Share

Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

Feb 27, 2017

பழைய கணக்கு


ராஜாஜிக்கு 1930களில் காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தைப்பொருத்தவரை தீரர் சத்தியமூர்த்தி தான் rival. சத்தியமூர்த்தியின் சீடர் தான் காமராஜர் என்பதால் 1950,60களில் எப்போதும் இருவருக்கும் ஏழாம்பொருத்தம் தான்.


காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராயிருந்த போது
ராஜாஜி "காமராஜர் ஆட்சி ஊழல் ஆட்சி" என்றார்.
காமராஜர் அப்போது சொன்னார் " இவர் என்ன பெரிய பரசுராமரா?"
"காமராஜர் திட்டம்" பக்தவத்சலத்தை பின் தமிழக முதல்வராக்கியது.
.................

1967 ல் காங்கிரசை எதிர்த்து ராஜாஜியின் சுதந்திரா கட்சி தி.மு.கவுடன் கூட்டு.
ராஜாஜி சொன்னார் : "பிராமணர்கள் ஒரு கையால் பூணூலை பிடித்து கொண்டு மறுகையால் தி.மு.க வுக்கு ஓட்டு போடுங்கள். "

காமராஜர் பற்றி ராஜாஜியின் கடுமையான தாக்குதல்
”அந்த கறுப்பு காக்காயை வீழ்த்துங்கள்!”

பெரியார் காங்கிரஸுக்கு பிரசாரம் செய்தார். காமராஜருக்கு புகழாரம் சூட்டினார் : 'பச்சை தமிழன் காமராஜ்.கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இந்த பூமியில் தோண்றியிராத அதிசய மனிதர் காமராஜ்! '

தேர்தல் முடிந்து திமுக ஆட்சிக்கு வந்தது. (ஹிந்தி எதிர்ப்பு , காங்கிரஸ் வெறுப்பு என்று காரணம் யாரும் இங்கே தயவு செய்து சுட்டி காட்ட கிளம்பி விட வேண்டாம்.)

கொஞ்ச நாளில் ராஜாஜி சொன்னார்
" திமுக வுடன் தேனிலவு முடிந்து விட்டது."
அண்ணாதுரை விடவில்லை "ஆம். தேனிலவு முடிந்து குடும்ப வாழ்க்கை ஆரம்பமாகியுள்ளது!"

1971ல் அண்ணா இல்லாத திமுகவை எதிர்த்து பெருந்தலைவர் காமராஜரும் மூதறிஞர் ராஜாஜியும் இணைந்து கருணாநிதியை எதிர்த்து மிக மோசமான படு தோல்வியை தழுவினர்.( பங்களா தேஷ் வெற்றி என்று காரணங்களை அடுக்குவது இரண்டாவது பட்சம்.)


எம்ஜியாரின் எழுச்சியில் ஸ்தாபன காங்கிரசும் சுதந்திரா கட்சியும் காணாமல் போனது.


எம்ஜியார் இருக்கும் வரை கருணாநிதி பருப்பு வேகவில்லை. எம்ஜியாரின் மரணம் மீண்டும் கருணாநிதிக்கு ஆட்சி கிடைத்து கொஞ்ச நாளில் மீண்டும் இழப்பு.

மூதறிஞர் ராஜாஜி , காலா காந்திகாமராஜர் இருவரையும் தோற்கடித்த கருணாநிதிக்கு 20 வருடத்தில் ஜெயலலிதாவிடம் 1991ல் மிக மோசமான தோல்வி ஏற்பட்டது .(ராஜீவ் கொலை தான் என்ற காரணம் இங்கு முக்கியப்படுத்த வேண்டியதில்லை.அது உள்ளங்கை நெல்லிக்கனி.)

கருணாநிதியிடம் ராஜாஜி, காமராஜர் தோல்வி மகத்தான சோகம். ஜெயலலிதாவிடம் கருணாநிதி தோற்றது கேலி கூத்து.

வரலாற்றின் குரங்குத்தனம்!
“Hegal remarks somewhere that history tends to repeat itself. He forgot to add: the first time as tragedy, the second time as farce”
-Karl Marx
............................................

http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2012/10/1971.html

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_3740.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_9319.html

 

Jan 1, 2017

Cakewalk?


அண்ணா திமுக என்ற கட்சிக்கு புதிய பொதுச்செயலாளர் பதவிக்கு நியமனம் பற்றி அறிவு ஜீவிகள், மற்றும் தங்களை கொஞ்சம் விவரமான ஆளாக நினைக்கும் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட என்ன இருக்கிறது? இந்த கட்சி எந்த நடைமுறை நியாயத்திற்கும் கட்டுப்படாத கட்சி என்பது ஊரறியத் தெரியக்கிடக்கிறது.
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலிருந்து இந்த கட்சி இப்படித்தான் இருந்திருக்கிறது. ஜெயலலிதா அரசியலுக்கு வந்த காலத்தில் தான் வெண்ணிற ஆடை நிர்மலா காரணமாக மேல் சபையே கலைக்கப்பட்டது.
கட்சியில் எம்.ஜி.ஆருக்கு பிறகு முன்னிறுத்த எந்த ஆண் தான் அப்போது இருந்தார்?
இன்று மட்டும் அந்த அதிமுகவிற்கு திடீரென்று ரட்சகர் எங்கிருந்து வந்து குதிக்க முடியும்?
தமிழகத்தில் ஜெயலலிதாவுடன் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறதே என்று சங்கடப்பட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிக்காரர்கள் வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள்.
திராவிட இயக்கம் பெரியாரில் ஆரம்பித்து பாப்பாத்தி ஜெயலலிதாவில் வந்து நிற்கிறதே என்று திகைத்து அங்கலாய்த்தவர்கள் எவ்வளவோ பேர்.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே ’மன்னார்குடிகள்’ கையில் தானே கட்சி இருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், பழ.கருப்பையா உள்பட மன்னார்குடி கும்பல் அட்டகாசம், ஆர்ப்பாட்டம் பற்றி பிலாக்கணம் வைக்கத்தானே செய்தார்கள்.
இன்று சசிகலா பொதுச் செயலாளர் என்பதில் என்ன பெரிய ஆச்சரியம்,திகைப்பு, அங்கலாய்ப்பு வேண்டியிருக்கிறது?
கருணாநிதியை எதிர்ப்பவர்கள் எல்லோருக்குமே, ஜெயலலிதாவை ஆதரிப்பவர்கள் அனைவருக்குமே, துக்ளக் சோ உள்பட மன்னார்குடி கூட்டத்தார் பற்றி ஒரு Wilful blindness இருக்கத்தானே செய்தது.

What areas of the skull must be traumatized to cause Selective Amnesia?!
ஜெயலலிதாவுடன் அவ்வப்போது கூட்டணி வைத்த காங்கிரஸ், பா.ஜ.க., நல்லகண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட்கள், ராமதாஸ், திருமாவளவன், வைகோ, விஜயகாந்த் போன்றவர்களுக்கும் மன்னார்குடி சசிகலா பற்றி ஒரு Selective Amnesia இல்லாமலா இருந்தது?

"O wonder !
How many goodly creatures are there here!
How beauteous Mankind is!
O brave new world!
That has such people in it!"

-Shakespeare in ‘ Tempest’

2011 டிசம்பரில் சசிகலா போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட போது இதற்கு காரணம் சோ ராமசாமி தான் என்றார் சசிகலா. ஜெயலலிதா திட்டி வெளியே போகச் சொன்ன போது அங்கே சிரித்துக்கொண்டு சோ நின்றிருந்தாராம். மீண்டும் ’ஜெயலலிதா- சசிகலா உத்தர ராமாயணம்’ 2012 மார்ச்சில் முடிவுக்கு வந்த போது அதை சோ எதிர்த்து விட்டாரா என்ன?
ஹெலி காப்டரை பார்த்து சாஸ்டாங்க நமஸ்காரம் செய்யும் போது அதிமுக மந்திரிகளும், எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலாவுக்கும் தான் மரியாதை செய்திருக்கிறார்கள்.

அதிமுக என்ற ஒரு கட்சி அகில இந்தியாவைப் பொருத்தவரை மிகவும் ஒரு விசித்திரமான அமைப்பு.
காமராஜர் உயிருடன் இருந்த போது ஸ்தாபன காங்கிரஸ் தான் எதிர்கட்சி என்றிருந்த போது, அடுத்த பொதுத் தேர்தலில் எப்படியும் காமராஜர் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருந்த நிலையில் எம்.ஜி.ஆர் அண்ணா தி.மு.க ஆரம்பித்து அமோகமாக கட்சி எழுந்தது.
கூத்தாடி கையில், தமிழன் அல்லாத ஆள் கையில் தமிழ் நாடு போகிறதே என்ற பதைப்பு, அங்கலாய்ப்பு, புலம்பல் தி.மு.கவுக்கு மட்டுமின்றி ஸ்தாபன காங்கிரசுக்கும் தான் அன்று இருந்தது. வலது கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம் மட்டும் எம்.ஜி.ஆருக்கு பக்கவாத்தியம்.
திட்ட திட்ட திண்டுக்கல், வைய,வைய வைரக்கல். திண்டுக்கல் இடைத்தேர்தலில் அண்ணா திமுகவின் விஸ்வரூபம் காண முடிந்தது. திண்டுக்கல் பெருவெற்றி என்பது நுட்பமானது. மக்கள் செல்வாக்கை அன்று சுத்தமாக இழந்திருந்த கருணாநிதியை அல்ல, நல்ல செல்வாக்கு பெற்றிருந்த காமராஜரையே பின்னுக்கு தள்ளி விட்டு எம்.ஜி.ஆர் எழுந்து நின்றார். காமராஜரின் அரசியல் வாழ்வை இல்லாமலாக்கியதில் பெரும்பங்கு அதிமுகவிற்கு தான்.
தீப்பொறி ஆறுமுகமும், வெற்றி கொண்டானும், சாதாரண லோக்கல் பேச்சாளனும் கூட கருணாநிதி ஆசியுடன் படு ஆபாச அர்ச்சனை செய்தது ஒரு பக்கம்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த பின் துக்ளக் சோ ராமசாமியால் எம்.ஜி.ஆர் எப்படியெல்லாம் நையாண்டி அர்ச்சனை செய்யப்பட்டார்.’எம்.ஜி.ஆர் ஒரு சரியான காமெடியன்!’
அன்று படிக்காத பாமரனும், கிராமத்துப்பெண்களும் மட்டுமே எம்.ஜி.ஆரை கொண்டாடி அதிமுகவை மனையில் தூக்கி வைத்து விட்டார்கள்.
எம்.ஜி.ஆர் காலத்தில் அவருடைய மந்திரிசபையிலிருந்த க.ராஜா முகமது முன்னாள் மந்திரியான பின் “வண்ண மயில்” என்று ஒரு பத்திரிக்கை நடத்தியதுண்டு. பல இலக்கியத்தரமான விஷயங்கள் அதில் பிரசுரமாகியிருக்கின்றன.
ஜி. நாகராஜனின் “ ஓடிய கால்கள்” கதை அதில் வெளியிட்டிருந்தார்கள்.

ஜெயலலிதா காலத்தில் நடராஜன் ( சசிகலாவின் கணவர்) ’புதிய பார்வை’ என்ற தரமான பத்திரிக்கை நடத்தியிருக்கிறார். நிறைய எழுத்தாளர்கள் இதிலும் எழுதியிருக்கிறார்கள்.
புதிய பார்வை இன்னும் வருகிறதோ என்னவோ? அவரை ’புதியபார்வை’ ஆசிரியர்  நடராஜன் என்று தான் இப்போதும் குறிப்பிடுகிறார்கள்.


ஜெயலலிதா போல் போராட வேண்டிய அவசியமே இல்லாமல் இன்று சசிகலா கையில் கட்சி.
Cake walk! It happened to be an easy accomplishment for her to become a leader of the biggest party! Very Strange! முதலமைச்சராகவும் வரவேண்டும் என்று முழு கட்சியும் மன்றாடுகிறது. மன்றாடாத யாரும் கட்சியில் இருக்கவே முடியாதே!
சசிகலாவான்னு முகம் சுளிக்கிறவனெல்லாம் அதிமுகவுக்கு வெளியே இருக்கறவனும், கட்சியை விட்டு வெளியேற வேண்டியவனும் தான்.
கருணாநிதி திமுக தலைவரானப்ப கூட முகம் சுளித்தவர்கள் இல்லையா என்ன? சோனியா காங்கிரஸ் தலைவர் ஆனப்ப வெளி நாட்டுக்காரியா தலைவி என்ற முக சுளிப்பும் அருவருப்பும். பிஜேபிக்கு மோடி தலைவரானப்ப முக சுளிப்பு இல்லையா?( பிஜேபிக்கு பிரசிடெண்ட் யாராயிருந்தாலும் பிரதமர் மோடிக்கு கீழே தானே? தலைமைப்பதவி மோடிக்குத்தானே?) எந்த கட்சியில் தான் தலைமைப் பதவி
ஆயாசமின்றி, சலிப்பின்றி நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
’சசிகலா குரல் கூட கேட்க கிடைத்ததே இல்லை. இவர் பேட்டி கொடுப்பாரா?கட்சி கூட்டத்தில் பிரசங்கம் செய்வாரா’ என்றெல்லாம் வியாக்னங்கள்…
பொதுச் செயலாளர் நியமனத்திற்குப் பின் மேடைப்பேச்சு. கன்னிப்பேச்சு. குரல் சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது!
அண்ணா திமுக ஒரு வினோத உலகம். கட்சியின் இரண்டாவது தலைவரும் பெண். இன்று மூன்றாவது தலைவரும் பெண்.
இன்றைய தமிழக முதல்வர் உட்பட கட்சியின் பிற இரண்டாம், மூன்றாம் மட்டத்தலைவர்கள் தரை மட்டமானவர்கள்.
கீழ் படிதல் என்பது இவர்களை பொருத்தவரை ”தலை” கீழ் படிதல். விசுவாசத்தின் விரிவான தன்மையை மட்டுமே போட்டி போட்டுக்கொண்டு வெளிப்படுத்தக்கூடியவர்கள். ஒருத்தன் தும்பிக்கய தரையில ஊனி நாலு காலையும் தூக்கி சங்கு சக்கரமா சுத்தினா, இன்னொருத்தன் மரத்தில வால தொங்கப் போட்டு ஊஞ்சலாடுவான்.
எதிர் நிலை எடுக்கவே மாட்டார்கள். புளி மூட்டைகள்.
Consistency is the hallmark of Mediocrity.

வைகோ தீவிரமாக அதிமுக ஏஜண்ட் ஆக செயல் படுவதால் தான் நாஞ்சில் சம்பத் வெளியேறும் நிலை! இது தான் உண்மை. ரோஷம், தன்மானம் எல்லாம் கிடையாது! ஏற்கனவே கட்சியில் ஜெயலலிதாவால் தலையில் குட்டுப்பட்டு இருந்தவர் தான் Innocent Innova!

பா.ம.க, மதி.மு.க, தே.மு.தி.க, போல Booth, Stall, kiosk என்றால் ரோஷப்பட்டு பெரும், கடும் அறிக்கை விட்டு மயிரே போச்சுன்னு வெளியேறலாம்.
(தமிழக) காங்கிரஸ், (தமிழக) பா.ஜ.க போல அதிமுக என்ன ஓட்டை வண்டியா?
துபாய் போல கொழிக்க வழி வகையுடைய ரெட்டை இலையை விட்டு வெளியேற பைத்தியமா பிடித்திருக்கிறது? என்ன வேண்டுமானாலும் எவன் வேண்டுமானாலும் “ அடிமை” என்று ஏசிக்கொள்ளட்டும்.
உண்மையில் அதிமுகவில் சுகம் அனுபவிக்கும் மந்திரிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களா அடிமைகள்? அவர்களால் ஆளப்படும் இழி நிலையிலிருக்கும் இந்த ’எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்’ அல்லவோ அடிமைகள்!
’சோரம் செய்திடாமே, தீமை செய்திடாமே ஊரை ஆளும் முறைமை ஓர் புரத்திலும் இல்லை’ பாரதி சொல்லியிருக்கிறானே?
சசிகலா ஒரு Soft Target. ஒரு வகையில் எவ்வளவு ஆண்டுகளாக மிகக் கடும் விமர்சனங்கள். இன்று அதன் உச்சம். எல்லார் வாயிலும் விழுந்து கொண்டு…
முதல்வர் ஓ.பி.எஸ் மற்றொரு soft target. ஆனாலும் பதிலுக்கு சவாலாக, கோபமாக ஒரு வார்த்தை பேசி இன்று வரை பார்த்ததில்லை. ’பவ்யம் பாவ்லா’ பன்னீர் செல்வம்!
வெட்டிபயலெல்லாம் என்னமா சவடால் விடுறான்.’ரத்த ஆறு ஓடும்’ சவால் வைகோவின் ஆவேசத்தையும் பார்க்கத்தானே செய்கிறோம்.
பன்னீர் எப்போதும் சித்தர் போல ஒரு பார்வை.
எப்போதும் VRS மன நிலையில்!
கருணாநிதி சகாப்தம் ஏறத்தாழ முடிவுக்கு வந்து விட்டது.
இனி தி.மு.க.வில் ஸ்டாலின் தான் ’இன்றைய நிலை’யில் சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்யப்போகிறவர். “ஆக, சசிகலா அம்மையார் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்றால்…………ஆக….ஆக….ஆக..”
ஆகாககாக!

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு –இது ஒரு cliché.
இந்த வாக்கியம் படு அபத்தமானது. இலவசங்கள் வாங்க தவித்து தக்காளி வித்து, தேர்தல் நேரத்தில் பணமும் வாங்கும் மக்களை மகேசனோடு ஏன் ஒப்பிட வேண்டும்.
ருக்மணி கிருஷ்ணன் – இந்தப்பெயர் யாருக்காவது இருக்கிறதா? அன்றைய ஜனாதிபதி முதல் இன்றைய ஆஃபீஸ் பாய் வரை ’ராதாகிருஷ்ணன்’ தானே!
 



“LIVE IN SECLUSION. SHOW NO INTEREST IN POLITICS AND THE COMMUNITY.”
- EPICURUS

...........................................................





http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_09.html

.................

Jul 1, 2012

கட்சி தலைமை


அண்ணாத்துரை இறந்தபோது யார் தலைவர் என்ற பிரச்னை எழுந்த போது நெடுஞ்செழியன் தான் என காங்கிரஸ் காரர்கள் நினைத்தார்கள். தமிழகத்தில் திமுகவுக்கு எதிர்கட்சி என்பதைவிட எதிரான கட்சி காங்கிரஸ். நெடுஞ்செழியன் திமுக தலைவராக வருவதை காங்கிரஸ் கட்சி விரும்பியது. அப்போதைய நெடுஞ்செழிய பிம்பம் - படித்த நாகரீகமான அரசியல்வாதி.அண்ணாத்துரைக்கு இரண்டாமிடத்தில் கட்சியிலும்,மந்திரிசபையிலும் இருந்தவர். நெடுஞ்செழியனே கூட தான் அடுத்த தமிழக முதல்வராவதில்,திமுகவில்முதலிடம்பெறுவதில் எந்த சிரமமுமே இல்லை என்றே நம்பினார். அதனால் தான் ராம அரங்கண்ணல் “ அண்ணியாருக்கு மந்திரி சபையில் நீங்கள் இடம் தரவேண்டும்.” என நெடுஞ்செழியனிடம் கேட்டபோது” யாருக்கு?ராணிக்கா? சேச்சே..அது நல்லாருக்காதுப்பா” என்று அலட்சியமாக பதில் சொன்னார்.  அண்ணாத்துரையின் மனைவியார் ராணி. திடீரென்று அவரை எதிர்த்து மேதை மதியழகன் தான் போட்டியிடுவதாக அறிவிப்பதற்கு முன்னாலேயே கருணாநிதி அர்ங்கண்ணலிடம் “ நெடுஞ்செழியன் வேண்டாம் என்று கட்சி முடிவு செய்தால். கருணாநிதி தான் அடுத்தமுதல்வர் என முடிவு செய்யப்பட்டால்.” என்ற அஸ்திரத்தை எறிந்த போது அரங்கண்ணல்அதிர்ச்சியில் பதறிப் போய், வேண்டாம் கட்சி சிதறிப் போய் விடவேண்டாம்.கழகத்தில் கலகம் வேண்டாமே என்றே கருணாநிதியிடம் கெஞ்சியிருக்கிறார்.
நெடுஞ்செழியனை எதிர்த்துத்தான் அரசியல் செய்யப்போகிறோம் என்ற நம்பிக்கையில்( நம்பிக்கை என்பதை விட ’எதிரி’க்கட்சியின் விருப்பம் என்றே சொல்லவேண்டும்) காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. நிலவரம் நேர் எதிராக கருணாநிதியை எம்.ஜி.ஆர்,திமுகவின் இரும்பு மனிதர் மதுரை முத்து உள்ளிட்ட பெரும்பாலானோர் ஆதரித்து முன்னிறுத்திய போது அரங்கண்ணல் மூலமாக கேள்விப்பட்ட நெடுஞ்செழியன் வாய் விட்டு அழுதிருக்கிறார். அந்த நிலையிலும் மதியழகன் போட்டியில் இருந்து விலக மறுத்து விட்டார். பேராசிரியர் அன்பழகன் ”அண்ணாவை தலைவராக கொண்டிருந்த நான்என்னைவிட வயதில் குறைந்த கருணாநிதியை எப்படி தலைவனாக ஏற்றுக்கொள்ளமுடியும்”என்று மிரண்டது தான் Irony!கருணாநிதிக்கு அப்போது வயது 45 தான்.கருணாநிதி தான் திமுகவைக்கைப்பற்றுகிறார் என்பதை அறிய நேர்ந்த காங்கிரஸ் வட்டாரத்திற்கு பேரதிர்ச்சி. அண்ணாத்துரையின் இடத்தில் கருணாநிதியா?காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல,காங்கிரஸ் தொண்டர்களாலும் இதனை ஜீரணிக்கவே முடியவில்லை!படித்த நடுநிலையாளர்களும் நெளியவே செய்தார்கள்.
கருணாநிதிக்கு இருந்த இமேஜ் அப்படி!
அதோடு கண்ணதாசனின் “வனவாசம்” பலரும் படித்திருந்தார்கள்.
ஆனால் கட்சித்தொண்டர்கள் மகிழ்ச்சிப்பெருங்கடலில் மூழ்கினார்கள். கருணாநிதியின் வரவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தார்கள்.

எம்.ஜி.ஆர் இறந்த போது ’எதிரி’கட்சி திமுகவும் சரி, திமுக தலைவர் கருணாநிதியும் காங்கிரஸ் தலைவர் மூப்பனார், சிதம்பரம் போன்றவர்களும் கூட  ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்ற முயல்வதை ரசிக்கவில்லை.( எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும்போதேஇவர்கள் அதிமுகவில் ஜெயலலிதாவின் Entry யை ஏளனமாகவே பார்த்தார்கள்.)ஜானகியோ,வீரப்பனோ தலைவராக வேண்டும் என முழுமனதோடு விரும்பினர், இவ்வளவுஏன் திருநாவுக்கரசு,கேகேஎஸ் எஸ் ஆர் தவிர  அதிமுகவின் பெரும்பாலான தலைவர்கள் பலரே கூட விரும்பவில்லை. படித்த நடுநிலையாளர்களும் ஜெயலலிதாவுக்கு எதிரான மனநிலையில்.முதல்வரான ஜானகியம்மாள் “தமிழாகவே வாழ்கிற கலைஞர்!’ என்றார். களேபரத்தில்ஆட்சி கவிழ்ந்தது.எம்.ஜி.ஆரின் தொழில் எதிரி சிவாஜியுடன் கூட்டணி அமைத்து ஜானகி இடைதேர்தலில் போட்டியிட்டார்.
கருணாநிதி மீண்டும் கொஞ்ச வருடம் முதல்வரான போது ஜெயலலிதாவின் சேவல் கணிசமான இடங்களில் கூவியது.

ஜெயலலிதாவோ கருணாநிதியை கடுமையாக சாடுவதை நிறுத்தவே இல்லை..
அப்புறம் என்ன? அதிமுகவின் தொண்டர்களுக்கும் ரெட்டை இலைக்கு எப்போதும் வாக்களிப்பவர்களுக்கும் அதிமுகவிற்கு தலைவி ஜெயலலிதா தான் என்பது புரிந்து விட்டது. கட்சி ஜெயலலிதாவின் கையில்! 43 வயதில் தமிழக முதல்வர்!

நெடுஞ்செழியனோ,வி.என்.ஜானகியோ இருவருமே கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கால் தூசுக்கு சமமாக மாட்டார்கள் என்றே  இன்று காலம் நிரூபித்து விட்டது.


இப்போது அகில இந்தியக் கட்சி பாரதீய ஜனதாக் கட்சிக்கு அத்வானி முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்பதையே ’எதிரி’காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அடுத்த பிரதமர் வேட்பாளர் ஆக அத்வானி முன்னிறுத்தப்படவேண்டும் என்பது தான் காங்கிரஸின் நெஞ்சார்ந்த விருப்பம். ஆனால் பாருங்கள். பாரதீய ஜனதாக்கட்சியில் தொண்டர்கள் அனைவருமே நரேந்திர மோடியைப் பரவசமாக முன்னிறுத்தத்தொடங்கிவிட்டார்கள்.

சர்ச்சைக்குரியவர்களையே உள்கட்சி வட்டம் தீவிரமாக தலைமைக்கு முன் வைக்கும். அதிலும் ’எதிரி’ கட்சி யாரைப் பார்த்து அசூயைப் படுகிறதோ அவர் தான் எந்தக்கட்சிக்கும் எப்போதுமே தலைமைப்பதவிக்கு முன் வைக்கப்படுவார். முக்கியமாக அப்படி முன் வைக்கப்படுபவர் போர்க்குணம் மிகுந்தவராகவே இருப்பார்.

கருணாநிதி,ஜெயலலிதா,நரேந்திர மோடி மூவருமே போர்க்குணம் மிகுந்தவர்கள். நல்லவர்கள் என்று சொல்லவே முடியாது என்றாலும் வல்லவர்கள். திறமை சாலிகள்.
 "திறமை வேறு.  நேர்மை வேறு.”


எம்.ஜி.ஆர்  திமுக விலிருந்து வெளியேறி ஒரு கட்சி ஆரம்பித்தது பற்றியும்
வைகோ வெளியேறியது பற்றியும் சொல்லவேண்டும்.

எம்.ஜி.ஆர் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர். மேலும் நிறைய ரசிகர்கள் அவருக்காக.

வைகோ கணிசமான தொண்டர் செல்வாக்கு கொண்ட தலைவர். கொள்கை ஆர்வம் கொண்ட சிறு அளவிலான் தொண்டர்கள்.
தொண்டர் செல்வாக்கு வேறு. மக்கள் செல்வாக்கு வேறு.

எம்.ஜி.ஆருக்கு கொடுத்த அதே முக்கியத்துவத்தை பத்திரிக்கைகள் வைகோவுக்கும் கொடுத்த போதும் வைகோவின் மறுமலர்ச்சி திமுக பெரிதாய் சாதிக்கமுடியவில்லை.