங்கடப்படாமல் சொன்னார்.
அதோடு அப்போது நான் வாய்த்துடுக்காக
" இத்துனூண்டு நெத்தியிலே எவ்வளவு எழுதியிருக்கான் பாத்தீங்களா. இவ்வளவு காலம் கழித்து உங்க பேரை நான் கேட்டு தான் தெரிஞ்சிக்கவேண்டியிருக்கு! " என காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் இவரை பார்த்து சொன்ன வசனத்தையே சொன்னபோது பிரபாகர் தன்னிரக்கத்துக்கு ஆளாகாமல் உற்சாகமாகி நாகேஷிடம் என்னை அறிமுகப்படுத்தியது கூட சினிமாவுலகில் அரிதான விஷயம்.

பாலச்சந்தரின் 'மன்மத லீலை 'படத்தில் இவர் Y.விஜயாவின் கணவராக வருவார்.வக்கீலாக நல்ல காமெடி செய்வார்.

இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் ரஜினி காம்பிநேசனில் ஒரு காட்சி.
ரஜினி வேகமாக சொல்லும் ஆங்கில வாக்கியத்தை சிரமப்பட்டு சொல்லும் குடிகாரராக!

ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் நாவல் படமாக்க ஸ்ரீதர் விரும்பி சிவாஜியை ஜோசெப் ரோலுக்கு புக் செய்தார். ஸ்ரீதருக்கும் ஜெயகாந்தனுக்கும் சண்டையாகி ஜோசெப் ரோலில் சிவாஜி நடிக்க முடியாமல் போயிற்று. அப்புறம் சந்திர பாபு அந்த ரோலை செய்ய ரொம்ப ஆசைப்பட்டார். ஜெயகாந்தனோடு ரொம்ப டிஸ்கசன் செய்து பார்த்தார். நடக்கவில்லை.
அதன் பின் ஒரு வழியாக கே விஜயன் இயக்கி நாகேஷ் தான்
"யாருக்காக அழுதான் "படத்தில் நடித்தார்.
(ஆனால் தனிப்பட்ட முறையில் படைப்பாளி ஜெயகாந்தன் எந்த நடிகர் யாருக்காக அழுதான் ஜோசெப் ரோல் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார் தெரியுமா? வீரப்பன்!

 ஜெயகாந்தனின் நண்பர் இவர்.பணத்தோட்டம்,பொண்ணுமாப்பிள்ளே படத்தில் நாகேஷுடன் நடித்தவர் வீரப்பன்.கவுண்டமணிக்கு காமெடி சீன்ஸ் எழுதியவர்.)


ஜெயகாந்தன் இயக்கிய 'உன்னைப்போல் ஒருவன் 'படத்தில் வரும் சிறுவனின் தாயாருக்கு ஒருவனோடு affair இருக்கும் . அது தானே அந்த கதையின் முக்கிய முடிச்சு.

அந்த குருவி ஜோஷியக்காரனாக நடித்தவர் பிரபாகர் தான். கதாநாயகி காந்திமதிக்கு ஜோடி. ஆம் உன்னைப்போல் ஒருவன் கதாநாயகி பின்னால் சிரிப்பு நடிகையாக கலக்கிய காந்திமதி தான்.
தமிழ் திரை கண்ட மிக சிறந்த நடிகர்களில் பிரபாகர் ஒருவர். ஆனால் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.
இப்போது இவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது கூட தெரியவில்லை.
Cecil B. Demille இயக்கிய Samson and Delilah படத்தில் கதாநாயகனாக நடித்த Victor Matureவேடிக்கையாக சொல்வார் :“I am not an actor. I have got 67 movies to prove it.” 67படங்களில் நடித்தவர் இவர்.

பிரபாகருக்கு 'காதலிக்க நேரமில்லை' படம் ஒன்றே அவர் சிறந்த நடிகர் என்பதற்கு போதுமான சாட்சி.
ஒரு படம் கூட ஒழுங்காக நடிக்காத பல நடிகர்களை தமிழ் திரை கண்டு சீராட்டி போஷித்திருக்கிறது என்பது விசித்திர அபத்தம்.
...........................................................................................
http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_16.html


புகைப்படங்கள்

1.’அழைத்தால் வருவேன்’ படத்தில் ராஜநாயஹம்

2. ’காதலிக்க நேரமில்லை’ பிரபாகர், நாகேஷ் சச்சுவுடன்

Aug 24, 2017

கவி சுகம் ஒன்று, நாகேஷ் - சுருளி சுவை ஒன்று



ஷங்கர் ராமசுப்ரமணியன் திறம் மிக்க கவி


“மழை பெய்த தெருவில்
கூழாங்கற்கள்
தவளைகளாக மாறின
வட்டமாய் அணிவகுத்து
துள்ளத் தொடங்கின
தங்கள் இலக்கில்லாத
முற்றுகையை
தவளைப் போர் வீரர்களே
தவளைப் போர் வீரர்களே
உங்கள் பிறப்பின் உற்சாகத் துள்ளலை
வீட்டுத் திண்ணையில் படுத்திடும்
நாய் பார்த்துக் கொண்டிருக்கிறது
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்”


’ஒரு நல்ல கவிஞனை சித்திரவதை செய்ய சுலபமான வழி உண்டு. அவனுடைய கவிதையை விரிவாக விளக்கி பொழிப்புரை எழுதுவது.’ என்று சொல்வார் நஸ்ஸிம் நிகோலாஸ் தாலிப் என்ற லெபனான் நாட்டு தத்துவ மேதை. இவர் எழுதிய ’கறுப்பு அன்னப்பறவை’ (The Black Swan) புத்தகம் முக்கியத்துவமானது.

To be a poet is a condition, not a profession. – Robert Frost
…………………………………………………….



குருக்கள் நாகேஷ்.

கொம்புத்தாழன் சுருளிராஜன் கோவிலுக்கு சாமி கும்பிட வருகிறார்.

சுருளி நெற்றியில் விபூதி பட்டை போட்டிருப்பதைப் பார்த்து நாகேஷ் “பட்டைய எடம் மாத்திட்ட!”

பட்டை சாராய பழக்கம் உள்ள சுருளி சாராயம் குடல கெடுப்பதை குறிப்பிடுவது இப்படி - “ பட்டை உள்ள போடுறதில்ல. ரூட்டு கெட்டுப்போயிடுது.”


குருக்கள் பிரசாதம் கொடுக்கிறார். சுருளி அதை சாப்பிடும் போது நாகேஷ் கேள்வி : ”பிரசாதத்த கூட ஏண்டா திருட்டுத்தனமா தின்னுற?”

சுருளி சுளித்த முகத்துடன் வாய விரித்து : ”பழகிப்போச்சி.”

பழைய ’ருத்ர தாண்டவம்’ படத்தில்.
……………………………………….

http://rprajanayahem.blogspot.in/2016/12/blog-post_25.html

http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/…/…/carnal-thoughts-38.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_16.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_12.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_10.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_4856.html

Aug 11, 2017

ஸ்ரீகாந்த்



ந.முத்துசாமி சாருடன் இருப்பது ரொம்ப அருமையான அனுபவம்.

டி.வியில் பழைய ஸ்ரீகாந்த் பார்க்க நேர்ந்த போது “ இவரு இப்ப படங்கள்ள நடிக்கிறாரா?” என்று என்னிடம் கேட்டார்.

  நான் “ கொஞ்ச வருடங்களுக்கு முன் சில டி.வி சீரியலில் பார்த்திருக்கிறேன்.”

முத்துசாமி சார் “ பெரிய புடுங்கின்னு நெனப்பு. நாங்க அமெரிக்கன் சென்டர் போகிற காலங்களில் அங்க ரொம்ப வெறப்பா அலட்டிக்கிட்டு...இருப்பார்.”

இப்போது ஸ்ரீகாந்தின் சமீபத்திய புகைப்படம் பார்க்க கிடைத்தது!


..............................


வெண்ணிற ஆடை படத்தில் நடித்த ஸ்ரீகாந்த் தியேட்டரில் அவரை திரையில் பார்த்து ரசிகர்கள் கத்தியதை நேரில் பார்த்த போது வெறுத்துப்போனார். அவருடைய நடிப்பு அப்போது தமிழ் ரசிகர்களுக்குப்பிடிக்கவில்லை.

ரொம்ப அவமானமாயிருந்ததால் ஒரு முடிவெடுத்தார் - இனி சினிமாவில் நடிக்க கூடாது.
இது அவரே சொன்ன விஷயம்.
வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ அதற்கு நேர் மாறாக இவரை படம் பார்த்தவர்கள் புறந்தள்ளினார்கள். இப்போது அந்தப்படம் பார்த்தால் அவருடைய நடிப்பு அப்படியொன்றும் மோசமெல்லாம் கிடையாது.அருமையான பி.பி.எஸ் பாடல்கள் வெண்ணிற ஆடை நிர்மலாவுடன்!
1965ல் இருந்த ரசிகர்கள் முழுக்க எம்.ஜி.ஆர் – சிவாஜி மயக்கத்தில் இருந்தவர்கள்.

ஸ்ரீகாந்த் அமெரிக்கன் செண்டரில் வேலை பார்த்துக்கொண்டே நடிக்க வந்தவர்.

இவர் தன் திரைப்பட அறிமுகத்திற்குப்பின் கொஞ்சம் மன நிலை பாதிக்கப்பட்டார்.

ஸ்ரீ காந்த் சினிமா வாழ்வு கொஞ்சம் விசித்திர மானது. இயக்குனர் ஸ்ரீதரால் அறிமுகம் செய்யப்பட்டதால் இவருக்கு எந்த பெரிய பலனும் கிட்டவில்லை.
1965ல் ஸ்ரீதர் தரத்துக்கு சற்றும் பொருந்தாத இயக்குனரான ஜோசப் தளியத்தால் அறிமுகமான ஜெய்சங்கர் பிஸியான கதாநாயகன்.
சிறந்த இயக்குனர் பாலச்சந்தர் நாடகங்களில் நடித்து ஸ்ரீதரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீகாந்த் சினிமாவில் சாதாரண நடிகராகிவிட்டார்.
ஸ்ரீதர் முன்னதாக அறிமுகப்படுத்திய ரவிச்சந்திரன் கூட ரசிகர்களால் 'காதலிக்க நேரமில்லை' யில் ரசிக்கப்பட்டார்.


பாலச்சந்தர் நாடகங்களில் நடித்தவர் என்பதால் அதே வருடம் 'நாணல்' படத்தில் காமெடி பாத்திரம் செய்தார்.
ஏ.வி.எம் ராஜன் ‘கற்பூரம்’(1967) – ‘நிலவே உனக்கு குறையேது? என் அருகினில் நெருங்கிட வரும்போது’ என்ற ஒரு பாடலுடன் ஸ்ரீகாந்த்துக்கு சின்ன ரோல்.மணிமாலாவை கற்பழிப்பார்.
செல்வமகள் படத்திலும் ’செல்ல’ வில்லன்.
பாலச்சந்தரின் “நாணல்”,
“பாமாவிஜயம்”
“எதிர் நீச்சல்”
“பூவாதலையா?”
“நவக்கிரகம்” படங்களில் எல்லாம் ஸ்ரீகாந்த் தன் முதல் படத்து பிம்பத்துக்கு சம்பந்தமேயில்லாமல் காமெடி ரோல் தான் செய்தார்!
பாமா விஜயத்தில் சச்சுவிடம் ஸ்ரீகாந்த் " I have no father.. no mother.."
எதிர் நீச்சலில் சௌகாரிடம் " ஏட்டிக்குப்போட்டி பேசாதேடி பட்டோ!"
பூவாதலையா - "போடச்சொன்னா போட்டுக்கிறேன்.போடும் வரை கன்னத்திலே." ஏ.எல்.ராகவன் பின்னனி குரல்!
நவக்கிரகம் - "திட்டுறான் திட்டுறான் மறுபடியும் திட்டுறான்! எல்லாரும் சாட்சி."


அதன் பிறகு அந்த பாலச்சந்தர் பட பாத்திரங்களுக்கு சம்பந்தமேயில்லாமல் ப்ளேய் பாய் ஆக ஆளே மாறிவிட்டார். மிக பிஸி.
“தோரஹா” இந்திப்படம் தமிழில் ‘அவள்’ தயாரிக்கப்பட்டபோது அதில் ருபேஷ் குமார் செய்த வில்லன் ரோலை செய்தார். “I’m always open!”
வெண்ணிற ஆடை நிர்மலாவை கற்பழிப்பார்.

சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன் படங்களில் ஸ்ரீகாந்த் பிஸியான நடிகர். அதே 1972ல் காசே தான் கடவுளடா, ஞான ஒளி, தொடர்ந்து அடுத்த வருடம் ராஜபார்ட் ரங்கத்துரை.
1974ல் சிவாஜியின் மகனாக தங்கப்பதக்கத்தில் கலக்கி விட்டார்.

அதேவருடம் சிங்கிதம் சீனிவாசராவின் ‘திக்கற்ற பார்வதி’யில் கதாநாயகன். கதாநாயகி லக்ஷ்மி!
‘ராஜநாகம்’ படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகன்.
 தேவர் படம் ‘கோமாதா என் குல மாதா’ வில் பிரமீளாவுக்கு ஜோடி.

அவருடைய ஹேர்ஸ்டைல் தனித்துவமானது.


வத,வத என்று பல படங்கள் நடித்தார்.
‘பைரவி’, ‘சதுரங்கம்’ இரண்டு 1978 படங்களில் ரஜினிகாந்த்துடன்.
(மேஜர் சந்திரகாந்த் கதையில் இரண்டு பாத்திரங்கள். சந்திரகாந்தின் இருமகன்கள் ஸ்ரீகாந்த், ரஜினி காந்த்.
இந்த இரண்டு பெயர்களை பாலசந்தர் இரண்டு நடிகர்களுக்கு சூட்டினார்!)

ஜெயகாந்தன் நாவல்களின் நாயகன்.
ஒரு வித்தியாசமான ஸ்ரீகாந்த்.
சில நேரங்களில் சில மனிதர்கள் (1977)
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978)


கமல்ஹாசனுடன் “நீயா?”(1979)

.......

ஸ்ரீகாந்த் தன் நண்பன் நாகேஷ் பற்றி சொல்லியிருக்கிற சுவாரசியமான விஷயம்.
நாகேஷ்,ஸ்ரீகாந்த்,கவிஞர் வாலி மூவரும் திரையுலக முயற்சியில் இருந்த காலத்திலேயே நண்பர்கள்.

நாகேஷுக்கு நண்பர்கள் மத்தியில் பட்டப்பெயர்
"மொபைல் நாகேஷ்"!
தங்குவதற்கு தனி அறை ஏதும் இல்லாததால் ஒவ்வொரு நண்பர்கள் அறையாக மாறி, மாறி தங்கிக்கொள்வாராம்! அதனால் மொபைல் நாகேஷ்!

................................................................................................

Feb 16, 2009

அன்று நாகேஷை நான் பார்த்த போது


அன்றைக்கு நான் அந்த வாகினி ஸ்டூடியோ செட் ஒன்றில் நுழைந்தேன் . நான் உதவி இயக்குனர் ஆக அப்போது 'அழைத்தால் வருவேன்' பட பூஜையில் கலந்து கொள்ள வந்திருந்தேன். பாடல் ரிகார்டிங் முடிந்து நான் அங்கே பக்கத்தில் ஒரு செட் உள்ளே நுழைந்தேன் .
அது ஒரு ராமண்ணா படம் . அவர் கொடி கட்டிய காலம் அல்ல . அஸ்தமன காலம் . ராமண்ணா விடம் ஒரு விஷேச குணம் . டென்சன் இல்லாத இயக்குனர் . இயக்குகிறார் என்பதே அறிய முடியாமல் இருக்கும் . ஜெய் சங்கர் கதாநாயகன் !மக்கள் கலைஞரை ரசிகர் பெருமக்கள் கைவிட்டுவிட்டகாலம் . எவ்வளவு காலம் தான் ஏமாறுவார்கள் மக்கள் . சுதாகர் ,விஜயன் என்று சின்ன பட்ஜெட் படங்கள் போக ஆரம்பித்து விட்டது .ராமண்ணா பிடிவாதமாக அந்த 'குல கொழுந்து ' படத்தை சூட் செய்து கொண்டிருந்தார் . கதாநாயகி ஸ்ரீப்ரியா , அப்புறம் சௌகார் ஜானகி , செந்தாமரை படுக்கையில் . நாகேஷ் அந்த படத்தில் நடிக்கவில்லை . அவர் ஆனால் செட் ட்டுக்கு வந்து கலக்கி கொண்டிருந்தார் . காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் மாமனாராய் நடித்தவர் அந்த படத்தில் ஒரு ரோல் செய்து கொண்டிருந்தார் . பெயர் பிரபாகர் என்று அவரிடம் சிறிது நேரத்தில் கேட்டு தெரிந்து கொண்டேன் .அவரும் நாகேஷும் சாட் பிரேக் நேரங்களில் செய்த ஒரு சிறு காமெடி .
ரயிலில் வரும் கனவான் அரியலூர் ரயில் நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட சௌகரிய குறை ஒன்றை பற்றி ஸ்டேசன் மாஸ்டரிடம் அவர் அறைக்கு வந்து கம்ப்ளைன்ட் செய்கிறார் .
பிரபாகர் வேகமாக ஓடி வந்து கிட்டத்தட்ட நாகேஷ் மேலே விழுந்து கோபத்துடன் கேட்கிறார் “ Who is the Station Master”
நாகேஷ் பதறி போய் கூப்பாடு “I is the Station Master ”
பிரபாகர் இந்த ஓட்டை இங்கலிஷ் கேட்டு எரிச்சலாகி “Are you the Station Master?”
நாகேஷ் அதே பதட்டத்துடன் “Yes Sir! Ariyalur Station Master!”
பிரபாகர் டென்சன் ஆகி “Stupid Station Master”
நாகேஷ் நீங்கா பதட்டத்துடன் சத்தமாக “ No sir , Ariyalur Station Master”
இந்த நகைச்சுவை காட்சி அங்கு இருவராலும் பலமுறை நடித்து காட்டப்பட்டது .பிரபாகர் கேள்வி , நாகேஷ் பதில் எல்லாம் மின்னல் வேகத்தில் !

'டே ஜெய் இங்க பார்டா ' நாகேஷ் சொன்னவுடன் பிரபாகர் இயங்க ஆரம்பித்து விடுவார் . 'ஸ்ரீ பிரியா இங்க பார் ' 'ஜானகி ஒன் மினிட் ' மீண்டும் மீண்டும் ..
ராமண்ணா " டே நாகேஷ் ஷூட்டிங் நடத்த விடுடா . நீ ஏன் இப்ப இங்க வந்தே "
உடனே நாகேஷ் " அண்ணா இங்க பாருங்க " உடனே பிரபாகர் “ Who is the Station Master” ராமண்ணாவும் சிரித்து விட்டார் .
நான் பிரபாகரிடம் அப்போது தான் 'உங்க பேர் என்ன சார் " என்றேன் . " பிரபாகர் " என்றார் . நான் அப்போது சர்காஸ்டிக் ஆக சொன்னேன் " இத்துனூண்டு நெத்தியிலே எவ்வளவு எழுதியிருக்கான் பார்த்தீங்களா ? இவ்வளவு காலம் கழித்து உங்க பேரை நான் கேட்டு தான் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு !" என்றவுடன் பிரபாகர் குஷியாகி அப்போது ஸ்ரீப்ரியா , சௌ கார் உட்கார்ந்திருந்த சோபாவில் உட்கார்ந்து விட்ட நாகேஷிடம் சொன்னார் " டே நாகேஷ் இங்க பார்டா . ஒன் காதலிக்க நேரமில்லை வசனம் ஒப்பிக்கிரார்டா " என்றார் . அப்போது நாகேஷிடம் நான் சொன்ன வார்த்தை " நான் ராஜநாயஹம் ! ஒங்க ரசிகன் சார் !" தமிழ் சினிமா ரசிகனாக அடையாளப்படுத்திகொள்வது அபத்தம் தான் . ஆனால் நாகேஷின் ரசிகன் என்பது மதிப்பு குறைவு கிடையாது .
நாகேஷ் என்னை பார்த்தார் “Be seated . Be seated Please!” என்று எதிரே இருந்த ஒற்றை சோபாவை எனக்கு காட்டினார் .
சமீபத்தில் மறைந்தநடிகர் சிலோன் விஜயேந்திரன்(கவிஞர் கம்பதாசன் பற்றி நூல் எழுதியவர் ) அங்கே அப்போது நடிக்க வாய்ப்பு தேடி வந்திருந்தார் . அவர் என்னிடம் " சார் நீங்க பிரஸ் ஆ ?" நாகேஷ் உட்கார சொல்லவும் நான் Reporterஎன்று அவர் நினைத்து விட்டார் ." இல்லை " என்று அவசரமாக அவரிடம் சொன்னேன்.
....
நான் நாகேஷை சந்தித்த அதே நாளில் தான் அன்று பூஜை போடப்பட்ட ஹிந்து ரங்கராஜன் தயாரிப்பான ' அழைத்தால் வருவேன் ' படத்தில் நாகேஷ் கேட்ட தொகை அதிகம் என சொல்லி அவரை கேன்சல் செய்து விட்டு சுருளி ராஜனைஅதை விட பெரிய தொகை கொடுத்து புக் செய்தார்கள் . நாகேஷின் மார்க்கெட் முடிந்து ,தேங்காய் காமெடி மார்கெட்டும் முடிந்து சுருளிராஜன் காலம் முடியபோகிற வருடம் .'அழைத்தால் வருவேன்' முதல் வாரம் தியேட்டரில் ஓடும்போது அவர் திடீர் மரணம் நிகழ்ந்தது .இந்த படத்தில் இன்னொரு சுவாரசியம் . மற்றொரு ரோலுக்கு சுருளிக்கு அடுத்து அவர் இறந்து சிலகாலம் கழித்து மார்கெட்டுக்கு வர இருந்த கவுண்டமணி கேட்ட தொகை அதிகம் என்று சொல்லி வெண்ணிற ஆடை மூர்த்தி ,என்னத்தை கண்ணையா இருவரை அந்த தொகைக்கு புக் பண்ணி தயாரிப்பு நிர்வாகி சந்தோசமாக சொன்னார் ."எப்படி என் திறமை"
இந்த என்னத்தை கண்ணையா ஐம்பது வருடமாக நடித்து கொண்டிருக்கிறார் .இவ்வளவு காலம் கழித்து வடிவேலுடன் " வரும் ..ஆனா வராது ..." என்று கலக்கி விட்டார் !ஊரே அந்த டையலாக்கை இன்று சொல்லிகொண்டிருக்கிறது . அவரோடு நடித்த நடிகர்கள் எல்லோரும் அமரர் ஆகிவிட்டார்கள் .

Feb 12, 2009

நாகேஷும் பாலச்சந்தரும்


நாகேஷிற்கு நெஞ்சில் ஓர் ஆலயத்தில் வாழ்க்கை கொடுத்தவர் ஸ்ரீதர்.அதன் பிறகு தான் நாகேஷை சினிமாவுக்கு தெரியும் .'நெஞ்சம் மறப்பதில்லை ' படத்தில் நாகேஷின் நுட்பமான நேர்த்தியான நகைச்சுவை வார்த்தையால் விவரிக்கமுடியாது.

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷின் முக்கிய கதாபாத்திரம் ஓஹோ புரடக்சன்ஸ் செல்லப்பா ரோல் ஸ்ரீதர் கொடுத்தது தான் .'ஊட்டி வரை உறவு ' நாகேஷின் ஆர்ப்பாட்டமான நகைச்சுவை காட்சிகள் பார்க்க பார்க்க பார்க்க திகட்டவே திகட்டாதது .

பட்டணத்தில் பூதம் இயக்கியவர் ராமன் . நாகேஷ் சாதனை படங்களில் முக்கியமானது . ' நாய்க்கு சீசர்ன்னு பேர் வச்சேன் .செத்துப்போச்சி ' ரமாபிரபா சோகமாக சொல்லும்போது
நாகேஷ்" பேர் வச்சே . சோறு வச்சியா " ( இந்த ஜோக்கை இப்போது விவேக் ஒரு படத்தில் அப்படியே சுட்டு விட்டது தெரியுமா )
நாகேஷிற்கு பிரமாதமான பேர் வாங்கி தந்த திருவிளையாடல் தருமி , தில்லானா மோகனாம்பாள் வைத்தி இரண்டு படங்களின் இயக்குனர் ஏ பி நாகராஜன்.
மோட்டார் சுந்தரம்பிள்ளை , எங்க வீட்டு பிள்ளை , அன்பே வா இப்படி நாகேஷ் விலா நோக சிரிக்க வைத்த படங்கள் ஏராளம் .கே எஸ் ஜி யின்'சின்னஞ்சிறு உலகம் 'சோக நாகேஷ் , 'பணமா பாசமா' அலேக் நாகேஷ் !
சாதாரண டப்பா படம் 'அண்ணாவின் ஆசை 'யில் நாகேஷ் அளப்பரையை பார்க்கவேண்டும் .
நாகேஷ் சினிமா மார்க்கெட் உச்சத்தில் இருந்த காலத்தில் பாலச்சந்தரின் ராகினி கிரியேசன்ஸ் நாடகங்களில் நடித்தார் .'தெய்வத்தாய் 'என்ற எம்ஜியார் பார்முலா படத்திற்கு வசனம் எழுதிய பாலச்சந்தருக்கு இதனால் நீர்க்குமிழி மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்திருக்கலாம் .
ஏதோ பாலச்சந்தர் தான் நாகேஷை உருவாக்கியவர் . அவர் தான் நாகேஷை சரியாக வேலை வாங்கியவர் என்பது போல ஒரு பிரமை கமல் உட்பட பலருக்கு இருக்கிறது . நாகேஷை ஓவர் ஆக்சனில் சிக்க வைத்ததே பாலச்சந்தர் நாடகபாணி இயக்கம் தான் .

சர்வர் சுந்தரம் கதை வசனம் பாலச்சந்தர் . இயக்குனர் அவர் அல்ல . நீர்க்குமிழி , எதிர் நீச்சல் படங்கள் நாகேஷுக்கு சொல்லும்படியான படங்கள் என்றால் நவக்கிரகம் , பத்தாம் பசலி போன்ற வீணாப்போன நாகேஷ் படங்களுக்கும் பாலச்சந்தர் தான் இயக்குனர் .வேதாந்தம் ராகவய்யா இயக்கிய நாகேஷின் இருநூறாவது படம் 'உலகம் இவ்வளவு தான் 'கூட வெற்றிபெற்றது.
'நாணல் ' பாமா விஜயம் ', 'அனுபவி ராஜா அனுபவி ' படங்களில் அட்டகாசமான நகைச்சுவை தர்பார் செய்யவைத்து அதே நேரத்தில் குணசித்ரம் , தத்துவம், புளுத்தி என்று நாகேஷை ட்ராக் மாற்றி அருமையான அபூர்வமான நகைச்சுவையை நசிக்கவைத்து குட்டி சுவர் ஆக்கியதில் பாலச்சந்தருக்கு பிரதான இடம் உண்டு . அப்புறம் அம்போ என்று கைவிட்டவரும் இவர் தான் . அவள் ஒரு தொடர்கதையில் கமல் செய்த ' விகடகவி ' ரோல் கூட நாகேஷுக்கு பொருத்தமான ரோல் தானே !
'புன்னகை ' படத்திற்கு பின் நாகேஷை பாலச்சந்தர் கைவிடுகிறார் . அபூர்வ ராகங்களில் தான் மீண்டும் நாகேஷிற்கு வாய்ப்பு . பின் மீண்டும் நாகேஷை பலபடங்களில் பாலச்சந்தர் கண்டு கொள்ளவே இல்லை .'தில்லுமுல்லு 'படத்தில் நாகேஷுக்கு பிட் ரோல் . டைட்டில்-தேங்காய் சீனிவாசன் பெயருக்கு கீழே நாகேஷ் பெயர் வரும்.

............................................
 

Feb 10, 2009

நாகேஷும் மற்ற நகைச்சுவை நடிகர்களும்


நாகேஷ் நடிப்பு - கமல் ஹாசன் டி வி யில் குறிப்பிடும் போது 'கலைவாணரை அடுத்து நாகேஷ் தான் .சிவாஜி கணேசன் மீது உள்ள அதே மரியாதை நாகேஷ் மீதும் எனக்கு உண்டு ' என்றார் . இது ஏற்கனவே கமல் அடிக்கடி சொன்ன விஷயம் தான் .
கலைவாணர் ஒரு ஜீனியஸ் . ஆனால் நாகேஷ் அப்படியல்ல . கலைவாணருக்கு திரையுலக அந்தஸ்து பிரமாதமானது . அதை விட பிரமாதமானது சமூக அந்தஸ்து !ஒரு முறை தமிழக முதல்வர் எம் ஜி ஆர் குறிப்பிட்டார் " இன்று கலைவாணர் உயிரோடு இருந்தால் இன்று அவர் அல்லவா தமிழக முதலமைச்சர் !"
கலைவாணர் களத்தை வெற்றிகொண்டவர் . முப்பதுகளில் ,நாற்பதுகளில் நகைச்சுவையில் சிந்திக்க வைத்த கலைஞர் தான் .எம்ஜியாரின் 'மதுரை வீரன்,' 'சக்கரவர்த்தி திருமகள்' ,சிவாஜியின் 'ராஜா ராணி' படங்கள் வரை ஐம்பதுகள் வரை வெளுத்துகட்டியவர் பன்முகத்தன்மை கொண்டவர் .அவரே பாடுவார் . தலை சிறந்த வள்ளல் . இது போல சிறப்புகள் நாகேஷுக்கு சுத்தமாக கிடையாது .

1958ல் நடிக்கவந்த நாகேஷ் நான்கு வருடம் போராடி1962 ல் தான் 'நெஞ்சில் ஒரு ஆலயம் 'தான் சரியான திருப்புமுனை .அதன் பிறகு ஒரு எட்டு ஒன்பது வருடம் காமடியனாக நாகேஷ் சாதித்ததை நாகேஷ் முன்னர் வந்தவர்களும் சரி , பின்னர் வந்தவர்களும் சரி மிஞ்ச முடியாது .கலைவாணரை இந்த ஒன்பது வருடம் தாண்டிபோய் விட்டது .
சந்திர பாபு போல நாகேஷ் பாட முடியாது சந்திரபாபு ஒரு ஆல்ரௌண்டர் . ஆனால் நாகேஷின் ,பவர் , டைமிங் , வசன உச்சரிப்பு ! சந்திரபாபு நெருங்கவே முடியாது . சான்சே இல்லை .
தங்க வேல் ஐம்பதுகள் துவங்கி கடைசி வரை நீர்த்துபோகாமல் ஒரே சீராக நடித்தவர் . நாகேஷ் எழுபதுகளில் சொதப்பியவர் . நாகேஷ்பின்னாளில் Form இழந்துவிட்டவர் .ஆனால் தருமி , வைத்தி , செல்லப்பா ரோல்களை கலைவாணர் ,தங்கவேலு போன்றவர்கள் தலை கீழாய் நின்றாலும் நாகேஷ் தரத்திற்கு செய்திருக்க முடியாதே !
சோ ஒரு முக்கியமான ஆளுமை . சிரிப்பு நடிகர் என்ற தகுதிக்கும் அப்பால் வசனகர்த்தா . அதை விட எழுபதுகளில் ஆரம்பித்து தனி மனிதனாக ,தைரியமாக பத்திரிக்கையாளராக இந்திராகாந்தி ,கருணாநிதி ,எம்ஜியார் ஆகியோரை கடுமையாக விமர்சித்த ஆண்மையாளர் . இந்த யோக்யதையும் நாகேஷுக்கு கிடையாது . ஆனால் நாகேஷின் நடிப்புக்கு முன் சோ வின் நடிப்பு தூசு தான் .
தேங்காய் சீனிவாசன் போல வசனங்களில் கொனஷ்டை அற்புதமாக நாகேஷ் செய்ததே இல்லை . என்றாலும் நாகேஷின் அறுபதுகளின் சாதனையை தேங்காய் நெருங்கவே முடிந்ததில்லை .
கவுண்டமணி ,வடிவேலு , விவேக் எல்லாம் தாங்களே நாகேஷ் முன் வாய் பொத்தி நிற்க வேண்டியது தான் .
அறுபதுகளில் சிவாஜி , பாலையா , எம் ஆர் ராதா ஆகியோரை நாகேஷ் எதிர்கொண்டு தூள் கிளப்பினார் . அவர்களுக்கு சரியான கம்பானியன் நாகேஷ் !Full form ! எல்லாமே சிக்ஸர் , பௌண்டரி தான் . மிக குறைந்த ஓவர்களில் திரிபில் செஞ்சுரி !
அந்த குறுகிய கால சாதனை நாகேஷுக்கு அமரத்துவத்தை வழங்கி விட்டது.
குணசித்திர நடிப்பு - குணசித்ரபாத்திரங்களில் நடிக்கும்போது நாகேஷ் மமதையுடன் நடிப்பார். உதாரணம் : 'பூவா தலையா' . அது ஒரு பெரிய குறை . கொஞ்சம் ஓவரா சோகத்தை பிழிவார் .அறுபதுகளிலேயே இந்த வேலையை ஆரம்பித்தவர் தான் நாகேஷ் . உதாரணம் : முத்து சிப்பி , மேஜர் சந்திரகாந்த் ஆகிய படங்கள் .
பின்னால் எழுபதுகளில் துவங்கி நகைச்சுவை நடிகனாக அல்லாமல் அவர் செய்த குணச்சித்திர நடிப்பில் எஸ் வி ரங்காராவ் , பாலையா , ஏன் எஸ் வி சுப்பையாவை கூட கடைசிவரை நாகேஷால் தாண்ட முடிந்ததே இல்லை .
 ( அவர் சிறப்பாக செய்தவை :' உனக்காக நான்' 'சில நேரங்களில் சில மனிதர்கள்' ) அறுபதுகளின் தலை சிறந்த குணச்சித்திர நடிப்பில் அவர்கள் சாதித்ததை இன்று வரை எந்த நடிகரும் மீறி தாண்டி நாகேஷ் உட்பட யாருமே போக முடிந்ததில்லை .குணச்சித்திர நடிப்புக்காக தயவுசெய்து மேஜர் சுந்தர ராஜனை சிபாரிசு செய்துவிடாதீர்கள் .மேஜர் Poor man’s Rangarao! கதாநாயகனாக சாதிக்காமல் 'அக்னிநட்சத்திரம்' துவங்கி குணசித்திர நடிப்பில் பேர் வாங்கிய விஜயகுமார் , ஜெய் கணேஷ் , இப்ப சேரன் படத்தில் அப்பா ரோல் சிறப்பாக செய்த ராஜ் கிரண் வரை யாருமே ரங்காராவ் நடிப்பை நெருங்க முடிந்ததில்லை .இவர்களை குறை சொல்லக்கூடாது . ரங்காராவ் ,பாலையா நடிப்பு ஜெயிக்கமுடியாத சாதனை .
எம் ஆர் ராதா காலத்தை வென்ற கலைஞன் என்று சொன்னால் அது Cliché! ராதாவை யாரோடும் கம்பேர் செய்வது அபத்தம் . தனிக்காட்டு ராஜா !


பின் குறிப்பு : இந்த ' நாகேஷும் மற்ற நகைச்சுவை நடிகர்களும் ' என்ற இந்த பதிவு இந்த ப்ளாகில் என் முன்னூறாவது பதிவு .

Feb 9, 2009

Over Action

ஜெமினி கணேஷ் இறந்தபோது காலச்சுவடில் நான் எழுதிய இரங்கலில் குறிப்பிட்டேன் : " தமிழ் திரையின் உக்கிரமான ஆகிருதிகள் எம் ஆர் ராதா , சிவாஜி கணேசன் , நாகேஷ் ஆகியோர் . நேர் எதிர் திசையில் மென்மையாக சாதித்தவர்கள் : ஜெமினி கணேஷ் , எஸ் வி ரங்காராவ் , டி .எஸ் . பாலையா மூவரும் "

( நாகேஷ் இறப்பதற்கு ஐந்து தினம் முன் 'மத்திய அரசின் பத்ம விருதுகள்' என்ற பதிவில்
"தமிழ் திரை கண்ட நகைச்சுவை நடிகர்களில் சத்தியமாக முதன்மையானவர் நாகேஷ் தான் . " என நான் குறிப்பிட்டிருந்தேன் .)
உக்கிரமான ஆகிருதிகள் மூவரிடமும் ஓவர் ஆக்சன் இருந்தது .
இவர்களில் சிவாஜியின் ஓவர் ஆக்சன் மக்களால் ரசிக்கப்படவில்லை . சிவாஜியின் நடிப்பில் மிகை யை ஒரு குறையாக த்தான் திரை ரசிகர்கள் எழுபதுகளில் அதிகம் கண்டு எரிச்சலுற்றார்கள் என்பது தான் உண்மை .
நாகேஷும் அப்படித்தான் . ஓவர் ஆக்சன் அவர் தத்துவவாதியாக மாறி ' தத்துவத்துக்கு அம்மா 'கற்பனை 'அப்பா கவலை ' என்று சாதாரணமாக சினிமாவுக்கு வெளியே கூட தத்துவம் பேச ஆரம்பித்தவர் நாகேஷ் . திரையில் நாகேஷ் ஓவர் ஆக்சன் சொல்லி முடியாது .
'கடல் மீன்கள் ' படத்தின் எடிட்டிங் போது கமல் ஹாசன் வந்திருந்து அவருடன் நாகேஷ் கடல் போட் சீனில் செய்திருந்த சகிக்க முடியாத ஓவர் ஆக்சன் பகுதிகளை எடுத்து விட சொன்ன போது நான் அங்கிருந்தேன் . கமல் ஜி என் ரங்கராஜனிடம் சொன்னார் : நாகேஷ் ஷாட்ஸ் நிறைய நீக்கிடனும் . ஓவர் ஆக்சன் ரொம்ப . நாகேஷை எல்லாம் எங்க வாத்தியார் ( பாலச்சந்தர் ) தான் சரியா வேலை வாங்க முடியும் . மத்தவங்க அவர லூசா விட்டா ரொம்ப சொதப்பிடுவார் .மத்தவங்களுக்கு நாகேஷை வேலை வாங்கறது சிரமம் "
அன்று கடல் மீன்கள் படத்தில் தங்கவேலு நடிப்பை பிரமாதமா கமல் புகழ்ந்தார் .

பின்னால் கமல் படங்களில் நாகேஷ் நடிப்பை நன்கு கவனமாக பதிந்ததில் கமலின் இந்த எச்சரிக்கை உணர்வு தான் காரணம் .

எம் ஆர் ராதாவின் நடிப்பில் அவர் எவ்வளவு தான் ஓவர் ஆக்சன் செய்தாலும் தமிழ் மக்கள் அதை முழுமையாக அங்கீகரித்தார்கள் . அவருடைய நடிப்பில் 'மிகை' என்பது கூடுதல் அணிகலனாக மாறி அவருக்கு மேலும் புகழ் சேர்த்தது .
ஐம்பது ,அறுபதுகளில் மிகை நடிப்பில் கொடிகட்டியவர் ராதா ! எவ்வளவு பெரிய ஆள் அவர் பக்கத்தில் நின்றாலும் அமுங்கி போய் தான் தெரிவார் . ஓவர் ஆக்சன் செய்து சிவாஜியும் நாகேஷும் எழுபதுகளில் எரிச்சலுக்கு தான் ஆளானார்கள் .

...
இன்னொரு விஷயம் இதை இங்கு குறிப்பிட்டேஆகவேண்டும் .
இன்றைய நடிகர்களில் கமல் ஹாசன் நடிப்பு பற்றி ஒரு விஷயம் . அவர் நடிக்கும் போது ஒரு "கர்வம் " தெரிவதை கவனித்திருக்கிறீர்களா ? அவர் நடிக்கிற தோரணை " ஆமா , இந்த படத்தில் எனக்கு நிறைய வேலை !" என்று கேமரா முன் கர்வத்துடன் நிற்பார் கமல் .
இன்றைக்கு அகில இந்தியாவிலும் கதாநாயகர்களில் கேமரா முன் நடிக்கும்போது கர்வம் கொஞ்சம் கூட இல்லாமல் படு ஸ்மார்ட் ஆ நடிப்பவர் மோகன் லால் மட்டுமே !

Jan 26, 2009

மத்திய அரசு பத்ம விருதுகள் .

ஏ ஆர் ரஹ்மான் குளோபல் அவார்ட் வாங்கி ஆஸ்கார் விருது வாங்கி விடவும் வாய்ப்பு வந்திருக்கிறது .
தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் பத்ம பூஷன் விருது பெறுகிறார் . அடுத்த வருடம் அசோகமித்திரனுக்கு கொடுக்க வேண்டும் . செய்வார்களா ? அசோகமித்திரனுக்கு ஞான பீட விருது வேறு இன்னும் தரப்படாமலே இருக்கிறது . எழுத்து , எழுத்தாளர் என்றதகுதி அளவுகோலில்
ஒரு அசோகமித்திரன் பத்து ஜெயகாந்தனுக்கு சமம் .
கிட்டத்தட்ட உத்தேசமாக
நாற்பது வருடங்களுக்கு முன்னரே தி.ஜானகிராமன் ,
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் சுந்தர ராமசாமி , கி .ராஜநாராயணன் , அசோகமித்திரன்,நகுலன் ,இந்திரா பார்த்தசாரதி ,
இருபத்தைந்து வருடங்களுக்கு முன் ஆதவன்
ஜெயகாந்தனை முந்தி சென்று விட்டார்கள்.
அருணா சாய்ராம் பத்ம ஸ்ரீ விருது பெறுகிறார் .கர்நாடக சங்கீதம் செய்த புண்ணியம் அருணா சாய்ராம் . எம் .எஸ் .சுப்புலக்ஷ்மி திறமைக்கு சற்றும் குறைந்தவரல்ல அருணா . இது என் அசைக்க முடியாத நம்பிக்கை .
அந்த காலத்தில் சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் ,வி நாகையா போன்ற நடிகர்கள் பத்ம ஸ்ரீ விருது வாங்கினார்கள் . எம்ஜியார் ரிக்க்ஷாகாரன் " ஓதம்! ஓதம்! "நடிப்பிற்கு (!)பாரத் விருது வாங்கினார் .ஆனால் எம் ஆர் ராதா, எஸ் வி ரங்காராவ் போன்ற உன்னத கலைஞர்கள் அரசு விருதுகள் கௌரவமின்றி தான் மறைந்தார்கள் . Unsung ! Unhonoured!! Unwept!!!
இன்று வரை வந்துள்ள நகைச்சுவை நடிகர்களில் சத்தியமாக முதன்மையானவர் நாகேஷ் !
எழுத்தாளர் சுஜாதாவின் வார்த்தைகள் -நாகேஷ் பற்றி -'காலபிரமானம் ! மின்னல் வேக மாற்றம் !'
நாகேஷுக்கு ஈடு என அதன் பின் யாரும் கிடையாது . இன்றும் நாகேஷ் நடிக்கிறார் என்றாலும் 1962 துவங்கி 1970வரை நாகேஷின் உச்ச பட்ச சாதனை ! இவர் அந்த காலத்தில் பத்மஸ்ரீ அவார்ட் வாங்க முடியவில்லை . இன்னும் காலதாமதமில்லை . மிக சிறந்த விருது கொடுத்து மத்திய அரசு கௌரவிக்கவேண்டிய மகத்தான கலைஞன் நாகேஷ் ! அவருக்கு கிடைக்காத கௌரவம் இன்று விவேக் பெற்றுள்ளார். வடிவேலு விடம் உள்ள Inbuilt Humour அவரை விவேக்கை விட முன்னணியில் நிறுத்துகிறது. வடிவேலுக்கும் இந்தபத்மஸ்ரீ விருது கிடைக்கவேண்டும். அடுத்த வருடங்களில் வாங்கி விடுவார் .
கலைவாணர் என் எஸ் கே ,தங்கவேலு ,சந்திரபாபு , சோ ,தேங்காய் சீனிவாசன் ,சுருளிராஜன் , கௌண்டமணி ,எஸ்.வி.சேகர் , வடிவேலு ,விவேக் போன்ற கலைஞர்களுக்கு ஈடாக இந்தியாவில் மற்றமொழி காமடியன்கள் யாருமே கிடையாது . உரைபோட ஆள் கிடையாது . தமிழனின் நகைச்சுவை உணர்வின் தரம் அப்படி .