Share

Sep 30, 2019

ரெடிமேட் ட்ரெஸ், பிரியாணி, புக்ஸ், மேகஸின்



ரொம்ப சின்ன பையனாக இருக்கும் போதே ரெடிமேட் டிரஸ் அணிய ஆரம்பித்து விட்டேன்.

 இன்னொன்று 'நான் வெஜ்' . தினமும் மட்டன், சிக்கன் வேண்டும் என்ற பிடிவாதம். வீட்டுல எனக்காக தினமும் சமைக்க வேண்டியிருந்திருக்கிறது.

அடுத்து புத்தகங்கள்.

பாக்கெட் மணியை புத்தகங்கள், பத்திரிக்கைகளுக்காக அதிகமும் செலவழிக்கும் குணம்.

இவையெல்லாம் தொட்டில் பழக்கம்.

லஞ்ச் விஷயம். மதியம் தினமும் ஒரு 1/2 மட்டன் பிரியாணி.
அப்போதெல்லாம் இது விசித்திரமான பழக்கமாக பார்க்கப்பட்டது.

சோறு, குழம்பு, கூட்டு, ரசம், மோரு.. இந்த ஸ்கொயர் மீல்ஸ்னு மத்தவங்க ஹோட்டல்ல சாப்பிடுறதெல்லாம் அப்ப எனக்கு ஒத்தே வராது.

என்னோட அப்பா என் மீது எல்லோரிடமும் குறை சொல்வார். "ரெடி மேட் ட்ரஸ்ல காச கொட்றான். துணியெடுத்து டெய்லர் கிட்ட குடுத்து ஒரு ட்ரெஸ் கூட தச்சதேயில்ல. காஸ்ட்லி ரெடிமேட் தான். காச கரியாக்றான். "
கல்யாணமாகி ரெண்டு கொழந்தங்க வந்த பிறகும் திருந்த மாட்டேங்றான்ற அதிருப்தி அவருக்கு எப்போதுமே இருந்தது.

போனோ, டபுள் புல், வான் ஹுசைன், லூயி பிலிப், அலன் சிலி, சராக்தின்.
சராக்தின் அப்ப பாம்பே கொலாபாவிலிருந்து பார்சல் வரும்.

வீட்டுக்கு வர்றவங்கள புக் ஷெல்ஃப காட்டி "எவ்வளவு புக்ஸ் பாருங்க. புக்ஸ், மேகஸினுக்கு ரொம்ப செலவழிக்றான்"

இப்ப பாருங்க. கிட்டத்தட்ட எல்லோருமே
பிரியாணி லஞ்ச் பழக்கத்திற்கு வந்து விட்டார்கள்.
சென்னையில் பிரியாணி கடைகள் எவ்வளவு என்று எண்ண முடியுமா?

அது போல ரெடிமேட் ட்ரெஸ்.
கிட்டத்தட்ட எல்லோருக்குமே ரெடி மேட் சௌகரியம் புரிந்திருக்கிறது. ரெடிமேட் டிரஸ் அணிய ஆரம்பித்து விட்டார்கள்.

புத்தகங்கள், மேகஸினுக்கு காசு அள்ளி விட பெரும்பாலோர் இருக்கிறார்களா?

புக்ஃபேர் திருவிழா போல எல்லா ஊரிலும் கொண்டாட்டமாக தெரிந்தாலும் வாசிப்பு இல்லாத கெட சனம், பெருங்குடி மக்கள் இன்னமும் இருக்கிறதே.

வெற்றி கொண்டான்


1973ல்மோகன் குமாரமங்கலம் விமான விபத்தில் மறைந்த மறு நாள் மதுரை ஆரப்பாளயத்தில் நடந்த திமுக கூட்டத்தில் வெற்றி கொண்டான் பேசியது :
கடவுள் மோகன் குமாரமங்கலத்திடம் கேட்டார்
" மோகன்! நீ கலைஞரை ரொம்ப திட்டுற."
மோகன் குமாரமங்கலம் பதில் : ஆமா கடவுளே.
அது தான என் வேலை.
திமுக வை எம்ஜியாரை வைத்து உடைத்ததே என் வேலை தான்.
இந்திராகாந்தி இந்த மாதிரி வேலை செய்யறதுக்காகவே என்ன மத்திய மந்திரியாக்கி வச்சிருக்கு கடவுளே.
கடவுள் : மோகன், நீ இந்த மாதிரி வேலையை நிறுத்து. கலைஞரை திட்டாதே .
மோகன் : முடியாது கடவுளே.
கடவுள் : அப்ப நீ கலைஞரை திட்டுவே?
மோகன் : ஆமா கடவுளே..
கடவுள் : திட்டுவ நீ?
மோகன் : ஆமா திட்டுவேன்.
கடவுள் : சரி நீ ஏறு ப்ளேன்லே.


எம்ஜியார் முதல் முறையாக முதல்வர் ஆனபோது நடந்த விஷயம்.
எம்ஜியார் தன் அரசியல் பிரக்ஞை ரொம்ப பழைமையானது என வலியுறுத்த வேண்டி
 'அன்றைய தினம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, மகாத்மா காந்தி அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது, நானும் உண்ணாவிரதம் இருந்தேன் ' என என்னத்தையோ உளறினார்.
உடனே வெற்றிகொண்டான் இதை தன் பாணி தாக்குதலுக்கு பயன்படுத்திக்கொண்டது இப்படி!
" குல்லாக்காரப்பய வாயத்தொறந்தாலே புழுகித்தள்ளுறான்.
காந்தியும் நானும் ஒண்ணா ஒரே மேடையிலே உண்ணாவிரதம் இருந்தேன்னு சொல்லுறாய்யா! இவன் பொய்யுக்கு அளவே இல்லாம போயிடிச்சே.
நான் கூட நம்ம கோடம்பாக்கம் காந்தி கிட்டே " ஏலே, டேய் நீயாடா? உன்னோட குல்லாக்காரன் சேர்ந்து ஏதும் உண்ணாவிரதம் இருந்தானாடா?"ன்னு கேட்கிறேன்.
அவன் பதறிப் போய் " சத்தியமா நான் இல்லே அண்ணே ..." ன்னு புலம்புறான்.
குல்லாக்காரப்பய மகாத்மா காந்தியாத்தான்யா சொல்றான்!"

(காந்தியார் உண்ணாவிரதம் இருக்கிறபோதெல்லாம் நாடெங்கும் பலரும் அப்போது உண்ணாவிரதம் இருப்பார்கள் தான்.)

குல்லாக்காரப்பய.... குல்லாக்காரப்பய என்று எம்ஜியாரை கோமாளியாக சித்தரித்து வெற்றி கொண்டான் அப்போது கூட்டத்தை சிரிக்கவைத்து பலருக்கு வயிறே புண்ணாகி விடும்.

எம்ஜியார் திடீரென்று " நான் மன்றாடியார் பரம்பரை " என்றார்.
கருணாநிதி தன் பதிலாக " ஆம். டெல்லியில் மன்றாடிய பரம்பரை."என்றார்.
அப்போது திமுக மேடைகளில் வெற்றி கொண்டான் செய்த கலாட்டா - 
" நான் பக்தவத்சலத்தை பார்க்கப் போயிருந்தேன். 
அவர் அழுது கொண்டே சொன்னார்.
" இந்த குல்லாக்காரப்பய என்ன நிம்மதியா சாக விடமாட்டான் போல இருக்குப்பா.''

" ஏன்யா இப்படி கவலைப்படுகிறீர்கள்?"ன்னு நான் கேட்டேன்.
பெரியவர் பக்தவத்சலம் விம்மிக்கொண்டே சொன்னார் " திடீர்னு குல்லாக்காரன் 'நான் முதலியார். பக்தவத்சலம் முதலியார் தான் எங்க அப்பா' ன்னு சொல்லிட்டா என்ன செய்யறது?"
தமிழக முதல்வர் ஆக இருந்த காலத்தில் பத்திரிகைகளில் கார்ட்டூனில் பக்தவத்சலத்தை குரங்கு போலவே வரைவார்கள்.                                                                                                   ஜெயந்தி நடராஜனின் தாத்தா.

எம்ஜியார் ஆட்சியில் முதல் முறையாக கருணாநிதி கைது செய்யப்பட்ட நிகழ்வைப் பற்றி
வெற்றி கொண்டான் :
மாஜிஸ்ட்ரேட் சொன்னார் ' கருணாநிதியை கைது செய்ய உத்தரவிடுகிறேன்.’
அப்படி சொன்னது தான் தாமதம்.
அந்த கோர்ட்டுக்கு எதிரே ஒரு ஓட்டல்.நல்ல பெரிய ஓட்டல்.
நீங்க ஓட்டல்காரன் கிட்டே இப்ப கேளுங்க. இன்னைக்குப் போயி கேளுங்களேன்.
அவன் சொல்வான்.
" இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி "
ஓட்டல் இருந்த இடத்த கை நீட்டி காட்டி இன்னைக்கும் சொல்றான்." இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி "
( கருணாநிதி கைது உத்தரவைக் கேட்டவுடன் கொதித்துப்போய் ஆவேசத்தில், உடனே,உடனே உடன் பிறப்புகள் ஓட்டலை அடித்து நொறுக்கி விட்டார்களாம்..இப்போ வெறும் பொட்டல் தான்.ஓட்டல் கட்டிடம் தூள் தூளாகி விட்டது என்று அர்த்தம்.)
நாவலர் நெடுஞ்செழியன் பற்றி
வெற்றி கொண்டான் :
“அது ஒன்னு இருந்துச்சுய்யா எங்க கிட்டே.
நல்லா நெடு,நெடுன்னு, கொழு,கொழுன்னு ..
அடிச்சி பிரியாணி பண்ணியிருந்தா அம்பது பேர் சாப்பிட்டிருக்கலாம்.விட்டுப்புட்டோம்.”

2001ல் திருச்சி திமுக கூட்டமொன்றில் ஜெயலலிதாவின் வீடு பற்றி
வெற்றி கொண்டான் : டே! உன் தலைவி ஜெயலலிதா வீட்டுக்கு வேதா நிலையம்னு பேர் எப்படி வந்துச்சி தெரியுமா.
வேதாசலம் முதலியார்னு மதுராந்தகத்துலே ஒர்த்தன்.
அவன் தான் ஜெயலலிதா அம்மா சந்தியாவை கொஞ்ச நாள் அந்த காலத்திலே ஓட்டிக்கிட்டு இருந்தான்.
அவன் கிட்ட இருந்து புடுங்குன வீடு தான் உன் தலைவியோட ' வேதா நிலையம்.'
கூட்டத்தில் முன் வரிசையில் ஸ்டீல் சேரில் அமர்ந்திருந்த தி.மு.க மகளிர் அணியினர் உடனே எழுந்து, முகம் சுளித்தவாறு, அவசர அவசரமாக கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டார்கள்.
“LIVE IN SECLUSION. SHOW NO INTEREST IN POLITICS AND THE COMMUNITY.”
- EPICURUS
...

சாரு நிவேதிதா ஃபேஸ்புக்கில் R.P. ராஜநாயஹம்

27.09.2019
சாரு நிவேதிதா
R.P. ராஜநாயஹம் எனக்கு நன்றி சொல்லியிருந்தார். அதற்கு நான் எழுதிய பதில் இது:
இன்னும் அதிகம் அதிகம் அதிகம் எழுதுவதே எங்கள் எதிர்பார்ப்பு. இதையெல்லாம் எழுத இப்போது உங்களை விட்டால் வேறு ஆளே இல்லை இன்று. காருக்குறிச்சி அருணாச்சலம் என்று இப்போது சொன்னால் அப்படீனா என்னா என்றுதான் கேட்கும் நிலையில் இருக்கிறது இன்றைய தலைமுறை. இந்த நிலையில் சென்ற தலைமுறையை சென்ற தலைமுறையின் கலாச்சாரத்தை ஆவணப்படுத்தும் முக்கியமானவர்களுள் நீங்கள் ஒருவர். இரண்டு பெயர்கள் எனக்கு ஞாபகம் வருகின்றன. ஒன்று, தியடோர் பாஸ்கரன், இரண்டு, எஸ். முத்தையா. அடுத்து R. P. ராஜநாயஹம். இதில் எதுவும் வரிசைக்கிரமம் எல்லாம் கிடையாது.

....

28.09.2019
சாரு நிவேதிதா :
R.P. ராஜநாயஹம் இன்று எழுதியுள்ள ஏவிஎம் ஸ்டுடியோ என்ற பதிவு ஒரு அற்புதமான சிறுகதை.
எப்பேர்ப்பட்ட கலைஞன் அவன்.
அந்தப் பதிவை என் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

Sep 29, 2019

வெள்ளச்சாமியும் மாரியப்பனும்


மதுரை பரமேஸ்வரி தியேட்டருக்குப் பின்னால் இருந்த B-6 போலீஸ் ஸ்டேசனில் அப்போது வெள்ளச்சாமி என்று
ஒரு சப்- இன்ஸ்பெக்டர் இருந்தார்.
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, கரிமேடு, முரட்டம்பத்திரி, அழகரடி, புட்டுத்தோப்பு, கோமஸ் பாளையம், மேலப்பொன்னகரம், அரசரடி, ஆரப்பாளையம் பகுதியில் கேட்டுப்பார்த்தால் அந்தக்காலத்து ஆட்கள் இப்போதும் சொல்வார்கள். சரியான டெர்ரர்!
ரோட்டில் கூட்டமாக நிற்கவே முடியாது. ”வெள்ளச்சாமி ரெய்டுடா! டேய் வெள்ளச்சாமிடா!” சல்லிகள் பதறியடித்துக்கொண்டு ஓடுவார்கள். சல்லிகள் என்று இல்லை காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் எப்போதும் பதறிக்கொண்டே தான் இருப்பார்கள்.
சைக்கிளில் வருவார் வெள்ளச்சாமி. பின்னால் கான்ஸ்டபிள்களும் சைக்கிளில் வருவார்கள்.
அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் நான் நண்பர்களோடு பேசிக்கொண்டு நின்றிருந்தேன். எதிர் பாராமல் மேலப்பொன்னகரம் இரண்டாவது தெருவிலிருந்து ’சள்’ளென்று சைக்கிளில் வெள்ளச்சாமி போலீஸ் புடை சூழ வந்து
விட்டார். ”அப்படியே நில்லுங்கடா டே, ஓடாதே, ஓடுனா வீட்டுக்கு வந்து தூக்குவேன்.”
ஓட அவகாசமே இல்லை.
ஒரு பத்து பேர் சிக்கிக்கொண்டோம்.
என்னைப்பார்த்துத்தான் வெள்ளச்சாமி பேசினார். “ ஏன்டா இப்படி கும்பலா நிக்கிறீங்க?
படிக்கிற வயசில என்னடா சலம்பல். உங்க அக்கா தங்கச்சிங்க தான ரோட்டில போறாங்க.. அவங்களுக்குத் தான கஷ்டம்”
ஒரு சின்ன லெக்சர் கொடுத்தார்.
என்னைப்பார்த்தே எஸ்.ஐ. பேசியதால் நான் தான் மிரண்டு கொண்டே பதில் சொல்ல வேண்டியிருந்தது - “ சாரி சார்.. இனிமே இப்படி நிக்கவே மாட்டோம் சார்”
அவர் மன்னிக்கவில்லை. “ அப்படியே ஸ்டேசனுக்கு நடங்கடா.”
அவமானமான அவமானம்…
எங்க தெருவுக்கு அடுத்த தெருவில் சாலமோன் பாப்பையா வீடு. அந்த தெருவுக்குள் ஓடி நான் தப்பி விட்டேன்.
ஸ்டேஷனில் என்னைக்காணாமல் மற்றவர்களிடம் வெள்ளச்சாமி
“ எங்கடா அவன்? அவன்… லாங்க் ஹேர் ஸ்டைல்!
அவன் தான்டா..அந்த கண்ணாடிக்காரன் எங்கடா?”
”ஓடிட்டான் சார்!”
”அவன் அட்ரஸக்குடுங்கடா..”
”அவனோட அப்பா கஸ்டம்ஸ் ஆபிசர் சார்”
”யாரா இருந்தா என்னடா? யோவ் அவன் பேரு அட்ரஸ் வாங்கி வாரண்ட் அனுப்பு”
எல்லோரையும் கேஸ் எதுவும் போடாமல் வெள்ளச்சாமி திருப்பி அனுப்பிவிட்டார்.
அவனுங்க வந்து “ தோழரே! உனக்கு வாரண்ட் அனுப்பச்சொல்லிட்டாருய்யா வெள்ளச்சாமி” என்று என்னிடம் சொல்றாங்கே.. நான் அரண்டே போனேன்.
காலேஜில வகுப்பில கூட நிம்மதியே இல்லை. ஒரு வாரம் செத்துத்தான் பொழச்சேன். தெனமும் வீட்டுக்கு வந்தவுன்ன
“ உன்ன பெத்த வயத்தில பெரண்டைய தான் அள்ளி வச்சி கட்டணும்”னு எங்க அம்மா கூப்பாடு போட்டு வாரண்டைக் காட்டினால் என்ன செய்ய? அல்லது வாரண்ட் இல்லாட்டியும் பி- 6 ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி கான்ஸ்டபிள் வந்து சொல்லி விட்டால்?
ரெண்டு மாசமா எனக்கு வாரண்டும் வரல. போலீஸும் வரல.
கொஞ்சம் பயம் தெளிஞ்சிருந்திருச்சி.
முதல் அத்தியாயம் இத்துடன் முடிந்தது.
இனி இரண்டாவது அத்தியாயம் இருக்குதே!
சொந்த ஊர் செய்துங்க நல்லூரில் இருந்து எங்கள் கருங்குளம் வயலில் விவசாய வேலை பார்த்துக்கொண்டிருந்த மாரியப்பன் மதுரைக்கு வந்திருந்தான்.
மாரியப்பனின் விசுவாசம் அலாதியானது. என் பெரியப்பா மகன் பெயர் பாலு. என் பெயர் துரை. அவன் தன் மகனுக்கு
பால் துரை என்று பெயரிட்டான். பெரிய முதலாளி மகன் பெயரும் சின்ன முதலாளி மகன் பெயரும் இணைத்து சேர்த்து
தன் மகனுக்கு பெயரிட்டிருப்பதை செய்துங்க நல்லூரில் எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக்கொள்வான்.
அவனுக்கு வேண்டியது வாங்கித்தர விரும்பி அவனை அழைத்துக்கொண்டு தெருவில் ஏ.ஏ. ரோட்டை நோக்கி நடந்தேன்.
”மொதலாளி! முன்னால சின்னவரு (என் அப்பா) நாகப்பட்டினத்துல இருந்தப்ப கூட அங்க வந்திருக்கேன். அப்ப நீங்க சின்னப்பையன்! கடல்ல கப்பல் எல்லாம் பாத்தேனே!” என்று சந்தோஷமாக சொல்லிக்கொண்டே வந்தான்.
மொதலாளி, மொதலாளி என்று வார்த்தைக்கு ஒரு மொதலாளி போட்டுத்தான் பேசுவான்.
”உனக்கு என்னடா வேணும்? ” – நான்.

பெட்டிக்கடையில் வெத்தலை பாக்கு புகையிலை வாங்கித்தரச்சொன்னான். ஒரு கூல்டிரிங்ஸ் வாங்கிக்கொள்ளச்சொன்னேன்.
“குண்டு போட்ட சோடா கலர் தான் வேணும். காளி மார்க் கலர்லாம் ஒத்துக்காது” என்று சங்கடப்பட்டான்.

”தொரை! தோழரெ! தாழன் யாரு?”
பாண்டி விசாரித்தான். இன்னும் சிலர் ஆர்வத்துடன் என்னை சூழ்ந்து கொண்டார்கள்.
”எங்க வயல்ல வேல பார்க்கிற மாரியப்பன். ”
இவ்வளவு தான்..இவ்வளவில் எஸ்.ஐ வெள்ளச்சாமி அதே மேலப்பொன்னகரம் ரெண்டாவது தெருவிலிருந்து அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் போலீஸ்காரர்கள் புடை சூழ ’சள்’ளென்று நுழைந்தார்.
”அப்படியே நில்லுங்கடா! எவனும் ஓடக்கூடாது!”
அடச்சே….. விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீதுளரோ?
உயிரை வெறுத்து நான் தலை தெறிக்க என் தெருவுக்குள் மின்னல் வேகத்தில் ஓட ஆரம்பித்தேன். பறக்க ஆரம்பித்து விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆடிக்காத்தில அம்மியே பறக்குதே. அப்பளத்தின் கதி...

 மாரியப்பன் அரண்டு மிரண்டு போய் தவித்து தக்காளி வித்து…. நிலைமையின் தீவிரம் உறைத்து.. சுதாரித்து..என்னைத் தொடர்ந்து கூப்பாடு போட்டுக்கொண்டே ஓடோடி வருகிறான்.
“ அய்யோ நான் செத்தேன்.. காப்பாத்துங்க மொதலாளி.. என்னை விட்டுப்போட்டு ஓடுதியளே!மொதலாளி.. மொதலாளி. அய்யய்யோ மொதலாளி. அய்யோ மொதலாளி.அய்யோ அய்யய்யோ..“
துள்ளி வரும் சூறைக்காற்று… துடிக்குதொரு தென்னந்தோப்பு… இல்லை ஒரு ’பாதுகாப்பு’….. ?
வீட்டுக்கு வந்து தான் நின்றேன் நான்.
மாரியப்பன் ஓடி..ஓடோடி,ஓடோடி வந்து சேர்ந்து இறைக்க, இறைக்க சொன்னான்: ”போலீஸ்னா எனக்கு ரொம்ப பயம் முதலாளி.  அடி பிச்சிப்போடுவானுங்க முதலாளி. போலீஸ்னா எனக்கு ரொம்பப் பயம் பாத்துக்கிடுங்க! இந்தப்போலீஸ்காரப்பயலுவள எனக்கு வல்லுசா பிடிக்கவும் செய்யாது பாத்துக்கிடுங்க....”
……………………
மீள்

A. V. M. ஸ்டுடியோ


2015ல் சென்னைக்கு வந்த பத்து நாட்களில் வேறு வீடு பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது நான், என் இளைய மகன் அஷ்வத் துணையுடன் என் ஸ்கூட்டரில் கோயம்பேடில் இருந்து கிளம்பி சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து வந்து திடீரென்று ஒரு சந்தில் இருந்து வெளி வந்த அந்த வினாடி மறக்கவே முடியாது. எதிரே ஏ.வி.எம் ஸ்டுடியோ.
பக்கத்து ஏவிஎம் ராஜேஷ்வரி தியேட்டரில் கூட்டம். விஜய் படம் ரிலீஸ்.
சென்னை பெரிதாக மாறி எனக்கு topography சுத்தமாக புரிந்து கொள்ள முடியவில்லை.
தினமும் நான் அலுவலகம் போல வந்து போய்க்கொண்டிருந்த ஏ.வி.எம்.ஸ்டுடியோ.
அன்றைக்கு இருந்த துக்கத்துடன், பழம் நினைவுகள் மேகமாய் என்னை மூடியது.
அதன் பின் நெற்குன்றத்தில் இருந்த போதும், ஆலப்பாக்கம் வந்து விட்ட பின்னும் எவ்வளவு தடவை அந்த ஆற்காடு ரோட்டிலும், அருணாச்சலம் ரோட்டிலும் கடந்து செல்லும் போதெல்லாம் ஏ.வி.எம்.ஸ்டுடியோவிற்குள் போய் அந்த ஞாபக அடுக்கின் நினைவுகளை மேலெலுப்பி விட வேண்டும் என்று யோசித்திருக்கிறேன்.
சென்ற ஞாயிறன்று மாலை பஸ்ஸில் இருந்து இறங்கி ஏ.வி.எம். குளோப் உருண்டை கொண்ட கேட்டில் நுழையும் போது சில பத்து வருடங்களுக்கு முன் தினம் அந்த கேட்டை நான் நெருங்கி உள் நுழையும் போதெல்லாம் கூர்க்காவால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் கொல்ட்டி பெண்கள் கூட்டம் என்னைப் பார்த்து இறைஞ்சும் குரலில் சொல்லும் வார்த்தைகள் : ’ஏமண்டி, சூட்டிங் சூடாலண்டி….. செப்பண்டி..”

Reminiscence  beats inside me like a second heart. 

இப்போது அந்த நீண்ட பாதையில் செல்கிறேன். ஏ.வி.எம். 'ஜி' தியேட்டர் இப்போது ஜி ஸ்டுடியோ? நான் நினைவில் வைத்திருந்த காட்சிகளை இன்றைய சூழல் நிர்த்தாட்சண்யமாக சிதைத்து, உருமாற்றி இருக்கிறது.முழுக்க வேறு கட்டடங்கள். அபார்ட்மெண்ட்ஸ்.
ஆனால் ஏ.வி.எம் எடிட்டிங் பகுதி மட்டும் என்னை திகைக்க வைக்கும்படி மாறாமல், காலத்தின் தவிர்க்க முடியாத தீற்றல்களுடன் அப்படியே இருக்கிறது. ஆர்.ஆர் தியேட்டர் எங்கே என்று நான் பார்க்கவில்லை.
"Really,one might almost live one's life over, if only one could make a sufficient effort of recollection."
- John Banville in his novel " The Sea"
அக்ரஹாரத்தில் கழுதை ஜான் ஆப்ரஹாமை நான் பார்த்தது இங்கே தான். பீம்சிங்கின் எடிட்டர் பால்துரை சிங்கம், லெனின், கே.ஆர் ராமலிங்கம் எடிட்டிங் ரூம்கள். அதன் முன் இப்போதும் இரண்டு பெஞ்ச்கள்.
புட்டண்ணா கனகல், (கிருஷ்ணன்) பஞ்சு இருவரும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருக்க நான் பக்கத்தில் நின்ற காட்சி.
கமல் ஹாசன், மகேந்திரன், எஸ்.பி.முத்துராமன், ஜி.என்.ரங்கராஜன் அங்கே உழன்று கொண்டிருந்த அந்த கடந்த நாட்கள்.
கண்ணதாசன் மகன் கலைவாணன் “ அழகே, அழகு. தேவதை” என்று வாய் விட்டு ஒரே பாட்டை பாடிக்கொண்டே எடிட்டிங் அறையில் என் போல அஸிஸ்டண்ட் டைரக்டராக சுழன்ற இறந்த நாட்கள்.
Nostalgia..reminiscence.. Evocation.
அந்த சுருள் படிக்கட்டில் அந்தக் காலத்தில் இயக்குனராகத் துடித்த ஒருவன் என்னை உட்கார வைத்து தன் திரைக்கதையை விவரிக்க ஆரம்பித்து, அவன் கண்ணீர் விட்டு, தேம்பிக்கூட அழுத போதும் நான் கல் நெஞ்சுடன் முகத்தை Placid ஆக வைத்திருப்பதைப் பார்த்து “ என்னங்க, கொஞ்சம் கூட என் கதையில் இன்வால்வ் ஆக மாட்டேன்றீங்களே? “ என்று முகம் சுண்டி கேட்டானே.
ரத்தவேர்வையுடன் ஜீசஸ் தவித்த போது உறங்கிக்கொண்டிருந்த சீடர்கள். Gesthamene crisis?
…………………



Sep 27, 2019

ராஜநாயஹம் பற்றி சாரு நிவேதிதா இன்று


ராஜநாயஹம் பற்றி சாரு நிவேதிதா
இன்று எழுதியுள்ள ஒரு கடிதம்

அன்புள்ள ராம்ஜி, காயத்ரி,

என்னுடைய நீண்ட கால நண்பர் R.P. ராஜநாயஹம் முகநூலில் எழுதி வரும் குறிப்புகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  இதை நான் உங்களிடம் தனிப்பட்ட முறையில் கூட சொல்லியிருக்க முடியும்.  ஆனால் அவரைப் பற்றி தமிழ்ச் சமூகத்துக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன்.  நான் அவரைப் பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன்.  வீழ்ந்தாலும் லியர் மன்னன் லியர் மன்னனே என்ற என்னுடைய ஒரு கட்டுரை போதும், அவருடைய பெருமையைச் சொல்ல.  அவர் மாதிரி ஆட்கள் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்க வேண்டியவர்கள்.

எனக்கு ஷேக்ஸ்பியரில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவருக்குத்தான் போன் போட்டுக் கேட்பேன்.  நம்ப முடியாத அளவுக்கு ஞாபக சக்தியும் ஞானமும் கொண்டவர்.  அறிவுக் கடல் என்றே சொல்லலாம்.  அவர் சொல்லும் தகவல்களைக் கேட்டால் அவர் வயது 105 இருக்கும் என்று தோன்றும்.  ஆனால் வயது என்னவோ 55 தான்.  அதற்குக் குறைவோ என்னவோ?

லௌகீகம் என்றால் என்னவென்றே தெரியாது எனக்கு என்று நினைத்துக் கொள்வேன்.  ஆனால் ராஜநாயஹத்தைப் பார்த்தால் நானெல்லாம் லௌகீகத்தில் ஜாம்பவான் என்றே சொல்லிக் கொள்ளலாம்.  லௌகீகத்தில் ஒரு மண்ணும் தெரியாது.  பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர்.  வருகிறவன் போகிறவனுக்கெல்லாம் பணத்தை வாரி இறைத்து விட்டு இப்போது அந்தக் கால பாரதியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  இரண்டு பையன்களுக்கும் திருமணம் செய்து விட்டார் என்பதுதான் அவரது லௌகீக சாதனை.  திருப்பூரில் அவர் வசித்த போது அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சென்னையிலிருந்து திருப்பூர் போய் பார்த்தேன்.

ராஜநாயஹம் ஒரு நடமாடும் நூலகம்.  அவரிடம் உள்ள தகவல்கள் அனைத்தும் புத்தகமாகத் தொகுக்கப்பட வேண்டும்.  எழுதுங்கள் எழுதுங்கள் என்று அவரைப் பார்க்கும் போதெல்லாம் நச்சரித்துக் கொண்டிருக்கும் நண்பன் நான் என்பதால் இதையெல்லாம் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்று நம்புகிறேன்.  மற்ற பதிப்பகங்கள் அவரை அணுகுவதற்குள் அவரை அணுகி காண்ட்ராக்ட் போட்டு விடுங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  அவருக்கு லௌகீகமே தெரியாது.  தாண்டவராயன் என்பவர் இப்போது இந்த க்ஷணம் ஒரு பதிப்பகம் ஆரம்பித்து உங்கள் எழுத்தையெல்லாம் எனக்குக் கொடுங்கள் என்று பேப்பரை நீட்டினால் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விடுவார்.  டாக்ஸி செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்புவார்.  அந்த மாதிரி ஆள்.  அவரை அப்படி விட்டு விடாதீர்கள்.  அவர் தமிழின் சொத்து.  மேலும் ஒரு விபரம், தி.ஜானகிராமனை நான் ஒரு refined பாலகுமாரன் என்று முட்டாள்தனமாகத் திட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில் பொறுமையாக உங்கள் வாழ்நாளில் ஒருநாள் தி.ஜா.வை கடவுள் ஸ்தானத்தில் வைத்துக் கொண்டாடப் போகிறீர்கள்; அதை நான் பார்க்கத்தான் போகிறேன் என்று முப்பது ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.  இப்போது அவர் வாக்கு பலித்து விட்டது.

முகநூலில் இன்றைய அவரது குறிப்பைப் பாருங்கள்.

https://www.facebook.com/rprajanayahem/posts/2525200787693372

....

"Me talk pretty one day" - David Sedaris


அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் டேவிட் செடாரிஸ்
நூல் – “Me talk pretty one day”
செடாரிஸுடைய அப்பா அவரிடம் சிறுவனாக இருக்கும்போது கடற்கரையில் கேட்கிறார்: உலகம் முழுவதும் மொத்தமாக எவ்வளவு மணல் துகள் இருக்கிறது தெரியுமா?”

அவருக்கு பள்ளியில் படிக்கும்போது நடந்த ஒரு விஷயம் நினைவில் வருகிறது.
’ஒரு பறவை அமெரிக்க கிழக்கு கடற்கரையில் இருந்து ஒவ்வொரு மணல் துகள்களாக தென் ஆப்ரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் கொண்டு சேர்க்க எவ்வளவு வருடங்கள் ஆகும் தெரியுமா? .... வருடங்கள்!’ என்று ஆசிரியர் சொல்லக்கேட்ட போது
இவர் அந்த ஆசிரியர் குறிப்பிட்ட வருடங்கள் எவ்வளவு என்பதை கிரகித்துக்கொள்ளவில்லை.
ஆனால்இந்த வேலையற்ற வேலையை செய்வதற்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட அந்த ஒற்றைப் பறவை குறித்துத்தான் அந்த வயதில் முழுவதுமாக கவனம் குவிந்திருக்கிறது. The single bird chosen to perform this thankless task.
The Glory of being a bird is that nobody would ever put you to work.
ஒரு குதிரை போல மாடு போல வேலை செய்ய வேண்டிய கஷ்டமேயில்லாத பிறவியல்லவா பறவை?
“வானத்துப்பறவைகளைப் பாருங்கள்! அவை விதைப்பதுமில்லை. அறுப்பதுமில்லை.” - ஜீசஸ் க்ரைஸ்ட்.
“விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக்குருவி போல” என்று பாரதியார் சொன்னார்.
ஏதோ தானியங்களைத் தேடுவதும், கூடு கட்டுவதுமான இயல்பான இலகுவான வாழ்க்கை பறவையுடையது.
அதன் leisure time அதன் நோக்கில் தான் செலவழியும்.
இப்படி மணலை ஒரு கண்டத்தில் இருந்து எடுத்துக்கொண்டு இன்னொரு கண்டத்துக்கு வருடக்கணக்கில் ட்ரான்ஸ்போர்ட் செய்ய .. பறவைக்கு என்ன தலையில ஓத்த விதியா..?
கிளையொன்றில் அமர்ந்திருந்த அந்தப்பறவை குனிந்து ஏளனமாக கேட்கிறது: "You want me to do what?!" பறப்பதற்கு முன்
’முட்டாள்தனமான இந்த அஸைன்மெண்ட்’ பற்றி எள்ளி நகையாடி விட்டு
அதன் பின் கிளம்பி இந்த ’வெட்டி ஓலு, நித்திரைக் கேடு’ ப்ராஜக்ட் விஷயத்தை தன் சக பறவைகளிடம் சொல்ல கிளம்புகிறது.
செடாரிஸ் தன் அப்பாவின் கேள்விக்குத் திரும்புகிறார்.
How many grains of sand are there in the world?
- 'A lot.'
Case closed.

Sep 26, 2019

Don't cry



நேற்று இங்கே என் ஸ்டேட்டஸில் 1992ல் இந்திரா பார்த்தசாரதியின் மனைவி இந்திரா மாமி மறைவு செய்தியை  ஹிண்டு ஆபிச்சுவரியில் பார்த்து தான் தெரிந்து கொள்ள முடிந்தது என்பதை எந்த நேரத்தில் எழுதினேனோ, சில மணி நேரத்தில் கி. ரா வின் மனைவி கணவதியம்மாவின் மரணம் நிகழ்ந்திருக்கிறது.


கி. ரா, இ. பா இருவருடனும் புதுவையில் நான் பழகி, நட்பு சீராட்டிய காலங்கள் அபூர்வ வாய்ப்பு.
இந்திரா பார்த்தசாரதியையாவது அதன் பிறகு சென்னையில் இரு முறை வெவ்வேறு சமயங்களில் சந்தித்திருக்கிறேன். அதுவும் இப்போது நான் சென்னையில் கூத்துப்பட்டறையில் வேலை பார்க்கும் இந்த நான்கு வருடங்களில் இ. பா. வை பார்த்ததில்லை.
கி. ரா. வை புதுவையை விட்டு வந்த பின்னர் இந்த இருபத்தொன்பது வருடங்களாக சந்தித்ததேயில்லை.

கடிதங்கள் பரிமாற்றம் இருந்தது. அதன் பின் போன். மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கணவதியம்மாவும் குரல் கொடுக்க தவறியதேயில்லை:'நல்லாயிருக்கீங்களா ராஜநாயஹம், எப்ப இங்க வருவீங்க, எவ்வளவு காலமாச்சி'

கதை சொல்லியில் என்னைப்பற்றி கிரா எழுதியது பதினான்கு வருடங்களுக்கு பிறகு. பழைய நட்பை அசை போட்டு எழுதியிருக்கிறார்.
நான் "ஆன வயதிற்களவில்லை எனினும் தெளிவே வடிவாம் கி. ரா" கட்டுரை எழுதியது அவரை சந்தித்து 17 ஆண்டுகள் ஓடி விட்ட போது 2007ல்.

கணவதியம்மாவின் மரணச்செய்தி கேட்டவுடன், 97 வயதாகி விட்ட கி. ரா. விடம் 'துஷ்டி' விசாரிக்க அட்டெண்டன்ஸ் கொடுக்க பிரபலங்களில் இருந்து துர்பல பிரகிருதிகள் வரை நெருக்கியடித்து படுத்தியெடுப்பார்களே என்ற நிதர்சனம் கவலையளிக்கிறது.

கல்யாணம், இழவு எல்லாமே ரொம்ப எந்திரத்தனமான சம்பிரதாயங்கள்.

நிறைய வேஷ விஷயங்கள் நிரம்பியது.

எவ்வளவோ நூற்றுக்கணக்கான கல்யாணங்களுக்கு போய், கிரகப்பிவேசங்களுக்கு, பிறந்த நாள் வைபவங்களுக்கு போனாலும் சரி போகாவிட்டாலும் கூட அளவுக்கதிகமாக மொய் செய்த நான் சென்ற ஆண்டு என் மகன்களின் திருமணங்கள் நடந்த போது ஒருவருக்குமே அழைப்பிதழ் தரவேயில்லை என்பதை அறிய வந்த போது கி. ரா. ரொம்பவே மனதார பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.

எவ்வளவோ எழவுகளுக்கு எடுத்தேறி செலவழித்திருக்கிறேன்.

என் தாய், தந்தை சமாதிகளை நான் பார்த்ததில்லை. மதுரையில் எங்கே இருக்கின்றன என்பதும் இன்று வரை தெரியாது.

2013ல் என் தகப்பனார் இறந்த நேரத்தில்   ஏழு மாத  காலமாக வேலையில்லாமல் இருந்தேன்.
கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வரவேயில்லை.
சாவுக்கு போன நான் ஈமக்கிரியைகளில் கலந்து கொள்ளவில்லை.

2014லில் ஆறு மாதம் வேலையில்லாமல், என் அம்மா இறந்த அன்று தான் புதிய வேலைக்கு சேர்ந்திருந்தேன்.
'அம்மா எறந்துட்டாங்க. 'அலை பேசி செய்தி. அம்மாவே போன பிறகு யார் முகத்தை போய் பார்க்க வேண்டும்?

வகுப்புக்கு போய் பாடம் நடத்தினேன்.

குழந்தைகள் முன் அம்மா இறந்த அன்றும் கூட பாடினேன்

When I was just a child I asked my mama
What will I be?
Will I be a doctor?
Will I be an actor?

This what she said to me.
'Che Sara, sara
What ever will be,
Future is not ours to see
Che Sara, sara

அடக்க முடியாமல் பீறிட்டு கலங்கியழுத போது குழந்தைகள் 'Why do you Cry sir?' என குழம்பிக்கேட்ட போது நான் 'I have no father and mother'

All the children consoled me : 'Don't cry sir. We are all with you. 
Don't cry sir '

....






Sep 25, 2019

மூணு பேராவில மூணு சமாச்சாரம்


அமிதாப் பச்சன் தாதா சாகேப் விருது பெறவிருக்கிறார்.

அடுத்த வருடம் இந்த விருது பெற தகுதியானவர் கமல் ஹாசன்.
கமல் பாரத ரத்னா பெறவும் தகுதியானவர். ஐந்து வருடம் முன்னரே எழுதியிருக்கிறேன்.

இன்று அரசியலில் இறங்கியிருக்கிற நிலையில் அவருக்கு இந்த கௌரவங்கள் கொடுக்க முன் வர மாட்டார்கள்.

..

பரோட்டா சூரி சொல்வது " மற்ற நடிகர்கள் எந்த மொழியிலும் நடித்து விடலாம். காமெடி நடிகர்கள் பிற மொழிகளில் நடிக்க முடியாது"

நகைச்சுவைக்கு வட்டார வழக்கு முக்கியம். தாய்மொழி வட்டார வழக்கு பேச்சு மொழி.

இதையும் கூட ஒரு காமெடி நடிகர் உடைத்திருக்கிறார்.

இயக்குநர் ராதா மோகன் படம் 'மொழி' படத்தில் நடித்த பிரம்மானந்தம். "எனக்கு பிடிக்கலன்னா மூஞ்சயே நான்  பாக்க மாட்டேன்.. "

விஷேச திறமை கொண்ட பிரம்மானந்தம் பல தமிழ் படங்களில் கலக்கியிருக்கிறார்.

..

 ஹிண்டு பார்க்கும் போது ஆபிச்சுவரி எப்போதுமே கவனிப்பேன். இன்று பார்த்துக் கொண்டிருக்கும் போது பழசானதெல்லாம் ஞாபகம் வந்தது.

1992ல Hindu Obituary column பார்த்து இந்திரா மாமி மறைந்த விஷயம் தற்செயலாக தெரிய வந்தது. இந்திரா பார்த்தசாரதியின் மனைவி.

1999ம் ஆண்டு ஹிண்டு ஆபிச்சுவரியில் தான் நடிகை சந்திர கலா மரணம் பற்றி பார்த்தேன். அந்த இரங்கலில் இன்னொரு செய்தி தெரிந்தது. சந்திர கலா முஸ்லிமாக மதம் மாறி வாழ்ந்தவர். அந்த முஸ்லிம் பெயர் அதில் இருந்தது.

பிராப்தம் எல் ஆர் ஈஸ்வரி பாடல் 'இது மார்கழி மாதம், முன் பனி காலம், கண்ண மயக்குது மோகம், ஏன் நடுங்குது தேகம்' சந்திர கலா.

புகுந்த வீடு ஏ. எம். ராஜா, ஜிக்கி 'செந்தாமரையே, செந்தேன் இதழே'

சந்திர கலா வீடும், இயக்குநர் புட்டன்னா வீடும் சென்னையில் அடுத்தடுத்து இருந்து, முன்னே நான் பார்த்த நினைவு.

..

Sep 22, 2019

யுக சந்தியில் நீங்காத நினைவு


இன்று திரும்பிப்பார்க்கும்போது உன்னை விட உற்சாகமான ஒரு பெண்ணை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை.
அந்த ஊரில் நான் உன்னை பள்ளி சீருடையில் சந்தித்த அந்த நாட்களில் நான் ஒரு வாலிபனாக, அரசு உத்யோகஸ்தன்.
உன்னை பார்த்த போது நீ என்னை ’சைட்’ அடித்தாய். கண்ணில் இதயத்தை வைத்து பார்த்தாய்.
என்னுடைய மனைவியை விட என் காதலிகள் யாரும் அழகியில்லை. என் மனைவியின் கால் தூசிக்கு கூட என் காதலிகள் சமமாக மாட்டார்கள். எனினும் என் காதலிகள் அனைவரிலும் நீ தான் பேரழகி.
நான் அலுவலகம் செல்லும்போது அக்ரஹாரத்தில் உன் வீட்டில் இருந்து என் கூடவே தற்செயல் போல் அருகில் சற்று பின் தங்கி, அல்லது முன்னாலே நடந்து வருவாய்.
நான் சாப்பிட்ட மாமி மெஸ்ஸிற்கு அடுத்த வீடு உன் வீடு.
மாமி மெஸ் மாமா இரு முடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு கிளம்பிய அன்று என் அருகில் நின்று அந்த சடங்குகளை ஆர்வமாக நான் பார்ப்பதை கவனித்து “ மாமி, இவர் உன்னிப்பா இத கவனிச்சிண்டு இருக்கார் பாருங்க” என சொல்லி அந்த பூஜை சடங்குகளை விளக்கி சொன்னாய்.
அக்ரஹாரத்தின் பின் பகுதி ஆள் அரவமற்ற சந்தில் இருவரும் மெய் மறந்து நின்றிருக்கிறோம். எவ்வளவு நேர தனிமை. பயமாகவும் இருக்கும். யாராவது கவனித்து விட்டால் என்று எனக்கு கலவரம்.
காதலிக்கிற காலங்களில் நான் கவனித்த ஒன்று. கலவரமெல்லாம் எனக்கு தான். காதலிக்கிற பெண்களிடம் பயமிருந்ததாக நான் உணர முடிந்ததில்லை. ’இப்ப என்ன’ என்பதான நிதானமும் தோரணையும், மிடுக்கும் தான். காதலிக்கிற பையன், பஞ்சாயத்து வர நேர்ந்தால் என்ன பாடு படுவான் என்று காதலி யோசித்ததாக தெரிந்ததில்லை.
என்னுடைய அலுவலகத்தில் பொது மக்கள் பயன் படுத்த வெளி பகுதியிலேயே பசை உண்டு. என்றாலும் நீ என் கவுண்ட்டரில் வந்து நின்று “கொஞ்சம் gum தர்றீங்களா?” என்று கேட்பதும் நான் பசை தரும்போதே உன் கையை ரகசியமாக ஆனால் நறுக் என்று பலமாக கிள்ளுவதும். வலியை நீ காட்டாமல் சிரிப்பதும்.
அலுவலகத்தில் நம்முடைய இந்த இளமையான நுட்ப தொடர்பு அனைவரும் பரவலாக கவனிக்கும்படியாக ஆகி என்னை விட இருபது வருடம் சீனியரான என் கல்லீக் சத்தமாக போட்டு உடைத்தார். “ உங்கள பாக்க தான அந்த பொண்ணு வருதுன்னு ஆஃபீஸில் உள்ள எல்லாருக்கும் தெரியும்”
எத்தனையோ சினிமா அந்த சின்ன ஊரில் வெவ்வேறு இடத்தில் உட்கார்ந்தாலும் இருட்டில் கூட நாம் இருவரும் முகம் பார்த்துக்கொண்டு.
சைட் அடிப்பது என்பது தான் எத்தனை அழகான விஷயம்.
ஒருவர் சாயல் என்பது ஒவ்வொருவர் பார்வைக்கும் ஒவ்வொரு விதமாய் தெரியும். அதற்கு அர்த்தம் கிடையாது. சாயல் விஷயத்தில் இருவருக்கு ஒரே நிலைப்பாடு இருப்பதில்லை. ஆனாலும் இவர பாத்தா அவர மாதிரியிருக்கு. ச்சேசே. இவனுக்கும் அவனுக்கும் சாயல்ல ஒரு சம்பந்தமும் இருப்பதில்லை.

எப்படியோ ஒருவர் அலுவலகத்திலேயே ஒருவர் என்னை பார்த்து ’ஒரு படத்துக்கு போனேன். அந்த படத்தில ஒரு நடிகர் பாத்தா ராஜநாயஹம் மாதிரியே இருக்கார்.’
ஒருவர் என்றில்லை. பலரும். ஒரு கட்டத்தில் அந்த ஊரும். பள்ளி குழந்தைகள் கூட என்னைப்பார்த்தால் “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா” என்று கோரஸாக பாட ஆரம்பித்து விட்டன.
நான் உன் வீட்டை விட்டு தாண்டும்போது உன் தம்பியை என்னை பார்த்து கத்த சொல்வாய். அவன் கூப்பாடு “ சரத் பாபு”
நீ கள்ளத்தனமாக ஒளிந்து கொண்டு அதே நேரம் தலையை நீட்டி என்னை குறும்பாக பார்த்து ‘எனக்குத்தான் என் தம்பி டப்பிங் கொடுக்கிறான்.நான் கத்த முடியாது.அதனால் அவனை கத்த சொல்கிறேன்.’ என்பது போல சிரிப்பாய்.
சரத்பாபு என்னை விட இரண்டு அங்குலம் உயரம். ரொம்ப சிவப்பு. Very handsome person.
நான் அப்போது ஓரளவு நல்ல நிறம். ( Now, I have lost my complexion.)
சரத் பாபுவிடம் உள்ள கண்ணியம் என்னிடம் கிஞ்சித்தும் கிடையாது. அந்த வாஞ்சையான குரல்  கிடையாது. எனக்கு வேறுபட்ட powerful voice. அந்த வயதில் முரட்டுத்தனம் கொண்டவன். அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தம் தான்.
அப்போதைய என் இயல்பான ஹேர் ஸ்டைல், மூக்கு கண்ணாடி இந்த பட்ட பெயருக்கு வலு சேர்த்திருக்கிறது.

இப்போது நினைக்கும் போது சரத்பாபுவுக்கும் எனக்கும் உள்ள முக்கிய வேறுபாடு. எனக்கு என் நீண்ட வாழ்வில் ஒரே மனைவி தான். ஒரே திருமணம்.
சரத் பாபுவுக்கு எப்போதும் விதிவசமாக second hand தான் மனைவிகள்.
(அப்போது இன்னொரு வேடிக்கையான விந்தை. அந்த ஊரில் ரஜினி காந்த் சாயலில் ஒரு மனிதர் அரசு வேலையில். அவர் மதுரையில் என் கல்லூரி கால காதலியின் சகோதரர்.
முள்ளும் மலரும் படம் அந்த சின்ன ஊருக்கு வந்த பின் அவரை பார்த்து ‘ரஜினி காந்த்’ என்றும் என்னை ‘சரத் பாபு’ என்றும் அடையாளமிட்டார்கள் என்பது Irony.)
நீ பள்ளியிறுதி மாணவி. என்னை பார்த்து பரவசமடைவதை பார்த்து விட்டு பாங்க்கில் பணி புரிந்த என் ரூம் மேட் ‘ மிஸ்டர், இந்த பெண்ணுக்கு நீங்க நெம்புகோலின் தத்துவத்த விளக்கினா தான் அடங்கும்’
நான் “Nature of work does’nt suit my temporament” என என் அரசு வேலையை உதறி விட்டு சினி ஃபீல்ட்டுக்கு வந்தேன்.
அதன் பின் உன்னை நான் இன்று வரை சந்தித்ததேயில்லை.
நான் சினிமாவுக்கு வந்த ஒரே வருடத்தில் நீ அடையாறு ஃபில்ம் இன்ஸ்ட்டிட்யூட்டில் படிக்க வந்ததெல்லாம் பின்னர் தான் எனக்கு தெரியும். நீ கோர்ஸ் முடிக்கும்போது தான் தெரிய வந்தது.
அடையார் ஃபில்ம் இன்ஸ்ட்டிட்யூட்டில் கூட பின்னால் திரை நடிகனாக ஆன ஒருவனுடன் உனக்கு காதல் அனுபவம் உண்டு என்பதையும் தெரிய வந்தேன்.
நான் உதவி இயக்குனராக வேலை பார்த்த படத்தின் தயாரிப்பாளர் ரொம்ப பெரிய அந்தஸ்தான செல்வந்தர். அப்போது நடுத்தர வயதை தாண்டி விட்டவர். மனைவி தவிர பெரிய நடிகையையெல்லாம் எப்போதோ திருமணம் செய்து விட்டு ஒதுங்கியவர். சினிமா நடிகைகள் சங்காத்தத்திற்காகவே படங்கள் தயாரிக்கிறாரோ என்று திரையுலகை எண்ண வைத்தவர். அரசனைப்போன்ற தோரணை கொண்டவர்.
நான் சினிமாவுலகை விட்டு வந்த பின் உன்னை ஒரு பாலச்சந்தர் படத்தில் பார்த்தேன்.
சரத் பாபுவுடன் கூட ஒரு டப்பா படத்தில் நீ ஜோடியாக நடித்ததை பார்த்தேன். என்னை சரத் பாபு என்று கிண்டல் செய்தவள் சரத் பாபுவுக்கே ஜோடியாக படத்தில்.
நான் அஸிஸ்டண்ட் டைரக்டராக வேலை பார்த்த படத்தின் அந்த அந்தஸ்தான, செல்வாக்கு மிகுந்த செல்வந்த தயாரிப்பாளர் சில வருடங்களில் உன்னை அபிமான தாரமாக்கிக்கொண்டார். உனக்கும் அவருக்கும் முப்பத்தைந்து  வயது வித்தியாசம்.

இன்று நீ எங்கிருக்கிறாய்? என்ன செய்கிறாய்? உயிருடன் இருக்கிறாயா என்று கூட தெரியவில்லையே.


Memory is my fate.





...

Sep 20, 2019

The Significant Other


திரையுலகத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அந்தக்கால சங்கீத உலக Gossips.
ஜி.என்.பாலசுப்ரமண்யம் ’சகுந்தலை’ படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் ஜோடியாய் நடித்த போதே இருவருக்கும் காதல், தொடர்பு என்று சங்கீத உலகம் முணுமுணுத்தது.
'சகுந்தலை 'படத்தில் ஆணழகன் ஜென்டில்மேன் ஜி என் பாலசுப்ரமணியமும் இசைக்குயில் எம் .எஸ் சுப்புலக்ஷ்மியும் இணைந்து பாடும் காதல் பாடல்.
எம் எஸ் : பிரேமையில் யாவும் மறந்தேனே
ஜி என் பி : ஜீவனமுனதன்பே
எம் எஸ் : என் அன்பே
ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.
ஜி.என்.பியை அவருடைய சிஷ்யை எம்.எல்.வசந்தகுமாரியுடன் இணைத்தே பேசப்பட்டதுண்டு.
There is an optical illusion about every celebrity.
நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம்பிள்ளைக்கு எம்.எஸ் மீது இருந்த sexual obsession. தூக்கிக்கொண்டு போய்விட்டார். அப்புறம் தான் கல்கி சதாசிவம் கல்யாணம் செய்து கொண்டார் என்று மிகப்பெரியவர்களே இன்று சொல்வதுண்டு.
அந்தக்காலத்தில் Me too பரபரப்பு புகார்களுக்கு முகாந்திரம், மார்க்கமிருக்கவில்லை?
மதுரை மணி ஐயர்.
தி.ஜானகிராமன் இவருடைய ரசிகர்.
இதை திருச்சி ரசிகரஞ்சனி சபாவில் மெம்பராய் இருந்த போது வையச்சேரி தேவாரம் பாலசுப்ரமண்யம் என்னிடம் உறுதிப்படுத்தினார். எனக்கு சிலிர்ப்பாய் இருந்தது. தி.ஜா போலவே எனக்கும் மதுரை மணி ஐயர் பாட்டு ரொம்ப பிடிக்கும்.
அவருடைய பாடல் கேசட் இருபதுக்கு மேல் என்னிடம் இருந்தன. அவர் குரலில் வராளி கா வா வா, கரகரப்ரியாவில் சக்கனி ராஜா, மோகனம் கபாலி, சௌராஷ்ட்ரா ராக சூர்யமூர்த்தெ, இன்னும்.. எப்போ வருவாரோ, தாயே யசோதா..இப்படி கேட்க காதுகளுக்கு என்ன பாக்யம்.
மதுரை மணி ஐயர் இந்த பூவுலகில் ஒரு ஐம்பத்தாறு வருடங்கள் தான் இருந்தார். ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கையில் அந்த சாதனை இன்னமும் சுகிர்தமாக, சாசுவதமாக.
பிரபல கல்லூரி முதல்வராய் இருந்த ஒரு மாமி ஒரு தகவலை சொன்னார்.அவர் ரிட்டயர் ஆன பிறகு இன்னொரு தனியார் கல்லூரியில் முதல்வரானார். அவருடைய இளைய சகோதரர் கூட எனக்கு கல்லூரியில் ஆசிரியராய் இருந்திருக்கிறார்.
அந்த கல்லூரி முதல்வரின் பெற்றோர் மதுரையில் பெருமாள் கோவில் தெருவில் குடியிருந்திருக்கிறார்கள். குழந்தையாக இருக்கும் காலம் தொட்டு மதுரை வாசி அவர்.
கல்லூரி முதல்வர் சிறுமியாக ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கிற காலத்தில் அங்கே பக்கத்தில் ஒரு வீட்டில் ஒரு மாமி இருந்திருக்கிறார். அவர் சங்கீதம், பரதநாட்டியம் இவற்றில் தேர்ந்தவர். குழந்தைகளிடம் மிகவும் அன்பாய் இருப்பார். குழந்தையாய் இருந்த இந்த முதல்வருக்கு அந்த பக்கத்தாத்து மாமியை மிகவும் பிடிக்குமாம். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே.
ஆனால் ஒரு சிக்கல். பிரின்சிபால் மாமியின் தாயாருக்கு அந்த குறிப்பிட்ட பக்காத்தாத்து மாமியை சுத்தமாய் பிடிக்காதாம். குழந்தையை “ எங்கடி போயிருந்தே அபிஸ்டு..சொல்லேன்டி ஜடம்” ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை முகம் கலவரமாகி என்ன சொல்லலாம் என்று தவிக்கும் போதே “வாயில என்னடி பட்சணம் ஒட்டிண்டிருக்கிறது. ஏண்டி அவ ஆத்துக்குத் தானே போயிருந்தே..கிரகசாரம்.” குழந்தை பயத்தோடு தலையை ஆட்டும். உடனே அதன் அம்மா தொடையில் நல்லா கிள்ளி விட்டு “ இனிமே அவ ஆத்துப்போவியா? எத்தன தடவ சொல்லியிருக்கேன். போகாதடின்னு..ஏண்டி” என்று மீண்டும் நறுக்கென்று தொடையில் கிள்ளி விடுவாராம்.
நான் கேட்டேன். “ ஒங்க தாயாருக்கு ஏன் அந்த பக்கத்தாத்து மாமி மேல இவ்வளவு துவேசம்”
காலேஜ் பிரின்சிபால் சொன்னார். “ அந்த மாமி சங்கீத வித்வான் மதுரை மணி ஐயரின் Concubine. மணி ஐயர் அந்த மாமியை வச்சிண்டிருந்தார். His significant other.
அவ ரொம்ப நல்லவ. எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா என்ன செய்ய. Social Stigma. குழந்தையா இருக்கறச்ச எனக்கு என்ன தெரியும். அப்புறம் ரகசியமா தான் அம்மாவுக்கு தெரியாம தான் அந்த மாமியை போய் பார்ப்பேன். அவ விளயாட்டு ஜாமானெல்லாம் எனக்கு தருவா. பட்சணமெல்லாம் ரொம்ப ருசியாயிருக்கும். நல்லா நெறய்ய கதைகள் சொல்வா. ரொம்ப நல்ல மாமி..”
இதை சொல்லும்போதே கல்லூரி முதல்வரின் கண்கள் குளம் கட்டி விட்டன.
’’மணி ஐயருக்கு குஷ்டம் உண்டு. அப்படியிருந்தும் எங்க தெருவில் இருந்த அந்த பக்கத்தாத்து மாமிக்கு அவர் மீது பிரேமை என்பதை விட பக்தி.. ரொம்ப நன்னாயிருப்பா. எவ்வளவு பெரிய தியாகம்”
தி.ஜானகிராமன் “மணம்” என்ற ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் என்பது நினைவுக்கு வந்தது.
அந்த ’மணம்’ கதையில் வருகிற நீலா என்ற துணை நடிகை ஒரு Sex worker.
அவள் ஒரு இரவு இருட்டறையில் சந்தித்த மனிதர் குஷ்ட ரோகி என்பது மறு நாள் தெரிய வரும்போதே அதிர்ச்சியாகி அருவருப்பினால் தவிப்பாள்.
நீலாவுக்குநெஞ்சை அடைத்து , தொண்டை வலித்து, கண்ணீர் தளும்பி, உதட்டை கடித்து, அழுகை பீறிக்கொண்டு வரும்.
ஒரே ஒரு இரவுக்கே அப்படி.

Madurai Mani Iyer's significant other was a saint, precisely.

...

மீள் பதிவு

Sep 19, 2019

கத கந்தல்



கதையிலெ நெறய ஓட்டன்றதோட கதயே ஓட்டய வச்சி தான். தெனம் ஷூட்டிங் வந்தவுன்ன கதாநாயகியோட அம்மா "இன்னக்கி என்ன சார் சீனு எடுக்கப்போறீங்க?"
டைரக்டர் 'வீக்கேயார் உங்க மகள போட்ற சீன் ம்மா'

மறு நாள் 'என்ன சீனு?'
'உங்க மகள ஒய்ஜ்ஜி செய்ற சீனு'

'வெண்ணிறாட மூர்த்தி  கதாநாய்கி வீட்டுக்கே வந்து 'படுக்லாமா' ன்னு கேக்றாரு'

அடுத்த நாள் 'ஃப்ளாஷ் பேக்கு.. காலேஜ்ல படிக்கிற ஹீரோயினிய மூனு பையங்க கடத்தி கற்பழிச்சி'

கதாநாயகியோட அம்மா கூப்பாடு ' என்ன சார். உங்க படத்துல வேற சீனே கெடயாதா? தெனம் இப்படியா?'

'எம்மா சப்ஜெக்டே கால் கேர்ள வச்சி தாம்மா. கத ஒங்கட்ட சொல்லி தானேம்மா ஒங்க மகள புக் பண்ணோம்'

கூப்பாடு 'ஏன் சார். அதுக்குன்னு இப்டி எம்பொன்ன படுத்தியெடுக்றீங்க'

டைரக்டரு (aside) 'இவளே பெசண்ட் நகர்ல ப்ராத்தல்ல அடி பட்டவ. பெர்சா அலட்றா'

...

'என்ன சார்? எப்ப சார் எம் மகள கிளம்ப விடுவீங்க '

' எம்மா, ராத்ரி பத்து மணிக்கு ஒங்ள அனுப்பிடறம்மா. இப்ப ஏழுக்கு தான ஃபர்ஸ்ட் ஷாட்டே .. '

ஏ. வி. எம் ல ரோட்டுல ஷூட்டிங்.

பத்து மணிக்கு நகத்த கடிக்குது. ஆளு கதாநாயகி மாரி நல்ல ஒசரமா, டக்கரா தான் அம்மாவும். ஆனா, ஆவன்னா..கொழு, கொழுன்னு குண்டு. வாய் ஏதானும் கொறிச்சிக்கிட்டே..

பதினோரு மணி. வாய் எதயோ தின்னும் போதே கண்ணு உருளுது. செவக்குது.

அன்னக்கி ராத்திரி பன்னண்டு மணி. ஷாட் ப்ரேக்.

கதாநாயகியோட அம்மா ஒக்காந்திருக்ற எடத்லருந்து எந்திரிக்குது. கோபம் கொப்பளிக்க டைரக்டர பாக்க நடக்க ஆரம்பிக்கிது.

நீதி மத யானை வீதி வழி வந்ததம்மா

டைரக்டர் அந்தம்மா ஆக்ரோஷமா வந்துக்கிட்டு இருக்றத பாத்தவுன்ன 'நானும் சரோஜாதேவி, விஜய குமாரி, கே.ஆர் விஜயா,  லச்சுமின்னு எப்பேர்ப்பட்ட நடிகைங்கள எல்லாம் மேச்சி படம் எடுத்தவன். இந்த கண்டார ஓலிய சமாளிக்க முடியாம.... வாங்கம்மா '

பக்கத்ல வந்துடுச்சு.
' வாங்கம்மா '

வெடித்து கூப்பாடு' இப்ப மணி என்ன சார். எம் மக என்ன மிசினா..என்ன நெனச்சிக்கிட்டு இருக்கீங்க. நாங்க கெளம்ப்றோம் '

டைரக்டர் கத கந்தல்.

Sep 17, 2019

Things just happen?


இன்று செப்டம்பர் 17 அய்யா பெரியார் பிறந்த நாள்.
அவர் இறந்த நாள் டிசம்பர் 24.

அய்யா பிறந்த நாளில் தான் எம். ஆர். ராதா இறந்தார்.

அய்யா இறந்த நாளில் தான் எம். ஜி. ஆர் இறந்தார்.

எம். ஜி. ஆரின் முக்கிய பிரபல கதாநாயகிகளில் சீனியர் பானுமதி.

பானுமதியின் இறப்பு கூட எம். ஜி. ஆர் இறந்த டிசம்பர் 24ம் தேதி தான்.

"Things doesn't happen for a reason. It just happens "
 என எத்தனையோ காலங்களில் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன்.

ஜப்பானிய விஞ்ஞானி மிச்சியோ காக்கு கீழ் கண்டவாறு தீர்க்கமாக சொல்லி விட்டான்.

Everything is governed by an Intelligence and not by chance.

Everything thing we call 'Chance' today won't make sense anymore. We are in a world made by rules created by an 'Intelligence'  and not by Chance.

Sep 16, 2019

மந்தை



உயிரோட ஒர்த்தன் குழியில எறங்கப்போறான்ன உடன எவ்வளவு 'ஆன்மீக கலை தென்றல்கள்' கூடி நிக்கறானுங்க. எங்கங்க இருந்தெல்லாம் கெளம்பி வர்றாங்க. என்னா ஒரு வக்ரம். கும்பல் கும்பலா 'சாமியார் தாழன்' கால்ல விழுந்து உண்டியல்ல பணத்த போடுறானுங்க. சூடத்த கொளுத்தி, துண்ட போட்டு தாண்டுறானுங்க. குழிக்குள்ள எறங்கப்போறத பாக்கணுமேன்னு, மண்ணு ஒரு பிடி போட்டு குழிய மூடனுமுன்னு விடிய விடிய தவிச்சி தக்காளி விக்றானுங்க.

எழுபத்தஞ்சு வருஷத்துக்கு முன்ன சர்ச்சில் ஒரு கூட்டத்தில பேச வந்தப்ப அவரோட கைபாணம் ஒர்த்தன் கண்ண விரிச்சி "உங்க செல்வாக்க பாருங்க. எம்மாஞ்சனம், எம்பூட்டு கூட்டம்" னப்ப, சுருட்ட வாயில இருந்து எடுத்து சர்ச்சில் ரீயாக்சன் "அட போடா, அப்படியெல்லாம் வாய பொளந்து ஏமாறக்கூடாது. என்னய இப்ப இந்த எடத்துல உயிரோட தூக்குல போடப்போறதா சொல்லியிருந்தா இத விட பல மடங்கு அதிகமா, எள்ளு போட்டா எள்ளு எடுக்க முடியாதுன்ற அளவுக்கு கெட சனம் கூடியிருப்பாங்கெ. போப்பா போ"

  ஆட்டுக்கார அலமேலு படத்தில் நடித்த ஆட்டை ஊர் ஊரா கொண்டு போனப்ப அத பாக்க கெட சனம். எல்லா ஊர்லயும் கூட்டமான கூட்டம்.

பேராசிரியர் அப்துல் காதர்  அப்ப ஒரு ரெண்டு வார்த்த சொன்னார். செம.

"ஆடு என்னவோ கம்பீரமாகத்தான் நின்றது.
மக்கள் தான் மந்தையாகிப்போனார்கள்"


https://www.youtube.com/watch?v=dYiA2ND7vVs&t=80s

https://www.youtube.com/watch?v=dYiA2ND7vVs&t=118s