Share

Aug 17, 2009

வைகைஆத்து பானைபிரியும் பிச்சையின் ஏகாதசியும்


சாயந்திரம் ஆத்தோர பயிர்குழியில் கலக்கு முட்டி ( வார்னிஷ் ) அடித்து விட்டு இருட்டு வந்த பின் வைகையாற்றுக்குள் மணல் மேட்டில் பாத்திமா காலேஜ் பிரிட்ஜ் அடியில் அமர்ந்து கஞ்சா அடித்துக்கொண்டிருந்தார்கள் .
முட்டாள் தாஸ் 'மயக்கமா கலக்கமா' பாட்டை பாடிமுடித்ததும் ஆட்டு மூக்கன் ' தாசு , 'கோமாதா எங்கள் குலமாதா ' பாடு தாசு என்றான் .உற்சாகமாக முட்டாள் தாசு 'குலமாதர் நலம் காக்கும் ' என்று பாட ஆரம்பித்தான் . தாசு பாடி முடித்ததும் ஒத்தகாதன் " திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா " என சீரியஸாக குரலெடுத்து பாட ஆரம்பித்தான் .குருவி மண்டையன் "திருத்தணி மலை மேலே எலி கொறிக்கும் " என்று உடைசல் கொடுத்தான் . ஒத்தகாதன் பாட்டில் சுதி சுத்தம் கிடையாது . மெட்டும் சரிவராது . ஒத்தகாதன் ' டே குருவி மண்டையா ! நான் பாடும்போது மட்டும் ஏண்டா இப்படி உடைசல் கொடுக்கிறே " சலித்துகொண்டே ' சரி ,இன்னொரு பாட்டு...
இதை கேளுங்கடா ! நான் நல்லா பாடுவேன் ... ஒஹொஹொ... ஓடும் மேகங்களே ! ஒஹொஹொ .. ஓடும் மேகங்களே ஓடோடி சென்று காதல் பெண்ணின் உறவை சொல்லுங்களேன் ..ஒஹொஹொ... ஓடும் மேகங்களே !"
குருவி மண்டையன் தொடர்ந்து " இங்கிருந்து கோரிப்பாளையம் வரை ஓடும் மேகங்களே! அங்கிருந்து தல்லாகுளம் தாண்டி ஓடும் மேகங்களே !தல்லாகுளம் தாண்டி ஏறத்தாழ ,கிட்டத்தட்ட அழகர்கோவில் வரை ஓடும் மேகங்களே !"
மேற்கொண்டு 'தொல்லை ' வசனமாகவே சொன்னான் ' இங்கிருந்து முப்பது மைல் தாண்டி உசிலம்பட்டி வரை ஓடும் மேகங்களே !"
ஒத்தகாதனுக்கு கஞ்சா இழுவை போதை இறங்கி விட்டது . "போங்கடா ஒவ்ரங்கசீப்புகளா ..கொஞ்சமாவது கலாரசனை வேணும்டா "ஓந்தி தள்ளி ஓஞ்சி போனான் .
கிளம்பி ஆரப்பாளையம் படித்துறை வந்து கரையேறினார்கள் .
அங்கே பிச்சை கையில் குச்சியோடு " பெட்டாளியனையே காலி பண்ணுவேண்டா நான் . ஓரு ரெஜிமென்ட்டை இங்கே இறக்கி நான் பெட்டாளியனையே காலி பண்ணுவேன் . சும்பக்கூதிகளா டே ..." கூப்பாடு போட்டு மானசீக யுத்தம் நடத்தி கொண்டிருந்தான் .
பிச்சை எக்ஸ்-செர்விஸ்மேன். இப்ப கொஞ்சம்....இல்ல .. ரொம்ப மனநிலை பிறழ்ந்து விட்டது .
குருவி மண்டையன் " அண்ணே பிச்சன்னே ! ஆத்துக்குள்ளே பிரிட்ஜ் மூனாவது தூண் , நாலாவது தூண் , அஞ்சாவது தூண் ..இந்த மூணு தூணை ஒட்டி தண்ணியிலே "பானை பிரி '' மூணு பெரிய பானையிலே போட்டுருக்கோம் . விரால் மீன் இப்ப ஒவ்வொரு பானையிலேயும் மூணு கிலோ மீனு தான் விழுந்துருக்குன்னே ! காலையிலே போனா ஒவ்வொரு பானையிலேயும் பத்து கிலோ மீனுக்கு மேலே சிக்கியிருக்கும்ன்னே ! இப்போ அங்கே நீ போகாதே ! நம்ம காலையிலே வந்து பானை பிரி யை பிரிச்சு எல்லா மீனையும் அள்ளுவோம் . இப்போ பிரிட்ஜ் பக்கம் நீ போகாதேன்னே !"

பிச்சை கண்ணில் பலப் எரிய ஆரம்பித்து விட்டது . ''எங்கேடா எந்த தூணிலே எல்லாம் போட்டிருக்கீங்க ? நான் போக மாட்டேன் .."

குருவி மண்டையன் ரிக்கார்டு போட்டது போல மீண்டும் விரிவாக ,விளக்கமாக "பிரிட்ஜ் மூனாவது தூண் , நாலாவது தூண் , அஞ்சாவது தூண் ..இந்த மூணு தூணை ஒட்டி தண்ணியிலே "பானை பிரி '' மூணு பெரிய பானையிலே போட்டுருக்கோம் . விரால் மீன் இப்ப ஒவ்வொரு பானையிலேயும் மூணு கிலோ மீனு தான் விழுந்துருக்குன்னே ! இப்ப ஒவ்வொரு பானையிலேயும் மூணு கிலோ மீனு மட்டும் தான் விழுந்திருக்கு ! காலையிலே போனா ஒவ்வொரு பானையிலேயும் பத்து கிலோ மீனுக்கு மேலே சிக்கியிருக்கும்ன்னே ! இப்போ அங்கே நீ போகாதே ! போயி பானைபிரியை இருட்டுலே மிதிச்சி ஒடைச்சிராதேன்னே " கெஞ்சுகிற தோரணையில் சொன்னான் .

" நான் போக மாட்டேண்டா !" பிச்சை சொன்னான் ."சத்தியமா நான் போகவே மாட்டேன் "

இந்த போதை கூட்டம் நடந்து அந்த முக்கு திரும்பியது .போகும்போதே குருவிமண்டையன் சொன்னான் " மெண்டலுக்கு புரியனுமேன்னு தான் திரும்ப திரும்ப சொன்னேன் . இப்போ போனாலே மூணு பானையும் சேர்த்து ஒன்பது பத்து கிலோ விராலு தேறும்னு அதுக்கு ஒரைக்கனுமே . அதான் அழுத்தி சொன்னேன் ."

வாஸ்தவம் தானே ! பெட்டாளியனை காலி பண்ணுற ஏகாக்கிர தியானத்திலே இருக்கிற பிச்சைக்கு விராலு மீனு பக்கம் கவனம் திரும்பனுமே . குருவி மண்டையன் 'சைக்கோ -சைக்காலஜி' தெரிஞ்சவன்யா !!

முக்கில் திரும்பிய பின் கொஞ்சம் நேரம் விட்டு குருவி மண்டையனும் ,தொல்லையும் நின்று எட்டி மெதுவாக பார்க்கும்போது, திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே அவசரமாக பிச்சை ஆத்துக்குள் இறங்கி விட்டான் . பிச்சைக்கி இன்னைக்கி தூக்கம் போச்சி . வைகுண்ட ஏகாதசி தான் ! ராத்திரி பிரிட்ஜ் அடியிலே ஆத்து மணலைப்பூரா அலசி முட்டுக்கால் தண்ணியிலே தவிச்சி தக்காளி விக்கவேண்டியது தான்.வேற வழியில்லை .

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.