Share

Aug 31, 2019

Obsolete Soft drinks Ads


The theatre 
Is womb dark
The picture is bright.

- Nakulan

நகுலனின் ஆங்கில கவிதைகளெல்லாம் ரொம்ப சிக்கனமானவை.
பால்யத்தில் திரைப்பட அரங்குக்கு எந்த படம் பார்க்க போனாலும் சில விளம்பரங்கள் பொதுவானவை.
அரங்க இருட்டில் வெளிச்சத்திரையில்.
பசுமரத்தாணி போல விளம்பர பாடல்கள் மனதில் பதிந்தது அதனால் தான்.
நல்ல வண்ணத்தில் விளம்பரங்கள்.
Coca Cola
லேசான சாரல் மழையில்
ஒரு தாழன் தாட்டிய அணைஞ்சுகிட்டே பாடுவான்.
“ கண் காணும் சந்தோஷமே
எல்லோர்க்கும் கொண்டாட்டமே
கையோடு கை மாறுமே
கண்ணோடு உறவாடுமே
ஏங்கும் கண்களிலே தேங்கும் சந்தோஷமே
இன்பம் எங்கும் தங்கும்
கோக்க கோலா சுகம்
இன்பம் மூட்டிடும் கோக்க கோலா,
கோக்க கோலா ஜோர்.

Fanta 
பருகிடுவீரே,
தினமும் மகிழ்ந்திட பருகிடுவீர்
ஃபேண்ட்டா ஆரஞ்ச் பருகிடுவீர்
ஃபேண்ட்டா ஆரஞ்ச் பருகிடுவீர்


I had watched what attracted me and 
sometimes it was an Ad.
இப்போதும் கூட என்னையறியாமல் இந்த விளம்பரப்பாடல்களை குரலெடுத்து பாடுவதுண்டு.

Double Seven

1977ல் இந்திரா காந்தி அரசாங்கம் போய் ஜனதா அரசாங்கம் வந்து கோகா கோலாவையும் ஃபாண்டாவையும் தடை செய்து அரசாங்கமே தயாரித்த ’டபுள் செவன்” சாஃப்ட் டிரிங்க் விளம்பரப்படுத்தப்பட்டு மார்க்கெட் செய்யப்பட்டது.
இந்திராகாந்தி 1980ல் ஜெயித்த போது தன் காங்கிரஸ் தோல்வியை ஞாபகப்படுத்தும் 77 கூல்ட்ரிங்க் எப்படி தொடர முடியும்? சட்டத்தால் அகற்றப்பட்டது.


Aug 30, 2019

What is precious, is never to forget


“I think continually of those who were truly great.” 

மிகவும் சிறப்பாக துவங்கும் இந்த கவிதையை எழுதிய ஸ்டீபன் ஸ்பெண்டர் இரண்டாம் முறையாக 1956ல் வந்த போது அவரோடு க.நா.சு. நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
டி.எஸ்.எலியட்டை தன் முன்னோடியாக நம்பியவர் ஸ்டீபன் ஸ்பெண்டர். ஜெர்மானிய யூத பூர்வீகம். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த ஆங்கிலக் கவி.
 
I think continually of those who were truly great.

’எந்தரோ மஹானுபாவலு’ தியாக ப்ரும்மத்தின் ஸ்ரீராக கீர்த்தனை போன்றே தான் முதல் வரி.

ஸ்டீபன் ஸ்பெண்டரிடம் “ முதல் தடவையாக சென்னைக்கு வந்த போது உங்களை கவர்ந்த விஷயம் எது?” என்று க.நா.சு  கேட்ட போது அவர் பதில் “ மெரினா பீச்”

”இரண்டாவது சென்னையின் முக்கிய விஷயமாக அவர் எதைச் சொல்வார்” என்பது க.நா.சு கேட்ட இரண்டாவது கேள்வி.
ஸ்பெண்டர் பதில் : “போன தடவை நான் வந்த போது என் கூட்டங்கல் மூன்றுக்கு சற்றும் அழகில்லாத முகத்துடன் ஒரு வயசானவர் தலைமை வகித்தார். ஒவ்வொரு தடவையும் அவர் வாயைத் திறந்தபோது அழகான ஆங்கிலத்தில், மிகவும் அற்புதமாக, அறிவு தொனிக்கப் பேசினார். அவர் பெயர் நினைவில்லை”
க.நா.சு. அந்தப்பெரியவர் தான் இம்முறையும் ஸ்பெண்டரின் நிகழ்ச்சிகள் இரண்டிற்காவது தலைமை தாங்க இருப்பவர் என்று சொல்கிறார்.
அவர் ஹிண்டுவில் Defacto editor ஆக இருந்த நா.ரகுநாதய்யர். 

Truly Great. 
இவரைப்பற்றி தான் அந்த ஆங்கிலக்கவி பெருமையாக நினைவு கூர்ந்திருக்கிறார். 
Defacto editor? ஹிண்டு பத்திரிக்கையில் இப்படி ஒரு வேலை? defacto = Actual, Real.  Actual Editor! 
ஸ்பெண்டரின் கவிதையின் இரண்டாவது பேராவின் முதல் வரி
What is precious, is never to forget
ஸ்பெண்டருக்கு ஜெமினி ஸ்டுடியோவில் வாசன் ஒரு விருந்து கொடுத்திருக்கிறார். விருந்தின் போது ஆர்.பாஸ்கரன் என்பவர் ஸ்டீபன் ஸ்பெண்டரை சந்தித்திருக்கிறார்.
 பித்தப்பூ நாவலில் தியாகராஜன் என்பவரை முக்கிய  கதாபாத்திரமாக க.நா.சு. எழுதியிருப்பார்.
 தஞ்சை ப்ரகாஷ் வெளியிட்ட நாவல் பித்தப்பூ.
நாவலில் ஸ்டீபன் ஸ்பெண்டரும் வருவார். 

வாசன் ஔவையார் படம் போட்டு காட்டியிருக்கிறார். ஸ்பெண்டருக்கு முழு படமும் பார்க்க பொறுமையிருக்கவில்லை. வாசன் விளக்க முற்பட்டது பலன் தரவில்லை.
ஔவையார் பற்றி ஸ்பெண்டர்
“ Magical picture” என்று க.நா.சுவிடம் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார்.  ரசிக்க முடியவில்லை. பாதி படத்தில் க.நா.சு.வுடன் பிடிவாதமாக கிளம்பி விட்டார்.
அப்புறம் ஆங்கில கவி பம்பாய்க்கு போன போதும் ஔவையார் விரட்டிக்கொண்டு வந்திருக்கிறார். ஜெமினி வாசன் நிர்ப்பந்தப்படுத்தி அந்தப்படத்தை ஸ்பெண்டர் பார்க்கும்படி செய்து விட்டார்.
ஆனால் ஹிண்டு நா.ரகுநாதய்யர் was precious, was never to forget. Truly great. எந்தரோ மஹானுபாவலு, அந்தரிக்கி வந்தனமு.

க.நா.சுவையும் ஸ்பெண்டரால் மறந்திருக்க முடிந்திருக்காது. 




இளவேனில் வாலறிவன்

இளவேனில் வாலறிவன் துப்பாக்கி சுடும் போட்டிக்காக என்பதோடு அந்த அழகான பெயருக்காகவும் நிமிர்ந்து பார்க்கச் செய்த கன்னி தெய்வம்.     

மதுரை அமெரிக்கன்  கல்லூரியில் எங்கள் ஆங்கில பேராசிரியர் ஜோப் டி மோகன் வித்தியாசமானவர். வகுப்பில் தமிழை வினோதமாக பயன் படுத்தி படுத்தியெடுப்பார். Funny professor. 


”வாலறிவன் நற்றாள் தொழார் எனின்.
வாலறிவன்ன்னா என்னா தெரியுமா? தப்பு பண்ணா, சேட்டை பண்ணா  வால அறுத்துடுவான் ஆண்டவன். அதான் வாலறிவன்." 

"நீ ஒரு காது கொண்டு கேட்டால் அது இருக்காது.       இரு காது கொண்டு கேட்டால் அது இருக்கும் "

My senior Prof. Fazlulla Khan 's comment on this post has been added below :


" Gabie, how are you? Nice to read your post, and happy to see your photos.

To add to our Prof. Job D. Mohan's pearls - in our class one day, he said 'tea and bun' together became 'teabun' , which eventually transformed into 'tiffin'."



Aug 29, 2019

அறியாத குழந்தை இழுத்துச் சப்பும் நினைவில் இறவாத முலை


“பழகாத சொல்
ஒன்றுக்கு
பதறி
பாலிடால் குடித்து
செத்துப்போனாள்
பச்சைப் பிள்ளைக்காரி.
அறியாத குழந்தை
நினைவில்
இறவாத முலையை
இழுத்துச் சப்பும்
இன்னும்..”
- போகன் சங்கர்
லோர்க்கா நாடகக்காட்சியையும், கு.அழகிரிசாமி சிறுகதை நிகழ்வையும் இணைத்து இந்த வருடம் மே மாதம் நான் “ தாயின் பிணத்துடன் பாலகர்கள்” பதிவு எழுதினேன்.
லோர்க்காவின் ”தலைப்பில்லாத ஒரு நாடகம்”.
இதில் ஷூ பாலீஷை தின்று விட்டு இறந்த தாயின் முலையின் மீது படுத்து தூங்கிப்போகும் குழந்தைகள்.
பச்சை பாலகர்களை பரிதவிக்க விட்டு இறந்து போகிற பரிதாபமான தாய் பற்றிய சிறுகதை கு.அழகிரிசாமியின்
“ இருவர் கண்ட ஒரே கனவு.”
’அம்மா செத்துப்போகாதே அம்மா, செத்துப்போகாதே அம்மா’ என்று பிணத்தைப்போட்டு அடிஅடி என்று அடிக்கும் பாலகர்களின் ஓலம்.
போகன் சங்கர் கவிதைக்கு கூட தாயின் பிணத்துடன் பாலகர்களுடன் ஒரு Relevance இருக்கிறதை காணலாம்.

Aug 28, 2019

பிக்பாஸு 'சஜோரா' தேவி மற்றும் வக்கீல் வனிதா



Awkward                                                                             

லவ் பேர்ட்ஸ் பாடி அபிநயித்த கஸ்தூரிக்கு பட்டம் "அபிநய காளி 'சஜோரா' தேவி"                                     

நீலச்சாயம் வெளுத்து போச்சி டும் டும் டும். காக்கா வேஷம் கலஞ்சி போச்சி டும் டும் டும்.           

"ச்சீ.. ச்சீ.. புளிச்ச மாவு பிக்பாஸு.. நான் போறேன்.  ஆயிரம் பொன்னாச்சே.. எனக்கு கெடயாது. வேற யாருக்கோ.. " - அபிநய சஜோரா                                   
                                                                               

Firy sign
வனிதாவின் தர்க்கம், வாக்கு வாதம், விவாத திறன் கவனத்துக்குரியது. La Belle dame sans merci.               

இந்த மூன்றாவது பிக்பாஸ் களை கட்ட,       
    இயல்பை மறைக்காமல் அதகளம் செய்யும் வனிதா.   



Aug 27, 2019

மஸ்தானா? மஸ்தானா?


ஜெயகாந்தன் பெயர் முருகேசன். ஜெயகாந்தனுடைய அப்பா ஃபயர் சர்வீஸில் வேலை பார்த்தவர்.
சந்திரபாபுவுக்கு எழுதப்படிக்கத்தெரியாது என்று ஜெயகாந்தன் ‘இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ நூலில் அனுபவப்பூர்வமாக பார்த்து விட்டு சொல்லியிருக்கிறார். சந்திரபாபு சிலோன்ல சீனியர் கேம்பிரிட்ஜ் படித்தவர் என்று வார பத்திரிக்கை ஒன்றில் பேட்டியில் அந்த காலத்தில் சொன்னது பொய் தான் என்றாகிறது. அல்லது பேட்டியில் பத்திரிக்கை அள்ளி விட்டிருக்கிறது என்பது தான் உண்மை. ஜெயகாந்தன் பொய் சொல்லவில்லை.
ஸ்ரீதரின் உடன் பிறவா சகோதரர் சி.வி.ராஜேந்திரன் என்று ஜேகே அதில் குறிப்பிட்டிருக்கிறார். ஸ்ரீதரின் உடன் பிறந்த சகோதரர் என்று தான் பரவலாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஸ்ரீதரின் இனிசியல் கூட சி.வி. தான்.
நான் இது பற்றி இப்போது சித்ராலயா கோபுவின் மகன் ஹிண்டு நரசிம்மனிடம் கேட்டேன். அவர் ஸ்ரீதரின் மாமா மகன் சி.வி.ராஜேந்திரன் என உறுதிப்படுத்தினார்.
மதுரை பக்கம் இதை சொன்னா 'ஸ்ரீதரோட தம்பி தான் சி.வி.ராஜேந்திரன்’னு கட்டி உருண்டுடுவாங்கே. இப்படியெல்லாம் கூட மதுரையில பெரிய சலம்பல் ஆகியிருக்கிறது.
ஜெயகாந்தனின் கலையுலக அனுபவங்கள் நூலில் கவி.கா.மு.ஷெரிஃப் தான் பாட்டும் நானே, பாவமும் நானே பாடலை எழுதியவர் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் கண்ணதாசன் அதை அப்போதே மறுத்து ‘போயும் போயும் வயிற்றுழவுக்காரன் மலத்தையா உண்பான்’ என்று தன் பத்திரிக்கையில் மறுத்திருந்தார்.
இப்போது அவரது பிள்ளைகளும் சொல்வது ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ எங்கப்பா தான் எழுதினார்’
பிரபலங்களின் வம்சபரம்பரை எப்போதும் எமோஷனலாக சொல்வது கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையற்றது.
ஜெயகாந்தனின் பால்ய நண்பர் திராவிட கழக தலைவர் கே.வீரமணி என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடைய இன்னொரு நண்பர் கூலி மஸ்தான் என்ற ஹாஜி மஸ்தான் என்று ஒரு செய்தி கூட பத்திரிக்கையொன்றில் அந்த காலத்தில் வந்திருக்கிறது.
ஜெயகாந்தன், வீரமணி, ஹாஜி மஸ்தான் ஆகியோர் சிறுவர்களாக இருக்கும்போதே நண்பர்கள் – இப்படி.
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஜெயகாந்தனே சொன்னாரா? வீரமணி சொன்னாரா? இது உண்மையா என்பதை இனி வீரமணி தான் சொல்ல முடியும். வீரமணி, ஜெயகாந்தன் ஏறத்தாழ சம வயதினர். மஸ்தான் ஏழெட்டு வயது மூத்தவர்.
மஸ்தான் அன்று பம்பாய் டான். வர்தா பாய் போல. இருவரும் தமிழர்கள்.
எமர்ஜென்ஸி காலத்தில் இவர் ஜெயிலில் வைக்கப்பட்டார். அப்போது தான் இவரைப் பற்றி பத்திரிக்கைகள் எழுதித் தள்ளின.

ஹாஜி மஸ்தான் காலில் ராஜ்கபூர் விழுகிற புகைப்படம் ஒன்று அன்று நான் பார்த்திருக்கிறேன். அன்றும் தாதாக்களின் பிடியில் தான் இந்தி திரையுலகம் இருந்திருக்கிறது. பல படங்களுக்கு மஸ்தான் ஃபைனான்ஸ். படத்தயாரிப்பாளராகவும் ஆனார் என்றே சொல்லப்பட்டதுண்டு.
ஹாஜி மஸ்தான் கதையை தான் தீவார் என்று உல்டா பண்ணி அமிதாப்பை வைத்து இந்தியில் எடுத்தார்கள். சில வருடங்கள் கழித்து தீவார் தமிழில் ரஜினி ”தீ”.
வர்தா பாய் பின்னால் தமிழில் “நாயகன்”. அப்புறம் தான் வினோத் கன்னா “தயாவான்”.
ஜெயில் வாழ்க்கையில் பலரிடம் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும்.
ஆட்டோ சங்கர் கிறிஸ்தவராக மாறினார். ராஜீவ் கொலை வழக்கு முருகன் சாமியாராக மாறினார். இதில் உண்மை சம்பந்தப்பட்ட சிக்கல்கள் இருப்பது தவிர்க்க முடியாது. ஜெயில் வாழ்க்கை அலுப்பே மனித இயல்பில் தவிர்க்க முடியாத ஏதேனும் மாற்றத்தை உண்டு பண்ணும் என்பது உளவியல் உண்மை.
எமர்ஜென்சியில் சிறையில் அடைக்கப்பட்ட மஸ்தான் அப்போது ஜெயப்ரகாஷ் நாராயணின் கொள்கைகளால் கவரப்பட்டு தொண்டராக மாறினார். இது கூட எமர்ஜென்ஸி கொண்டு வந்த இந்திராகாந்தியை எதிர்த்த மஸ்தானின் மனநிலை என்று எளிதாக குறிப்பிட முடியும்.
ஆனால் பம்பாய் நகரின் நிழல் உலக அரசர் அப்போது சிறையில் இந்தி கற்க ஆரம்பித்தார் என்பது அதிசயம்.
பம்பாயை இந்தி தெரியாமலே ஒரு தமிழர் ஆட்டி வைத்திருக்கிறார் என்பது பெரிய விஷயம். ஆச்சரியம்.



Aug 26, 2019

Call it fate, Call it Karma..?


டாக்ஸி டிரைவர்கள் பலரும் Compulsive talkers.
 தாம்பரம் முருகன் டாக்ஸியில் பயணித்த போது
 ” கர்ணன் எவ்வளவு தர்மம் பண்ணி என்ன பிரயோசனம். பகவான் அவன மோட்சத்துக்குள்ள நுழைய விடாம மறு பிறவின்னு பூமிக்கு அனுப்பிட்டான் சார். ஆமா. சிறு தொண்டரா பொறந்தது ஆருன்னு நெனச்ச. கர்ணன் தான் சார் சிறுதொண்டரா வந்தான்.
துரியோதனன் முன்னூத்து அம்பது வருஷம் அழுதுக்கினே ஆவியா திரிஞ்சான் சார். ’ஐயோ, என் சித்தப்பா பசங்கள படாத பாடு படுத்துனேனேன்னு அழுதுகிட்டெ இருந்தான். அவனுங்க சொத்த குடுக்க மாட்டன்னு அசிங்கப்படுத்துனனே.அயோக்கியன் நான்’ன்னு அழுதுகிட்டே ஆவியா முன்னூத்து அம்பது வருஷம். அப்பறம் தான் சொர்க்கத்துக்கு போனான்.
ராமானுஜர இப்ப அறுபத்து நாலாவது நாயன்மாரா ஆக்கிட்டாங்க. ஒனக்கு தெரியுமா சார்? அவரு ஆண்டவனுக்கு நெறய்ய சேவ பண்ணதால நாயன்மாராக்கிட்டாங்க.”

நான் “அது தெரியாதே. ஆனா ஒன்னு கேள்விப்பட்டேன்.” இப்படி சொல்லி விட்டு ரெண்டு பக்கமும் திரும்பி திரும்பி பாத்தேன். அவரும் நானும் தான் டாக்ஸியில். இருந்தாலும் வேறு யார் காதிலும் விழுந்திடக்கூடாது என்பது போல மீண்டும் அக்கம் பக்கம் பார்த்து விட்டு ரகசியம் சொல்வது போல “ ’ஆண்டவனே ஒரு அயோக்கியன்’னு ஒர்த்தர் சொன்னாரு. அவன் நல்லவனா இருந்தா நம்ம மாதிரி ஏழைங்களுக்கு ஏன் கஷ்டம் குடுக்கறான்’ன்னு அவரு ஏங்கிட்ட கோவப்பட்டாரு”

டிரைவர் தாம்பரம் முருகன் கான்வர்சேஷன் களை கட்டுதுன்னு உற்சாகமாயிட்டாரு.

கால் டாக்ஸி சாரதி அருளிய கீதை
“சார். ஆண்டவன கெட்டவன்னு யார் சொன்னாலும் நம்பவே நம்பாத சார். அவன் பல கணக்கு வச்சிருக்கான். அவன் இந்த பொறவியில கொடுக்கற கஷ்டமெல்லாம் போன பொறவி கணக்க செட்டில் பண்றதுக்காக சார். இது தெரியாம அயோக்கிய பசங்க ஆண்டவன கெட்டவன்னு சொல்வானுங்க சார். அத நீ நம்பாத. ஒனக்கு நான் ஒரு கத சொல்றேன் கேளு.
ஒரு வாலிபப்பய சார். அவனுக்கு வேலயும் கெடக்கல. பொண்ணும் கிடக்கல. எளவட்டப்பயலுக்கு கண்ணாலமும் இல்ல. வேலயும் இல்லன்னா அது பெரிய நரகம் சார். இன்னாடா இது பேஜாரா கீதுன்னு சாமியாரா ஆயிட்டான். தவம் செய்ய காட்டுக்கு கெளம்புனான் சார். சார், கெவினிக்கிறியா?”ன்னு என்னை திரும்பி பார்த்து விட்டு தொடர்ந்தார். “ தண்ணி தாகம். ஒரு வீட்டில நொழஞ்சான். அங்க ஒரு ஆள் கட்டில்ல தூங்கினு இருந்தான். அவன் பொண்டாட்டி வந்தா. தண்ணி கேட்டான். அவ ஒரு பெரிய சொம்புல கொண்ணாந்து கொடுத்தா. இவன் மடக்கு மடக்குன்னு குடிச்சான். அவ இவன ஒரு மாதிரி வெறிச்சி பாத்து “எங்கூட படுக்க வர்றியா”ன்னு கேட்டா. சார் அப்படி இருக்காளுங்க சார். இன்னாடான்னு ஒனக்கு அதிசயமா தெரியுதில்ல. அவ புருஷன் பலஹீனமான ஆளு சார். நா சொல்றது பிரியுதா? இந்த சாமியார்ப்பய “இன்னாம்மே. ஒன் புருஷன் இருக்கான். இப்படி என்ன கேக்கிற.நான் சாமியாரும்மா.’ன்னான். இவ உடனே ஒரு அருவாள எடுத்து புருஷன் தலைய வெட்டிட்டா சார். கத பயங்கரமா இருக்குல்ல. இன்னும் கேளு. அவ சாமியார பாத்து “இப்ப வா”ன்னு சொன்னா சார். இவன் மிரண்டு போய் ஓட ஆரமிச்சான். அவ ஒடனே “காப்பாத்துங்க, காப்பாத்துங்க”ன்னு சவுண்ட குடுத்துருக்கா. ஊரே திரண்டு சாமியார பிடிச்சிட்டாங்க. அந்த பொம்பள என்ன சொன்னா “ தண்ணி கேட்டான். குடுத்தேன். என் புருஷன ஒடனே கழுத்த சீவுனான். என்னய படுக்க வான்னு கைய பிடிச்சி இழுத்துட்டான்”ன்னு அபாண்டமா சொல்லிட்டா சார்.
இவனுக்கு தண்டன கொடுத்தாங்க. வலது கைய வெட்டிட்டாங்க. இவன் அப்புறம் காட்டுக்கு போயி ஒத்தக்கையோட தவம் பண்ணினான். அங்க வந்த ஆண்டவன்ட்ட ”இது இன்னா நியாயம். நான் ஒரு பாவமும் அறியாதவன்”னு சொன்னப்ப ஆண்டவன் சொல்லியிருக்கான். “இது போன ஜன்மத்து பலன்”ன்னு சொல்லி வெவரமா வெளக்கியிருக்கான். “ போன ஜன்மத்துல நீ ஒரு சாமியாரா தவம் பண்ணிக்கிட்டிருந்த. ஒர்த்தன் ஒரு பசுவ பலி குடுக்க இஸ்துக்கின்னு வந்தான். அந்த பசு நேக்கா புரிஞ்சிக்கிட்டு அத்துக்கிட்டு ஓட ஆரம்பிச்சிருச்சி. இவன் அத தேடி வந்தப்ப சாமியாரா இருந்த ஒன்கிட்ட “ஒரு பசு ஓடி வந்துச்சே. பாத்தியா”ன்னு கேட்டான். நீ கைய தூக்கி “இந்த பக்கமா தான் ஓடுச்சி”ன்னு சொல்லிருக்க. அந்த பசுவ பிடிச்சி அவன் பொலி போட்டுட்டான்.’ ஆண்டவன் சொல்லியிருக்கான். டேய் சாமி, அந்த பசு தான் ஒனக்கு தண்ணி கொடுத்து வில்லங்கத்துல இந்த பொறவியில மாட்டி விட்ட பொம்பள. அவள பலி கொடுத்தவன் தான் இந்த பொறப்புல கட்டில்ல படுத்துருந்த புருஷன்.பசு இப்படி போச்சுன்னு காட்டிக்குடுத்த அந்த வலதுகை இந்தப் பொறவியில ஒனக்கு போச்சு.”ன்னு.

இப்ப சொல்லு சார்.ஆண்டவன் காரண காரியத்த புரிஞ்சிக்க. “

நான் “ஆ..ஐயோ.. திருந்திட்டேன்.”
Vengence is God’s, Not ours?
Call it fate, Call it Karma..?
…………………………..








Aug 23, 2019

சரசம் முத்துனா ஜாக்கெட்டுக்குள்ள கை

சினேகன், சேரன் வகையறாக்களுக்கு  -                         அந்நியன்லாம்  அண்ணன், அப்பா ஆக முடியாதுடா. கட்டி கட்டி பிடிச்சி, தடவி, தடவி 'ஊள அழுக' விகாரம் டா . என்ன எழவுடா. சட்டிக்குள்ளயும் பொட்டிக்குள்ளயும் விழுந்து ஒளப்புறத பாக்கவே சகிக்காது.                                                                                                                     'சரசம் முத்துனா ஜாக்கெட்டுக்குள்ள கை.' ன்னு புராண கால ஒழவையாரோ, சங்க கால ஒழவையாரோ யாரோ ஒர்த்தர் சொல்லியிருக்காரு.


http://rprajanayahem.blogspot.com/2015/02/blog-post.html

http://rprajanayahem.blogspot.com/2013/03/blog-post_20.html

என்னை மாதிரியே, என்னை மாதிரியே


’எம்பியார் டபுள் ராக்கெட்ல
நடிச்ச படம் பாத்திருக்கியா?’
”நம்பியாருக்கும் எம்பியாருக்கும் கத்திசண்ட எந்த படத்தில?”

இப்படி தான் அப்ப எங்க பக்கத்து வீட்டு அஞ்சு வயசு ராதாக்ரிச்சு அடிக்கடி கேட்டுக்கிட்டே இருப்பான்.
Double act என்பது அவன் அகராதியில் டபுள் ராக்கெட். எம்.ஜி.ஆரை மழலையாக எம்பியார் என்பான்.
எம்.ஜி.ஆர் நடிச்ச நீரும் நெருப்பும் படத்தில ஒரு எம்.ஜி.ஆர அடிச்சா இன்னொரு எம்.ஜி.ஆருக்கு வலிக்கும். இப்படியே காதல் சமாச்சாரமும்.

நாகேஷ் ஒரு பழைய படத்தில் பேசுகிற டயலாக்
இது போல
“ எனக்கு பசிச்சா இவன் தான் சாப்பிடுவான்.
எனக்கு விக்கல் வந்தா இவன் தான் தண்ணி குடிப்பான்.
நான் சாப்பிட்டா இவன் தான் ஏப்பம் விடுவான்.
நான் செத்தா இவன தான் குழியில வக்கனும்.”
எனக்கு இந்த நாகேஷ் வசனம் ஞாபகம் வர காரணம்
போகன் சங்கரின் இந்த கவிதை

” என்னை மாதிரியே
இருக்கிறீர்கள் நீங்கள்
என்னை மாதிரியே
சிந்திக்கிறீர்கள் நீங்கள்
என்னை மாதிரியே அழுகிறீர்கள் நீங்கள்
என்னை மாதிரியே கவிதை எழுதுகிறீர்கள் நீங்கள்
எனக்குப் பதிலாக
எனது கல்லறையை நிரப்ப
உங்களைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் இது தான்.”
சாரு நிவேதிதா ஞாபகம் வருகிறது. யாராவது அசட்டு வாசகன் “சார், நான் நினைக்கிறத நீங்க எழுதுறீங்க. என்ன மாதிரி தான் நீங்க.” இந்த அர்த்தம் தொனிக்க சாருவிடம் தத்து பித்துன்னு உளறினால் அவருக்கு கோபம் ஏற்பட்டு பொங்கி விடுவார்.
போகன் சங்கரிடம் யாரோ இப்படி அடிக்கடி சொல்லியிருப்பார் போல. அல்லது பலராகவும் இருக்கலாம்.
’போகன் நீங்க என் கவித மாதிரி தான் எழுதுறீங்க.நான் நினக்கிறத நீங்களும் நினைக்கிறிங்க. என்ன மாதிரியெ, என்ன மாதிரியெ’ தகுதியற்ற ஒரு மடக்கவிங்கன் இப்படி அடிக்கடி அனத்தியெடுத்ததால் அவனை கல்லறையில் வைக்க தேர்ந்தெடுத்திருக்கிறாராயிருக்கும்.
ஒரு யூகம் தான்.

இப்படி சந்தர்ப்பங்களில் எனக்கு எப்போதும் ஞாபகம் வருகிற விஷயம்.
’ஒரு நல்ல கவிஞனை சித்திரவதை செய்ய சுலபமான வழி உண்டு. அவனுடைய கவிதையை விரிவாக விளக்கி பொழிப்புரை எழுதுவது.’ என்று சொல்வார் நஸ்ஸிம் நிகோலாஸ் தாலிப் என்ற லெபனான் நாட்டு தத்துவ மேதை.
இவர் எழுதிய ’கறுப்பு அன்னப்பறவை’ (The Black Swan) புத்தகம் முக்கியமானது.
விளக்க பொழிப்புரை கவிதையின் வாசகன் எழுதுவது இல்லாமல் இன்னொன்று,
அந்த கவிஞனையே ’நீயே சொல்லு, நடந்தது என்னவென்று நீயே சொல்லு’ன்னு விளக்கச்சொல்லி கேட்பதும் அபத்தம்.
”நீ எழுதுன்னது இன்னொருத்தர் எழுதுன்னது போல தன்னென்னு சொன்னால் அவனுக்குக் கடும் கோபம் வரும்.தான் சுயம்.கொச்சு என்னுதுன்னு காமிக்க தலைகீழா நின்னு தண்ணி குடிப்பான்”ன்னு பாருக்குட்டி சொன்னதை போகன் இன்னக்கி சுட சுட எழுதியுள்ளதை பார்க்கலாம்.

To be a poet is a condition, not a profession. – Robert Frost
..

Aug 22, 2019

காளியும் அஞ்சலியும்

கே.ராஜேஸ்வர் நேற்று செல் பேசியில் பிறந்த நாள் வாழ்த்து சொன்னார்.

                                                              'முள்ளும் மலரும்' காளி எதற்கு தன் தங்கையின் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? நல்ல வேலையில் இருக்கிற ஒரு டீசன்ட்டான நல்ல குண நலன் கொண்ட மாப்பிள்ளை தானே தங்கை காதலிக்கும் மனிதன். அவரை மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளையை வேண்டாம் என்பதில் என்ன லாஜிக் இருக்கிறது? காளி மாதிரி ஒரு இன்னொரு கெட்ட பய தான் தங்கைக்கு கணவனாக வர வேண்டுமா?' அற்புதமான கேள்வி எழுப்பினார் ராஜேஸ்வர்.                                                   

இப்படி எனக்கும் கூட 'அஞ்சலி' படம் பற்றி ஒரு கேள்வி உண்டு.   'எந்த அப்பார்ட்மெண்ட்டிலாவது குடியிருப்பவர்கள் ஒரு இரண்டு மூன்று வயதான குழந்தையைப் பார்த்து முகம் சுளித்து 'இந்த குழந்தையால் எங்கள் பிள்ளைகளுக்கு பாதிப்பு நேரும்' என்று புகார் செய்வார்களா? இப்படி ஒரு ஈனத்தனமான ஒவ்வாமை மற்ற பெற்றோர்களுக்கு    வருமா? '

Aug 20, 2019

ராஜநாயஹம் பற்றி கவிஞர் கலாப்ரியா


கவிஞர் கலாப்ரியா:
” ராஜநாயஹம் பலதுறைகளிலும் ஆழமான வாசிப்பும், யாரும் வாழ்ந்திராத வாழ்க்கை அனுபவமும் உடையவர்.
அவர் கொண்டாடப்பட வேண்டிய கலைஞர்,
ஆவணப்புதையல் சினிமா, அரசியல் நிகழ்வுகள் பற்றிய என் சந்தேகங்களைப் பல முறை அவரிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வேன்.
இப்போதும் நான் ஈடுபட்டிருக்கும் ஒரு நாவல் முயற்சிக்கு அவரிடம் பல தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன். அந்த நாவலை அவருக்கே சமர்ப்பணம் செய்வேன்.”







Aug 19, 2019

Match box criminal


தீப்பெட்டிகளில் ஒரு பண்டர்ரோல் என்று கவர்ன்மெண்ட் லேபிள் ஒட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு தீப்பெட்டியிலும்.மத்திய கலால் வரி. அந்த பண்டர்ரோல் சென் ட்ரல் எக்சைஸ் டிபார்ட்மெண்டில் தான் அது பிரிண்ட் செய்யப்பட்டு தீப்பெட்டிகளில் ஒட்ட எல்லா தீப்பெட்டி ஆஃபிஸ்களுக்கும் அனுப்பப்படும்.
அது சென்ட்ரல் எக்சைஸ் லேபிள். 
அந்த காலத்தில் சென்ட்ரல் எக்சைஸ் கண்ட்ரோலில் அனைத்து தீப்பெட்டி ஆஃபிஸ்களும் இருக்கும். சாவியையே மத்திய கலால் வரி ஆஃபிஸில் கொடுத்து வைக்கவேண்டும் என்று கூட ஒரு சட்டம் இருந்ததுண்டு.
அப்போது தமிழ்நாடு கஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ் இரண்டு டிவிசன்களாக பிரிக்கப்பட்டு மதுரை டிவிசனுக்கு கலெக்டர் எம்.எஸ்.சுப்ரமண்யம். இவர் எங்களுக்கு தூரத்து உறவினர்.
சென்னை டிவிசன் கலெக்டராக எழுத்தாளர் கௌசல்யா நாராயண்.
இவர் மோகன் குமாரமங்கலம், தோழர் பாலதண்டாயுதபாணி, கவர்னர் குர்ணாம் சிங் பயணம் செய்து பெரும் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்ததால் அகால மரணமடைந்தவர்.

Irony! அந்த நேரத்தில் கௌசல்யா நாராயண் தினமணி கதிரில் “வாழ்வைத்தேடி” என்று ஒரு தொடர் நாவல் எழுதிக்கொண்டிருந்தார்.

அந்த பயணத்தில் உயிர் பிழைத்தவர் சிவகாசி எம்.பி. ஜெயலட்சுமி.
கஸ்டம்ஸ் கலெக்டர் எம்.எஸ்.சுப்ரமண்யம் காலத்தில் தான் திருச்சி மெய்வழிச்சாலை ரெய்டு. முதல் நாள் ரெய்டில் என் பெரியப்பாவும் சவுரிப்பெருமாளும் தான் மெய்வழிச்சாலை மர்மத்தை கண்டறிந்த அதிகாரிகள். அப்புறம் கலெக்டர் எம்.எஸ்.சுப்ரமண்யமே ப்ரசன்னமானார். அந்த பரபரப்பான தங்க சுரங்க வேட்டையை இண்டியன் நியூஸ் ரெவ்யூ செய்தியாக்கிய போது அதில் பெரியப்பா இடம் பெற்றிருந்தார். இந்தியாவின் அனைத்து சினிமா தியேட்டர்களிலும் அந்த செய்திச்சுருள் ஓட்டப்பட்டது.
எம்.எஸ்.சுப்ரமண்யம் காலத்திலேயே பரபரப்பான மற்றொரு கஸ்டம்ஸ் கேஸ் கள்ள பண்டர்ரோல் கேஸ்.
கையும் களவுமாக சிக்கிய ஆள் பால்ராஜ் என்பவர்.
இந்த பால்ராஜ் பெரிய ஃப்ராட். கலெக்டரின் சொந்த ஊரிலேயே பிரபலமான குடும்பம் ஒன்றின் மூத்த மருமகன்.
அந்த மனிதன் குற்றத்தை ஒப்புக்கொண்டு ஜெயிலுக்கு போனார்.
அதில் ஒரு உண்மை டிபார்ட்மெண்ட்டில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியவில்லை. என் தகப்பனார், பெரியப்பாவுக்கும் கூட.
அந்த பண்டர்ரோல் அடிக்க உபயோபப்படுத்தப்பட்ட முத்திரை எப்படி அந்த பால்ராஜ் கைக்கு போனது என்பது பெரும் ரகசியம் ஆனது.
ஜெயிலுக்கு போன குற்றவாளியிடம் அது குறித்து எந்த தகவலும் பெற முடியவில்லை என்று வழக்கு முடிக்கப்பட வேண்டியிருந்தது. அது வெளிப்பட்டிருந்தால் டிபார்ட்மெண்டில் ஒரு அதிகாரிக்கு பெரும் இழிவும், கடும் விளைவும் ஏற்பட்டிருக்கும்.
பின்னால் பல வருடங்கள் கழித்து இந்த ஆளை நான் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. என் மாமனாரின் தீப்பெட்டி பிசினஸில் இவர் மீடியேட்டர் ஆக நுழைந்தார். வடநாட்டில் சேட்களிடம் ஆர்டர் எடுத்து என் மாமனாரின் தீப்பெட்டி ஆஃபிஸ்களுக்கு கொடுத்து அதற்கு கமிஷன் கேட்டு வந்தார். ஆர்டர் நல்ல ரேட் என்பதால் மாமா ஒப்புக்கொண்டிருந்தார்.
பால்ராஜ் தன் முதல் மனைவியை விட்டு விலகி வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். அந்த பெண்ணும் அவள் தங்கையும் என் மாமனாரின் தீப்பெட்டி ஆஃபிஸில் தீப்பெட்டி ஒட்டும் வேலை பார்த்தனர்.
கஸ்டம்ஸ் குற்றவாளி தன் கள்ள பண்டர்ரோல் கேஸ் பற்றி என்னிடம் சொன்னார்.
கலெக்டர் சுப்ரமண்யம் நேரடியாக இவரை விசாரித்த போது அந்த கள்ள பண்டர்ரோல் அச்சடிக்க அரசாங்க முத்திரை எப்படி கிடைத்தது என்று கேட்டிருக்கிறார்.
பால்ராஜ் மௌனமாய் தலை குனிந்திருக்கிறார்.
தன் கீழ் வேலை பார்க்கும் ஒரு அதிகாரி தான் என்பதில் கலெக்டருக்கு சந்தேகமில்லை. யாரோ?
அந்த முத்திரை கலெக்டரின் நேரடி பொறுப்பில் இருந்திருக்கிறது.
அவர் யார்?
கலெக்டர் மிகவும் நேர்மையானவர். கண்டிப்பானவர் தான்.
எப்போதும் ரொம்ப பெரிய இடம் இப்படி கேட்டவுடன் அந்த சூப்ரண்ட் யார் என்கிற ரகசியத்தை பால்ராஜ் உடைத்திருக்கிறார். நினைத்தே பார்க்க முடியாத பெருந்தொகை கொடுத்திருக்கிறார்.
கலெக்டருக்கு அந்த கறுப்பு ஆடு யார் என்பதை தெரிந்து கொண்ட ஆசுவாசம்.
அந்த அதிகாரியை வெளிச்சம் போட்டு காட்டாமல் கலெக்டர் வேறு மாதிரி தண்டித்திருக்கிறார். வேலையை விட்டு தூக்காமல் ஒரு மத்திய கலால் துறை தலைவர் என்ற அளவில் அந்த அதிகாரியை கூப்பிட்டு கண்டித்து பல்லு பிடுங்கிற வேலையை செய்திருக்கிறார்.
பால்ராஜ் கள்ள பண்டர்ரோல் தயாரிக்க உதவிய அதிகாரி யார் என்று என்னிடமும் சொன்னார்.
பால்ராஜ் என்னிடம் சொல்லும்போது கலெக்டர் உயிருடன் இல்லை.
என் அப்பா, பெரியப்பா பற்றி பால்ராஜுக்கு நன்கு தெரிந்திருந்தது. கலெக்டருக்கு உறவினர்கள் என்பதைக்கூட அந்த பால்ராஜ் தெரிந்து வைத்திருந்தார்.
அந்த கறுப்பு ஆடு கஸ்டம்ஸ் அதிகாரி யார் என்பதை என் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் நான் தான் தெரியப்படுத்தினேன்.
இருவருமே “அவரா?” என்று அதிர்ந்து கேட்டார்கள்.

இனி அடுத்த அத்தியாயம்
என் மாமனார் அந்த பால்ராஜை நம்பி தீப்பெட்டி ஆர்டர் எடுத்து தொழில் செய்தது அப்போது மாமாவின் அண்ணனுக்கு வருத்தம் கொடுத்தது. என்னிடம் தன் வேதனையை தெரிவித்தார் “தொர, அவன் பெரிய ஃப்ராட். ஒன் மாமன் அவனை நம்புறது எனக்கு பிடிக்கல. விளைவு பயங்கரமாயிருக்கும்.” என்றார்.
நான் எச்சரிக்கை மணியடித்தும் மாமா கேட்கவில்லை. என்னேரமும் போதையில் இருப்பவர்.
“அதெல்லாம் நம்ம கிட்ட அவன் வேலய காட்ட மாட்டான். பயப்படாதீங்க” என்று என்னை சமாதானப்படுத்தினார்.
கள்ளன் பெரிசா? காப்பான் பெரிசா?
A criminal is a creative artiste.
பெரிய ஆர்டர். அந்த நேரம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்களை ஏற்றிச் சென்ற லாரி தீப்பற்றி எரிந்து எல்லாம் நாசம்.
பால்ராஜ் ”சரக்கை இன்சுரன்ஸ் செய்யச்சொன்னேன். உங்க மாமா கேக்கல.அவசரப்பட்டு அனுப்பிட்டாரு.”
வழியிலெயே பொருளை இறக்கி விட்டு லாரிக்கு நெருப்பு வைத்து..
பால்ராஜின் கிரிமினல் வேலை என்று தான் முடிவு கட்டும்படியானது.

கோழி களவாணி கோழி மட்டும் தான் திருடுவான். நகை திருடுறவன் நகை தான் திருடுவான்.அது மாதிரி ஒவ்வொரு திருடனுக்கும் ஒவ்வொரு லைன் இருக்கும். அதை விட்டு track மாறவே மாட்டான். இந்த பால்ராஜுக்கு தீப்பெட்டி லைன்.

..