Share

Aug 31, 2009

நட்சத்திரம், சிறகின் இறகு, சீதை

வானில் இரவில் நட்சத்திரங்கள். இருட்ட ஆரம்பித்தவுடன் ஒவ்வொன்றாய் தெரிய ஆரம்பிக்கின்றன .
லா .ச .ரா உரைநடையே கவிதை தான் .வாசனாதி திரவியங்களை எழுத்தில் கொண்டுவந்தவர் . " புத்ர" நாவலில் :
" சூரிய சாக்ஷி ஓய்ந்த பின் , இரவில் பூமி சகிக்கும் க்ரம அக்ரமங்களைக் கவனிக்க வான் அனந்தம் கண்கள் ஒவ்வொன்றாய்த் திறக்கின்றன ."
பாரதி தாசனின் பிரபலமான புல்லரிக்க வைக்கும் கவிதை கீழே :
" மண் மீது உழைப்பார் எல்லாம் வறியராம் .
உரிமை கேட்டால் புண் மீது அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம் .
இதைத் தன் கண் மீது பகலில் எல்லாம் கண்டு கண்டு
அந்திக்குப்பின் விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி !"
சிறுகதையின் திருமூலர் 'மௌனி' தன்னுடைய பிரத்யேக பாணியில் நட்சத்திரங்கள் பற்றி கொள்ளும் அபிப்பராயம் :"யாரோ ஒருவன் தன்னுடைய உன்மத்த மிகுதியில் ஜ்வலிக்கும்,விலைகொள்ளா வைரங்களை கை நிறைய வாரி வாரி உயர வானத்தில் இறைத்தான் போலும். ஆயிரக்கணக்காக அவை அங்கேயே பதிந்து இன்னும் அவன் காரியத்தை நினைத்து மினுக்கி நகைக்கின்றன."
தி ஜானகிராமன் தன் 'மலர்மஞ்சம் ' நாவலில் பார்க்கும் நட்சத்திரங்கள் :
இந்த ஆழ்ந்த மௌனம் தான்
அதன் திவ்யமான குரல்
வாரித்தெளித்துக்கிடக்கும் இந்த ஒளிகள் தான்
அதன் இளநகை.

'வழி ' சிறுகதையில் புதுமைப்பித்தன் :வானம் அந்தியந்தமும் கவ்விய இருட்டு . உயர்ந்த இலட்சியங்களை அசட்டுத்தனமாக வாரி இறைத்தது போல கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்.


.....................................
பிரமிளின் மிக பிரபலமான கவிதை :
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதி செல்கிறது .
லா ச ரா வின் உரைநடையில் தெளித்து விழும் கவிதை :
பறக்கும் கொக்கின் சிறகடியினின்று
புல்தரை மேல் உதிர்ந்து
பளீரிடும் வெள்ளை இறகு .
......
சீதையின் அக்னிப்பிரவேசம் - கதைகளிலும் ,கவிதைகளிலும் , மேடைகளிலும் அதிகம் பேசப்பட்ட விஷயம் .
லா .ச .ரா . : "சீதை குளித்த நெருப்பு .
நெருப்பின் புனிதம் சீதைக்கா ?
சீதையின் புனிதம் நெருப்புக்கா ?"
....
சீதை பற்றி நான் படிக்க நேர்ந்த இன்னொரு விஷயம் . யார் சொன்னது என்று நினைவில்லை . அந்த வார்த்தைகள் மட்டும் மறக்கவே முடியவில்லை .
" சேறு தெளித்த தாமரை போல
சீதை பிரகாசமாகவும் இருந்தாள்.
சோகமாகவும் இருந்தாள்."

இப்படி ஒரு பெண்ணை சிலவருடங்களாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
அருணாம்பிகை!The Silent Pillar of Strength ! ஸ்ருதி, மதுமஞ்சரி ஆகிய இரண்டு கன்னி தெய்வங்களின் தாய் அருணாம்பிகை!
 
 அதனாலும் இந்த வரிகள் மறக்கமுடியவில்லை. யார் சொன்னது ??..

....

Aug 28, 2009

ம்ம் காலம் கெட்டுப்போச்சி

கண்களை விற்று சித்திரம் வாங்கலாமா ? என்று ஒரு பழமொழி .
சைனி என்று ஒரு இளைஞன் . கிரிக்கெட் ரசிகன் .தோனியின் பரம ரசிகன் . சைனியின் காதலி இவனிடம் சவால் விட்டிருக்கிறாள் . ' தோனியோடு சேர்ந்து நீ நின்று ஒரு போட்டோ எடுக்க முடியுமா ?'
சைனி உடனே உத்தரபிரதேசத்தில் சாரங்க்பூரில் உள்ள தன் கடையை விற்று விட்டு ராஞ்சிக்கு வந்து பல பல பல நாட்கள் காத்திருந்து ஒரு வழியாக தோனியோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு விட்டார் . ஊருக்கு திரும்பி போய் ஏதாவது ஜவுளிகடையில் வேலையில் சேர்ந்து கொள்ள உத்தேசம் . ஊருக்கு திரும்பி போக ராஞ்சியில் உள்ள உறவினர்கள் டிக்கெட் செலவுக்கு கட்டாயம் உதவுவார்கள் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார் .
.. ....


சங்கரன் கோவில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. முத்தையா .தமிழக சட்டசபையில் 1952 to 1957 ல் நாட்டு நடப்புகளை அலசியவர் .

(அந்த 1952பொதுத்தேர்தல் திமுக தேர்தலில் போட்டியிடாத காலம் . இருந்தாலும் ஜி .கோவிந்தசாமி என்பவர் 1952தேர்தலில் ஜெயித்தபின் திமுகவில் சேர்ந்தார் . அந்த வகையில் திமுகவின் முதல் எம்.எல்.ஏ. இவர் தான். பின்னால் அண்ணா மந்திரிசபையில் கோவிந்த சாமி விவசாய மந்திரியானார் . அண்ணா இறந்த மூன்று மாதத்தில் இறந்தார் . அப்போது கருணாநிதி முதல்வர் .)

சிவாஜி கணேசன் ,பத்மினி , கண்ணாம்பா நடித்த " புனர்ஜென்மம்"
படத்தை அந்தக்காலத்தில் 1960 ல் தயாரித்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தையா .
விஷயம் என்னவென்றால் சங்கரன் கோவில் முன்னாள் எம்.எல்.ஏ. தன்
89
வயதில் இன்று திருமங்கலம் அநாதை விடுதி ஒன்றில் சேர்ந்து விட்டார். எந்த திருமங்கலம் ? இடைத்தேர்தலில் ஒரு எம்.எல்.ஏ. வை தேர்ந்தெடுக்க பல கோடி வாரி வாரி இறைக்கப்பட்டதே! அந்த திருமங்கலத்தில் தான் சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் முதல் சட்டசபையின் உறுப்பினர் இன்றைக்கு அனாதை விடுதியில் !
.. ....

"ம்ம் காலம் கெட்டுப்போச்சி"
என்ற வசனம் அறுபது ஆண்டுகளுக்கு முன் டி ஆர் மகாலிங்கம் கதாநாயகனாக நடித்த " நாம் இருவர் " படத்தில் சாரங்கபாணி பேசும் வசனம் . அப்போது இந்த வசனம் ரொம்ப பிரபலம் .

Aug 26, 2009

முக -போர்ஹே

இன்று காலை ஒன்பது மணிக்கு கலைஞர் டிவியில் பழைய பாடல்கள் ஒளிபரப்பு.

எங்க டி.வி இது .முதலில் முக முத்து பாடல் ! காக்கைக்கு தன் குஞ்சு மட்டும் தான் பொன்குஞ்சு !

" ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதை சொன்னான் தலைவன் .அண்ணன் அவன் சொன்ன சொல்லை நான் எந்நாளும் மறந்தவன் இல்லை ." சொந்த குரல் . சமுதாய சீர்கேடுகளை சாடுகிறார் .வாலிபர்களின் நாகரீக மோகத்தை ஏளனம் செய்கிறார் .

செயற்கை தனம் . வான்கோழி . சூடு போட்டுக்கொண்ட பூனை .

அடுத்து தான் எம்ஜியார் பாடல் . " உன்னை யறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் "
Charisma! எம்ஜியார் தனித்துவ அசலைப்பார்த்தவுடன் முக முத்து ஏன் எடுபடவில்லை என உடனே புரிகிறது .

தொடர்ந்து ஒரு சிவாஜி பாடல் . "பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளம் இல்லை . நல்ல உள்ளம் இல்லை ."

சசிகலா குடும்ப சம்பந்திக்கு இந்த பாடலில் நடிக்க அருகதை இல்லை . பேத்தியை சின்ன எம்ஜியார்(கருமம் ..கருமம் ..தலையில் தான் அடித்துக்கொள்ளவேண்டும் !எவன் கொடுத்த பட்டம் இது ?இந்த சின்ன எம்ஜியார் பட்டத்துடன் சிங்கத்தமிழன் பட்டத்தையும் போஸ்டர்களில் தன் பெயருக்கு முன்னாலே சேர்த்துக்கொண்டவர் . இந்த சிங்கத்தமிழன் பட்டம் அந்த காலத்தில் சிவாஜிக்கு கொடுக்கப்பட்ட அடைமொழி . ஆளுமை என்ற அளவில் சிவாஜி கணேசனுக்கே அவ்வளவு பொருந்தாத அந்த பட்டத்தை தனக்கு சேர்த்துக்கொண்டார் இந்த ஆள். ) சுதாகரனுக்கு கொடுத்தவர் .

அடுத்து ஜெமினி கணேசன் பாடல் . "மயக்கமா ?கலக்கமா ? மனதிலே குழப்பமா ? வாழ்க்கையில் நடுக்கமா ?"

இது தான் யதார்த்தம் !

...

இந்த மாதம் இருபத்தொன்றாம் தேதி எனக்கு போர்ஹே சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது .
“I will not be happy any more, but that doesn't matter, there are many other things in this world.”

அன்று என் பிறந்த நாள் . அதனால் தன்னிரக்கம் ஏற்பட்ட நிலையில் ஒரு
Emotional Retreat. என்னை தேற்றிக்கொள்ள போர்ஹே சொன்னதை நினைத்துக்கொண்டேன் . பாரதி மணி அன்று தொலைபேசியில் நான் எதிர்பாராமல் வாழ்த்து சொல்லும்போது உடைந்து அழுது விட்டேன் .

.....

தலைப்பு பற்றி ... முக வுக்கும் போர்ஹே வுக்கும் என்ன சம்பந்தம் ?

இரண்டு பேருமே நோபெல் பரிசு வாங்காதவர்கள்.

முக வுக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறதே என்கிறீர்கள் . வாஸ்தவம் . என்னவோ போங்க .

போர்ஹேயை இப்படிக்கூட அவமானப்படுத்தமுடியும் .

Aug 25, 2009

O Mehbooba, O Mehbooba


ராஜ்கபூரின் இந்தி படம் 'சங்கம்' .இந்த படத்தில் அந்த காலத்திய மற்ற எல்லா இந்தி படங்கள் போல எல்லா பாடல்களும் ஹிட் தான். ஷங்கர் - ஜெய்கிஷன் இசை.
ஹிந்திப்பட ரசிகர்கள் ஒவ்வொருவரும் இதில் ஒவ்வொரு பாடலை பிடித்த பாடலாக சொல்வார்கள்.

எனக்கு பிடித்த பாடல்
“ O Mehbooba , O Mehbooba
Tere Dil Ke Paas Hi Hai Meri Manzil-e-mashood
Voh Kaunsi Mehfil Hai Jahan Tu Nahin Maujood “இந்த ஒரு பாடலுக்கு " சங்கம் " படத்தில் வரும் பிற பாடல்கள் உறை போட காணாது.
https://www.youtube.com/watch?v=FHOugjKQ_KU

பாடல் முகேஷ் பாடியது. இந்த பாடலை காதால் மட்டும் கேட்பது போதாது. அவசியம் கண் கொண்டு அந்த பாடல் காட்சியோடு தான் பார்த்து ரசிக்க வேண்டும். ராஜ் கபூர் அட்டகாசம் ரொம்ப உச்சம். என்ன ஒரு
Lively Enthusiasm , spirit, activeness!

ராஜேந்திர குமாருடன் படகில் ஏறிவிடும் வைஜயந்தி மாலாவை கொஞ்சமும் மனசை விடாமல் மற்றொரு படகில் ஏறி துரத்தி, கவர்ந்து பாடும் ராஜ் கபூர். அந்த பனி மூட்டமும் அழகான ஏரியும் .. காண இரு கண் போதவே போதாது.

பெண்ணாக இருப்பதென்பது ஒரு "பிழை" யல்ல என்றாலும் கூட குறைந்த பட்சமாக அவள் ஒரு "அசாதாரண விசித்திரம். "
To be a woman, If not a defect, is at least a peculiarity.
மேற்கண்ட வார்த்தைகள் பெண்ணிய வாதியும் சார்த்தரின் இனிய தோழியுமான சிமோன் தி புவோ (Simone de Beauvoir) சொன்னதாகும்.

தான் கவர்ந்து செல்லப்படவேண்டிய விஷேச பரிசு என்றே தன்னை பற்றி பெண் நினைப்பவள். இதனை உணர்த்தக்கூடிய வைஜயந்தி மாலாவின் உணர்வும், பாவமும் இந்த பாடலை மிகவும் உன்னத நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது. நான் இந்த பாடல் காட்சியை மட்டும் நூற்றுக்கணக்கான தடவை பார்த்திருக்கிறேன். சலிக்கவில்லை .
பாடல் காட்சிகளில் ஷம்மி கபூரின் Arrogance பற்றி ஹிந்திப்பட ரசிகர்கள் அறிவர். உண்மையில் அவர் அண்ணன் ராஜ் கபூர் இந்த ஒரு பாடல் காட்சியில் மட்டும் தம்பி ஷம்மியை மிஞ்சி விடுகிறார்.
பாடலை பாடும் முகேஷ் கூட தன்னுடைய எல்லையை மீறித்தான் கிஷோர் குமார் பாடுவதை போல படு குஷியோடு
Tere Dil Ke Paas Hi Hai Meri Manzil-e-maqsoodஎன பாடியுள்ளார். முகேஷ் மிகவும் அமைதியாக பாடுபவராகத்தான் பெரும்பாலும் யார் மனதிலும் தோற்றம் தருவார். ராஜ் கபூர் என்றாலே முகேஷ் நினைவில் வந்து விடுவார். அந்த அளவுக்கு ஒரு அபூர்வ காம்பினேசன்.

“ Kis Baat Pe Naaraaz Ho, Kis Baat Ka Hai ham
Kis Soch Mein Doobi Ho Tum, Ho Jaayega Sangam
O Mehbooba, O Mehbooba “

எனக்கு இந்தி தெரியாது. இந்தி பாடல்களுக்கு பெரும்பாலும் அர்த்தம் கூட தெரியாது தான். அதனால் என்ன?!

சமீபத்தில் எனக்கு ஒரு அனுபவம். தமிழில் கூட ஒரு பாடல் வரி நான் நினைத்ததற்கு மாறாக வேறு வார்த்தைகள் இருந்ததை அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன்.

'ஹல்லோ மிஸ்டர் ஜமின்தார் ' படத்தில் பி பி எஸ் பாடிய " காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு " என் Favourite. அதே படத்தில் மற்றொரு அருமையான பாடல் " இளமை கொலுவிருக்கும் ,இயற்கை மணமிருக்கும், இனிய சுவையிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகம் இல்லை உலகத்திலே " என்ற பாடல். இதில் ஒரு சரணத்தில் வரும் வரிகளை " இன்று தேடி வரும், நாளை ஓடி விடும், செல்வம் சேர்ந்தபடி அமைந்திடுமா ? எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா ?" என நான் சிறுவனாய் இருந்த காலத்தில் இருந்தே பாடி வந்துள்ளேன். ஆனால் சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்னார்:
" செல்வம் சேர்ந்த படி அமைந்திடுமா " என்று கவிஞர் எழுதவில்லை
  " செல்வம் சிரித்தபடி அமுதிடுமா ?" என்று தான் எழுதினார் !"

செல்வம் சிரித்தபடி அமுதிடுமா?

Aug 24, 2009

Carnal Thoughts -22


சும்பன் மதுரை டவுன் ஹால் ரோட்டில் ரீகல் தியேட்டெர் எதிரில் அல்வாகடையில் அல்வா சாப்பிடும்போது குசும்பன் " டே ! எப்படிரா இருக்கே !" குசலம் விசாரித்தான் . சும்பன் அவனுக்கு அல்வா வாங்கி கொடுத்து " எனக்கு கல்யாணம் டா ! அடுத்த மாசம் . இன்னைக்கு தான் பொண்ணு பார்க்க போறேன் " -சந்தோசமாய் சொன்னான் .
குசும்பன் " பொண்ணு யாருடா "
சும்பன் " ஒத்தப்பட்டி தமன்னா "
குசும்பன் " டே அவளா ! ஒத்தப்பட்டிலே பாதி பேருக்கு மேலே அவளோட பழக்கம் டா ! வேணாண்டா. சொன்னா கேளு ஊருலே பாதி ஆம்பளைங்க அவள அனுபவிச்சிருக்கானுகடா !"
சும்பன் " என்ன சொல்றே . நிஜமாவா " பேயறைந்தாற்போல ஆகிப்போனான் .

.....
ஆனால் சும்பன் எதையுமே அலசி ஆராய்பவன்.'கொக்குக்கு ஒரே புத்தி ' ன்னு இருக்கக்கூடாது .எந்த விஷயத்தையும் பல கோணங்களில் பார்ப்பவன் .போலீஸ்காரன் அல்லவா !ஒற்றை பரிமாணத்தில் எதையுமே பார்ப்பது தவறு என்ற தீர்க்கமான எண்ணம் கொண்டவன் . தனக்குன்னு ஒரு பாணி வச்சிருக்கான் . அந்த முத்திரையை குத்திடுவான் .

ஒருமுறை எஸ் ஐ " கொலை நடந்த இடத்தில் கொலைகாரனின் கைரேகை மட்டும் தான் நமக்கு கிடைத்திருக்கிறது . இதிலிருந்து என்ன தெரிகிறது " என்று கான்ஸ்டேபிள் சும்பனிடம் கேட்டார் . யோசித்து அலசி சும்பன் மிகச்சரியாக நெத்தியில் அடித்தாற்போல சொன்னான் " கொலைகாரனுக்கு எழுதப்படிக்க தெரியாது என்று தெரிகிறது "
...
அடுத்த நான்காவது மாதம் மேல மாசி வீதியிலே சும்பன் வந்துகொண்டிருந்த போது குசும்பன் இவனை பார்த்து " டே எப்படிரா இருக்கே !"
சும்பன் : நல்லாயிருக்கேன் !எனக்கு கல்யாணமாகி மூணு மாசமாயிடுச்சி !
குசும்பன் : பொண்ணு யாருடா !
சும்பன் : ஒத்தப்பட்டி தமன்னா தான் .
குசும்பன் :( தன் தலையில் அடித்துக்கொண்டு ) டே ! அன்னைக்கே சொன்னேன் . கருமம் அந்த ஊருலே பாதி பேருக்கு மேல அவளோட .....
சும்பன் :(பயங்கர கோபமாகி ) நிறுத்து .நிறுத்து .போயி ஊரைப் பார்த்தேன் . ஒத்தப்பட்டி ரொம்ப ரொம்ப சின்ன ஊரு !
....

கல்யாணமான ஏழாவது வருடம் சும்பன் -தமன்னா தம்பதியருக்கு ஐந்து குழந்தைகள் .
சும்பனுக்கு ஒரு சின்ன சந்தேகம் . அந்த நான்காவது பயல் பற்றி . இந்த பக்கி மட்டும் தனக்கு பிறக்காதவன் ஆக இருப்பானோ . மற்ற பிள்ளைகளுக்கும் நான்காவது பயலுக்கும் நிரம்ப ,நிறைய்ய வித்தியாசம் தெரிந்தது .
தமன்னாவிடம் கேட்டே விட்டான் .
தமன்னா வெட்கப்பட்டுக்கொண்டே சற்றே செல்ல கோபத்துடன் சொன்னாள்:

"யோவ் ! அவன் தான்யா உனக்கு பிறந்தவன் ."

.. ..... ....குசும்பன் தன் மற்றொரு நண்பன் நிசும்பனிடம் இந்த சும்பன் மனைவி குறித்து செய்த வியாக்கியானம் கீழ் வருமாறு :

"தமன்னா தமக்கென வாழா தியாகத்தின் சீலி . அன்னார் திருமணத்திற்கு முன்பே ஊருக்காக தன்னை கொடுத்தவள். செப்பும் தரமன்று .தான், தன் கணவன் என்று சுயநலமின்றி பரந்த மனசோடு ஒரு நாலு ஆம்பளைகளுக்கு பிள்ளை பெற்று - கணவனுக்கு கொடுத்திருக்கிறாள் . அவள் பிறந்த ஊர் ஒத்தப்பட்டி
' பிள்ளை கொடுத்தாள் விளை' என பிற்காலத்தில் பொதுமக்களால் புகலப்பட்டு ,புகழப்பட்டு பெருமையடையும் என்பது திண்ணம் .சரித்திரத்தில் இடம் பெறும் என்பதை சொல்லவும் வேண்டுமோ! "

....

Aug 22, 2009

சாமுவேல் பெக்கெட்- நகுலன் கவிதையில்


No, I regret nothing, all I regret is having been born,
dying is such a long tiresome business I always found.
-Samuel Beckett.

இருத்தலின் குறிக்கோள் அற்ற தன்மை பற்றி பெக்கெட் கவலைப்பட்டவர்.
The futility of man's aspirations !
அவருடைய நாடகம்
“Waiting for Godot” என்ற பெக்கெட்டின்
Absurd Drama காத்திருத்தல் பற்றிய துயரத்தின் உச்சம் . We're all born mad. Some remain so.
“Waiting for Godot”
Mr. Godot told me to tell you he won't come this evening but surely tomorrow.
இங்கே குறிப்பிட வருவது நகுலனின் ஆங்கில கவிதை :

Death
Also waits
It has
infinite Patience.

இந்த கவிதைக்கு
inspiration பெக்கெட்டின் வரிகள் Dying is such a long tiresome business I always found.
பெக்கெட் பற்றி நகுலன் தன்னுடைய நாவல்களில் எப்போதும் பேசுவார்.
......Aug 18, 2009

ஆ.மாதவன் நாவல் "கிருஷ்ணப் பருந்து"

' மனசு மேலே போக போக ,உடம்பு என் பங்கு எங்கே ?என் பங்கு எங்கே ? என்று கேட்குமாம் . பருந்து எவ்வளவு உயரே உயரே பறந்தாலும் அதன் பார்வை கீழே கிடக்கும் செத்த எலி மேலே தான் இருக்குமாம் ' இதை தி.ஜானகிராமன் 'யது நாத்தின் குருபக்தி ' என்ற நேர்த்தியான சிறுகதையில் சொல்வார்.கதையில் வருகிற ராஜகுரு ஒரு தோட்டிபெண்ணோடு படுத்துகிடப்பார் . அது பற்றி தான் ஜானகிராமன் இப்படி சொல்கிறார் . நல்லவேளை ! தி ஜா இந்த கதையை ஐம்பது வருடம் முன் எழுதி விட்டார் .இப்போது என்றால் செத்த எலி , தோட்டிபெண் இரண்டையும் இணைத்து அலசி ஆராய்ந்து திஜாவை ஒரு தலித் விரோதி யாக சித்தரித்திருப்பார்கள் . சுந்தர ராமசாமி 'பிள்ளை கெடுத்தாள் விளை' கதை எழுதிவிட்டு அனுபவித்த வியாகுலம் கொஞ்சமா ?

1989 ல் தி .ஜானகி ராமனுக்கு ஒரு நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்டேன்.ஒவ்வொரு தபாலிலும் ஒரு ரூபாய் ஸ்டாம்பு ஒட்டி அந்த காலத்தில் ஒரு ஆயிரம் பேருக்கு அனுப்பினேன் . அப்போது ஆ .மாதவன் எனக்கு அவர்
1983
ல் வெளியிட்ட தி ஜா நினைவு மலர் ஒன்றை அனுப்பி கடிதம் எழுதியிருந்தார் . அவருக்கும் திஜாவிற்கும் இடையிலான அழகிய நட்பை பற்றி எழுதி அந்த நட்பு தான் இந்த தி ஜா நினைவு மலராக வெளிவந்தது என குறிப்பிட்டு இந்த நினைவு மலர் உங்களை மகிழ்ச்சியடைய செய்யும்
R.P. ராஜநாயஹம் ! என்றும் உற்சாகமாக குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதம் இன்னும் என்னிடம் இருக்கிறது .
இருபத்தாறு வருடத்திற்கு முன் 1982ல் நான் படித்த கிருஷ்ணப் பருந்து நாவலும் தான் பசுமையாக நினைவில் இருக்கிறது !


கிருஷ்ணப் பருந்து நாவலில்
Protagonistசாமியப்பா நல்ல வாசகர் . நிறைய படிப்பவர் .
Widower .பரோபகாரி . பழைய பாடல் ரசிகர் . சாமியப்பா ரசிக்கும் பாடல் ஒன்று என்
Favourite!
" பிரேமையில் யாவும் மறந்தேனே !ஜீவனமுனதன்பே ! என் அன்பே "
'சகுந்தலை 'படத்தில் ஆணழகன் ஜென்டில்மேன் ஜி என் பாலசுப்ரமணியமும் இசைக்குயில் எம் .எஸ் சுப்புலக்ஷ்மியும் இணைந்து பாடும் காதல் பாடல் !
எம் எஸ் : பிரேமையில் யாவும் மறந்தேனே !
ஜி என் பி : ஜீவனமுனதன்பே !
எம் எஸ் : என் அன்பே !
ஆஹா !ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல். சகுந்தலை படத்தில் எத்தனை முறை இந்த இரண்டு சங்கீத மேதைகள் துஷ்யந்தன் -சகுந்தலையாக பாடுவதை பார்த்தாலும் ஆனந்தம் கூடிக்கொண்டு தான் போகும் .

நாவலில் ஒரு சின்ன கதை ஆ .மாதவன் சொல்கிறார் .
கவி உள்ளூரின் பக்தி தீபிகையின் கதை !
- சனந்தனன் பண்டித சிரேஷ்டன் . தபஸ்வி . இவன் 'நரசிம்ம அவதாரத்தை ' காணவேண்டும் என்று தீரா ஆசை கொண்டு கானகத்தில் கடும் தவம் செய்கிறான் . மிக கடுமையான தவம் . புற்று வளர்ந்து விடுகிறது .
சாத்தன் என்ற வேடன் இதை பார்த்து விட்டு சனந்தனன் மீது இரக்கம் கொண்டு கேட்கிறான் ' சுவாமி ! தங்களுக்கு ஏதேனும் மிருகம் தேவையானால் நான் கொண்டு வந்து தருவேனே .'
சனந்தனன் கூறுகிறான் ' நான் வேண்டுவது ஒரு மிருகத்தை தான் . நரசிம்மம் !'

வேடன் சாத்தன் உடனே தேடலை ஆரம்பித்து விடுகிறான் .
ஊண் இன்றி உறக்கம் இன்றி நரசிம்ம நாமாவளியுடன் காடு ,மலை ,குகை ,வெட்டவெளி ஒன்று விடாமல் தேடி அலைகிறான் ." ஏய் நரசிம்மமே ! என் மணி சிங்கமே !" கூவிகொண்டே தேடுகிறான் . ஏகாக்கிர தியானம் . சாத்தன் உடைய 'தேடல் தீ ' பாற்கடல் குளிர்ச்சியை சூழ்ந்து எரிக்க ஆரம்பித்தபோது பரந்தாமன் எழுந்து ' என்னடா இது சோதனை ! பாற்கடலுக்கு வந்த சோதனை !' என சலித்து கானகம் வந்து நரசிம்மமாகி சாத்தன் முன் காட்சி தருகிறான் .வேடன் உடனே ஒரு புற்கொடியாலே நரசிம்மத்தின் கழுத்தில் கட்டி சனந்தனன் தவம் செய்யும் இடத்திற்கு இழுத்து கொண்டு வருகிறான் . சனந்தனனுக்கு நரசிம்மம் மேல் கோபம் வந்து விடுகிறது .சடவு . வருத்தம் .
" என்னய்யா . என்னுடைய அந்தஸ்தென்ன , யோக்கியதை என்ன . இப்படி ஒரு வேடன் தானா உம்மை எனக்கு introduce பண்ணிவைக்கணும் ."

நரசிம்மம் சொல்கிறார் " சனந்தனா ! உன் தவம் ' பனி' யாகத்தான் உதிர்ந்ததேயன்றி என்னை இழுத்து வரும் வெள்ளமாக பொங்கவில்லை .வேடன் சாத்தன் என்னை ஆத்மார்த்தமாக தேடினான் . அதனால் நான் கட்டுப்பட்டேன் ."

Snobbery க்கு சரியான சவுக்கடி !

சாமியப்பா கடைசி அத்தியாயத்தில் வேலப்பன் நாயருடைய பெஞ்சாதி ராணி மீது கொள்ளும் மையல் பருந்தின் தேடல் போன்றது . ஆனால் நரசிம்ம அவதாரம் போன்று ரொம்ப Instant !ராணி தன்னுடைய கணவன் வேலப்பன் விடுதலையாக சாமியப்பாவின் உதவியை வேண்டி தன்னையே அவருக்கு தர உடன்படும்போது சாமியப்பா உடனே , உடனே திருந்தி விடுகிற மாதிரி தெரிகிறது .

...

Aug 17, 2009

வைகைஆத்து பானைபிரியும் பிச்சையின் ஏகாதசியும்


சாயந்திரம் ஆத்தோர பயிர்குழியில் கலக்கு முட்டி ( வார்னிஷ் ) அடித்து விட்டு இருட்டு வந்த பின் வைகையாற்றுக்குள் மணல் மேட்டில் பாத்திமா காலேஜ் பிரிட்ஜ் அடியில் அமர்ந்து கஞ்சா அடித்துக்கொண்டிருந்தார்கள் .
முட்டாள் தாஸ் 'மயக்கமா கலக்கமா' பாட்டை பாடிமுடித்ததும் ஆட்டு மூக்கன் ' தாசு , 'கோமாதா எங்கள் குலமாதா ' பாடு தாசு என்றான் .உற்சாகமாக முட்டாள் தாசு 'குலமாதர் நலம் காக்கும் ' என்று பாட ஆரம்பித்தான் . தாசு பாடி முடித்ததும் ஒத்தகாதன் " திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா " என சீரியஸாக குரலெடுத்து பாட ஆரம்பித்தான் .குருவி மண்டையன் "திருத்தணி மலை மேலே எலி கொறிக்கும் " என்று உடைசல் கொடுத்தான் . ஒத்தகாதன் பாட்டில் சுதி சுத்தம் கிடையாது . மெட்டும் சரிவராது . ஒத்தகாதன் ' டே குருவி மண்டையா ! நான் பாடும்போது மட்டும் ஏண்டா இப்படி உடைசல் கொடுக்கிறே " சலித்துகொண்டே ' சரி ,இன்னொரு பாட்டு...
இதை கேளுங்கடா ! நான் நல்லா பாடுவேன் ... ஒஹொஹொ... ஓடும் மேகங்களே ! ஒஹொஹொ .. ஓடும் மேகங்களே ஓடோடி சென்று காதல் பெண்ணின் உறவை சொல்லுங்களேன் ..ஒஹொஹொ... ஓடும் மேகங்களே !"
குருவி மண்டையன் தொடர்ந்து " இங்கிருந்து கோரிப்பாளையம் வரை ஓடும் மேகங்களே! அங்கிருந்து தல்லாகுளம் தாண்டி ஓடும் மேகங்களே !தல்லாகுளம் தாண்டி ஏறத்தாழ ,கிட்டத்தட்ட அழகர்கோவில் வரை ஓடும் மேகங்களே !"
மேற்கொண்டு 'தொல்லை ' வசனமாகவே சொன்னான் ' இங்கிருந்து முப்பது மைல் தாண்டி உசிலம்பட்டி வரை ஓடும் மேகங்களே !"
ஒத்தகாதனுக்கு கஞ்சா இழுவை போதை இறங்கி விட்டது . "போங்கடா ஒவ்ரங்கசீப்புகளா ..கொஞ்சமாவது கலாரசனை வேணும்டா "ஓந்தி தள்ளி ஓஞ்சி போனான் .
கிளம்பி ஆரப்பாளையம் படித்துறை வந்து கரையேறினார்கள் .
அங்கே பிச்சை கையில் குச்சியோடு " பெட்டாளியனையே காலி பண்ணுவேண்டா நான் . ஓரு ரெஜிமென்ட்டை இங்கே இறக்கி நான் பெட்டாளியனையே காலி பண்ணுவேன் . சும்பக்கூதிகளா டே ..." கூப்பாடு போட்டு மானசீக யுத்தம் நடத்தி கொண்டிருந்தான் .
பிச்சை எக்ஸ்-செர்விஸ்மேன். இப்ப கொஞ்சம்....இல்ல .. ரொம்ப மனநிலை பிறழ்ந்து விட்டது .
குருவி மண்டையன் " அண்ணே பிச்சன்னே ! ஆத்துக்குள்ளே பிரிட்ஜ் மூனாவது தூண் , நாலாவது தூண் , அஞ்சாவது தூண் ..இந்த மூணு தூணை ஒட்டி தண்ணியிலே "பானை பிரி '' மூணு பெரிய பானையிலே போட்டுருக்கோம் . விரால் மீன் இப்ப ஒவ்வொரு பானையிலேயும் மூணு கிலோ மீனு தான் விழுந்துருக்குன்னே ! காலையிலே போனா ஒவ்வொரு பானையிலேயும் பத்து கிலோ மீனுக்கு மேலே சிக்கியிருக்கும்ன்னே ! இப்போ அங்கே நீ போகாதே ! நம்ம காலையிலே வந்து பானை பிரி யை பிரிச்சு எல்லா மீனையும் அள்ளுவோம் . இப்போ பிரிட்ஜ் பக்கம் நீ போகாதேன்னே !"

பிச்சை கண்ணில் பலப் எரிய ஆரம்பித்து விட்டது . ''எங்கேடா எந்த தூணிலே எல்லாம் போட்டிருக்கீங்க ? நான் போக மாட்டேன் .."

குருவி மண்டையன் ரிக்கார்டு போட்டது போல மீண்டும் விரிவாக ,விளக்கமாக "பிரிட்ஜ் மூனாவது தூண் , நாலாவது தூண் , அஞ்சாவது தூண் ..இந்த மூணு தூணை ஒட்டி தண்ணியிலே "பானை பிரி '' மூணு பெரிய பானையிலே போட்டுருக்கோம் . விரால் மீன் இப்ப ஒவ்வொரு பானையிலேயும் மூணு கிலோ மீனு தான் விழுந்துருக்குன்னே ! இப்ப ஒவ்வொரு பானையிலேயும் மூணு கிலோ மீனு மட்டும் தான் விழுந்திருக்கு ! காலையிலே போனா ஒவ்வொரு பானையிலேயும் பத்து கிலோ மீனுக்கு மேலே சிக்கியிருக்கும்ன்னே ! இப்போ அங்கே நீ போகாதே ! போயி பானைபிரியை இருட்டுலே மிதிச்சி ஒடைச்சிராதேன்னே " கெஞ்சுகிற தோரணையில் சொன்னான் .

" நான் போக மாட்டேண்டா !" பிச்சை சொன்னான் ."சத்தியமா நான் போகவே மாட்டேன் "

இந்த போதை கூட்டம் நடந்து அந்த முக்கு திரும்பியது .போகும்போதே குருவிமண்டையன் சொன்னான் " மெண்டலுக்கு புரியனுமேன்னு தான் திரும்ப திரும்ப சொன்னேன் . இப்போ போனாலே மூணு பானையும் சேர்த்து ஒன்பது பத்து கிலோ விராலு தேறும்னு அதுக்கு ஒரைக்கனுமே . அதான் அழுத்தி சொன்னேன் ."

வாஸ்தவம் தானே ! பெட்டாளியனை காலி பண்ணுற ஏகாக்கிர தியானத்திலே இருக்கிற பிச்சைக்கு விராலு மீனு பக்கம் கவனம் திரும்பனுமே . குருவி மண்டையன் 'சைக்கோ -சைக்காலஜி' தெரிஞ்சவன்யா !!

முக்கில் திரும்பிய பின் கொஞ்சம் நேரம் விட்டு குருவி மண்டையனும் ,தொல்லையும் நின்று எட்டி மெதுவாக பார்க்கும்போது, திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே அவசரமாக பிச்சை ஆத்துக்குள் இறங்கி விட்டான் . பிச்சைக்கி இன்னைக்கி தூக்கம் போச்சி . வைகுண்ட ஏகாதசி தான் ! ராத்திரி பிரிட்ஜ் அடியிலே ஆத்து மணலைப்பூரா அலசி முட்டுக்கால் தண்ணியிலே தவிச்சி தக்காளி விக்கவேண்டியது தான்.வேற வழியில்லை .

Aug 12, 2009

சா.கந்தசாமியின் "அவன் ஆனது" ராமு

சா கந்தசாமியின் "அவன் ஆனது '' நாவலில் மறக்கமுடியாத "ராமு" கதாபாத்திரம் நாவல் படித்து இருபத்தைந்து வருடமான பின்னும் நினைவில் நிற்கிறது . ராமு மாதிரி மனிதர்களே எங்கும் காணக்கிடைக்க மாட்டார்களா ? என்று மனதில் ஏக்கம் . இன்று சாத்தியமேஇல்லை என்பதன் யதார்த்தம் மனதை அறைகிறது . சாகாவரம் பெற்ற ரொம்ப இயல்பான நேர்த்தியான கதாபாத்திரம் 'அவன் ஆனது ' ராமலிங்கம் .

ராமுவின் சீரான வாழ்க்கை சூசகமாக தெரிவிக்கும் செய்தி டால்ஸ்டாய் சம்பந்தப்பட்டது . டால்ஸ்டாய் தத்துவார்த்த தேடல் மிகவும் பிரபலமானது . அது -
“How should one live a moral life in an ethically imperfect world ?” என்ற கேள்வி . சா .கந்தசாமியின் 'அவன் ஆனது ' ராமு தான் இதற்கான பதில் .அமெரிக்கையான ஆர்ப்பாட்டமில்லாத பதில் . சொல்லப்போனால் 'ராமு 'நாவலின் பிரதான பாத்திரம் அல்ல .கதை சொல்லி சிவசண்முகம் பார்வையிலே தான் ராமு பார்க்க கிடைக்கிறார்.விஷேசமாக அவருடைய Reticence ! Poising,Balancing Reconciliation ! Unselfish Generosity ! இன்னொன்று அவர் நல்ல வாசகர். பற்றற்ற 'தண்மை' நிறைந்த ராமு பாத்திரத்தை விரிவாக பேசி எழுதவோ செய்தால் கூட அபத்தமாகி விடும் . படிக்கிற தேர்ந்த வாசகனுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய விஸ்வரூபம் . அது தான் சா கந்தசாமி என்ற கலைஞனின் செய்நேர்த்தி !
“Is it over?
Even the full stop
Does not stop anything”
-நகுலனின் ஆங்கில கவிதை . இந்த கவிதையின் மௌன குறியீடு 'அவன் ஆனது ' நாவல் .

தி.ஜானகிராமன் " தெய்வத்துளி " என்ற வார்த்தையை பயன்படுத்துவார் . அது 'ராமு ' பாத்திரத்துக்கு பொருந்தும் என்றும் சொல்லவேண்டும் .

சிவசண்முகம், சிவாவின் அப்பா ,பத்மநாபன் , திருவேங்கடம் , அந்தோனி ,ராகவலு போன்றவர்களுக்கிடையே ராமு தெய்வத்துளி .

கமலா ,ரோஸ்மேரி , ராஜலக்ஷ்மி ,திருவேங்கடத்தின் மனைவி,சிவாவின் அம்மா , சித்தி போன்ற பெண்கள் பெண்ணியம் அறியாதவர்கள் !ஆனாலும் ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு விதமாக ஆணாதிக்கம் மீதான ஆன்ம நிராகரிப்பு (Soulful rejection i.e.,Emotional rejection -Abandonment -Avoidance) செய்கிறார்கள் . வெகு நுட்பமாக கமலா உள்பட .

Aug 11, 2009

நெஞ்சுக்கு நீதி - Buss ! Buss !

Cynical hostility

தமிழக முதல்வர் ஒரு முடிவை அறிவித்து விட்டார் .

"ஜெயலலிதாவை 'திருமதி' ஜெயலலிதா என்று தான் இனி சொல்வேன் . அவர் என்னுடைய அரசை ' மைனாரிட்டி அரசு ' என்று சொல்கிறாரே . நானும் இனி 'திருமதி' ஜெயலலிதா என சொல்லுவேன். 'செல்வி' ஜெயலலிதா என்று சொல்லவே மாட்டேன் ."


"The inherent antagonism of Karunanidhi and Jeyalalitha !" என்ற தலைப்பிலேயே ஆராய்ச்சி மாணவர்கள் டாக்டரேட் செய்யலாம்.

...


Osculation

See! the mountains kiss high heaven,

And the waves clasp one another;No sister flower would be
forgiven

If it disdained its brother;

And the sunlight clasps the earth,

And the moonbeams kiss the sea:

-What are all these kissings worth,If thou kiss not me?

~ Shelley

நகுலன் எழுதிய ஆங்கில கவிதை ஒன்று :

Kiss me
She said
I turned
The other cheek

ஹாலிவுட் நடிகர் டோனி கர்ட்டிஸ் “Some Like it Hot”படத்தில் நடிகை மரிலின் மன்றோவுடன் நடித்தவர் . 'அந்த படத்தில் மரிலின் மன்றோ வை முத்தமிட்டபோது எப்படியிருந்தது ?' என அவரிடம் கேட்கப்பட்டபோது

" ஹிட்லரை முத்தமிட்டது போல இருந்தது !" என்றார் .


Buss ! Buss !

..

Aug 10, 2009

Survival and Career


வாழும் வகை ஆளுக்கு ஆள் வேறுபடும் .ஒவ்வொரு தொழிலிலும் வெவ்வேறு வகையான போராட்டங்கள் உண்டு . போஸ்ட் ஆபீஸில் வேலை. கஸ்டம்ஸ் வேலை .இரண்டுமே மத்திய அரசாங்க வேலை தான் . என்றாலும் கஸ்டம்ஸ் டிபார்ட்மென்ட்டில் வேலை பார்க்கிறவருடைய அந்தஸ்து சொல்லி தெரியவேண்டியதில்லை .

போலீஸ் வேலை
Round the clock Duty என்றாலும் கஜலக்ஷ்மி அருள் பெற்றது .
Power! அதிகாரம் !!

சாமானியன் வாழ்வு பரிதாபம் .

Survival என்பது டார்வின் தியரியை ஞாபகபடுத்தும் .
வாழும் வகை பற்றி ராஜசுந்தரராஜன் விளக்கம் கீழே :

"நாக்கு தொங்க வாய் நீர் வடிய நாறுகிற திசையெல்லாம் ஓடுது
நாய் .
கரணம் போட்டு கட்டிய வீட்டில்
இருந்து தின்னுது சிலந்தி ."

..
தொழில் சார்ந்து வாழும் வகை பற்றி எம் ஆர் ராதா வின் கிண்டல் - பாலும் பழமும் படத்தில் டாக்டராக நடிக்கும் சிவாஜி கணேசன் நர்சாக நடிக்கும் சரோஜா தேவியை திருமணம் செய்து கொள்வார் . அதற்கு எம் ஆர் ராதாவின் சர்காஸ்டிக் கமெண்ட் :
" டாக்டர் எல்லாம் நர்சை தான் கல்யாணம் பண்ணிக்கணும் ... எஞ்சினியர் எல்லாம் சித்தாளை தான் கல்யாணம் பண்ணிக்கணும் .."


...
"பள்ளிகொண்டபுரம் "நாவல் நீலபத்மநாபனுக்கு பேர் வாங்கி கொடுத்த நாவல். க .நா. சு ., தி ஜானகிராமன் , பாரதிமணியின் துணைவியும் ,க .நா. சு வின் மகளுமான ஜமுனா மாமி துவங்கி இன்றைக்கு நாகார்ஜுனன் வரை பலரால் கொண்டாடப்பட்ட நாவல் .
பள்ளிகொண்டபுரம் நாவலில் பிஷாரடி என்ற கதாப்பாத்திரம் நாவலின் முக்கிய பாத்திரமான அனந்தன் நாயரிடம் திருவனந்தபுரம் டவுன் பஸ்ஸில் சொல்லுகிற வசனம் " வாழ்க்கை ஓரு கரையை போய் அடையவில்லை . என் மூத்த மகனுக்கு பி .ஏ . இல பர்ஸ்ட் க்ளாஸ் இருந்தது . லஞ்சம் கொடுத்து தான் எம் . ஏ .க்கு அட்மிசன் கிடைத்தது . எம் . ஏ . பாசாகி தான் என்ன புரயோஜனம் ? ட்ரான்ஸ்போர்ட்டில் ஓரு கிளார்க் வேலை க்கு லஞ்சம் வகையில் இது வரை ஐயாயிரம் செலவாச்சு ! அடுத்தவன் ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே எம் பி பி எஸ் பாசாகி விட்டு இன்னும் வேலை கிடைக்காமல் அலைகிறான் . ஆமா.. எஞ்சினீரிங் பாசாகி இருந்த உங்க மகனுக்கு வேலை ஆயிட்டுதா ? "


ரொம்ப ஓவர் !
நாவல் எழுதி பிரசுரமான வருடம் 1970!!
எம் பி பி எஸ் படித்து விட்டு ரெண்டு வருடம் வேலையில்லாமல் யாரும் இந்தியாவில் இருக்க முடியுமா ? இந்தியாவில் எந்த மூலைக்கு போனாலும்
doctors won't starve. (சும்மாவா! கல்யாண மார்க்கெட்டில் இன்று கூட டாக்டர் மாப்பிள்ளைக்கு தான் டிமாண்டு அதிகம்.)1970க்கு முன் பி ஏ படிச்சவன் எம் ஏ படிக்க லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்திருக்குமா ? ஒருவேளை கேரளாவில் இவையெல்லாம் சாத்தியமாயிருந்திருக்குமோ ?

Aug 8, 2009

The Collective Imagination of Many Bright People!

லண்டன் மாநகர செய்திகள்

செய்தி ஒன்று :

"மாதம் மும்மாரி பொய்கிறதா? " என்று சாவகாசமாக அந்த காலத்தில் மகாராஜா மந்திரியிடம் கேட்பாராம் .

எலிசபெத் மகாராணியாருக்கு அப்படி ஒரு விசாரம் .

ஏன் ஒருவராலும் சீர் குலைந்து விட்ட இன்றைய பொருளாதார சிக்கல் பற்றி முன்னரே தீர்க்கமாக கண்டு சொல்லமுடியாமல் போயிற்று . ஏன் ஒருவருமே இதை குறிப்புணர முடியாமல் ஆனது ?

இது குறித்து விளக்கம் கேட்டிருக்கிறார் .


Sisyphean challenge !

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இதற்கு பதில் சொல்ல எட்டு மாதங்கள் ஆயிற்று !

ஒரு "பொருளாதார மேதைமை வாய்ந்த குழு இதனை
Herculean task ஆக பாவித்து எடுத்து ஆராய்ந்து அறிந்து லண்டன் மகாராணியாருக்கு எழுதினார்கள் .

“Principally a failure of the collective imagination of many bright people,both in this country and internationally to understand the risks to the systems as a whole.”

....

செய்தி இரண்டு

ஹிந்தி நடிகர் ஷாருக் கான் லண்டன் மாநகரில் செம்மையான ஏரியாவில் இருபது மில்லியன் பவுண்ட் விலை கொடுத்து அருமையான ஒரு Elegant and fashionable அப்பார்ட்மென்ட் வாங்கியிருப்பதாக செய்தி !

Aug 6, 2009

கவிஞர் ராஜசுந்தரராஜன்

rajasundararajan said...
Dear Rajanayahem,
Your length of writing was very convenient to me, for I was using only office computer. Incidentally, I had been given compulsary retirement by 15th April. Yet, I am sad to know about your problem. Let us hope you get your opening very soon. Like you, I too maintain my pen name as it is modified by Pramil.
Take care.
Rajasundararajan
Monday, 06 April, 2009
...


வியாழக்கிழமை 06.08.09

'ஒரு இடைவேளை ' என்ற என் பதிவுக்கு வந்த மேற்கண்ட பின்னூட்டம் நான் எதிர் பாராத ஆச்சரியம் .
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் பின் பகுதியில்' உயிர் மீட்சி ' என்ற அழகான தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பு . சுந்தர ராமசாமியின் அற்புதமான முன்னுரையுடன் . கவிஞர் ராஜசுந்தரராஜன் கவிதைகள் .
சட்டென்று நினைவுக்கு வருவது :

" சிறகுகள் சிறைப்படவில்லை .பறக்க முயன்றேன் . முடிய வில்லை .
கால்கள் கணனிக்குள் "


" வான பரியந்தம் உயர்ந்து நிற்கும் கோபுரத்தில் ஏறி நின்று
'இல்லை' என்று கைவிரிக்கும் சிலுவை "

ஒரு கவிதை 'ஓவியம் தீட்டும் தூரிகையால் ஒட்டடை எடுக்கக்கூடாதா ?' என வினவியது நிழலாடுகிறது .
அந்த நேரம் ராஜசுந்தரராஜனின் பல கவிதைகள் எனக்கு மனப்பாடம் . இப்போது சுந்தர ராமசாமி யின் ஒரு வார்த்தையில் சொல்வதானால் " நினைவின் ஞாபக அடுக்குகளில் காலத்தின் பனிக்கட்டி !"

என் வாழ்வில் நான் சந்திக்க முடியாமலே போன புனிதர் " ராஜ மார்த்தாண்டன் ". என்னுடைய துரதிர்ஷ்டங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று . ராஜ மார்த்தாண்டன் கொண்டாடிய கவிஞர் ராஜசுந்தரராஜன் என்பதும் இப்போது நினைவுக்கு வருகிறது .

மேற்கண்ட ராஜசுந்தரராஜனின் பின்னூட்டம் சொல்லும் விவரங்கள் கூட விஷேசமானவை தான் . அவருக்கு ராஜநாயஹம் ப்ளாக் வாசிக்க ' length of writing 'சௌகரியமாக உள்ளது . அலுவலகத்தில் கட்டாய பணி ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறார் . சொந்த சோகத்திலும் எனக்கு ஆறுதல் சொல்கிறார் . என்னையும் அவருடன் ஒப்பு நோக்குகிறார் .பிரமிள் தான் இவர் பெயரையும் மாற்றியிருக்கிறார் .பரண் மீது ஏறி " உயிர் மீட்சி " கவிதை தொகுப்பை தேடி துழாவி எடுக்கப்போகிறேன் .
....
சனிக்கிழமை 08.08.09
கண்டேன் "உயிர் மீட்சி " கவிதை தொகுப்பை ! பரணில் இருந்து கண்டெடுத்து விட்டேன் !!
நன்றி ஆறுமுகம் சார் ! உயிர் மீட்சி கவிதைகளை நீங்கள் அனுப்பவேண்டியதில்லை .தங்கள் நல்லெண்ணம் என்னை நெகிழ்த்தியது .
ராஜசுந்தரராஜனின் " உயிர் மீட்சி" யினில் மீண்டும் முக்குளித்தேன் . ஒவ்வொரு புத்தகமும் மீண்டும் புரட்டும்போது முன்பு புரட்டிய காலத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து தந்து விடுகிறது . இந்த உணர்வு இறுக்கம் கூட ரசிக்கத்தகுந்தது தான் .
சு.ரா முன்னுரையில் குறிப்பிடும் கவிதை
" வறட்சி "
வானுக்கு இல்லை இரக்கம் . பூமிக்கு
வெய்யில் என்று வருகிறது நெருப்பு
காற்றுக்கு விடை சொல்லி த்துக்கித்து இருக்கிறது வீதி .
அடி உறைகளும் ,கிணற்றுக்குள்
வாய் வறண்டு சுருண்டு விட்டன .
தாகித்து அணுகுகிற வாளிக்கு
என்ன சொல்வது பதில் ?
கறங்கு வெள் அருவி
கல் அலைத்து ஒழுகிய
பறம்பும் இன்று வெறும் பாறை .
..
என் நினைவில் நிழலாடிய அந்த ஒட்டடை தூரிகை கவிதை
பயன்பாடு
ஓவியம் எழுதவோ தூரிகை -
ஒட்டடை அடித்தால் என்ன ?
வீணையின் நரம்பைத்
துணியுலர்த்தும் வேலைக்கு எடுத்தால் என்ன ?
எழுத்துக்கள் சொல்லாகி ப்பொருள் குறித்தல் விடுத்துப்
பார்வையை நிறுத்து க்காட்டும்
படிக்கற்கள் ஆகிறதை கண்டேன்
கண் மருத்துவமனையில் .
இந்த கவிதை "சிதம்பரம் நடராஜன் கால் உயர்த்துவது கொசு கடித்ததால் கூட இருக்கும் !" என்று சொன்ன க. நா .சு வை ஞாபகப்படுத்துகிறது . கவிதை அதிர்ச்சி !! எழுத்துக்கள் பொருள் குறிக்காமல் படிக்கற்களாகும் கண்மருத்துவமனை யதார்த்தம் !


கீழ்க்கண்ட இரு கவிதைகள்(வீடு ,துண்டிப்பு ) அந்த காலத்தில் நான் கவி மனதை தரிசித்த அனுபவத்தை தந்தது என்பதை சொல்ல வேண்டும் . பாரதியின் பரந்த மனசு உண்மைக்கவிஞனிடம் இயல்பாய் நேர்த்தியாய் வெளிப்படும் . கவிஞன் ஓரு பொன்மனச்செம்மல் .தமிழ் கவி பாரதி சுந்தர தெலுங்கினில் பாட்டிசைக்க விரும்பினான் . தன்னுடைய வறுமை நிலையிலும் சிங்க மராட்டியர் தம் கவிதைகளுக்கு சேர நாட்டு தந்தங்களை பரிசளிக்க வேண்டி ஏங்கினான் ! பரந்த தாராள மனதுடன் " காக்கை குருவி எங்கள் ஜாதி " என்று குதூகலித்தான் !
ராஜ சுந்தர ராஜன் காக்கையையும் அடைக்கலாங்குருவியையும் தன்னுடைய குடும்ப உறுப்பினராகவே கருதுகிறார் .
வீடு
வீடொன்று வேண்டும்
வெயிலையோ மழையையோ
பகைப்பதற்கு அல்ல .
காக்கையும் கூடு கட்டும் முட்டையிட
..
துண்டிப்பு
மழை இல்ல தண்ணி இல்ல
ஓரு திக்குல இருந்துங்
கடதாசி வரத்து இல்ல
அடக்கலாங்குருவிக்கு
கூடு கட்ட என் வீடு சரிபடல
நான் ஒன்டியாத்தான் இருக்கேன் இன்னும் .


இந்த கவிதைகளை எழுதிய தங்க மனம் தன்னுடைய 'கட்டாய வேலை ஒய்வு 'சூழலிலும் ராஜநாயஹம் ப்ளாக் எழுதமுடியாமல் போன சூழலை எண்ணி வருந்தியது இயல்பான விஷயம் தானே !

Aug 5, 2009

அப்பா

 தாயன்பை விடவும் தகப்பனின் ஆளுமையும் அன்பும் மகத்தான எல்லையை தொடக்கூடியது.

எதிர்மறையாக சுகுமாரன் எழுதிய அப்பா பற்றிய கவிதை நினைவுக்கு வருகிறது.புதுமைப்பித்தனுக்கு மறுமணம் செய்துகொண்ட அப்பாவுடன் சீரான உறவு இருந்ததில்லை. 
ஜெயகாந்தன் அப்பா ஆஸ்பத்திரியில் இறந்த செய்தியை சாவகாசமாக வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு ஓரு தூக்கம் போட்டு எழுந்து அத்தையிடம் சொன்னதும் ,பின் சில மாதங்களுக்கு பின் இரவு தூக்கம் விழித்து "அப்பா அப்பா " என்று கதறி அழுதார் என்பதும் நினைவுக்கு வருகிறது .

 "அப்பா" ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தோற்றமளிக்கிறார். மறக்க முடியாத மற்ற சில அப்பாக்கள் 
1.கநாசு வின் அப்பா 
2 . சுந்தர ராமசாமியின் அப்பா. 
3. அசோகமித்திரனின் அப்பா (அப்பாவின் மரணம் பற்றி எவ்வளவு எழுதியிருக்கிறார் !)
4. காலச்சுவடு கண்ணனின் அப்பா ( அப்பாவுக்கு சலிக்காமல்,தொடர்ந்து,விடாமல் கண்ணன் திவசம் கொடுத்துக்கொண்டே ,கொடுத்துக்கொண்டே ..திவசம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் என்று பலரும் சலிக்கிறார்கள்.இருக்கட்டுமே. எனக்கு சந்தோசம் தான் .அப்படிப்பட்ட அப்பா! அப்படி ஓரு அபூர்வமான பிள்ளை கண்ணன்!)

பலவருடங்களுக்கு முன் புதுவையில் பிரபஞ்சன் ஓரு நாவல் -" மகாநதி " எழுதும்போது என்னிடம் சொன்னார் . அப்போது அவருக்கு அப்பாவுடன் பேச்சு வார்த்தை கிடையாது. மனஸ்தாபம் !பாரதி வீதி அப்பா வீட்டில் பிரபஞ்சன் மாடியில் குடும்பத்துடன் குடியிருந்தார் . "மகா நதி " நாவல் அவருடைய அப்பாவைப்பற்றி ! அப்பா மதுக்கடைகள் நடத்தியவர் . ஆனால் ஒரே மனைவி தான் அவருக்கு .பிரபஞ்சனின் அம்மா ! புதுவை கலாச்சார சூழலில் மதுக்கடை முதலாளிகள் பல தாரங்கள் உள்ளவர்களாய் இருப்பது தான் இயல்பு . அப்பா எப்படி பல திருமணம் செய்யாமல் இருந்தார் ! இந்த ஆச்சரியம் தான் தன்னை " மகாநதி " நாவலை எழுத தூண்டியதாக பிரபஞ்சன் புதுவையில் என்னிடம் கூறினார்.

Aug 1, 2009

மம்மி ரிடர்ன்ஸ் 3 : சாரு நிவேதிதா


மம்மி ரிடர்ன்ஸ் 3 : சாரு நிவேதிதா எழுதிய பரபரப்பான கட்டுரையில் ராஜநாயஹம் பற்றி
” R.P. ராஜ நாயஹம் சுமார் 25 ஆண்டுகளாக எனது நண்பர். அவர் எழுதி காலச்சுவடுவில் வெளியான “ ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை “ என்ற அவரது கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறேன்.'
'சொல் புதிது 8ல் சாரு நிவேதிதாவுக்கு எச்சரிக்கை செய்து ‘ சாரு தொடங்க வேண்டிய புள்ளி தளைய சிங்கத்தின் ‘ தொழுகை ‘ கதைதான். ஆனால் அபாயமிருக்கிறது. தளையசிங்கம் அவசரமாக அடித்துக் கொல்லபட்டார் என்று ஜெயமோகன் எழுதியதை படித்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது. 1971ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோருக்கு நன்னீர் கேட்டு போராட்டம் நடத்தியதற்காக போலீஸாரால் தளையசிங்கம் தாக்கப்பட்டார். 1972ம் ஆண்டு ‘ மெய்யுள் ‘ என்ற கருத்தாக்கத்தை நிறுவுகிறார். 1973ம் ஆண்டு சில மாதங்கள் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாகி மரணமடைகிறார். இது தளையசிங்கத்தின் ‘ பிரபஞ்சயதார்த்தம்‘ என் ற கட்டுரையில் சுந்தரராமசாமி நமக்குத் தரும் தகவல். 22.02.2001 அன்று திருச்சி வந்திருந்த சுந்தரராமசாமி அவர்களிடன் நான் நேரில் இதுபற்றிக் கேட்டபோது தளையசிங்கத்தின் சகோதரர் மு.பொன்னம்பலம் கொடுத்த தகவலைத்தான் எழுதியதாக கூறுகிறார். இந்த விபரங்களைக் குறிப்பிட்டு ஜெயமோகனுக்கு நான் கடிதம் எழுதுகிறேன். அதில் தளையசிங்கம் பாலியல் கதைகளுக்காக அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தொனியும் அவருடைய விமர்சனத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி எழுதுகிறேன். ஜெயமோகன் இதற்கு ஐந்து பக்கத்துக்கு பதில் எழுதுகிறார். என்னுடைய கடிதம் சொல் புதிது 9-ல் விளக்கங்களுடன் பிரசுரிக்கபட இருப்பதாக அதில் குறிப்பிடுகிறார்.சொல் புதிது 9-ல் தளையசிங்கம் பற்றிய என் கடிதம் மிகவும் சுருக்கப்பட்டு எழுத்துப் பிழைகளுடன் (தலையசிங்கம்) ஒரு பாமரனின் கடிதம் போல் பிரசுரிக்கப்பட்டு விளக்கம் அடுத்த இதழில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.தளைய சிங்கத்தின் தொழுகை, கோட்டை கதை நகல்களும் தளையசிங்கத்தின் கருத்துகளும் ஜெயமோகனின் நெடுங்கட்டுரை ஒன்றும் கொரியரில் அனுப்பபட்டு கிடைக்கிறது. கதைகள் பேராசிரியர் பூர்ணசந்திரனிடம் ‘புது யுகம் பிறக்கிறது ’ கேட்டு வாங்கிப் பெற்று ஏற்கனவே படித்திருக்கிறேன். போர்ப்பறை, மெய்யுள், முற்போக்கு இலக்கியம், ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி ஆகிய நூல்களையும் பல ஆண்டுகளுக்கு முன்பே படித்திருக்கிறேன். என்றாலும் அனுப்பப்பட்டவைகளைக் கற்றுத் தேர்கிறேன். ஜெயமோகனின் நெடுங்கட்டுரை நிறைய ஜார்கன்ஸ், மேற்கோள்கள், தான் படித்த பல விஷயங்களின் சாரம் எல்லாமாகச் சேர்ந்து தளையசிங்கம் பெயரை எடுத்து விட்டு நீட்சே, ஹெகல், சார்த்தர், அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பிளேட்டோ என்று யார் பெயரைப் போட்டாலும் பொருந்த்தக் கூடிய அளவுக்கு ” க்ராஃட்மேன்ஷிப் ” . தளையசிங்கம் பற்றிய சுந்தரராமசாமியின் கட்டுரை பற்றி ‘ இலக்கிய வம்புகளின் அடிப்படையில் மதிப்பிடும் முயற்சி ‘ என்றும் ‘ செயற்கை இறுக்கம் நிறைந்த நடை ‘ என்றும் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். “மேற்கொண்டு R.P. ராஜ நாயஹகத்தின் கட்டுரை ஊட்டியில் தளையசிங்கம் கருத்தரங்கில் நடந்த பிரச்சனைகளைப் பற்றிப் பேசிக் கொண்டு செல்கிறது.விஷயத்தின் ஆதிமூலம் என்னவென்றால் ஜெயமோகன் என்னையும், மு. தளையசிஙக்த்தையும் ஒப்பிட்டு நான் மு.த. மாதிரி எழுதினால் அடித்துக் கொல்லப்படுவேன் என்று சாடையாக எழுதியதுதான். ஜெயமோகன் கூறுவது போல் மு.த. அடித்துக் கொல்லப்படவில்லை என்பதை ராஜநாயஹம் தொடர்ந்து சில கட்டுரைகள் மற்றும் கடிதங்கள் மூலம் நிரூபித்ததும் தனது அடியாள் கோஷ்டி மூலமாக ராஜ நாயஹத்தை அவதூறு செய்து தான் சொன்ன பொய்யையும் மூடி மறைத்து விட்டார். ஆனால் விவாதத்தின் எந்த இடத்திலும் இவ்விவாதத்தின் அடி ஆதாரமான என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டு விடாமல் பார்த்துக் கொண்டார் ஜெ.
.........
மு. தளையசிங்கத்தின் மேற்படி ‘ தொழுகை ’ கதை என் பார்வைக்கு வந்தது. என் சுண்டு விரல் நகத்தின் விளிம்பைக் கூட அந்தக் கதையால் தொட்டுவிட முடியாது. சந்தேகமிருப்பவர்கள் என்னுடைய ‘ கர்னாடக முரசும் நவீன இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் ’ , ‘ the joker was here’ , நேநோ, மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் போன்ற சிறுகதைகளை வாசித்துப் பார்க்கலாம்.
இது ஒரு பக்கமிருக்க, மேற்படி குற்றாலம் கருத்தரங்கு பற்றி ராஜ நாயஹம் எழுதிய கட்டுரை காலச்சுவடுக்கு அனுப்பி வைக்கப் பட்ட போது, நடந்த சம்பவங்கள் பற்றி அப்போது காலச்சுவடு ஆசிரியர் குழுவில் இருந்த மனுஷ்ய புத்திரன் காலச்சுவடில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
‘ ராஜ நாயஹத்தின் கட்டுரை காலச்சுவடிற்கு வந்த ஓரிரு தினங்களில் பல தொலைபேசி அழைப்புகள் . வெகு ஜன் ஊடகங்களில் ஒரு செய்தியைக் கொல்வதற்கான முயற்சிகள் பற் றி எனக்குத் தெரியும். என்னுடைய பத்தாண்டு காலக் காலச்சுவடு ஆசிரியர் பொறுப்பில் ஒரு இலக்கியக் கூட்டம் பற்றிய பதிவு, தபாலில் வந்து சேர்ந்தவுடனயே அதைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சி என்பது புது அனுபவம் “ஜெயமோகன் பற்றி மனுஷ்ய புத்திரன் அக்கட்டுரையில் மேலும் குறிப்பிடுவதாவது;‘ ஜெயமோகனுக்கு எதிரான செயல்பாடுகள் என்பது ஒரு விதத்தில் இலக்கியத்தில் தார்மீக நியதிகளை மீட்பதற்கான செயல்பாடே ஆகும் ’ ‘ ஜெயமோகனின் செயல்பாடு ஒரு மூன்றாந்தர அரசியல்வாதியின் செயல்பாடுகளை விடக் கீழானது. 50 ஆண்டுகால நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இவ்வளவு நேர்மைக் குறைவாக ஒரு நபர் செயல்பட்டதில்லை ‘மேற்படி தளையசிங்கம், குற்றாலம் கருத்தரங்கம் குறித்து நடந்த ஏகப்பட்ட விவாதங்களில் கலந்து கொண்ட நாஞ்சில் நாடன் திண்ணை இணைய இதழுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இது பற்றி 11.07.2004 அன்று திருப்பூரில் வைத்து நாஞ்சிலிடம் ராஜ நாயஹம் நேரடியாகக் கேட்டபோது, ” திண்ணைக்கு நான் அனுப்பிய கட்டுரையை ஜெயமோகன் திருத்தி எழுதினான். அதற்கு என்னிடம் ஒப்புதல் கடிதம் கேட்டான். நான் தர மறுத்து விட்டேன். இதனால் அவனோடு ஆறுமாதம் நான் பேசவில்லை. என்னை மன்னிச்சிக்கங்க. “ என்று சொல்லியிருக்கிறார் நாஞ்சில் நாடன். இப்போது 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் நாஞ்சில் நாடன் இதே ரீதியான பதிலைத்தான் என்னிடம் கூறுகிறார். ஆனால் இப்போதைய நிலை முன்னைவிட மிக மோசமானது. ஒரே வாரத்தில் இரண்டு குரூரமான மரணங்கள்.சரி, தன்னுடைய பெயரை இவ்வளவு அருவருப்பான முறையில் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள ஜெயமோகனை நாஞ்சில் நாடன் ஏன் அனுமதிக்கிறார் ?இப்பிரச்ச்னை பற்றி திண்ணைக்கு காலச்சுவடு கண்ணன் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி :“ ஆர்.பி. ராஜ நாயஹம் பதிவுக்கு எதிர்வினையாக நாஞ்சில் நாடன் காலச்சுவடுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஜெயமோகன் அதன் நகலை நாடனிடமிருந்து பெற்று திண்ணைக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். அதில் நாஞ்சில் நாடனின் அனுமதியின்றி ஜெயமோகன் பல சொற்களை நீக்கியும் பல இடங்களில் தன் கருத்துக்களை சேர்த்தும் அனுப்பியுள்ளார். நாஞ்சில் நாடனின் கையெழுத்துப் பிரதி என்னிடம் உள்ளது. திண்ணைக்கு அதன் புகைப்பட நகலை என்னால் அனுப்பி வைக்க முடியும். என்னுடைய இந்தக் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் மறுக்கும்படி ஜெயமோகனை கேட்டுக் கொள்கிறேன் “வழக்கம்போல் ஜெயமோகன் இதற்கு எந்தப் பதிலும் எழுதவில்லை.
இந்த தளையசிங்கம் – ஜெயமோகனின் விவகாரம் பற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ராஜ நாயஹம் “ பிரச்சனை உங்களை முன் வைத்து ஆரம்பித்திருக்க நீங்கள் ஏன் வாயே திறக்க மாட்டேன் என்கிறீர்கள்? “ என்று கேட்டார்.ராஜ நாயஹம் உலக இலக்கியத்தின் வாசகர். எனக்கு ஷேக்ஸ்பியரில் சந்தேகம் ஏதும் இருந்தால் அவரிடம்தான் கேட்பது வழக்கம். ஆனால் அவர் எதுவும் எழுதுவதில்லை. அப்படியிருக்கும்போது ஏன் இந்த எலிகளோடு பந்தயம் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பதே அவருடைய மேற்படி கேள்விக்கு என் பதிலாக இருந்தது.“ எலிகளோடு போட்டியிட்டால் நீ அந்தப் பந்தயத்தில் வெற்றியே அடைந்தாலும் எலிப் பந்தயத்தில் கலந்து கொண்டவன் என்ற பெயரே உனக்குக் கிடைத்து நீயும் ஒரு எலியாகவே அடையாளம் காணப்படுவாய் “ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. நான் எலிகளோடு பந்தயம் கட்ட விரும்பவில்லை. எனவேதான் இப்பிரச்சனையில் 5 ஆண்டுகளாக நான் வாய் திறக்கவில்லை.
இப்போது (இலக்கியத் தொடர்பான கடிதங்களைப் பிரசுரிப்பதில் தவறில்லை என்பதால்) இது தொடர்பாக ஜெயமோகன் ராஜ நாயஹத்துக்கு எழுதிய கடிதத்தை தருகிறேன்.
R. P. ராஜ நாயஹத்திற்கு ஜெயமோகன் எழுதிய கடிதம்தக்கலைதபால் முத்திரை 28.02.௨00௨.
அன்புள்ள நண்பருக்கு,
உங்கள் கடிதம் கிடைத்தது. சொல் 10 இதழ் அச்சில் உள்ளது.மு. தளையசிங்கம் குறித்த என் கருத்தை சற்று பிழையாக புரிந்து கொண்டு விட்டீர்கள். அது என் தவறுதான்.நான் எழுதியது இதுதான். ‘ கலக ’ ‘ பாலிய ’ எழுத்துக்களை ஒரு சவாலாக நம் சமூகம் நினைப்பது இல்லை. கிறிஸ்தவ இஸ்லாமிய சமூகங்கள் போன்றதல்ல இந்து சமூகம். கருத்தியல் கலகங்களை ‘விழுங்கி ’ செரித்துக்கொள்வதை ஒரு கலையாக 2000 வருடங்களாக அது பயின்றுள்ளது. சாங்கிய ரிஷியான காலர் பிராமணர்களால் கபிலவஸ்துவில் குளிக்கும் படித்துறையில் கல் எறிந்து கொல்லப்பட்டார். பிறகு கிருஷ்ணரே, ” முன்பிறப்பில் நான் கபிலன் “ என்று கூறினார். விஷ்ணுபுரம் நாவலில் முக்கிய விவாதமே இந்த கருத்துப்பயணம் குறித்து தான்.
சாருவின் கலகம் போன்றவற்றை பொறுக்கி, கிறுக்கு என்று கூறி சமூகம் ரசிக்க ஆரம்பித்து விடும். ஓர் எல்லையில் ஞானியாகவும் ஆக்கலாம்.பாலியல் எழுத்து இங்கு கலகமே அல்ல. கலகம் வேறு வகையானது. அதற்குப் பின்னால் ஒரு ஆய்வுப் பார்வை உண்டு. அப்பார்வை மூலம் அது மைய நரம்புகளை தொட்டு எழுப்பும். அப்போது சமூகத்திற்கு வலிக்கும். பெரியார் தமிழகத்தில் மதிக்கப் பட்டார், ரசிக்கப் பட்டார். அயோத்திதாசப் பண்டிதர் மறக்கடிக்கப்பட்டார்.அதாவது சாரு குரைக்கும் நாய். அது கடிக்காது என அனைவருக்கும் தெரியும். தளையசிஙக்ம் கடித்த நாய். இதுவே வித்தியாசம். சாரு ஒருபோதும், மிக எளிய முறையில் கூட, தன் எல்லைகளை மீறியவரல்ல. வெறும் கவன ஈர்ப்பு மட்டுமே அவரது இலக்கு.மு.த. ‘பாலியல் ’ கதைகளை மட்டும் எழுதியவரல்ல. அவரது பல கதைகளில் பாலியல் இருந்தாலும் அவற்றின் ‘கலகம் ’ பாலியல் இல்லை. உதாரணமாக கோட்டை கதை கற்பு என்ற கருதுகோளை நிராகரிக்கிறது. அதிரடியாக அல்ல; நம்பும்படியாக, கலைப்பூர்வமாக. தொழுகை கதையில் ஓதுவாரான சைவப்பிள்ளையின் காதல் மனைவி – அவர் மீது மிகுந்த பிரியம் உடைய நிலையிலும் – காம உந்துதலுக்கு உட்பட்டு ‘ கரிய சானானுடன் ‘ உறவு கொள்கிறாள். பக்கத்து அறையில் அவளது குழந்தைகள் தூங்க. ஒலிப்பெருக்கியில் கணவனின் குரலில் கோயிலில் திருப்பாவை ஒலிக்க அவள் அவன் ஆண்குறியில் சிவலிங்கத்தைக் காண்பதாக எழுதுகிறார் மு.த. ஈழத்து வெள்ளாள / சைவ சூழலில் இது எங்கே போய் தைக்கும் என்று ஊகிக்கலாம். இதையே safe ஆகவும் எழுதலாம் – சாரு போல. கதா பாத்திரங்களுக்கு சமூக குழும அடையாளங்கள் இல்லாமல், மத சாதி விஷயஙகளை தொடாமல் எழுதலாம். சாரு sensitive ஆன விஷயங்களை தொடுவதே இல்லை என்பதைக் கவனிக்கவும். இங்கு தேவர் தலித் மோதல்கள் நடந்தபோது ஒருவர் கூட அவ்விஷயத்தை கதைக் கருவுக்குள் கொண்டுவரவில்லை. சொந்த ஜாதியை விமரிசித்து எழுதுவது ஓரளவுக்கு பிராமணர்களும் தலித்துகளும் மட்டும்தான். இங்கு கலகம் என்பதே இல்லை. கலகபாவனைகள் மட்டுமே உள்ளன. கலகம் ஒரு போதும் ‘முற்போக்காக ’ இருக்காது. அது ஆதிக்க அதிகாரத்தை எதிர்க்கும். அதே சமயம் அறிவுலகில் உருவாக்கப்படும் முற்போக்கு பாவனைகளையும், கெடுபிடிகளையும் எதிர்க்கும். இங்கே நம் கலகக்காரர்கள் ஒரு போதும் politically correct ஆன விஷயங்களை எதிர்ப்பதில்லை. மீண்டும் மு.த. விஷயம். வெறுமே எழுதிமட்டுமிருந்தால் ஒருவேளை ஈழத்து வெள்ளாள உலகம் அவரை வசைபாடி மட்டும் நிறுத்தியிருக்கும். ஆனால் தளையசிங்கம் கடிக்கவும் முற்பட்டார். தலித்துகள் பொதுக் குடி நீர் எடுக்கவும் ஆலயப் பிரவேசம் செய்யவும் நேரடியாகப் போராடினார்.
இவை குறித்து கனடா என். கெ. மகாலிங்கம் ( தளையசிங்கத்தின் இளைய தோழர்) என்னிடம் நிறையப் பேசியுள்ளார் (மு.பொன்னம்பலம் இக்காலத்தில் கொழும்பில் மாணவர்) வேளாளர்கள் தளைய சிங்கத்தை அவர் வேலை செய்த பள்ளிக்கு வந்து மிரட்டினார்கள். ஒரு போலீஸ் அதிகாரிக்கு பணம் தந்து அவரை கைது செய்து அடித்துக் கொல்லச்சொன்னார்கள். அவ்வதிகாரியே நேரில் வந்து விலக சொலலியும் மு.த. விலகவில்லை ( அப்போது மகாலிங்கம் உடனிருந்தார்) விளைவாக கைது செய்யப்பட்டு இரு நாட்கள் மிக கடுமையாக தாக்கப்பட்டார். காவல் நிலையத்திலேயே உடல் நலம் குன்றி அங்கிருந்தேஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டு படுத்த படுக்கையாகி மீளாமலேயே மரணமடைந்தார். ( சிறு நீரகம் உடைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது )நான் ‘கொல்லப்பட்டார் ’ என்று எழுதியது இக்காரணத்திலேயே. இவ்விஷயம் இன்று பரவலாகவே பேசப்படுவது தான். பாலியல் எழுதியமைக்காக அவர் கொல்லப்படவில்லை. உண்மையான கலகத்தை செய்தமைக்காகவே கொல்லப்பட்டார். இதைத் தான் நான் கூறினேன். கலகம் என்று பேசுபவர்கள் உண்மையான கலகத்தைப் பற்றி யோசிக்க வேண்டும் என்பதற்காகவே எழுதினேன். சாரு ’ வின் கதைகளுக்கும் தொழுகைக்கும் இடையேயான வித்தியாசம் இங்கு கலகம் உண்மையானது, உண்மையிலேயே தாக்கக் கூடியது என்பது தான்.உங்கள் கடிதத்தை பிரசுரிக்கிறோம் – விளக்கத்துடன்.
பிரியத்துடன்ஜெயமோகன்.
மேற்படி ஊட்டி கருத்தரங்கிற்கு அடுத்த படியாக குற்றாலத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. அதில் ஜெய்மோகன் சில நண்பர்களிடம் கேட்ட ஒரு கேள்வி : “ கிரிக்கெட் மைதானத்தின் நடுவே ஏன் ஒரு இடத்தில் மட்டும் புல் வளர்க்காமல் வெள்ளையாக விட்டு வைத்திருக்கிறார்கள் ? “இப்படிப்பட்ட ஆட்கள்தான் தமிழ் சினிமாவுக்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

அப்போது ராஜநாயஹம் மீதான பின் அரசியல்