Share

Mar 25, 2018

கபாலி என்ற ஒரு ’மகேசன்’ தீர்ப்பு

டெலிபதி.. பேங்களூரிலிருக்கும் நெருங்கிய நண்பன் எம்.சரவணன் பற்றி காலையில் எழுந்ததிலிருந்து நினைத்துக்கொண்டிருக்கிறேன். 

சரவணனிடம் இருந்து
போன்.
’சென்னை வந்திருக்கிறேன். எக்மோர் ஃபோர்டெல் ஓட்டலில் தங்கியிருக்கிறேன்.’
சரவணன் பற்றி ஒரு தனி பதிவு எழுத வேண்டும்.
ஃபோர்டெல் ஓட்டலில் எட்டாவது மாடியில். கண்ணாடி ஜன்னல் வழியே ஆல்பட் தியேட்டர் தெரிகிறது. ’நாடோடி மன்னன்’ எம்.ஜி.ஆர் படம்.
சரவணனுடன் மதியம் அங்கே உள்ள ரெஸ்ட்ரண்ட்டில் மதியம் புல்கா, மட்டன் க்ரேவி, காஃபி.
பாருங்க...Restaurant. உச்சரிப்பு ரெஸ்ட்ரண்ட் தான். ரெஸ்’டா’ரண்ட் தவறு. Spoken English teacher ஆக இருந்த போது குழந்தைகளிடம் இதை நன்கு வலியுறுத்தி சொல்லியிருக்கிறேன்.
இருட்டிய பின் டாக்ஸியில் சரவணன் வழியனுப்பி வைத்த பின் டிரைவர் அரசியல் பேசும்படி திரிய கொளுத்தி போட்டேன்.
கவனமாக அவருடைய அரசியல் அபிப்ராயங்களை கேட்டேன்.
டிரைவர் பெயர் கபாலி. அந்த காலத்தில் பிறந்த குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்றால் பெயரை உடனே,உடனே கபாலி என்று மாற்றி வைத்து மயிலாப்பூர், மந்தவெளி ஏரியாவில் உள்ள ஏழைகள் கபாலீஸ்வரரை “காப்பாத்து, கொழந்தய காப்பாத்து” என்று வேண்டுதல் செய்வார்கள். பொழச்ச கொழந்த அதற்கு பின் ஆயுசுக்கும் கபாலி தான்.

டாக்ஸிக்கு பேங்க் லோன். இந்த லோன் கட்டி முடிச்சதும் வீடு கட்ட லோன் வாங்கப் பாக்கணும்.
டிரைவர் கபாலி குடும்பமே ரஜினி ரசிகர்கள்.
’கமலுக்கு அய்யர்ங்க ஓட்டு தான் கெடைக்கும்...’
நான் ’கமல் கடவுளே இல்லங்கறாரெ. பிராமின் ஓட்டு கூட கெடைக்குமா? ப்ராமின் ஓட்ட வச்சு தமிழ் நாட்டில குப்ப கொட்ட முடியுமா? ’
டிரைவர் கபாலி டாக்ஸியில் வெங்கடாஜலபதி, முருகன், சிர்டி பாபாவெல்லாம் இருந்தார்கள்.
கபாலி ‘ கமல் சொல்றத விடுங்க.. எனக்கு இப்ப ரஜினி புரியல சார். இப்ப டிவியில பேச்ச கேட்டேன். அவரு மேல வருத்தமாயிருச்சி...என்னமோ ஒரு வார்த்த விட்டாரு...ஞானமா...எனக்கு அந்த வார்த்த வாயில வரமாட்டேங்குது... ஞானமா? என்ன வார்த்த...இந்த மாதிரி..’
நான் எடுத்து கொடுத்தேன்.” ஆன்மீக அரசியல்”
கபாலி “ ஆங்...அது தான்....எனக்கு பிடிக்கல...இன்னாது அது. இவரு பி.ஜே.பி சொல்ற மாதிரில்ல ஏதோ சொல்றாரு... இது நியாயமே இல்ல. பி.ஜே.பி மாதிரி இன்னொரு கட்சிங்கறாரா?...”
”தமிழ் நாட்டில தான் சார் முஸ்லீம்களோட, கிரிஸ்டீன்களோட நல்லது கெட்டதுல்லலாம் நாம கலந்துக்கிறோம். சொந்தக்காரங்க மாதிரி அவங்க இருக்காங்க... பி.ஜே.பி அதுல கொழப்பம் பண்ண பாக்கிறாங்க.. ரஜினியும் அவங்களுக்கு டப்பிங் பேசறாரேன்னு கோபம் வருது சார்.. ரஜினி படம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அவர் அரசியல் பேசறது கொஞ்சமும் இஷ்டப்படல எனக்கு..”
நான் “அதிமுக அரசியல்ல உங்களுக்கு யார பிடிக்கும்”
”எடப்பாடி- பன்னீர பிடிக்கல சார். தினகரன் சுயேச்சையா நின்னு ஜெயிச்சாரே சார். பன்னீர் குரூப் எடப்பாடிய எதித்து ஓட்டு போடலியா...அது சபாநாயகர் கண்ணுக்கு தெரியல... தினகரனோட பதினெட்டு எம்.எல்.ஏ மேல கை வக்கிறாரு... இன்னா அரசியல் சார்.. இவனுங்களுக்கு தினகரன் மேல் சார்.. தினகரன் பணம் கொடுத்தாரு சரி.. எடப்பாடி கொடுக்கலன்னு சத்தியம் பண்ண முடியுமா? ”
நான் ”ஏங்க... மன்னார்குடி கும்பல ஒதுக்குனது எடப்பாடி சாதன தானே?”
டிரைவர் கபாலி “ ஒரு லட்சம் கோடியா சசிகலா, தெனகரன் ட்ட இருக்கு. அம்புட்டு பணத்த என்ன பண்ண மிடியும்”
நான் “ முன்னூறு பங்கா பிரிச்சிப்பாங்க. கருணாநிதி குடும்பங்கள் முப்பதுன்னா மன்னார்குடி குடும்பங்க, சொந்த பந்தங்க முன்னூறு தலைக்கட்டு.”
எடிரைவர் கபாலி : ஆங்.. சரி எப்படியோ ஓட்டுக்கு எத்தன தொகுதின்னாலும் பணம் கொடுக்கற வசதி.....
நான் “ சரி! எலக்‌ஷன் வந்தா யாருக்கு ஓட்டு போடுவீங்க..? உங்க பேரெ கபாலி.”
“ என் ஃபேமிலியே ரஜினி ஃபேன்ஸ் சார்... அவரு பேச்சி புடிக்கல...அரசியல் அவருக்கு எதுக்கு சார்.. கலைங்கர் கட்சிக்கு போட்டா போடுவோம். ஸ்டாலின் பாவம். வரட்டுமே..நான் சொன்னா என் ஃபேமிலி சரின்னு சொல்வாங்க... இது வர ரெட்ட எலக்கு தான் போட்டோம்.. எடப்பாடி பன்னீர் கிட்ட ரெட்ட எல இருக்குன்னா எப்படி போடுறது. கலைங்கர் இல்லாட்டி தினகரனுக்கு தான் ஓட்டு. இப்ப சொல்ல மிடில.. பணம் கையில கிடைக்கும்போது அப்ப மனசு எப்டி மாறுமோ?”
........................................
புகைப்படம்
எம்.சரவணனும் நானும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.