Share

Jun 24, 2008

கலை நிலவு


‘ உங்கள் வாழ்க்கை வரலாற்றை நான் எழுதட்டுமா? ‘ என்று ஒரு சினிமா பத்திரிக்காசிரியர் ஜெமினி கணேசனிடம் கேட்டார். “நீ எதுக்குடா எழுதணும்? Even a Rickshaw Wala in the street corner knows my whole history “ – ஜெமினியின் பதில் இது!

தன்னுடைய வாழ்க்கையைத் திறந்த புத்தகமாக வைத்துவிட்டு மறைந்து விட்டார் ஜெமினி.

19 வயதில் பாப்ஜியைத் திருமணம் செய்துகொண்டவர். அதன் பிறகு நடிகைகள் புஷ்பவல்லி, சாவித்திரி இருவருடனும் வாழ்ந்து குழந்தைகள் தந்தவர். பின்னும் ராஜஸ்ரீயோடு affair. 80 வயதில் ஜூலியானாவை மணந்து பிரிந்து இப்போது 85 வயதில் வாழ்க்கையின் சலிப்பைத் தாங்க முடியாமல் மூச்சை நிறுத்திக் கொண்டவர்.

1947இல் நடிக்க ஆரம்பித்திருந்தாலும் 1953ஆம் ஆண்டுதான் – தன்னுடைய 33 வயதில் – கதாநாயகனானார். அன்றைய பிரபல நடிகைகள் அனைவருடனும் நடித்தார். சாவித்திரி, அஞ்சலிதேவி, வைஜயந்தி மாலா, பத்மினி, சவுகார் ஜானகி, தேவிகா, சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, ஜெயந்தி என்று எல்லோருக்கும் பொருந்துகிற மாதிரியான கதாநாயகன்.

நாடகப் பின்னணி கொண்டவர்களே சினிமாவுக்கு வந்துகொண்டிருந்த காலத்தில் அத்தகைய பின்னணி இல்லாமல் நடிக்க வந்தவர். அன்றைய காலத்தில் நன்கு படித்துவிட்டு சினிமாவுக்கு வந்த மிகச்சிலரில் ஒருவராக இவரைச் சொல்லலாம். அபாயமான காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார். நடிகராவதற்கு முன்னரே, கல்லூரி மாடியிலிருந்து குதிப்பாராம். ‘ எப்படிக் குதித்தாய்? “ என்று பிரின்சிபால் பதறிக் கேட்டபோது மீண்டும் மாடியேறி குதித்து ‘இப்படித்தான்’ என்றாராம். புதுக்கோட்டை மகாராஜா இவர் தலையில் ஆப்பிளை வைத்துக் குறிபார்த்து ஆப்பிளைச் சுடும் பயிற்சிக்கு அடிக்கடி ஒத்துழைத்த தைரியசாலி.

சிவாஜிக்கு முக்கியத்துவம் தரும் 13 படங்களில் அவரோடு இணைந்து நடித்தவர் ஜெமினி. எம்.ஜி.ஆர் இதைக் குறிப்பிட்டு ஜெமினி தன் தனித்துவத்தை விட்டுத்தருகிறாரே என்று வருத்தப்பட்டார். ஆனாலும் தன்னை விடச் சாதாரண நடிகர்களான ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரன் போன்றவர்களின் படங்களில் கூட நடித்தார். நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் இவர் நடித்திருந்தார்.
எந்தப் பாத்திரத்தில் நடித்தாலும் எம்.ஜி.ஆரிடமும் சிவாஜியிடமும் அவர்களது பிரம்மாண்ட இமேஜ் அவர்களுடைய மாறுபட்ட பாணியையும் மீறி மறைக்க முடியாத விஷயமாயிருந்தது. ஆனால் ஜெமினியால் சராசரி மனிதனை மிக இயல்பாகத் திரையில் காட்ட முடிந்தது. இன்று வாழ் நாள் சாதனை என்று எடை போட்டுப் பார்க்கும் போது எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருடையதை விடச் சற்றுத் தூக்கலாகத் தெரிவது ஜெமினியின் அமெரிக்கையான சாதனை. ஆனால் அந்தக் காலத்தில் அவருடைய தகுதிக்கேற்ப புகழையும் மதிப்பையும் அவரால் பெற முடிந்ததில்லை.

சரித்திரப் படங்கள், சமூகப் படங்கள் என்று பல வகைப் படங்களைத் தந்தவர். எந்த அளவுக்கு ‘ கல்யாணப் பரிசு’, ‘சுமை தாங்கி’ என்று சோகமான படங்களில் நடித்தாரோ அதே அளவு ‘மிஸ்ஸியம்மா’, ‘யார் பையன்’ என்று நகைச்சுவைப் படங்களிலும் நடித்தவர் ஜெமினி. வண்ணப் படங்கள் என்று பார்த்தால் இவருடைய ‘சாந்தி நிலையம்’, ‘ சங்கமம்’ அந்தக் காலத்தின் மற்ற வண்ணப் படங்களை விட வண்ணத்தில் தரமானவை.

தமிழ்த் திரையில் உக்கிரமான நடிப்பு ஆகிருதிகளாக சிவாஜி கணேசன், எம். ஆர்.ராதா, நாகேஷ் இவர்களைக் குறிப்பிடலாம். மென்மையான நேர் எதிர்த் திசையில் சாதித்தவர்கள் ஜெமினி கணேசன், எஸ்.வி.ரங்காராவ், டி.எஸ்.பாலையா ஆகியவர்கள். ‘கற்பகம்’ படத்தில் ஜெமினியின் நடிப்பை சிலாகித்து ரங்காராவ், “தம்புடு, you know I am a scene stealer. ஆனால் கற்பகத்தில் you have excelled me “ என்றாராம்.
‘கொஞ்சும் சலங்கை‘ யில் நாகஸ்வர வித்வானாக இவருடைய நடிப்பைப் பார்த்து பிரமித்துப்போய் காருகுறிச்சி “அது எப்படிய்யா? நாகஸ்வரம் இந்த இடத்தில் மேலே தூக்கணும், இங்க இறக்கணும், சீவாளியை இப்படி இப்படிச் சுத்தம் பண்ணணும் இவ்வளவு நேர்த்தியா உன்னால முடிஞ்சது. எனக்கும் கொஞ்சம் சொல்லிகொடேன்” என்று மனம் விட்டுப் பாராட்டியதைப் பற்றிப் புளகாங்கிதத்துடன் என்னிடம் சொன்னபோதே, காருகுறிச்சி பற்றிய நினைவுகளில் மூழ்கி, நெகிழ்ந்து உடைந்த குரலில், ‘ நல்ல மனுஷனெல்லாம் அற்பாயுசிலே போய்ச் சேந்துட்டான்’ என்று ஏங்கினார் ஜெமினி.

ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸ் ஆகியோர் அவருக்காகப் பாடிய பாடல்கள், அவர் நடித்த படங்கள் ஆகியவை எப்போதும் இந்தக் காதல் மன்னனை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும் என்று சம்பிரதாயமாகச் சொல்ல வேண்டியிருக்கும்.
"KALACHUVADU "65 - - May 2005

.....................................................R.P.Rajanayahem's father with Gemini Ganesan


1 comment:

 1. சரியான பதிவு..

  ஜெமினி அற்புத நடிகர்.. அலட்டாமல் நடிப்பதில் மிக வல்லவர்..

  சுமைதாங்கி திரைப்படைத்தை எத்தனை முறை பார்த்தாலும் அழுது விடுவேன்..

  அவ்வைசண்முகியில் கலக்கியவர்..

  சூர்யா
  சென்னை

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.