Share

Nov 30, 2014

மெட்ராஸில் கன்னட,தெலுங்கு தெய்வங்கள்

 
அதிகாலையில் எழுந்து ஐந்து மணி போல தி.நகர் மீராசாஹிப் சாம்பரில் நான் தங்கியிருந்த அறையிலிருந்து வாக்கிங் கிளம்புகிறேன்.
கமல் ஸ்ரீதேவி படம் போஸ்டர்! ஓஹோ!கே.பாலச்சந்தரின் 'வறுமையின் நிறம் சிவப்பு' ரிலீஸ்! கட்டாயம் பாக்கனுமே...
பனகல் பார்க் தாண்டி பாண்டிபஜார் ராஜகுமாரி தியேட்டர் தாண்டி திரும்பி சாலையை க்ராஸ் செய்து பாண்டி பஜார் சாந்தாபவன் வரும்போது ஆறு.
பெருமாள் நாயுடு, சுப்பிரமணிய ஐயர் இருவரும்
"ராஜநாயஹம்! "
அவர்களையும் அழைத்துக்கொண்டு சாந்தாபவன் காபி சாப்பிட உள்ளே நுழையுமுன் ஒரு சின்ன பரபரப்பு.
சாந்தாபவனிலிருந்து தலையில் துண்டால் தலைப்பா கட்டிக்கொண்டு வேட்டியை மடித்துக்கட்டி ஒருவர் வெளியே வருகிறார்.எவ்வளவு பெரிய மூக்கு!
அவர் தன் அடையாளத்தை கொஞ்சம் மறைக்க விரும்பித்தான் தலைப்பா கட்டியிருந்தார்.
ஆனால் இந்த தலைப்பா கூட மெட்ராஸில் தேவையில்லை.
   
பெருமாள் நாயுடு சொல்கிறார்: "கன்னட நடிகர் ராஜ்குமார்! பெங்களுரில் இவர் இப்படி நடந்து போகமுடியுமா!அங்க இவரை தெய்வமா கொண்டாடுற கன்னடர்கள் மத்தியில சுதந்திரமா ஒரு ஓட்டல்ல காபி சாப்பிட்டுட்டு போகறதை நினைச்சுப்பாக்க முடியுமா!"

சுப்பிரமணிய ஐயர்: " அடிக்கடி அதிகாலை இப்படி சாந்தா பவன் வந்து காபி சாப்பிட்டு விட்டுப் போவார்.''


மெட்ராஸ் கோடம்பாக்கம் ட்ரஸ்ட் புரத்தில் தான் ஆயிரத்துத்தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் சொந்த வீடு வாங்கி வாழ்ந்து வந்தவர் ராஜ்குமார்.அப்போது பெங்களூரில் முதல் முதலாக அவர்  வாங்கிய சொத்து ஏ.வி.எம்.செட்டியாரின் 'பேலஸ் அப்பர் ஆர்கேட் ' பங்களா.


நடிகர் என்.டி ராமாராவ் கூட அப்போது மெட்ராஸில் தான் ஜாகை.
கொல்ட்டிகள் ஆந்திராவில் இருந்து  மெட்ராஸ் வந்தால் ராமாராவ் வீட்டு வாசலில் நின்று ஒரு கும்பிடு (தேவுடு!) போட்டு விட்டுத்தான் போவார்கள்.
 
-----------------

Nov 28, 2014

எரனூறு படம் பாத்திருக்கேன்சென்னை எக்மோர் பாந்தியன் ரோட்டில் ஒரு மாடியில் ‘வேடனைத் தேடிய மான்’ அவினாசி மணி இயக்கத்தில் ஜெய் கணேஷ் தீபா நடித்த படம் புரொஜக்சன். வினியோகஸ்தர்களுக்காக.

இடைவேளையில் அவினாசி மணி ( பின்னாளில் பாண்டியராஜனின் மாமனார் ) பேசும்போது சொன்னார் : முந்தா நாள் ஒரு பையன் வந்தான். ‘அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை’ன்னு ஒரு பட பூஜைன்னு சொல்லி இன்விடேசன் கொடுத்தான்.  நான் தான் டைரக்டர்னான். நீ யாருப்பா. ஒன்ன நான் பாத்ததேயில்லையே. யாருட்ட அஸிஸ்டண்ட்டா இருந்தே’ன்னு கேட்டேன்.
‘ நான் யாருட்டயும் அஸிஸ்டண்டாயிருந்த்தில்ல சார். ஆனா நான் ஒரு எரனூறு படம் பாத்திருக்கேன். அதனால எப்படி ஒரு படம் எடுக்கனும்னு எனக்கு நல்லாத்தெரியும்’னு சொன்னான்.
பாருங்க! நாங்கல்லாம் இருபத்தஞ்சு வருடமா சினிமாவில பழம் தின்னு கொட்டை போட்டுக்கிட்டு இருக்கோம். இப்படி 200 படம் பாத்ததல்லாம் ஒரு குவாலிஃபிகேசன்னு சொல்லிக்கிட்டு எவனெல்லாமோ படம் எடுக்க வரான்.ஒரு பத்து படமாவது அஸிஸ்டண்ட்டா ஒர்க் பண்ணவேண்டாமா?” அவினாசி மணி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
....
பல மாதங்களுக்குப்பின் கிருஷ்ணவேணி தியேட்டரில் ரொம்ப பழைய படம் ‘பாசமலர்’ செகண்ட் ஷோ பார்க்கப்போயிருந்தேன். என்னுடன் ட்ராட்ஸ்கி மருதுவின் தம்பி திலகர் மருதுவும், இன்னொரு கவிஞரும் வந்திருந்தனர். திலகர் மருது அப்போது பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் திரை இயக்குனர் கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தான்.
கூட வந்திருந்த கவிஞர் அப்போது காரைக்குடி நாராயணனின் ஒரு தேங்காமூடி (!) படத்தில் உதவி இயக்குனர்.
(பின்னால் திலகர் மருதுவும் அந்த கவிஞரும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றினார்கள்!)
கிருஷ்ணவேணியில் மூன்று டிக்கட் ( நான் தான்!) எடுத்து விட்டு  பால்கனிக்கு ஏறப்போகும் நேரம் கவிஞர் “ ராஜநாயஹம்! உங்களுக்கு ஒரு இண்ட்ரஸ்டிங்க் கேரக்டரை இன்ட்ரட்யூஸ் செய்யப்போறேன்!சுந்தர்ராஜன்!சுந்தர்ராஜன்!” 
‘வாய்பொளந்தான்’ என்ற பட்டப்பெயருக்குப் பொருத்தமாக ஒரு ஆள் பேண்ட், முழங்கைக்கு மேல் மடித்து விடப்பட்ட முழுக்கை சர்ட்டுடன் எங்களை நோக்கி நடந்து வந்தார்.
“ராஜநாயஹம்,இவர் சுந்தர்ராஜன்! ‘அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை’ன்னு ஒரு படம் டைரக்ட் பண்றார். 
எனக்கு அவினாசி மணி சொன்ன விஷயம் உடனே ஞாபகம் வந்தது!

கவிஞர் “படம் எந்த அளவுக்கு வந்திருக்கு சார்?”
சுந்தர்ராஜன் “ஷூட்டிங் போகனும்... ஃபைனான்ஸ் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்.”
அவரும் பால்கனியில் எங்களுக்கு பின் வரிசையில் அமர்ந்தார்.
கவிஞர் என்னிடம் “ சும்மா பூஜைய போட்டுட்டு டைரக்டர்னு சொல்லிக்கிட்டு திரியிறாரு. பாக்யராஜோட ஃப்ரண்டுன்னு எல்லாருட்டயும் சொல்றாரு. பாக்யராஜ் கோபமாகி ‘ என்ன அவன் என் பேரை ஃபீல்டில எல்லார் கிட்டயும் சொல்லிட்டுத் திரியுறானாம்.’ ன்னு எரிச்சல் பட்டு சொல்லிக்கொண்டிருக்கிறார்”

திரும்பி மீண்டும் சுந்தர்ராஜனைப் பார்த்தேன். எனக்கு எப்படியோ இருந்தது. சினிஃபீல்டில இப்படி இளக்காரமாக கெட்டபெயர் வாங்கிவிட்டவர் எப்படி சாதிக்கப்போகிறார்?

இரண்டே வருடத்தில் ‘பயணங்கள் முடிவதில்லை’ சூப்பர் ஹிட் படம் கொடுத்தார் R.சுந்தர்ராஜன்!
 
அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை படத்தை அப்புறம் கே.ஆர்.ஜி தயாரித்தார்.

நான்கு வெள்ளி விழா படங்களை ( பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், நான் பாடும் பாடல், ராஜாதி ராஜா )குறுகிய காலத்தில்
கொடுத்து தன் பட பாடல்களுக்காகவும் பிரபலமானார் R.சுந்தர்ராஜன்!

 இனி டைரக்டர் பருப்புல்லாம் வேகாதுன்னு தெரிந்தவுடன் பின்னால் கௌரவமே பார்க்காமல் நடிகராகி விட்டார்!

Nov 27, 2014

சான்ஸுக்காக இருபது வருடமா கோடம்பாக்கம் சுத்தி...ரோகினி இண்டர் நேஷனல் லாட்ஜ். ரிஸப்ஷனுக்கு வெளியில் மீடியேட்டர் பெருமாள் நாயுடுவுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன்.
அங்கே ஒருவர் வந்தார். பெருமாள் நாயுடு என்னிடம் அறிமுகப்படுத்தினார்.
“இவர் பொதும்பு முருகன்.”
வந்தவரிடம் “ முருகா, இவர் ராஜநாயஹம். ஹிந்து ரங்கராஜன் தயாரிக்கும் ‘அழைத்தால் வருவேன்’ அஸிஸ்டண்ட் டைரக்டர்.”
பொதும்பு முருகனை ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தில் ஒரு நடிகராக பார்த்திருக்கிறேன்.
பொதும்பு முருகன் நாடக்கம்பெனி நடத்தியவர். சுருளிராஜனுக்கும் என்னத்தெ கன்னையாவுக்கும் நாடகத்தில் நடிக்கும்போது நடந்த சண்டை பற்றி சொன்னார். கன்னையாவின் மண்டையை கிண்டல் பண்ணி நாடகம் நடக்கும்போது சுருளி அடிக்கடி பேசுவார். அதனால் சண்டை. சுருளி நாடகத்தில் ஒரு ட்ரபிள் மேக்கர். ஒரு தடவை பொதும்பு முருகன் “ இனி நீ வேண்டாம். போடா” என்று விரட்டி விட்டார். ஆனால் அடுத்த ஊருக்கு நாடக கோஷ்டி போன போது அங்கேயும் மறுபடியும் வந்து கெஞ்சினார்-“அண்ணே! மன்னிச்சிக்கங்கண்ணே!”                                                                              பொதும்பு முருகன்:’’போனாப்போவுதுன்னு ‘இனி ஒழுங்கா இருடா’ன்னேன்.’’
இளையராஜா இவர் நாடகங்களுக்கு இசையமைத்த கதையைப்பற்றியும் பொதும்பு முருகன் உற்சாகமாகச் சொன்னார்.
அப்போது சுருளி, இளையராஜா இருவரும் தமிழ்த்திரையில் கொடி கட்டிப் பறந்துகொண்டிருந்தார்கள்.
பெருமாள் நாயுடு “ முருகா, ஹிண்டு ரங்கராஜன் பட பூஜை வாஹினியில நடந்தப்ப எங்கப்பா போனே? உன்னயத்தேடினென். உனக்கு ஒரு ரோல் வாங்கித்தந்திருப்பேன். நீ தான் சிக்கவே இல்லை.”
ஹிண்டு ரங்கராஜனின் படம் இரண்டு ஷெட்யூல் பெங்களூரில் முடிந்து விட்டிருந்த நேரம் அது!
பொதும்பு முருகன் உடைந்த குரலில் தன்னிரக்கத்தோடு சொன்ன பதில்  “அண்ணே! அது என் தலையெழுத்துண்ணே! இருபது வருடமா இங்க கோடம்பாக்கத்த சுத்தி சுத்தித்தான் வர்றேன். இங்கேயே தான் இருக்கறேன்.ஆனா யாரு கண்ணுலயும் சிக்க மாட்டேன்றேன். என் தரித்திரம்..நான் யாரு கண்ணுலயும் பட மாட்டேன்றேன். என் கெட்ட  நேரம்..”
அந்த டப்பா படம் “அழைத்தால் வருவேன்” ரிலீசான அதே வருடத்தில் பாக்யராஜின் “ஒரு கை ஓசை” படத்தில் ‘சுடுகாட்டு சங்கிலி’ பாத்திரத்தில் நடித்து சங்கிலி முருகனாக பிரபலமாகிவிட்டார்!
வில்லன் நடிகராக, தயாரிப்பாளராக வலம் வந்த சங்கிலிமுருகன்.

Nov 23, 2014

இந்த ஒரு ஜென்மமே போதும்

மண் குடத்தை கீழ போட்டவனும் "ஐய்யோ" ன்னான்!
பொன் குடத்தை கீழ போட்டவனும் "ஐய்யோ"ன்னு தான் சொன்னான்!


காலாற வாக்கிங் போய்க்கொண்டிருந்தேன்.
Angels whisper to a man when he goes for a walk!
ஒரு எழுபது வயது மனிதர் செக்யூரிட்டி ட்ரஸ்ஸில் அந்த வீடுகளுக்கு காவலில் நின்று கொண்டிருந்தார்.
 இருட்ட ஆரம்பித்து விட்டது. நைட் டூட்டிக்கு வந்து விட்டார்.

வயதான செக்யூரிட்டி“பார்த்துப் போங்க சார். ரெண்டு நாள்ல நாலு நாகப்பாம்பைப் பாத்துட்டேன். கட்டுவிரியன் கூட போன வாரம் அடிச்சேன்!”
நான்:“ஐயா! நீங்க ஒவ்வொரு நாளும் ராத்திரி பூரா இங்க முழிச்சிக்கிட்டு இருக்கீங்க! நான் சும்மா ஏதோ அரை மணி நேர வாக்கிங்!”
“ பாம்பு பயம் இருக்கட்டும். இந்த கொசுத்தொல்லை ராவுல தாங்கவே முடியல சார்”


மீண்டும் அந்த வழியில் திரும்பும்போது அவர் ஒரு பெரிய வீட்டில் நின்று கொண்டிருந்த நாற்பது வயது பெண் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். வீட்டில் இரண்டு ஏ.சி. பொருத்தப்பட்டிருக்கிறது. கல்யாணத்திற்கு போய் விட்டு அப்போது தான் காரில் வீட்டிற்கு வந்திருப்பார் போல!

இரட்டை பெரிய கேட் போட்ட பங்களாவின் வெளியே தான் காரில்  கணவர் இவரை வீட்டில் இறக்கி விட்டு விட்டு எங்கோ மீண்டும் போகிறார்.

அவசரமாக  கழுத்து காது நகைகளுடன் தான் அந்த முதிய செக்யூரிட்டியிடம் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்.

“ இல்லைய்யா! உண்மையாத்தான் சொல்றேன். எனக்கு வந்த கஷ்டம் யாருக்குமே வரக்கூடாது. இந்த வயசுக்குள்ள நான் அனுபவிச்சிருக்கிற கொடுமை என் எதிரிக்குக் கூட
வரக்கூடாதுய்யா. ஒரு ஜென்மத்துல ஏழு ஜென்மத்து தொயரத்தைப்பாத்தாச்சி. அழறதுக்கு என் கண்ணுல தண்ணி கூட இனிமே இல்ல..போதும் இந்த ஒரு ஜென்மமே போதும்.”

செக்யூரிட்டி: “கவலப்படாதீங்கம்மா.. அந்த ஆண்டவன் இருக்கான். ஒங்களுக்கு ஒரு கொறையும் வராது”


Every horse thinks  its own pack heaviest!
- Thomas Fuller      

                                                                                                                


Nov 21, 2014

ருத்ர தாண்டவம்


“அவள் அப்படித்தான்” ரிலீஸான காலத்தில் அதை நான் பார்க்கவில்லை.பார்க்க கிடைக்கவேயில்லை.
 சென்னையில் மிட்லண்ட் லியோ தியேட்டரில் காலைக் காட்சியாக ஒரு வாரத்திற்கு திரையிடப்பட்டபோது முதல் நாள் பார்த்தவன் தொடர்ந்து மூன்று நாட்கள் அதே காலைக்காட்சிக்கு போய்விடுவேன். ஒரு நாள் இடைவெளி விட்டு மீண்டும் மூன்று நாட்கள் தொடர்ந்து பார்த்தேன். அதன் பிறகு இன்று வரை எத்தனை தடவை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே கிடையாது.
அவள் அப்படித்தானை மிகவும் நேசித்தேன் என்றால் ருத்ரையாவின் கிராமத்து அத்தியாயத்தை மிகவும் வெறுத்தேன்.
சந்திர ஹாசனின் நடிப்பு மிகவும் மோசம்.
குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாயிருக்குமோ! – குழம்பிப்போனேன்.

அவள் அப்படித்தான் - அனந்து, வண்ண நிலவன், சோமசுந்தரேஷ்வர், கமல்,ஸ்ரீப்ரியா இவர்களின் சாதனை, அந்தப்பாடல்கள் இசையமைத்த இளையராஜா என்ற கூட்டு முயற்சியில் ருத்ரையா குளிர் காய்ந்திருக்கலாம்?? 
அதற்குப்பின் ருத்ரையா மீண்டு தன்னை நிரூபிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை.
சினிமாவில் தோற்றுப்போன மனிதர் என்று சாதாரணமாக சொல்லிவிடுவார்கள்.
அம்மைத்தளும்புகள்(?) கொண்டமுகம்,சுருட்டை முடி(?), ஏறிய நெற்றியுடன் ருத்ரையா ஒரு ரஜினி படத்தின் நூறாவது விழாவுக்கு நடிகர் சங்கக் கட்டிடத்திற்கு வந்திருந்த போது தள்ளி நின்று பார்த்திருக்கிறேன்.


வண்ண நிலவன் எழுதிய கட்டுரையை தி இந்துவில் படித்தேன்.  ருத்ரையாவின் தி.ஜா.அம்மா வந்தாள் கனவு. அதற்கு திரைக்கதை வண்ண நிலவனே எழுதியிருக்கிறார். வண்ண நிலவனிடம் ரூபாய் பத்தாயிரம் கொடுத்து ஜானகிராமனிடம் கொடுக்க டெல்லிக்கு அனுப்பியிருக்கிறார். அந்தப்பட முயற்சி கை கூடவில்லை என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஜானகிராமன் பெற்றுக்கொண்ட பணத்தை டெல்லியிலிருந்து ஓய்வு பெற்று சென்னைக்குத் திரும்பிய பின் ஜானகிராமன் கொடுத்துவிட்டார். அதற்குள் பத்து பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன என்று வண்ண நிலவன் சொல்வது நினைவுக்குழப்பம்.
ருத்ரையாவை 1976ல் வண்ண நிலவன் சந்தித்திருக்கிறார். 1977ல் திரைப்படக்கல்லூரியிலிருந்து ருத்ரையா வெளியே வந்திருக்கிறார்.
தி.ஜானகிராமன் எழுத்தில் ருத்ரையாவுக்கு ப்ரேமை. அப்புவாக கமலை நடிக்கவைக்க ஆசைப்பட்டு அம்மாவந்தாள் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அந்த முயற்சியில் தி.ஜாவுக்கு வண்ண நிலவன் மூலமாக அதே வருடம் பணம் கொடுத்திருந்தால் கூட அவர் பணத்தை திருப்பிக்கொடுக்க பத்து பதினைந்து வருடங்கள் எப்படி ஓடியிருக்கமுடியும். ஐந்தே வருடத்தில்1982ல் தி.ஜா இறந்து போய்விட்டார். ஒரு வினோத நிகழ்வு. Coincidence! தி.ஜா சென்னையில் இறந்த தேதி கூட ருத்ரையா இப்போது சென்னையில் இறந்து போன நவம்பர் பதினெட்டாம் தேதி தான்!
கிராமத்து அத்தியாயத்தில் மட்டுமல்ல. வெளி வராமல் போன மற்றொரு முயற்சி ‘ராஜா என்னை மன்னித்து விடு’ படத்தில் கூட சுமலதாவுடன் சந்திர ஹாசன் தான் கமிட் ஆகியிருந்தார். அதற்கு கமல் வேண்டும் என்று ருத்ரையா ஆசைப்பட்டிருக்கலாம் தான். ஆனால் கமல் தான் கழுவுகிற மீனில் நழுவுகிற ஆளாயிற்றே.
பின்னால் கமல் நினைத்தால் ருத்ரையாவிற்கு கிராமத்து அத்தியாயம் தோல்விக்குப்பின் மீண்டும் ஒரு வாய்ப்பு தந்திருக்க முடியாதா?

சமீபத்தில் கூட கமல் ஹாசனை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததாக வண்ண நிலவன் சொல்கிறார்.


இது தான் சினிமா ! மாய புதிர் கோட்டை!


எழுத்தாளர் அம்பையின் பெண்ணிய பார்வை ருத்ரையாவின் அவள் அப்படித்தானையும் குதறியது அபத்தம்!

இவ்வளவு நாளும் சொல்லாத ஒரு விஷயத்தை ருத்ரையாவிற்கு அஞ்சலியாகவேனும் சொல்லி விட விரும்புகிறேன்.
மகேந்திரனின் உதிரிப்பூக்களை விட ருத்ரையாவின் அவள் அப்படித்தான் மிகவும் உயர்ந்த உன்னதம்!
..........