Share

Sep 7, 2019

A storm in the tea cup


மதுரை விளையாட்டுப்பருவ நினைவு ஒன்று.

அமெரிக்கன் கல்லூரியில் இருந்து வெளியே வந்து ராஜாஜி அரசு மருத்துவமனை அருகிலுள்ள பஸ் ஸ்டாப் வந்து வீட்டுக்கு பஸ் ஏறுவோம்.
கோரிப்பாளையத்தில் எம்.சி.ஹெச் எனப்படும் மெட்ராஸ் சிட்டி ஹோட்டலில் ’அப்னா, அப்னா’ ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிட்டு விட்டு கிளம்பி வந்து நானும் என் சீனியர் ஒருவரும் பஸ் ஸ்டாப்பில் நிற்கிறோம்.
’அப்னா, அப்னா’ என்றால் that that man, that that tea.
அவரவர் டீக்கான காசை அவரவரே கொடுப்பது.
அவர் ஆரப்பாளயம் க்ராஸில் இறங்க வேண்டும். நான் அடுத்த ஆரப்பாளையம்.
7A பஸ் வருகிறது. அதில் தான் ஏறவேண்டும்.
”அண்ணே, இன்னும் கொஞ்ச நேரத்தில் மீனாட்சி காலேஜ் (லேடிஸ் காலேஜ்) விட்டுடுவாங்கெ… ’மசை’ங்க எல்லாம் வந்துடுங்க.. ஜாரிங்க இருந்தா தானே பஸ் நல்லா கலர்ஃபுல்லா இருக்கும்! வெயிட் பண்ணுவோமே. இந்த பஸ்ல ஏறவேண்டாம். சொன்னா கேளுங்க. வேண்டாண்ணே…”
ச்சீ..பறவைகளில்லாத வானம் தானே மசைகள் இல்லாத பஸ்!
சீனியர் மனிதாபிமானமிக்கவர். ஜூனியர் கண் கலங்க சம்மதிக்கவே மாட்டார். அவர் அமெரிக்கன் கல்லூரியில் எனக்கு சீனியர் என்பதோடு என் கஸின். “சரிப்பா…” என்றார்.
ஜாரி, மசை என்பது பெண்பிள்ளைகளைக் குறிக்கும் மதுரை slang.
அரை மணிக்கும் மேலாக ஆகிவிட்டது.
மீனாட்சி காலேஜிலிருந்து ஒரு ஈ, காக்காய் கூட இன்னும் வரவேவில்லை.
புராண கால ஒழவையார் அல்லது… சங்க கால ஒழவையாரா.. யாரோ ஒருவர் தான் சொன்னார் இந்த ஆத்தி சூடி வரிகள் – ’பொறுத்தார் சைட் அடிப்பார்’
நான் மட்டும் என்றால் இது துயரமில்லை. ஆனால் சீனியர் பொறுமையிழந்து விடக்கூடாது. மீனாட்சி காலேஜ் மசைகள் சீக்கிரம் வரவேண்டும். அப்போது தான் பஸ் என்பது joyful, colorful ஆக இருக்கும்.
பழனி,செந்தூர்,திருத்தணி முருகா! இந்த அற்ப ஆசை கூட ஈடேறக்கூடாதா?
முருகா! சண்முகா! வேலாயுதா! கே.ஆர் விஜயா புருஷா!
(கே.ஆர்.விஜயாவின் புருஷன் பெயர் வேலாயுதம்)
அடுத்த 7A பஸ் வருவது தெரிந்தது.
சீனியர் என்னிடம் சொன்னார் “ தொர! ரொம்ப பசிக்குது…” பரிவுடனும்,வாத்சல்யத்துடனும், வாஞ்சையுடனும் கூட தொடர்ந்தார் “ சொன்னா கேளு.. வர்ற பஸ்ல எப்படியும் சில மெடிக்கல் காலேஜ் ஜாரிகள் இருக்கும். இருக்குற மசைகள வச்சி இன்னக்கி ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்குவமே..”
அடுத்த பஸ்ஸில் வேகமாக தொற்றிய சீனியருடன் நானும் அரை மனதுடன் ஏறினேன்.
………
மீள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.