Share

Sep 29, 2019

A. V. M. ஸ்டுடியோ


2015ல் சென்னைக்கு வந்த பத்து நாட்களில் வேறு வீடு பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது நான், என் இளைய மகன் அஷ்வத் துணையுடன் என் ஸ்கூட்டரில் கோயம்பேடில் இருந்து கிளம்பி சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து வந்து திடீரென்று ஒரு சந்தில் இருந்து வெளி வந்த அந்த வினாடி மறக்கவே முடியாது. எதிரே ஏ.வி.எம் ஸ்டுடியோ.
பக்கத்து ஏவிஎம் ராஜேஷ்வரி தியேட்டரில் கூட்டம். விஜய் படம் ரிலீஸ்.
சென்னை பெரிதாக மாறி எனக்கு topography சுத்தமாக புரிந்து கொள்ள முடியவில்லை.
தினமும் நான் அலுவலகம் போல வந்து போய்க்கொண்டிருந்த ஏ.வி.எம்.ஸ்டுடியோ.
அன்றைக்கு இருந்த துக்கத்துடன், பழம் நினைவுகள் மேகமாய் என்னை மூடியது.
அதன் பின் நெற்குன்றத்தில் இருந்த போதும், ஆலப்பாக்கம் வந்து விட்ட பின்னும் எவ்வளவு தடவை அந்த ஆற்காடு ரோட்டிலும், அருணாச்சலம் ரோட்டிலும் கடந்து செல்லும் போதெல்லாம் ஏ.வி.எம்.ஸ்டுடியோவிற்குள் போய் அந்த ஞாபக அடுக்கின் நினைவுகளை மேலெலுப்பி விட வேண்டும் என்று யோசித்திருக்கிறேன்.
சென்ற ஞாயிறன்று மாலை பஸ்ஸில் இருந்து இறங்கி ஏ.வி.எம். குளோப் உருண்டை கொண்ட கேட்டில் நுழையும் போது சில பத்து வருடங்களுக்கு முன் தினம் அந்த கேட்டை நான் நெருங்கி உள் நுழையும் போதெல்லாம் கூர்க்காவால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் கொல்ட்டி பெண்கள் கூட்டம் என்னைப் பார்த்து இறைஞ்சும் குரலில் சொல்லும் வார்த்தைகள் : ’ஏமண்டி, சூட்டிங் சூடாலண்டி….. செப்பண்டி..”

Reminiscence  beats inside me like a second heart. 

இப்போது அந்த நீண்ட பாதையில் செல்கிறேன். ஏ.வி.எம். 'ஜி' தியேட்டர் இப்போது ஜி ஸ்டுடியோ? நான் நினைவில் வைத்திருந்த காட்சிகளை இன்றைய சூழல் நிர்த்தாட்சண்யமாக சிதைத்து, உருமாற்றி இருக்கிறது.முழுக்க வேறு கட்டடங்கள். அபார்ட்மெண்ட்ஸ்.
ஆனால் ஏ.வி.எம் எடிட்டிங் பகுதி மட்டும் என்னை திகைக்க வைக்கும்படி மாறாமல், காலத்தின் தவிர்க்க முடியாத தீற்றல்களுடன் அப்படியே இருக்கிறது. ஆர்.ஆர் தியேட்டர் எங்கே என்று நான் பார்க்கவில்லை.
"Really,one might almost live one's life over, if only one could make a sufficient effort of recollection."
- John Banville in his novel " The Sea"
அக்ரஹாரத்தில் கழுதை ஜான் ஆப்ரஹாமை நான் பார்த்தது இங்கே தான். பீம்சிங்கின் எடிட்டர் பால்துரை சிங்கம், லெனின், கே.ஆர் ராமலிங்கம் எடிட்டிங் ரூம்கள். அதன் முன் இப்போதும் இரண்டு பெஞ்ச்கள்.
புட்டண்ணா கனகல், (கிருஷ்ணன்) பஞ்சு இருவரும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருக்க நான் பக்கத்தில் நின்ற காட்சி.
கமல் ஹாசன், மகேந்திரன், எஸ்.பி.முத்துராமன், ஜி.என்.ரங்கராஜன் அங்கே உழன்று கொண்டிருந்த அந்த கடந்த நாட்கள்.
கண்ணதாசன் மகன் கலைவாணன் “ அழகே, அழகு. தேவதை” என்று வாய் விட்டு ஒரே பாட்டை பாடிக்கொண்டே எடிட்டிங் அறையில் என் போல அஸிஸ்டண்ட் டைரக்டராக சுழன்ற இறந்த நாட்கள்.
Nostalgia..reminiscence.. Evocation.
அந்த சுருள் படிக்கட்டில் அந்தக் காலத்தில் இயக்குனராகத் துடித்த ஒருவன் என்னை உட்கார வைத்து தன் திரைக்கதையை விவரிக்க ஆரம்பித்து, அவன் கண்ணீர் விட்டு, தேம்பிக்கூட அழுத போதும் நான் கல் நெஞ்சுடன் முகத்தை Placid ஆக வைத்திருப்பதைப் பார்த்து “ என்னங்க, கொஞ்சம் கூட என் கதையில் இன்வால்வ் ஆக மாட்டேன்றீங்களே? “ என்று முகம் சுண்டி கேட்டானே.
ரத்தவேர்வையுடன் ஜீசஸ் தவித்த போது உறங்கிக்கொண்டிருந்த சீடர்கள். Gesthamene crisis?
…………………



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.