Share

Showing posts with label மு.கருணாநிதி. Show all posts
Showing posts with label மு.கருணாநிதி. Show all posts

Apr 28, 2021

கலைஞர் - தேங்காய் - கார்

 காலக்கண்ணாடி கடந்த கால நடப்பு ஒன்றை திடீரென ஞாபக சிறையில் இருந்து மீட்டு விடுதலை செய்து எந்த காரணமும் இன்றி கண்ணில் காட்டும். 


1980களின் முன்பகுதி கோபாலபுரம் கலைஞர்

 மு. கருணாநிதி வீட்டின் முன் நான் நிற்கிறேன். எம்ஜிஆர் ஆட்சி இரண்டாவது காலம். 

முன்பகல் பதினொரு மணி. தேங்காய் சீனிவாசன் காரை அங்கே கலைஞர் வீட்டு பக்கவாட்டில் நிறுத்தி விட்டு கோவிலுக்குள் போகிறார். 

கொஞ்ச நேரத்தில் மாநகராட்சியின் துப்புரவு ஊழியர் குப்பை வண்டியை கார் அருகில் நிறுத்தி விட்டு தன் வேலையை பார்க்கிறார். 

அங்கே வீட்டின் முன் சில நடுத்தர வயது

 ஏழைப் பெண்கள் மூவர் நிற்கிறார்கள். 


கலைஞர் கார் முன் பக்க சுவரையொட்டி நிற்கிறது. 

வீட்டிற்குள் இருந்து மு. க.. தமிழ் வெளிப்படுகிறார். 

அப்பொழுதெல்லாம் அப்பாவுக்கு சாரதி இந்த மகன் தான். அருள்நிதியின் அப்பா.


காரை நெருங்கி தயாராகும் மு. க. தமிழைப் பார்த்து அங்கு நின்று கொண்டிருந்த பெண்களில் ஒருவர் 'நல்லாயிருக்கியா கண்ணு' என்று வாஞ்சையுடன் கேட்கிறார். தமிழ் தலை நிமிர்ந்து புன்னகையுடன் தலையசைக்கிறார்.' என்னைத் தெரியுதாப்பா ? ' என்கிறார். மீண்டும் புன்னகையுடன் தலையசைப்பு. அந்த அம்மாள் இவரை சிறுவனாக இருந்த போதே அறிந்தவராய்த் தான் இருக்க வேண்டும். ஒரு வேளை கலைஞர் வீட்டில் முன்னர் வேலை பார்த்தவராய்க்கூட இருக்கலாம். 


இப்போது கலைஞர் வீட்டிற்குள் இருந்து வெளி வருகிறார். 

தேங்காய் சீனிவாசன் சாமி கும்பிட்டு விட்டு கோவிலில் இருந்து வெளி வருகிறார். 

கலைஞர் கிளம்புகிறார் என்பது தேங்காய் சீனிவாசனுக்கு தெரியத்தான் செய்கிறது. 

கலைஞருக்கும் கோவிலில் இருந்து தேங்காய் வெளி வருவது புரியாமல் இல்லை. 


தேங்காய் சீனிவாசன் உரக்க ஒரு கூப்பாடு. 

"யாருப்பா என் கார் முன்னால இந்த வண்டிய நிறுத்துனது. நான் கார எப்படி எடுக்கறது. என்னடா இது"


அந்த துப்புரவு தொழிலாளர் ஓடி வருகிறார். 


தேங்காய் நல்ல சத்தமாக " வண்டிய ஏன்யா இப்டி விட்ட. கார இப்ப நான் எடுக்க வேண்டாமா? 

ஏம்ப்பா.. சீக்கிரம் எடுய்யா வண்டிய? "


இதை கண்டும் காணாமல் கலைஞர்

 காரில் ஏற வருகிறார்.

 அவர் பார்வை என் மீதோ, 

அங்கு நின்றிருந்த 

மற்ற மூன்று பெண்கள் மீதோ விழவில்லை. 

மகன் கார் கதவை திறந்து அப்பா ஏறியவுடன் மகன் டிரைவர் சீட்டில் அமர்கிறார். 


கலைஞர் கார் புறப்படுகிறது. 


துப்புரவு பணியாளர் குப்பை வண்டியை அகற்றியதும் தேங்காய் சீனிவாசன் மீண்டும் கோபமாக சிடு, சிடு என்று திட்டிக் கொண்டே தான் காரை எடுக்கிறார். 


..

Oct 5, 2020

இந்து தமிழ் திசை புரட்டு

 சச்சிக்கு எழுதிய tribute ல் 

அவருடைய வீட்டில் கலைஞர் குடியிருந்தார் என்பதை குறிப்பிட்டிருந்தேன். 

உதய சூரியன் சின்னம் பற்றி சச்சி சொன்னதையும் பதிந்திருந்தேன். 


நான் இதை 2016லேயே என் Facebook, Blog இரண்டிலும் எழுதியிருக்கிறேன். 


 சச்சியை அவ்வமயம் கூத்துப்பட்டறைக்கு

 லோர்க்கா  நாடகம் 'Play without a title' மொழிபெயர்ப்பு செய்து தரச்சொல்லி சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது நான் எழுதியிருந்த அந்த பதிவின் மூன்று பிரிண்ட் - அவுட் காப்பி அவருக்கு கொடுத்தேன். 

அதை சச்சி உடனடியாக படிக்கவும் செய்தார். அதில் நான் எழுதியுள்ளதை மறுக்கவேயில்லை. 


இந்த விஷயத்தை சச்சி தான் முத்துசாமி உள்ளிட்ட அவருடைய நண்பர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் சொன்னவர். 


உதய சூரியன் சின்னம் பற்றி

 திராவிட முன்னேற்றக் கழகம்  வேறு வரலாற்றுக்குறிப்பு வைத்திருக்கலாம். 


நானே அதனால் தான் 

'Don’t be too surprised by what you hear.

One can’t be sure about anything these days. 

Just giving it to you as I hear it.'

என்று சொல்லியிருக்கிறேன். 


ஆனால் சச்சியின் கோபாலபுரம் வீட்டில் கலைஞர் கருணாநிதி குடியிருந்ததை கேள்விக்குள்ளாக்க முடியாது. அந்த மாடி போர்ஷன் கட்சி சார்பாக பிடிக்கப்பட்டதாய் கூட இருந்திருக்கலாம். 


இன்று இந்து தமிழ் திசையில் 

"திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறன் முதலில் வாடகைக்கு இருந்த இல்லம் இவருடையது "

என்று எழுதப்பட்டுள்ளது. 


ஒரு வேளை முரசொலி மாறன் வாடகைக்குப் பிடித்த வீட்டில் அவருடைய மாமா வந்து குடியிருந்தாரா? 

கலைஞர் வசித்தார் என்று தானே எல்லோரிடமும் சொன்னார். 

 என் பதிவில் தகவல் பிழை இருப்பதை படித்தவுடன் அன்று

 தெளிவுபடுத்தியிருப்பார் தானே.


மாமா வசித்த வாடகை வீட்டில் மருமகன் தங்கியிருந்திருக்கலாம். ஏன் மு. க. முத்து கூட அப்பாவுடன் அங்கு இருந்திருக்கலாம். அதுவா முக்கியம்? 

அது கலைஞர் வாழ்ந்த வீடு. 

இந்து தமிழ் திசை

 சச்சி வீட்டு மாடியில் 

கலைஞர் வசித்தார் என்பதை 

முழுக்க மறைக்க வேண்டிய அவசியம் என்ன? 


https://m.facebook.com/story.php?story_fbid=2849832728563508&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=2851095851770529&id=100006104256328

Sep 13, 2018

மு.க. நெஞ்சுக்கு நீதியில்


ஏ.கோவிந்தசாமி அண்ணா அமைச்சரவையில் அமைச்சராயிருந்தவர். இவருக்கு ஒரு தனித்துவம் உண்டு. என்னவென்றால் தி.மு.கவின் முதல் எம்.எல்.ஏ.
1957ல் தான் தி.மு.க முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் 1952ல் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் கோவிந்தசாமி. அவர் வேட்பாளராய் இருந்த போது தி.மு.க ஆதரவு தந்தது. இந்த இணக்கம் காரணமாக அவர் எம்.எல்.ஏயாக இருக்கும் போது தி.மு.கவில் இணைந்தார். இவருடைய மகன் ஏ.ஜி.சம்பத். இப்போது விழுப்புரம் பொன்முடியால் கட்டம் கட்டப்பட்டு இருக்கிறார். மு.க.அழகிரி ஆதரவாளராகி விட்டார்?
எஸ்.டி. சோமசுந்தரம் என் மாமனாரின் மிகச்சிறந்த நண்பர். என் மனைவியின் மூத்த சகோதரியின் திருமணத்தில் “ சந்திரனே மாப்பிள்ளை போல இருக்கிறார். அவர் மகளுக்கு திருமணம் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது” என்று பேசினார்.
என் மாமனார் இறந்த பிறகு சில வருடங்களுக்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த ஒரு அதிமுக காரர் ஒருவர் சென்னையில் எஸ்.டி.எஸ்ஸிடம் “ நான் எஸ்.எம்.டி.சந்திரனின் உறவினர். அவருக்கு கஸின்.” என்று சொன்ன போது எஸ்.டி.எஸ். “ சந்திரன் எனக்கு மகன் போல. இறந்துட்டானே.” என்று கண்ணீர் விட்டு அழுது விட்டாராம்.
இங்கே நான் சொல்ல வருவது வேறு.
குங்குமத்தில் நெஞ்சுக்கு நீதி தொடராக வெளியிட்ட போது படித்திருக்கிறேன்.
அதில் இரு அரசியல் நிகழ்வுகள் என்னால் மறக்க இயலாது.
அண்ணா மறைவிற்கு பின் கருணாநிதி முதல்வரான மூன்றாவது மாதம் நடந்த விஷயம்.
என் நினைவில் இருந்து எடுத்து எழுதுகிறேன். நெஞ்சுக்கு நீதி முப்பத்தைந்து வருடம் முன்னால் படித்ததை என் ஞாபகத்தில் இருந்து அந்த சம்பவங்களை சுட்டுகிறேன்.
விவசாய அமைச்சர் ஏ.கோவிந்தசாமி மரணப்படுக்கையில் இருந்த போது முதல்வர் கருணாநிதியிடம் “ நான் இறந்த பின் என்னுடைய ஜாதியில் ஒருவரை அமைச்சராக்க வேண்டுமே என்று எண்ணி பண்ருட்டி ராமச்சந்திரனை மந்திரியாக்கி விடாதீர்கள்” என்று சொன்னாராம்.
கருணாநிதி சொல்கிறார்.” ஏ.ஜி. மரணப்படுக்கையில் இருக்கும்போது அப்படி வலியுறுத்தி சொல்லியும் கேளாமல் பண்ருட்டியை அமைச்சராக்கினேன். அது என் பெரிய தவறு பின்னால் தெரிந்து கொண்டேன்.”
எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த போது நிகழ்ந்த விறுவிறுப்பான விஷயங்கள் பல.
பொதுவாக அன்று தமிழக பெண்கள் கருணாநிதியை மிகவும் வெறுத்தார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு விலக்கப்பட்ட இரண்டாம் நாள். நான் தெருவில் நடந்து வரும்போது  தண்ணீர் பிடிக்க குழாயடியில் பெண்கள் பத்து பேருக்கும் மேல் கூடியிருந்தனர். ஒரு பெண் சொன்னார் : கருணாநிதி கொலையெல்லாம் செய்வானாமில்ல. பெண்களோட கற்ப கெடுத்து விட்டுருவானாம்..”
அங்கிருந்த பெண்கள் அனைவருமே முகம் சுளித்து அதை ஆமோதிப்பது போல தலையாட்டினார்கள்.
ஒரு பான சோத்துக்கு ஒரு சோறு பதம்.
எம்.ஜி.ஆர் நல்லவரு. கருணாநிதி கெட்ட ஆளு.
அன்றைய தமிழக பெண்களின் பொதுப்புத்தி இது.
பின் புத்தி?
அரசியல் மேல் மட்டத்தில் அன்று நடந்த ஒரு எதிர் பாரா திருப்பம் நிறைந்த விஷயம் பற்றி நெஞ்சுக்கு நீதியில் கருணாநிதி பின்னர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு இரண்டாம் முறையாக வந்திருந்த போது குங்குமத்தில் எழுதியதில் நான் படித்ததில் ஞாபக அடுக்கில் இருந்து இங்கே கீழே.
எஸ்.டி. சோமசுந்தரம் அப்போது பாராளுமன்ற உறுப்பினர். கலைஞரிடம் வந்து எம்.ஜி.ஆர் துரோகம் பற்றி வேதனை தெரிவித்திருக்கிறார். துரோகி எம்.ஜி.ஆருக்கு அ ஆதரவாக மேதை மதியழகன் செயல்படுவதைப்பற்றிய தன் தீவிர கோபத்தையும், கடும் அதிருப்தியையும் கருணாநிதியிடம் தெரிவித்திருக்கிறார்.
மதியழகனை நேரில் போய் பார்த்து நாலு வார்த்தை நறுக்கு தெறித்தாற் போல் கேட்கப்போவதாக எஸ்.டி.எஸ். சொல்லியிருக்கிறார்.
கருணாநிதி உடனே,உடனே ‘மதியழகனை சந்திக்க நீங்கள் போகவே வேண்டாம்” என்று தடுத்திருக்கிறார். எஸ்.டி.எஸ் “ நீங்க சும்மா இருங்க. நான் அந்த மனுசனை நேரில் பார்த்து திட்டாமல் இருக்க முடியாது.” என்றாராம்.
மதியழகனை எஸ்.டி.எஸ் சந்தித்த பின் அந்த விசித்திரம் நிகழ்ந்திருக்கிறது. அ.தி.மு.வில் சேர்ந்த முதல் எம்.பி எஸ்.டி.சோம சுந்தரம் என்று மறு நாள் பத்திரிக்கைகளில் செய்தி.
கருணாநிதி இந்த இடத்தில் மதியழகனின் ஆளுமை பற்றி சொல்வது சுவையானது.
மேதை மதியழகனிடம் ஒரு அற்புதமான திறமை உண்டு. அது கான்வர்சேசனில் எவரையும் கன்வின்ஸ் செய்து விடுவார். அவர் சொல்வதை பிறர் ஆமோதித்து ஏற்றுக்கொள்ளும்படி அவருடைய உரையாடலின் வீச்சு இருக்கும். அவர் பேசுவதை மறுத்து பேசவே முடியாது என்று கழகத்தலைவர் குறிப்பிடுகிறார்.
இவர் சொன்னதை மீறி மதியழகனை சந்தித்த சோமுவை இப்படி எம்.ஜி.ஆர் கட்சியில் சேர்ந்த முதல் பாராளுமன்ற உறுப்பினராக்கி விட்டார் அந்த மேதை.


Aug 8, 2018

அவர் தான் கலைஞர். பார். அவர் தான் கலைஞர்!


தமிழகத்தில் பாராளுமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு பலத்த அடி. சிவகாசி, கோபிச்செட்டிபாளையம் தவிர அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று விட்ட நிலை.எம்.ஜி.ஆருக்கெதிரான மு.கருணாநிதியின் மகத்தான முதல் வெற்றி. இந்திராகாந்தி மீண்டும் பிரதமரானவுடன் எம்.ஜி.ஆர் ஆட்சி டிஸ்மிஸ்.
தலைப்பு செய்திக்கு பொருத்தமாக ஏதாவது எழுதவேண்டும் என்று மதுரை ஏ.ஏ. ரோட்டில் தி.மு.க தோழர்கள் என்னிடம் கேட்டனர்.தி.மு.க.மன்றத்தின் முகப்பில் ஒரு போர்டு. அதில் அவ்வப்போது ஏதேனும் எழுதிப் போடுவது மன்றத்தாரின் வழக்கம்.
எம்.ஜி.ஆரை கிண்டல் செய்வது போல வாசங்கள் ஏதேனும் சொல்ல முடியுமா? நான் யோசிக்காமலே என் நினைவில் தெளிவாய் இருந்த ஒரு கவிதையின் வரிகளை அவர்களிடம் எழுதிப்போடச் சொன்னேன். ”உங்கள் தலைவர் முன்னரே எழுதிய கவிதையொன்றின் ஒரு நான்கு வரிகள் தான் இவை. இதனை மன்றத்தின் போர்டில் எழுதுங்கள். எழுதி அவர் பெயரை போடுங்கள்.”அந்த வரிகள்
“ மான் போட்ட கணக்கை வேங்கை அழித்து விடும்.ஏன் போட்டாய் தப்புக்கணக்கென்று வேங்கையை வேடன் வீழ்த்திடுவான்.இது தான் உலகு”
ஏ.ஏ. ரோட்டில் பலரும் நின்று நின்று இந்த மு.க.வின் கவிதை வரிகளை எம்.ஜி.ஆர் அரசு டிஸ்மிஸ் ஆன அன்று வாசித்து சென்றார்கள். அந்த அரசியல் சூழலுக்கு மிகப்பொருத்தமான வரிகள் கருணாநிதி முன் எப்போதோ எழுதியவை. கரகரத்த குரலில் அவர் சொல்வது போலவே இருக்கிறதல்லவா?
………………………………………………………….



முதல் முறை முதல்வராய் மு.க இருந்த போது அவர் கவிதை வாசித்த ஒரு கவியரங்கம். குன்றக்குடி அடிகளார் தலைமை.
தமிழக முதல்வர் கவிதை வாசித்தார்.“எனக்கிருக்கும் எத்தனையோ வேலைகளில் இதுவும் ஒன்று என கிறுக்கும் என்னை ஈங்கழைத்தார் பெருந்தவக்கிறுக்கர்” என்று ஆரம்பித்தவுடன் ஆரவாரம் எப்படியிருந்திருக்கும்?
ஒரு சம்பவம் ஒன்றை விவரித்தார். வள்ளியை தேடி முருகன் மலையேறுகிறான். அப்போது எதிர்ப்பட்ட முதியவர்கள் சிலரிடம் வள்ளியெங்கே என்று கேட்கிறான். மலையுச்சிக்கு சென்றால் காணலாம் என வயதானவர்கள் சொல்கிறார்கள்.
மலையுச்சிக்கு செல்கிறான் முருகன். மு.க சொல்கிறார். “கண்டவிடமெல்லாம் வள்ளிக்கிழங்கு! கிழங்களின் குறும்பு தான் என்னே! வள்ளியெங்கே என்று கேட்டால் கிழங்கினை காட்டி விட்டு சென்று விட்டார்களே!”
இந்த கவியரங்கத்திலோ அல்லது வேறு கவியரங்கம் ஒன்றிலோநிலா, தென்றல் ஆகிய தலைப்பில் கவிதை வாசிக்க வேண்டிய இருவர் வரவில்லையாம். மு.க. வின் கிண்டலான எதிர்வினை: “கவியரங்க விழா பகலில் நடப்பதால் நிலா வரவில்லை. கவியரங்கம் குளிர் சாதன அறையில் நடப்பதால் தென்றலும் இங்கே நுழையவில்லை”

ஒரு விண்ணப்பம்.
அவருடைய போராட்டமான அரசியல் வாழ்வுக்காகவும், எவரோடும் ஒப்பிட முடியாத தன்மைக்காகவும்
பாரதரத்னா விருது கருணாநிதிக்கு உடனே, உடனே வழங்கப்படவேண்டும்.அது தகுதியும் நீதியுமாகும்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு கருணாநிதிக்கு கொடுக்கப்படவேண்டும் என்று சொன்னால் தான் அபத்தம்.

Aug 7, 2018

Miracles Just happen


மதியமும் இல்லாத மாலையும் இல்லாத மயக்க பொழுதில் சின்மயா நகர் பஸ் ஸ்டாப்பில் நான். பஸ் வரவில்லை. ஷேர் ஆட்டோ எதிலும் இடம் இல்லை.
ஒரு ஸ்கூட்டர் இளைஞனிடம் லிஃப்ட் கேட்டேன். உடனே அவர் நிறுத்தினார். நான் இரைஞ்சலாக ’பஸ் வரவில்லை’ என்று விளக்கமுனையுமுன்னே “ நீங்கள் ராஜநாயஹம் சார் தானே?” என்று முகம் மலர்ந்தார்.”உங்களை படிக்கும் வாசகன் நான்”
“எப்படி என்னை அடையாளம் கண்டீர்கள்?”
”உங்களை தொடர்ந்து படிப்பவனுக்கு அது சிரமமான விஷயம் இல்லை”
ஸ்கூட்டரில் ஏறிக்கொண்ட பின் தெரிய வந்தது - அவர் பெயர் சாமிநாதன் ராமசாமி. திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். நாளை அவர் எடுக்க இருக்கும் ஷார்ட் ஃப்லிம்க்காக கிண்டியில் ஆர்ட் டைரக்சனுக்காக செலவு செய்துள்ள நிலை. நாளை ஷூட்டிங் கேன்சல் ஆனால் நிறைய நஷ்டம். அந்த நிலையில் அது விஷயமாக அலையும் நிலையில் எனக்கு லிஃப்ட் கொடுக்கிறார். எனக்கு கவலை கூடி விட்டது.
’ இந்த ஷூட்டிங் பிரச்னை இல்லாவிட்டால் உங்களை ஆலப்பாக்கம் வந்து வீட்டிலேயெ விட்டிருப்பேன். ’ என்று வேதனையோடு வருத்தப்பட்ட்டார். நான் அவரைத் தேற்றி என்னை ஆற்காட் ரோட்டில் என்னை இறக்கி விட்டால் போதும் என்றேன்.
வேம்புலிஅம்மன் கோவில் வரை நடந்து வந்தேன். பஸ் கிடைக்கவில்லை. ஷேர் ஆட்டோ ஒன்றில் கூட ஏறவே முடியவில்லை.
ஒரு டாக்ஸி வந்து நின்றது. போரூரா சார் என்று அதில் இருந்த மூன்று இளைஞர்கள் கேட்டனர். ”நான் ஆலப்பாக்கம் போக வேண்டும். ஹோண்டா ஷோ ரூம் அருகில் இறங்கிக்கொள்கிறேன்.” என்றேன். கதவை திறந்து ’ஏறுங்க சார்’ என்று ஒரு இளைஞன் சொன்னான். “ நீங்க புண்ணியம் நிறைய செய்திருப்பீர்கள். சரிதானே.” என்றான். என்னிடம் வார்த்தையில்லை.
”சாருக்கு ஏசியை போடு” 
கார் விண்டோக்களை ஏற்றினார்கள் இருவர்.

Miracles never cease in this world!

வளசரவாக்கம் தாண்டி ஹோண்டா ஷோ ரூம் அருகில் இறங்கி ரோட்டை குறுக்கே தாண்டி ஆலப்பாக்கம் ரோட்டில் நுழைந்தேன்.
பால் வாங்குவது, ரொட்டி வாங்குவது, தக்காளி,பச்சை மிளகாய், தேங்காய், முட்டை வாங்குவது எல்லாம் இவ்வளவு சவாலான விஷயமா?!
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.
மு.கருணாநிதி மரண செய்தி வெளியிடப்படுமுன்னரே வீட்டுக்குள் நுழைந்தேன்.

......................................





Oct 22, 2017

சோழா ஷெரட்டான் சலூன்


சோழா ஷெரட்டான் ஹோட்டல் பகுதியெல்லாம் அப்போது இவ்வளவு பிசியாக இருக்காது. இன்று சோழாவின் சுற்றுப்புறம் பார்க்கக்கிடைக்கும் போதே மூச்சு திணறுகிறது. மெட்ராஸ் முகமே சென்னையாக மாறி விட்டதே.
முடிவெட்டுவதற்கு எப்போதும் மாதாமாதம் சோழா தான் போவது என்று ஒரு காலம் எனக்கு இருந்திருக்கிறது.

சோழாவில் நுழைவதற்கு முன் பார்த்த காட்சி இன்னும் மறக்கவில்லை. காம்பவுண்டின் முனையில் ரிக்ஷா ஒன்று. ரிக்ஷாக்காரர் கையில் முரசொலி. கருணாநிதியின் கார் கோபாலபுரத்திலிருந்து திரும்புகிறது. நான் கருணாநிதியின் காரைப் பார்க்கிறேன். கருணாநிதி அமர்ந்திருக்க மு.க.தமிழ் காரை ஓட்டிக்கொண்டு வருகிறார். ரிக்ஷாக்காரர் கருணாநிதி காரில் வருவதை கவனித்து விடுகிறார். நானும் அந்தக்காட்சியை கவனிப்பதை பார்த்து விட்டு என்னிடம் சொல்கிறார் : ’தலைவர் போறாரு.’
கொஞ்சம் நிறுத்தி பின் என்னிடம் ரகசியம் ஒன்றை உரக்கச் சொல்வது போல ஒரு கையை உயர்த்தி சொல்கிறார் “ வருவாரு”
பின் மீண்டும் சிலேடையை உடைத்து “ கோட்டைக்கு வருவாரு.”
மீண்டும் கருணாநிதி ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை. இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர் முதல்வராக ஆட்சி செய்து கொண்டிருந்த நேரம் அது.

இன்று முதுமை நோய் மூடியுள்ள நிலையில் கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் செல்வது ‘செய்தி’யாகிறது. அன்றும் கூட 
அவர் முரசொலி அலுவலகத்துக்கு தான் சென்று கொண்டிருந்திருப்பார்.



சோழாவில் சலூன் பார்பர் சொல்வார் : 'இப்ப தான் வைஜயந்திமாலா அவர் பையனுக்கு முடி வெட்ட வந்திருந்தார்.'
சோழாவில் அந்த பில் முதலில் நீட்டுவார். மெனு போல நிறைய அழகு சம்பந்தமாக வரிசை கட்டி ஏதேதோ இருக்கும். நான் ஹேர்கட் மட்டும் டிக் செய்வேன். ஷேவிங், ஃபேஷியல் என்று டிக் செய்தால் அவ்வளவு தான். பில் எகிறி விடும்.
ஹேர் கட் செய்யும்போதே பார்பர் நிறைய பேசுவார்.
ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன், மாதத்தில் பத்து நாட்களாவது சென்னை ஷூட்டிங். சோழாவில் தான் தங்குவார்கள்.
ராஜேஷ் கன்னா ஷூட்டிங் இல்லாத நேரத்தில் பெரும்பாலும் பாரில் குடித்துக்கொண்டிருப்பார்.
Introvert. யாரிடமும் பேசக்கூட மாட்டார்.
யாருக்கும் டிப்ஸ் தரமாட்டார். முடி வெட்டிக்கொண்ட போதும் டிப்ஸ் தந்ததேயில்லை.
அமிதாப் எல்லோருக்கும் அப்போதே நூறு ரூபாய் டிப்ஸ் தருவார். ரொம்ப கலகலப்பாக இருப்பார். அவர் குளித்தவுடன் ஹேர் செட்டிங்க்காக அறைக்கு அழைப்பார். அதற்கே கூட பார்பருக்கு நூறு ரூபாய் தருவார்.
எனக்கு முடிவெட்டியதும் பார்பருக்கு நான் ஐந்து ரூபாய் டிப்ஸ் கொடுப்பேன். ராஜேஷ் கன்னா அளவுக்கு என்னை அவர் நினைக்கத் தேவையில்லை.

Aug 23, 2017

ஊள அழுக, பவ்யம் பாவ்லா


”கருணாநிதி சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள். பார்வையில் ஆயிரம் விளக்கங்கள்” - வைகோ

மு.க சிரிப்பின் ஒரேஅர்த்தம், பார்வையின் ஒரே விளக்கம் :
“ஒன் ஊள அழுக, பவ்யம் பாவ்லாவெல்லாம் ஆயிரம் தடவ பாத்திட்டேன். நான் பயப்படவே மாட்டேன்.தைரியமா இருப்பேன்.”

........................................

http://rprajanayahem.blogspot.in/2016/04/blog-post_7.html

http://rprajanayahem.blogspot.in/2016/05/2016.html

http://rprajanayahem.blogspot.in/2015/01/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/2015/01/blog-post_16.html

http://rprajanayahem.blogspot.in/2015/01/blog-post_28.html

May 1, 2017

சித்ரகுப்தன்




கருணாநிதியின் ஏட்டை சித்திரகுப்தன் தொலைத்துவிட்டான்.
திமுக தொண்டர்களை சந்திக்க இருக்கிறார் தலைவர்!?

எம தர்ம தர்பாரில் கணக்கு முடிக்கிற சித்ரகுப்தன். இவன் தான் மனித ஜென்மங்களின் ஏட்டை வைத்துக்கொண்டு ஆராய்ந்து ஆயுள் கணக்கை முடிக்கிறவன்.



எனக்குத் தெரிஞ்சி ரெண்டு முருக பக்தர்கள். ரெண்டு பேருமே திருச்செந்தூர் முருக தரிசனம் மாதா மாதம் செய்பவர்கள். ரெண்டு பேருமே பரம எதிரிகள்! ’இவன் விளங்காத பய’ என்று அவனும் 
“ வீணாப்போனவன் ” என்று இவனும் ஒருவரையொருவர் பரஸ்பரம் தூற்றிக்கொள்பவர்கள்!

ஒவ்வொரு தடவையும் ஒரு புது பொம்பளையோடு தான் திருச்செந்தூர் போவார்கள். முதல் நாளே போய் ரூம் போட்டு தங்குவார்கள். ‘தெங்கு’வார்கள்! நெம்புகோலின் தத்துவ விளக்கம்.
மறுநாள் காலை சன்னதியில் நின்று முருகா முருகா என்று உருகுவார்கள். பக்கத்தில் நிற்கிற புது பொம்பளையும் கண்மூடி பக்தி வெள்ளத்தில் மிதப்பாள். ஒரு தடவயாவது முருகக்கடவுள் “ ஏம்ப்பா… இப்படி கோவிலுக்கு என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் புதுசு புதுசா தள்ளிக்கிட்டு வர்ரீங்களேடா.. இது நல்லாவா இருக்கு..” என்று கேட்க மாட்டாரா?

இந்த ரெண்டு பேர்ல ஒருத்தனுக்கு  சித்ரகுப்தன் மேல பயங்கரமான obsession. தினமும் திரும்பத் திரும்ப சித்ரகுப்தன பத்தியே பேசிட்டே இருப்பான்.

சிலருக்கு தாங்கொண்ணா துயரம், இழிவு, சிறுமை கண்டு புழுவாய்த் துடிப்பார்கள். ஏன்?

’ஏன்னா அவிங்க ஏட்டை கையில் எடுத்து பார்த்துக்கொண்டிருக்கிறான் சித்திர குப்தன். வச்ச கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறான். ஆயுள் பங்கம் இல்லைன்னாலும் 30 வயதிலிருந்து, 40 வயதிலோ, 50 வயதிலோ எல்லா வயதிலும், எந்த வயதிலோ நொம்பலப்பட்டுக்கொண்டு இருக்கிறாங்கென்னா இவனுங்க ஏட்டை கையில் எடுத்து உத்துப் பாக்கிறான்னு அர்த்தம். சித்திரவதை தாங்க முடியாது.

யாரெல்லாம் நல்லா இருக்கானோ அவன் ஏடு சித்திர குப்தன் கையில சிக்கலன்னு அர்த்தம். அதெ போல ஒருத்தன் சாவு தள்ளிப்போனால் சித்ரகுப்தன் அவன் ஏட்டை நிச்சயமா தொலைச்சிட்டான்.’

இந்த ஃப்ராடுக்கு நகைக்கடை வியாபாரத்தில் தன் யுக்தி பலிக்கவில்லை என்றால்
புலம்பல் இப்படித்தான் ‘ சித்ரகுப்தன் என் ஏட்டை கையில எடுத்துட்டான். நிம்மதியே இல்ல. எனக்கு வாச்சவ சரியில்ல. எங்கப்பன உதைக்கப் போறென்.’ 

சரியான சாமியார் பைத்தியம். சாமியார்களை தேடி அலைவான். சித்தர், புதையல் ஏக்கம் தான்.
இந்த சித்ரகுப்தன் கதை கூட எவனாவது சாமியார் தான் இவன் கிட்ட சொல்லியிருப்பான். 

அப்போது நான் தந்த பெருந்தொகைக்கு பல மாதங்களாக இந்த நகைகடை முதலாளி வட்டி தரவே இல்லை. முதலும் திரும்பி வரவில்லை.

கேட்கப்போன என்னிடம் இவன் சொன்ன பதில்
" மைனர் வாங்க உட்காருங்க. ஐயோ மைனர்...  
காபி, கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிட மாட்டேனு பிடிவாதமா இருக்கீங்களே.  
திருச்சி வயலூர் முருகனை போய் கும்பிட்டேன். அப்பிடியே சமயபுரம் ஆத்தாளுக்கும் ஒரு அர்ச்சனை பண்ணிட்டேன். கேரளாவிலே ஒரு விஷேசமான கோவில்னு சொன்னாங்க. அங்கேயும் போய் என்ன எழவு செய்யனுமோ செஞ்சிட்டு வந்துட்டேன் பாத்துக்கங்க. ஐயோ மைனர்! திருச்செந்தூர் முருகனுக்கு என் முடி, என் பிள்ளைகள் முடி எல்லாத்தையும் காணிக்கையா கொடுத்துட்டேன் போங்க...
முந்தா நாள் தின தந்தியிலே ஒரு விளம்பரம்.ஒரு தாயத்து..ரொம்ப விஷேசமான தாயத்தாம். அதை கையில வச்சிகிட்டா அஷ்ட லக்ஷ்மியும் கிடைக்குமாம். அதற்கும் மணி ஆர்டர் நூறு ரூபா அனுப்பிட்டேன். நான் என்ன செய்யட்டும் நீங்களே சொல்லுங்க. 
சித்திரகுப்தன் என் ஏட்ட கையில எடுத்துட்டான். என் ஏட்டத்தான உத்துப்பாக்கிறான்."

ரோட்டில இவனுக்குப் பிடிக்காத ஒரு வசதியான பெரிய மனிதர் அப்போது போனார். உடனே அசூயையுடன் கத்தினான் “ இவன் ஏட்ட சித்ரகுப்தன் கையில எடுக்க மாட்டேன்றானே. இவன்  ஏட்ட தொலச்சிட்டான்னு நெனக்கிறேன்.”