Share

May 10, 2020

இடைவெளி சம்பத்



இடைவெளி நாவல் எழுதிய  எஸ்.சம்பத் நாராயணன் 42வயதில்
மூளை ரத்த நாளச்சேதத்துக்கு ஆளாகி
 1984 ல் மறைந்து விட்டார்.

தன் எழுத்துக்களில் முதன் முதலாக புத்தகவடிவம் பெற்ற ' இடைவெளி ' நாவலை முழு புத்தகமாய்ப் பார்ப்பதற்கு முன்னர் அவரது அகால மரணம்.

தன் திறமைகளுக்குரிய கவனிப்பு தனக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தம்
 இவருக்கும் இருந்தது.
'அம்மாவுக்கு ' நாவல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஆதவனும் சம்பத்தும் கல்லூரியில் இந்திராபார்த்தசாரதியின் மாணவர்கள்.

இந்திரா பார்த்தசாரதி பள்ளியில் படிக்கும்போது தி.ஜானகிராமனின் மாணவர்.

சம்பத் மறைந்து மூன்றே வருடத்தில்
1987ல் ஆதவன் மறைந்தார்.

 தி.ஜாவுக்கும் 1982 ல் 62வயது தான்.
சாகிற வயசா ?

இடைவெளி - சாவு பற்றிய சம்பத்தின்
ஆழ்ந்த தவம்.

' சாவு என்னை ஈர்த்தவிதம் -' கடைசியாக எல்லாம் போய்விடுகிறது. இதற்கு என்ன செய்வது? தற்கொலைத்தனமான இந்த எண்ணம் எனக்கு ஒரு மகத்தான உண்மையை உணர்த்தி விட்டது.
 இடைவெளி நாவல் - ஒரு ஆன்மாவின் கைதேர்ந்த அறிவின் சத்திய சோதனை.
விவரிக்கமுடியாத சிக்கல்களைக் கொண்ட பிரபஞ்சம், ஏதோ ஒரு கனிவில்,
மனிதனிடம் காட்டும் ஞானப் பிச்சை. '

சம்பத் அவரே சொல்வது போல
அடிப்படை விஷயங்களில் உழல்பவர்.

சாவு என்பது இடைவெளி.
வெற்றி எல்லை தெரியாமல் ஓடும் குதிரை.

எதிராளி தோற்றுப்போனால் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆனால் சாவிடம் மட்டும் ஏன் இந்த வெறி போகவே இல்லை.

இது நாள் வரை தன்னுடைய தன்மையை
மரணம் உணர்த்திக்கொள்ளாமலே இருந்திருக்கிறது.
குறைந்த பட்சம் அதற்கு
 ' போர் ' அடிக்கவில்லை.
 எப்போதுமே ஜெயிப்பது
விடலைத்தனமான காரியம் இல்லையா?

காந்தி முழத்துண்டுடன் நின்று குண்டுகளை வெறும் மார்பில் வாங்கிக் கொண்டார்.
காந்தி வெறும் உடம்புடன் நின்றது தான் அவருடைய அத்தனை கால தற்காப்புக்கும் காரணம். வெறும் உடம்பில் சுடுவது என்பது அவ்வளவு ஈசியான காரியமா? வெறும் உடம்போடு எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டேன் என்ற மனிதனை!

கம்யுனிஸ்ட் கடவுளை நம்பினா அவன் சமுதாயத்துக்கே பயங்கரமானவன்.

இப்படி இடைவெளி நாவலில்
படித்த விஷயங்கள்
இன்றும் மறக்கமுடியவில்லை .

டெல்லியிலேயே வளர்ந்த சம்பத் சென்னைக்கு வந்த பின் மவுண்ட் ரோடு குறித்து சில வார்த்தை சொல்கிறார் :
' மவுண்ட் ரோடு - மதராசின் கனாட் ப்ளேஸ். இதுவும் இதனுடைய மூஞ்சிகளும்!
எப்படி ,எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம். வளர்ந்த நிலையில் இங்கு இருக்கக்கூடாது.

இந்த நாவல் பற்றி சொல்ல சம்பத் நாவலில் ஒரு இடத்தில் எழுதும் வார்த்தைகளையே சுட்ட வேண்டியுள்ளது.
" எண்ண ஓட்டங்களுக்கு,
பெரிய எண்ண ஓட்டங்களுக்கு
ஒரு பூ மணப்பின் குணம் உண்டு.
அதை யாருமே அசட்டை செய்து விட முடியாது ."

பூமியில் விளைவது எல்லாமே மனிதனுக்கு சொந்தம், எல்லாமே எல்லோருக்கும் சொந்தம் என்ற காலம் வராதா
என பகல் கனவு கண்ட சம்பத்.

சம்பத் தின் இடைவெளி நாவல்
நூறு பக்கங்கள் தான். நாவலில் வாமன அவதாரம்! க்ரியா தான் அப்போது முதல் பதிப்பை
வெளியிட்ட து (August,1984).

அந்த காலத்தில் டெல்லியில் சம்பத் ஆயிரம் பக்கங்களுக்கு ஒரு நாவல் எழுதி கையெழுத்துப் பிரதியாக இந்திரா பார்த்தசாரதியிடம்
படிக்க கொடுத்திருக்கிறார்.
சில நாளில் இ.பா படித்தவுடன்
அவர் வீட்டிற்கு போகிறார்.

இ .பா நாவல் பற்றி " Rambling ஆ இருக்குடா. நல்லா எடிட் பண்ணனும் ." என்று வெராண்டாவில் சொல்லிவிட்டு வீட்டினுள்ளே போயிருக்கிறார். சம்பத் ஆயிரம் பக்க நாவலின் கையெழுத்துப் பிரதியை நெருப்பு வைத்துக்கொளுத்தி விட்டார்!
" டே டே .. ஏண்டா " இ.பா பதறிப் போய்க்கேட்டிருக்கிறார்.
" குருநாதருக்கு பிடிக்காத நாவல் இனி எதற்கு ?" என்று சாவகாசமாக சம்பத் சொன்னாராம்.

 கணையாழியில் அருமையான இரண்டு குறுநாவல்கள் எழுதினார். '' சாமியார் ஜூவிற்கு போகிறார் '' அடுத்து " பணம் பத்தும் செய்யும் " என்ற குறுநாவல் .
கசடதபற வில் 'கோடுகள் ' என்ற சிறுகதை . ' இடைவெளி ' என்ற தலைப்பிலேயே கூட ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் . அவர் சிறுகதையொன்றில் திஜாவின் மூத்த மகன் சாகேத ராமன் ஒரு பாத்திரமாக வந்திருக்கிறார் .

சம்பத் எழுதியவற்றை அழகிய சிங்கர் தொகுப்புகளாக விருட்சம் வெளியீடாக
கொண்டு வந்துள்ளார்.
.. 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.