Share

May 30, 2020

தி. ஜா. கருத்தரங்கமும் திருப்பூர் கிருஷ்ணனும்

1989 
புதுவை பல்கலைக்கழகத்தில் 
தி. ஜா. கருத்தரங்கம் நடந்த போது அந்த ஊரில் பிரமுகர், தியேட்டர்கள், கல்யாண மண்டபம் போன்றவற்றிற்கு அதிபதி ஒரு பெரியவர். 
அவர் புரவலர். அந்த நிகழ்ச்சிக்கு நிதி தந்திருக்கலாம். விழா மலரை இந்திரா பார்த்தசாரதியிடம் இருந்து நான் பெற்ற போது பார்த்தார். ராஜநாயஹம் ஒரு இளைஞன் என்று கண்டு கொண்டார். 

விழா ஆரம்பித்த பிறகு அதன் பின்னர் வந்த திருப்பூர் கிருஷ்ணன் அந்த புரவலர் தான் ராஜநாயஹம் என்று நினைத்திருக்கிறார். 

அப்புறம் புரவலர் பேச எழுந்த போது தான் நான் இல்லை என்பதை புரிந்து கொண்டாராம். 

ராஜநாயஹம் என்ற பெயர் பெரியவர் என்பதாக தன்னை கருத வைத்து விட்டதாக விழா முடிந்த பிறகு திருப்பூர் கிருஷ்ணன் கூறினார். 

நான் தான் முதல் கட்டுரை வாசித்தேன். திருப்பூர் கிருஷ்ணனும் வாசித்தார். 

முன்னதாக புரவலர் பேசும் போது 'ராஜநாயஹம் போன்ற இளம் உள்ளங்களை கவர்ந்திருக்கிறார் என்றால் ஜானகிராமன் எப்பேர்ப்பட்ட எழுத்தாளர் என்பது புரிகிறது' என்றார். 

உடனே எழுதப்பட்ட ஒரு காகிதத்தில் இருந்து சிரத்தையாக வாசித்தார். 'ஜானகிராமன் பெரிய எழுத்தாளர். அவருக்கு மனைவி இரண்டு.' - pause.. 
இந்திரா பார்த்தசாரதி உடனே என்னைப் பார்த்து அதிர்ச்சியை தன் உடலை ஒரு குலுக்கு குலுக்கி வெளிப்படுத்திய காட்சி இப்போதும் மறக்க முடியாதது. 

புரவலர் தொடர்ந்தார் '.. மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள் ' 

'அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள் ' என்று எழுதிக்கொடுத்ததை அப்படி விபரீதமாக வாசித்திருக்கிறார். 

என்னிடம் ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு ' நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் புதுமைப்பித்தன்,
 கு. ப. ரா, ந.பிச்சமூர்த்தி, மௌனி, க. நா. சு துவங்கி அழகிரி சாமி, லாசரா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கரிச்சான்குஞ்சு, வெங்கட்ராம், 
கி. ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சன் என்று கோணங்கி வரை  படித்தவன் நான். யாரை படித்தாலும் தி. ஜானகிராமன் தான் விசுவரூபம் எடுத்து தெரிகிறார் 'என்று பயமறியா இளங்கன்றாக சொன்னேன். 
கிராவும், இ. பாவும் விழாவில் இருந்தார்கள். 

திருப்பூர் கிருஷ்ணன் கேட்ட கேள்வி கூட நினைவிருக்கிறது.' அன்பே ஆரமுதே குறைப்பட்டுப் போன நாவல் என்று எப்படி சொல்கிறீர்கள் ' என்றார். அவருக்கு பிடித்த பெண் பாத்திரம் அன்பே ஆரமுதே ருக்மணி. 
தொடர்கதையாக எழுதப்பட்ட நாவல்களில் அன்பே ஆரமுதே மட்டும் பாதிக்கப்பட்டது என்பது 
என் துணிபு. 

விழா முடிந்ததும் இந்திரா பார்த்தசாரதியுடன் திருப்பூர் கிருஷ்ணனும், நானும் அவர் வீட்டுக்கு சென்றோம். இந்திரா மாமியின் அன்பான உபசரனை. 

வீட்டில் இருந்து வெளியே வந்ததும் திருப்பூர் கிருஷ்ணன் என்னிடம் சொன்னார் :
" நீங்கள் கருத்தரங்கில் ஜானகிராமன் தான் விஸ்வரூபம் எடுத்து தெரிகிறார் என்று சொன்ன விஷயம் கி. ரா வையும் இ. பா. வையும் புண்படுத்தியிருக்கும் "

திருப்பூர் கிருஷ்ணன் 'தமிழின் தரமான எழுத்தாளர்களை விரல் மடக்கி எண்ண ஆரம்பித்தால் முதல் விரலையே ஜானகிராமனுக்காக தான் மடக்க வேண்டியிருக்கும்" என்று கணையாழியில் எழுதியிருந்ததையும் கூட முன்னதாக நான் வெளியிட்டிருந்த தி. ஜா. நினைவு மதிப்பீட்டு மடலில் சேர்த்திருந்தேன். 

நான் வெளியிட்டிருந்த அந்த நினைவு மதிப்பீட்டு மடல் பார்த்து விட்டுத் தான் துணை வேந்தர்
 இந்த கருத்தரங்கம் நடத்த ஆணையிட்டார். 

திருப்பூர் கிருஷ்ணன் சென்னை சென்ற பிறகு இந்த புகைப்படம் அனுப்பி வைத்தேன். 

அன்போடு பதில் கடிதம் எழுதினார் 
'என் மனைவி ஜானகியிடமும், குழந்தை அரவிந்தனிடமும் புகைப்படத்தில் உங்களை காட்டி 
"இவர் தான் ராஜநாயஹம் "என்று சொன்னேன்"

.... 

http://rprajanayahem.blogspot.com/2008/10/blog-post_3967.html?m=0

சுந்தர ராமசாமியும் மேற்கோளும்

இன்று சுந்தர ராமசாமி பிறந்த நாள். 
எழுதுவதை யோகமாக, யோகமாக, தவமாய் பாவித்தவர். 
எழுதுவதை ஏதோ பிரம்ம பிரயத்தனம் என்ற தோரணையில் சுந்தர ராமசாமி எப்போதும் மேற்கொள்வார். மிகுந்த கவனத்துடன் எழுது பொருட்களை தேர்ந்தெடுப்பார். 
திரும்ப திரும்ப மாற்றி எழுதுவார். 
எழுத்தில் மேற்கோள்களை தவிர்ப்பார். 

சுந்தர ராமசாமி எழுத்தை பிற எழுத்தாளர்கள்      மேற்கோள் காட்டுவது ஸ்டேட்டஸாக இருந்தது.

சுந்தர ராமசாமி சொல்வது போல,
சுந்தர ராமசாமி சொல்வார், 
சுந்தர ராமசாமி சொன்னதைப் போல 

இப்படி.. இப்படியெல்லாம்

கரு. பழனியப்பன்

கரு பழனியப்பன் இன்று செல் பேசினார்.                    என்னுடைய 'சினிமா எனும் பூதம்' நூல் பற்றி                               பாராட்டி பேசினார். 

நெகிழ்ச்சியான உரையாடல். 

என் நினைவு பார்த்திபன் கனவுக்கு போய் விட்டது. 

2003 ம் ஆண்டு. 

திருப்பூருக்கு கிளம்ப சில நாட்கள் இருந்தன. 

எப்படியாவது திருச்சியிலேயே 
இருந்து விட மாட்டோமா என்று
 நானும் அம்மா(என் மனைவி) வும் தவித்தோம். 

வேறு வழியில்லை என்றாகிப் போனது. 
தேம்பி அழுதோம். திக்கற்ற நிலை. 

அந்த நேரத்தில் கரு. பழனியப்பன் இயக்கிய 'பார்த்திபன் கனவு'  பார்க்க ஆசைப்பட்டேன். 
அம்மாவும் நானும் திருச்சியில் கடைசியாக தியேட்டரில் பார்த்த படம் பார்த்திபன் கனவு. 

அந்த துயரமான நேரத்தில் பல மாதங்களாக சினிமா பற்றி நினைத்ததேயில்லை. 

ஏனென்றால் தரமில்லாத மோசமான படம் பார்க்க நேர்ந்தால் மன உளைச்சல் அதிகமாகி விடும். 

பார்த்திபன் கனவு துயர மனநிலைக்கு 
பெரு நிவாரணமாயிருந்தது.

May 29, 2020

மா. அரங்கநாதனின் 'அசலம்'

The theatre is so endlessly fascinating because it’s so accidental. It’s so much like life.” – Arthur Miller

ஆர்தர் மில்லர் பிரபலமான அமெரிக்க நாடகாசிரியர் என்று முற்றுப்புள்ளி வைத்து விட முடியாது.
  மர்லின் மன்றோவுக்கு 
ஒரு ஐந்து வருடம் வீட்டுக்காரர். புருஷன். 
நாடகாசிரியராக புலிட்சர் விருதெல்லாம் 
வாங்கிய கலைஞர். 

கூத்து நாடகம் என்பது இருக்க 
நாடகம் மேடையேற்றத்தில் நடக்கும் 
விபரீத விபத்தாக நடந்த கூத்து ஒன்றை
 மா. அரங்கநாதனின் 'அசலம்' சிறுகதையில் காணலாம். 

ராமன் வேடங்கட்டிய முத்துக்கறுப்பன் அந்த கூத்தை தன் எண்பதாவது வயதில் சாட்சாத் ஸ்ரீ ராமனிடம் சொல்கிறார். 

" நான் அந்த இடத்தில் ( குடிசைகள் உள்ள குப்பம்) 
இராமன் வேடங்கட்டி சீதா கல்யாணம் நாடகம் போட்டிருக்கேன்.. 
அடுத்த வருசமே அந்த நாடக வாத்தியாரு செத்துப் போனாரு - சீதையா நடிச்சது யாரு தெரியுமா - மேலத்தெரு ஆவுடையப்பன் - இன்னும் இருக்கான். 
என்ன பண்ணினான் தெரியுமில்லே. இராவணன் கழுத்திலே மாலையைப் போட்டுட்டான். "

இராவணன் வில்லை ஒடிச்சுச் தொலைச்சிட்டான். 
லேசா அதைத் தொட்டு கீழே வைக்க வேண்டியது தானே - வித்தையெல்லாம் காட்டி நடிச்சான் - வில்லு படார்னு ஒடிஞ்சது. சீதை என்ன செய்வா - சொல்லிக் குடுத்த மாதிரி 
ஒடிச்சவனுக்கு மாலையிட்டா" 

"வாத்யாரு நேரே வந்து மேடைன்னு கூட பாக்காம அந்த ஆவுடையப்பன அடிச்சாரு பாரு - நான் வந்து வெலக்கினேன் - கொன்னு போட்டிருப்பாரு "

" பொறகு ஒரு வழியா வில்லை திரும்பவும் கட்டி வச்சு இராவணன் ஒடிச்சது வேற வில் - சரியான வில்லு இது தான்னு சனக மகாராசா சொல்லி, நான் ஒடிக்க வந்தேன். என்ன ஆச்சுங்கறே - 
அந்த மாதிரி இருகக் கட்டி வச்சா யார் தான் ஒடிக்க முடியும்.. ? சீதைக்குக் கிடைச்சது எனக்கும் திரை மறைவிலே கிடைச்சது"

https://m.facebook.com/story.php?story_fbid=2737865726426876&id=100006104256328

.... 

May 28, 2020

India China Bhai Bhai

ஒரு ஏழு மாதங்களுக்கு முன்பு 
சென்ற ஆண்டில் எழுதப்பட்ட பதிவு. 
மறு பார்வைக்காக மீண்டும் இங்கே 

08.10.2019

பின்னால எப்டி வருவானுங்களோ..
- R. P. ராஜநாயஹம் 

1962. இந்திய சீன யுத்தத்தில் தோல்வி.

காஞ்சி தலைவன் படம் 1963ல ரிலீஸ். எம்ஜிஆர், பானுமதி, எம். ஆர். ராதா.

மு. க. மேகலா பிக்சர்ஸ்.

சீன யுத்தத்தின் போது தான் ஷுட்டிங் நடந்திருக்கும்.

'வெல்க நாடு, வெல்க நாடு, வெல்க வெல்கவே, படைகள் வெல்கவே' சிதம்பரம் ஜெயராமன் பாடிய பாடல் காஞ்சி தலைவனில்.

(ரத்த திலகம் கண்ணதாசன் பாடல் "புத்தன் வந்த திசையிலே போர், புனித காந்தி மண்ணிலே போர்")

பல்லவர் காலத்தில் சீனர்கள் புழங்கியிருக்கிறார்களே.

காஞ்சி தலைவன் வசனம் கருணாநிதி தான். 

ஆனால் எம் ஆர் ராதா சொந்தமாக வசனம் பேசுபவர்.

சீனர்களுடன் பேசும் காட்சி 
அந்த பல்லவ சரித்திர படத்தில் உண்டு.

ராதா அந்த டைம் சென்ஸ்
"இப்பல்லாம் நல்லாத்தான் இருக்கானுங்க. பின்னால எப்படி வருவானுங்களோ.. என்ன பண்ணுவானுங்களோ..? "

நேருவிடம் பாய் பாய் உறவு கொண்டாடிய 
சூ-என்-லாய் கதை தெரிந்த விஷயம்.

அன்று சூ - என் - லாய்  மகாபலிபுரம் வரை 
வந்து விட்டு போனதும் சரித்திர நிகழ்வு தான். 

மோடி - ஜின் பெங் பல்லவ மகாபலிபுரம் சந்திப்பு நடக்க இருக்கிறது.
'இந்தியா சீனா பாய் பாய்'னு பல்ல ஈன்னு காட்டிட்டு போயிடுவான்.

'எப்டி வருவானுங்களோ, 
என்ன பண்ணப்போறானுங்களோ'ன்ற 
 பயம் நிரந்தரமானது.

.....


1962 சீன யுத்தம் பற்றி பாரதிதாசன் கவிதை 


சென்றதடா அமைதி நோக்கி உலகம்- அட
சீனாக்காரா ஏண்டா இந்தக் கலகம்.
நன்றாக நீ திருந்த வேண்டும்
ஞாலம் உன்னை மதிக்கவேண்டும்
ஒன்றாய்ச் சேர்ந்து வாழவேண்டும்
ஒழுக்கம் கெட்டால் என்னவேண்டும்? -சென்றதடா

உலகம் எலாம் பொது வென்றாய்
உடமை எலாம் பொது வென்றாய்
கலகம் செய்து நிலத்தை எல்லாம்
கைப்பற்றத்தான் முயலுகின்றாய், -சென்ற...

பொது உடைமைக் கொள்கை ஒன்று
பூத்துக் காய்த்து வருமின்று
பொதுவுடைமை எனக்கென்று
புகன்றாயே குறுக்கில் நின்று. -சென்ற...

கொலைகாரப் பசங்களோடு
கூடுவது மானக்கேடே
இலைக்காக மரத்தை வெட்டிடில்
ஏற்றுக் கொள்வதெந்த நாடு? -சென்ற...

உயிர் காப்பது பொது உடைமை
உயிர் போக்குதல் பெருமடமை
உயர்வான இக் கருத்தை
உணர்வதுதான் உன் கடமை -சென்ற...

அறநெறியை முற்றும் நீக்கி
அழிவு செய்ய உலகை நோக்கிப்
புறப்பட்டாய் சீனாக்காரா
பொடியாகும் உன் துப்பாக்கி 

- பாரதிதாசன் 

...... 

May 26, 2020

ஜமுனா ராணி


யூட்யுபில் ஒரு கச்சேரியில் ஜமுனா ராணி "பாட்டொன்று கேட்டேன். பரவசமானேன்,
நான் அதை பாடவில்லை
பாவை என் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை "
பாடியவுடன் அந்த அமர்க்களமான BGM
சிவாஜி உற்சாக பரவசத்துடன் பியானோ வாசிக்கிற காட்சி நினைவு வந்து கண் கலங்கியது.

எல். ஆர். ஈஸ்வரிக்கு நேர் எதிர் மாறாக
பொது வெளியில்
கச்சேரிகளில் பாடும் போது கொஞ்சமும் உணர்வுகளை காட்டாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு,
குரலில் மட்டுமே
அத்தனை சித்து வேலைகளையும் காட்டுவார்             ஜமுனா ராணி.

" என் ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா "

"செந்தமிழ் தேன் மொழியாள்"

"காமுகர் நெஞ்சில் நீதியில்லை"

" அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு "

"சித்திரத்தில் பெண் எழுதி சீர் படுத்தும் மானுடமே ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயா "

"பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை  "

"அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே "

" ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான்"

"நெஞ்சினிலே நினைவு முகம் நிலவிலும் தெரிவதும்
அழகு முகம் ஆசைமுகம் "

"எனக்காகவா நான் உனக்காகவா என்னைக் காணவா என்னில் உன்னைக் காணவா வா வா "

"புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் "

இந்த கீதங்களில் இசைந்து குழையும் ஜமுனா ராணி.

இது ஒரு வகை.

இன்னொரு பாணி பாடல்கள் உண்டு.

அன்பு எங்கே படத்தில் " மேலே பறக்கும் ராக்கெட்டு. மின்னல் பூச்சி ஜாக்கெட்டு "

உத்தம புத்திரனில் "யாரடி நீ மோகினி " பாட்டில்
 " விந்தையான வேந்தனே "

" காள வயசு, கட்டான சைசு, கலங்கமில்லா மனசு "

 குமுதம் படத்தில் " மாமா,மாமா மாமா "

மரகதத்தில் சந்திரபாபுவுடன் கலக்கும்
" குங்குமப் பூவே, கொஞ்சும்புறாவே"

"வாழைத் தண்டு போல உடம்பு அலேக்"

ரொம்ப பல வருடங்கள் ஸ்டுடியோ வாசலையே மிதிக்காமல் இருந்த ஜமுனா ராணிக்கு
1987ல்  'நாயகன்' படத்தில் " நான் சிரித்தால் தீபாவளி''பாடலுக்காக இளைய ராஜா மூலம் வாய்ப்பு கிடைத்தது.

ஜமுனா ராணி அந்தக்கால இசை அமைப்பாளர்கள் இசையில் பாடிய அனுபவம் பற்றி சொன்ன விஷயங்கள்:

"1. ஜி. ராம நாத ஐயர் சொல்கிற சங்கதிகள் பாடுகிறவர் குரலில் வந்தே தீரவேண்டும்.
 அந்த சங்கதிகள் வராமல்
 பின்னணி பாடகரை விடவே மாட்டார்.

2.  மாமா கே.வி.மகாதேவன் மெட்டின் உருவத்தை அழகாக கோடி காட்டி விடுவார்.
" உன் கற்பனைக்கு ஏற்றவாறு உணர்ச்சி,பாவத்துடன் பாடி ,
தேவையான இடத்தில்
சங்கதிகள் நீயே போட்டுக்கொள் " என்று பாடுபவருக்கு முழு சுதந்திரம் கொடுக்கக்கூடியவர்.

3. விஸ்வநாதன் -ராமமூர்த்தி  எப்படி சொல்லிக்கொடுக்கிரார்களோ அப்படியே தான் அச்சர சுத்தமாக பாடியே தீரவேண்டும்.
பாட்டின் ஒவ்வொரு சொல்லும்
தெளிவாக ஒலிக்கவேண்டும்.
இதில் இசை அமைக்கும்  இருவருமே
கவனமாக இருப்பார்கள்.
அப்படிப் பாடலைன்னா
ஒலிப்பதிவுக்கூடத்திலேயே
பாடுபவரின் மானம் கப்பலேறிவிடும்."

பாடத்தெரியாம ப்ளேபேக் சிங்கர்னு  சொல்லிக்கிட்டு
ஏன் பாட வர்றீங்க''
 - இப்படி எம்.எஸ். வி கேட்டு விடுவார்.
அதனால் பயந்து கொண்டே தான் பாடுவோம்."

https://m.facebook.com/story.php?story_fbid=2715146355365480&id=100006104256328

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_291.html

May 25, 2020

பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்

சென்ற ஆண்டு இதே நாளில்
ரவிக்குமார் பாராளுமன்ற வேட்பாளராக
வெற்றி பெற்றதற்கு  வாழ்த்து சொன்னேன்.

“ராஜநாயஹமா? எவ்வளவு பேருக்கு எப்படியெல்லாம் அந்த காலத்தில் உதவி செய்தவர் நீங்கள்” என்று நினைவு கூர்ந்தார்.

புதுவையில் 1989,90ல் நான் இருந்த போது  சினேகிதமானவர் ரவிக்குமார்.

பாராளுமன்ற உறுப்பினராக அவர்
 சீரிய பணியாற்ற மனமார வாழ்த்தினேன்.

சில நாட்களுக்கு முன்பு ரவிக்குமார் பதிவொன்றில் நான் பின்னூட்டம் இட்ட போது பதிலாக எழுதினார் 'உங்களை நான் சந்தித்தே முப்பது வருடம் ஆகி விட்டதே'

ஆமாம். காலம் காலமாக
வருடம் ஓடிக் கொண்டு இருக்கிறது.

இந்து தமிழ் திசையில் அவர் 20ம் தேதி எழுதிய அயோத்தி தாச பண்டிதரின் சாதியற்ற பௌத்தம் கட்டுரை இப்போது படிக்க கிடைத்தது.

http://rprajanayahem.blogspot.com/2017/10/to.html

https://rprajanayahem.blogspot.com/2012/08/blog-post.html

https://rprajanayahem.blogspot.com/2012/11/m.html

https://rprajanayahem.blogspot.com/2008/07/ponvandu.html

http://rprajanayahem.blogspot.com/2008/06/blog-post_09.html

http://rprajanayahem.blogspot.com/2008/10/blog-post_3967.html

May 24, 2020

எம். வி. வெங்கட்ராம் 'காதுகள்' நாவலில்

பணம் இருந்த போது ஒரு வகைத் துன்பம்.
பணம் இல்லாத போது வேறு வகைத் துன்பம்.               

வருகிற துன்பம் சந்தடி செய்யாமல் வருவதில்லை. பெரிய கோஷத்துடன் பிரமாதமாய்
 விளம்பரம்  செய்து கொண்டு வரும்.
 ஊரில் நிமிர முடியாத படி
தலையில் ஓங்கிக் குட்டும்.

 சேர்ந்தாற் போல் சில ஆண்டுகள்
நான் நிம்மதியாக இருந்ததாய்க் கூற முடியுமா?

மனிதனைப் புழுவாய் நெளியவும் துடிக்கவும் வைக்க வறுமை ஒன்று போதாதா?

அது போதாது என்று
 புலன்களையும் மனத்தையும் குழப்பும்
இந்த மர்மமான தாக்குதல்.

- எம். வி. வெங்கட்ராம் 'காதுகள்'  நாவலில்.

May 23, 2020

Khushwant Singh ''s Farewell to The Illustrated Weekly

Khushwant Singh ''s farewell to The Illustrated Weekly

ஒன்பது வருடங்கள். 1969 ஜுன் துவங்கி 1978 ஜுலை வரை.
அன்றைய பம்பாயில் ஆங்கில வார பத்திரிக்கையின் ஆசிரியராக கொடி கட்டினார் என்று சொன்னால்
அது சாதாரண வார்த்தை.

இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி பத்திரிக்கையின் சர்க்குலேசன் அறுபத்தைந்தாயிரம் என்று இருந்ததை நான்கு லட்சம் பிரதியாக உயர்த்திய சாதனை அவருடையது.

அந்த ஜுலை மாத கடைசி நாளில் சுமுகமாக ஓய்வு பெறுவதாகத் தான் இருந்தார். ஆனால் ஒரு வாரம் முன்னதாக 25ம் தேதி திடீரென்று வெளியேறும் நிர்ப்பந்தம்.
He was abruptly asked to leave 'with immediate effect'

ஆசிரியர் அறையில் அமர்ந்திருந்தவர் நாற்காலியில் இருந்து அமைதியாக எழுந்தார். தன் குடையை எடுத்துக் கொண்டார். அவருடைய அலுவலக ஊழியரிடம்
 ஒரு வார்த்தையும் பேசாமல்,
டைம்ஸ் ஆஃப் இண்டியா கட்டடத்தில்
இருந்து வெளியேறி விட்டார்.
ஒன்பது வருடங்களாக உழைத்த அலுவலகம்.
He was fired.

ஒரு Farewell கட்டுரை அடுத்த வார பிரசாரத்திற்காக எழுதியிருந்தார். அது பிரசுரிக்கப்படவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை.
The new edition was installed the same day, and ordered by The Illustrated Weekly's management to kill the 'Farewell' column of Khushwant Singh.

Discourtesy.

குஷ்வந்த் தன் சுயசரிதையில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி கால அனுபவங்களுக்காக
ஐம்பது பக்கங்கள் ஒதுக்கியிருக்கிறார்.

பத்திரிக்கை துறையில் உள்ள அத்தனை பேரும் அவசியம் படிக்க வேண்டிய பக்கங்கள் அவை.

எவ்வளவோ சிறந்த பத்திரிக்கையாளர்களை துச்சமாக நடத்தி அந்த ஜெயின் முதலாளித்துவம் விரட்டியிருக்கிறது.

குஷ்வந்த் சிங் உடனடியாக நினைக்கிறார்.
'சரி,அப்போது எழுதிக்கொண்டிருந்த 'டெல்லி' நாவலின் அடுத்த அத்தியாயத்தை
 எழுத ஆரம்பிப்போம்' என்று.

(என்ன ஒரு நாவல் 'டெல்லி')

உருது கவிஞர் அல்லாமா இக்பால் வரிகளை               நினைவு கூர்கிறார்.

In this world, men of faith and self - confidence are like the sun,

They go down on one side to come up
 on the other.

https://m.facebook.com/story.php?story_fbid=2712264555653660&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=2644714052408711&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=2641552762724840&id=100006104256328

.............

May 22, 2020

ஏலி, ஏலி, லேமா சபக்தானி



முந்தைய நாள் மயங்கி விழுந்தவர் காருக்குறிச்சி அருணாச்சலம் மருத்துவ மனையில் அடுத்த நாள் கண் விழித்த போது ஆறாத்துயருடன் வாய் திறந்து சொன்ன வார்த்தைகள்
'எனக்கு இப்படி ஆயிடுச்சே,
நான் புள்ளக்குட்டிக்காரன் '
இது தான் கடைசி வார்த்தை.  கோமாவுக்கு போய் விட்டார். மறு நாள் மறைந்தார்.

க.நா.சு இறந்த பின் அவருடைய மனைவியார் டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய போது        முன்றில் மா. அரங்கநாதனும், சா.கந்தசாமியும் மயிலாப்பூர் சென்று துக்கம் விசாரித்தார்கள்.
"நான் தூங்கிவிடக்கூடாது - தூங்கினால் போய் விடுவேன் " என்றும் தன் அம்மாவின் உருவம் தெரிகிறது என்றும் க. நா. சு கடைசியாகக் கூறினாராம்.

கே.பாலசந்தர் மரணப்படுக்கையில் இருக்கும்போது
தன்னிடம்  சொன்னதாக வசந்த் சொன்னது -
“ வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை என்பது இப்பத்தான்டா புரியுது..”

பாலு மகேந்திரா இறப்பதற்கு கொஞ்ச நேரம் முன்
பாலாவிடம் சொன்னாராம்: “என் கண்ணை கவனிக்கச் சொல்லி டாக்டரிடம் சொல். என் கண்ணில் தான் அடிபட்டிருக்கிறது. கண் தான் எனக்கு முக்கியம்...”

......

May 21, 2020

பழங்கதையாய் கனவாய்



சென்னையில் ஹேமா மாலினியின்
 ரிக்கார்டிங் தியேட்டர்.

 வெண்ணிற ஆடை மூர்த்தி ஹிண்டு ரங்கராஜன் தயாரித்த படத்தில் பெங்களூரில் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசுவதற்கு வந்திருந்தார்.

பேசி முடித்து விட்டு தியேட்டரின் உள்பகுதியிலிருந்து வெளியே வந்தவுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி என்னிடம்
“ என்னை நேராக இருந்து பார்க்காமல் பக்கவாட்டில் இருந்து  பாருங்கள். அப்படிப்பார்க்கும்போது
நான் ‘வாத்து’ போலவே இருப்பேன்”

மேக்கப்பில்லாமல் இருக்கும் மூர்த்தி முகம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.

டப்பிங் தியேட்டரில் இருந்த ஜெயா சக்ரவர்த்தி (ஹேமாமாலினியின் தாயார்)யிடமும் தன்னை பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது
வாத்து போலவே இருப்பதை ஊர்ஜிதமாக வெண்ணிற ஆடை மூர்த்தி மீண்டும் சொன்னார்.

வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமான காலத்திலிருந்து   எவ்வளவு உற்சாகமாக நடித்துக்கொண்டிருந்த நடிகர்.

நாகேஷ்,
தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன்,
கவுண்டமணி, ஒய்.ஜி.மகேந்திரன்,
ஜனகராஜ், விவேக்,
வடிவேலு என்று காமெடி கிங் ஆக
மார்க்கெட்டில் டாப்பில் யார் இருந்தாலும் சளைக்காமல் அவர்களுக்குத் துணையாக
நின்று ‘சள,சள’ என்று, வழ,வழ வசனம் பேசிக்கொண்டிருந்தவர்.

ஹேமாமாலினி தியேட்டருக்கு அப்போது காரில் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் (எம்.என்.ராஜத்தின் கணவர்) வந்தார்.

 அந்த நேரம் அவர் ஒரு படம் எடுத்துக்கொண்டிருந்தார்.

 இந்த படம் இன்னும் அடுத்த சில மாதங்களில் அவருக்கு பெரும் நஷ்ட த்தைக்கொடுத்து அவரையும் நடிகை எம்.என்.ராஜத்தையும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி விட்டது.

என்னையும் சுப்ரமண்ய ஐயரையும் அவர்  காரில் ஏறிக்கொள்ளச்சொன்னார்.

நான் வேலை செய்யும் பட டைரக்டர் பெயரைச் சொன்னபோது “ அப்படி ஒரு டைரக்டரா?” என்றார்.
 அவருக்கு  டைரக்டரைத்தெரியவில்லை.

 இது தான் சினிமா உலகம். இத்தனைக்கும் அந்த டைரக்டர் அப்போது இயக்கி பதினொரு வருடத்தில் நான்கு படங்கள் வெளி வந்திருந்தன.

ஏ.எல்.ராகவனிடம் சொன்னேன். “ நீங்க பாடிய பாடல்களில் மாஸ்டர் பீஸ்
‘எங்கிருந்தாலும் வாழ்க’ தான்.

 'நான் யார் தெரியுமா?' ஜெய்சங்கர் படத்தில்
இவர் ஒரு பாடலில் விசித்திரமாக
 ஆப்பிரிக்க மொழியில் பாடியிருப்பார்.
அந்த பாடலைப்பற்றி கேட்டேன்.

https://www.youtube.com/watch?v=4RnGvxOAd6k

 ஏ.எல் ராகவன் “ஒரு நாள் வீட்டுக்கு வாங்க.”

எஸ்.பாலச்சந்தரின் “அந்த நாள்".
 அதில் ஏ.எல்.ராகவன் நடித்திருப்பதைப்பற்றி நான் சொன்னவுடன் அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
”ஃபீல்டுல யாருக்கும் தெரியாத விஷயமெல்லாம் எப்படி தெரிஞ்சி வச்சிருக்கீங்க”

சுப்ரமண்ய ஐயர் “ எனக்கு இந்தப் பையனப்பார்க்கும்போதெல்லாம் இது தான் பிரமிப்பு.என்சைக்ளோபீடியா.
இந்த வயசுக்கு தெரியாத பல விஷயங்கள் ராஜநாயஹத்துக்குத்தெரிஞ்சிருக்கு”

பாண்டி பஜாரில் காரில் இருந்து இறங்கும்போது ஏ.எல்.ராகவன் வாஞ்சையுடன் “ ராஜநாயஹம், அவசியம் நீங்க எங்க வீட்டுக்கு வரணும்!”

கமலா தியேட்டரில் ராகவன்- ராஜம் தம்பதியரின் சொந்தப்படம் காற்றாடிக்கொண்டிருந்த போது தூரத்தில் அங்கே தியேட்டரில் நின்று கொண்டிருந்த டைரக்டரை ராகவன்  திட்டினார்.

நூல்வேலி படத்தில் வரும் பங்களா
 இவர்கள் சொத்து.
அதை இந்த படத்தயாரிப்பு காரணமாக
இழக்க நேரிட்டது.

ஏ.எல்.ராகவன் தயாரித்த
 அந்த பட த்தில் அஸிஸ்டண்டாக சேர்க்க
 என் பெரியப்பா
 திருச்சி டிஸ்ட்ரிப்யூட்டர் சுகுமார் மூலமாக
 என்னை அழைத்துச்சென்றிருந்தார்.

வீட்டில் நுழையும் போது எம்.என்.ராஜம் மாடியில் துணிகள் காயப்போட்டுக்கொண்டு இருந்தார்.

என் பெரியப்பா காரில் இருந்து இறங்கியவுடன்
மேலே பார்த்து அடையாளம் கண்டு "அம்மா, வணக்கம்மா" என்ற போது சிரித்த முகத்துடன்
 எம். என். ராஜம் பதில் வணக்கம் சொன்னார்.

 ஏ.எல்.ராகவனும் எம்.என்.ராஜமும் கட்டாயம் என்னை தாங்கள் தயாரிக்கும் பட த்தில்
உதவி இயக்குநராக சேர்த்துக்கொள்ள
டைரக்டரிடம் சிபாரிசு செய்வதாக
 முழு மனதோடு தான் சொன்னார்கள்.

ஆனால் டைரக்டர் மறுத்து விட்டார்.

 அதன் பின் தான் ஹிண்டு ரங்கராஜன்
 தயாரித்த படத்தில்
 நான் உதவி இயக்குனரானேன்.

...

May 20, 2020

The poet who stopped writing poetry

Arthur Rimbaud

A life full of sweet stupidities.

One of the first truly dissent voices to emerge in French poetry.

The poet who stopped writing poetry.

19 வயதில் கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன்.

ஆர்தர் ரைம்போ - A White nigger.

"My life was nothing but sweet stupidities "

"Ah! To return to life! To stare at our deformities."

ஆர்தர் ரைம்போ முழங்காலில் புற்று நோயால் 37வயதில் இறந்த பின் தான் அவன் சகோதரி இசபெல் ஒரு உண்மையை அறிய நேர்ந்தது.

 தன் சகோதரன் ஒரு கவிஞன் என்பதை அவள் ரைம்போவின் மரணத்தில் தான் தெரிந்து கொண்டாள்.


ரைம்போ சிறுவனாக இருக்கும்போதே
 ஊர் சுற்றக்கிளம்பிய Boy genius.

An infant Shakespeare.

Baby of the French poets.

உடல் இச்சையை மறுத்த கிறிஸ்துவத்தை வெறுத்தவன். தன் பெற்றோரை வெறுத்தவன்.

“You,my parents, have ruined my life, and your own.”

 

பிரஞ்சு கவிஞன் வெர்லைன் தன் கருவுற்ற மனைவி பாரிசில் தன் தகப்பன் வீட்டுக்கு
சென்ற போது
ரைம்போவை தன்னுடன் வாழ அழைத்தான்.

அப்போது ரைம்போவுக்கு 17வயது.
வெர்லைன் 27 வயது இளைஞன்.
 அதன் பின் இருவரும் காதலர்கள் ஆகி விட்டார்கள்.

 வெர்லைன் தன் மனைவியை திட்ட ஆரம்பித்தான்.

The devastating love affair of Verlaine and Rimbaud...

there were reestablishing of cordial relations and partings with wife Mathilde and Partings and reconciliations with Rimbaud.

சுருக்கமாக சொன்னால் வெர்லைன் தாம்பத்தியம் ஒரு சர்க்கஸ் போல ஆகிவிட்டது.

ஒரு கட்டத்தில் வெர்லைன் துப்பாக்கியால் ரைம்போவை சுட்டு விட்டு ஜெயிலுக்கு போனான்.

ரைம்போவின் Bad Blood

“Does this farce has no end?
My innocence is enough to make me cry.
Life is the farce we all must play.”

"Where we are going? To battle? I am weak!
The others go on ahead..tools...weapons..
give me time."

"Fire! Fire at me! Here! Or I 'll give myself up!
..Cowards! I will kill myself. I'll throw myself beneath the horses hooves! Ah!
I ll get used to it.
That would be the French way, the path of honor! "

Night in Hell
I will tear the veils from every mystery...
mysteries of religion or of nature, death, birth,the future,the past,
cosmogony and nothingness,
I am a master of Phantasmagoria.

இறந்து கிட்டத்தட்ட 80வருடங்களுக்குப் பின் ஆர்தர் ரைம்போ 1968ல் பிரஞ்சு கலகக்கார மாணவர்களால் வழி பாட்டுக்குரிய புரட்சிக்காரனாக ஏற்றி உயர்த்தப் பட்டான்.

ஆர்தர் ரைம்போவாக
லியோனார்டோ டி கேப்ரியோ நடித்து
Total Eclipse என்ற படம் 1995 ல் வெளிவந்திருக்கிறது.
 ரைம்போ-வெர்லைன்
இருவருக்கிடையேயான
வன்மையான உணர்வுப்பூர்வமான
ஓரின உறவைப் பற்றிய படம்.

....


May 19, 2020

எஸ். வி. ரங்காராவ் - Scene Stealer

Scene Stealer


அகில இந்திய அளவிலும் இன்று வரை முதிய கதாபாத்திரங்களில் ஷோபித்தவர் யார் என்று கேட்டால் அதற்கு ஒரே பதில் ரங்காராவ் என்பதாகத்தான் இருக்க முடியும்.

முதியவராக நடித்த சிறந்த நடிகர்களில் முதலிடம் இவருக்கு தான்.
நீண்ட நெடிய காலம் முதியவராக நடித்த ஒரு நடிகர் தன் வாழ் நாளில் அறுபது வயதைப் பார்த்ததேயில்லை என்பது தான் அவருடைய வாழ்வின் அபத்தம்.

 மறைந்த போது  வயது ஐம்பத்தாறு.
அவர் பிறந்த வருடம் 1919 என்பீர்கள் என்றால் ஐம்பத்தைந்து.
1974ம் வருடம் ஜூலை 18ம் தேதி ரங்காராவ் இறந்தார்.

அந்த கால குணச்சித்திர நடிகர்கள் ரெங்காராவ், பாலையா,
எஸ்.வி.சுப்பையா மூவரும் முதுமையை காணாமல் மறைந்தார்கள்.

இவர்களுக்கு நல்ல சீனியர் எம்.ஆர்.ராதா மட்டும் முதுமையை பார்த்து விட்டு 72 வயதில் இறந்தார்.

 பாலையாவுக்கு 58 வயது.
சுப்பையாவுக்கு 57 வயது.

வினோதம் என்னவென்றால் படங்களில் பெரிசுகளாக இவர்கள் நடித்த காலத்தில்
இளம் வாலிபர்களாக நடித்த கதாநாயகர்கள் எல்லோரும்
முதுமையைப்பார்த்து விட்டுத்தான் இறந்தார்கள்.
52 வயதில் இறந்த முத்துராமன் தவிர.

உயர்ந்து வளர்ந்த ரங்காராவின் தேக அமைப்பு, அந்த அழகான வழுக்கை தலை, அந்த விஷேச மூக்கு இவையெல்லாம் ரங்காராவுக்கு இயல்பிலேயே ஒரு தனித்தன்மையை அளித்திருந்தது.

நடிப்பு என்பதே மிகை சார்ந்த விஷயம் என்றிருந்த ஒரு காலத்தில் மிக இயல்பாக நடிக்க இவரை எப்படி அனுமதித்திருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.

சீர் மிக வாழ்வது என்று ஒரு வார்த்தை போல சீர் மிக நடிப்பு நிகழ்த்தி காட்டியவர்.

ஒரு தெலுங்கு நடிகர் தமிழிலும் சாதிக்க முடிந்திருக்கிறது. இன்னொருவர் தெலுங்கு நடிகை சாவித்திரி.

கமல் ஹாசன் சொன்னார் ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம்.’’

தெலுங்கு,தமிழ் படங்களில் நடித்தவர்.
தெலுங்கு மக்கள் இவருக்கு 'விஸ்வநாத சக்ரவர்த்தி ' என பட்டம் அளித்தார்கள்.
அந்தப் பட்டம் தமிழ் பட டைட்டிலில் யாரும் பார்த்திருக்க முடியாது.
அந்தக்காலத்தில் பட்டதாரி நடிகர்.
எஸ்.வி.ரங்காராவ் B.Sc.

நாடகமேடையில் ஆங்கில நாடகங்களில் நடித்த Shakespearean Actor.

’ரங்காராவ் ஷேக்ஸ்பியரியன் ஆக்டர்’ என்பதை அடையார் ஃப்ல்ம் இன்ஸ்டிடியூட்டில் ’லீனா, ரீனா, மீனா’ ஷூட்டிங்கின் போது,
வி.எஸ்.ராகவன் கண்ணை விரித்து அழுத்தமாக என்னிடம் தெரிவித்தார். டி.வி பேட்டிகளில் கூட சொல்லியிருக்கிறார்.

நாடகங்களில் நடித்திருந்தாலும்,
திரைப் படங்களில் புராண கதா பாத்திரங்களில் நடித்திருந்தாலும்
 நாடக செயற்கைத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக நடித்து அளப்பரிய
சாதனை செய்தார்.

தெலுங்கு நடிகர் தமிழ் படங்களில் செய்த சாதனை அசாதாரணமானது.
ஆஜானுபாகுவான ரங்காராவ் ஒரு காட்சியில் இருந்தால் இவர் தான்
Scene Stealer. ஏனையநடிகர்கள் யாராயிருந்தாலும் தூக்கி சாப்பிட்டு விடுவார்.


‘கற்பகம்’ படத்தில் ஜெமினியின் நடிப்பை சிலாகித்து ரங்காராவ், “தம்புடு, you know I am a scene stealer. ஆனால் கற்பகத்தில் you have excelled me “ என்றாராம்.

நானும் ஒரு பெண்(1963) படப் பிடிப்பின் க்ளைமாக்ஸ் ஷூட்டிங்குக்கு எம்.ஆர் .ராதா சரியான
நேரத்தில் வந்து காத்திருந்து பொறுமை இழக்கின்ற நிலை.
ரங்காராவ் ரொம்ப தாமதமாக
உள்ளே நுழையும்போது ராதா அவர் பாணியிலேயே ரங்காராவ் காதில் விழும்படியே
கமென்ட் அடித்திருக்கிறார்
 " கெட்டவனா நடிக்கிறவன் ஒழுங்கா கரெக்டா நடந்துக்கிறான். நல்லவனா நடிக்கிறவன பாரு.
ஒரு ஒழுங்கு இல்ல.படாத பாடு படுத்துறான்."

ரங்கா ராவ் ரொம்ப  மனம் புண்பட்டு இயக்குனரிடம்
''இன்றைக்கு  விடிய விடிய எவ்வளவு நேரம் ஆனாலும் சரி. ஷூட்டிங் வைத்து க்ளைமாக்ஸ்
காட்சியை முடித்துக்கொள்ளுங்கள் .
எனக்கு உடம்பு சரியில்லை.ஆனால்   அது பற்றி கவலையில்லை." என்று ரோசத்தோடு சொல்லி அதன் படியே நடித்துக்கொடுத்தாராம்.

நானும் ஒரு பெண்ணில் மரணப் படுக்கையில் இருக்கும் ரங்காராவை " அத்தான்... ஒரே ஒரு
கையெழுத்து போடு அத்தான்...."
- ராதா படாத பாடு படுத்துவார்.



 எந்தப்படத்திலாவது சந்திர பாபு செட்டில் இருந்தால் எப்போதும் ரெங்காராவிடம் அத்து மீறி விளையாடுவாராம்.
இவரால் தாங்கமுடியாத அளவுக்கு கலாய்ப்பார்.
சகிக்க முடியாத அளவுக்கு பாபுவின்  நடவடிக்கை  இருக்கும் போது ரங்காராவ் ரொம்பவே
மூட் அவுட் ஆகிவிடுவாராம்.

ரங்காராவ் ’ஆதி பராசக்தி’ படத்தில் ஜெயலலிதாவுடன் நடிக்கும் காட்சி ஷூட்டிங் போது"கட் கட் " என கேமராவை நிறுத்தச் சொல்லி
கே.எஸ்.ஜி "என்னய்யா,எருமை மாடு மாதிரி நிக்கிறியேய்யா " என ரங்காராவை   திட்டினாராம். செட்டில் அப்போது இருந்தவர்களுக்கு இவ்வளவு
பெரிய நடிகரைப்பார்த்து  இப்படி சொல்லுகிறாரே என்று என்னமோ போலாகி விட்டதாம்.

பக்த பிரகலாதா (1967) படத்தில்  ரண்யகசிபுவாக
ரங்கா ராவ் நடித்தார்.
ஷூட்டிங்குக்கு ரங்காராவ் சரியாக
ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர்
ஏ .வி.மெய்யப்ப செட்டியார் காதுக்கு தகவல் போனது.
'முழுக்க ஷூட்டிங்கில் நடிக்க  மறுக்கிறார். ஒரு நாளில் மூன்று நான்கு மணி நேரம் ஆகிவிட்டால்
கிளம்பி விடுகிறார்.'
செட்டியார் கோபமாகி விட்டார்."நான் இன்று
செட்டுக்கு வருகிறேன்.
ரங்காராவை பார்த்துக் கொள்கிறேன்"

ஷூட்டிங் ஆரம்பித்து சிலமணி நேரத்தில்
 செட்டியார் ஆஜர்.
ரங்காராவுக்கு சூட்சுமம் புரிந்து விட்டது.
கம்ப்ளைன்ட் ஆகியிருக்கிறது.
ஷாட் ப்ரேக்கில்  அவரே செட்டியாரிடம் வந்து அவர் அணிந்திருந்த கவச ஆபரணங்களைஎல்லாம் கழற்றி விட்டு சொன்னார்
" மிஸ்டர்  செட்டியார், இந்த நகைகளை பிடியுங்கள் "
செட்டியார் கையில் வாங்கியிருக்கிறார்.
சரியான கனம்.

 "இவ்வளவு கனமான நகைகளைப் போட்டுக்கொண்டு
 புராண வசனமும் பேசி
எவ்வளவு நேரம் நான் உழைக்க  முடியும் சொல்லுங்கள்.நான் வீட்டுக்குப் போனபின்னும்
இந்த பாரம் சுமந்த வேதனை என்னை விட்டு நீங்காது "

செட்டியார் கோபம் பறந்து விட்டது.
பரிவுடன் சொன்னாராம்  "நீங்கள்
 செய்தது சரிதான் "
.

ரங்காராவ் நடித்த காட்சிகள் மிகவும் விஷேசமானவை. படிக்காத மேதையில் முதல் முதலாக படம்பிடிக்கப்பட்ட காட்சி ரொம்ப பிரபலமான நெஞ்சை உருக்கும் காட்சி. ரெங்காராவ் வேலைக்காரன் சிவாஜியை வீட்டை விட்டு வெளியே போய் விடும்படி சொல்லும் காட்சி. “ மாமா… நிஜமாவே போகச்சொல்றீங்களா மாமா!’’

“இந்தக்காட்சியைத் தான் முதலில் படமாக்குவது என்று முடிவு செய்து விட்டோம். ம்ம்.. எழுது வசனம்….” என்று தயாரிப்பாளர் என்.கிருஷ்ணசுவாமி சொன்னவுடன் கதையை முழுக்க அசை போட்டு விட்ட வசனகர்த்தா கே.எஸ்.ஜி. பதறி, தழுதழுத்தக்குரலில் சொன்ன வார்த்தைகள்
 “ குடல புடுங்கி வக்க சொல்றீங்களே முதலாளி…”

தேவதாஸ், மிஸ்ஸியம்மா ஆரம்பித்து
'நானும் ஒரு பெண் 'மாமனார் -மருமகள் உறவு'.
விஜயகுமாரியின் மாமனாராக.

'கற்பகம் ' ஜெமினி கணேஷின் மாமனாராக.

'அப்பா ' ரோல் திரைப் படங்களில் ரொம்ப மலிவானது. அதை மிகவும் உயர்த்திக் காட்டியவர் எஸ்.வி.ரங்காராவ்.
'கண் கண்ட தெய்வம் ' படத்தில் சுப்பையாவின் 'அண்ணன் ' ரோல்.

அவர் செய்த புராண பாத்திரங்கள்.

வில்லனாக 'நம் நாடு ' படத்தில் 'பக்த பிரகலாதா'வில்.

'மாயா பஜாரில் ' கடோத்கஜனாக "கல்யாண சமையல் சாதம்,"

சபாஷ் மீனா, எங்க வீட்டு பிள்ளை, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் அவருடைய இயல்பான நகைச்சுவை.

தெலுங்கில் இவர் இயக்கிய இரண்டு படங்கள் நந்தி விருது பெற்றிருக்கின்றன. தெலுங்கு படங்கள் சில இயக்கியிருக்கிறார்.
இந்தோனேசியாவில் ஒரு திரைப்படவிழாவில் இவர் 'நர்த்தன சாலா'
என்ற படத்தில் கீசகனாக நடித்ததற்காக ஒரு விருது வாங்கியிருக்கிறார்.

மற்ற படி இந்திய அரசாங்க கெளரவம் எதுவும் இவருக்கு கிடைத்ததில்லை.
உலகத்தின் மிகச் சிறந்த அபூர்வ நடிகர்களில் ஒருவர் எஸ்.வி.ரங்காராவ்.

டி.வி சேனல்களில் எவ்வளவோ நடிகர்களை
பலரும் மிமிக்ரி செய்வதைப்
பார்க்கமுடியும்.
மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஒருவர் கூட இதுவரை
நடிகர் ரங்காராவை இமிடேட் செய்ததே கிடையாது.
ரங்காராவின் தனித்துவத்திற்கு இது கூட உதாரணம்.
 அவ்வளவு நுட்பமானது அவரது நடிப்பின் பரிமாணங்கள்.

முதியவராக நடித்தவர் என்றாலும்
இவரை ஒரு வட்டத்துக்குள்
அடைத்து Brand செய்துவிட முடியாது.
ஏனென்றால் அவர் எஸ்.வி.ரங்காராவ்!

.........

ஸ்போக்கன் இங்க்ளிஷ் டீச்சர்


என் அப்பா மறைவுக்கு பின் இரண்டு மாதத்தில் எனக்கு ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை கிடைத்தது. ஒரு காண்ட்ராக்ட் மூலமாக. ஸ்போக்கன் இங்க்லீஷ் டீச்சராக. ஆறு மாதமாக அப்போது வேலை இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.
அந்த நிலையில் இந்த வேலை.

குழந்தைகள் என் துயரங்களின்
நிழலை விரட்டியடித்தார்கள்.
மன நிம்மதி என்பதை நம்புபவன் அல்ல.
ஆனால் ஒரு ஆன்மீக அனுபவமாக பள்ளியில்
என் அனுபவம்.

என் மீது இத்தனை அன்பை யாரும் வாழ்நாளில் காட்டியதில்லை.

2013 -2014 எனக்கு விசேஷமான கால கட்டம்.
குழந்தைகளின் பெற்றோர் என்னை தேடி வந்து பிரமிப்போடு பேசினார்கள்.

மிக சுருக்கமாக இதை எழுத வேண்டியிருக்கிறது.
என்னேரமும் ’ஸ்போக்கன் சார்’ பற்றி தான்
வீட்டில் பேச்சாம்.
சொல்லி வைத்த மாதிரி நூறு பெற்றோர்
இப்படி சொன்னார்கள்.

நான் பாடமெடுக்காத வகுப்புக்குழந்தைகள் கூட என்னை நேசித்தார்கள்.

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளில்
பாடல்கள் பாடினேன்.

இண்டெர்னெட்டில் என் புகைப்படத்தை எடுத்து ஒரு ஒன்பதாம் வகுப்பு சிறுமி என்னைப்பற்றி எழுதி லேமினேட் செய்து நோட்டிஸ் போர்டில் போட்டதை ஆசிரியர்கள் என்னிடம் சொன்னார்கள்.

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அபூர்வமாக ஆசிரியர்
வராத போது நான் வகுப்பெடுத்திருக்கிறேன்.

பள்ளியில் கூட்டிப்பெருக்கும் பெண்மணியொருவர் “குழந்தைகள் உங்களைப் பார்த்தவுடன் எவ்வளவு சந்தோஷப்படுகிறார்கள். இப்படி நான் பார்த்ததேயில்லை சார்.
நீங்கள் வெள்ளிக்கிழமை பாடும்போது
எனக்கு அழுகையாக வருகிறது சார்.”

மார்ச் ஒன்றாம் தேதி பள்ளிக்கு போயிருந்த போது காண்ட்ராக்ட் ஃப்ராடுகள் எனக்கு இனி அங்கு வேலையில்லை என்ற தகவலை தந்த போது கண்ணில் பட்ட பள்ளி மாணவ மாணவியரிடம் பூடகமாக இனி நான் பள்ளிக்கு வரமாட்டேன் என்று நான் சொல்லி விட்டு, உடைந்து நான் கலங்கி விடுவதை தவிர்த்து அவசரமாக பள்ளியை விட்டு வெளியேற முயற்சிக்கும் போது குழந்தைகள்
கண் கலங்கி என் காலில் விழுகிறார்கள்.

 பதினொன்றாம் வகுப்பு மாணவிகள்.
 ஒன்பதாம் வகுப்பு குழந்தைகள் சிலர்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன்
– இது தான் பள்ளியில் என்னுடைய கடைசி நாள் என்று அறிந்து வாய் விட்டு அழ ஆரம்பித்தவன் இரண்டு மணி நேரமாக அழுது கொண்டே தான் இருந்திருக்கிறான்.

ஜூன் மாதம் ஆரம்பித்த வேலை பிப்ரவரியோடு முடிவுக்கு வந்து விட்டதை மார்ச் ஒன்றாம் தேதி தான் நானே அறிய வந்தேன்.

எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால்
 ஜனவரி, பிப்ரவரி மாத சம்பளத்தை
 காண்ட்ராக்ட் ஃப்ராடுகளிடமிருந்து
என்னால் வாங்கவே முடியாமல் போய் விட்டது.

மீண்டும் ஜூன் மாதம் மற்றொரு தனியார் பள்ளியில் நேரடியாக வேலைக்கு சேர்ந்தேன். ஸ்போக்கன் இங்க்ளிஷ் டீச்சராக.

 மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ. இரண்டு பள்ளிகளுக்கும் எல்லா வகுப்பிற்கும் கம்யூனிகேட்டிவ் இங்க்ளிஷ் ட்ரைனர்.

ஜூன் 12ம் தேதி முதல் நாளே என் தலையில் இடியாக ஒரு செய்தி மொபைலில் வருகிறது.
அந்த துயரத்தை தாங்கிக்கொண்டே தான் அன்றும் மறு நாள் மெட்ரிகுலேஷன் ஸ்கூலிலும் வகுப்பறைகளில் “ When I was just a child, I asked my mama what will I be?”  பாடினேன்.

ஆசிரியர்கள் சொல்கிறார்கள் ‘ அது எப்படி சார்? உங்களுக்கு மட்டும் பள்ளிக்கூடத்தில் இவ்வளவு Fans.’

பிசிக்ஸ் மேடம் வகுப்பில் “ அடுத்த பீரியட் நான் வர மாட்டேன். ராஜநாயஹம் சார் தான் வருவார்” என்று ப்ளஸ் ஒன் வகுப்பில் சொன்னவுடன் மாணவர்கள் மாணவிகள் பரவசமாகி
எழுந்து ஆடினார்களாம்.
பிஸிக்ஸ் மேடம் “ என்ன மாயம் சார் இது?” என்று என்னிடமே வந்து சொல்கிறார்.

மாலை பள்ளி விட்டு செல்லும்போது “good-bye" சொல்லிக்கொண்டிருந்த பிள்ளைகள் என்னால் எல்லோரிடமும் “Adieu" சொல்ல ஆரம்பிக்கிறார்கள். என்னிடம் “Adieu" சொல்ல போட்டி போடும் செல்லங்கள்.

இந்த பள்ளியின் கூட்டிப்பெருக்கும் ஆயாவும்
 “ ஏன் சார்? இது புதுசா நான் பாக்கறேன். பதினஞ்சு வருசமா இங்கே கூட்டி பெருக்கிறேன். இப்ப தான் அதிசயமாருக்கு..  குழந்தைகள் எல்லோருமே உங்கள பாத்தவுடனே இப்படி சந்தோசப்படுறாங்களே”

குழந்தைகளோடு இருப்பது எவ்வளவு சுகமோ, அந்த அளவுக்கு நிர்வாக கடுமை கசப்பானது.

இங்கேயும் நிர்வாகம் திடீரென்று பிப்ரவரியுடன் எனக்கு வேலை முடிகிறது என்கிறார்கள்.

அந்த 2015ம் வருடம் நான் முன்னர் வேலை பார்த்த பள்ளியின் மாணவி ப்ளஸ் டூவில்
மாநிலத்தில் முதல் ரேங்க்.

அவளுடைய வீட்டில் பெற்றோர் சொல்கிறார்கள்
“ இவ ப்ளஸ் ஒன் படிக்கும்போது தான் இங்க்ளீஷில கூச்சமில்லாம பேச ஆரம்பிச்சா சார். ஒங்களால தான்.”

அவளுமே ‘நாங்க தான் உங்க கிட்ட படிச்சதுக்கு பெருமைப்படணும். ப்ளஸ் டூவில நாங்க எல்லோருமே உங்கள எப்பவும்
 நெனச்சிக்கிட்டே இருப்போம் சார்”

மனைவிக்கு ஆபரேசன், எனக்கு கண் ஆபரேசன் எல்லாம் முடிந்து ஆகஸ்டில்
வேலைக்கு சேர்கிறேன்.

ஆகஸ்ட் கடைசி நாள் மாலை.
ஒரு ஏழாவது வகுப்பு மாணவனின் தாய்
என்னிடம் அந்த பையனை அழைத்து வந்து
பேச ஆரம்பிக்கிறார்.

“என்னேரமும் வீட்டில் உங்களைப்பற்றியே தான் பேசிக்கொண்டிருக்கிறான். எல்.கே.ஜியில் இருந்து இப்படி இவனை நான் பார்த்ததேயில்லை. இவனோட அப்பாவும் ஆச்சரியப்படுறாரு.
உங்கள மாதிரி ஒரு வாத்தியார் கிடைக்கிறது அபூர்வம் சார்.
உங்களோட ஆசி இவனுக்கு எப்பவும் வேணும் சார்.”
அப்போது உதவி பிரின்ஸிபால் என்னை கூப்பிட்டு “ சார், நிர்வாகத்தில ஸ்போக்கன் இங்க்ளிஷிற்கு இந்த வருடம் பட்ஜெட் இல்லன்னு சொல்லிட்டாங்க சார். நாளையில் இருந்து உங்களுக்கு பள்ளியில் வேல இல்லன்னு மேடம் சொல்லச் சொல்லிருக்காங்க சார்.”

நிர்வாகியோ, பிரின்ஸிபாலோ என்னை
சந்திக்கும் தர்ம சங்கடத்தை தவிர்த்தார்கள்.

செப்டம்பர் 13ந்தேதி குடும்பத்தோடு
சென்னைக்கு குடி பெயர்ந்தேன்.

இப்போதும் பள்ளிக்குழந்தைகள் பலரும்
“ We miss you a lot sir, please come back” என்று அடிக்கடி ஃபேஸ்புக்கில் மெஸ்ஸேஜ் போடுகிறார்கள்.
போனில் கூட என்னிடம் அன்பை பொழிகிறார்கள்.

....

May 18, 2020

Blog hits today exceeds Thirty Lakhs

rprajanayahem.blogspot.com

Hits today exceeds Thirty Lakhs

என்னுடைய BLOG hits
இன்று இப்போது

30,01210

Corona Lockdown

The wait doesn't seem to end

Beckett's 'Waiting for Godat'

Nothing to be done.

You are on Earth. There is no cure for that.

The tears of the World are a constant quantity.

......

The importance of washing hands

"Out, damned spot! Out, I say

Will these hands never be clean?
All the perfumes of Arabia will not sweeten this hand"

Feeling like Lady Macbeth
with all the frequent and Compulsive handwashing.
The state of loneliness.
Fighting against an irresistible fate.

Out damned Corona, Out, I say

Out aggravation, Out contamination

Washing hands are caring hands.

....

Present fears are less than horrible imaginings.
Come what may,
Time and the hour runs through the roughest day.
- Macbeth

..

May 17, 2020

எம். வி. வியும் லா. ச. ராமாமிருதமும்



தி. ஜானகிராமனை விட
தான் மூன்று வயது மூத்தவர் என்று
எம். வி. வெங்கட்ராம் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

ஜானகிராமனிடம் காணப்படும் சொற்சிக்கனம்    எழுத்தில் இவரிடம் கிடையாது. நிறைய வார்த்தைகளை பயன்படுத்தி எழுதுவார்.

தேனீ என்ற பத்திரிகை நடத்துவதில் முழுக்கவனம் செலுத்தியதில் ஒரு வருடத்தில் எம். வி. வியின் பட்டு நூல் தொழில் பெரும் சரிவை காணும் படியானது.

அவருக்கு நேர்ந்த Hearing hallucination காரணமாக அவர் பட்ட பாடு 'காதுகள்' நாவலுக்கு உந்து சக்தி.

.....

காதுகள் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்த போது லா. ச. ரா உற்சாகமாக அவரைப் பற்றி இந்தியா டுடேயில் எழுதியிருந்தார்.
 எழுதியவர் மகா புருஷர் என்றால் எழுதப்பட்டவர் மகத்தானவர். இருவரையும் கௌரவப்படுத்திய எழுத்து. அதன் ஒவ்வொரு வரியும்
 எனக்கு மனப்பாடம்.

வெங்கட்ராம் கும்பகோணம் வீட்டில் சில தினங்கள் லா.ச.ரா தங்கியிருந்திருக்கிறார்.

எம். வி. வெங்கட்ராம் பற்றி லா. ச. ரா வின் வர்ணனை. பட்டுத்துணி போட்டு வாசித்தாற் போல, அப்படியா குரல் ம்ருது என்பார்.

எம். வி. வியுடன் கும்பகோணத்தின் ஐக்கிய பாவம். அதற்காகவே வாழலாம் என்று ஏங்கி எழுதியுள்ளார்.

முந்தைய வருடம் எம். வி. வியை கோவையில் சந்தித்த நிகழ்வை குறிப்பிடும் போது லா. ச. ரா
'தளர்ந்திருக்கிறார் ' (நாங்கள் வேறு எப்படி இருக்க முடியும்) என்று ப்ராக்கெட் போட்டதை 26 வருடங்களுக்கு முன் நல்ல இளமையில் நான் படித்த போதே, முதுமையின் சோகம் பற்றிய கனம் காரணமாக கண் கலங்கியது.

பரிசு பெற்ற எம். வி. வி ' காதுகள் ' நாவல் பற்றியும் அதே இந்தியா டுடே இதழில் அமர்க்களமான ஒரு விமர்சனம் எழுதியிருந்தார் லா. ச. ரா.

'எம். வி. வெங்கட்ராம் நடை பதட்டமற்றது.
ஆனால் அழுத்தம் கொண்டது. '
- லா. ச. ரா

காதுகள் நாவலில் முன்னுரை தஞ்சை ப்ரகாஷ்.

..

1. எப்போதோ குமுதத்தில் வந்த படம்.
எம். வி. வியுடன் தஞ்சை ப்ரகாஷ், தேனுகா.
தேனுகாவை பார்க்க க்ளிக் செய்ய வேண்டும். வலது ஓரத்தில் சிரிக்கிறார்.

2. இந்தியா டுடேயில் எம். வி. வி, காதுகள் நாவல் பற்றியெல்லாம் லா. ச. ராமாமிர்தம் எழுதிய பக்கங்கள்

May 16, 2020

Visual Treat



தேவதச்சனின் பொன் துகள்

தேவதச்சனின் துளிகள் தெறிக்கும் போதெல்லாம்
’ஆடு கீரையை மேய்வது போல இவர் வாழ்வின் வண்ண கணங்களை  மேய்பவர்’ என்று தோன்றும்.

 சேதாரமின்றி பொன்னை நகையாக்கும் பக்குவம்  தேவதச்சனுக்கு கைவந்திருக்கிறது.

”காற்று ஒரு போதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத்தூக்கிக்கொண்டு அலைகின்றன

வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக்கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை!”

...........

நெஞ்சில் ஊஞ்சலாடும் சிலவரிகள்.

முழுக்க காட்சியாய் விரிகின்றது.

ஐந்தாறு வருடங்களுக்கு முன் படித்தது.

போதனை இல்லை. பெரிய தத்துவமில்லை. மூளையை வருத்தும் சிக்கல் இல்லை.
அரசியல் இல்லை. எகத்தாளம் இல்லை. புத்திசாலித்தனம் துறுத்தவில்லை. வாசகன் சிந்திக்க வேண்டியதில்லை. கற்பனைக்கு வேலையிலலை. ரொம்ப எளிமை.
புதிர் கிடையாது.
ஆனாலும் மனதில் மனப்பாடம் செய்யாமலே ’பச்சக்’ என்று ஒட்டிக்கொண்டது.

எஸ்.வி.வேணுகோபாலன் எழுதியது.

தலைப்பு ‘விட்டுப்பிடித்தல்’

“ஒற்றைப் பனை
ஓங்கிய மலைத்தொடர்
பசேல் என்று வயல்கள்
எருமைகள் நீந்தும் சிலீர் தண்ணீர்க் குளம்
............எல்லாம்
அழைத்தும்
கோபம் குறையாத
குழந்தை மாதிரி
இரைந்த படி  ஓடிக்கொண்டிருக்கிறது ரயில்
‘போ போ
நாளைக்கும்
இந்த வழி தானே
வரணும் நீ?’
என்றவாறு குடிசைக்குத்
திரும்புகிறாள்
ஆடு மேய்க்கும் சிறுமி”

......

May 14, 2020

காருக்குறிச்சி அருணாசலம் மரணம் நிகழ்ந்த விதம்

காருக்குறிச்சிக்கு ஆருடக்குறிப்பு மூலம்
நேரம் சரியில்லை என தெரிந்ததால்
சில நாட்களுக்கு முன்பு திருநள்ளாறு
சென்று விட்டு வந்திருக்கிறார்.
மதுரையில் மெடிக்கல் செக் அப் செய்த பின் டயட் கன்ட்ரோல். இரவில் கோதுமை கஞ்சி.
அன்று ஞாயிற்றுக்கிழமை.
காருக்குறிச்சி அருணாசலம் கோவில்பட்டி பங்களாவில் மதிய உணவு சாப்பிடுகிறார்.
அவருடைய முதல் மனைவி ராமலட்சுமி தான் வீட்டின் பட்டத்தரசி.
தன்னுடைய ஓரகத்திகளின் பன்னிரெண்டு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியவர். சமையல் பக்குவத்திலிருந்து கணவருக்கு
முகம் கோணாமல் பறிமாறுவது வரை
பார்த்து பார்த்து செய்பவர்.
சாப்பிட்டு முடித்தவுடன் திருநெல்வேலி கிளம்புகிறார்.
அங்கே ஒரு கச்சேரி. அது முடிந்தவுடன்
கலெக்டரை சந்திக்க வேண்டியிருக்கிறது.
காருக்குறிச்சி 'நாதஸ்வரம் குரு குலம்' நடத்தும் திட்டம் வைத்திருந்தார்.
அதற்கு திருநெல்வேலி கலெக்டர் நிலம் கடலையூர் சாலையில் ஒதுக்கித்தர இசைந்திருந்தார்.
அவரையும் சந்திக்க வேண்டும்.
கச்சேரி முடித்து விட்டு கலெக்டரை சந்திக்கிறார்.
இரவு ஏழு மணி. பேசுக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்திருக்கிறார்.
திருநெல்வேலி ஹை கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார்.
அவருடன் உப நாயனம் வாசிப்பவர், அவர் பெயரும் அருணாசலம் தான். அந்த அருணாசலம் உடனேயே கோவில்பட்டி வருகிறார்.
அப்போது அவருடைய மனைவியர், புத்திரங்கள் அனைவரும் தியேட்டரில் 'அல்லி' படம் பார்த்து விட்டு அப்போது தான் வீடு திரும்பியிருக்கிறார்கள்.
உப நாயனம் அருணாசலம் தகவல் சொல்கிறார்.
குடும்பம் திருநெல்வேலி பயணம்.
மறு நாள் காருக்குறிச்சிக்கு நினைவு திரும்பி
கண் விழித்து பார்த்த போது துயரத்துடன்
வாய் விட்டு சொல்லியிருக்கிறார்.
"எனக்கு இப்படி ஆயிடுச்சே. நான் புள்ளக்குட்டிக்காரன்"
சுற்றிலும் மனைவியரும் குழந்தைகளும்.
மீண்டும் நினைவு மறந்த நிலை.
அந்த திங்கள்கிழமை, அடுத்த நாள் செவ்வாய் கிழமை இரண்டு நாளும் சுயநினைவு
இல்லாமல் தான் படுக்கையில்.
ஆனால் மறக்கவே முடியாத படி
ஒரு பவித்ர நிகழ்வு.
அவ்வப்போது அவர் வாய் ஸ்வரங்களை முணுமுணுக்கிறது.
கைகள் நாதஸ்வரம் வாசிக்கிற பாவனையில் இயங்குகின்றன.
செவ்வாய் கிழமை அவர் மரணமடைந்து விட்டார்.
Medical report - 'Diabetic Coma.
கோவில்பட்டி கடலையூர் சாலையில் கலெக்டர் கொடுத்த நிலத்திலேயே
காருக்குறிச்சி அருணாசலம் சமாதி.
கோவில்பட்டியில் காருக்குறிச்சி சிலை அமைக்க 
நிதி உதவி ஜெமினி கணேசன் - சாவித்திரி.
திருநெல்வேலி கலெக்டர் எம்.எம்.ராஜேந்திரன் தலைமையில்
ஜெமினி கணேசன் தான் சிலையை திறந்து வைத்திருக்கிறார்.
பின்னாளில் தமிழக தலைமை செயலராக உயர்ந்து,
ஒரிசா மாநில கவர்னர் பதவியும் வகித்த பெருந்தகை எம். எம். ராஜேந்திரன் அவர்கள்.  

May 13, 2020

விளாத்திகுளம் சுவாமிகள்



விளாத்திகுளம் சுவாமிகள் என்றதும் ஒரு காவி கட்டிய உருவம் என நினைத்துவிடாதீர்கள்.

 விளாத்திகுளம் சுவாமிகள்
 காவி உடுத்தியது கிடையாது.
இவர் காடல்குடி ஜமின்தார்.
மேலும் இவருக்கு மூன்று மனைவிகள்.
கம்பள நாயக்கர் இனம்.

காருக்குறிச்சி அருணாசலம் இவரையும் தன் குரு ஸ்தானத்தில் வைத்து போற்றினார்.

விளாத்திகுளம் சுவாமிகளுக்கு தன் கோவில்பட்டி பங்களாவில் சிறப்பான விழா நடத்தினார் காருக்குறிச்சி.
தன்னுடைய முதல் மகள் திருமணத்தோடு இதையும் சேர்த்து செய்திருக்கிறார்.
ம. பொ. சி, சிவாஜி கணேசன், அவ்வை சண்முகம்,                                  ஏ. பி. நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்ட                 பெரு நிகழ்வு அது.

 கர்நாடக சங்கீதத்தில் மிகப்பெரும் ஞானி. நல்ல பாடகர்.
ஆனால் விளாத்திகுளம் சுவாமிகள்
கச்சேரி செய்பவர் கிடையாது.

 நல்ல சதஸில் இயல்பாக ஆலாபனை செய்ய ஆரம்பித்தால் ஒரு குறிப்பிட்ட ராகத்தில் பல நாட்கள் தொடர்ந்து பாடுவார்.

கீர்த்தனையாக பாடுவது என்று கிடையாது.

எந்த ராகம் என்றாலும் ஆலாபனையாக
 பல நாட்கள் பாடுவார்.
தன் ரசிகர்களுக்காக பாடியவர்.
ஒரு ரசிகர் இருக்கிறார்.
அவருக்காக ஒரு கூட்டத்திற்கே பாடுவார்.
குறிப்பிட்ட அந்த ரசிகர் காணாமல் போகிறார் என்றால் தாயைப் பிரிந்த குழந்தை போல தவித்து விடுவார்.
தாள ஞானம் இவருக்கு கிடையாது.
ஸ்வர ஞானம் உண்டு.
ஆனால் ஸ்வரம் பாடத்தெரியாது.

கரிசல் இலக்கிய மன்னர் கி.ரா அவர்கள் விளாத்திகுளம் சுவாமிகள் பற்றி
சொல்லக் கேட்பது சுகம்.

கு . அழகிரி சாமி இவரைப் பார்த்தவுடன் கி.ராவிடம் சொன்னாராம்
 " கம்பர் இப்படித்தான் இருந்திருப்பார்."

 கு. அழகிரிசாமி இதே போல
ரசிகமணி டி கே சி யைப் பார்த்தவுடன் சொன்னாராம்
"அடையா நெடுங்கதவு வீடுகொண்ட சடையப்ப வள்ளல் இப்படித்தான் இருந்திருப்பார். "

விளாத்திகுளம் சுவாமிகள் நல்ல கருப்பு நிறத்தில் ரொம்ப கம்பீர அழகு கொண்டவர்.
பெரிய மீசை உண்டு.
ஆனால் சுவாமிகளுக்கு தாடி கிடையாது.

இசை பயிலும் ஆர்வத்தில் கிராவும், அழகிரிசாமியும் அந்த காலத்தில்
நாகஸ்வர மேதை காருக்குறிச்சியின்
 சகலை பாடியான பொன்னுசாமி அவர்களை
ஒரு வீடு அமர்த்தி அவரிடம் கர்நாடக இசை பயின்றார்கள்.

அப்போது அங்கு விளாத்திகுளம் சுவாமிகள் வருகை தரும்போது பொன்னுசாமி ஆர்மோனியம் வாசிக்க ஆரம்பிக்கும் போது,
சுவாமிகள் மெதுவாக ஆலாபனையை ஆரம்பிப்பார்.

விளாத்திகுளம் சுவாமிகள் பாட ஆரம்பிப்பது பற்றி கி. ரா சுவாரசியாமாக சொல்வார் : "சாமியாடுறவனுக்கு மேளம் அடிச்சவுடன்
சாமி வருவது போல
காருக்குறிச்சியின்
ஷட்டகர் பொன்னுசாமி ஆர்மோனியம் வாசிக்க, வாசிக்க விளாத்திகுளம் சுவாமிகள் பாடத்தொடங்குவார்.
 நினைத்துப் பார்க்கவே சந்தோசமாயிருக்கிறது.
ஒரே ராகம் - ஆலாபனை - பல நாட்களுக்கு தொடர்ந்து."

சங்கீத கலாசாலை ஒன்று துவங்கும் முயற்சியின் போது ஹரிஜன்களையும் சேர்க்க வேண்டும்
என கிராவும் கு அழகிரிசாமியும் வற்புறுத்தியபோது அதனை விளாத்திகுளம் சுவாமிகள் விரும்பவில்லை.

சுவாமிகளின் இன்னொரு முகத்தைப் பார்த்த கிராவும் , கு அழகிரிசாமியும் அதனால் சங்கீத கலாசாலை பற்றிய அவரது முயற்சியிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள்.

கர்நாடக சங்கீதம் இப்போது ( இப்போது என்றால் கடந்த எண்பது வருடங்களாக) 'அரியக்குடி பார்முலா' மேடைக் கச்சேரி என்ற சிறைக்குள்,
ஆம் சிறை என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு இருபத்தைந்து கீர்த்தனைகளை கற்றுக்கொண்டு வர்ணத்தில் ஆரம்பித்து தில்லானாவுக்குப் பின் மங்களம் என திரும்ப திரும்ப அதனையே பாடிக்கொண்டு வெளிநாட்டில் எட்டு மாதம்,டிசெம்பர் சீசனை ஒட்டி ஒரு மூணு நாலு மாதம் உள்நாட்டில் வித்வான்கள் வியாபாரம் செய்வது என்று மாறிவிட்டது.

 இது குறித்த அதிருப்தியை திஜா மோகமுள்ளில் சொல்லியிருக்கிறார்.

ராகங்களை தரிசனம் செய்வது இனி சாத்தியமில்லை. அதாவது
தியாகய்யர் தேவகாந்தாரியை ஏழு நாள் பாடியது , தோடி சீத்தாராமய்யர் தோடி ராகத்தை எட்டு நாட்கள் பாடியது போல,
பட்ணம் சுப்ரமணிய அய்யர் பேகடா மூன்று நாட்கள் பாடியது போல
இனி நடக்குமா?
நடத்திக்காட்ட முயற்சிகள், இதற்கெனவே பிரத்யேகமான இசை விழாக்கள் நடத்தப்படவேண்டும்.

 கிராவும் இப்படி ஏங்கிசொல்வார்.
சங்கீதகலாசாரம் மாறுவது மிகவும் அவசியம்.
ஒரு ராகம் பல நாட்கள் பாடப்படும்போது எப்படியெல்லாம் விஷ்வரூபம் எடுக்கும்!

'மிருதங்கம் ஒரு ஊமை வாத்யம். கற்றுக்கொள்வதற்கு ஒரு கர்ப்ப வாசகாலம்
( அதாவது பத்து மாதம் ) போதும் தான்.
ஆனால் என்ன வாசிக்கக் கூடாது என்பதை தெரிந்துகொள்வதற்குள் ஆயுசு தீர்ந்து விடும். ' என்று பாலக்காடு மணி அய்யர் சொல்வார்.

ஒரு ஊமை வாத்தியத்தின் உன்னதத்தன்மையே இத்தகையது என்றால் கந்தர்வ வேதம் எனப்படும் சாஸ்த்திரீய சங்கீதத்தை எப்படி பேணப் போகிறோம்?

....

மீள் பதிவு 2009

..




May 12, 2020

பாலகுமார நினைவு

பாலகுமார நினைவுகள்
- R.P.ராஜநாயஹம்

இறந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டது.
மே பதினைந்தாம் தேதி தானே?

பாலகுமாரனின் மெர்க்குரி பூக்கள்,               இரும்புக்குதிரைகள்,
என்றும் அன்புடன்,
கரையோர முதலைகள் ஆகிய நாவல்கள் படித்தேன்.

கல்யாண முருங்கை குறு நாவல் ஒன்று ’மணியன்’ மாத நாவலாக வந்ததை வாசித்திருக்கிறேன்.

அந்த பிரபலமான ’சின்ன சின்ன வட்டங்கள்’
சிறு கதை தொகுப்பு கூட.

அப்புறம் பாலகுமாரனை திரும்பிக்கூட பார்த்ததில்லை.

ஒரு கவிதை இரும்புக்குதிரைகள் நாவலில் படித்தது இன்னும் மறக்கவில்லை.

”சவுக்கடி பட்ட இடத்தை நீவிடத் தெரியா குதிரை
கண் மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகமென்று
கதறிட மறுக்கும் குதிரையை
கல்லென்று நினைக்க வேண்டாம்.”

இன்னும் கூட ஒன்றிரண்டு பாலகுமாரனின் நாவல்களில் படித்தது.
”இந்த உலகத்தில் எதுவுமே சரியில்லை என்று நினைப்பவர்கள் எல்லாம் பாரதியை நினைத்தால் அழத்தான் முடியும்.”

“ நெஞ்சோடு ஒட்டி தேறுதல் சொல்லும் சினேகம் எவருக்குமே வாய்ப்பதில்லை.”

அசல் அதே வார்த்தைகள் அல்ல.
என் நினைவில் நிற்பதில் இருந்து
உருவி எழுதுகிறேன்.

எழுத்துலக கமலஹாசனாக கொண்டாடப்பட்டவர்.

தி.ஜா இவருக்கு எழுதிய கடிதம் ஒன்று.
மறக்க முடியாத கடிதம்.

பாலகுமாரன் சில பரிசு பொருள்கள் தி.ஜாவுக்கு கொடுத்த போது எப்படி இதற்கு react செய்வது என்று தெரியாமல் placid ஆக தான் இருந்தது பற்றி, இதுவே பி.எஸ்.ராமையா என்றால் எவ்வளவு உற்சாகமாய் எதிர்வினையாற்றியிருப்பார் என்றெல்லாம் அந்த கடிதத்தில் ஜானகிராமன் எழுதியிருந்தார்.
கல்கி பத்திரிக்கையில் பாலகுமாரன் அந்த கடிதத்தை பிரசுரம் செய்திட வைத்திருந்தார்.

தி.ஜா இறந்த அன்று ஸ்கூட்டரில்
உடனே திருவான்மியூர் வீட்டுக்கு சென்று
தேம்பி அழுத பாலகுமாரன்,

ஒரு நாவலை ஜானகிராமனுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார் - “ எழுத்துலக பிதாமகன், என்னைப் போன்ற எத்தனையோ ஏகலைவர்களுக்கு மௌன உபாத்யாயர் தி.ஜானகிராமன்.”

இதனை நான் தி.ஜானகிராமனுக்கு
நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்ட போது சேர்த்திருந்தேன்.

திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் அஞ்சலி கூட்டத்தில் என் பெயரை ஒருவரிடம் நான் சொல்ல வேண்டியிருந்த போது,
உடனே பாலகுமாரன் என்னை கூர்ந்து பார்த்தார்.
அவரோடு எனக்கு அறிமுகம் ஏதும் கிடையாது.

 மிகவும் தளர்ந்து போய் இருந்த பாலகுமாரன் பேசுவதற்காக மேடை ஏற வேண்டி இருந்த வேளை, தள்ளாடிய அவரை நான் கை பிடித்து நடத்தி மேடையில் ஏற்றி அமர வைத்தேன்.

ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டத்தில் பாலகுமாரனின் பேச்சில் ஒரு ஆச்சரியப்படத்தக்க தகவல் ஒன்று கிடைத்தது. அவர் நெக்குருகி நெகிழ்ந்து சொன்னார்.
 “ நான் இன்று சுவையாக எழுதுகிறேன் என்றால் அது ஞானக்கூத்தன் போட்ட பிச்சை!”

நிறைய நாவல்கள் எழுதிய பாலகுமாரனிடம் ஆதங்கத்துடன் “கவிதையெழுதுவதை விட்டுட்ட பார்த்தியா” என்பாராம் ஞானக்கூத்தன்.

பாலகுமாரனும் ந.முத்துசாமியும் மறைவதற்கு
சில மாதம் முன் ஒரு உணவுக்கூடத்தில் சந்தித்துக் கொண்டார்கள்.

அடுத்தடுத்து சில மாதங்களிலேயே இருவரும் அடுத்தடுத்து மறைய இருந்த தருணம் அது.

(முத்துசாமி மரணம் அக்டோபர் மாதம்
இருபத்தி நான்காம் தேதி.)

இருவருமே TAFE ல் வேலை பார்த்தவர்கள்.

இருவரும் உணர்ச்சி வசப்பட்ட நிலை.

பேராசிரியர் செ.ரவீந்திரன் கூட அப்போது முத்துசாமியுடன் இருந்திருக்கிறார்.

 பாலகுமாரன் மனம் விட்டு நெகிழ்ந்து முத்துசாமியை கனப்படுத்தி சொல்லியிருக்கிறார்.
“ முத்துசாமி மட்டும் இல்லேன்னா நான் TAFE ல கடைசி வரை க்ளார்க்காவே தான் இருந்திருப்பேன்.”

....

புகைப்படத்தில் ந.முத்துசாமி போட்டிருக்கும் சட்டை அவருடைய பிறந்த நாளுக்கு
ராஜநாயஹம் அளித்த பரிசு.

https://m.facebook.com/story.php?story_fbid=2661287837417999&id=100006104256328

.....

Virginia Woolf

Virginia Woolf- arguably the major lyrical novelist
 in the English Language.

வெர்ஜினியா வூல்ஃப்  1925 ல் எழுதிய நாவல்
Mrs Dalloway.

1999ல் புலிட்சர் விருது வாங்கிய நாவல்
The Hours.

மைக்கல் கன்னிங்காம் எழுதிய நாவல் The Hours.
இந்தTheHours நாவல் 'மிசஸ் டாலோவே'நாவல்
எப்படி மூன்று வெவ்வேறு தலைமுறை பெண்களை
பாதிக்கிறது என்பதை  மையப்படுத்தி எழுதப்பட்டது, வெர்ஜினியா வூல்ப் அந்த மூன்று பெண்களில் ஒருவர்.

1997 ல் Mrs Dalloway திரைப்படமாக
வானசா ரெட்க்ரேவ் முக்கிய பாத்திரத்தில்
நடித்து வெளிவந்தது.
வானசா ரெட்க்ரேவ் எப்போதுமே வித்தியாசமான ரோல் செய்வதில் ஆர்வமுள்ளவர்.
 Django பிராங்கோ நீரோவின் மனைவி.

இவர் நடித்த Blow up(1966) பார்த்தவர்கள் மறக்கவே முடியாது.

2002 ல்  TheHoursதிரைப்படமாக ஆனபோது
மூன்று பெண்களில் ஒருவராக
 மெரில்  ஸ்ட்ரீப் நடித்தார்.
  வெர்ஜினியா வூல்ப் கதாபாத்திரத்தில் நிகோல் கிட்மன் நடித்திருந்தார். ஆஸ்கார் விருது பெற்றார்.

இன்னொரு படம் பற்றி குறிப்பிட வேண்டும் .
1966 ல் ரிச்சர்ட் பர்டன் -எலிசபெத் டைலர் இணைந்து நடித்த  Who is afraid of Virginia Woolf?

இந்த படத்தில் இந்த பெண் எழுத்தாளர் பெயர் தலைப்பில் இடம் பெற்றிருந்தது.
ஆனால் கதைக்கும் வெர்ஜினியா வூல்ப்க்கும் தொடர்பு கிடையாது.
Zoo story நாடகாசிரியர் எட்வர்ட் அல்பீ எழுதிய ஒரு நாடகத்தை தான் படமாக்கியிருந்தார்கள்.

இந்த படத்தில் ரிச்சர்ட் பர்ட்டனுடைய
ஒரு டயலாக் பிரபலம்

 “Good, Better, Best, Bested”

....

கன்னத்தில் கைவைத்துக்கொண்டு இருக்கும் வெர்ஜினியா வூல்ப் புகைப்படம்
அவள் சோகத்தை சொல்லும்.

அவளுடைய  ஆங்கில அம்மா இந்தியாவில் பிறந்தவள்.

அம்மாவுக்கு முதல்  கணவன் மூலம்
பிறந்த மகன் தன் half sister வெர்ஜினியாவிடம் செக்ஸ் விளையாட்டு நடத்தியவன்.

'Between the Acts'
என்ற கடைசி நாவலை எழுதிவிட்டு
தன்னுடைய ஓவர்கோட்டை எடுத்து
அணிந்து கொண்டு
அதன் பாக்கெட்களில் நிறைய கற்களை நிரப்பிக்கொண்டு
வீட்டுப்பக்கத்தில் உள்ள
நதியில் இறங்கி மூழ்கி
தற்கொலை செய்துகொண்டு
இறந்துபோனவள் வெர்ஜினியா வூல்ப்.

..

May 10, 2020

இடைவெளி சம்பத்



இடைவெளி நாவல் எழுதிய  எஸ்.சம்பத் நாராயணன் 42வயதில்
மூளை ரத்த நாளச்சேதத்துக்கு ஆளாகி
 1984 ல் மறைந்து விட்டார்.

தன் எழுத்துக்களில் முதன் முதலாக புத்தகவடிவம் பெற்ற ' இடைவெளி ' நாவலை முழு புத்தகமாய்ப் பார்ப்பதற்கு முன்னர் அவரது அகால மரணம்.

தன் திறமைகளுக்குரிய கவனிப்பு தனக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தம்
 இவருக்கும் இருந்தது.
'அம்மாவுக்கு ' நாவல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஆதவனும் சம்பத்தும் கல்லூரியில் இந்திராபார்த்தசாரதியின் மாணவர்கள்.

இந்திரா பார்த்தசாரதி பள்ளியில் படிக்கும்போது தி.ஜானகிராமனின் மாணவர்.

சம்பத் மறைந்து மூன்றே வருடத்தில்
1987ல் ஆதவன் மறைந்தார்.

 தி.ஜாவுக்கும் 1982 ல் 62வயது தான்.
சாகிற வயசா ?

இடைவெளி - சாவு பற்றிய சம்பத்தின்
ஆழ்ந்த தவம்.

' சாவு என்னை ஈர்த்தவிதம் -' கடைசியாக எல்லாம் போய்விடுகிறது. இதற்கு என்ன செய்வது? தற்கொலைத்தனமான இந்த எண்ணம் எனக்கு ஒரு மகத்தான உண்மையை உணர்த்தி விட்டது.
 இடைவெளி நாவல் - ஒரு ஆன்மாவின் கைதேர்ந்த அறிவின் சத்திய சோதனை.
விவரிக்கமுடியாத சிக்கல்களைக் கொண்ட பிரபஞ்சம், ஏதோ ஒரு கனிவில்,
மனிதனிடம் காட்டும் ஞானப் பிச்சை. '

சம்பத் அவரே சொல்வது போல
அடிப்படை விஷயங்களில் உழல்பவர்.

சாவு என்பது இடைவெளி.
வெற்றி எல்லை தெரியாமல் ஓடும் குதிரை.

எதிராளி தோற்றுப்போனால் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆனால் சாவிடம் மட்டும் ஏன் இந்த வெறி போகவே இல்லை.

இது நாள் வரை தன்னுடைய தன்மையை
மரணம் உணர்த்திக்கொள்ளாமலே இருந்திருக்கிறது.
குறைந்த பட்சம் அதற்கு
 ' போர் ' அடிக்கவில்லை.
 எப்போதுமே ஜெயிப்பது
விடலைத்தனமான காரியம் இல்லையா?

காந்தி முழத்துண்டுடன் நின்று குண்டுகளை வெறும் மார்பில் வாங்கிக் கொண்டார்.
காந்தி வெறும் உடம்புடன் நின்றது தான் அவருடைய அத்தனை கால தற்காப்புக்கும் காரணம். வெறும் உடம்பில் சுடுவது என்பது அவ்வளவு ஈசியான காரியமா? வெறும் உடம்போடு எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டேன் என்ற மனிதனை!

கம்யுனிஸ்ட் கடவுளை நம்பினா அவன் சமுதாயத்துக்கே பயங்கரமானவன்.

இப்படி இடைவெளி நாவலில்
படித்த விஷயங்கள்
இன்றும் மறக்கமுடியவில்லை .

டெல்லியிலேயே வளர்ந்த சம்பத் சென்னைக்கு வந்த பின் மவுண்ட் ரோடு குறித்து சில வார்த்தை சொல்கிறார் :
' மவுண்ட் ரோடு - மதராசின் கனாட் ப்ளேஸ். இதுவும் இதனுடைய மூஞ்சிகளும்!
எப்படி ,எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம். வளர்ந்த நிலையில் இங்கு இருக்கக்கூடாது.

இந்த நாவல் பற்றி சொல்ல சம்பத் நாவலில் ஒரு இடத்தில் எழுதும் வார்த்தைகளையே சுட்ட வேண்டியுள்ளது.
" எண்ண ஓட்டங்களுக்கு,
பெரிய எண்ண ஓட்டங்களுக்கு
ஒரு பூ மணப்பின் குணம் உண்டு.
அதை யாருமே அசட்டை செய்து விட முடியாது ."

பூமியில் விளைவது எல்லாமே மனிதனுக்கு சொந்தம், எல்லாமே எல்லோருக்கும் சொந்தம் என்ற காலம் வராதா
என பகல் கனவு கண்ட சம்பத்.

சம்பத் தின் இடைவெளி நாவல்
நூறு பக்கங்கள் தான். நாவலில் வாமன அவதாரம்! க்ரியா தான் அப்போது முதல் பதிப்பை
வெளியிட்ட து (August,1984).

அந்த காலத்தில் டெல்லியில் சம்பத் ஆயிரம் பக்கங்களுக்கு ஒரு நாவல் எழுதி கையெழுத்துப் பிரதியாக இந்திரா பார்த்தசாரதியிடம்
படிக்க கொடுத்திருக்கிறார்.
சில நாளில் இ.பா படித்தவுடன்
அவர் வீட்டிற்கு போகிறார்.

இ .பா நாவல் பற்றி " Rambling ஆ இருக்குடா. நல்லா எடிட் பண்ணனும் ." என்று வெராண்டாவில் சொல்லிவிட்டு வீட்டினுள்ளே போயிருக்கிறார். சம்பத் ஆயிரம் பக்க நாவலின் கையெழுத்துப் பிரதியை நெருப்பு வைத்துக்கொளுத்தி விட்டார்!
" டே டே .. ஏண்டா " இ.பா பதறிப் போய்க்கேட்டிருக்கிறார்.
" குருநாதருக்கு பிடிக்காத நாவல் இனி எதற்கு ?" என்று சாவகாசமாக சம்பத் சொன்னாராம்.

 கணையாழியில் அருமையான இரண்டு குறுநாவல்கள் எழுதினார். '' சாமியார் ஜூவிற்கு போகிறார் '' அடுத்து " பணம் பத்தும் செய்யும் " என்ற குறுநாவல் .
கசடதபற வில் 'கோடுகள் ' என்ற சிறுகதை . ' இடைவெளி ' என்ற தலைப்பிலேயே கூட ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் . அவர் சிறுகதையொன்றில் திஜாவின் மூத்த மகன் சாகேத ராமன் ஒரு பாத்திரமாக வந்திருக்கிறார் .

சம்பத் எழுதியவற்றை அழகிய சிங்கர் தொகுப்புகளாக விருட்சம் வெளியீடாக
கொண்டு வந்துள்ளார்.
.. 

May 6, 2020

எனக்கு அம்மாப்பா இல்ல

கல்யாணம், இழவு எல்லாமே
 ரொம்ப எந்திரத்தனமான சம்பிரதாயங்கள்.

நிறைய வேஷ விஷயங்கள் நிரம்பியது.

எவ்வளவோ நூற்றுக்கணக்கான கல்யாணங்களுக்கு போய், கிரகப்பிவேசங்களுக்கு, பிறந்த நாள் வைபவங்களுக்கு போனாலும் சரி போகாவிட்டாலும் கூட
அளவுக்கதிகமாக மொய் செய்திருக்கிற நான்
 என் மகன்களின் திருமணங்கள் நடந்த போது ஒருவருக்குமே அழைப்பிதழ் தரவேயில்லை என்பதை அறிய வந்த போது கி. ரா. ரொம்பவே மனதார பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.

எவ்வளவோ எழவுகளுக்கு எடுத்தேறி செலவழித்திருக்கிறேன்.

என் தாய், தந்தை சமாதிகளை நான் பார்த்ததில்லை. மதுரையில் எங்கே இருக்கின்றன என்பதும் இன்று வரை தெரியாது.

2013ல் என் தகப்பனார் இறந்த நேரத்தில் 
ஏழு மாத  காலமாக வேலையில்லாமல் இருந்தேன்.
கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வரவேயில்லை.
சாவுக்கு போன நான் ஈமக்கிரியைகளில் கலந்து கொள்ளவில்லை.

2014லில் ஆறு மாதம் வேலையில்லாமல்,
என் அம்மா இறந்த அன்று தான்
புதிய வேலைக்கு சேர்ந்திருந்தேன்.

'அம்மா எறந்துட்டாங்க. 'அலை பேசி செய்தி.

 அம்மாவே போன பிறகு
 யார் முகத்தை போய் பார்க்க வேண்டும்?

வகுப்புக்கு போய் பாடம் நடத்தினேன்.

குழந்தைகள் முன் அம்மா இறந்த அன்றும் கூட பாடினேன்

When I was just a child I asked my mama
What will I be?

Will I be a doctor?
Will I be an actor?

This what she said to me.

'Che Sara, sara
What ever will be,
Future is not ours to see
Che Sara, sara'

அடக்க முடியாமல் பீறிட்டு கலங்கியழுதபோது குழந்தைகள் 'Why do you Cry sir?' என குழம்பிக்கேட்ட போது
 நான் 'I have no father and mother'

All the children consoled me : 'Don't cry sir.
 We are all with you.
Don't cry sir '

....

May 5, 2020

Helium Balloon



மதுரையும் திருச்சியும் தான் என்னில் எத்தகைய முக்கிய இடம் பெற்றுள்ளன.

சென்ற வருடம் ஏப்ரல் மாதம் சோமு நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மதுரைக்கு வழக்கறிஞர் பா.அசோக் அழைப்பின் பேரில் சென்று மூன்று நாட்கள் அங்கிருந்த போது, விழாவில் பங்கேற்றதை தவிர நான் வேறு யாரையும் பார்க்கவில்லை.
எங்காவது, யாரையாவது பார்க்க செல்ல வேண்டுமா? என்று கேட்கத் தான் செய்தார்.
அதெல்லாம் எதுவுமே இல்லை என்று தான் அவரிடம் சொன்னேன்.

என் தாயார், தந்தையார் சமாதியெல்லாம் கூட மதுரையில் தான். நான் பார்த்ததேயில்லை.

அதற்கு முந்தைய 2018 ஏப்ரல் மாதம் 6, 7 தேதிகளில் திருச்சியில் இருந்தேன்.

 திருச்சி NIT எஞ்ஜினியரிங் காலேஜில் நடந்த ஒரு கூத்து போட்டி நிகழ்ச்சியில் நடுவராக நான் அழைக்கப்பட்டிருந்தேன்.
 2017ம் ஆண்டு போல இந்த வருடமும்
என்னை மாணவர்கள் அழைத்து
இந்த கௌரவத்தை தந்திருந்தார்கள்.

இரண்டு நாட்கள் இருந்த போதும் நான் திருச்சியில் வேறு யாரையும் போய் சந்திக்கவில்லை.

ஆச்சரியம். ஒரு விசித்திரமான விஷயம். யாராயிருந்தாலும் சில இடங்களுக்கு போய் ஒரு சிலரை சந்திக்காமல் இருக்கவே மாட்டார்கள்.

திருச்சியிலும் நான் சந்திக்க பலரும் உண்டு. நேரமும் இருந்தது தான்.

ஆனால் நான் ஜங்ஷனில் இருந்து National Institute of Technology போனேன்.
அங்கிருந்து பின்
 7ம் தேதி இரவு ஜங்ஷன் வந்து ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் ஏறி சென்னை வந்து சேர்ந்தேன்.

திடீரென்று ஒரு மாதம் கழித்து
இன்னொரு விஷயம் ஞாபகம் வந்தது.

சென்ற நவம்பர் மாதம் என்னை இளமைக்கால மதுரை சிநேகிதி, சிநேகிதியென்ன,
 காதலி ஒருவர் தேடி கண்டு பிடித்திருந்தார்.

(இவரை 2009ல் தேட நான்
ஒரு முயற்சி செய்த போது
அப்போது ஈடேறவில்லை.)

மொபைலில் இருவரும் பேசிக்கொண்டோம். திருச்சியில் வசிக்கிறார் என்று அறிய வந்தேன்.
இரண்டு விஷயம் தெரிந்து கொண்டார்.

1.நான் வசதியாக இப்போது இல்லை
2.அவருடைய இஷ்ட தெய்வத்தை நான் வணங்குவதில்லை.

என்னுடைய எழுத்தில் சில சமயங்களில்
கெட்ட வார்த்தையெல்லாம் வருகிறது என்பதில் அவருக்கு கடும் ஆட்சேபனையும், நிறைய அதிருப்தியும்.

 அந்த பெண்மணி திருச்சியில் தானே இருக்கிறார்.
வினோதம் என்னவென்றால்
அவர் அங்கிருக்கிறார் என்கிற விஷயமே திருச்சியில் இரண்டு நாட்கள்
நான் இருந்த போது என் பிரக்ஞையில் இல்லை.
நிஜமாகவே இது விசித்திர ஆச்சரியம் தான்.

People do look different
when you fall out of love with them.
If you don't hold the helium balloon,
it flies away into the sky.

...

May 3, 2020

எழுத்தாளர் கர்ணன்



"மரணத்தை நேருக்கு நேரா
விரும்பி சந்தித்த மனிதன் ஜி. நாகராஜன் "
இப்படி சொன்னார் கர்ணன்.
நாகராஜனின் சகா இந்த எழுத்தாளர்.
மதுரை 'கண்ட' எழுத்தாளர் என்று எழுதினால்
அது அபத்தமாக தெரியும். காணாமல் போன எழுத்தாளர். மதுரை கண்டு கொள்ளாமல் போன எழுத்தாளர்.
84 வயதான கர்ணன் வாடகை வீட்டில் தான் வசிக்கிறார்.
தையல் கலையில் கூட அந்த காலத்தில் கோடீஸ்வரனான டெய்லர்கள் உண்டு.
டெய்லர் கர்ணனுக்கு அப்படியும் லபிக்கவில்லை.
மேல மாசி வீதி தானப்ப முதலி தெரு, வடுக காவல் கூட தெரு பகுதியில் டெய்லர் கடை வைத்திருந்த கர்ணனின் முதல் சிறுகதை தொகுப்பு 'கனவுப் பறவை'
சி.சு. செல்லப்பாவின் 'எழுத்து' பிரசுரமாக
1964ல் வெளி வந்தது.
ந. பிச்சமூர்த்தி தான் கர்ணனின் கனவுப்பறவைக்கு ஒரு முன்னுரை எழுதினார்.
எழுத்து இலக்கிய பத்திரிக்கையிலேயே தான் இவர் எழுதிய 'சுமை' கதை வெளி வந்திருக்கிறது.
ப்ரசன்னம் என்ற கதை விசேஷமானது.
48 நூல்கள் கர்ணன் எழுதியுள்ளார்.
இவருடைய 'உள்ளம்' நாவலை கலைஞன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். 
கவிதா பதிப்பகம் சிலவற்றை வெளியிட்டிருக்கிறது.
மணிவாசகர் நூலகம் கர்ணனின் 'அகம் பொதிந்தவர்கள்' வெளியிட்டிருக்கிறது.
இதே பதிப்பகம் வெளியிட்ட மற்றொரு நூல்
‘வெளிச்சத்தின் பிம்பங்கள்’
நர்மதா பதிப்பாக 'கி. வா. ஜ முதல் வண்ணதாசன் வரை' கர்ணனின் புத்தகம்.
......

May 2, 2020

குட்டி தமிழ்வாணன்


ஒரு எழுத்தாளர் பற்றி மிகையாக அந்த காலத்தில் கற்பனை கதைகள் சிறுவர்கள் மத்தியில் இருந்தது.
தமிழ்வாணனுக்கு ஒரு கண் கிடையாது.
ஒரு கை கிடையாது. இப்படி.

பள்ளிக்கூட லைப்ரரிகளில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் புத்தகங்களுக்கு செம டிமாண்ட்.
சங்கர்லால் துப்பறிகிறார். அப்புறம் துப்பறியும் கதைகள் தமிழ்வாணன் துப்பறிகிறார்.
’கல்கண்டு’ தமிழ்வாணன் ஒரு pompous person.
தன்னைப்பற்றி எப்போதும் மிகப்பெரிய அளவில் பில்ட் அப் பண்ணுவார்.

எம்.ஜி.ஆர் காவல்காரன் படத்தில் நடித்ததற்கு பிறகு தொப்பியுடன் எப்போதும் பொது இடங்களுக்கு வர ஆரம்பித்தார். தொப்பி, கூலிங் க்ளாஸ் சகிதம் தான் எப்போதும் இருக்க ஆரம்பித்தார்.

கல்கண்டு பத்திரிக்கையில் தமிழ்வாணன் கேள்வி பதில்கள் பிரபலமானவை.

கேள்வி : எம்.ஜி.ஆர் இப்போது எப்படியிருக்கிறார்?
தமிழ்வாணன் பதில் : ’எம்.ஜி.ஆர் இப்போது ஒரு குட்டி தமிழ்வாணன் போல் இருக்கிறார். தமிழ்வாணன் தொப்பி வைத்திருப்பது போல அவரும் தலைக்கு ஒரு தொப்பி வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்வாணன் கறுப்பு கண்ணாடி போட்டிருப்பது போல எம்.ஜி.ஆரும் கண்ணுக்கு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் அவர் ஒரு குட்டி தமிழ்வாணன் போல மாறியிருக்கிறார்.’

Worst Arrogance. Thinking too much of oneself.
Superiority complex.
அன்று எம்.ஜி.ஆருக்கு இருந்த பிரமாதமான அந்தஸ்து தெரிந்தும் இப்படி ஒரு பீற்றல்.
எம்.ஜி.ஆர் என்ன, எம்.ஜி.ஆர் ரசிகர்களே இதைப்பார்த்து எரிச்சல் படாமல் இருக்க முடியுமா?

கல்கண்டு பத்திரிக்கையில் எப்போதும் எம்.ஜி.ஆர் மலையாளி, கிழவன் என்றெல்லாம் கிண்டல் செய்து கொண்டுமிருந்தார்.

உலகம் சுற்றும் வாலிபன் படத் தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆர் ஹாங்காங்கில் தமிழ்வாணன் சட்டையைப் பிடித்து மிரட்டி எச்சரித்த போது மிரண்டு போய்விட்டார்.
‘துணிவே துணை’ என்று முழங்கியவர் கல்கண்டு ஆசிரியர்.

“நூறு வயது வரை வாழ்வது எப்படி?” என்று விளக்கமாக ஒரு புத்தகம் எழுதினார்.
தமிழ்வாணனுக்கு அப்புறம் தான் ஐம்பது வயது முடிந்தது. அதன் பின் ஐம்பத்தொரு வயதும் முடிந்து ஒரு ஆறு மாதத்தில் செத்துப்போனார். ஐம்பத்தொன்றரை வயது தான் தமிழ்வாணனுக்கு லபித்தது.
அவர் இறந்து நாற்பத்தியொரு வருடங்கள் இப்போது ஓடி விட்டது. நூறு வயதாக இன்னும் எட்டு வருடங்கள் இருக்கிறது.
The advise you tell others is the advice you need to follow.
இவருக்கும் கண்ணதாசனுக்கும் ஏதோ மனஸ்தாபம் இருந்திருக்கிறது.
’கண்ணதாசன்’ மாதப் பத்திரிக்கையில் ‘அடுத்த இதழில் மாஸ்டர் ஆஃப் ஆல் ஃப்ராட்ஸ் பற்றி ‘ என்று அறிவித்து ஒரு குறிப்பு இருந்தது.
தமிழ் வாணன் தான் அது என்று பரவலாக ஹேஸ்யம்.
அப்போது தமிழ்வாணன் அகால மரணம் .
அடுத்த கண்ண தாசன் இதழில்
மாஸ்டர் ஆஃப் ஃப்ராட்ஸ் கட்டுரை
எதுவும் வெளியாகவில்லை. கப்சிப்.