Share

Sep 9, 2019

பொய்த்தேவு


திருப்பூரில் இருந்த போது என் மனைவியை பல் டாக்டரை பார்க்க அழைத்து சென்றிருந்தேன். டாக்டரம்மா என் மனைவியை செக் செய்து ட்ரீட்மென்ட் கொடுத்துக்கொண்டிருந்த போது வெளியே பொழுது போகாமல் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தேன்.
ஒரு அம்மாள் அங்கே ஒவ்வொருவரிடமும் ஏதோ சொல்லி ஒரு நகல் பிரதி ஒரு பக்கம் உள்ளதை நோட்டீஸ் போல கொடுத்துகொண்டிருந்தவர் என்னை பார்த்தவுடன் நான் வேலைவெட்டி இல்லாமல் அங்கே நிற்பதை புரிந்து கொண்டு உடனே என்னிடம் வந்து விட்டார் .
" சார் , நான் இங்கே ஆசிரமத்தை சேர்ந்தவள். எங்க சாமி பெயரை தான் என் பெயருடன் வைத்திருக்கிறேன் பாருங்கள் . " அவர் கொடுத்த நோட்டீஸ் பார்த்தேன் .ஆமாம். தன் பெயருடன் அந்த ஆசிரமத்தின் சாமியார் பெயரைத்தான் வைத்திருந்தார் ." என் கணவர் இங்கே பாங்கில் வேலை பார்க்கிறார். எனக்கு இரண்டு பிள்ளைகள் கல்லூரியில் படிக்கிறார்கள். ஆனால் என் கணவர் பெயரை என் பெயருடன் சேர்க்காமல் எங்க சாமியார் பெயரை தான் சேர்த்திருக்கிறேன் பார்த்தீர்களா?"
நான் மையமான புன்னகையுடன் "ம்ம்ம் சொல்லுங்க " என்றேன்.
"சுவாமி சொல்லிட்டாங்க சார். இனி இந்த சுனாமி பிரச்சினை கிடையாது. நான் பார்த்துகொள்கிறேன்ன்னு. கவலையே படவேண்டாம் சார். எங்க ஸ்வாமி தான் சார் உலகத்தை காப்பாற்றியவர். சுனாமி அழிவிலிருந்து உலகை காப்பாற்றியவர். இதில் ஒரு பிரார்த்தனை இருக்கு பாருங்க.இதை சொன்னால் போதும் . எங்க சாமியார் உங்களுக்கு நீங்க கேட்டதெல்லாம் தருவார். எப்போ சார் நீங்க எங்க ஆசிரமத்துக்கு வர்றீங்க "
என்னை பெருமையாக பார்த்து விட்டு மேலும் தொடர்ந்தார் ."இவ்வளவு சொல்றேனே. நான் யார் என்று நீங்க யோசிக்கிறீங்க . சொல்றேன் சார். நான் வேறு யாருமில்லை சார் . ஸ்வாமி விவேகானந்தா இல்ல. சாட்சாத் விவேகானந்தாவோட மறு பிறப்பு சார் நான். இந்த பிறவியிலே பெண்ணா பிறந்துருக்கேன் சார் ."
எனக்கு வேதனையாயிருந்தது. விவேகானந்தர் பெண்ணா பிறந்துட்டாரே என்பதற்காக இல்லை. இந்த பிறவியில் அவர் இன்னொரு சாமியாருக்கு இப்படி அடியாராக இருக்கிறாரே .....இப்படி நினைக்கும்போதே என் தவறை உணர்ந்து உடனே,உடனே திருந்திவிட்டேன்.யார் கண்டது?அந்த ஆசிரம சாமியார் தான்
பரம ஹம்சரின் மறுபிறவியோ என்னவோ.
சட்டென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. திருச்சியில் அந்த காலத்தில் பிரேமானந்தாவின் சிஷ்யர்களும்" எங்க சுவாமி வேறு யாருமில்லே. சுவாமி விவேகானந்தா வின் மறு பிறவி தான்."என்று தான் பயமுறுத்திக்கொண்டிருந்தார்கள்.
நாம் எப்போதும் நல்ல படியே நினைப்போம். ஒருவேளை இப்படியும் இருக்கும். விஷ்ணு ஒரே நேரத்தில் பரசுராமன், பல ராமன், ஸ்ரீகிருஷ்ணன் -இப்படி மூன்று அவதாரங்கள் எடுக்க வில்லையா?
அது போல விவேகானந்தர் பிரேமானந்தாவாகவும் இந்த திருப்பூரம்மாவாகவும் மறுபிறப்பு எடுத்திருப்பார்.
இந்த திருப்பூரம்மா என்னை இப்படி சந்தித்த நேரத்தில் பிரேமானந்தா உயிரோடு தான் ஜெயிலில் இருந்தார்!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.