Share

Showing posts with label ஸ்ரீதேவி. Show all posts
Showing posts with label ஸ்ரீதேவி. Show all posts

Mar 1, 2018

நுட்ப தொடர்பு


சரோஜா தேவி பல படங்களில் ஜெமினி கணேசனுடன் ஜோடியாக நடித்தவர். கல்யாண பரிசு, வாழ வைத்த தெய்வம், ஆடிப்பெருக்கு, பனித்திரை, வாழ்க்கை வாழ்வதற்கே, பணமா பாசமா, ஐந்து லட்சம், தங்கமலர், தாமரை நெஞ்சம், குலவிளக்கு, மாலதி என எத்தனையோ படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.

சரோஜா தேவி எப்போதும் ஜெமினி கணேசனை அண்ணா என்று தான் அழைத்திருந்திருக்கிறார்.
கமல்ஹாசன் முதல் முதலாக ஸ்ரீதேவியை 15, 16 வயது பெண்ணாக சந்தித்ததாக சொல்கிறார். தினத்தந்தி செய்தி. மூன்று முடிச்சு படத்தில் நடிக்கும் போது ஸ்ரீதேவிக்கு 15,16 வயது.

27 படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. நிச்சயம் அவரே சொல்வது போல ஆயுளில் குறிப்பிட்ட ஒரு பகுதி.
ஆனந்த விகடனில் கமல் “ஸ்ரீதேவி என் தங்கச்சி” என்று சொல்கிறார்.’ அண்ணன் தங்கை போல தான் நானும் ஸ்ரீதேவியும்.’
“உங்களை அப்படி ஜோடியா கொண்டாடிட்டிருக்கிறப்ப இதெல்லாம் வெளியில போய்ச் சொல்லாதீங்க” என்பார்களாம்.
இது உண்மையென்றால் அபூர்வமான விஷயம்.
விரித்துப் பேச வேண்டியதில்லை.
............................................

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர்
ஒரு மடாதிபதியும் இளைய மடாதிபதியும் காவிரிக்கரையை ஒட்டிய ஒரு ஊரில் எழுந்தருளியிருக்கிறார்கள்.
பூஜை, வியாக்யானம் என்று திவ்விய நிகழ்வில் உள்ளூர் ஆண்கள், பெண்கள் கலந்து பக்தியில் ஊறி கரைந்திருக்கிறார்கள்.
ஒரு பெண் இளைய மடாதிபதியிடம் வந்து “ நான் உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன்” என்று சொல்லியிருக்கிறாள்.
மூத்த சுவாமி இளைய மடாதிபதியை பார்த்து 
” காவிரி நீரில் இறங்கி நில்” என்று தண்டனையாக சொன்னாராம்.
மணிக்கணக்கில் இளைய மடாதிபதி இடுப்பு நனைய நீரில் நின்றாராம்.
ஊரை விட்டு கிளம்பும் போது தான் நீரை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டார் இளைஞனாய் இருந்த அந்த இளைய மடாதிபதி.
மூத்த சுவாமிகள் சொன்னாராம் “ உன்னிடமிருந்து காதல் கசிய, விரக பார்வை, சமிக்ஞை வராமல் நிச்சயம் அந்தப் பெண் உன்னிடம் அப்படி கேட்டிருக்கவே மாட்டாள்.”
.....................................

Feb 25, 2018

ஸ்ரீதேவி


ஒரு ஜோதிடர். சுப்ரமண்ய தேசிகர் என்று பெயர். இவர் பற்றி என் “ராஜாஜியின் ஸ்வர்ண ஆகர்ஷண மந்திரம்” பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.
இவர் தன்னை சங்கீத ஞானி எம்.எம்.தண்டபாணி தேசிகரின் கஸின் என்று சொல்லிக்கொண்டார். சுப்ரமண்ய தேசிகருக்கு அப்போது 80 வயது. நான்கு மனைவிகள் இவருக்கு என்று என்னிடம் சொன்னார்.
ஸ்ரீதேவி அப்போது அகில இந்திய நடிகை.
ஸ்ரீதேவி பிறந்த போது சுப்ரமண்ய தேசிகரிடம் வக்கீல் ஐயப்பன் வந்து ஜோதிடம் கேட்டாராம்.
( விருதுநகரில் 1967ல் காமராஜரை மட்டுமல்ல சிவகாசியில் 1989 ல் நடிகை ஸ்ரீதேவியின் அப்பா ஐயப்பனையும் சட்ட சபை தேர்தலில் தோற்கடித்தார் பெ.சீனிவாசன்!)
சுப்ரமண்ய தேசிகர் ஜாதகம் கணித்து சொன்னாராம்.
“இந்த குழந்தை இருபத்தைந்து வயதிற்குள் இருபத்தைந்து கோடி சம்பாதிக்கும்”
ஸ்ரீதேவி அப்பா சொன்னாராம் “நீங்கள் சொல்வதை நம்பமுடியவில்லை. ஒரு பெண்பிள்ளை எப்படி இருபத்து ஐந்து வயதிற்குள் இருபத்தைந்து கோடி சம்பாதிக்க முடியும்?”
இதை என்னிடம் சொன்ன போது இது உண்மையாகியிருந்த நிலை.
ஜோதிடர்கள் எப்போதும் இப்படி பல விஷயங்களை தங்கள் prediction படி நடந்ததாக மிகையும் பொய்யுமாக குறிப்பிடுவது அவர்கள் தொழில் வளர்ச்சிக்காக.

………………………..

மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், மீண்டும் கோகிலா வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை அன்று ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது.

’இன்றைய இளம் கன்றுகள் எங்கள் ஸ்ரீதேவி இழப்பு பற்றி புரிந்து கொள்ள சிரமப்படலாம். ஆனால் இன்னும் ஒரு நாற்பது வருடங்களில் நயன்தாரா இறக்கும்போது நிச்சயம் உணர்ந்து கொள்வார்கள்’ என்று ஒரு பெரியவர் நா தளுதளுக்க ( தழு தழுக்க?) சொன்னார்.
ஸ்ரீதேவிக்கு இப்ப இறக்கும்போது வயது 54!! தந்தி டிவி, நியூஸ் 7 சேனல் சொன்ன விஷயம்.
1976ல மூன்று முடிச்சு படம் வந்தப்ப 12 வயசா? சரி 13 வயசுன்னு வச்சிக்கிட்டாலும் பாலச்சந்தர் ஒரு சிறுமியைத் தான் கதாநாயகியாக நடிக்க வச்சாரா? 1977ல பாரதிராஜா 14 வயசு சிறுமியை மயிலாக காட்டினாரா? என்ன விவரமில்லாத உலகம் இது. When she was cold in blood and green in judgement.
நாளைக்கு நியூஸ்பேப்பர்களிலாவது வயது 54 என்பதை 55 (!) என்றாவது குறிப்பிட்டு நெஞ்சில் பால் வார்த்தால் நல்லது.

தமிழ் திரை குழந்தை நட்சத்திரங்களில் கமல் ஹாசனும், ஸ்ரீதேவியும் பின்னால் அகில இந்திய அளவில் சாதித்த நட்சத்திரங்களானார்கள்.
ஸ்ரீதேவியை ’நான் தான் ’துணைவன்’ படத்தில் குழந்தையாக அறிமுகப்படுத்தினேன்’ என்று சாண்டோ சின்னப்பா தேவர் சொல்வதுண்டு.
தமிழ் படங்கள் என்று மட்டும் இல்லை. மொத்தமாகவே சொன்னாலும் இருவரைப்பற்றியுமே சொல்ல வேண்டுமானால்
ஸ்ரீதேவி - கமல்ஹாசன் ஜோடி தான் பொருத்தமானது.
வி.ஜி.பி கோல்டன் பீச்சில் என்.டி.ராமாராவ் மெரூன் கலர் கோட், ஒயிட் வெஸ்ட் கோட், பச்சை கூலிங்க்ளாஸ், ஒயிட் ஷூ போட்டுக்கொண்டு ஸ்ரீதேவியுடன் டூயட் பாடும் ஷூட்டிங் ஒன்று நான் பார்த்திருக்கிறேன்.
எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராகாதிருந்தால் ஸ்ரீதேவி நிச்சயமாக எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்திருந்திருப்பார்.
தமிழில், தெலுங்கில் கொடி கட்டிய ஸ்ரீதேவிக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாத விஷயமல்ல. சுலபமாக பாலிவுட் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்தது.
பாலிவுட் உலகம் எப்போதும் பெண் நடிகைகளை போஷிக்கும். இங்கிருந்து போன வஹிதா ரஹ்மான், வைஜயந்திமாலா, ஹேமா மாலினி, ரேகாவை தொடர்ந்து ஸ்ரீதேவிக்கும் நல்ல அந்தஸ்து வழங்க தயங்கவில்லை.
எங்கள் காலத்தில் அமலாவையும் பாலிவுட் கொண்டு சென்று விடுமோ என்ற கவலையில் “அமலாவை இந்தி திரையுலகிற்கு செல்லாமல் தடுப்பது எப்படி?” என்று தமிழ் வாணன் ஏதாவது புத்தகம் எழுதி வைத்து விட்டு செத்திருக்கிறாரா இல்லையா என்று கூட விசாரணை செய்ததுண்டு.
தமிழில் இருந்த அழகான குடமிளகா மூக்கு ஸ்ரீதேவி இந்தியில் காணாமல் போனார். பிளாஸ்டிக் சர்ஜரி உபயம்.
வெண்ணிற ஆடை நிர்மலாவை இன்று டி.வியில் பார்த்த போது அவருக்கு மிகவும் ஜூனியரான ஸ்ரீதேவி பற்றி தோன்றியது - இவ்வளவு சீக்கிரம் கிழவியான நடிகை ஸ்ரீதேவியாகத் தான் இருக்கும்.
இப்படி அகாலமரணமும் தேவையில்லை.

.............................................

Apr 5, 2013

அந்த நாள் குழந்தை நட்சத்திரங்கள்



குழந்தை நட்சத்திரங்களில் துறுதுறுப்பு, நல்ல எக்ஸ்ப்ரஸன், ரசிகர்களை ஈர்த்த நடிப்பு என்று கலக்கியவர் டெய்சி ராணி. ’யார் பையன்’(1957)படத்தில் டெய்சி ராி சிறு பையனாக டைட்டில் ரோல்! இந்தி குழந்தை நட்சத்திரம்.

களத்தூர் கண்ணம்மா(1960) படத்தில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் கமல் ஹாசன் பார்த்தால் பசி தீரும்(1962) படத்தில் இரட்டை வேடம்! பாதகாணிக்கை (1962), வானம்பாடி (1963), ஆனந்த ஜோதி (1963) படங்களில் நடித்த பின் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. ஏனோ வாய்ப்பு தான் இல்லையோ அல்லது வேறு காரணமோ. டி.கே.எஸ் நாடகக்குழுவில் பயிற்சி.



களத்தூர் கண்ணம்மா படத்தில் கமலுடன் நடித்த தசரதன் ’நானும் ஒரு பெண்’ படத்தில் எம்.ஆர்.ராதாவின் மகனாக நடித்திருப்பார். மேஜர் சந்திரகாந்த் படத்தில் நாகேஷுடன் ‘கல்யாண சாப்பாடு போடவா! தம்பி கூடவா!’ பாடலில் நடித்தவர். நினைவில் நின்றவள், வா ராஜா வா என்று நினைவில் நிற்கும்படி நடித்தவர் தான் தசரதன்.

’என்னோடு களத்தூர் கண்ணம்மாவில் நடித்த தசரதன் இன்று நான் காரில் போகும்போது ரோட்டில் நடந்து போகிறார்.’ என்று பல வருடங்களுக்கு முன் கமல் ஹாசன் வருத்தப்பட்டார்.


 காதர் பாசமலரில் துவங்கி, மதராஸ் டூ பாண்டிச்சேரியில் பக்கோடா காதர் ஆக பிரபலமானவர்!



தசரதனும், பக்கோடா காதரும் கணக்கே இல்லாமல் பல படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக தலை காட்டினார்கள். இருவருமே இறந்து விட்டார்கள்.
 

கமல் ஹாசனின் குழந்தை நட்சத்திர வாழ்வு முடிவுக்கு வந்த பின் கர்ணன்(1964) படத்தில் மாஸ்டர் ஸ்ரீதர் என்ற பையன் தலை காட்டினான். கமலுக்கும் ஸ்ரீதருக்கும் வயதில் பெரிய வித்தியாசமெல்லாம் கிடையாது. ஒருவேளை கமல் தொடர்ந்து சினிமாவில் நடித்திருந்தால் இந்த ஸ்ரீதர் செய்த ரோல்கள் தான் செய்திருக்க முடியும். கந்தன் கருணை(1967)யில் பாலமுருகனாக நடித்த மாஸ்டர் ஸ்ரீதர் பின் சத்தியம் தவறாதே(1968), தெய்வீக உறவு(1968) என்ற படங்களில் நாடக வசனம் பேசி பக்கா நாடக நடிக சிறுவனாக வளர்ந்து நம்ம குழந்தைகள் (1970) படத்தில் நாடகபாணியிலிருந்து மீள முடியாத, வளர்ந்து விட்ட, வயதுக்கு வந்து விட்ட பையனாக இருந்தான். 

சிவாஜியின் இடத்தைப் பிடிக்கலாமா? எம்.ஜி.ஆர் இடத்தைப்பிடிக்கலாமா? என்று கனவுடன் மாஸ்டர் ஸ்ரீதர் வாலிபனாக சினிமாப் பத்திரிக்கையில் பேட்டி கொடுத்துக்கொண்டு..!

 குட்டி பத்மினி பாசமலர்(1961)படத்தில் குழந்தை சாவித்திரியாகத் தலைகாட்டி, நெஞ்சில் ஓர் ஆலயம் (1962) படத்தில் பிரபலம். கமலின் குழந்தை நட்சத்திர வாழ்வு முடிவுக்கு வந்த பின் குட்டி பத்மினி பிஸி! நவராத்திரி(1964) க்கு பின் குழந்தையும் தெய்வமும் (1965). குழந்தையும் தெய்வமும் தான் குட்டி பத்மினிக்கு இன்று வரை சிறந்த படம்! குட்டி பத்மினியும் எதிர் கால கதாநாயகி நான் தான் என்ற பெருமிதத்தில் தான் இருந்தார். சிவாஜி அங்கிளுடன் ஜோடியாக நடிப்பேன்.எம்.ஜி.ஆர் அங்கிளுடன் ஜோடியாக நடிப்பேன் என்று தான் பேட்டிகளில் சொல்லிக்கொண்டே! 


நம் நாடு(1969) படத்தில் குட்டி பத்மினிக்கு தம்பியாக நடிகை ஸ்ரீதேவி. துணைவன்(1969) படத்தில் தேவர் அறிமுகப்படுத்திய குழந்தை நட்சத்திரம்.ஆதி பராசக்தி (1971) தெய்வக்குழந்தைகள் (1973) என்று ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்த முக்கிய படங்கள்.


கற்பகம்(1963) படத்தில் பேபி ஷகிலா குழந்தை நட்சத்திரம். ”அத்தை மடி மெத்தையடி! ஆடி விளையாடம்மா!”
பேபி ஷகிலாவின் பிற படங்கள்- எங்க வீட்டுப்பிள்ளை, இருவல்லவர்கள், எங்க பாப்பா.

ரோஜா ரமணி சிறுவனாக பக்த பிரகலாதா(1967)ல், இருமலர்கள்(1967), என் தம்பி(1968), சாந்தி நிலையம்(1969) போன்ற படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம். மணிரத்தினத்தின் அஞ்சலி(1990)யில் ரோஜாரமணியின் மகன் தருண் தான் ரேவதி - ரகுவரனுக்கு மகன்.

பேபி ராணி நடித்த படங்கள் 
பேசும் தெய்வம்(1967),குழந்தைக்காக(1968), கண்ணே பாப்பா (1969) ஆகியவை.

கமல் குழந்தை நட்சத்திரமாக இல்லாத தமிழ்த்திரையில் ஆக்கிரமித்த மற்றொரு நடிகர் மாஸ்டர் பிரபாகர். பிஸியான குழந்தை நட்சத்திரம். பாமா விஜயம்(1967), இருகோடுகள்(1969) என்று தொடர்ந்த மாஸ்டர் பிரபாகர் கதாநாயகனாக வா ராஜா வா(1969) வில் முக்கியத்துவம்!

 அனாதை ஆனந்தனில் டைட்டில் ரோல் செய்த(1970) மாஸ்டர் சேகர் குடியிருந்த கோவில் (1968) படத்தில் இரட்டை சின்ன எம்.ஜி.ஆர்.
அகத்தியர்(1972) மணிப்பயல்(1973) சொல்லத்தான் நினைக்கிறேன்(1973) வரை பையனாக நடித்தவர் தான் மாஸ்டர் சேகர். இன்று இவர் உயிருடன் இல்லை.

ராமு (1966) படத்தில் அறிமுகமாகி பெற்றால் தான் பிள்ளையா(1967), சபாஷ் தம்பி(1967) ஆகிய படங்களில் நடித்த மாஸ்டர் ராஜ்குமார்.

 குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் Miniature Adults” என்ற மிகையில் தான் நின்றனர். கொழந்தங்க வசனமெல்லாம் ’டயலாக்கா’ பெரிய மனுஷ தோரனையில தான்!

குழந்தை நட்சத்திரங்கள் அனைவருமே எதிர் காலத்தில் திரையில் கதாநாயகன், கதாநாயகிகளாக வலம் வருவோம் என்று நம்பியவர்கள் தான். 

கமல் ஹாசன் பதின்வயதில் டான்ஸ் அஸிஸ்டண்ட் ஆக இருந்தார்.
மாணவன் (1970) படத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின் குட்டி பத்மினியுடன் ஒரு பாடல் காட்சியில் ஆடிப்பாடினார். “விசிலடிச்சான் குஞ்சிகளா! குஞ்சிகளா! வெம்பிப் பழுத்தப் பிஞ்சுகளா! பிஞ்சுகளா!” இந்தப் பாடலில் கமலுக்கு ஒரு குளோசப் ஷாட் கூட கிடையாது.


தொடர்ந்து கமல் டான்ஸ் அஸிஸ்டண்ட் ஆகத்தான் கொஞ்சகாலம். அன்னை வேளாங்கண்ணி(1971)யில் அஸிஸ்டண்ட் டைரக்டர். அதில் ஸ்ரீவித்யாவுடன் நடித்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. ஜெமினி கணேசன் டைரக்டர் ஸ்ரீதரிடம் கூட்டிக்கொண்டு போனார். கமலைப் பார்த்து விட்டு ஃபோட்டோஜீனிக் ஃபேஸ் கிடையாது என்று அபிப்பராயப்பட்ட டைரக்டர் ஸ்ரீதர் அஸிஸ்டண்ட் டைரக்டராகச் சேர்த்துக்கொள்ளமுடியும் என்று சொன்னாராம். 

குறத்தி மகன் (1972) படத்தில் நிறைய காட்சிகளில் நடிக்க வாய்ப்பே இல்லாமல், முக்கிய ரோல் செய்த செயற்கையான நாடக பாணி நடிகர் மாஸ்டர் ஸ்ரீதரைப் பார்த்து “ ராஜா வாழ்க” என்று கோஷம் போட்டுக்கொண்டு நடிக்க வேண்டியதாகிப்போனது. ஆர்.சி. சக்தியிடம் கமல் “ படத்தில என்னை கே.எஸ்.ஜி ஒரு ஓரமாக நிறுத்திட்டாருண்ணே ” என்று தேம்பினார்.

அடுத்து அரங்கேற்றம் (1973) படத்தில் நிறைய காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. முன்னூறு ரூபாய் தான் கொடுத்தார்களாம். பாலச்சந்தரிடம் முறையிட்டபோது அவர்-“ பின்னால் நல்ல சம்பளம் கிடைக்கும். கவலைப்படாதே” 

சொல்லத்தான் நினைக்கிறேன்(1973) படத்தில் வில்லன் ரோல். அந்தப்படத்தில் ரசிகர்கள் கவனம் பெற்று விட்டார்.
 " அடே! டேய்! களத்தூர் கண்ணம்மாவில நடிச்ச பயடா!”

அவள் ஒரு தொடர்கதை (1974), அபூர்வ ராகங்கள் (1975), மன்மதலீலை (1976) அதன் பின் நடந்ததெல்லாம் சரித்திரம்.


1976 ல் நடிகை ஸ்ரீதேவி கமலுடன் மூன்று முடிச்சு படத்தில் நடித்தார். அபூர்வ ராகங்களில் சுருதி பேதமாக தலை காட்டிய ரஜினி காந்த் மூன்று முடிச்சில் தேள் கொடுக்கு போல வித்தியாசமான வில்லனாக கவனம் பெற்று விட்டார்!

குழந்தை நட்சத்திரங்களில் கமல் ஹாசனும் ஸ்ரீதேவியும் மட்டுமே அகில இந்திய அளவில் நட்சத்திரமாக பிரகாசித்து, சாதித்து விட்டார்கள்.