Share

Jul 16, 2019

படியாது


என்னுடைய பழைய சகா ஒருவரின் மாமனார் பற்றி இவருக்கு ரொம்ப ரொம்ப ஆவலாதி. உறவினர்களிடமெல்லாம், சினேகிதர்களிடமும் கூட எப்பவும் திட்டிக்கொண்டே இருந்து கொண்டிருந்தார்.

மாமனார் நல்ல பிசினஸ் மேன்.
சகா நல்ல பணக்காரர்.
மாமனாரிடம் கொஞ்சங்கூட பண்போ, நாகரீகமோ, நடவடிக்கைகளில் மேன்மை, இயல்பில் சிறப்பு எதையுமே இவரால் காண முடியாமல் போயிற்று.
சொந்த ஊருக்கு போய் இருந்த போது மாமனாரின் அப்பாவை சந்தித்திருக்கிறார்.
மாமனாரின் அப்பா தொன்னூறு வயதெல்லாம் தாண்டியவர். நிறைய பிள்ளைகள். நிறை வாழ்வு வாழ்ந்து விட்ட முதியவர்.
சகாவின் மாமனார் தான் அவருக்கு மூத்தமகன்.
முதியவரிடம் அவர் மகன் பற்றி தன் மனக்குறைகளை மொத்தமாக கொட்டியிருக்கிறார். குமுறி தீர்த்திருக்கிறார்.

எல்லாவற்றையும் காது கொடுத்து கேட்டு விட்டு பெரியவர் கேட்டிருக்கிறார்.
”நீங்க கல்விக்காக எத்தன வருஷம் செலவழிச்சிருக்கீங்க?”
சகா காலத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி கிடையாது. ஒன்னாப்புல இருந்து தான் கல்வி.
கணக்கு போட்டு பார்த்து விட்டு சொல்லியிருக்கிறார்
“ பதினஞ்சு வருஷமுங்க.”
முதியவர் “ என் மகன் கல்விக்காக மூணு வருஷம் தாங்க செலவழிச்சான். அவன் அவ்வளவு தாங்க”

Jul 13, 2019

இரங்கல் எப்போதும் அபத்தம்


கீட்ஸ் மறைந்த போது ஷெல்லி அதிர்ந்து போனான். அடுத்த வருடமே அவனும் மறையப்போகிறான் என்பது பெருந்துயரம். அதை அறியாமலே கீட்ஸ் பற்றி கதறி ஒரு இரங்கல் கவிதை எழுதினான்.
ஒவ்வொரு பேராவிலும் புலம்பினான்.
A lengthy elegy.

I weep for Adonais – he is dead!
Oh weep for Adonais…
Most musical of mournars, weep anew…
Thy youngest, dearest one has perished..
He will awake no more, oh, never more..
Ah, woe is me..
Grief returns with the revolving year…

கீட்ஸ் இருபத்தாறு வயதை கடக்கு முன் எலும்புருக்கி நோயால்.

ஷெல்லி முப்பது வயது நிறையுமுன் கடலில் மூழ்கி.
உடல் எரியூட்டப்பட்ட போது
பைரன் அங்கே இருந்தார்.


ஆத்மாநாமுக்கு இளைய வயதில் கிணற்றுக்குள் ஏற்பட்ட துர்மரணம் எல்லோரையும் அதிர வைத்த ஒன்று. 

Both Shelley and Athmanam were born to be drowned.


’என்னை அழித்தாலும் என் எழுத்தை அழிக்கமுடியாது’ என்பது ஆத்மாநாமின் சூளுரை. உயிரோடு இன்று இருந்திருந்தால் அந்த கவிஞனின் பேனா எத்தனையோ ஓவியங்களான கவிதைகளை எழுதியிருக்கும். முப்பத்து மூன்று வயது அற்பாயுள்.
’எதிர்த்து வரும் அலைகளுடன் நான் பேசுவதில்லை.
எனக்கு தெரியும் அதன் குணம்.
பேசாமல்
ஒதுங்கி வழி விட்டு ஒதுங்கி விடுவேன்
நமக்கு ஏன் ஆபத்து என்று
மற்றொரு நாள்
அமைதியாய் இருக்கையில்
பலங்கொண்ட மட்டும்
வீசியெறிவேன் கற்பாறைகளை
அவை மிதந்து செல்லும்
எனக்கு படகாக’
– ஆத்மாநாம் நம்பிக்கை
ந.முத்துசாமியின் நண்பர் சி.மணி எழுதிய ஆத்மாநாம் இரங்கல் கவிதை கீழே.

அடக்கம்
ஆத்மாநாம்,
நீ தான் முக்கியம் எனக்கு,
உன் கவிதைகளை விட. இவை
எப்போதும் இருக்கும்; ஆனால்
உனக்கு பதிலியாகாது. இவற்றோடு
பழகுவதும் வேறுவகை.
உன் கவிதைகளை விட
உன் வாழ்க்கைப் போராட்டங்கள்
உக்கிரமானவை.
கவிதையில் மூழ்கிய மாதிரி
கிணற்றில் குதித்து மூழ்கினாய்.
ஒரு வித்தியாசம்,
இவை இரண்டும்
வெவ்வேறு அடக்கம்.
..............