Share

Aug 3, 2018

காவன்னா காளிமுத்து


கா.காளிமுத்து சிவகாசி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ.வாக இருந்த போதெல்லாம் கூட மதுரையில் ஒரு டுட்டோரியல் கல்லூரி(VTC)யில் ஆசிரியராக வேலை பார்த்தார். அவர் பிரபலமானதெல்லாம் தி.மு.கவிலிருந்து விலகி எம்.ஜி.ஆர் கட்சியில் சேர்ந்தபோது தான்.
தி.மு.கவையே எம்.ஜி.ஆர் கட்சி என்று தான் பாமர மக்கள் சொல்வார்கள். தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் காரில் பயணம் செய்து கொண்டிருந்த தி.மு.க ஸ்தாபகர் அண்ணாத்துரையிடம் விராலிமலையில் வெள்ளந்தியாக பாமர அம்மையார் ஒருவர்
“ நீங்க எம்.ஜி.ஆர் கட்சி தான?” என்று கேட்டதுண்டு.
எஸ்.எஸ்.ராஜேந்திரன் பாணி தொனியில் ஆர்.எஸ்.மனோகர் போல தோளை குலுக்கி காளிமுத்து மேடையில் பேசுவார். சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியை அடுக்கி பேசி எல்லா கூட்டங்களிலும் பலத்த கைத்தட்டல் வாங்குவார். Soap box orator.என் மாமனார் எஸ்.எம்.டி. சந்திரனிடம் பல உபகாரங்கள் பெற்றவர். எம்.ஜி.ஆர் கட்சியில் சேர்ந்த போது பொருளாதாரத்தில் காளிமுத்து மிகவும் பின் தங்கியிருந்த நிலை.

மேற்கு முகவை மாவட்டத்தில் கட்சியை வளர்த்ததில் பெரும் பங்கு வகித்த என் மாமா தன் சொத்தில் இருந்து கட்சிக்கு செலவழித்தவர்.
இரண்டாவது மனைவி நிர்மலா காளிமுத்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன நிலையில் என் மாமா ஒரு கனமான ரெட்டை வட செயினை காளிமுத்துவிடம் கொடுத்து, அதை மம்சாபுரம் அறிவரசன் மூலமாக அடகு வைத்து அந்த பணத்தில் தான் ஆஸ்பத்திரி செலவை சமாளித்தார். நகையை திருப்பி தரவில்லை. நகை மதிப்பு பெரிய அளவிலானது. அந்த நகையை அடகிலிருந்து மீட்க காளிமுத்து அக்கறை காட்டவில்லை.
அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்திராத காலம். இந்த சம்பவமே 1977க்கு முன் நடந்த விஷயம்.

என் மாமா பெரிய முரடர். காளிமுத்துவிடம் கேட்கும்போது “ திருப்பி தந்து விடுகிறேன், அண்ணாச்சி” என்று பவ்யமாக சொல்லியிருக்கிறார்.
வேறு வழியில்லாமல் ராமாவரம் தோட்டத்திற்கு போய் எம்.ஜி.ஆரிடமே என் மாமா நடந்த விஷயத்தை சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆர் கோபமாகி உடனே காளிமுத்துவை தோட்டத்திற்கு வரவழைத்து ’உடனே சந்திரனிடம் வாங்கிய நகையை திருப்பிக்கொடு’ என்று டோஸ் விட்டார்.
நகை திருப்பப்பட்டு என் மாமா கைக்கு வந்தது.
ஒரு கசப்பான நிகழ்வு தான்.

1977க்கு பின்னர் காளிமுத்து ஊராட்சி துறை மந்திரியாகி, 1980ல் விவசாய அமைச்சராக இருந்த நேரத்தில் தாமரைக்கனி எம்.எல்.ஏ ரொம்ப பிரபலம். அப்போது என் மாமனாரிடம் காளிமுத்து “ என்ன அண்ணாச்சி, சும்மா இருந்த பயலை பெரிய ஆளாக்கி விட்டுட்டீங்க. அவன் காமராஜ் நாடார விட பெரிய ஆளாயிடுவான் போல இருக்கு.” என்று அங்கலாய்ப்பாக கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டே ஸ்ரீவில்லிபுத்தூரில் சொல்லியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் இருக்கும்போதே ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்தவர் காளிமுத்து. மூன்றாவது பீரியடில் கூட விவசாய மந்திரியாக இருந்தார்.
துக்ளக் சோ தன் பத்திரிக்கையில் அடுத்த திராவிட தலைவராக காளிமுத்துவை கணித்து எழுதியிருந்தார். கேள்வி பதிலில் கூட இப்படி சொல்வார். ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை.
1989ம் ஆண்டில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவரை நான் மதுரை ரயில் நிலையத்தில் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் என்னைக் காட்டி ஒரு வக்கீல் “ மாமா, ராஜநாயஹம் யார் தெரியுமா? எஸ்.எம்.டி.சந்திரனின் மருமகன்” என்றார்.
அப்போது என் மாமனார் இறந்து இரண்டாவது வருடம். காளிமுத்து என்னை ரயில் நிலைய ஓய்வறைக்கு அழைத்து சென்று ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். “சந்திரனுக்கு நீங்க மருமகன்னா எனக்கும் மருமகன் தான். நானும் சந்திரனும் சகோதரர்களை விட நெருக்கமான நேசம் பாராட்டியவர்கள்." என்றார்.
ஜெயலலிதாவை வறுத்து எடுத்தவர். வசந்த சேனையென்று தாக்கினார். காளிமுத்து பயன் படுத்தியதால் பிரபலமான ஒரு பழைய சொலவடை “கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது.”
ஜெயலலிதாவுடன் சமாதானமாகி, சமாதானமாகி என்ன, சரண்டர் ஆனார்.
ஜெயலலிதாவுக்கு முதல்வராவதில் சட்ட சிக்கல் நேரத்தில் சபாநாயகராயிருந்த தன்னை முதல்வர் ஆக்க மாட்டாரா என்று தவித்தார். ஆனால் பன்னீர் செல்வம் முதல்வர் என்பதை காரில் போகும்போது ரேடியோவில் செய்தியாக அறிந்த போது உடைந்து போனவர் தான். தனக்கு ஜெயலலிதா இழைத்த பெருத்த அவமானமாக இதை கருதினார். அதன் பின் அவர் உடல்நிலையும் மோசாகியது. இந்த அதிர்ச்சி தான் காளிமுத்து மரணத்தை துரிதப்படுத்தியது.
…………………………………

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.