Share

Apr 28, 2021

கலைஞர் - தேங்காய் - கார்

 காலக்கண்ணாடி கடந்த கால நடப்பு ஒன்றை திடீரென ஞாபக சிறையில் இருந்து மீட்டு விடுதலை செய்து எந்த காரணமும் இன்றி கண்ணில் காட்டும். 


1980களின் முன்பகுதி கோபாலபுரம் கலைஞர்

 மு. கருணாநிதி வீட்டின் முன் நான் நிற்கிறேன். எம்ஜிஆர் ஆட்சி இரண்டாவது காலம். 

முன்பகல் பதினொரு மணி. தேங்காய் சீனிவாசன் காரை அங்கே கலைஞர் வீட்டு பக்கவாட்டில் நிறுத்தி விட்டு கோவிலுக்குள் போகிறார். 

கொஞ்ச நேரத்தில் மாநகராட்சியின் துப்புரவு ஊழியர் குப்பை வண்டியை கார் அருகில் நிறுத்தி விட்டு தன் வேலையை பார்க்கிறார். 

அங்கே வீட்டின் முன் சில நடுத்தர வயது

 ஏழைப் பெண்கள் மூவர் நிற்கிறார்கள். 


கலைஞர் கார் முன் பக்க சுவரையொட்டி நிற்கிறது. 

வீட்டிற்குள் இருந்து மு. க.. தமிழ் வெளிப்படுகிறார். 

அப்பொழுதெல்லாம் அப்பாவுக்கு சாரதி இந்த மகன் தான். அருள்நிதியின் அப்பா.


காரை நெருங்கி தயாராகும் மு. க. தமிழைப் பார்த்து அங்கு நின்று கொண்டிருந்த பெண்களில் ஒருவர் 'நல்லாயிருக்கியா கண்ணு' என்று வாஞ்சையுடன் கேட்கிறார். தமிழ் தலை நிமிர்ந்து புன்னகையுடன் தலையசைக்கிறார்.' என்னைத் தெரியுதாப்பா ? ' என்கிறார். மீண்டும் புன்னகையுடன் தலையசைப்பு. அந்த அம்மாள் இவரை சிறுவனாக இருந்த போதே அறிந்தவராய்த் தான் இருக்க வேண்டும். ஒரு வேளை கலைஞர் வீட்டில் முன்னர் வேலை பார்த்தவராய்க்கூட இருக்கலாம். 


இப்போது கலைஞர் வீட்டிற்குள் இருந்து வெளி வருகிறார். 

தேங்காய் சீனிவாசன் சாமி கும்பிட்டு விட்டு கோவிலில் இருந்து வெளி வருகிறார். 

கலைஞர் கிளம்புகிறார் என்பது தேங்காய் சீனிவாசனுக்கு தெரியத்தான் செய்கிறது. 

கலைஞருக்கும் கோவிலில் இருந்து தேங்காய் வெளி வருவது புரியாமல் இல்லை. 


தேங்காய் சீனிவாசன் உரக்க ஒரு கூப்பாடு. 

"யாருப்பா என் கார் முன்னால இந்த வண்டிய நிறுத்துனது. நான் கார எப்படி எடுக்கறது. என்னடா இது"


அந்த துப்புரவு தொழிலாளர் ஓடி வருகிறார். 


தேங்காய் நல்ல சத்தமாக " வண்டிய ஏன்யா இப்டி விட்ட. கார இப்ப நான் எடுக்க வேண்டாமா? 

ஏம்ப்பா.. சீக்கிரம் எடுய்யா வண்டிய? "


இதை கண்டும் காணாமல் கலைஞர்

 காரில் ஏற வருகிறார்.

 அவர் பார்வை என் மீதோ, 

அங்கு நின்றிருந்த 

மற்ற மூன்று பெண்கள் மீதோ விழவில்லை. 

மகன் கார் கதவை திறந்து அப்பா ஏறியவுடன் மகன் டிரைவர் சீட்டில் அமர்கிறார். 


கலைஞர் கார் புறப்படுகிறது. 


துப்புரவு பணியாளர் குப்பை வண்டியை அகற்றியதும் தேங்காய் சீனிவாசன் மீண்டும் கோபமாக சிடு, சிடு என்று திட்டிக் கொண்டே தான் காரை எடுக்கிறார். 


..

Apr 23, 2021

Professor Alphonso Doss passes away

 Professor Alphonso Doss passes away. 


கூத்துப்பட்டறை பகுதியில் தான் இவர் வீடு. 

வீரசந்தானம் மறைந்த போது அவருக்கு 

 அல்ஃபோன்ஸோ இறுதி மரியாதை செலுத்த செல்ல ஆட்டோ வேண்டி 

வீட்டு முன்னால் 

நின்று கொண்டு இருந்தார். 


நான் ஒரு ஆட்டோ பிடித்து 

அவரை அனுப்பி வைத்தேன். 

ஆட்டோ காரரிடம் பணம் 

நான் கொடுக்க முனைந்த போது

 பிடிவாதமாக மறுத்து விட்டார். 


லலித் கலா அகாடமியில் அல்ஃபோன்ஸோ, 

P. கிருஷ்ணமூர்த்தி இருவரின் ஓவிய கண்காட்சிக்கு ந. முத்துசாமி, நடேஷ் இருவருடன் நானும் போயிருந்தேன்.

 

அங்கே அப்போது வீர சந்தானமும் வந்திருந்தார். 


முத்துசாமி பழைய நினைவில் மூழ்கி 'அப்பல்லாம் இங்கே ரெண்டு பேர் படுத்துக்கிடப்பார்கள்' என்று சொன்ன போது,

 ஓவியர் வீரசந்தானம் "அந்த ரெண்டு பேர்ல ஒர்த்தன் நான் தான்" என்றார்.


http://rprajanayahem.blogspot.com/2017/02/blog-post.html?m=0

Apr 22, 2021

Che sara sara கே சரா சரா

 Che sara, sara ’கே சரா,சரா’


ஹிட்ச்காக்கின் படம் The Man who knew too much. இதில் டோரிஸ் டே பாடிய பாடல் que sera sera ( Spanish Language)

 கிறிஸ்டோபர் மார்லோவ் Che sara sara ( Italian Language)


(There is a reference that Marlowe's 'Che sara,sara'  would not be quite grammatically correct in Italian, the correct form being "quello che sarà, sarà." However, it seems more likely that Marlowe was rendering a Latin phrase, as is consistent with other quotations in the play.) 


படிக்கிற காலத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும்  நான் எப்போதும் பாடியிருக்கிறேன்.


திருப்பூரில் Child rights பற்றி பத்து பள்ளிகளில் 2012 ல் lecture செய்திருக்கிறேன். அப்போதும் கூட Che sara sara, சின்னப் பெண் ஆன போதிலே பாடல்களை பாடியிருக்கிறேன்.


இந்தப் பாடலை நான் ஸ்போக்கன் இங்க்லீஷ் டீச்சராய் இருந்த போது கொஞ்சம் மாற்றி பாடுவேன்.


திருப்பூர் விகாஸ் வித்யாலயா பள்ளி குழந்தைகள், கிட்ஸ் க்ளப் மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ. ஸ்கூல் குழந்தைகள் அனைவருக்கும் நான் பாடி இந்த ’கே சரா,சரா’ பாடல் ரொம்ப பிரபலம்.


திருப்பூரில் இருந்து இப்போது கூட மாணவ மாணவியர் என் பாடல்களை நினைவில் வைத்திருப்பதாக என்னிடம் கூறுகிறார்கள்.


சென்னையிலும் கூத்துப்பட்டறையிலும்

 கே சரா, சரா பிரபலமாகி விட்டது.


Che sara, sara என்ற இந்த வார்த்தை கிறிஸ்டோபர் மார்லோவின் டாக்டர் ஃபாஸ்டஸில் வரும் வார்த்தை.

Che sara, sara is a latin world which means What ever will be will be. என்ன நடக்குமோ அது தான் நடக்கும்.


 நான் மார்லோவின் வரிகளை ஆரம்ப வரிகளாக கொள்கிறேன்.


டோரிஸ் டே வரி சரணங்களை மாற்றி பாடுகிறேன்.

என்னுடைய வெர்சன் இது.


When I was just a child

I asked my mama what will I be?

Will I be a doctor? Will I be an actor?

This what she said to me

Che sara, sara

Whatever will be will be

Future is not ours to see

Che sara, sara


When I just entered school

I asked my teacher

What will I be?

Will I be a major

Will I be a Colonel

This what she said to me

Che sara, sara

Whatever will be will be

Future is not ours to see

Che sara, sara Che sara sara


When I just entered teens

I asked my sweet heart

What will I be?

Will I be a rainbow day after day

This what she said to me

Che sara, sara

What ever will be will be

Future is not ours to see

Che sara, sara

Che sara, sara, Che sara, sara


’ஆரவல்லி’ படத்தில் எஸ்.ஜி.ஈஸ்வர்,

மைனாவதி ( பண்டரி பாய் தங்கை) இருவரும் பாடுவதாக வரும் பாடல்


”சின்னப்பெண் ஆன போதிலே என் அன்னையிடம் நான் ஒரு நாளிலே எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா? அம்மா நீ சொல் என்றேன்.

வெண்ணிலா, நிலா என் கண்ணல்லவா கலா

உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம் காண் நிலா.”


Che sara மெட்டிலேயே அமைந்த பாடல்.


நான் பாடும் மற்ற பாடல்கள்


1.Do re me, Do re me fa so la ti


2.There's a sad sort of clanging from the clock


3.Rain drops keep falling on my head


4.The green grass grows all around


5. Congratulations and celebrations


6. Five little ducks went out one day


7. Feelings, feelings They are a part of me

Feelings, Feelings Hey, I just want to be me.


8. Everybody, Do what you are doing


9.Buddy, you are a boy, make a big noise


10. We shall overcome, we shall overcome


.. 


மீள் பதிவு 2017

Apr 20, 2021

அரசியல் பிழைத்தோர், மணல் கோடுகளாய் பற்றி வேர்கள் மு. ராமலிங்கம்

 வேர்கள் மு. ராமலிங்கம் என்று இலக்கிய உலகில் அறியப்படும் முத்துக்குமாரசாமி ராமலிங்கம்  அவர்கள்

 என் இரண்டு புத்தகங்கள் 

'அரசியல் பிழைத்தோர்',  

'மணல் கோடுகளாய்.. ' படித்த அனுபவம் 

பற்றி எழுதியுள்ளதை படிக்கும்போது 

மன உருக்கம் கொள்கிறேன். 


"ராஜநாயஹம்  எழுத்தில்

சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய இரு நூல்கள் அரசியல் பிழைத்தோர்,

மணல் கோடுகளாய்

படித்து முடித்தேன்.

ஏற்கனவே அவரது வலைப்பூவிலும் முகநூலிலும் பெரும்பாலான கட்டுரைகளை படித்திருந்தாலும் ஒருசேர படிப்பது தனியான ஒரு  புதிய அனுபவத்தை தந்தது. 

புதினங்களை படிப்பதில் கிடைக்கும் 

ஆனந்தத்தை விட எனக்கு 

சிறப்பான அனுபவமாக இருந்தது. நன்றி .


மிகச் சிறப்பான எழுத்து நடையை உடைய  ராஜநாயஹம் சிறுகதைகளோ புதினமோ எழுத வேண்டும் என்ற என் அவாவை மீண்டும் வலியுறுத்துகிறேன். இன்னும்  ஏராளமான பதிவுகளையும் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.


குறிப்பு :" இந்த உலகில் பிறந்த அனைவரும் 

ஒரு நாள் மண்ணை விட்டுப் பிரிந்து விடுவார்கள் என்ற உண்மையை அறிவு பூர்வமாக

 உணர்ந்து இருந்த போதும் 

எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும் வழிகாட்டியாகவும் இருந்த 

எனது மூத்த அண்ணன் மறைவினால் 

இரண்டு வாரங்களாக எதையுமே செய்ய பிடிக்காமல், படிக்கவும் பிடிக்காமல் 

இருந்த சூழ்நிலையில் ராஜநாயஹத்தின்  எழுத்துக்களை படித்தால் என்ன என்று தோன்றியது. 

அவரை படித்ததின்  மூலமே இப்போது 

மீண்டும்  புத்தக உலகத்தில் நுழைய முடிந்தது."


- ராமலிங்கம் முத்துக்குமாரசாமி

Apr 16, 2021

சினிமா எனும் பூதம் பற்றி சுப்பாராவ் சந்திர சேகர ராவ்

 R. P. ராஜநாயஹம் சினிமா எனும் பூதம் நூல் பற்றி 

சுப்பாராவ் சந்திர சேகர ராவ் 


"சினிமா எனும் பூதம்

நான் சினிமா அதிகம் பார்ப்பவன் அல்லன். ஆனால், சினிமா பற்றிய தகவல்களை சேகரித்துக் கொள்வதில் மகிழ்பவன். அதிலும் என் பால்ய காலத்து நடிகர், நடிகைகள் பற்றிய விபரங்களை அறிவதில் கூடுதல் மகிழ்ச்சி. எனவே இயல்பாகவே சினிமா கலைஞர்கள் பற்றிய புத்தகங்களைத் தேடிப் படிப்பது வழக்கம்.  அந்த வகையில் சமீபத்தில் படித்ததுதான் R.P.ராஜநாயஹத்தின் சினிமா எனும் பூதம் என்ற அற்புதமான புத்தகம்.


தமிழ் சினிமா பற்றி ஏற்கனவே அறந்தை நாராயணனின் தமிழ் சினிமாவின் கதை, திராவிடம் பாடிய திரைப்படங்கள், சினிமாவிற்குப் போன இலக்கியவாதிகள், வாமனன் எழுதிய திரை இசை அலைகள்,   ஜி.ராமநாதனின் வாழ்க்கை வரலாறு, கே.வி.மஹாதேவனின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றைப் படித்ததுண்டு. ஆனால், இந்தப் புத்தகங்கள் எல்லாம் புத்தகம் எழுத வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு, அதற்கான தரவுகளைத் திரட்டி, அதற்காக நேர்காணல்கள் செய்து, தொகுத்து எழுதப்பட்டவை. சினிமா எனும் பூதம் அவ்வாறு எழுதப்பட்டதல்ல.  ஆசிரியர் பின்னட்டைக் குறிப்பில் சொல்லுவது போல, எந்தக் குறிப்புகளின் தேடலுமின்றி, முற்றிலும் அவரது ஞாபக அடுக்குகனை மட்டுமே கொண்டு, அறிந்த திரை ஆளுமைகள் பற்றிய அறியாத சுவாரசிய விஷயங்களை ஆவணப்படுத்தியிருக்கும் நூல். ராஜநாயஹம் தி.ஜானகிராமனின் பரமரசிகனாக, அசோகமித்திரனின் சீடனாக, ந.முத்துசாமியின் மாணாக்கனாக,  Shakespearean Scholar ஆக, இருப்பதால்,  அவரது நினைவுகளின் அடுக்குகளிலிருந்து தெறிக்கும் தகவல்கள் மிக அழகான நடையில், எந்த பாசாங்கும் மேற்பூச்சுமின்றி, ரசிக்கும்படியான தேர்ந்த சொற்களில் வந்திருக்கின்றன.


நான் ராஜநாயஹத்தின் வலைப்பூவிற்கு சப்ஸ்கிரைப் செய்து அவரைப் பல வருடங்களாகப் பின்தொடர்பவன். தினமும் அதிகாலையில் என் மின்னஞ்சலில் அவரது வலைப்பூ கட்டுரை ஒன்று வந்திருக்கும். அதைப் படித்துவிட்டுதான் என் அன்றாட வேலைகளைத் துவக்குவேன். அந்த வகையில் இந்தத் தொகுப்பில் பல கட்டுரைகளை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன் என்றாலும், தொகுப்பாக ஒருசேரப் படிப்பது ஒரு தனி இன்பம்தான்.   புத்தகத்தில் தான் எத்தனை எத்தனை தகவல்கள்…..


ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவிற்கும் 

நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரனுக்கும் உள்ள உறவுமுறை,

 சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி தேன்கிண்ணம், ஹலோ பார்ட்னர், உங்கள் விருப்பம், கல்யாணமாம் கல்யாணம் என்று காமெடிப் படங்களாக எடுக்கக் காரணம், 


மதுரை தமுக்கத்தில் கமல் – என்னத்த கன்னையா நாடகத்தில் வந்த இரட்டை அர்த்த டைமிங் வசனம்,


 ரத்னமாலா கணேசன் என்ற நாடக நடிகையின் பெயரில் இருக்கும் கணேசன் யார் என்ற அதிர்ச்சித் தகவல் என்று  மிக மிக ரசிக்கும்படியான தகவல்கள்… 


திராவிடர் கழக மாநாடு ஒன்றின் ஊர்வலத்தில் எம்.ஆர்.ராதா குதிரையில் வந்தது 

தொடர்பாக மற்றொரு திகில் செய்தியைத் தருகிறார் ராஜநாயஹம்.


 எஸ்.வி.சகரஸ்ரநாமம் பற்றிய அந்தக் காலத்து வதந்தி என்னை திகைக்க வைத்தது!


 அசோகமித்திரனின் மானசரோவரின் இரண்டு முக்கிய பாத்திரங்களின் ரோல் மாடல்கள் பற்றிய செய்தியும் கூடத்தான்.


ராஜநாயஹத்தின் ஆங்கிலம் பற்றி அவரைத் தொடர்ந்து படிப்போருக்கு நன்கு தெரியும். ஜெமினியின் பல திருமணங்கள் பற்றி  The chain of matrimony is so heavy, it takes two to carry it. Sometimes….. three…. four…. five.. என்று அவரால் மட்டுமே சொல்ல முடியும்.


அதே போலத்தான் சீர்காழி, சிவகுமார், பாலகுமாரன், ஜெய்சங்கர்  பற்றியெல்லாம் மிக வெளிப்படையாக மனதில் பட்டதை  எழுதும் துணிச்சலும் ராஜநாயஹத்திற்கே உரியது.


 #டப்பா படத்தில் நடித்தாலும் ஏதோ வெள்ளிவிழா படத்தில் நடிப்பது போல மிகுந்த உற்சாகமாக பெருமிதத்துடன் நடிப்பார் ஜெய் #


 #வேறு பொழுதுபோக்கே அறியாத அந்தக்கால தமிழ் சினிமா பைத்தியங்களுக்கு ஜெய்சங்கர் படங்கள் பார்த்த போதுதான் சினிமாபடம் கூட போர் அடிக்கும் என்ற விஷயமே தெரிய வந்தது#


#நாகேஷை ஓவர் ஆக்சனில் சிக்க வைத்ததே பாலச்சந்தரின் நாடக பாணி இயக்கம்தான்#


பக்கத்துக்குப் பக்கம் சுவாரஸ்யமான தகவல்களோடு,

 காலையில் எடுத்து, ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்ட அருமையான புத்தகம்.

  கடைசி பாலில் சிக்ஸர் அடித்து நம்மை பரவசமூட்டும் கிரிக்கெட் வீரர் போல் ராஜநாயஹம் ஒரு சிக்ஸர் அடித்துதான் தனது கடைசி கட்டுரையை முடிக்கிறார். அதை அப்படியே தந்து நானும் எனது அறிமுகத்தை முடிக்கிறேன். ஸ்ரீதேவி ஹிந்தி சினிமாவிற்குப் போனது பற்றிய எழுதும் போது அவர் சொல்வது கீழே –


#எங்கள் காலத்தில் அமலாவையும் பாலிவுட் கொண்டு சென்று விடுமோ என்ற கவலையில் ‘அமலாவை இந்தி திரையுலகிற்கு செல்லாமல் தடுப்பது எப்படி?‘ என்று தமிழ்வாணன் ஏதாவது புத்தகம் எழுதி வைத்துவிட்டு செத்திருக்கிறாரா இல்லையா என்று கூட விசாரணை செய்ததுண்டு.#


சினிமா எனும் மாய உலகம் காட்டிய அபத்தங்களின் உச்சத்தை சொல்லும் இந்த நூல் மிகச் சிறந்த வாசகரும், நண்பருமான சரவணன் மாணிக்கவாசகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது.


வாழ்த்துகள் ராஜநாயஹம் சார்!


.. 


சினிமா எனும் பூதம்


R.P.ராஜநாயஹம்


எழுத்து பிரசுரம் வெளியீடு


விலை – ரூ375.00 


...

Apr 14, 2021

காருக்குறிச்சி அருணாசலம் மரணம் நிகழ்ந்த விதம்
 காருக்குறிச்சிக்கு ஆருடக்குறிப்பு மூலம்

நேரம் சரியில்லை என தெரிந்ததால்
சில நாட்களுக்கு முன்பு திருநள்ளாறு
சென்று விட்டு வந்திருக்கிறார்.
மதுரையில் மெடிக்கல் செக் அப் செய்த பின் டயட் கன்ட்ரோல். இரவில் கோதுமை கஞ்சி.
அன்று ஞாயிற்றுக்கிழமை.


காருக்குறிச்சி அருணாசலம் கோவில்பட்டி வீட்டில் மதிய உணவு சாப்பிடுகிறார்.
அவருடைய முதல் மனைவி ராமலட்சுமி தான் வீட்டின் பட்டத்தரசி.
தன்னுடைய கணவரின் மற்ற மனைவியரின் பன்னிரெண்டு குழந்தைகளையும் ஆளாக்கியவர். சமையல் பக்குவத்திலிருந்து கணவருக்கு
முகம் கோணாமல் பறிமாறுவது வரை
பார்த்து பார்த்து செய்பவர்.
சாப்பிட்டு முடித்தவுடன் திருநெல்வேலி கிளம்புகிறார்.
அங்கே ஒரு கச்சேரி. அது முடிந்தவுடன்
கலெக்டரை சந்திக்க வேண்டியிருக்கிறது.
காருக்குறிச்சி 'நாதஸ்வரம் குரு குலம்' நடத்தும் திட்டம் வைத்திருந்தார்.
அதற்கு திருநெல்வேலி கலெக்டர் நிலம் கடலையூர் சாலையில் ஒதுக்கித்தர இசைந்திருந்தார்.
அவரையும் சந்திக்க வேண்டும்.
கச்சேரி முடித்து விட்டு கலெக்டரை சந்திக்கிறார்.
இரவு ஏழு மணி. பேசுக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்திருக்கிறார்.
திருநெல்வேலி ஹை கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார்.
அவருடன் உப நாயனம் வாசிப்பவர், அவர் பெயரும் அருணாசலம் தான். அந்த அருணாசலம் உடனேயே கோவில்பட்டி வருகிறார்.
அப்போது அவருடைய மனைவியர், புத்திரங்கள் அனைவரும் தியேட்டரில் 'அல்லி' படம் பார்த்து விட்டு அப்போது தான் வீடு திரும்பியிருக்கிறார்கள்.
உப நாயனம் அருணாசலம் தகவல் சொல்கிறார்.
குடும்பம் திருநெல்வேலி பயணம்.
மறு நாள் காருக்குறிச்சிக்கு நினைவு திரும்பி
கண் விழித்து பார்த்த போது துயரத்துடன்
வாய் விட்டு சொல்லியிருக்கிறார்.
"எனக்கு இப்படி ஆயிடுச்சே. நான் புள்ளக்குட்டிக்காரன்"
சுற்றிலும் மனைவியரும் குழந்தைகளும்.
மீண்டும் நினைவு மறந்த நிலை.
அந்த திங்கள்கிழமை, அடுத்த நாள் செவ்வாய் கிழமை இரண்டு நாளும் சுயநினைவு
இல்லாமல் தான் படுக்கையில்.
ஆனால் மறக்கவே முடியாத படி
ஒரு பவித்ர நிகழ்வு.
அவ்வப்போது அவர் வாய் ஸ்வரங்களை முணுமுணுக்கிறது.
கைகள் நாதஸ்வரம் வாசிக்கிற பாவனையில் இயங்குகின்றன.
செவ்வாய் கிழமை அவர் மரணமடைந்து விட்டார்.
Medical report - 'Diabetic Coma.
கோவில்பட்டி கடலையூர் சாலையில் கலெக்டர் கொடுத்த நிலத்திலேயே
காருக்குறிச்சி அருணாசலம் சமாதி.
கோவில்பட்டியில் காருக்குறிச்சி சிலை அமைக்க
நிதி உதவி ஜெமினி கணேசன் - சாவித்திரி என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படி கல் வெட்டு கூட இருக்கிறது.
நான் காருக்குறிச்சியின் கடைசி மகள் ராஜத்திடம் விசாரித்தேன்.
ஜெமினி கணேசன் பணம் எதுவும் தரவில்லையாம்.
ஆனால் உண்மையில் செல்லையாத்தேவர் என்பவர் தான்
சிலைக்காக நிதி திரட்டியிருக்கிறார்.
கல்வெட்டில் நன்கொடை ஜெமினி கணேசன் - சாவித்திரி என
செல்லையா தேவர் பெயருக்கு மேலே குறிக்கப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி கலெக்டர் எம்.எம்.ராஜேந்திரன் தலைமையில்
ஜெமினி கணேசன் தான் சிலையை திறந்து வைத்திருக்கிறார்.
பின்னாளில் தமிழக தலைமை செயலராக உயர்ந்து,
ஒரிசா மாநில கவர்னர் பதவியும் வகித்த
பெருந்தகை எம். எம். ராஜேந்திரன் அவர்கள்.
...

Apr 13, 2021

தவிச்ச முயல அடிக்கிற கத
மதுரை சுற்று வட்டார ஊர்களில் 

நகைக்கடை பஜாருல 

"கயிறு போடறது"ன்னு ஒரு Jargon உண்டு. 


ஒரு நகையை விற்க வேண்டிய நிலை வரும் போது வாங்கிய கடையில் விற்றுப் பணம் வாங்குவது உடனடியாக நடக்காது.

' ஒரு பதினைந்து நாள் கழித்து வா ' என்று பதில் வரும். பதினைந்து நாள் கழித்து போனாலும் ஏதாவது சால்ஜாப்பு தான் பதில். 


வாங்கிய கடையில் திருப்பிக் கொடுத்தால் நல்ல விலை கிடைக்கும் என்பது ஐதீகம். 


ரொம்ப வருடத்திற்கு முன்பு வாங்கியிருந்த நகையென்றால், முந்தைய கடையே இப்போது இல்லை என்று கூட ஆகியிருக்கும். 


அல்லது அது அப்பா கடை. அண்ணன் தம்பி மச்சான் கூட பங்கு. இப்ப நான் பிரிஞ்சி இது 

தனி கடை என்பான். 


நகையை விற்க வருகிறவன் தலை போற பிரச்சினையில் இருப்பான். எப்படியாவது, கொஞ்சம் கொறஞ்ச விலையினாலும் கையில பணம் வந்தா தான் ஆச்சின்ற நெலமயில தவி தவிப்பான். 


மற்ற நகைக்கடையில கேட்டு பாக்கலாம்னு நெனப்பான். 


இவன் நகை விக்க வந்த விஷயம் - எவ்வளவு பவுன், யாருன்ற விஷயமெல்லாம் பஜாரில் உடனே உடனே பரவியிருக்கும். 


இங்க தான் "கயிறு போடுறது" 


நகைக்கடையில மொதலாளி அந்த நகைய வாங்கி மச்சம் பாக்க கல்லெடுத்து நல்லா ஒரசிட்டு, ஒதட்ட பிதுக்கி சொல்லுவது ' மச்சம் ரொம்ப கம்மியாருக்கே' 


விக்க வந்த பாவப்பட்ட ஜீவன் " பாத்து குடுங்க" 


ஒரு பவுனுக்கு இவ்வளவு தான் குடுக்க முடியும். 


மீண்டும் நகைய விக்க வந்த அப் 'பாவி' 

" பணமொட ஜாஸ்தி. வேற வழியில்லாமத் தான் வந்திருக்கேன் "


முடிவா இவ்வளவு தான் வாங்குற விலன்னு தீர்மானமா கடை பதில். 


இவன் வேதனயோட வெறுத்து எந்திரிச்சி கிளம்பும் போது வெல கொஞ்சம் கூடும். 


விக்க வந்தவன்" நான் தான் சொன்னனே.."ன்னு இழுக்கும் போது 'கயிறு' 


பஜாருல எந்த கடைக்குமே கட்டாத அதிக வெலை. 

இந்த கடையில கயிறு போட்டு விட்டுடுவாங்கெ. 

அந்த வெலைக்கு அந்த நகைய யாருமே வாங்கவே மாட்டாங்க. அவ்வளவு அதிக வெல தர்றேன்னு கயிறு போட்டு விட்டுடறது. 


இவன் நிச்சயமா இத விட நல்ல வெல கெடக்கும்ற 'அவிட்டி' யில் மூக்கு வேர்த்து கெளம்பி, 

அடுத்த கடைக்குள்ள நொழைவான். 

அடுத்த கட, அடுத்த கடன்னு

 வேர்த்து விறுவிறுக்க அலைவான்.

 யாருமே இவன் மொதல்ல கேள்விப்பட்ட வெலக்கி ஒட்டிக்கூட வரவே மாட்டாங்களே. 


தவிச்சி இப்ப அந்த மொதக்கடைக்கே வந்து சரண்டர் ஆகி "நீங்க தான் நியாயமா வெலை சொன்னீங்க. இந்தாங்க நகய வாங்கிக் கிட்டு பணத்த குடுங்க" 


கயிறு போட்டு பஜாருக்குள்ள விட்டாங்கென்னு இவனுக்கு எப்படி தெரியும். 


கயிறு போட்டு விட்ட இந்த மொதலாளி "அடடே, நான் சொன்ன தொகைக்கு இப்ப இன்னொரு ஆளுட்ட பழசு ஒன்ன வாங்கிட்டனே. இப்ப பணம் இல்ல. பதினஞ்சு நாளு கழிச்சி வா. பாப்பம்" 


ஓடி, ஓடி மூச்சிறைக்க தவிச்ச மொயல, 

கம்பால ஓங்கி தலயில அடிக்கிற கத இது தான். 


....

Apr 3, 2021

தஞ்சை ப்ரகாஷ் என்ற அற்புத ஆளுமை

 தஞ்சை ப்ரகாஷ் என்ற அற்புத ஆளுமை 

- R.P. ராஜநாயஹம் 


'பொறா ஷோக்கு' தஞ்சை ப்ரகாஷ் சிறுகதை. 

ஷம்ஷாத் பேகம் தன் மகள் 17 வயசு ஜைத்தூனை காசீம் மொகைதீன் ராவுத்தரோட கோர்த்து விடுறா. 


ப்ரகாஷூடைய இன்னொரு கதை 'அங்கிள்'. 

மிஷன் தெரு எலிசு தன் மகள் லிடியாவை சாமி பிள்ளையோட சேத்து விடுறா. 


காலம் தான் என்னமாக ப்ரகாஷ் கைவண்ணத்தில் ஓவியமாக தீற்றப்பட்டு விடுகிறது. 


பல பிள்ளைகளை பெற்று விட்ட ஷம்ஷாத்தும், எலிசும் பருவ வயது மகள்களின் வாழ்வை எத்தகைய வசதியான பெரிசுகளான காசீமோடும், சாளியோடும் இணைத்து இயல்பாய் தீர்வு காண்கிறார்கள். 


'மிஷன் தெரு ' குறுநாவல் காட்டும் சரித்திர காலம். 

எஸ்தர் இதில் லாசரஸை மணமுடிக்கும் நிர்ப்பந்தம். 


எஸ்தர் தன் பருவத்தில் காணும் வெள்ளைக்காரன் ஸ்டோன் துரை, மற்றும் காதலன் வில்லி, 


மஸ்தானோடு ஓடிப்போகும் ஜைத்தூன்,


பாண்டிப்பயலோடு கல்லறைத் தோட்டத்தில் படுக்கும் லிடியா. 


காசீம், சாளி, சேடிஸ்ட் லாசரஸ் மூவரும் அந்த குமருகளின் அந்தரங்கத்தை அறிந்த பின்னரே பெண்டாள்கிறார்கள். 


தஞ்சை ப்ரகாஷ் என்ற அதி மானிடனை நான் முதன் முதலாக கி. ரா மூலமே அறிந்தேன். 

சந்தித்த உடனேயே நான் தி. ஜானகிராமனுக்கு வெளியிட்டிருந்த நினைவு மதிப்பீட்டு மடலுக்காக பாராட்டினார். "சரியான நேரத்தில செஞ்சீங்க" 


கி. ரா. வுடைய கன்னிமை, அம்பையின் 'சிறகுகள் முறியும்', க. நா. சு. வோட 'பித்தப்பூ' எல்லாத்துக்கும் ப்ரகாஷ் தான் பப்ளிஷர். 

அந்த புத்தகங்கள் என்னிடம் இருந்ததால் அவரை பல காலமாக அறிந்திருந்தேன். 


அப்புறம் கி. ரா வருகை தரு பேராசிரியராக புதுவை பல்கலை கழகத்தில் நடத்திய' நாட்டுப் புறக்கதைகள் ' பற்றிய கருத்தரங்கத்தில். 

ப்ரகாஷ் அதில் ஒரு கட்டுரை வாசித்தார்.

அங்கே கி. ரா. பற்றி என்னிடம் ப்ரகாஷ் கரிசனத்துடன் சொன்னார் : " நைனா மெலிஞ்சிட்டார். சுகர் அவர படுத்துது." 


மூன்றாவதாக அவரை 

டாக்டர் ச.வீரப்பிள்ளை வீட்டில் 

அசோகமித்திரன் படைப்புகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வில். 


அவரைப் பற்றி ஒரு தெளிவான நினைவு என்னில் இன்றும் உண்டு. எப்பேர்ப்பட்ட ஆளுமை. 


இன்னும் அதிகமாக அவரோடு பழகி நட்பு பாராட்ட முடியாம‌ல் போனது துரதிருஷ்டம். 


அதனாலென்ன. அவருடைய படைப்புகள் இருக்கின்றன. எஞ்சிய என் காலத்தில் அவரோடு உரையாட அவை போதும்.


"தஞ்சை பிரகாஷ் பற்றி  நான் நினைத்து வியக்காத நாளே கிடையாது. நிஷ்காம்ய கர்மம் என்று ஒன்று சொல்வார்கள். அப்பதத்துக்கு எனக்கு அவரைத்தான் நினைக்கத் தோன்றுகிறது" - அசோகமித்திரன் கணையாழியில் 2000 ஆண்டு ஜனவரியில் இப்படி எழுதினார்.


https://m.facebook.com/story.php?story_fbid=3027628227450623&id=100006104256328


.......

R. P. ராஜநாயஹம் பற்றி கவிஞர் யுக பாரதி

 R. P. ராஜநாயஹம் பற்றி 

கவிஞர் யுக பாரதி 


" எத்தனை அழகாக எழுதுகிறீர்கள். 

தங்கள் பதிவுகளை தவறாமல் வாசிக்கிறேன்.

 சினிமா குறித்து தாங்கள் எழுதிவதில் 

  அத்தனை ருசியெனக்கு..மகிழ்ச்சி


 நான் உங்கள் எழுத்துகளின் வழியே ஊக்கம்பெறுபவர்களில் ஒருவன்."

Apr 2, 2021

'அரசியல் பிழைத்தோர்' நூல் - பா. அசோக்

 ஞானதகப்பன் என நான் கருதும் திரு.R.P.ராஜநாயஹம் அவர்களின் நூல் இது.. 


பல்துறை அறிஞர் அவர்..


அரசியல், இலக்கியம் ,ஓவியம் இசை,சினிமா, நகைச்சுவை என அவர் தொடாத துறைகள் இல்லை...

 

Master of all trades , Jack of none..


நுண்மாண் நுழைபுலம் என்ற சொல்லின் நடமாடும் உருவம் Rajanayahem R.p. ..


Blessing in disguise என விளம்பப்படும் கலைஞருக்கு சமர்ப்பணமான இந்நூலில் கலைஞரின் பேச்சொன்று, 


" அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி, சொந்த கையால் தீர்ப்பு எழுதக்கூடியவர் " ... 


இப்போதும் தேர்தல் களம் கலைஞரை மிஸ் செய்கிறதல்லவா..?


காமராசரின் தாய் கருவாடு விற்றது பற்றி பேசிய கலைஞருக்கு கண்ணதாசன் தந்த எதிர்வினை...


ஒன்றுக்கு மேலிருந்த மதுபெர்மிட்டை சரண்டர் செய்ய கண்ணதாசனை கேட்டபோது, ஒரு காதலிக்குமேல் வைத்திருப்பவர்கள் சரண்டர் செய்வார்களா என அன்றைய முதல்வரை வினவியது...


கணக்கு கேட்டவருக்கு பேராசிரியரின்  பதில்...


மு.க. அழகிரியின் வெள்ளந்தித்தனம்..


வலம்புரி ஜான், நெடுஞ்செழியன், டி.வி.நாராயணசாமி, ஜேப்பியார், வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம்,  கா.காளிமுத்து, என 60 களின் அரசியலில் ஆரம்பித்து மோடி வரை இதில் காணலாம்...


நூலாசிரியரின் மாமனாருக்கும் 

சீமான் மாமனாருக்குமான உறவு ,

கொடுக்கல் வாங்கல் பற்றி தம்பிகள் படித்தறிதல் நலம்..


அரசியல் நாகரீகம் பற்றி

ஆளாளுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும் காலத்தில், அரசியலுக்கும் நாகரீகத்துக்கும் பன்னெடுங்காலமாய் தொடர்புண்டா என நம்மை கேட்க செய்யும் நூலே இது.


அவசியம் வாசியுங்கள் 


A Political Nostalgia...


...