Share

Showing posts with label மௌனி. Show all posts
Showing posts with label மௌனி. Show all posts

Oct 31, 2020

பட்ட மரம்

 


"இள இளவென்று இலையும் தளிரும் மலருமாகப்                           பூத்து நின்ற மரமில்லை அது இப்போது. 

இலை, தளிர், மலர் எல்லாம் மறைந்து விட்டன. 

இடி விழுந்த மரம் போல் உள்ளம் கூடோடி விட்டது. 

புறத்தையும்  துயர கறையான் சாரி வைத்துத் 

 தின்று கொண்டிருக்கிறது. 

பலமாக ஒரு காற்று வீசினால் போதும். 

மள மளவென்று மரம் சாய்ந்து விடும்."


- தி. ஜானகிராமன்  'வெயில்' சிறுகதையில் 


.......... 


"அந்த பட்ட மரம் தனிப்பட்டு, 

தலைவிரி கோலத்தில் நின்று

மௌனமாக புலம்புவது போன்று எனக்கு தோன்றியது.. 


ஆகாயத்தில் இல்லாத பொருளை கண் மூடிக்

  கை விரித்து தேடி துளாவுவதைப்பார்த்தாயா? விரிக்கப்பட்ட சாமரம் போன்று

ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தப்படுத்துவதா அது?...

அல்லது துளிர்க்க அது மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது? எதற்காக?"


--- மௌனி

' அழியாச்சுடர் ' கதையில்


..........


"காம்பு இற்றுப்போச்சு ...

நான் பூக்க மாட்டேன்.

காய்க்க மாட்டேன்

பழம் தர மாட்டேன்.

குயிலுக்கும் கிளிக்கும் 

என்னிடம் வேலையில்லை.

மரம் கொத்திப்பறவை வந்து

ஏணி மீது ஏறுவது போல்

 படிப்படியாக ஏறி

இடுக்கிலுள்ள புழுக்களைத்தேடும்.

நான் ஓய்ந்து விட்டேன். 

ஒடுங்கி விட்டேன். 

காய்ந்து விட்டேன்."


--- ந . பிச்சமூர்த்தி

'அடுப்புக்கு எதிரில் ' கதையில்

Aug 14, 2020

ஷேக்ஸ்பியர்

 ஷேக்ஸ்பியர்

- RP ராஜநாயஹம்


"டெம்பஸ்ட்" நாடகத்தில் காணப்பட்ட கதை 

 தன் கருவில் சுதந்திரம், நட்பு, மனம் திரும்புதல்,        மன்னிப்பு என்பனவற்றை கொண்டிருக்கிறது.


“We are such stuff as dreams


Are made on.”


- The Tempest.


மௌனியின் பிரபலமான வரிகள் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” பற்றி நிறைய பேசி எழுதுகிறீர்கள். ’இது கவிதையா? உரை நடையா? கவிதையும் தான் உரை நடையும் தான்’ என்றெல்லாம் தவித்து தக்காளி விற்கிறீர்கள்.சரி.

அந்த வரிகள் ஷேக்ஸ்பியரின் மேக்பத் சொல்கிற “Life is but a walking shadow" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.


டெம்பஸ்ட்டின் 

We are such stuff as dreams

Are made on 

என்பதையும் மௌனியின் வரிகளுக்காக கணக்கில் எடுக்கத் தான் வேண்டும். 

 


இதை கருத்தில் கொள்ள ஷேக்ஸ்பியரை தெரியாவிட்டாலும் இது ஷேக்ஸ்பியர் சொன்னது என்பதாவது தெரிந்திருக்க வேண்டும். அதன் பிறகு ’எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ பற்றிய புல்லரிப்பு, செடியரிப்பு, மரம் அரிப்பு எல்லாம் வரட்டும்.

பல்கலைக்கழகங்களில் படித்திடாதவர்.

தன் நாடகங்களில் ஷேக்ஸ்பியர் 

தானும் நடித்திருக்கிறார்.


ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலத்தில் தான் எழுதிய மகத்தான நாடகங்களை அச்சிலே பார்க்கவே இல்லை.


52 வயதில் ஷேக்ஸ்பியர் இறந்த பின் 36நாடகங்களை அச்சில் கொண்டுவந்தவர்கள் அவருடைய நாடகங்களில் நடித்த

 ஹெம்மிங்க்ஸ், காண்டல் என்ற இருவர் தான். 


ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் Cardenio அவர் காலத்தில் மேடையில் நடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நாடகம் தொலைந்து போய்விட்டது. கிடைக்கவே இல்லை. 


சமீபத்தில் "Lost Play of Shakespeare 'Cardenio'  Discovered" என்று ஒரு  பரபரப்பு செய்தி அடிபட்டது. 


Racism, Anti-Semitismஎன பல prejudice

இவரிடம் தெரியக் கிடைக்கிறது என சுலபமாக குற்றம் சாட்டி பெருமிதம் கொள்ள

 செக்குமாட்டு விமர்சகனுக்கு வாய்ப்பு

 நிறைய உண்டு.


Black is the badge of hell, the hue of dungeons and the scrowl of night.

-‘ Love’s Labour Lost’


ஒதெல்லோ ஒரு மூர் ஆப்பிரிக்கன்.

ஒதெல்லோ நாடகத்தில் அவன் மீதான வசவுகள் கூட ஷேக்ஸ்பியருக்கு எதிராக திருப்பப் படமுடியும்.


யூத வெறுப்பு தான் Merchant of Venice நாடகத்தில் ஷைலக் என்ற யூதனை

 கொடூர, இரக்கமற்ற வில்லனாக்க 

காரணம் என வாதிடலாம்.


தன் நாடகங்களில் தற்கொலை என்பதை

 13தடவை பயன்படுத்துகிறார்.


ரோமியோவும் ஜூலியட்டும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

ஜூலியஸ் சீசரில் தற்கொலை நடக்கிறது.


ப்ரூட்டஸ் மனைவி போர்ஷியாவின் தற்கொலை.


 ப்ரூட்டஸ் -கேசியஸ் Die by Consensual Stabbing. 


ஒதெல்லோ தற்கொலை செய்து கொள்கிறான். 


ஹேம்லெட்டில் ஒபீலியா நீரில் மூழ்கி தற்கொலை. 


ஆண்டனி அண்ட் கிளியோபட்ராவில் தான் 

அதிக தற்கொலைகள்.

மார்க் ஆண்டனி,  கிளியோபட்ரா,

சார்மியன், ஈரோஸ், ஐராஸ்....


முதல் நாடகம் Henry VI part one இருபத்தைந்து வயதில் எழுதினார்.

 கடைசி நாடகம் The Two Noble Kinsmen எழுதும்போது அவருக்கு 49 வயது.


அவருடைய கவிதைகள் 154 sonnets. 

நிறைய சர்ச்சை கிளப்பியவை. 


முதல் 26 கவிதைகள் ஒரு இளைஞன் பற்றியவை.

 கடைசியில் இரண்டு தவிர முந்தைய 25கவிதைகள் ஒரு கருப்பு பெண் குறித்தவை.


 126வது சானட் சொல்வது farewell to“My lovely boy

”...Shakespeare .... a BISEXUAL?


பதினெட்டு வயது ஷேக்ஸ்பியர்.

 இருபத்தாறு வயது ஆன்னி ஹேத்தவே.

தன்னைவிட எட்டு வயது மூத்த ஆன்னி ஹேத்தவே என்ற பெண்ணை மணந்து மனஸ்தாபத்தோடு எட்டு பிள்ளைகள் பெற்றார் ஷேக்ஸ்பியர். 

Anne Hathaway hath a way!


இந்த எட்டில் ஒரு ட்வின்ஸ் உண்டு. 

இந்த ட்வின்ஸ் இருவரில் ஹேம்நெட் வாழ்க்கை 11வயதில் முடிந்தது. 

இன்னொரு ஜூடித் 77வயது வரை வாழ முடிந்தது.


 ஷேக்ஸ்பியரின் சொத்துக்களை அனுபவித்த சூசன்னா 66 வயதில் மறைந்தார். 


ஷேக்ஸ்பியரின் உயில் படி மூத்த மகளுக்குத்தான் சொத்து கிடைத்தது.

மனைவி ஹேத்தவேக்கு கிடைக்கவில்லை.

ஷேக்ஸ்பியரின் Second-best bed இரண்டாவது படுக்கை ...Marriage Bed தான்

 ஹேத்தவேக்கு கிடைத்தது. 


'வறுமையும் புலமையும் ' என்று 

ஷேக்ஸ்பியர் பற்றி சொல்ல முடியாது. 


18வயதிலேயே சொத்து வாங்க ஆரம்பித்து விட்டார். மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கி குவித்தவர் ஷேக்ஸ்பியர்.

அவருடைய சொந்த ஊர் ஸ்ட்ராட்போர்டில் உள்ளூர்க்காரர்கள் ஷேக்ஸ்பியரை 

ஒரு பக்கா பிசினெஸ் மேன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார்களாம்.


ஷேக்ஸ்பியரின் அம்மா கூட செல்வசீமாட்டி எனும்படியானவரே. செல்வந்தரின் மகள். 


ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட்,கிங் லியர், மேக்பெத் போன்ற ஏழு நாடகங்கள்

 பால் இல்லிட்ஜ் என்பவரால்

 நாவல்களாக எழுதிப் பார்க்கப்பட்டிருக்கிறது.


..........


Portraits

1. William Shakespeare 

2. Shakespeare's wife Anne hathaway


..................

Mar 11, 2017

Walking shadow




ஒரு சினிமா நடிகன் சொன்னான் : ’என்னைப்பாத்தா சிவாஜி கணேசன் மாதிரியே இருக்கிறேன்னு எல்லாரும் சொல்றாங்க. சிவாஜி மகனான்னு கேட்டவங்க உண்டு. நேத்து வாஹினி ஸ்டுடியோவில கூட ஷூட்டிங்ல ஒரு நடிகை என் கிட்ட ”நீங்க அச்சு அசல் சிவாஜி சார் மாதிரியே இருக்கீங்களே”ன்னு மூக்குல விரல் வச்சிட்டாங்க!’

இன்னொரு சினிமா நடிகன் சொன்னான் : ’என்னையும் அப்படித்தான் எவ்வளவோ பேர் சொல்றாங்க.
சிவாஜி மகன் மாதிரியே நான் இருக்கிறேன்னு நேத்து கூட சஃபையர் தியேட்டர்ல ’மரோ சரித்திரா’ படம் பாக்க நான் போயிருந்தப்ப ஒருத்தர் ஆச்சரியப்பட்டாரு!’

நான் சொன்னேன் : ’என்னப்பாத்தா என்னோட அப்பா மாதிரியே இருக்கேன்னு எல்லோருமே சொல்றாங்க!’
Chip off the old block. I'm definitely a chip off the old block.
.....................................................

மௌனியின் பிரபலமான வரிகள் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” பற்றி நிறைய பேசி எழுதுகிறீர்கள். ’இது கவிதையா? உரை நடையா? கவிதையும் தான் உரை நடையும் தான்’ என்றெல்லாம் தவித்து தக்காளி விற்கிறீர்கள்.சரி.
அந்த வரிகள் ஷேக்ஸ்பியரின் மேக்பத் சொல்கிற “Life is but a walking shadow" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.

இதை கருத்தில் கொள்ள ஷேக்ஸ்பியரை தெரியாவிட்டாலும் இது ஷேக்ஸ்பியர் சொன்னது என்பதாவது தெரிந்திருக்க வேண்டும். அதன் பிறகு ’எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ பற்றிய புல்லரிப்பு, செடியரிப்பு, மரம் அரிப்பு எல்லாம் வரட்டும்.
..................................

எதனை நினைத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை?
1.தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் தேறாத தேமுதிகவை பிரமித்து அதன் பின் வால் பிடித்து சேவகம் செய்ய நின்றதை!

2.இன்றும் தமிழகத்தில் செல்வாக்கில்லாத பி.ஜே.பியை தங்கள் கூட்டணி மூலம் கடந்த காலங்களில் பட்டி தொட்டியெங்கும் அ.தி.மு.க, தி.மு.க கொண்டு சேர்த்தை!

ஒன்னாம் நம்பர் காமெடியன்?
சசிகலாவை ஆதரிக்காவிட்டால் தமிழ் நாட்டில் பி.ஜே.பி வளர்ந்து விடும் என்று சொல்லும் கி.வீரமணி தான் Fool, Clown.

........................................




28 பிப்ரவரி தொடங்கி 6 மார்ச் வரை லலித் கலா அகாடமியில் அல்ஃபோன்ஸோ, P.கிருஷ்ணமூர்த்தி இருவரின் ஓவிய கண்காட்சி நடந்தது.
மகத்தான் இரு கலைஞர்கள்.
முதல் நாளும், கடைசி நாளும் ந.முத்துசாமி, மு. நடேஷ் இருவருடன் போய் இருந்தேன். மறக்க முடியாத நிகழ்வுகள். எம்.டி.முத்துகுமார சுவாமியை சந்திக்கிற வாய்ப்பு லலித் கலா அகாடமியில் கிடைத்தது.

                                              அல்ஃபோன்ஸோ ஓவியம்




                                               P.கிருஷ்ண மூர்த்தி ஓவியம்
                                             
.............................................................................................................................


Nov 28, 2016

சார்பு


சார்ந்திருக்க எவ்வளவோ இருக்கிறது.
”எதையேனும் சார்ந்திரு
கலை, இலக்கியம், சங்கீதம்,இங்கிதம்
 இப்படி எதையேனும் சார்ந்திரு.
இல்லையேல் வாழ்க்கை காணாமல் போய் விடும்.”
- வண்ண நிலவன்
‘ மெய்ப்பொருள்’ கவிதைத்தொகுப்பில் ஒரு கவிதை.’

ஊட்டி தளையசிங்கம் கருத்தரங்கம் நிகழ்விற்காக சென்றிருந்த போது தனிப்பட்ட உரையாடல் போது வெங்கட் சுவாமிநாதனிடன் நான் கேட்டேன். “ ஒரு இலக்கியவாதி பி.ஜே.பி.ஆதரவாளனாக, ஆர்.எஸ்.எஸ். அனுதாபியாக இருக்க முடியுமா?”
உடனே அவர் பதில்: ”ஏன், ஒரு இலக்கியவாதி மார்க்ஸிஸ்ட் ஆக இருக்க முடியும் என்றால் ஏன் பி.ஜே.பி.ஆதரவாளனாக, ஆர்.எஸ்.எஸ். அனுதாபியாக இருக்க முடியாது? ஏன் இருக்கக்கூடாது?”
மௌனியின் பூணூலைப்பார்த்து அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ.ரா “ இந்த சனியனை கழட்டி அந்த ஆணியிலே மாட்டு” என்று சொன்ன போது மௌனி சற்றும் யோசிக்காமல் சொன்னார் “Rather I would cut my cocks and put it there!”
நான் பெரிதும் மதிக்கும் ந. முத்துசாமியிடம் இந்த கேள்வி ’உங்களுக்கு பிடித்த கொள்கை என்ன?’ கேட்கப்பட்டால் எப்போதும் தயங்காமல் உடனே சொல்வார் “ திராவிட இயக்கக் கொள்கைகள்”
முத்துசாமிக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் மௌனி!
அசோகமித்திரன் பி.ஜே.பி சார்புடையவர்.
லா.ச.ரா. ஆச்சாரம் எல்லோரும் அறிந்தது.
தி.ஜானகிராமன் ஆன்மீக தேடல் கொண்டிருந்தவர்.

 கி.ரா கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்திருக்கிறார்.
பெரும்பாலான படைப்பாளிகள் மார்க்ஸீயத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுள்ளவர்கள். மனிதன் மீதான அக்கறை தான் மார்க்ஸீயம் என்பதால் அதை எங்கனம் அலட்சியப்படுத்த முடியும். முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவரும் மார்க்ஸீயத்தின் பால் அபிமானம் கொண்டவர்கள்.
நான் கல்லூரி வாழ்க்கையின் போது தி.மு.க. காரன். திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம் இரண்டிலும் உறுப்பினராய் இருந்தவன்.உறுப்பினர் கார்டுகள் பத்திரமாக என்னிடம் ரொம்ப காலம் இருந்ததுண்டு. அந்த நேர என் அரசியல் ஈடுபாடுகள் பற்றிய சாட்சிகளாக!
எப்போதுமே அ.தி.மு.க வுக்கு ஓட்டு போட்டதேயில்லை.
என் மார்க்சீய அபிமானம் காரணமாக 'தோழர் ' என்றபட்ட பெயரும் எனக்கு ஒரு காலத்தில் இருந்தது.இன்றும் என்னை என் பெயரை சொல்லாமல் ' தோழர் ' என்று குறிப்பிட்டு அழைக்கும் நெருங்கிய நண்பர்கள் உண்டு.
சேலம் காம்ரேடுகளோடு மோதல் ஏற்பட்ட போது ஒரு பத்திரிகையில் எழுதிய எதிர்வினைக்கு ”கொள்கை சனாதனத்தின் மிச்ச சொச்சங்கள்”தலைப்பை கொடுத்தேன்.
சுந்தர ராமசாமி சொன்னதை அடையாளத்தை நிராகரிக்கும் நானும் சொல்வேன்.
' இலக்கியவாதியாகிய நான் ஒரு மொழிக்கோ, சாதிக்கோ,மதத்திற்கோ இனத்திற்கோ, கட்சிக்கோ, சித்தாந்ததிற்கோ,ஏன் நாட்டிற்கோ கூட விசுவாசமாக இருக்க முடியாது '



.........................................................

Oct 7, 2012

அழியாச்சுடர் மௌனி


 
சிறுகதைத்தளத்தில் மட்டுமே சிக்கனமாக இயங்கிய படைப்பாளி.குறைந்த அளவில் 24 சிறுகதைகள்.மௌனி என்ற புனைபெயர் கூட இவராக வைத்துக் கொண்டதல்ல.கதைகளுக்கு தலைப்பு கூட இவர் வைத்ததில்லை.

தமிழில் எழுதியவர் தான் மௌனி,என்றாலும் ’தமிழில் என்ன இருக்கு’ என்று தடாலடியாக பேசுபவர்களுக்கு முன்னோடி.

பாஞ்சாலி சபதம் ஆவேசத்தில் எழுதப்பட்டதால் அது இலக்கியமல்ல என்றார்.புதுமைப்பித்தனையும் உதட்டைப்பிதுக்கி அலட்சியப்படுத்தினார்.லா.ச.ராவை ஒரு பாரா கூட படிக்க முடியவில்லை-தி.ஜானகிராமனிடம் sex பற்றி ஒரு obsession இருக்கிறது.-ஜெயகாந்தன் கதை படித்தது ஒன்று கூட நினைவில் நிற்கவில்லை- சுந்தர ராமசாமியிடம் ஒரு higher order of literary cleverness இருக்கு.ஆனா his cleverness kills the art.

மௌனியின் கதைகள் குறித்தும் எப்போதுமே இரண்டு கட்சிகள் உண்டு.

1.”மிக மேன்மையான படைப்பாளி”

2. ”சும்மா பம்மாத்து செய்தவர்”

இப்போது எப்படியோ, விசித்திரமோ,இயல்போ கல்வித்துறைப் பண்டிதர்கள் பலரும் மௌனியை அறியாதிருந்தார்கள்.

தமிழவன் ஒரு கருத்தரங்கத்தில் மௌனி பெயரை குறிப்பிட்டபோது ஒரு பேராசிரியர் தமிழ் இலக்கியத்தில் மௌனி என்ற எழுத்தாளரே கிடையாது என்று சாதித்தாராம்.

எனக்கும் இப்படி ஒரு அனுபவம்.’மௌனியை படித்திருக்கிறீர்களா?”என்று நான் கேட்டபோது ஒரு பேராசிரியர் ரொம்ப யோசித்து,நெற்றியை தடவி குழம்பி சொன்னார்

‘படித்திருப்பேன்…எவ்வளவோ படிக்கிறேன்..மௌனி படிக்காமலா இருந்திருப்பேன்?’

மௌனியை அந்த பேராசிரியர் படிக்கவேயில்லை என்பதில் ஐயமில்லை.

ஆர்.எஸ் மணி என்ற மௌனி நிறையப் பேசுகிற சுபாவம் உள்ளவர்.

சிதம்பரம் கோவிலை திருநீறுப்பட்டையுடன் வலம் வந்தவர்,சங்கராச்சாரியாரை தாண்டி ரமணரையும் ஜேகேயையும் வள்ளலாரையும் மதிக்கமுடியாதவர் என்ற தகவலை பிரமிள் தருகிறார்.

பிரமிளை வீட்டுக்குள் அழைத்துச் செல்லாமல் திண்ணையில் வைத்து மௌனி சாப்பாடு போட்டார்.பிரமிளோ மௌனியுடைய சனாதனத்துக்கு  தத்துவ முலாம் பூசினார்.

அக்ரஹாரத்து அதிசயமனிதர் வ.ரா.வை சந்திக்க கு.ப.ராவுடன் மௌனி செல்கிறார்.

”பூணூலை கழட்டி அந்த ஆணியில் மாட்டு” என்கிறார் வ.ரா

.உடனடியாக மௌனியின் பதில்” I would rather cut my cocks and put it there!”

இந்த ’பதில்’ பிரமிளுக்கு ஜாதீய நோக்கத்தை மீறிய கவித்துவமாக தெரிகிறது.

சொந்த வாழ்க்கையில் சந்தித்த புத்திர சோகங்கள் உள்ளிட்ட சொல்லொணா துயரங்கள் மௌனியை சநாதனியை மாற்றிவிட்டது என்பது ஒரு IRONY. சில ஞானிகள் சொந்த வாழ்க்கை சோகங்களினால் பகுத்தறிவு வாதிகளாக மாறியிருக்கிறார்கள்.

இளமையில் வைதீக சூழ்நிலையில் பிறந்து அடக்குமுறைகளுக்கு எதிராக மௌனி நிகழ்த்திய மீறல்- தேவிடியா வீட்டுக்கு சென்றது-சினிமா பிரபல சகோதரிகள் வரலட்சுமி,பானுமதியோடு ஏற்படுத்திக்கொண்ட தொடர்பு.

இந்த மீறலை ஏன் பூணூல் விஷயத்தில் செய்ய முடியவில்லை என்று கேட்பவர்கள் கேட்பார்கள்.

எழுத்தாளன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் உபதேசம் செய்ய எவ்வளவு பேர் புறப்பட்டாலும் மௌனி என்ற கலைஞன் உருவாகவே செய்கிறான். டி.ஹெச்.லாரன்ஸ்’படைப்பை நம்பு.படைப்பாளியை பாராதே’என்று ஏன் சொல்லவேண்டும்.

புதுமைப்பித்தன் ‘மௌனி சிறுகதையின் திருமூலர்’என்றார்.க.நா.சு எப்போதும் மௌனி பற்றி பிரமாதமாக எழுதியவர்,தி.ஜா,கரிச்சான்குஞ்சு இருவரும் மௌனியின் ரசிகர்கள்.சுந்தர ராமசாமி’மௌனி சாதித்து விட்டார்.நாங்களெல்லாம் முயற்சி செய்கிறோம்’ என்றார்.

மௌனியை glamourize செய்த பெருமை ஜெயகாந்தனுக்குத் தான் உண்டு. தான் எப்போதும் எழுதுவதற்காக உட்காரும்போது மௌனியின் ‘மாறுதல்’ என்ற கதையைப் படித்து விட்டுத்தான் எழுதுவதாக சொல்லி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.ஒரு பிரபல பத்திரிக்கை பல எழுத்தாளர்களிடம் தங்களை மிகவும் பாதித்த கதைகளைப் பற்றிக் கேட்டு வெளியிட்ட போது தி.ஜானகிராமன் அவர்கள் ந.பிச்சமூர்த்தியின் “அடகு” கதையைக் குறிப்பிட்டு அதை வெளியிடச் செய்தார்.அப்போது ஜெயகாந்தன் தன்னை மிகவும் பாதித்த கதையென்று சொல்லி மௌனியின் “மாறுதல்” அந்தப்பத்திரிக்கையில் பிரசுரமாகியிருந்தது.

பின்னாளில் ஜெயகாந்தன் கதைகள் பற்றி மௌனி அலட்சியமாக பதிலளித்த பிறகு ஒரு வேடிக்கை நடந்தது. மௌனியின் ‘மாறுதல்’கதையைத் தான் எப்போதும் எழுத ஆரம்பிக்கும் முன் படித்த விஷயமானது பல் விளக்குவது போல,குளிப்பது போல ஒரு சாதாரண habitual action மட்டும் தான்.மற்றபடி மௌனியின் கதையில் inspiration எல்லாம் தனக்கு இல்லை.மௌனி கதை பற்றி உயர்வான அபிப்ராயமும் கிடையாது என்று தடாலடியாக ஜெயகாந்தன் பதிலடி கொடுத்து விட்டார்.
கு.அழகிரிசாமி “மௌனி செய்வது பம்மாத்து தான்” என்று க.நா.சு விடம் சண்டை பிடிப்பார்.மௌனி கதைகளுக்கான முன்னுரையில் க.நா.சு மறைமுகமாக அழகிரிசாமியை மூக்கறையன் என்றும் இவர் போன்றவர்களுக்கு கண்ணும் காதும் இருக்கிறதா என்றும் கூட சந்தேகம் தெரிவித்திருந்தார்.

எம்.வி.வெங்கட்ராமிடம் மௌனி “ ஒரு கதை எழுதினேன்.விகடனுக்கும் குமுதத்துக்கும் அனுப்பினேன்,திருப்பி அனுப்பி விட்டார்கள்’ என்று வருத்தப்பட்டாராம்.’விகடனுக்கும் குமுதத்துக்கும் ஏன் சார் அனுப்பினீர்கள்?’ என்று வியப்புடன் கேட்டதற்கு’அவை தானே பிரபலமாக இருக்கின்றன.அதிகப்பணமும் தருவார்களே!” என்று மௌனி வெகுளியாக பதிலளித்தாராம்.

மௌனிக்கு அபின் பழக்கம் இருந்தது போல பொய் பேசும் பழக்கமும் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் எம்.வி,வியின் “என் இலக்கிய நண்பர்கள்” நூலைப் படிக்கும்போது ஏற்படவே செய்கிறது.
மௌனியின் கதைகள் சில வெங்கட்ராமால் பல தடவை திருத்தம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.இலக்கண அமைதியோ தெளிவோ மௌனியிடம் இருக்காதாம். ’மனக்கோலம்’ கதையை திருத்தம் செய்து ’தேனீ’’யில் படித்த போது அக்கதையின் படைப்பாளி தானே என்பது போன்ற பெருமிதம் வெங்கட்ராமிற்கு ஏற்பட்டிருக்கிறது.மணிக்கொடியில் அவர் எழுதிய கதைகளின் தமிழும் இப்படித்தானா? என்று பி.எஸ்.ராமையாவிடம் கேட்டதற்கு ’ஒரு மாதிரியாகத்தான் இருக்கும்,நாங்கள் திருத்தி வெளியிட்டோம்’என்று சொன்னாராம்.

ஆல்பர்ட் ஃப்ராங்க்ளீன் என்ற அமெரிக்கன் மௌனியை’கருமேகங்களுக்கிடையில் ஒரு மின்னல்’ என்று பாராட்டி நியூயார்க்கர் பத்திரிக்கையில் இரண்டு சிறுகதைகளை மொழிபெயர்த்து பிரசுரமானது.
பெங்குவின் பதிப்பகம் சிறந்த உலகச்சிறுகதைகளில் ஒன்றாக ,மௌனியின் ‘ சாவில் பிறந்த சிருஷ்டி’ கதையை வெளியிட்டது.

ஒரு பேட்டியில் கர்நாடக சங்கீத உலகின் பீஷ்மர் செம்மங்குடி சீனிவாசய்யர் “ மௌனி என்ற பெயரில் கதை எழுதிண்டிருந்தானே மணி! அவன் என்னோட கஸின் தான்!” என்று சந்தோஷமாக சொல்லியிருந்தார்.
இது கூட மௌனியை கௌரவப்படுத்துகிற விஷயம் தான்!

 
 

 

 

Nov 26, 2008

பட்ட மரம்


அந்த பட்ட மரம் தனிப்பட்டு ,தலைவிரி கோலத்தில் நின்று
மௌனமாக புலம்புவது போன்று எனக்கு தோன்றியது
.....................
" ஆமாம் மரம் தான் . ஆகாயத்தில் இல்லாத பொருளை கண் மூடிக்
கை விரித்து தேடி துளாவுவதைப்பார்த்தாயா ? விரிக்கப்பட்ட சாமரம் போன்று
ஆகாய வீதியை மேகங்களினின்றும் சுத்தப்படுத்துவதா அது ?...
அல்லது துளிர்க்க அது மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது ? எதற்காக ?

--- மௌனி
' அழியாச்சுடர் ' கதையில்
........................................




காம்பு இற்றுப்போச்சு ...
நான் பூக்க மாட்டேன் .
காய்க்க மாட்டேன்
பழம் தர மாட்டேன் .
குயிலுக்கும் கிளிக்கும் என்னிடம் வேலையில்லை .
மரம் கொத்திப்பறவை வந்து
ஏணி மீது ஏறுவது போல் படிப்படியாக ஏறி
இடுக்கிலுள்ள புழுக்களைத்தேடும்.
நான் ஓய்ந்து விட்டேன் . ஒடுங்கி விட்டேன் . காய்ந்து விட்டேன் .

--- ந . பிச்சமூர்த்தி
'அடுப்புக்கு எதிரில் ' கதையில்