Share

Showing posts with label நடிகையர் திலகம் சாவித்திரி. Show all posts
Showing posts with label நடிகையர் திலகம் சாவித்திரி. Show all posts

May 14, 2020

காருக்குறிச்சி அருணாசலம் மரணம் நிகழ்ந்த விதம்

காருக்குறிச்சிக்கு ஆருடக்குறிப்பு மூலம்
நேரம் சரியில்லை என தெரிந்ததால்
சில நாட்களுக்கு முன்பு திருநள்ளாறு
சென்று விட்டு வந்திருக்கிறார்.
மதுரையில் மெடிக்கல் செக் அப் செய்த பின் டயட் கன்ட்ரோல். இரவில் கோதுமை கஞ்சி.
அன்று ஞாயிற்றுக்கிழமை.
காருக்குறிச்சி அருணாசலம் கோவில்பட்டி பங்களாவில் மதிய உணவு சாப்பிடுகிறார்.
அவருடைய முதல் மனைவி ராமலட்சுமி தான் வீட்டின் பட்டத்தரசி.
தன்னுடைய ஓரகத்திகளின் பன்னிரெண்டு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியவர். சமையல் பக்குவத்திலிருந்து கணவருக்கு
முகம் கோணாமல் பறிமாறுவது வரை
பார்த்து பார்த்து செய்பவர்.
சாப்பிட்டு முடித்தவுடன் திருநெல்வேலி கிளம்புகிறார்.
அங்கே ஒரு கச்சேரி. அது முடிந்தவுடன்
கலெக்டரை சந்திக்க வேண்டியிருக்கிறது.
காருக்குறிச்சி 'நாதஸ்வரம் குரு குலம்' நடத்தும் திட்டம் வைத்திருந்தார்.
அதற்கு திருநெல்வேலி கலெக்டர் நிலம் கடலையூர் சாலையில் ஒதுக்கித்தர இசைந்திருந்தார்.
அவரையும் சந்திக்க வேண்டும்.
கச்சேரி முடித்து விட்டு கலெக்டரை சந்திக்கிறார்.
இரவு ஏழு மணி. பேசுக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்திருக்கிறார்.
திருநெல்வேலி ஹை கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார்.
அவருடன் உப நாயனம் வாசிப்பவர், அவர் பெயரும் அருணாசலம் தான். அந்த அருணாசலம் உடனேயே கோவில்பட்டி வருகிறார்.
அப்போது அவருடைய மனைவியர், புத்திரங்கள் அனைவரும் தியேட்டரில் 'அல்லி' படம் பார்த்து விட்டு அப்போது தான் வீடு திரும்பியிருக்கிறார்கள்.
உப நாயனம் அருணாசலம் தகவல் சொல்கிறார்.
குடும்பம் திருநெல்வேலி பயணம்.
மறு நாள் காருக்குறிச்சிக்கு நினைவு திரும்பி
கண் விழித்து பார்த்த போது துயரத்துடன்
வாய் விட்டு சொல்லியிருக்கிறார்.
"எனக்கு இப்படி ஆயிடுச்சே. நான் புள்ளக்குட்டிக்காரன்"
சுற்றிலும் மனைவியரும் குழந்தைகளும்.
மீண்டும் நினைவு மறந்த நிலை.
அந்த திங்கள்கிழமை, அடுத்த நாள் செவ்வாய் கிழமை இரண்டு நாளும் சுயநினைவு
இல்லாமல் தான் படுக்கையில்.
ஆனால் மறக்கவே முடியாத படி
ஒரு பவித்ர நிகழ்வு.
அவ்வப்போது அவர் வாய் ஸ்வரங்களை முணுமுணுக்கிறது.
கைகள் நாதஸ்வரம் வாசிக்கிற பாவனையில் இயங்குகின்றன.
செவ்வாய் கிழமை அவர் மரணமடைந்து விட்டார்.
Medical report - 'Diabetic Coma.
கோவில்பட்டி கடலையூர் சாலையில் கலெக்டர் கொடுத்த நிலத்திலேயே
காருக்குறிச்சி அருணாசலம் சமாதி.
கோவில்பட்டியில் காருக்குறிச்சி சிலை அமைக்க 
நிதி உதவி ஜெமினி கணேசன் - சாவித்திரி.
திருநெல்வேலி கலெக்டர் எம்.எம்.ராஜேந்திரன் தலைமையில்
ஜெமினி கணேசன் தான் சிலையை திறந்து வைத்திருக்கிறார்.
பின்னாளில் தமிழக தலைமை செயலராக உயர்ந்து,
ஒரிசா மாநில கவர்னர் பதவியும் வகித்த பெருந்தகை எம். எம். ராஜேந்திரன் அவர்கள்.  

Jul 7, 2018

LADIES NOT ALLOWED


ஜெமினி கணேசன் தாத்தா நாராயணசாமி ஐயர் புதுக்கோட்டை மஹாராஜா கல்லூரி பிரின்சிபாலாயிருந்தாராம்.. இவர் ஒரு இசை வேளாளர் இன பெண்ணை அபிமான தாரமாக மணந்திருக்கிறார். அவருக்கு பிறந்தவர்கள் பின்னால் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என அறியப்பட்டவரும், ஜெமினி கணேசனின் தந்தை ராமசாமியும். ராமசாமியும் ஒரு இசை வேளாளர் இனப்பெண்ணைத் தான் மணந்திருக்கிறார். அவரை தான் கங்கா பாட்டி என்று ஜெமினி மகள் கமலா செல்வராஜ் சொல்கிறார்.
ஜெமினி சுத்த பிராமணர் அல்ல. ஆனால் ஜெமினியின் மகள் இவரை பிராமணர் என்றே சித்தரிக்கிறார். ஜெமினி பெருமளவுக்கு ’முக்கா படி அரை வீசம்’ இசை வேளாளர் இனம் தான்.
ஜெமினியின் தாயார் முண்டனம் செய்த பிராமண விதவைக்கோலத்தில் தான் தன் வாழ்நாளில் இருந்தார். ஒரு விஷயம். இசை வேளாள இனம் பிராமண ஜாதியுடன் கலந்து விட்டால் அப்படிப்பட்டவர்கள் பிராமண கோலம் கொள்வதையே விரும்புவர் என்பதற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மடிசார் புடவையே சாட்சி.
” என்னோட அம்மா ஒரு கம்மனாட்டி. கம்மனாட்டி வளத்த பிள்ளை நான்” என்று என்னிடம் ஜெமினி சொன்னார். (தன் தாய் இளமையிலேயே விதவையானவர் என்பதை ’கம்மனாட்டி’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி சொன்னார்.)
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தன் அத்தை என்பதை ஜெமினி மறைத்ததில்லை. ஆனால் எப்படியோ ஜெமினிக்கு பிராமணர் என்ற பிம்பம் சாசுவதமாயிருந்திருக்கிறது.
ஜெமினியின் முதல் மனைவி பாப்ஜி பிராமணப்பெண் என்று சொல்லப்படுகிறது.
ஜெமினியின் பேச்சே பிராமண பாஷை தானே.
பி.யூ.சின்னப்பா புதுக்கோட்டைக்காரர்.
புதுக்கோட்டைக்காரர் ஜெமினி என்னும்போது மற்றொரு திரைப்பட நடிகர் ஏ.வி.எம்.ராஜனும் புதுக்கோட்டைக்காரர் தான். ஜெமினிக்கு தம்பி போல இருப்பார். இவர் அம்மா இசை வேளாளர், அப்பா முக்குலத்தோர் என சொல்லி கேள்வி.
ஜெமினியின் திரையுலக அந்தஸ்து பற்றி நான் தெளிவாக ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
தமிழ் திரையுலக மூவேந்தர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்ற மூன்று கூர்முனை என்பது ஐம்பதுகளில். அதில் ஜெமினி என்ற கூர் முனை 1960களில் மெல்ல மழுங்கிப்போனதை யாரும் மறக்கக்கூடாது. ஜெமினியின் இயல்பும் இதற்கு ஒரு காரணம். சிவாஜியோடு இரண்டாவது கதாநாயகனாக நடித்ததோடு நிற்கவில்லை. எம்.ஜி.ஆர் இதற்கே “ ஜெமினி தனித்துவத்தை விட்டுத்தருகிறாரே” என்று வருத்தப்பட்டார்.
தன் திரையுலக அந்தஸ்திற்கு குறைவான நடிகர்கள் ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.ஏம்.ராஜன், ரவிச்சந்திரனோடும் இணைந்து ஜெமினி பல படங்கள் நடித்தார். எஸ்.எஸ்.ஆரோடு வைராக்கியம், குலவிளக்கு ஆகிய படங்கள்.
திரையுலக மூவேந்தர் என்ற அமைப்பு மாறி திரையுலகின் இரண்டு திலகங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி உச்ச அந்தஸ்து பெற்று விட்டனர்.
ஜெமினி சின்ன பட்ஜெட் நடிகராகி விட்டார்.
சின்ன பட்ஜெட் நடிகரானது Blessing in disguise. கே.பாலச்சந்தரின் தரமான படங்கள் அவருக்கு கிடைத்தன.
சாவித்திரியோடு அவர் வாழ்ந்த காலங்கள். சாவித்திரி கொடி கட்டிய காலங்களில் ஜெமினிக்கு மார்க்கெட் தமிழ் திரையுலகம் மட்டும் தான். ஆனால் சாவித்திரிக்கு பிரமாண்டமான தெலுங்கு திரையுலகிலும் மார்க்கெட். ஆந்திர மண்ணின் மகள்.
தெலுங்கில், தமிழில் அவர் மொத்த சம்பாத்தியம், ஜெமினியின் சம்பாத்தியத்தை விட நிச்சயம் அதிகம் தான் என்பதை மறந்து விடக்கூடாது. சாவித்திரி பிஸியாக இருந்த காலங்களில் அவர் அந்தஸ்து ஜெமினியை விட கூடுதல் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஜெமினி நடித்த இந்திபடங்கள் கூட வெற்றி பெற்றன என்பது வேறு விஷயம். ஆனால் ஒன்று. சாவித்திரி தெலுங்கு, தமிழில் கதாநாயகி அந்தஸ்து இழந்த பின்னும் தமிழ் திரையில் பல வருடங்கள் ஜெமினி கணேசன் கதாநாயகன் அந்தஸ்தில் இருந்தார்.
1953ல் ஜெமினி ’மனம் போல் மாங்கல்யம்’ படத்தில் தொடங்கி 1974ல் ’நான் அவனில்லை’ படத்தோடு அவர் மார்க்கெட் முடிவுக்கு வந்தது.
”உண்மைக்கின்னே ‘புன்னகை’ (1971)ன்னு ஒரு படம் நடிச்சேனே..அதையும் ரசிக்க மாட்டேன்னுட்டானுங்க.. பொய்க்குன்னே ஒரு படம் ‘ நான் அவனில்லை’ …அதையும் ரசிக்க மாட்டேன்னுட்டானுங்க..” என்று ஜெமினி வேதனையோடு சொன்னார்.
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் 1974ல் உரிமைக்குரல், தங்கப்பதக்கம் என சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தார்கள்.
1953 துவங்கி 1974 வரை ஜெமினி 21 வருடங்கள் மார்க்கெட்டில் இருந்ததாகக் கொள்ளலாம்.
பின்னரும் ஜெமினி எத்தனையோ படங்களில் இருந்தார் என்றாலும் அவை ஜெமினி கணேசன் படம் என்றெல்லாம் சொல்லலாகாது.
மார்க்கெட் போனதை ஜெமினியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முழு மேக்கப், தலையில் விக் வைத்துக்கொண்டு ஸ்டுடியோக்களில் காரில் வலம் வருவார். பார்ப்பதற்கு ஜெமினி இன்னும் மார்க்கெட்டில் இருப்பதாக தெரிய வேண்டும்!
மார்க்கெட். தினத்தந்தியில் ஒரு செய்தி அந்தக்காலத்தில்.
”சௌகார் ஜானகியின் மார்கட்டு சரிந்தது!”
மார் கட்டு.
நடிகையர் திலகம் படம் பார்க்கிற விசேஷ ஆர்வம் எனக்கு இல்லை. சாவித்திரியம்மாவைப் பற்றி ராஜநாயஹம் புதிதாக தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?
BioPic எப்போதும் ஒரு ஆளுமை பற்றி கூடுதல் புகழ்ச்சி இருக்கும். படத்தை மஹாநதி என்று தெலுங்கர்கள் எடுத்திருக்கிறார்கள். மண்ணின் மகளை உயர்த்திப்பிடிக்கவே செய்வார்கள். பொதுப்புத்தி காவிய நாயகியாக உயர்த்தும்போது கணவன் வில்லனாக மாறுவது என்ன அதிசயமா?
சாவித்திரியின் தெலுங்கு திரைச் சாதனைகள் இங்கே உள்ளவர்களுக்கு எப்படி முழுமையாக அறிய முடியும்.
ஜெமினி கணேசனை மட்டம் தட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. ஜெமினி பேச்சை சாவித்திரி கேட்டிருந்தால் பொருளாதார வீழ்ச்சியை தடுத்திருக்க முடியும்.
சாவித்திரியின் Bio pic கமலா செல்வராஜ் சகோதரிகள், சாவித்திரி மகள் விஜய சாமுண்டீஸ்வரி, மகன் சதீஷ் ஆகிய இரண்டு குடும்பங்களுக்கிடையில் பெரும் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.
புஸ்பவல்லி, மகள்கள் ரேகா, ராதா நல்லவர்கள். ஆனால் சாவித்திரி மகள்? என்று பொங்குகிறார் கமலா.
சாவித்திரி Possessive lady. புஸ்பவல்லியும் அப்படித்தான் என்று ஜெமினியே சொல்லியிருக்கிறார். புஸ்பவல்லியுடன் வாழ்ந்த காலத்தில் கூட பாப்ஜியின் வீட்டை மறந்து தான் இருந்ததாக ஜெமினி குமுதம் பேட்டியொன்றில் பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்.
சமந்தா ‘என் முதல் காதலன் ஜெமினி மாதிரி தான். நல்லவேளை அவனை நான் கட்டியிருந்தால் எனக்கு சாவித்திரி நிலை தான்’ என்று ஆசுவாசப்படுகிறாள்.
சாவித்திரிக்கு ஜெயசித்ரா கேள்வி ‘ நீங்க ஏம்மா ஜெமினிய கட்டினீங்க. வேற யாரயாவது கட்டியிருக்கலாமே’
கமல் அந்தக்காலத்தில் சொல்வார் “ ஜெமினி மாமாவை யாராலும் அவமானப்படுத்தவே முடியாது. உங்களப் பத்தி இப்படி இந்த ஆள் பேசறான்னு அவர் கிட்ட சொன்னா ‘போறாண்டா. சொல்லிட்டுப்போறான்…’ என்பார்”
இப்போது அவர் உயிருடன் இருந்து இந்த ’நடிகையர் திலகம்’ பார்த்திருந்தால் “சாவித்திரிய நன்னாத்தான்டா காண்பிச்சிருக்கான்….” அது போதுமே என்று திருப்திப்பட்டிருப்பாரோ.
விஜய சாமுண்டீஸ்வரி சாவித்திரியோடு பகை பாராட்டியதால் தான் அண்ணா நகரில் தனியாக வசித்திருக்கிறார். ஜெமினி கணேசன் மீது சாவித்திரி மகள் கேஸ் போட்டதுண்டு. ஜெமினியை கடுமையாக தாக்கி பேட்டி கொடுத்ததுண்டு.
கமலா செல்வராஜ் தன் தாயை விட சாவித்திரியம்மாவை பிடிக்கும் என்று கூட பேட்டியில் சொன்னதுண்டு. ஆனால் சாவித்திரி படம் அவர் மீது மிகுந்த துவேசத்தை ஏற்படுத்தி விட்டது. “She is very bad. கல்யாணத்திற்கு பிறகும் சாவித்திரிக்கு affairs இருந்தது.” என்று கமலா தூற்றும்படியாக இந்த சாவித்திரி படம் மாற்றி விட்டது.

Caesar’s wife is above suspicion.

என்னுடைய சாவித்திரி கட்டுரையில் அவர் affairs பற்றி குறிப்பிட்டதில்லை.
இப்போது நடிகர் ராஜேஷ் “ அப்படி சாவித்திரியோடு affair வைத்திருந்த நடிகர்களை எம்.ஜி.ஆர் மிரட்டியிருக்கிறார் தெரியுமா?’’ என்று பேட்டி கொடுத்திருக்கிறார்!
கத்திரிக்கா முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும்.

அவர் மறைந்து இவ்வளவு காலம் கழித்து அவர் கற்பு விவாதத்துக்குள்ளாகிறது.
ஜெமினி, சாவித்திரி இருவருமே Promiscous persons. Yet both are honourable.

எம்.எஸ் பெருமாள் என்னுடைய ’நடிகையர் திலகம் சாவித்திரி’ கட்டுரை படித்து விட்டு என்னிடம் சொன்ன ஒரு விஷயம்.
’மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’ பாடல் இப்போது கேட்கும் போதாவது ஜெமினி மாமா உங்க கூட இனிமேலாவது சேரமாட்டாரா’ என்று 1970களில் எம்.எஸ்.பெருமாள் கேட்ட போது சாவித்திரி “இப்ப அந்த பாட்ட பார்த்தா அவர் என் கையில உள்ள பெண் குழந்தை இப்ப பெரிய பிள்ளையாயிருப்பாளே, அவள எப்படி கணக்கு பண்ணலாம்னு தான் அவர் புத்தி போகும்” என்றாராம்.
கமலா செல்வராஜுக்கு அவர் அப்பா பற்றி ரொம்ப பிரமையிருக்கிறது. அவர் அழகானவர் என்பதால் எல்லா பெண்களும் அவரை காதலித்தார்களாம். அவரைத் தேடி வந்தார்களாம். அவர் மேல தப்பில்லையாம். எல்லா நடிகைகளுமே அவரை விரும்பினார்கள் என்று பட்டவர்த்தனமாக சொல்கிறார்.
என் பங்குக்கு நானும் சொல்கிறேன்.
”குழந்தையுள்ளம்” (1969) படம் சாவித்திரி இயக்கிய சொந்தப்படம். ஜெமினி கணேசனும் வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த படம். சௌகார் ஜானகியும் உண்டு.எஸ்.பி.பியின் ஆரம்பக்கால பாடல் ”முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு”. சாவித்திரி டாக்டரம்மாவாக வருவார்.
இந்தப்படத்தில் பி.வாசுவின் சித்தப்பா சேகர் கேமராவில் பணி புரிந்திருக்கிறார். அப்பா பீதாம்பரம் மேக் அப்.
சாவித்திரிக்கும் ஜெமினிக்கும் சண்டை பார்த்திருக்கிறீர்களா என்று நான் சேகரிடம் கேட்டேன்.
சேகர் சொன்னார். “ ரெண்டு பேருக்கும் சண்ட என்ன…. ’நீ அவன் கூட படுத்தில்ல..எனக்கு தெரியாதுன்னு நெனச்சிண்டியா?’ன்னு இவரு கேப்பார்..பதிலுக்கு அந்தம்மா ’நீ அவ கூட, இவ கூடல்லாம் படுத்தேல்ல’ன்னு சொல்லும்.

எல்லா கேசனோவோக்களும் பெண்களிடம் செருப்படி வாங்கித்தான் ஆக வேண்டும்.
கமல் மற்றொரு நடிகரிடம் சொன்னதாக ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். என்னுடைய புரிதல் கீழ்கண்டவாறு.
ஜெமினி ஒரு நடிகையை தொடக்கூடாத இடத்தில் தொட்டிருக்கிறார். நடிகை இவரை உடனே மறுதலித்து எதிர்த்து கன்னத்தில் ஒரு அறை கொடுத்திருக்கிறார். கமல்ஹாசன் அப்போது உள்ளே நுழைந்தவர் அதை பார்த்து விட்டார். இந்த மூன்றுமே சில வினாடிகளில். எதுவுமே நடக்காதது போல ஜெமினி சௌஜன்யமாக கமலைப்பார்த்து கேட்டாராம் “ என்னடா பிள்ளையாண்டான்! எப்படிடா இருக்கே..எப்படா வந்தே…”
அவருடைய கடைசி மனைவி(!) ஜூலியானா அவருடைய தள்ளாத வயதில் குடையால் அடித்திருக்கிறாள்.
ஜூலியானா Spendthrift. ஜெமினி சிக்கனக்காரர். ’எவ்வளவு நகை வாங்கியிருக்கா. இப்பவும் உங்க கடையிலும் நகைய அள்ளறா பாருங்க.’ என்று என் மாமா அங்குராஜிடம் வருத்தப்பட்டு சொல்லியிருக்கிறார்.
ஜூலியானாவிடம் இருந்து தன் அப்பாவை மீட்டு கமலா செல்வராஜ் ஜி.ஜி.ஆஸ்பிடலில் வைத்திருந்த போது ஜெமினியின் அறைக்கு வெளியே ஒரு போர்டு.
“ LADIES NOT ALLOWED”

The height of Irony!
இந்த ‘Ladies not allowed’ அறிவிப்பு காதல் மன்னனின் இழிவான வீழ்ச்சியா? சபலம் நிறைந்த தந்தையை பாதுகாக்க வேண்டுமே என்ற அவருடைய மகளின் பரிதவிப்பின் வெளிப்பாடா?
…………………………….









Sep 23, 2017

ஈதெல்லாம்


நடிகை வாணிஸ்ரீ அந்தக்காலங்களில் பேட்டி கொடுக்கும் போதெல்லாம் தான் நடிகையர் திலகம் சாவித்திரி சாயலில் இருப்பதாக அடிக்கடி சொல்வார். இவரை சிறுமியாக, பதின் பருவத்தில் சாவித்திரி சாயலில் இருப்பதாக சொல்வார்களாம்.

சாவித்திரியே இவரை ஜெமினிகணேசனுக்கு இணையாக நடிக்க வைத்து “குழந்தையுள்ளம்” படத்தை இயக்கியிருக்கிறார். ஜெமினிக்கும் வாணிஸ்ரீக்கும் டூயட் பாடல் “முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு குடி கொண்டதே இன்பத்தேனுண்டு.”
ஆரம்ப கால எஸ்.பி.பி.யுடன் சுசிலா பாடிய பாடல்.

வாணிஸ்ரீயிடம் ஒரு பிரமாதமான தேஜஸ் உண்டு.
சிவாஜி மகன் ராம்குமார் தன் அப்பாவுடன் வாணிஸ்ரீ நடிக்கிற காட்சி படமாக்கப்படுகிறது என்றால் ஷூட்டிங் பார்க்க ஆசைப்படுவாராம்.

சாயல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியில் தோன்றும். இதில் பலரும் விவாதம் செய்வார்கள். அப்படியில்லை என்று.
சுருளிராஜன் ஒரு பேட்டியில் சொன்னதைக்கேட்டால் உடனே யாருக்கும் சிரிப்பு வரும்.
அப்படி என்ன சுருளிராஜன் சொன்னார் - “ என்னைப்பார்த்து பலரும் நான் மலையாள நடிகர் பிரேம் நசீர் மாதிரி இருக்கிறேன் என்று அந்தக்காலத்தில் சொல்லியிருக்கிறார்கள்.”

…………………….

இப்போதெல்லாம் ஆங்கிலப்படங்கள், இந்திப்படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். எப்போதும் இப்படி படங்களை பார்க்காமல் தவிர்த்து விடுவேன். ஆங்கிலப்படங்களை ஆங்கிலத்திலேயே தான் பார்க்க பிடிக்கும்.
அந்தக்காலத்தில் ஆங்கிலப்படங்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்ததில்லை. ஆனால் போஸ்டரில் சில ஆங்கிலப்படங்களுக்கு வினோதமாக தமிழ் பெயர் சூட்டியிருப்பார்கள். வேடிக்கையான தமிழ் தலைப்புடன் சுவரொட்டிகள்.
Panic in Bangkok ஃப்ரன்ச் இத்தாலிய கூட்டுத்தயாரிப்பு எடுக்கப்பட்டு ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டு இங்கு ரிலீஸ் செய்யப்பட்டு ரொம்ப பிரபலமான படம்.
Panic in Bangkok – வந்தேன் உதை மாஸ்டர்
Three Musketeers – மூன்று எம்.ஜி.ஆர் வீரர்கள்
Cold Sweat – கொல்லத்தான் நினைக்கிறேன்.
Snake in the Monkey shadow –  பாம்பு பிடி , குரங்கு பிடி, மரண அடி
ஹாங்காங் மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் இந்த ’ஸ்னேக் இன் த மங்கி ஷேடோ.’
சென்ற மாதம் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த மு.ரவி (ந.முத்துசாமியின் இளைய மகன்) ’இருபத்தைந்தாவது ஆண்டு திருமண நிறைவு விழா’வில் வேடிக்கையான இந்த ஆங்கிலப்பட போஸ்டர்களை நினைவு கூர்ந்து சிரித்துக்கொண்டிருந்தோம்.
.................................

Oct 21, 2012

நடிகையர் திலகம் சாவித்திரி


கேமராவிற்கென்றே வடித்த முகம் ஒன்று என்றால் அது சாவித்திரியின் முகம் தான்!
எப்போதும் நான் பொது இடங்களுக்கு செல்லும்போது சாவித்திரி போல ஒரு பெண் தென்படுகிறாரா என்று தேடுவேன். தேடிக்கொண்டே தான் இருக்கிறேன்.இன்னும் சாவித்திரி போன்ற அச்சு அசலாக இன்னும் ஒரு பெண்ணை பார்க்க வாய்க்கவில்லை. வாழ்க்கையில் எத்தனையோ நிராசைகள்!என்னுடைய சாவித்திரி பாசமலர்,பாதகாணிக்கை,காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் செழிப்பான சாவித்திரி.




சாவித்திரிக்கு சிவாஜி போலவே ஒவ்வொரு காலகட்டத்திலும் உடல் அமைப்பில் மாறுபாடு  உண்டு.
தேவதாஸ்,மிஸ்ஸியம்மா,மாயாபஜார் சாவித்திரி ஒரு வகை அழகு.

களத்தூர் கண்ணம்மா,பாசமலர், பாவமன்னிப்பு, பாதகாணிக்கை, காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் சாவித்திரி வேறு வகை அழகு.

அப்புறம் பூஜைக்கு வந்த மலர் படத்தில் வரும் குண்டு சாவித்திரி.

திருவருட்செல்வர் படத்தில் ’ஊதிப்பெருத்த’ சாவித்திரி.

பின்னால் மலையாளப்படம் ’சுழி’ சாவித்திரி.

அப்புறம் அம்மா கதாபாத்திரங்களில் மெலிந்த ஒல்லி சாவித்திரி

அமிதாப் பச்சன் கூட இப்போது சாவித்திரி பற்றி குறிப்பிட முடிகிறது. ரேகா தன் சோட்டி மம்மி பற்றி சிலாகிக்கிறார்.

சாவித்திரி மட்டுமே அனைத்து நடிகைகளிலிருந்தும் வித்தியாசமானவர்! நடிகைகள் அனைவரிலும் மேலான திறமை கொண்டவர் தான் சாவித்திரி.

பத்மினி,சரோஜாதேவி,தேவிகா இந்த வரிசையில் முதலிடம் சாவித்திரிக்குத் தான்.

வேற்று மொழிப்பெண்கள் தமிழ் திரையில் அன்று நிகழ்த்திய கண்ணிய சாதனை மகத்தானது. முழுக்க ஹீரோ நடிகர்களின் ஆக்கிரமிப்பின் காலத்தில்,ரசிகப்பெருமக்களும் அந்த நடிகர்கள் பற்றிய பிரமிப்பில் இருக்கின்ற நிலையில்,  பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த அன்றைய சாவித்திரி,பத்மினி,சரோஜாதேவி,தேவிகாவெல்லாம் உயர்ந்த கலாபூர்வ நளினத்தை வெளிப்படுத்தினார்கள்.

சாவித்திரி தன் துணை யாரென்று ஆரம்ப காலத்திலேயே,16 வயதிலேயே தேர்ந்தெடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்திருக்கிறார்.அதிலும் சாஸ்திரப்படி இரண்டாவது மனைவி அந்தஸ்தில், சம்பிரதாய வரிசைப்படி மூன்றாவது தாரமாக வாழ்க்கைப்பட்டவர்.ஜெமினி கணேசனுக்கு அப்போது 32 வயது!

(படிப்பதற்கே தலை சுற்றுகிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.)

சில வருடங்கள் ரகசியமாக அந்தத் திருமணத்தைப் பேணிக்காக்கவேண்டிய சூழ்நிலை வேறு! தலைமறைவுத் தாம்பத்தியம்.இதற்கு அவருடைய வளர்ப்பு தகப்பன் சௌதுரி மட்டும் காரணமல்ல.ஆனால் ஜெமினிகணேசன் காந்தர்வத்திருமணம் ( எவ்வளவு யோசித்தும் வேறு வார்த்தை கிடைக்கவில்லை.) செய்து கொண்ட பிரபல நட்சத்திரம் புஷ்பவல்லியும் தான் காரணம்.முதல்மனைவி பாப்ஜி அமைதியாக வேடிக்கை பார்த்தாலும் கூட புஷ்பவல்லி கடுமையான குரோதத்தை சாவித்திரி மீது காட்டினார்.
தான் ஓட்டி வந்த காரை இவர் மீது ஏற்றிக் கொல்லத்துணிகிற ஆவேசம்,துவேசம் புஷ்பவல்லிக்கு இருந்தது.

1952ல் மனம்போல் மாங்கல்யம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் சாவித்திரிக்கு திருமணம். ஏற்கனவே ஜெமினி கணேசனுக்கு1951செப்டம்பர் 22ல் புஷ்பவல்லியோடு தொடர்பு ஏற்பட்டு விட்டது.புஷ்பவல்லிக்கு 1954ல் ரேகாவும் 1955ல் ராதா என்ற பெண்ணும் பிறந்த நிலையில் அந்த வருட கடைசியில் Gemini-Pushpavalli relationship ended abruptly. 1956ல் தான் சாவித்திரியுடன் ஜெமினி திருமண உறவு வெளித்தெரிந்தது.

இவ்வளவிலும் சாவித்திரியின் நடிப்புத்திறமை ஜ்வலித்த மாயம் தான் பெரிய விஷயம். Director’s delight என்றே பெரிய இயக்குனர்கள் வாய்விட்டுச்சொன்னார்கள்.பிரமிக்க அடிக்கிற நேர்த்தியான நடிப்பு.

An angel’s graceful performance!

தெலுங்கு தமிழ் திரையுலகங்களில் கதாநாயக தேவேந்திரர்களின் இந்திராணியாக சாவித்திரி எட்டுக்கண்ணும் விட்டெரிய வலம் வந்தார்.

நிர்மலமான அழகுமுகம் கொண்ட சாவித்திரி.
பெண்மையின் மொத்த சாரமும் இயைந்து ஊறிய ஈர மென்மை.

எந்த ஹீரோ நடித்தாலும்,படத்தின் பெரும்பகுதியையும் ஹீரோ ஆக்கிரமித்தாலும் சாவித்திரி தன் விஷேச நடிப்பால் புறந்தள்ளி விட்டார்.

காதல் காட்சிகளில் vulgarity,obscenity எதுவும் காணமுடியாது. வேட்டைக்காரனில் எம்.ஜி.ஆருடன் காதல் காட்சி பற்றி கொஞ்சம் முணுமுணுப்பு இருந்தது.

சாவித்திரி தெலுங்குப்பெண்.ஆனால் தமிழ் பேசுவது ரொம்ப கச்சிதம். Accent and Diction பிரமாதம். சிவாஜி கணேசனுக்கு இணையாக ஏன் இன்னும் கூடிய அளவில் தமிழ் உச்சரிப்பு சிறப்பாகவே இருக்கும்.ஆனால் சிவாஜி ஒரு தெலுங்குப் படத்தில்(பெம்புடு கொடுகு) நடித்தபோது “Ganesan’s Telugu pronunciation is horrible” என்று அங்கே ஒரு பத்திரிக்கையில் (Kinema, Dec 1953 issue)எழுதினார்கள். நடிகர் திலகத்தை விட நடிகையர் திலகம் எத்தகைய திறமை வாய்ந்தவர்!
சார்லி சாப்ளின் போலவே சாவித்திரியும் Left hander!சாவித்திரியின் நடிப்பைப் பற்றி விளக்கக்கூட ஒரே வார்த்தை-'Perfect'.

சாவித்திரியின் கண்கள் பேசிய கதைகள்! முக பாவங்களின் உணர்ச்சிகள்!

சரோஜாதேவி தனக்கு கிடைத்த வாய்ப்புகளால் சாவித்திரியை மிஞ்சி விடமுடிந்தாலும் அவருடைய திறமையான நடிப்பை நெருங்க முடிந்ததில்லை.

நடிகையாக சாவித்திரியின் சாதனைகள் பற்றி எழுதி உணர்த்தி விட சாத்தியமில்லை. The greatest actress ever born and ever to be born!
ஆறு படங்கள் இயக்கியவர்.ஜெமினி,வாணிஸ்ரீ யுடன் நடித்த ’குழந்தையுள்ளம்’,(’முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு,துயில் கொண்டதே இன்பத்தேனுண்டு’ என்ற ஆரம்பகால எஸ்.பி.பி பாடல் இந்தப்படத்தில் தான்!)சிவாஜியுடன் இவர் நடித்த’பிராப்தம்’ (பி.சுசிலா டிஎம்எஸ் பாடிய ’சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்.முடிவே இல்லாதது.எங்கே சென்றாலும் தேடிகிடைக்கும் இனிய சுகம் இது’)இரண்டு படங்களும் சாவித்திரியே இயக்கியவை தான்.
1969ல் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் பிரிந்து விட்டார்கள்.
Even though unforgiving, never

Against thee shall my heart rebel
                                 -Byron


சாவித்திரி தமிழில் எடுத்த ’பிராப்தம்’ படமும் தெலுங்கில் எடுத்த ’விண்ட சம்சாரம்’படமும் இவர் பொருளாதாரத்தை சிதைத்து வாழ்வு தடம்புரளக்காரணமாகிவிட்டது.
தெலுங்கில் சாவித்திரியுடன் அக்கினேனி நாகேஸ்வரராவ்,ஜமுனா நடித்து வெற்றி பெற்ற படம் ’மூக மனசுலு’.இதைத்தான்  சாவித்திரி தமிழில் 1969ல் படப்பிடிப்பை துவங்கி சிவாஜி,சந்திரகலாவும்  நடிக்க ’பிராப்தம்’ என்ற பெயரில் தானே கதாநாயகியாக நடித்து,தயாரித்து இயக்கினார்.
’பிராப்தம்’ படம்  இரண்டு வருடம் தயாரிப்பில் இருந்ததால் வட்டி எகிறி விட்டது.சிவாஜி படங்கள் சில அந்த நேரத்தில் சரியாக ஓடாததால் வினியோகஸ்தர்கள் இந்தப் படவெளியீட்டில் ஒத்துழைக்கவில்லை.அதனால் படம் படுதோல்வி கண்டது.

தமிழில் சிவாஜி பத்மினி நடித்த ’வியட்நாம் வீடு’ படம் தான்தெலுங்கில்1970ல் துவங்கி ரீமேக்காகி ’விண்ட சம்சாரம்’ என்ற பெயரில் சாவித்திரியும் ஜக்கையாவும் நடித்து வெளியானது.

பிராப்தம், விண்ட சம்சாரம் இரண்டு படங்களுமே ஒரே நாளில் 1971ல் வெளியாகிய படங்கள். துரதிர்ஷ்டங்கள் எப்போதுமே தனியாக வருவதேயில்லை!

ரு மனுஷியாக saint என்று தான் சொல்லவேண்டும். சொத்துக்களை இழந்து,ஹபிபுல்லா ரோடு பங்களாவை இழந்து, அண்ணா நகர் வீட்டில் இருந்த போதுகூட அவர் செய்த உதவிகள் பற்றி தெரிய வரும்போது ஆச்சரியம் தான் மிஞ்சுகிறது.

ஒரு ரசிகர். தினமும் நூறு ரூபாய் மணியார்டர் சாவித்திரிக்கு செய்து வந்தவர்.திடீரென்று ஒரு நாள் தன் தொழிலில் நொடித்துப்போய் சாவித்திரியைக் காண வந்து தன் நிலையை சொல்கிறார். 6000 ரூபாய் இருந்தால் மீண்டும் பிசினசை துவங்கமுடியும். வீட்டில் உள்ள தன் ஷீல்டுகள் எல்லாவற்றையும் ஒரு சேட்டுக்கடையில் விற்று 10000 ரூபாய் அந்த ரசிகருக்கு கொடுத்தவர்.

அண்ணாநகர் வீட்டுக்கு இவருடைய பழைய டிரைவர் ஒருவரின் மகள் வருகிறார்.தன்னுடைய விலையுயர்ந்த சேலையை எடுத்து வீட்டு முன் இருக்கிற ரிக்‌ஷாக்காரனிடம் கொடுத்து விற்று வரச்சொல்லி,கிடைக்கும் பெருந்தொகையான பணத்தை அந்தப்பெண்ணின் திருமணச்செலவுக்கு கொடுக்கிறார்.
பெண் தெய்வம் சாவித்திரி!

எம்.ஜி.ஆருடன் மஹாதேவி,வேட்டைக்காரன்,பரிசு ஆகிய படங்கள். சந்திர பாபு தயாரித்து இயக்கி, வாழ்க்கையைப் பாழாக்கி, முடியாமல் நின்று போன ’மாடி வீட்டு ஏழை’யில் கூட எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி தான்.

சிவாஜியோடு ஜோடியாக அமரதீபம்,வணங்காமுடி,அன்னையின் ஆணை, காத்தவராயன் துவங்கி,ரத்தத்திலகம்,கை கொடுத்த தெய்வம், நவராத்தி்ரி, திருவிளையாடல் தாண்டி பிராப்தம் வரை சாவித்திரி!

ஜெமினி கணேசன் தான் சாவித்திரிக்கு மிகப்பொருத்தம் என்று இன்றும்

”யார் யார் யார் அவள் யாரோ ஊர்பேர் தான் தெரியாதோ” “காலங்களில் அவள் வசந்தம்” காற்று வந்தால் தலை சாயும் நாணல்” போன்ற பாடல்கள் சாட்சி சொல்கின்றன.

பாசமலர் படம் ரிலீஸ் அன்று எல்லாம் உனக்காக என்று ஒரு படமும் வெளியானது. அதில் சிவாஜியின் ஜோடி சாவித்திரி. ஆனால் அண்ணன் தங்கையாக பாசமலரில் வந்தவர்கள் அதே நேரத்தில் இதில் ஜோடியாக நடித்ததை ரசிகர்கள் ஏற்கவில்லை.


சாவித்திரியின் Rash car driving பற்றி இப்போதும் பலர் நினைவில் வைத்திருக்கிறார்கள்.அவருடைய குடிப்பழக்கம்....
மிகத்தேர்ந்த நடிகை சொந்த வாழ்க்கையில் வேஷம் போடத்தெரியாதவராயிருந்திருக்கிறார்!
அவருடைய அம்மா சுபத்ராம்மா,அக்கா மாருதி ஆகியோரை புகைப்படங்களாக பார்க்கும்போது அவர்கள் சாவித்திரியின் பேரழகுக்கு உறை போடக்காணமாட்டார்கள் என்று உடனே தோன்றுகிறது. சேற்றில் செந்தாமரை தான்.
ஒன்றரை வருடங்கள் கோமாவில் கிடந்து சாவித்திரி இறக்கவேண்டியிருந்திருக்கிறது.அப்போது 46 வயது.
சில மரணங்கள் ஆறாத துயர வடுக்களை ஏற்படுத்தி விடுகின்றன.
ஆறாது ஆறாது அழுதாலும் தீராது
ஆனாலும் வழியென்ன தாயே!

இந்திய அரசாங்கம் 08-03-2009ல் ஒரு தபால்தலை சாவித்திரிக்கு வெளியிட்டது.இந்த விஷேச கௌரவம் இந்தி நடிகை தேவிகாராணி,மீனாகுமாரிக்கும் கூட கிடைத்திருக்கிறது.
.......

http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_29.html