Share

Aug 26, 2019

Call it fate, Call it Karma..?


டாக்ஸி டிரைவர்கள் பலரும் Compulsive talkers.
 தாம்பரம் முருகன் டாக்ஸியில் பயணித்த போது
 ” கர்ணன் எவ்வளவு தர்மம் பண்ணி என்ன பிரயோசனம். பகவான் அவன மோட்சத்துக்குள்ள நுழைய விடாம மறு பிறவின்னு பூமிக்கு அனுப்பிட்டான் சார். ஆமா. சிறு தொண்டரா பொறந்தது ஆருன்னு நெனச்ச. கர்ணன் தான் சார் சிறுதொண்டரா வந்தான்.
துரியோதனன் முன்னூத்து அம்பது வருஷம் அழுதுக்கினே ஆவியா திரிஞ்சான் சார். ’ஐயோ, என் சித்தப்பா பசங்கள படாத பாடு படுத்துனேனேன்னு அழுதுகிட்டெ இருந்தான். அவனுங்க சொத்த குடுக்க மாட்டன்னு அசிங்கப்படுத்துனனே.அயோக்கியன் நான்’ன்னு அழுதுகிட்டே ஆவியா முன்னூத்து அம்பது வருஷம். அப்பறம் தான் சொர்க்கத்துக்கு போனான்.
ராமானுஜர இப்ப அறுபத்து நாலாவது நாயன்மாரா ஆக்கிட்டாங்க. ஒனக்கு தெரியுமா சார்? அவரு ஆண்டவனுக்கு நெறய்ய சேவ பண்ணதால நாயன்மாராக்கிட்டாங்க.”

நான் “அது தெரியாதே. ஆனா ஒன்னு கேள்விப்பட்டேன்.” இப்படி சொல்லி விட்டு ரெண்டு பக்கமும் திரும்பி திரும்பி பாத்தேன். அவரும் நானும் தான் டாக்ஸியில். இருந்தாலும் வேறு யார் காதிலும் விழுந்திடக்கூடாது என்பது போல மீண்டும் அக்கம் பக்கம் பார்த்து விட்டு ரகசியம் சொல்வது போல “ ’ஆண்டவனே ஒரு அயோக்கியன்’னு ஒர்த்தர் சொன்னாரு. அவன் நல்லவனா இருந்தா நம்ம மாதிரி ஏழைங்களுக்கு ஏன் கஷ்டம் குடுக்கறான்’ன்னு அவரு ஏங்கிட்ட கோவப்பட்டாரு”

டிரைவர் தாம்பரம் முருகன் கான்வர்சேஷன் களை கட்டுதுன்னு உற்சாகமாயிட்டாரு.

கால் டாக்ஸி சாரதி அருளிய கீதை
“சார். ஆண்டவன கெட்டவன்னு யார் சொன்னாலும் நம்பவே நம்பாத சார். அவன் பல கணக்கு வச்சிருக்கான். அவன் இந்த பொறவியில கொடுக்கற கஷ்டமெல்லாம் போன பொறவி கணக்க செட்டில் பண்றதுக்காக சார். இது தெரியாம அயோக்கிய பசங்க ஆண்டவன கெட்டவன்னு சொல்வானுங்க சார். அத நீ நம்பாத. ஒனக்கு நான் ஒரு கத சொல்றேன் கேளு.
ஒரு வாலிபப்பய சார். அவனுக்கு வேலயும் கெடக்கல. பொண்ணும் கிடக்கல. எளவட்டப்பயலுக்கு கண்ணாலமும் இல்ல. வேலயும் இல்லன்னா அது பெரிய நரகம் சார். இன்னாடா இது பேஜாரா கீதுன்னு சாமியாரா ஆயிட்டான். தவம் செய்ய காட்டுக்கு கெளம்புனான் சார். சார், கெவினிக்கிறியா?”ன்னு என்னை திரும்பி பார்த்து விட்டு தொடர்ந்தார். “ தண்ணி தாகம். ஒரு வீட்டில நொழஞ்சான். அங்க ஒரு ஆள் கட்டில்ல தூங்கினு இருந்தான். அவன் பொண்டாட்டி வந்தா. தண்ணி கேட்டான். அவ ஒரு பெரிய சொம்புல கொண்ணாந்து கொடுத்தா. இவன் மடக்கு மடக்குன்னு குடிச்சான். அவ இவன ஒரு மாதிரி வெறிச்சி பாத்து “எங்கூட படுக்க வர்றியா”ன்னு கேட்டா. சார் அப்படி இருக்காளுங்க சார். இன்னாடான்னு ஒனக்கு அதிசயமா தெரியுதில்ல. அவ புருஷன் பலஹீனமான ஆளு சார். நா சொல்றது பிரியுதா? இந்த சாமியார்ப்பய “இன்னாம்மே. ஒன் புருஷன் இருக்கான். இப்படி என்ன கேக்கிற.நான் சாமியாரும்மா.’ன்னான். இவ உடனே ஒரு அருவாள எடுத்து புருஷன் தலைய வெட்டிட்டா சார். கத பயங்கரமா இருக்குல்ல. இன்னும் கேளு. அவ சாமியார பாத்து “இப்ப வா”ன்னு சொன்னா சார். இவன் மிரண்டு போய் ஓட ஆரமிச்சான். அவ ஒடனே “காப்பாத்துங்க, காப்பாத்துங்க”ன்னு சவுண்ட குடுத்துருக்கா. ஊரே திரண்டு சாமியார பிடிச்சிட்டாங்க. அந்த பொம்பள என்ன சொன்னா “ தண்ணி கேட்டான். குடுத்தேன். என் புருஷன ஒடனே கழுத்த சீவுனான். என்னய படுக்க வான்னு கைய பிடிச்சி இழுத்துட்டான்”ன்னு அபாண்டமா சொல்லிட்டா சார்.
இவனுக்கு தண்டன கொடுத்தாங்க. வலது கைய வெட்டிட்டாங்க. இவன் அப்புறம் காட்டுக்கு போயி ஒத்தக்கையோட தவம் பண்ணினான். அங்க வந்த ஆண்டவன்ட்ட ”இது இன்னா நியாயம். நான் ஒரு பாவமும் அறியாதவன்”னு சொன்னப்ப ஆண்டவன் சொல்லியிருக்கான். “இது போன ஜன்மத்து பலன்”ன்னு சொல்லி வெவரமா வெளக்கியிருக்கான். “ போன ஜன்மத்துல நீ ஒரு சாமியாரா தவம் பண்ணிக்கிட்டிருந்த. ஒர்த்தன் ஒரு பசுவ பலி குடுக்க இஸ்துக்கின்னு வந்தான். அந்த பசு நேக்கா புரிஞ்சிக்கிட்டு அத்துக்கிட்டு ஓட ஆரம்பிச்சிருச்சி. இவன் அத தேடி வந்தப்ப சாமியாரா இருந்த ஒன்கிட்ட “ஒரு பசு ஓடி வந்துச்சே. பாத்தியா”ன்னு கேட்டான். நீ கைய தூக்கி “இந்த பக்கமா தான் ஓடுச்சி”ன்னு சொல்லிருக்க. அந்த பசுவ பிடிச்சி அவன் பொலி போட்டுட்டான்.’ ஆண்டவன் சொல்லியிருக்கான். டேய் சாமி, அந்த பசு தான் ஒனக்கு தண்ணி கொடுத்து வில்லங்கத்துல இந்த பொறவியில மாட்டி விட்ட பொம்பள. அவள பலி கொடுத்தவன் தான் இந்த பொறப்புல கட்டில்ல படுத்துருந்த புருஷன்.பசு இப்படி போச்சுன்னு காட்டிக்குடுத்த அந்த வலதுகை இந்தப் பொறவியில ஒனக்கு போச்சு.”ன்னு.

இப்ப சொல்லு சார்.ஆண்டவன் காரண காரியத்த புரிஞ்சிக்க. “

நான் “ஆ..ஐயோ.. திருந்திட்டேன்.”
Vengence is God’s, Not ours?
Call it fate, Call it Karma..?
…………………………..








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.