Share

Jan 31, 2015

விஜயகுமார் – ஜெய்கணேஷ்

சினிமாவில் இருமை எதிர்வுகள் என்று காலாகாலமாக நடிகர்கள் இருவர் உண்டு.
தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா
எம்.ஜி.ஆர் – சிவாஜி
ஜெய்சங்கர் – ரவிச்சந்திரன்
கமல் ஹாசன் – ரஜினி காந்த்
விஜயகுமார் – ஜெய்கணேஷ்
பாக்யராஜ்- டி.ராஜேந்தர்
விஜயகாந்த் – சத்யராஜ்
கார்த்திக் - பிரபு
விஜய் – அஜீத்
சிம்பு – தனுஷ்
இதில் ஒரு நடிகரின் ரசிகர்களும் அந்த மற்றொரு நடிகரின் ரசிகர்களும் பரம வைரிகள்.
 பல நடிகர்கள் இருந்தாலும் தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள். எம்.ஜி.ஆர் சிவாஜி சகாப்தமாக கொடி கட்டிய  நேரத்தில்  இரண்டு கதாநாயகர்கள் ஜெய்சங்கர் – ரவிச்சந்திரன் இருவரும் அப்படி பேசப்பட்டார்கள்.
(முத்துராமனும் ஏவிஎம் ராஜனும் பற்றி அப்படி சொல்லப்பட்டதில்லை.)
1970களில் வந்தவர்களில் எம்.ஜி.ஆர் சிவாஜி ரேஞ்ச் அந்தஸ்து 
கமல் ஹாசன் – ரஜினி காந்த் இருவரும் எட்டினார்கள்.
கமல் ஹாசன் மாணவன், குறத்தி மகன் இரண்டிலும் தலையை காட்டி விட்டு அரங்கேற்றத்தில் பாலச்சந்தரிடம் வந்து சேர்ந்த பின் அடுத்து சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் வில்லனாகி அடுத்த அவள் ஒரு தொடர்கதை படத்தில் ஒரு நல்ல ரோல், அடுத்த அபூர்வராகங்களில் கதா நாயக அந்தஸ்து கிடைத்த போது அதில் சுருதி பேதமாக அறிமுகமாகிய ரஜினிக்கும் பாலச்சந்தர் தான் வாழ்க்கை கொடுத்தார். மன்மதலீலையில் கமலை கலர்ஃபுல் ஆக அறிமுகப்படுத்தி ‘மூன்று முடிச்சி’ல்’ ரஜினியை வில்லனாக்கி தொடர்ந்து ‘அவர்களி’லும் கமல் நடிக்க ரஜினிக்கு வில்லன் ரோல் தான். இந்த அளவில் ரஜினி பிரபலமாகிவிட்டார்.

விஜயகுமார் – ஜெய் கணேஷ்  இருவருமே அதே காலத்தில் தான் வருகிறார்கள்.

விஜயகுமார்  நடிக்க முயற்சி 1960 களின் பின்பகுதியில் ஆரம்பித்தவர். ஒரு காட்சியில் மட்டும் தலை காட்டினார். பஸ்ஸில் ஒரு புதுப்பெண் மாப்பிள்ளையை காட்டுவார்கள்.அதில் புது மாப்பிள்ளை  விஜயகுமார்!
ஏ.பி. நாகராஜனின் ‘கந்தன் கருணை’ முருகனாக 1967ல்அறிமுகமாகி யிருக்க வேண்டியவர். வாய்ப்பு தட்டிப்போய்விட்டது. 
சிவகுமார் குறைவில்லாமல் கந்தனாக நடித்திருப்பார்.சிவாஜி தான் வீரபாகுவாக வந்தவுடன் குண்டியை நெளித்து நடந்து, குசு போட்டு, புருவத்தை நிமிர்த்தி, மூக்கை விடைத்து ஓவர் ஆக்சன் செய்து.....

1973ல் சொல்லத்தான் நினைக்கிறேனில் கமல் கலக்கினார். அதே வருடம் விஜயகுமார் பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் அறிமுகம். பட்டுக்கோட்டைக்கார விஜயகுமாருக்கு அந்தப்படத்தில் டப்பிங் குரல்!
தெலுங்கு நடிகர் போல இருக்கு என்று தான் ரசிகர்களே அபிப்ராயப்பட்டார்கள். 
அவள் ஒரு தொடர்கதை படத்தில் ரங்கமன்னார் என்று ஒரு நடிகரை கேன்சல் செய்து விட்டு அந்த ரோலை விஜயகுமாருக்கு பாலச்சந்தர் கொடுத்தார்.

அதே அவள் ஒரு தொடர்கதையில் தான் ஜெய்கணேஷ் (தெய்வம் தந்த வீடு பாடல்) அறிமுகம்.

விஜயகுமார் கதாநாயகனாக  நடிக்கும்போது இரண்டாவது கதா நாயகனாக ரஜினி நடித்திருக்கிறார். (மாங்குடி மைனர், ஆயிரம் ஜென்மங்கள்)
படங்களில் தன் பெயருக்கு முன்னால் “புரட்சிகலைஞர்” பட்டம் போடப்படவேண்டும் என்று விஜயகுமார் வற்புறுத்திய காலம் உண்டு.
 அதிமுகவில் இணைந்து " அண்ணா நீங்க நினைச்சபடி நடந்திடுச்சி, புரட்சித்தலைவர் கையில் நாடிருக்கு" என்ற பாட்டுக்கு நடித்தார்.
சி.என்.முத்து டைரக்ட் செய்த ‘சொன்னது நீ தானா’ என்ற படத்தில் புரட்சிகலைஞர் பட்டம் போடப்படவில்லை என்று விஜயகுமாருக்கு வருத்தம். 1980களில் இந்தப்பட்டம் விஜயகாந்துக்கு போய்விட்டது.

ஜெய்கணேஷ் முத்தான முத்தல்லவோ கதாநாயகன். 

கமல் ரஜினி மாதிரி விஜயகுமாரும் ஜெய்கணேஷும் கூட “தென்னங்கீற்று” போல சில படங்களில் இணைந்து  நடித்திருக்கிறார்கள். 

விஜயகுமார் சிவாஜியுடன் தீபம் படத்தில் நடித்த போது ஜெய்கணேஷ் அண்ணன் ஒரு கோவிலில் நடித்தார். விஜயகுமார் எம்.ஜி.ஆருடன் ‘ இன்று போல் என்றும் வாழ்க” படத்தில் வருவார்.

விஜயகுமார் மஞ்சுளாவை இரண்டாவது பெண்டாட்டியாக்கிக்கொண்டபோது ஜெய்கணேஷ் சுமித்ராவுடன் கிசுகிசுக்கப்பட்டு இவரும் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்வார் என்று தான் எதிர்பார்க்கப்பட்ட து. ஆனால் மலையாள நடிகர் ரவிகுமாரை சுமித்ரா கல்யாணம் செய்தார். பின்னால் இந்த கல்யாணம் நிலைக்கவில்லை.இன்றைக்கு நடிகர் விஜயின் அப்பாவுக்கு (அப்போது எஸ்.சி.சேகர்!) முதல் படம் 
“அவள் ஒரு பச்சைக்குழந்தை’ கதாநாயகன் விஜயகுமார்.

ஆட்டுக்கார அலமேலுவில் ஜெய்கணேஷ் வில்லன்.கமல்,ரஜினியை டைரக்டர் ஸ்ரீதர் “ இளமை ஊஞ்சலாடுகிறது” படத்தில் இயக்கிய பின் அடுத்தவருடம் ரிலீஸ் செய்தது விஜயகுமார் ஜெய்கணேஷ் நடித்த “அழகே உன்னை ஆராதிக்கிறேன்.”
 
வணக்கத்துக்குரிய காதலியே - திருலோகசந்தர் படத்தில் ரஜினி, ஸ்ரீதேவியுடன் விஜயகுமாரும் ஜெய்கணேஷும் நடித்திருந்தார்கள்.

'பகலில் ஒரு இரவு' படத்தில் விஜயகுமார் ஸ்ரீதேவியுடன். 
ஐ.வி.சசியின் ‘காளி’ படத்தில் ரஜினி கதாநாயகன்.அதில் விஜயகுமார் உண்டு.
ஜெய்கணேஷ் ‘இமயம்’ பட்டாக்கத்தி பைரவன் என சிவாஜி படங்களில்   நடித்தார்.
பாண்டியராஜனின் மாமனார் இயக்கிய ‘வேடனைத் தேடிய மான்’ ஜெய்கணேஷ் கதாநாயகன்.

ஜெய் சங்கர் ரவிச்சந்திரன் இருவரில் வாய்ப்பைப் பொருத்தவரை அதிர்ஷ்டக்காரர் என்றால் ஜெய்சங்கர் தான். அது போல விஜயகுமார் அதிர்ஷ்டம் ஜெய்கணேஷுக்கு கிடையாது.

விஜயகுமார் கதாநாயகனாக சாதிக்காததை பின்னால் குணச்சித்திர நடிகராக சாதிக்க முடிந்தது. அக்னி நட்சத்திரம், கிழக்கு வாசல், கிழக்கு சீமையிலே’

ஜெய் கணேஷுக்கு பாக்யராஜின் சின்ன வீடு, ஆராரோ ஆரிரரோ
ஒரு  டி.வி.சீரியலில் பானுப்ரியாவுக்கு மாமனாராக ஜெய்கணேஷ்.
.............

http://rprajanayahem.blogspot.in/2014/07/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2014/10/blog-post_10.html

..............................................................Jan 29, 2015

R.K.Narayan's Misguided Novel " The Guide"

“அம்மாவந்தாள்” நாவல் க.நா.சு வுக்கு பிடிக்காமல் போனது பற்றி சொல்ல ஒன்றுமில்லை.Taste differs. ஆனால் Thought “ மாகசீனில் அவர் அதற்கு விமர்சனம் செய்த போது கொடுத்த தலைப்பு டெல்லி வாழ் இலக்கிய உலகத்திற்கு அதிர்ச்சியை தந்தது.
Janakiraman’s Mother”

தி.ஜானகிராமன் மனம் என்ன வேதனைப்பட்டிருக்கும்.கலாப்ரியா கவிதைகள் தி.ஜானகிராமனுக்கு மிகவும் பிடிக்கும்“கலாப்ரியாவின் கவிதைகள் ஆண்பிள்ளை கவிதைகள். அல்லது பெண்பிள்ளை கவிதைகள். நிச்சயமாக ‘அலி’ கவிதைகள் அல்ல” பரவசமாய் அன்று சொன்னார். இன்று இப்படி மேற்கோள் காட்டுவதில் தர்மசங்கடம் உண்டு. அரவாணிகள் மனம் புண்பட்டு விடக்கூடாதே.

ஆர்,கே. நாராயண் தன் Guide     நாவல் படமாக்கப்பட்டது குறித்து ஒரு கட்டுரை எழுதினார். அதன் தலைப்பு என்ன தெரியுமா?“The misguided Guide”  இந்த தலைப்பே அவர் மன வியாகுலத்தை தெளிவாக சொல்லி விடுகிறது.
The misguided Guide!
தேவ் ஆனந்த் “ நான் ஒரு நடிகன். தயாரிப்பாளர். உங்கள் நாவலை படமாக்க விரும்புகிறேன். உங்கள் நாவலுக்கு அதன் ஜீவனுக்கு எந்த பங்கமும் வராமல் பார்த்துக்கொள்கிறேன்” என்று தான் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்.
என்னுடைய மால்குடி  தென்னிந்தியாவில் ஒரு  சின்ன  நகரம். இதை எப்படி நீங்கள் இந்தியில் இங்கிலீஷில் கொண்டு வரமுடியும் என்று  தன் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஏனென்றால் சத்யஜித் ரே இவரிடம் ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கிறார்.“ இந்த நாவலின்  மால்குடி என்ற கற்பனை ஊர் தென்னிந்திய கலாச்சாரத்தில் ஊறியது. அதன் வேர்களுக்கு பங்கமில்லாமல் இதை படமாக்கமுடியுமா என்று எனக்கு தயக்கமாயிருக்கிறது”  ரே நழுவியிருக்கிறார்!
சினிமா ஸ்கிரிப்ட் காட்டப்பட்ட போது  நாராயணுக்கு தன்  நாவலின் எந்த பகுதியில் இது இருக்கிறது என்ற சந்தேகம். இது ஃபைனல் ஸ்க்ரிப்டில் சரி செய்து கொள்ளலாம் என்று டைரக்டர் சமாதானப்படுத்தியிருக்கிறார்.விந்தை என்னவென்றால் படைப்பாளி பார்வைக்கு ஃபைனல் ஸ்கிரிப்ட் வரும்போது பல காட்சிகள் ஷூட் செய்து விட்டார்கள்!
சினிமாக்காரர்கள் நாராயணிடம் அப்புறம் சொன்னது. Sky is the limit. சினிமாவுக்காக எதையும் செய்வோம். 
மால்குடியை ஜெய்ப்பூரிலும் உதய்பூரிலும் தான் காட்சிப்படுத்த முடிவு செய்து விட்டார்கள். மால்குடி என்பது சினிமாவுக்கு காஷ்மீர், ராஜஸ்தான், பாம்பே என்று எப்படி வேண்டுமானாலும் மாறிவிடும் என்று சொல்லிவிட்டார்கள்.
படத்தை பார்த்த இந்திராகாந்தியே கேட்டிருக்கிறார்.“ ஏன் மால்குடியை காட்டாமல் படத்தை Travelogue ஆக்கி விட்டார்கள்? “
படம் இந்தியில் தயாரிக்கப்பட்டதோடு இதன் American verson  நோபல் பரிசு பெற்ற பேர்ல் எஸ்.பக் திரைக்கதை வசனத்தில்  வேறு வந்தது என்பது ஒரு முரண் நகை! தேவ் ஆனந்த் ராஜுவாக,வஹிதா ரஹ்மான் நாட்டிய கலைஞர் ரோஸியாக எஸ்.டி.பர்மன் இசையில் வெளி வந்து சக்கைப் போடு போட்டது. தேவ் ஆனந்த் தம்பி விஜய் ஆனந்த்  தான் டைரக்டர்.
ஆனால் ஆர்.கே. நாராயண் தவிப்பு “ என் நாவல் எங்கே? என் மால்குடி எங்கே?என்னுடைய ராஜு எங்கே? ரோஸி எங்கே?” 
.............................................................

https://www.facebook.com/rprajanayahem/posts/1589103541303106?pnref=storyJan 28, 2015

அதிமுகவின் மூலதனம் கருணாநிதி மீதான கடும்பகை மட்டுமே


இதை 2008 செப்டம்பர் மாதத்தில் நான் என் ப்ளாக்கில் எழுதியுள்ளேன்.
அதை அப்படியே கீழே தந்துள்ளேன்
நேற்று வெளி வந்துள்ள 2.2.2015 தேதியிட்ட குமுதத்தில் மணா நான் சி,டி.ராஜகாந்தத்தை பற்றி குறிப்பிட்டுள்ள விஷயத்தை குறிப்பிட்டுள்ளார்.
"ஜெயலலிதா தான் கருணாநிதிக்கு மரியாதை கொடுப்பதில்லை.ஆனால் எம்.ஜி.ஆர் ரொம்ப மரியாதை கொடுத்தார் என்ற அர்த்தத்தில் இப்போது அடிக்கடி சொல்லப்படுகிறது.

ஆனால் மேடையில் எம்.ஜி.ஆர் எப்போதும் ”கருணாநிதி” என்று பெயர் சொல்லி தாக்கித்தான் பேசிக்கொண்டிருந்தார். சட்டசபையில் கருணாநிதியை பி.ஹெச்.பாண்டியன் “ நீ ஒரு கொலைகாரன்” என்று ஏக வசனத்தில் பேசிய போதும்,கருணாநிதியை சட்டசபையில் பொன்னையன் அடிக்கவே பாய்ந்தபோதும் எம்.ஜி.ஆர் அவர்களைக் கண்டிக்கவே இல்லை.
ஆண்டவனே என்று எம்.ஜி.ஆர் கருணாநிதியை மட்டுமல்ல, திருச்சி லோகநாகனின் மாமியார் சி.டி.ராஜகாந்தத்தைக்கூடத்தான் விளித்துப் பேசுவார்!

அவரோடு 1940களில் அறிமுகமான பலரையும் எம்.ஜி.ஆர் உரையாடும்போது ’ஆண்டவனே’ என்று தான் விளிப்பார்.
இன்று ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல,எம்.ஜி.ஆருக்கும் அன்று மிக நன்றாகத் தெரியும். ’கருணாநிதி மீதான கடும்எதிர்ப்பு அரசியல்’ மட்டுமே தான் அதிமுகவின் மூலதனம் என்பது.
இதையெல்லாம் சொல்லவேண்டியிருக்கிறது! என்ன செய்ய? What you don't know can't hurt you! Ignorance is Bliss!"
.....................................

எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டு ,கட்சியில் இருந்து விலக்கப்பட்ட பின் ஜெயலலிதா தான் தி.மு.கவிற்கு soft target ஆனார். அப்போது ஜெயலலிதா அரசியலில் இல்லை. "ஜெயலலிதாவிடம் போய் கணக்கு கேளு" என்றும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ஆயிரத்தில் ஒருவன் ஷூட்டிங் கோவாவில் நடந்த விஷயத்தையும் " இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கோவாவில் ஜெயலலிதாவுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தாய் நீ" என்றும் தி.மு,க தலைவர்கள் மதுரை முத்து துவங்கி கீழ் மட்ட தொண்டன் வரை அரசியல் பேசினார்கள்.
எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு விலக்கவேண்டும் என்று கருணா நிதியிடம் வாதாடி அவசரமாக தானே எம்.ஜி.ஆர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்றுசெய்தி கொடுத்தவர் நெடுஞ்செழியன். மதுரையில் அன்பழகன் திலகர் திடலில் பேசிய போது அது பெரிய பாதிப்பை மதில் மேல் பூனையாயிருந்தவர்களிடம் ஏற்படுத்தவில்லை. ஆனால் அடுத்தவாரம் நாவலர் பேச்சைக் கேட்ட பின் தான் தி,மு.க கொடியை எரித்த தொண்டர்கள் பலர் தி.மு.கவிற்கே திரும்பினார்கள். அந்த அளவுக்கு கட்டம் கட்டப்பட்ட எம்,ஜி.ஆர் பற்றி பேசியவர் நெடுஞ்செழியன்.

எம்.ஜி.ஆர் கணக்கு கேட்ட போது யாரெல்லாம் தி.மு.கவில் கோபப்பட்டு கருணாநிதியுடன் கை கோர்த்து நின்றார்களோ, எம்.ஜி.ஆரை கடும் நிந்தனை செய்தார்களோ, அவர்கள் எல்லோரையுமே, மதுரை முத்து,நெடுஞ்செழியன், மாதவன், பண்ருட்டி ராமச்சந்திரன், க.ராஜாராம், ப.உ.சண்முகம்,எஸ்.எஸ்.ராஜேந்திரன் என்று இன்னும் பலரையும் ஞானஸ்நானம் கொடுத்து எம்.ஜி.ஆர் தன் கட்சியில் சேர்த்துக்கொண்டு, தான் கணக்கு கேட்டதற்கே அர்த்தமில்லாமல் ஆக்கினார். அதாவது கருணாநிதியை தனிமைப்படுத்துவது தான் அதிமுகவின் அரசியல் என்றானது ஒரு கேலிக்கூத்து!
இந்திய அரசியலில் கருணாநிதிக்கு முதுகில் விழுந்த குத்து, நம்பிக்கை துரோகம் போல வேறெந்த அரசியல்வாதிக்கும் நடந்தது கிடையாது. ஆனால் இது Blessing in disguise ஆகியதால் 'தி.மு.க' அந்த கட்சித்தலைவரின் 'sole property' !

தொடர்ந்த எதிர்மறை விளைவு அழகிரி நான் தான் பட்டத்து இளவரசன் என்று ஸ்டாலினுடன் மோதியதும், என் மகள் கனிமொழி பங்கு என்ன என்பதான ராஜாத்தியம்மாள் தனியாவர்த்தனமும்.
............................................

http://rprajanayahem.blogspot.in/2012/10/blog-post_24.html

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_6.html

http://rprajanayahem.blogspot.in/2012/10/1971.html

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_23.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_18.html

https://www.facebook.com/rprajanayahem/posts/1581612448718882Jan 26, 2015

Fickle and Elusive Popularity

 1965  இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் பிரபலமான மாணவர்கள் என்று  அரசியல் உலகில் கொடி கட்டியவர்கள் பலர்.

பெ.சீனிவாசன்,எல்.கணேசன்,(சசிகலா)எம்.நடராஜன், துரைமுருகன்,வை.கோ,கே.காளிமுத்து, நா.காமராசன், ராஜாமுகமது என்று உடனே சிலர் ஞாபகத்திற்கு வருவார்கள். 

ஆனால் அன்று இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் மாணவர் தலைவர் ரவிச்சந்திரன் என்பவர்.  அந்த நேரத்தில்  போராட்ட கதாநாயகன். அன்றைக்கு தினத்தந்தியில் தலைப்பு செய்தியில் இவர் புகைப்படம் தான் இடம் பெறும்.   
எல்.கணேசன், பெ.சீனிவாசன், துரைமுருகன் எல்லாரும் இந்த ரவிச்சந்திரன் பின்னால் நின்றவர்கள் தான். அன்று இவர்கள் யாரும் பிரபலமில்லை. ரவிச்சந்திரன் தான் மிகவும் பாப்புலர்.

"சாஸ்திரி உன் வாயில் என்ன? ப்ளாஸ்திரி?"
லால் பகதூர் சாஸ்திரி அப்போது பிரதமர். 

"பக்தவத்சலக்குரங்கே! பதவியை விட்டு இறங்கு!"
பக்தவத்சலம் தமிழக முதலமைச்சர்.

" கக்கா நீ சுட்டுத் தள்ள நாங்கள் என்ன கொக்கா?"
கக்கன் போலீஸ் மந்திரி.

 
ஒரு அரசியல் அதிசயம். இப்படி பிரபலமான ரவிச்சந்திரன் எப்படி தி.மு.க. வில் இணையவில்லை. அல்லது இவரை எப்படி தி.மு.க கண்டு கொள்ளாமல் விட்டது.  

 நிச்சயம் ரவிச்சந்திரன் 1967 தேர்தலில் சட்டமன்ற தி.மு.க.வேட்பாளராக சுலபமாக போட்டியிட்டிருக்க முடியும்.

 இவர் வக்கீல் பட்டப்படிப்பு தான் படித்திருக்கிறார். வக்கீல் தான் அரசியலுக்கு மிகவும் உகந்த தொழில். அப்படி இருந்தும் இவர் அரசியலுக்கு வரவில்லையா? சரி வக்கீலாகவாவது பிரபலமானாரா என்றால் அப்படியும் தெரியவில்லை.
இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் அகில இந்திய அளவில் பிரபலமான ஒரு போராளி அதன் பிறகு  தமிழக வரலாற்றில் இருந்தே காணாமல் போன விஷயம் மிகவும் விசித்திரமாயிருக்கிறது.

முடிந்து போன விஷயம். It’s over, but it happened this way.  We know his name, not his story.

...........................................................

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_9319.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_11.html