1991
திருச்சி எடமலை பட்டி புதூரில், ஸ்டேட் பாங்க் காலனியில் நான் குடியிருந்த போது, வீட்டிற்கு என்னைப் பார்க்க
'பள்ளு இலக்கியம் ' கோ.கேசவன் வந்திருந்தார். தான் எழுதியிருந்த ஒரு நூலை வெளியிட நன்கொடை வேண்டினார். எனக்கு சந்தோஷம். மனமார ஒரு நல்ல தொகை கொடுத்தேன். இருட்டி விட்ட நேரம். அவரை சாப்பிட வைத்து தான் அனுப்பினேன்.
உறையூரில் தோழர் கோ.கேசவன் வீட்டிற்கு போயிருக்கிறேன். அவருடைய மனைவி குங்குமம் விபூதி வைத்து மங்களகரமாக இருந்தார் என்பது நினைவிருக்கிறது.
(நான் குடியிருந்த இந்த எடமலை பட்டி புதூர் வீட்டில் தான் ஒன்பது வருடங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதியாக வந்திருந்த பிரேமானந்தா குடியிருந்திருக்கிறார். நான் அந்த வீட்டில் இருந்த நேரத்தில் அவர் பாத்திமா நகரில் ஆசிரமத்தில் எட்டு கண்ணும் விட்டெரிய பிரமுகராக வலம் வந்து கொண்டிருந்தார்.)
இதே வீட்டில் இருந்த காலை மறக்க முடியாத ஒரு வேடிக்கையான சம்பவம்.
ஒரு கவிஞன் மொட்ட வெய்யிலில் என்னை தேடி வந்திருந்தான். அப்போது நான் திருச்சி ஸ்டார் ஹோட்டல் ஃபெமினா வில் ரிஸப்சனிடஸ்ட்.
டூவீலரில் மார்னிங் ஷிப்ட் வேலை முடிந்து வருகிறேன். உடை மாற்றி விட்டு முகம் கழுவி விட்டு சாப்பிட உட்காரு முன், வந்து நின்றான்.
மதிய உணவு அவனையும் சாப்பிட வைத்தேன்.
நெய்வேலியில் இருந்து வருகிறானாம். அங்கே புத்தக கடையொன்றில் 'மேலும்' இதழில் நான் எழுதிய "நெஞ்சஞ்சுட உரைத்தல் நேர்மையென கொண்டாயோ" கட்டுரை பார்த்தானாம்.
என்னையறிந்தவன் தான். அங்கே என் விலாசம் கேட்டு வாங்கி வந்து விட்டான்.
'என்ன விஷயம்? '
கவிஞன் " நான் படிச்ச என் புத்தகங்களை எல்லாம் ஊருல வீட்டு முன்னால குமுச்சி போட்டு நெருப்பு வச்சி கொளுத்திட்டேன். இனி இலக்கியமே வேண்டாம்."
' ஏன்டா இப்படி செஞ்ச'ன்னு நான் பதறவேயில்லை. அவனுக்கு அதிர்ச்சி.
"இனி கவிதை எழுதவே மாட்டேன் "
அந்தோ.. வாசிப்பு, எழுத்து உள்ளிட்ட அனைத்து இலக்கிய செயல்பாடுகள் முடிவுக்கு வந்து விட்டன போலும்.
'சரி இப்ப என்ன? '
அவனுக்கு சுதி இறங்கி விட்டது.
" இல்ல.. மெட்ராஸ் ல வேல கிடைச்சிருக்கு. இனிமே பொழப்பு தான் முக்கியம். ஒரு எரனூறு ரூவா வேனும் "
நெய்வேலியில இருந்து மெட்ராஸ் போகாம திருச்சிக்கு எதுக்கு வந்திருக்கான்?!
ஏற்கனவே எங்கிட்ட பெறக்கி தின்னவன் தான. இப்ப மொட்டயடிக்க வந்திருக்கான். Fraud. அதோட Drunkard.
நான் முடியாதுன்னு உதட்ட பிதுக்குனேன்.
" ஒரு நூறு ரூபாவாவது குடுங்க"
எனக்கு ஆஃபர் தர்றான். 50% டிஸ்கவுன்ட்.
மாட்டேன் னவும்
பதறி " அம்பது ரூபா தாங்க. இல்லன்னு மட்டும் சொல்லிடாதீங்க"
"தென்னூர்ல தெரிஞ்சவன் இருக்கான். அவன் கிட்ட போறேன். "
ரெண்டு பத்து ரூவா தூக்கி போட்டேன். கவ்விக்கிட்டு ஓடுனான்.
........
பின் கதை சுருக்கம்:
கவிங்கன் இலக்கிய உலக விட்டு போகவேயில்லை. கவிதை எழுதி, புத்தகம் போட்டு, இலக்கிய கூட்டத்தில கலந்து கலகம் பண்ணிக்கொண்டு தான் இருந்தான்.
இருக்கான்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.