Share

Jul 28, 2018

எம்.ஜி.ஆர் காலமான தினம்



இறந்தவர்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி கவனம் கிடைப்பதில்லை.
எம்.ஜி.ஆர் காலமான தினம் வேறு யார் இறந்திருந்தாலும் அவருடைய இறுதிக் கடன்களைச் செலுத்த வேண்டியவர்கள் திண்டாடிப்போயிருப்பார்கள். பாடை கட்டுவதற்குப் பச்சை மூங்கிலை யாரும் முன் கூட்டியே வாங்கிச் சேமித்து வைத்திருக்க மாட்டார்கள். பச்சை மூங்கில், பச்சை தென்னை மட்டை இரண்டுமே துக்கச்சின்னங்கள். எம்.ஜி.ஆர் இறந்த தினம் இந்தத் துக்கச்சின்னங்களை வாங்கி வருவதற்குக் கடை கிடையாது.
தென்னை மட்டை சம்பாதித்து விடலாம். ஆனால், பச்சை மூங்கில்? அதே போலச் சட்டி, பானை, பிரிக்கயிறு முதலியன ஈமச்சடங்குக்காகவென்றே வாங்க வேண்டும். அது இப்போது முடியாது. ஒரு கடை திறந்திருக்கவில்லை. சுடுகாட்டிலும் பணியாளர்கள் இல்லை. இறந்தவர்கள் உடலை மருத்துவ மனையிலிருந்து எடுத்து வரத் தேவைப்பட்டால் ஒரு வண்டி கிடைக்காது.
யாரிடம் எதற்கு அனுமதி?
“என் அப்பா செத்துட்டாரு. கொஞ்சம் வழி விடுங்க.”
”எங்க தலைவரே போயிட்டாரு. இந்தப் பக்கம் வராதே. தலைவர் ஊர்வலம் வரப்போவுது.”
”அதுக்குள்ளே எடுத்துப் போயிடறோம்.”
“எல்லாம் தலைவர் ஊர்கோலத்துக்கப்புறம் தான். தள்ளு. தள்ளு. எட்டி நில்லு.”
அப்பா பிணவறையில் இருந்து எழுந்து நடந்து போனார்.

- அசோகமித்திரன் “ யுத்தங்களுக்கிடையில்..” நாவலில்



..........................

Jul 27, 2018

ஊரிலேன், காணியில்லை, உறவு மற்றொருவர் இல்லை

எனக்கு பெற்றவர்கள் வைத்த பெயர் ரொம்ப நீளமானது. அதைத் தான் சுருக்கி பிரமிள் மாற்றி வைத்தார்.
என்னுடைய பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் இருந்த ரொம்ப நீளமான பெயருக்கான நியூமராலஜி குறிப்பு இப்போது நினைத்துப்பார்த்தால் என் வாழ்வின் வடிவத்தை குறியீடாகச்சொல்வது போலத்தான் இருக்கிறது.
‘அற்புதம் நிறைந்தது.
எல்லாவிதமான பந்தங்களில் இருந்தும் விடுவிக்கக்கூடியது. பூட்டுக்களும் திறந்துகொள்ளும். பூட்டப்பட்ட விலங்குகளும் தெறித்துப்போய் விடும். மாயம் போல் செல்வச்சிறப்பு மறைந்து போய்விடும்.’

மதம், ஜாதி, உறவு எல்லாவற்றையும் என் வாழ்வு உதறியிருக்கிறது. ரத்த உறவுகளையும் மனைவி வழியில் வாய்த்த கிளை உறவுகளையும் என்னை நெருங்கவே முடியாதவாறு தூக்கி எறிந்து விட்டேன்.
முப்பது வருடங்களுக்கு மேலாக எவ்வளவோ திருமணங்கள், கிரஹப்ரவேசம், கடை திறப்பு விழா..பிறந்த நாள் விழா.. இன்னும் என்னன்ன உண்டோ நான் செய்திருக்கிற மொய் கொஞ்சநஞ்சமல்ல. 1980களிலேயே 100 ரூபாய்க்கு குறைந்து எந்த மங்கல நிகழ்ச்சியிலும் செய்ததேயில்லை. நெருங்கிய உறவுகள் பலவற்றின் திருமண நிகழ்வுகளுக்கு அப்போதே 300 ரூபாய் என்று மொய் வைத்து ஏனோ பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறேன். தெரிந்தவர், தெரியாதவர் யாராயிருந்தாலும் பத்திரிக்கை வைத்தால் பெருமொய் தான்.
என் மகன்கள் இருவர் திருமணத்திற்கு உறவினர்கள் யாருக்கும் அழைப்பிதழ் கிடையாது. 


என் சார்பாக நண்பர்கள், இலக்கிய நண்பர்கள், வலைத்தள நண்பர்கள், வாசக அன்பர்கள் என்று யாருக்கும் அழைப்பு கிடையாது.
இது அபூர்வம். யோசித்துப் பார்க்கையில் என் சொந்த பந்தத்தில் இப்படி நடந்ததே இல்லை.
எளிமையாக திருமணம் நடக்க வேண்டும் என்பதில் ஒரு வைராக்கியம் எனக்கு ஏற்பட்டு விட்டது.
திருமணம் என்று பத்திரிக்கை வைத்தாலே அதை எதிர்கொள்வதில் எல்லோருக்கும் எந்திரத்தனம் வந்து விட்டது.
’ஒரே நாளில் மூன்று பத்திரிக்கை வந்து விட்டதே. தொர வேற மகனுங்களுக்கு கல்யாணம்னு பத்திரிக்கை வச்சிட்டான்’ என்று ஒரு ஆயாசம் தான் நிச்சயம்.
யார் மீதும் கோபம் இல்லை. வருத்தம் இல்லை. உறவுகளோ நண்பர்களோ யார் மீதும் வருத்தம் இல்லை. யாருக்கும் சிரமம் கொடுக்க விரும்பவில்லை. அதனால் யாரையும் அழைக்கவில்லை.
மகன்களின் மணப்பெண்கள் குடும்பங்கள் திருமணத்தில் முழுமையாக பங்கேற்றாலும் என் வழியில் யாருக்கும் அழைப்பு இல்லை என்பதை சம்பந்தி குடும்பங்களுக்கு தெளிவு படுத்தி விட்டேன்.
ஜூலை 1ம் தேதி இளைய மகன் திருமணம் சுந்தர பாண்டிய புரத்தில் நடந்து முடிந்து விட்டது. இதோ ஜூலை 29ம் தேதி விழுப்புரத்தில் மூத்த மகன் திருமணம்.
இரு மகன்களும் காதல் திருமணம் தான்.



Sons and Daughters in law. The leading characters of our own lives.


Jul 24, 2018

பவ்யம் பாவ்லா


நல்ல வசதியான நண்பர். அவருடைய மகன் படிப்பில் அவ்வளவு சுட்டியாய் இல்லை என்பதை விட படிப்புக்கு அவன் தயாராயில்லை என்பது தான் உண்மை. 
நான் அந்த நண்பரிடமும் அவர் மனைவியிடமும் சொல்வேன். ’பையன சேட்ட பண்ணா கண்டிக்கலாம் தப்பில்ல... ஆனா படிக்கலன்னு மட்டும் திட்டாதீங்க..கண்டிக்காதீங்க. பாவம்.. அது Gene. ஒங்க பரம்பரைக்கு அப்படி ஒரு கொற.”
”ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் கல்வியறிவில்லையே!” என்று அங்கலாய்ப்பாக கிண்டல் செய்வேன்.
ஒரு நாள் அவர் வீட்டிற்குள் நுழையும் போது மகனுக்கு வாத்தியார் ஒருவர் ட்யூசன் சொல்லிக்கொண்டிருந்தார்.
பையன் அவரிடம் பவ்யமாக “ நல்லா புரியுது சார்!” என்று சொல்லி விட்டு என்னைப்பார்த்து
“ கண்டுக்காதீங்க அங்க்கிள். எல்லாம் சும்மா ஒரு டாவு தான். எல்லாம் தோடு ...பாவ்லா...” என்கிற அர்த்தத்தில் தலையை திருப்பி ஒரு கண் அடித்தான். Winking!

Jul 18, 2018

”பழைய கணக்கு”


தி.மு.கவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காமராஜர் சொன்னார். 
அ.தி.மு.க திண்டுக்கல் இடைத்தேர்தல் அமோக வெற்றிக்கு பின் காமராஜர் வெறுத்துப்போய் 
“ போங்க.. நாட்ட கூத்தாடி கிட்ட கொடுங்க...அவன் கூத்தியா கிட்ட கொடுத்துட்டு போவான்” என்று சொன்னது தீர்க்கதரிசனம்.


Jul 17, 2018

உனக்கு ஏன் கவலை? நான் வந்து விட்டேன்!



இல்லையே இல்லையே என்று ஏங்கிக்கொண்டே இருப்பதற்காகவா ஜன்மம் எடுத்தோம்?

சாருதத்தன் தூக்கு மேடைக்குப் போகும்பொழுது, ‘வறுமையே, நான் செத்துப்போவதைப் பற்றிச் சற்றுக்கூட வருந்தவில்லை. உன்னை நினைத்தால் தான் எனக்குத் துன்பம் உண்டாகிறது. ஐயோ, நான் போய் விட்டால் உனக்கு நெருங்கிய நண்பன் வேறு யார் இந்த உலகத்தில் கிடைக்கப்போகிறான்?’என்று. தரித்திரத்தை அனாதையாக விட்டு விட்டுப் போவதை நினைத்துப் புலம்பினான்.
“ சாருதத்தா, உனக்கு ஏன் கவலை? நான் வந்து விட்டேன். நீ போய் விட்டால் சிநேகத்திற்கே பஞ்சம் வந்து விடுமென்று நினைந்து விட்டாயே.”
- தி.ஜானகிராமன்
‘ நானும் எம்டனும்’ சிறுகதையில்


He is poor, and that's revenge enough.
- Shakespeare
in Timon of Athens

'Famine is in thy cheeks,
Need and oppression starveth in thine eyes,
Contempt and beggary hang upon thy back;
The world is not thy friend nor the world’s law:
The world affords no law to make thee rich;
- Shakespeare in Romeo and Juliet

Jul 14, 2018

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்




’வானத்தில் திரியும் பறவைகளைப் பற்றி மட்டும் பாடாதீர்கள். மலத்தில் நெளியும் புழுக்களையும் பாடுங்கள்.’
உச்சி வெய்யில் நண்பகல் பதினொன்றரை மணி நேரம். ஆலப்பாக்கத்தில் ஒரு காலனியின் நுழைவு பகுதிக்கு முன்னே தேங்கி நிற்கிற சிறு அளவு மழை நீர் குட்டை. ரோட்டில் அதை ஒட்டி ஒரு தள்ளு வண்டி டிபன் ஸ்டால். இந்த பக்கம் ஒரு பேங்க். பஸ் ஸ்ட கரும்பு ஜூஸ் கடை. எதிரே ஒரு ஃபாஸ்ட் ஃபுட் உணவகம். படு பிசியான ரோடு.எதிரே ஃபர்னிச்சர் கடை. டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர் ரெண்டு.பல வகை வாகனங்கள் நகர்வில். நடப்பவர்கள், நிற்பவர்கள் என ஜீவனுள்ள பகுதி ஆலப்பாக்கம் மெயின் ரோடு.
’குளத்தோடு கோவித்துக்கொண்டு குண்டி கழுவாமல் ஒருவன் போனானாம்’ என்று ஒரு சொலவடை. ஒருவன் குண்டி கழுவ குளத்தில் இறங்கும் போது கால் வழுக்கி அடி பட்டு விடுகிறது. பதறி எழுந்து விரைத்துக்கொண்டு குளத்தை முறைத்துப் பார்த்து விட்டு ச்சீ போ என்று தலையை ஒரு பக்கமாக திருப்பி, உதட்டை பிதுக்கிக்கொண்டு விறு விறு என்று நடக்க ஆரம்பிக்கிறான். நடக்கும் போதே குளத்தைப் பார்த்து திரும்பி மீண்டும் மீண்டும் உதட்டை பிதுக்கி, ச்சீ போ என்று தலையை ஒரு பக்கமாக கோபமாக திருப்பி...இப்படியே ரோஷத்தோடு போய் விடுகிறான்.
கட்.
மீண்டும் ஆலப்பாக்கம் மெயின் ரோடு.
ஒரு பெரிய மனுஷன் வேட்டிய கழற்றி தரையில் வைத்து விட்டு, ’யார் கோபப்பட்டாலும் எனக்கென்ன? நான் கவலைப்படவே மாட்டேன், மயிரே போச்சி’ன்ற தோரணையில டவுசரை கழற்றிய படி புடுக்கு தெரிய, பீக்குண்டி தெரிய மழை நீர் குட்டையில் குண்டி கழுவிக்கொண்டிருக்கும் போது.....
எனக்கு வளசரவாக்கம் மினி பஸ் வந்து விட்டது.
..............................

Jul 9, 2018

மந்திரவாதி ? ரத்தங்கக்குறது ? யாரு? யாரு?


இதுனால தான் ஜெ.தீபா கூடாரம் காலியா?
ஆகாககாக! இந்த கோணத்தில நினச்சி பாக்கவேல்லியே!
ச்சீ பச்சைத் துரோகம்.............
ஜெ.தீபாவோட தொண்டர்களயெல்லாம்
ஓ.பி.எஸ் கடத்தி ஆளுங்கட்சியில சேத்துட்டாராமே...
நீஜிம்மாவா?
இப்படி ஒரு சண்ட!
இதுல மந்திரவாதி யாரு? ரத்தங்கக்குறது யாரு?............

........................

ப. சிதம்பரம் வீட்டுல திருட்டுன்னாங்க.....
அப்புறம் கம்ப்ளெய்ன்ட் வாபஸ்!
இன்னா நடக்குது?
யாரு மந்திரவாதி? 
ரத்தங்கக்குறது................?
.....................................

Jul 7, 2018

LADIES NOT ALLOWED


ஜெமினி கணேசன் தாத்தா நாராயணசாமி ஐயர் புதுக்கோட்டை மஹாராஜா கல்லூரி பிரின்சிபாலாயிருந்தாராம்.. இவர் ஒரு இசை வேளாளர் இன பெண்ணை அபிமான தாரமாக மணந்திருக்கிறார். அவருக்கு பிறந்தவர்கள் பின்னால் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என அறியப்பட்டவரும், ஜெமினி கணேசனின் தந்தை ராமசாமியும். ராமசாமியும் ஒரு இசை வேளாளர் இனப்பெண்ணைத் தான் மணந்திருக்கிறார். அவரை தான் கங்கா பாட்டி என்று ஜெமினி மகள் கமலா செல்வராஜ் சொல்கிறார்.
ஜெமினி சுத்த பிராமணர் அல்ல. ஆனால் ஜெமினியின் மகள் இவரை பிராமணர் என்றே சித்தரிக்கிறார். ஜெமினி பெருமளவுக்கு ’முக்கா படி அரை வீசம்’ இசை வேளாளர் இனம் தான்.
ஜெமினியின் தாயார் முண்டனம் செய்த பிராமண விதவைக்கோலத்தில் தான் தன் வாழ்நாளில் இருந்தார். ஒரு விஷயம். இசை வேளாள இனம் பிராமண ஜாதியுடன் கலந்து விட்டால் அப்படிப்பட்டவர்கள் பிராமண கோலம் கொள்வதையே விரும்புவர் என்பதற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மடிசார் புடவையே சாட்சி.
” என்னோட அம்மா ஒரு கம்மனாட்டி. கம்மனாட்டி வளத்த பிள்ளை நான்” என்று என்னிடம் ஜெமினி சொன்னார். (தன் தாய் இளமையிலேயே விதவையானவர் என்பதை ’கம்மனாட்டி’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி சொன்னார்.)
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தன் அத்தை என்பதை ஜெமினி மறைத்ததில்லை. ஆனால் எப்படியோ ஜெமினிக்கு பிராமணர் என்ற பிம்பம் சாசுவதமாயிருந்திருக்கிறது.
ஜெமினியின் முதல் மனைவி பாப்ஜி பிராமணப்பெண் என்று சொல்லப்படுகிறது.
ஜெமினியின் பேச்சே பிராமண பாஷை தானே.
பி.யூ.சின்னப்பா புதுக்கோட்டைக்காரர்.
புதுக்கோட்டைக்காரர் ஜெமினி என்னும்போது மற்றொரு திரைப்பட நடிகர் ஏ.வி.எம்.ராஜனும் புதுக்கோட்டைக்காரர் தான். ஜெமினிக்கு தம்பி போல இருப்பார். இவர் அம்மா இசை வேளாளர், அப்பா முக்குலத்தோர் என சொல்லி கேள்வி.
ஜெமினியின் திரையுலக அந்தஸ்து பற்றி நான் தெளிவாக ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
தமிழ் திரையுலக மூவேந்தர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்ற மூன்று கூர்முனை என்பது ஐம்பதுகளில். அதில் ஜெமினி என்ற கூர் முனை 1960களில் மெல்ல மழுங்கிப்போனதை யாரும் மறக்கக்கூடாது. ஜெமினியின் இயல்பும் இதற்கு ஒரு காரணம். சிவாஜியோடு இரண்டாவது கதாநாயகனாக நடித்ததோடு நிற்கவில்லை. எம்.ஜி.ஆர் இதற்கே “ ஜெமினி தனித்துவத்தை விட்டுத்தருகிறாரே” என்று வருத்தப்பட்டார்.
தன் திரையுலக அந்தஸ்திற்கு குறைவான நடிகர்கள் ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.ஏம்.ராஜன், ரவிச்சந்திரனோடும் இணைந்து ஜெமினி பல படங்கள் நடித்தார். எஸ்.எஸ்.ஆரோடு வைராக்கியம், குலவிளக்கு ஆகிய படங்கள்.
திரையுலக மூவேந்தர் என்ற அமைப்பு மாறி திரையுலகின் இரண்டு திலகங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி உச்ச அந்தஸ்து பெற்று விட்டனர்.
ஜெமினி சின்ன பட்ஜெட் நடிகராகி விட்டார்.
சின்ன பட்ஜெட் நடிகரானது Blessing in disguise. கே.பாலச்சந்தரின் தரமான படங்கள் அவருக்கு கிடைத்தன.
சாவித்திரியோடு அவர் வாழ்ந்த காலங்கள். சாவித்திரி கொடி கட்டிய காலங்களில் ஜெமினிக்கு மார்க்கெட் தமிழ் திரையுலகம் மட்டும் தான். ஆனால் சாவித்திரிக்கு பிரமாண்டமான தெலுங்கு திரையுலகிலும் மார்க்கெட். ஆந்திர மண்ணின் மகள்.
தெலுங்கில், தமிழில் அவர் மொத்த சம்பாத்தியம், ஜெமினியின் சம்பாத்தியத்தை விட நிச்சயம் அதிகம் தான் என்பதை மறந்து விடக்கூடாது. சாவித்திரி பிஸியாக இருந்த காலங்களில் அவர் அந்தஸ்து ஜெமினியை விட கூடுதல் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஜெமினி நடித்த இந்திபடங்கள் கூட வெற்றி பெற்றன என்பது வேறு விஷயம். ஆனால் ஒன்று. சாவித்திரி தெலுங்கு, தமிழில் கதாநாயகி அந்தஸ்து இழந்த பின்னும் தமிழ் திரையில் பல வருடங்கள் ஜெமினி கணேசன் கதாநாயகன் அந்தஸ்தில் இருந்தார்.
1953ல் ஜெமினி ’மனம் போல் மாங்கல்யம்’ படத்தில் தொடங்கி 1974ல் ’நான் அவனில்லை’ படத்தோடு அவர் மார்க்கெட் முடிவுக்கு வந்தது.
”உண்மைக்கின்னே ‘புன்னகை’ (1971)ன்னு ஒரு படம் நடிச்சேனே..அதையும் ரசிக்க மாட்டேன்னுட்டானுங்க.. பொய்க்குன்னே ஒரு படம் ‘ நான் அவனில்லை’ …அதையும் ரசிக்க மாட்டேன்னுட்டானுங்க..” என்று ஜெமினி வேதனையோடு சொன்னார்.
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் 1974ல் உரிமைக்குரல், தங்கப்பதக்கம் என சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தார்கள்.
1953 துவங்கி 1974 வரை ஜெமினி 21 வருடங்கள் மார்க்கெட்டில் இருந்ததாகக் கொள்ளலாம்.
பின்னரும் ஜெமினி எத்தனையோ படங்களில் இருந்தார் என்றாலும் அவை ஜெமினி கணேசன் படம் என்றெல்லாம் சொல்லலாகாது.
மார்க்கெட் போனதை ஜெமினியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முழு மேக்கப், தலையில் விக் வைத்துக்கொண்டு ஸ்டுடியோக்களில் காரில் வலம் வருவார். பார்ப்பதற்கு ஜெமினி இன்னும் மார்க்கெட்டில் இருப்பதாக தெரிய வேண்டும்!
மார்க்கெட். தினத்தந்தியில் ஒரு செய்தி அந்தக்காலத்தில்.
”சௌகார் ஜானகியின் மார்கட்டு சரிந்தது!”
மார் கட்டு.
நடிகையர் திலகம் படம் பார்க்கிற விசேஷ ஆர்வம் எனக்கு இல்லை. சாவித்திரியம்மாவைப் பற்றி ராஜநாயஹம் புதிதாக தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?
BioPic எப்போதும் ஒரு ஆளுமை பற்றி கூடுதல் புகழ்ச்சி இருக்கும். படத்தை மஹாநதி என்று தெலுங்கர்கள் எடுத்திருக்கிறார்கள். மண்ணின் மகளை உயர்த்திப்பிடிக்கவே செய்வார்கள். பொதுப்புத்தி காவிய நாயகியாக உயர்த்தும்போது கணவன் வில்லனாக மாறுவது என்ன அதிசயமா?
சாவித்திரியின் தெலுங்கு திரைச் சாதனைகள் இங்கே உள்ளவர்களுக்கு எப்படி முழுமையாக அறிய முடியும்.
ஜெமினி கணேசனை மட்டம் தட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. ஜெமினி பேச்சை சாவித்திரி கேட்டிருந்தால் பொருளாதார வீழ்ச்சியை தடுத்திருக்க முடியும்.
சாவித்திரியின் Bio pic கமலா செல்வராஜ் சகோதரிகள், சாவித்திரி மகள் விஜய சாமுண்டீஸ்வரி, மகன் சதீஷ் ஆகிய இரண்டு குடும்பங்களுக்கிடையில் பெரும் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.
புஸ்பவல்லி, மகள்கள் ரேகா, ராதா நல்லவர்கள். ஆனால் சாவித்திரி மகள்? என்று பொங்குகிறார் கமலா.
சாவித்திரி Possessive lady. புஸ்பவல்லியும் அப்படித்தான் என்று ஜெமினியே சொல்லியிருக்கிறார். புஸ்பவல்லியுடன் வாழ்ந்த காலத்தில் கூட பாப்ஜியின் வீட்டை மறந்து தான் இருந்ததாக ஜெமினி குமுதம் பேட்டியொன்றில் பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்.
சமந்தா ‘என் முதல் காதலன் ஜெமினி மாதிரி தான். நல்லவேளை அவனை நான் கட்டியிருந்தால் எனக்கு சாவித்திரி நிலை தான்’ என்று ஆசுவாசப்படுகிறாள்.
சாவித்திரிக்கு ஜெயசித்ரா கேள்வி ‘ நீங்க ஏம்மா ஜெமினிய கட்டினீங்க. வேற யாரயாவது கட்டியிருக்கலாமே’
கமல் அந்தக்காலத்தில் சொல்வார் “ ஜெமினி மாமாவை யாராலும் அவமானப்படுத்தவே முடியாது. உங்களப் பத்தி இப்படி இந்த ஆள் பேசறான்னு அவர் கிட்ட சொன்னா ‘போறாண்டா. சொல்லிட்டுப்போறான்…’ என்பார்”
இப்போது அவர் உயிருடன் இருந்து இந்த ’நடிகையர் திலகம்’ பார்த்திருந்தால் “சாவித்திரிய நன்னாத்தான்டா காண்பிச்சிருக்கான்….” அது போதுமே என்று திருப்திப்பட்டிருப்பாரோ.
விஜய சாமுண்டீஸ்வரி சாவித்திரியோடு பகை பாராட்டியதால் தான் அண்ணா நகரில் தனியாக வசித்திருக்கிறார். ஜெமினி கணேசன் மீது சாவித்திரி மகள் கேஸ் போட்டதுண்டு. ஜெமினியை கடுமையாக தாக்கி பேட்டி கொடுத்ததுண்டு.
கமலா செல்வராஜ் தன் தாயை விட சாவித்திரியம்மாவை பிடிக்கும் என்று கூட பேட்டியில் சொன்னதுண்டு. ஆனால் சாவித்திரி படம் அவர் மீது மிகுந்த துவேசத்தை ஏற்படுத்தி விட்டது. “She is very bad. கல்யாணத்திற்கு பிறகும் சாவித்திரிக்கு affairs இருந்தது.” என்று கமலா தூற்றும்படியாக இந்த சாவித்திரி படம் மாற்றி விட்டது.

Caesar’s wife is above suspicion.

என்னுடைய சாவித்திரி கட்டுரையில் அவர் affairs பற்றி குறிப்பிட்டதில்லை.
இப்போது நடிகர் ராஜேஷ் “ அப்படி சாவித்திரியோடு affair வைத்திருந்த நடிகர்களை எம்.ஜி.ஆர் மிரட்டியிருக்கிறார் தெரியுமா?’’ என்று பேட்டி கொடுத்திருக்கிறார்!
கத்திரிக்கா முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும்.

அவர் மறைந்து இவ்வளவு காலம் கழித்து அவர் கற்பு விவாதத்துக்குள்ளாகிறது.
ஜெமினி, சாவித்திரி இருவருமே Promiscous persons. Yet both are honourable.

எம்.எஸ் பெருமாள் என்னுடைய ’நடிகையர் திலகம் சாவித்திரி’ கட்டுரை படித்து விட்டு என்னிடம் சொன்ன ஒரு விஷயம்.
’மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’ பாடல் இப்போது கேட்கும் போதாவது ஜெமினி மாமா உங்க கூட இனிமேலாவது சேரமாட்டாரா’ என்று 1970களில் எம்.எஸ்.பெருமாள் கேட்ட போது சாவித்திரி “இப்ப அந்த பாட்ட பார்த்தா அவர் என் கையில உள்ள பெண் குழந்தை இப்ப பெரிய பிள்ளையாயிருப்பாளே, அவள எப்படி கணக்கு பண்ணலாம்னு தான் அவர் புத்தி போகும்” என்றாராம்.
கமலா செல்வராஜுக்கு அவர் அப்பா பற்றி ரொம்ப பிரமையிருக்கிறது. அவர் அழகானவர் என்பதால் எல்லா பெண்களும் அவரை காதலித்தார்களாம். அவரைத் தேடி வந்தார்களாம். அவர் மேல தப்பில்லையாம். எல்லா நடிகைகளுமே அவரை விரும்பினார்கள் என்று பட்டவர்த்தனமாக சொல்கிறார்.
என் பங்குக்கு நானும் சொல்கிறேன்.
”குழந்தையுள்ளம்” (1969) படம் சாவித்திரி இயக்கிய சொந்தப்படம். ஜெமினி கணேசனும் வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த படம். சௌகார் ஜானகியும் உண்டு.எஸ்.பி.பியின் ஆரம்பக்கால பாடல் ”முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு”. சாவித்திரி டாக்டரம்மாவாக வருவார்.
இந்தப்படத்தில் பி.வாசுவின் சித்தப்பா சேகர் கேமராவில் பணி புரிந்திருக்கிறார். அப்பா பீதாம்பரம் மேக் அப்.
சாவித்திரிக்கும் ஜெமினிக்கும் சண்டை பார்த்திருக்கிறீர்களா என்று நான் சேகரிடம் கேட்டேன்.
சேகர் சொன்னார். “ ரெண்டு பேருக்கும் சண்ட என்ன…. ’நீ அவன் கூட படுத்தில்ல..எனக்கு தெரியாதுன்னு நெனச்சிண்டியா?’ன்னு இவரு கேப்பார்..பதிலுக்கு அந்தம்மா ’நீ அவ கூட, இவ கூடல்லாம் படுத்தேல்ல’ன்னு சொல்லும்.

எல்லா கேசனோவோக்களும் பெண்களிடம் செருப்படி வாங்கித்தான் ஆக வேண்டும்.
கமல் மற்றொரு நடிகரிடம் சொன்னதாக ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். என்னுடைய புரிதல் கீழ்கண்டவாறு.
ஜெமினி ஒரு நடிகையை தொடக்கூடாத இடத்தில் தொட்டிருக்கிறார். நடிகை இவரை உடனே மறுதலித்து எதிர்த்து கன்னத்தில் ஒரு அறை கொடுத்திருக்கிறார். கமல்ஹாசன் அப்போது உள்ளே நுழைந்தவர் அதை பார்த்து விட்டார். இந்த மூன்றுமே சில வினாடிகளில். எதுவுமே நடக்காதது போல ஜெமினி சௌஜன்யமாக கமலைப்பார்த்து கேட்டாராம் “ என்னடா பிள்ளையாண்டான்! எப்படிடா இருக்கே..எப்படா வந்தே…”
அவருடைய கடைசி மனைவி(!) ஜூலியானா அவருடைய தள்ளாத வயதில் குடையால் அடித்திருக்கிறாள்.
ஜூலியானா Spendthrift. ஜெமினி சிக்கனக்காரர். ’எவ்வளவு நகை வாங்கியிருக்கா. இப்பவும் உங்க கடையிலும் நகைய அள்ளறா பாருங்க.’ என்று என் மாமா அங்குராஜிடம் வருத்தப்பட்டு சொல்லியிருக்கிறார்.
ஜூலியானாவிடம் இருந்து தன் அப்பாவை மீட்டு கமலா செல்வராஜ் ஜி.ஜி.ஆஸ்பிடலில் வைத்திருந்த போது ஜெமினியின் அறைக்கு வெளியே ஒரு போர்டு.
“ LADIES NOT ALLOWED”

The height of Irony!
இந்த ‘Ladies not allowed’ அறிவிப்பு காதல் மன்னனின் இழிவான வீழ்ச்சியா? சபலம் நிறைந்த தந்தையை பாதுகாக்க வேண்டுமே என்ற அவருடைய மகளின் பரிதவிப்பின் வெளிப்பாடா?
…………………………….









Jul 6, 2018

தூங்கும்போது வரும் கனவு

ஆழ்ந்த தூக்கத்தில் கனவு வருகிறதா? தூக்கம் முடிகிற நேரத்தில் கனவு வருகிறதா? இரவின் பின் பாதியில் கனவா?
Dreams while sleeping
காரணங்கள் என்பதற்கு தேவை எந்தக் கனவிலும் கிடையாது. யதார்த்தத்தை முற்றிலும் மறுதலிக்கும் கனவு.
சென்ற வாரம் புது ஊரில் சரியான தூக்கம் இல்லாத நிலையில் கூட ஒரு சிறு கனவு.
கனவில் வந்த இரவின் இருட்டில் இரண்டு குட்டி நாய்கள். ரொம்ப குட்டியான நாய்கள். ஒரு குட்டி கழுதையைப் பார்த்து குரைக்கின்றன. குட்டி கழுதை கொஞ்ச நேரம் நாய்க்குட்டிகளை பார்த்து விட்டு பதிலுக்கு மழலையாக கத்துகிறது. நாய்க்குட்டிகள் மிரண்டு குரைப்பதை நிறுத்துகின்றன.
இரண்டு நாட்களுக்கு பின் ஒரு கனவு. ஒரு நிகழ்ச்சி. அதில் பலர் கூடியுள்ள நிலையில் ஒரு பெண் என்னிடம் ஏதோ சொல்ல நெருக்கமாக வருகிறாள். அவள் ஏதோ சொல்லத்தான் செய்கிறாள். அப்போது அவள் என் மீது முழுவதுமாக சாய்ந்து விட்டதை கவனிக்கிறேன். அவள் சொல்வது என்ன என்று எனக்கு கொஞ்சமும் புரியவில்லை. அவள் முதுகை என் நெஞ்சில் சார்த்தி வைத்துக்கொண்டு தொடர்ந்து நீளமாக பேசுகிறாள்.
Siesta. Daytime napping. நேற்று இங்கே வீட்டில் பகலில் சற்று அயர்ந்த போது ஒரு தெளிவான கனவு.

தர்மு சிவராம் வருகிறார். சிவப்பு கலரில் ஒரு branded readymade shirt போட்டிருக்கிறார். கனவில் வந்த சிவராம் ஒல்லியாக இல்லை. சற்றே பூரித்த உடம்பு. ரொம்ப ஸ்மார்ட் ஆக இருக்கிறார்.
’போட்டோவில் பிரமிள் ரொம்ப அட்டகாசமான அழகுடன் இருப்பார். அவருக்கு போட்டோஜீனிக் ஃபேஸ்’ என்று சுந்தர ராமசாமி சொன்னது என் கனவிலேயே நினைவிற்கு வருகிறது.

நான் ஒரு மொட்டை மாடியில் நிற்கிறேன். பிரமிள் பக்கத்து வீட்டு மொட்டை மாடி. என்னைப் பார்த்து “துரை” என்று கூப்பிட்டு கையசைக்கிறார். துரை என்ற என் பெயர் பிரமிளுக்கு எப்படி தெரிந்தது!
உடனே அவர் அந்த மொட்டை மாடியிலிருந்து நான் இருக்கும் மொட்டை மாடிக்கு தாவுகிறார். இரண்டு கட்டடங்களும் பல மாடி கொண்டவை. நான் இருக்கும் கட்டடடத்தில் ஜன்னலோ எதிலோ அவருடைய பாதங்கள் நின்ற அடுத்த சில நொடியில் நழுவி கீழே விழுகிறார்.
ஐயோ…
அவருடைய ‘தன்னழிவு’ கவிதை முழுவதுமாக கனவில் என் நினைவில் தெளிவாக வருகிறது.
“கண்ணில் கருக்கொண்ட
மணல்
ஏதோ ஒரு ஒளியின்
ஊற்றாகிறது.
பாலை
புனலாகிறது.
இக்கணம்
இதயத்துள் வேரூன்றி
நிலைத்தது நனவு.
முளைத்தெழுந்து
பழுத்தது
சாவு.”
என் பதற்றத்தில் நான் மிரட்சி நீங்காதிருக்கிறேன். சில நிமிடங்களில் படியில் யாரோ வரும் சத்தம்.
மொட்டை மாடிக்கு வந்து விட்ட அந்த மனிதர் பிரமிளே தான்.
ஆகாய நீல வண்ணத்தில் நல்ல முழுக்கை நீள சட்டையை முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டு பிரமிள் என்னைப்பார்த்து சிரிக்கிறார். ஸ்கை ப்ளு ரெடி மேட் சர்ட். நல்ல செழிப்பான பூசின உடலும் பூரித்த முகமுமாக பிரமிள்.
கனவுகள் ஆன்மாவின் மொழி. Dreams and the relevance they play in the journey of life. பௌலோ கொய்லோவின் Alchemist நாவல் நிழலாடுகிறது.
செத்தபின் சாவு என்னும் தூக்கத்தில் என்ன கனவு வரும் என்பார் ஷேக்ஸ்பியர்.
In that Pramil’s sleep of death what dreams may come!

….............

Jul 4, 2018

மந்திரவாதி யார்? ரத்தங்கக்கப்போறவர் யார்?



மந்திரவாதி யார்? ரத்தங்கக்கப்போறவர் யார்?
டெல்லி முதலமைச்சர்அரவிந்த் கெஜ்ரிவால் - டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால்
இருவரில் 
மந்திரவாதி யார்? ரத்தங்கக்கப்போறவர் யார்?
புதுவை முதல்வர் நாராயண சாமி - துணை நிலை ஆளுநர் கிரண் பேடி
இருவரில்
யார் மந்திரவாதி? யார் ரத்தங்கக்கப்போறவர்?
Real Power???

தமிழ் நாட்டில் கூட யார் தான் மந்திரவாதி? யார் தான் ரத்தங்கக்கப்போறவர்?

இங்கே விசித்திரமாக கவர்னரும் எதிர்கட்சி தலைவரும்!

வவ்வா ஏழு பூழலுக்கு ஆசப்பட்டு, கடசியில வாய் வழியா பேலும்படியான கதை தானா கவர்னர் சமாச்சாரம்?

Real power with Elected Government - Supreme court Judgement.