Share

Jan 31, 2018

ஜோதிடம்


இலக்கிய வாசிப்பு மட்டும் என்றில்லை.
எண்பது ஜோதிட நூல்கள் படித்திருந்தேன். நியூமராலஜி பற்றியும் சீரோ, பண்டிட் சேதுராமன் துவங்கி நிறைய புத்தகங்கள் படித்திருந்தேன்.
ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இதனால் மிகுந்த சிரமங்கள் எனக்கு ஏற்பட்டது.
பலருக்கும் நான் ஜோதிடம் பார்க்க வேண்டியிருந்தது.
வசதியான ஒரு உறவினர் தன் மகளுக்கு வந்த வரன் ஜாதகங்கள் என் கவனத்திற்கு வாராவாரம் கொண்டு வருவார். நான் பொருத்தம் பார்த்து எழுதி தருவேன். இலவசமாக. நான் பார்த்த ஜாதகங்களில் இறையன்பு ஐ.ஏ.எஸ். ஜாதகமும் ஒன்று.
“ இவன் ஐ.ஏ.எஸ். சரி தான். ஆனா வயசு ரொம்ப அதிகமாயிருக்கு” என்பார்.
ஐ.பி.எஸ்., டாக்டர் ஜாதகங்கள் நிறைய தருவார்.
பொருத்தங்கள் முழுமையாக இருந்தாலும் ஜாதகங்களை கழிக்க பல காரணங்கள் சொல்வார்.
” இவன் ஐ.பி.எஸ்.. சரி.. ஆனா இவன் அப்பன் சாதாரண ஆளாயிருக்கான். என் சம்பந்தின்னா எனக்கு சமமா அந்தஸ்து, செல்வாக்குள்ளவனா இருக்க வேண்டாமா? தொர.. என்ன நான் சொல்றது?”
வாரத்திற்கு பத்து ஜாதகத்திற்கு குறையாது.
அவருடைய ஜபர்தஸ்து பிரகாசமானது. Subtext கீழ்கண்டவாறு இப்படித்தான் இருக்கும்.
“இவன் கலெக்டர்.. சரி… சரி தான். ஆனா இவன் அப்பன்..? இந்தியாவில இருபத்தேழு ஸ்டேட் இருக்காது? ஒரு ஸ்டேட்டுக்கு கூட இவன் அப்பன் கவர்னரா இல்லயே? அட ஒரு முன்னாள் கவர்னரா இருந்தா கூட சரி தான்.”
ஜாதகம், நியூமராலஜி தொரக்கி தெரியும் என்ற செய்தி ரொம்ப வேகமாக உற்றார், சுற்றம், அறிந்தார் அனைவருக்கும் பரவியதால் நான் பெருந்தொல்லை சந்திக்க நேர்ந்தது.
ஒரு கல்யாண வீட்டிற்கு போனால் அங்கே சிலர் என்னிடம் ஜோதிடம் கேட்க ஆரம்பித்தார்கள். எழவு வீட்டுக்கு போனால் என்னை சுற்றி எதிர்காலம் பற்றி விசாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஓசி என்பதால் எனக்கு ஒன்னு, எங்கப்பனுக்கு ரெண்டு.

பஜாருக்கு போனால் நகைக்கடை முதலாளி ஜோசியம் கேட்பார்.
“மைனர்! இவரு ஒங்க கிட்ட ஜாதகம் பாக்கனும்னு ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருக்காரு. கொஞ்சம் இங்கயே பாத்து சொல்லுங்க.” என்று கடையில் அமர்ந்திருக்கும் தன் நண்பருக்கு சிபாரிசு செய்வார்.
முகமறியா அந்த நபர் ஜாதகத்தை கொடுப்பார். விபரம் கேட்டுக்கொள்வார்.
மறு நாள் அவர் மீண்டும் என்னைப் பார்த்து தலையை சொறிவார்.
” என்னுடைய அம்மாவும் மனைவியும் உங்கள வீட்டுக்கு அழைத்து வரச்சொன்னார்கள். இன்னும் சில விபரங்கள் கேட்க வேண்டியிருக்கு. சிரமம்னு நினைக்காம வாங்க சார்..”
வீட்டுக்கு என்னை வற்புறுத்தி அழைத்துச் செல்வார். நாலு ஜாதகம் பார்ப்பதென்றால் ரெண்டு மணி நேரமாவது ஆகும்.
அதே நபர் ஒரு ரெண்டு மாதத்தில் மீண்டும் என்னிடம் பவ்யமாக கெஞ்சுவார். ”கோயம்புத்தூருல இருந்து என்னோட அக்காவும் அக்கா மாப்பிள்ளையும் வந்திருக்காங்க. மச்சானுக்கு கொஞ்சம் சிக்கல். ஒங்க கிட்ட ஜாதகத்த காண்பிக்கணும்னு சொல்றார்.”
பேரு மாத்தணும்.. நியூமராலஜி பாக்கணும்… நான் கார் வாங்கணும்..எஸ்டேட் வாங்கணும்னு என் உயிர எடுத்திட்டானுங்க.

ஓசின்னா தான தொந்தரவுன்னு ‘துரை சஹா ஜோதிட சாஸ்த்ரம்’னு சின்னக்கடை வீதியில போர்டு போட்டு ஒக்காந்தேன். ஃபைனான்ஸ் தொழில் செய்து கொண்டிருந்த எனக்கு ஒரு ஆஃபிஸ்.
அப்பவும் கூட பெருங்கோடிஸ்வரன் எல்லாம் என் கிட்ட ஓசியில தான் ஜோசியம் கேட்டானுங்க.
பரிகாரம் சொன்னா தான் ஜோசியருக்கு மரியாதை. பரிகாரம் சொல்லலேன்னா வர்ற ஆளுக்கு சலிப்பு. நான் பரிகாரமெல்லாம் சொல்லவே மாட்டேன்.
ஒருவர் தன் ஒரே மகனுக்கு வரன் பார்த்துக்கொண்டிருந்தார்.
என் ’ட்ரஸ் சென்ஸ்’ பற்றி இவருக்கு ரொம்ப அபிப்ராயம். “ தம்பி மாதிரி ட்ரஸ் பண்ண ஊர்ல ஆளே கிடையாது. ” என்பார்.
(அப்போதெல்லாம் மும்பை கொலாபாவிலிருந்து சராக்தின் ரெடி மேட் ட்ரெஸ் தான் எனக்கு.)

அவர் கொடுத்த ஒரு ஜாதகம் நல்ல இடமாம். ஒரே பெண். பத்துக்கு ஒன்பது பொருத்தங்கள் இருப்பதாக எழுதிக்கொடுத்தேன்.
குடும்பத்தோடு அந்த பெண்ணின் ஊருக்கு போயிருக்கிறார்.
பெண்ணின் அப்பா அந்த நகரத்தில் பிரபல ஜோதிடர். வீடே ஒரு கோவில் போல இருந்திருக்கிறது. சாம்பிராணி, சூடம், புஷ்பங்கள்…
வாழப்பாடி ராமமூர்த்தி, சரத்குமார் போன்ற பிரபலங்கள் ஜோதிடரை பார்க்க வந்திருக்கிறார்கள்.
என்னுடைய பொருத்த விபரங்களை பார்த்து விட்டு ஜோதிடர் மாப்பிள்ளையின் தகப்பனாரிடம் சொன்னாராம்:”இவர் எழுதியிருப்பது சரி தான். ஆனால் என் பெண் நட்சத்திரத்திற்கும் உங்கள் பையன் நட்சத்திரத்திற்கும் விவாகம் நடத்தக்கூடாது என்று ஒரு விசேஷ ஜோதிடக் குறிப்பு இருக்கிறது”
மிகப்பெரிய ஜோதிடர் அவர். இவர்கள் கிளம்பி வந்து என்னைப் பார்த்தார்கள்.
என் பாட்டில் குற்றம் கண்ட புலவன் எவன்? என்ற கோபமெல்லாம் எனக்கு கிடையாது. நான் இரண்டு பக்கத்திற்கு சில விஷயங்கள் கேட்டு எழுதினேன்.
”புலிப்பாணியில் இவ்வாறு இன்னின்ன நட்சத்திரங்களுக்கு இப்படி இப்படி….. வராஹமிகிரர் பிருஹத் விவாகபடலம் இவ்வாறு சொல்கிறது… ஹோரா ரத்னா நட்சத்திரங்கள் பற்றி குறிப்பது… சாரதீபா கிரந்தங்கள்…ஜாதகாபரண விவாக பலன்… சாராவளி என்று….
இவை எதிலும் உங்கள் பெண் நட்சத்திரத்திற்கும் இந்த பையன் நட்சத்திரத்திற்கும் விக்னங்கள் ஏதுமில்லையே. நீங்கள் எந்த கணிப்பின் படி பொருந்தவில்லை என்று சொல்கிறீர்கள்?”
இதை அவருக்கு தபாலில் அனுப்பி வைக்க சொல்லி பையனின் தகப்பனாரிடம் தந்தேன்.
பிரபல ஜோதிடரிடமிருந்து உடனே, உடனே கிளம்பி வரும்படி மாப்பிள்ளை வீட்டாருக்கு தகவல் வந்து விட்டது.
இவர்கள் போனவுடன் முகம் மலர அமர வைத்து சொன்னாராம்
“ இந்த குறிப்பை எழுதிய ராஜநாயஹம் யார்?”
மாப்பிள்ளையின் அப்பா தயக்கத்துடன் : ”இவர் தொழில் முறை அனுபவ ஜோதிடர் அல்ல. என் நண்பரின் மருமகன்…”
பிரபல ஜோதிடர் “ இதை எழுதியவர் குடத்திலிட்ட விளக்கு. மிக அற்புதமான ஜோதிஷ அறிவு மிக்கவர். இவர் எழுதியதை எல்லாம் இரவு ஏழு மணி துவங்கி நள்ளிரவு ஒரு மணி வரை செக் செய்தேன். இவர் சொல்வது மிகச்சரி. உங்கள் பையனுக்கு என் பெண்ணை தாராளமாக திருமணம் செய்து வைக்கலாம். எந்த விக்கினமும் நான் சொல்லப்போவதில்லை.”
இதை ஊருக்கு வந்தவுடன் என்னிடம் வந்து மலைத்து நின்றார்கள். பிரமிப்பாக சொன்னார்கள். ”உங்களைப் பற்றி அவருக்கு ரொம்ப மதிப்பும் மரியாதையும்”
எனக்கு அப்போதிருந்து ஜோதிடத்தின் மீதிருந்த மதிப்பு மரியாதை போய்விட்டது. இவ்வளவு தானா? என்று ஆகிவிட்டது.
இன்று பதினைந்து ஆண்டுகளாகி விட்டன. என்னிடம் இருந்த அத்தனை நூல்களையும் தூக்கியெறிந்து விட்டேன். ஜோதிடம் என்று எவனும் என்னிடம் எதுவும் கேட்டு வரக்கூடாது என்பதை உறுதியாக சொல்லி விட்டேன்.
ஊர்ப்பய கஷ்டத்த கேட்டு கேட்டு, ஜாதகத்த பாத்து பாத்து எனக்கே ‘போதும்,போதும்’னு சொரிஞ்சி விட்டு எந்திரிக்க வேண்டியதாயிடுச்சி.

பெரும் சிறை, புதைகுழியில் இருந்து மீண்ட திருப்தி.
For this relief,much thanks.
ஒரு விஷயம். அந்த பிரபல ஜோதிடரின் மகளுக்கும், என் மாமனாரின் நண்பர் மகனுக்கும் திருமணம் நடக்கவில்லை.
ஜோதிடர் பச்சை விளக்கு காட்டிய பின் பெண்ணை பார்த்த மாப்பிள்ளை வீட்டாருக்கு பிடிக்கவில்லை. பெண் அழகாயில்லையாம்.

Jan 29, 2018

பாலசரஸ்வதி


நாட்டிய கலைஞர் பாலசரஸ்வதி பற்றி ஒரு அருமையான வாழ்க்கை வரலாறு படிக்க கிடைத்திருக்கிறது. 
“பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்” என்ற நூல்.
தமிழ் மொழிபெயர்ப்பாக க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார். க்ரியா வெளியீடு என்பதே அதன் தரத்திற்கு சான்று.
டக்ளஸ் எம். நைட் என்ற அமெரிக்கர் எழுதிய நூல்.

விசேஷம் என்னவென்றால் இவர் பாலசரஸ்வதியின் மகள் லட்சுமியின் கணவர். இந்த நூலை மறைந்து விட்ட தன் மனைவி லட்சுமிக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
வீணை தனம்மாள் வம்ச பரம்பரையில் வந்தவர் பாலசரஸ்வதி. வீணை தனம்மாளின் மகள் ஜெயம்மாவின் மகள். ஒரு காலகட்டத்தில் தனம்மாள் “ நான் பாலசரஸ்வதியின் பாட்டி” என்று தன்னை அறிமுகப்படுத்தும் நிலை வந்தது.
இந்தியாவின் முதல் நேரு மந்திரிசபையில் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் பாலசரஸ்வதியின் துணைவர். லட்சுமியின் தகப்பனார். லட்சுமி சண்முகம் தான் டக்ளஸ் நைட்டின் துணைவி.
தன்னுடைய 18வது வயதில் பாலசரஸ்வதி தன் வாழ்க்கைத் துணைவராக ஆர்.கே. சண்முகம் செட்டியாரை வரித்துக்கொண்டார். 
இருவருக்கும் 26 வயது வித்தியாசம்.
பாலசரஸ்வதி அபிமான தாரம் என்றே சொல்ல வேண்டும். சண்முகம் செட்டியார் அப்போது ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு முதல் மனைவி உண்டு.

........................................

வாலிப சுதந்திர மீறல்
When it's two intelligent teen age girls, it's quirky,funny and rebellious!
Great Dancer Balaasaraswathy and Outstanding singer M.S.Subbulakshmi in their teens!

.....................................

பரதநாட்டியம் பற்றி தி.ஜாவின் 'மலர் மஞ்சம் ' நாவலில் நட்டுவனார் பெரியசாமி சொல்வதாக வருவது : ''ஒருத்தரோடு அவுராத முடிச்சா முடிஞ்சுக்கிட்டு உக்கார்ந்துகிட்டா அப்புறம் இந்த ஆட்டம்,பாட்டம் எல்லாம் ஒரு எளவும் வராது. அப்படியே ஸ்தம்பிச்சுப்போயிரும்...இந்த வித்தையிலே இறங்கறவங்க - ஒன்னு முழுக்கட்டுப்பாட்டோட இருக்கணும், இல்லே கட்டெல்லாம் அறுத்து எரிஞ்சுப்பிட்டு இஷ்டப்படி இருக்கணும். நடுவாந்திரமா இருக்கிறதெல்லாம் சாத்யம் இல்லே. இந்த வித்தை ரொம்ப வேடிக்கையான வித்தை.''

..................

http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_29.htmlJan 26, 2018

பாலியல் தொழிலாளி மற்றும் அர்த்தமுள்ள மதம்


பாலியல் தொழிலாளி

ஜி.நாகராஜனின் ’துக்க விசாரணை’ சிறுகதை படித்துப்பாருங்கள்.
..................
”அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக்கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது.
சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்துகொள்ள முடியும். எது எப்படியிருப்பினும், ’தேவடியாள்’ என்பதை ஒரு வசைச் சொல்லாகப் பயன் படுத்த நியாயமே இல்லை.
வேண்டுமென்றால் தி.ஜானகிராமனது கோவில் விளக்கு என்ற சிறுகதையையோ அல்லது யூஜின் ஓநீலின் அன்னா கிருஷ்டி நாடகத்தையாவது படித்துப் பாருங்கள்…
பரத்தை மாதவியின் நல்லியல்புகள் தானே மணிமேகலையிடத்துக் குடிகொண்டன.”
- ஜி. நாகராஜன்.
......................
இந்த யூஜின் ஒநீல் மகள் ஊனா ஓ நீல் தான்
"Catcher in the rye நாவல் எழுதிய ஜே.டி.சாலிஞ்சருடைய காதலி.
ஊனா ஒநீலுக்கு நீண்ட கடிதங்கள் சாலிஞ்சர் எழுதியிருக்கிறார். 1941ல் நூல் விட்டுக்கொண்டிருந்தார் சாலிஞ்சர்.
ஆனால் சார்லி சாப்ளினை விதி வசமாக ஊனா ஓநீல் சந்திக்க நேர்ந்த பிறகு விதி விளையாடியது. சார்லி சாப்ளின் வாழ்வில் நடந்த நான்காவது திருமணம் இந்த ஊனா ஒநீலோடு தான்!
நான்காவது திருமணமா என்று ஏளனமாக எண்ணி விடக்கூடாது. இந்த திருமணம் தான் சாப்ளின் சாகும் வரை நிலைத்து நின்றது.(1943-1977) அது மட்டுமல்ல. இந்த ஓநீல் மூலம் சாப்ளினுக்கு எட்டு குழந்தைகள். இதில் முதல் மகள் 1965ல் வந்த டாக்டர் ஷிவாகோ படத்தில் ஷிவாகோவின் மனைவி டோன்யா வாக நடித்த ஜெரால்டைன் சாப்ளின்.
......................................................


அர்த்தமுள்ள மதம்

இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் ஜெயந்திர சரஸ்வதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்து கர்ப்பக்ரகம் வரை வந்து சேவித்தார்.
அப்போது பட்டர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். வைஷ்ணவ கோவிலுக்குள்ளே காஞ்சி பீடாதிபதி வந்ததை அவ்வளவு சிலாக்கியமானதாக அவர்களால் ரசிக்க முடியவில்லை.
’கோவிலை தீட்டு நீக்க சம்ப்ரோக்ஷனம் செய்யவேண்டும்’ என்று பதற்றத்தை வெளிப்படையாக காட்டினார்கள்.


People are strange creatures. Obsessed with Religion, Caste and Native languge. The carrots are cooked. There is no hope. We have had enough.

Jan 23, 2018

சிலோன் மனோகர்


சிலோன் மனோகர் பாசநிலா என்ற இலங்கை படத்தில் நடித்து விட்டு சாவகாசமாக திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்க வந்து சேர்ந்தவர். அப்போதே அவருக்கு படிக்கிற வயது தாண்டி விட்டது.

ஜோசப் பள்ளி சிறுவர்கள் இவரை பார்த்து ’பாசநிலா பாசநிலா’ என்று கத்திக்கொண்டே பின்னால் வரும் போது “ தம்பிமார்களே, என்னை விட்டு விடுங்களப்பா” என்று கூச்சத்தோடு கெஞ்சுவார்.

நாடகம் ஒன்றில் கொள்ளைக்கூட்ட பாஸ் ஆக நடித்து உயிர் விடுகிற காட்சி கல்லூரி, பள்ளி மாணவர்களால் ரசிக்கப்பட்டது.

சிவாஜி நடித்த ’ஞான ஒளி’ சுந்தர்ராஜனும் அவர் தாய்மாமன் வீரராகவனும் நடித்த பிரபல நாடகம்.
ஞான ஒளி நாடகம் மாணவர்களால் கல்லூரியில் லாலி ஹாலில் மேடையேற்றப்பட்டது.
அதில் சிலோன் மனோகர் கதாநாயகன் ஆண்டனி பாத்திரத்தில் நடித்தார்.

படிக்கிறதாக பேர் செய்து கொண்டு கவனமெல்லாமே சினிமா மீது தான்.
தேவரின் ’மாணவன்’ படத்தில் சிலோன் மனோகருக்கு ஒரே ஒரு வசனம் உண்டு. “மணி தான் சார்”
குட்டி பத்மினியும் கமலும் பாடும் “விசிலடிச்சான் குஞ்சுகளா, குஞ்சுகளா” பாட்டு முடியும்போது குட்டி பத்மினி மீது ஒரு மாணவன் பாம்பை வீசுவான். குட்டி பத்மினி பயந்து கத்தி மயங்கி விழுந்து விடுவார். அப்போது ஜெய்சங்கர் “யார் இந்த காரியத்தை செய்தது?” என்று பதற்றத்துடன் கேட்கும்போது சிலோன் மனோகர் தான் போட்டுக்கொடுப்பார் “ மணி தான் சார்.”
ஜோசப் பள்ளி மாணவர்கள் பாசநிலா என்று கத்துவதை நிறுத்தி விட்டு மனோகரை பார்க்கும்போது “மணிதான் சார்” என்பார்கள்.

ஜெய்சங்கர் மாணவனாக இருக்கும்போதும் சிலோன் மனோகர் மாணவராக வருவார். ஆசிரியராக ஜெய்சங்கர் வரும்போதும் மாணவராக வருவார். ‘ஒரு க்ளப் டான்ஸ்’ காட்சியிலும் வருவார். ’மாணவன்’ படத்தில் ஜெய்சங்கரும், முத்துராமனும் மாணவர்களாக வரும்போது அவர்களுடன் காமெடியன் பாண்டு கூட மாணவன்.
செயிண்ட் ஜோசப் சர்ச் கொயரில் சிலோன் மனோகர் முக்கிய பாடகர். ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்.
சிலோன் மனோகர் அந்தக்காலங்களில் சிவாஜி கணேசனின் வெறி பிடித்த ரசிகர்.
சிவாஜி ரசிகர்களும் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் அப்படித்தான்.

அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு,

ஏழு கடல் சீமை, அதை ஆளுகின்ற நேர்மை, இவர் எங்க ஊரு ராஜா,

சொல்லாதே யாரும் கேட்டால், சொன்னாலே தாங்க மாட்டார்,

காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று யாரோ சொன்னார்

போன்ற பாடல்களை உற்சாகமாக பாடுவார்.
எம்.ஜி.ஆர் பாட்டே சிலோன் மனோகர் பாட மாட்டார்.

சினிமா அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.
’மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து இவர் பாடிய பாடல் “ மாமா, மனசு இப்போ நல்லால்லே, ஆமா, சரக்கு ஒன்னும் சரியில்லே.”

சிவாஜியின் ரத்த பாசத்தில் நடித்த நடிகை லிசாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இருவரையும் விஜயாவாஹினியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது சாய்பாபா ஹேர்ஸ்டைலில் இருப்பார். நான் மனோகரை ’பாஸ்’ என்றே கூப்பிடுவேன். எனக்கு பாஸ் என்பதல்ல. பாஸ் என்பது தான் திருச்சி செயிண்ட் ஜோசப்பில் பட்டப்பெயர்.

இரண்டாம் ரக வில்லனாக சில படங்களில் நடித்தார்.
குடிப்பழக்கம் உண்டு. ரொம்ப குடித்தார்.
ரொம்ப கோபப்படுவார் என்றும் அம்ஜத்குமார் சொல்லியிருக்கிறான். இந்த அம்ஜத்குமார், தான் திரைப்படங்களில் கற்பழித்த நடிகைகள் கே.ஆர்.விஜயா துவங்கி எத்தனை பேர் என்று புள்ளி விபரமாக சொல்வான்.
வாடைக்காற்று என்ற இலங்கை தமிழ் படத்திலும் மனோகர் நடித்திருக்கிறார். ”வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே” பாடல்.
பாப் பாடகராக ரொம்ப பிரபலமானார். சுராங்கனி, சுராங்கனி… உலகம் முழுவதும் சென்று பாப் கச்சேரி நடத்தியவர்.
கச்சேரியில் சர்ச் பாடலையும் பாடுவார்: ”மாதாவே சரணம், உந்தன் பாதாரம் எமக்காதாரம், 
கன்னி மாதாவே சரணம் 
மாசில் உம் மனமும் சேசுவின் உளமும்
 மாந்தரின் தவறால் நோவுற கண்டோம், 
ஜெபம் செய்வோம், தினம் ஜெபமாலை செய்வோம், 
பாவத்திற்காக பரிகாரம் செய்வோம், 
கன்னி மாதாவே சரணம்” 

சரண் இயக்கி மாதவன், பூஜா நடித்த ’ஜே.ஜே’ படத்தில் கூட நடித்திருந்தார்.

டி.வி சீரியலில் நடித்தார்.சென்னைக்கு நான் வந்த பின், எப்போதாவது, எங்காவது சிலோன் மனோகரை  மீண்டும் சந்திப்பேன் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன்.

...............................................................

Jan 21, 2018

கல்லு மனசு


  ந.முத்துசாமிக்கு ’பெருந்தமிழர்  விருது’ ஆனந்த விகடன் வழங்கிய விழாவிற்கு போயிருந்த போது உட்காரு முன் ’அருவி’ அதிதி பாலனை சந்தித்தேன்.
அதிதியை சந்திக்க வாய்க்கும் என்று நினைத்தே பார்த்திராத எனக்கு Surprise.
Serendipitious Happy Discouvery!

அதிதி தேவோ பவ. அதிதி என்றால் விருந்தாளி என்று அர்த்தம்.தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள புதிய விருந்தாளி.விகடன் விழாவுக்கும் அன்று Guest அதிதி பாலன்.
தோரணையும் அகங்காரமுமாகவே பல நடிகைகளை பார்த்திருக்கிறேன்.
உட்கார்ந்து பேசும் போது அதிதி தெய்வசந்நிதானத்தில் அமர்ந்திருப்பது போல என்னை கை கூப்பி, கண் மூடி, தலை வணங்கி மரியாதை செய்து கொண்டேயிருந்தார்.
" You will see greater things in your life" என்று நான் ஆசி வழங்கினேன்.
.......................................


அருவி படம் பார்க்க என் மனைவியை அழைத்துச் சென்றிருந்தேன். சிரிக்க வேண்டிய காட்சிகளில் சிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் என் திருமதி. கடைசியில் கண் கலங்கி கண்ணீர் விட்டுக்கொண்டு.....
” என்னம்மா?” என்று நான் கேட்டேன்.
மீண்டும் அழுது கொண்டே தான் இருந்தார்.
நான் அழாமல் படம் பார்த்தேன் என்பதற்காக எனக்கு Compliment வேறு!
“கல்லு மனசுங்க உங்களுக்கு...கல்ல்லு மனசு. “
’கல்ல்ல்லு’ மனசு எனக்கு. ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்.

.................................................
Jan 19, 2018

What a piece of work is a Man!


R.P.ராஜநாயஹம் யார்?
இலக்கிய உலகில் திணிக்கப்பட்ட அடையாளங்கள்
தி.ஜானகிராமனின் பரம ரசிகன்.
அசோகமித்திரனின் சீடன்.
ந.முத்துசாமியின் மாணாக்கன்.

Shakespearean scholar!
.....................
மணிக்கொடி சிட்டி ராஜநாயஹத்திற்கு கொடுத்த பட்டம் - கலியுக கர்ணன்
கோணங்கி கொடுத்த பட்டம் - வசீகர கோமாளி
கல்லூரி கால நண்பர்களுக்கு - GABIE. இன்றைக்கும் பால்ய நண்பர்கள் எல்லோரும் 'கேபி ' என்றே அழைக்கிறார்கள்.
உறவினர்கள் அனைவருக்கும் -துரை
( R.P.ராஜநாயஹம் என்ற என் பெயர் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் மிகவும் அந்நியமானது . எங்கள் குடும்பங்களில் பலருடைய பெயரில் ராஜநாயஹம் உண்டு . தாத்தா பெயர் என்பதால் பல ராஜநாயஹம்! அதனால் துரை என்றால் மட்டும் தான் நான் என்பது அவர்களுக்கு புரியும். )
ஜெயமோகன் எனக்கு கொடுத்த பட்டம் - காலச்சுவடின் ஒற்றன்
காலச்சுவடு கொடுத்த விருது - ஊட்டி வரை உறவு !
சாரு நிவேதிதா கொடுத்த பட்டம் -
லியர் மன்னன் ராஜநாயஹம்!
பாரதி மணி கொடுத்த பட்டம் -
'அண்டி உறைப்பு 'ராஜநாயஹம்!
சில உண்மைகளையும், தன் மனதில் இருப்பதை வர்ணம் பூசாது, வெளியே சொல்லவும், ஒரு தைரியம் வேண்டும்.அந்த நெஞ்சுரம், ‘தில்’, மலையாளத்தில் ‘அண்டி உறைப்பு'
எஸ்.ராமகிருஷ்ணன் என்னைப் பற்றி - ஆயுதங்களை கைவிட்டு அஞ்ஞாத வாசம் செய்யும் அர்ஜுனன்!
யமுனா ராஜேந்திரன் அவர்கள் ராஜநாயஹத்துக்கு சூட்டிய பட்டம்
- ‘எழுத்தாளரின் எழுத்தாளர்’
.................................


ராஜநாயஹம் பற்றி
மணிக்கொடி சிட்டி : நேர்மையே வாழ்க்கையாகவும் வஞ்சனை கண்டால் வெகுண்டு எழும் தன்மையும் கொண்ட அருமை நண்பர் அன்பே உருவானவர் R.P.ராஜநாயஹம்
கி. ராஜநாராயணன் : நீங்கள் புதுவையை விட்டுப் போனது எனக்கு ஒரு இழப்பு. நல்ல ஒரு சினேகம் விட்டுப் போச்சி. இப்போதெல்லாம் நல்ல மனுசர்களைப் பார்ப்பது அருகிக்கொண்டே வருகிறது. கொஞ்ச நாள் பழகினாலும் மனசை பிய்த்துக் கொண்டு போய்விட்டீர்கள். என்னோடு வந்து பழகியவர்களில் நீங்கள் ஒரு வித்தியாசமானவர் தான். நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அனுபவங்கள் புதைந்து கிடக்கிறது உங்களிடம். அதே பேச்சை நீங்கள் எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்து விட்டால் நாங்களெல்லாம் நடையைக் கட்ட வேண்டியது தான்.
அசோகமித்திரன் : நீங்கள் என்னை மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். தாங்கள் என் படைப்புகள் குறித்து கட்டுரை எழுதி அதை நான் படிக்க நேர்ந்தால் மிகவும் ரசமான அனுபவமாய் இருக்கும்.
டாக்டர். கி. வேங்கடசுப்ரமணியம்: அன்புமிக்க அறிஞர் ராஜநாயஹத்திற்கு ! அறிந்தவர் அறிஞர். நீங்கள் நன்கு அறிந்தவர். எனவே இப்பட்டத்தைப் பெற தகுதியானவர். சரி துணைவேந்தரைத் தவிர வேறு யார் பட்டம் கொடுக்க முடியும் ?
சாரு நிவேதிதா : ராஜநாயஹம் உலக இலக்கியத்தின் வாசகர். எனக்கு ஷேக்ஸ்பியரில் சந்தேகம் ஏதும் இருந்தால் அவரிடம் தான் கேட்பது வழக்கம்.
ஹாலிவுட் சினிமா பற்றி அதிகம் அறிந்தவர். ஹாலிவுட் சினிமா பற்றி அவர் ஒரு புத்தகமே எழுதலாம்.
அறிவினால் வியக்க வைத்தவர் RP ராஜநாயஹம். எப்படி ஒரு ராஜா மாதிரி வாழ்ந்தவர் , இந்த ராஜநாயஹத்தைப் பற்றித்தான் வீழ்ந்தாலும் லியர்மன்னன் மன்னன் தானே என்று எழுதினேன். சங்கீதத்திலும் கரை கடந்தவர் ராஜநாயஹம்.
................................................

ராஜநாயஹம் எழுத்து

எழுத்தாளர் ராஜநாயஹம் கறுப்பு வெள்ளைக் கால தமிழ் திரையுலகின் ஒரு நடமாடும் ஆவணக்காப்பகம். அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள சுவாரஸ்யமான திரைக்குறிப்புகள் தனித்து நூலாக வரவேண்டியவை.
- எஸ்.ராமகிருஷ்ணன்
www.sramakrishnan.com
..........................................................
எனக்குத் தெரிந்து R.P.ராஜநாயஹம் அவர்கள் தமிழ் படங்கள் பற்றியும், உலகப் படங்கள் பற்றியும் தெளிவான அறிவு உடையவர். அவர் பாலைய்யா, சுப்பைய்யா பற்றியும் பேசுவார், பெட்ரிக்கோ பெல்லினி பற்றியும் பேசுவார். ரோமன் பொலன்ஸ்கி படத்தையோ,பெட்ரொ அல்மொடொவர் படத்தையோ முன்வைத்து நம்ம ஊர் படத்தை விமர்சனம் செய்யமாட்டார்.
-குட்டிபிசாசு
............................................................................
பதின்மவயதுச்சுயதிருப்திக்கு ஈடானதாக நாகார்ஜுனனின் இடுகையொன்றும் ராஜநாயஹத்தின் சில இடுகைகளும் எனக்கு;
அண்மைக்காலம்வரை ஜெயமோகனை அடிக்க காலச்சுவடு உசுப்பேத்திவிடும் அடியாள் என்ற அபிப்பிராய அறியாமை மட்டுமே R.P.ராஜநாயஹம் பற்றி எனக்கு இருந்ததென்பதற்கு, இவரை முதலிலே அறிய நேர்ந்த இவரது இலக்கியபத்தி+பக்தி எழுத்துகளும் காரணம். அப்படியான தப்பபிப்பிராயம்மட்டும் இப்போது மாறவில்லை; இவரை எதிர்_ஜெயமோகன் கருத்துப்பிம்பவடையாளமாக வைத்திருந்தது(ம்) மாறி, மாற்று_ஜெயமோகன்(_would be) கருத்துப்பிம்பவடையாளமாக மாற்றிக்கொண்டுவிட்டேன்; இலக்கியமென்பது உருகிப்பருகி ஆனந்திக்கமட்டுமே என்ற அமுதகலசமதுவந்திகளாக இரண்டுபேரும் தோன்றுகின்றார்கள்.
.......................................................................
என்னைப் பொறுத்தவரை சுஜாதாவின் இடத்தைப் பிடிக்கும் தகுதியும், எழுத்து வன்மையும் கொண்டவர் தமிழ் பதிவுலகத்தில் மட்டுமல்ல எழுத்துலகத்தில் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ராஜநாயஹம். மிகச் சமீபத்தில் அவரின் பதிவுகளை வாசகர் ஒருவர் மெயில் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தார். வாசிக்க ஆரம்பித்தவன் முடித்து விட்டுதான் மற்ற வேலைகளையே பார்க்க ஆரம்பித்தேன். ஹ்யூமர் எழுத்துக்கும், விஷய ஞானத்திற்கும் ராஜநாயஹம் எழுத்து உதாரணம் என்றே சொல்லலாம்.
- பஞ்சரு பலராமன்
Velichathil.wordpresscom
........................................................................
NARAIN frind feed :சுவாரஸ்யம் என்னைக்கும் நிஜமாகாது. இது வெறும் சுவாரஸ்யம் மட்டும் கிடையாது, அதுக்கு மேல!
ராஜநாயஹம் மாதிரி ஒரு ஆளை நாம இன்னமும் சரியான இடத்துல வைக்கலன்னு தோணுது
...............................................................................

Jan 15, 2018

ஹரி, ஹரி, Hurry,Hurry..அபயம், அபயம்


சென்னைக்கு நான் குடும்பத்துடன் 2015 செப்டம்பர் மாதம் வந்த போது நிர்க்கதியான நிலைமை. துயரம் சொல்லில் வடிக்க முடியாது.
வேலை கேட்டு எவ்வளவோ பேரிடம் மன்றாடினேன். அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, புதுவையிலிருந்த கி.ரா துவங்கி பலரிடமும் வேலை விஷயமாக கெஞ்சினேன்.

அப்போது பரிக்ஷா ஞாநி தினமலரில் பள்ளி மாணவர்களுக்கான பத்திரிக்கை திட்டம் ஒன்றிற்காக ஆலோசகராகவோ என்னவோ இருக்கிறார் என்பதால் ஸ்ரீகுமார் என்பவர் என் வேலை சம்பந்தமாக அவரிடம் சொல்லியிருப்பதாக சொன்னார். நான் அப்போது பத்திரிக்கை சம்பந்தமான வேலை என்பதால், கல்வித்துறை சம்பந்தப்பட்டது என்பதாலும் ஞாநிக்கு சில எஸ்.எம்.எஸ் அனுப்பினேன்.
நான் திருப்பூரில் மூன்று பள்ளிகளில் ஸ்போக்கன் இங்க்லீஷ் டீச்சராக பணியாற்றியவன் என்பதையும் 2015ம் ஆண்டு மாநிலத்தில் முதலாவதாக தேறிய ஜெ.பவித்ரா என் மாணவி என்பதையும் மெசேஜ் செய்தேன். அந்த வாரம் குங்குமத்தில் மனோரமாவுக்கு நான் எழுதிய இரங்கல் வெளியாகியிருந்தது. அதையும் ஒரு மெசேஜ் ஆக அனுப்பியிருந்தேன்.
ஞாநிக்கும் எனக்கும் ஏற்கனவே அறிமுகம் உண்டு. நான் அவர் ப்ளாக் படித்ததில்லை. ஆனால் அவர் என் ப்ளாக் பதிவுகளில் கமெண்ட் போட்டிருக்கிறார்.

2010ம் ஆண்டு திருப்பூர் புக் ஃபேரில் ஞாநி ஸ்டால் போட்டிருந்தார். அப்போது அவர் எனக்கு போன் செய்து என்னை சந்திக்க ஆசைப்படுவதாக சொன்னார். நான் அதனால் புக்ஃபேர் போய் சந்தித்தேன். அவருடைய ஸ்டாலில் புத்தகங்கள் வாங்கினேன்.
ஆம் ஆத்மி வேட்பாளராக ஆன போது ட்விட்டரில் ஞாநிக்கு என் ஆதரவை ட்விட்டியிருக்கிறேன்.
சென்னை வந்தவுடன் என் வேலை விஷயமாக பேசியிருக்கிறேன்.

அசோகமித்திரனிடம் நான் ஞாநி மூலமாக முயற்சி செய்வதை சொன்னேன். அவர் ஞாநியிடம் பேசுவதாக சொன்னார்.அசோகமித்திரனின் சீடன் என்று அறியப்பட்டவன் நான்.

யாராயிருந்தாலும் இப்படி எனக்காக பேசுவதாக சொல்வார்கள் தானே? இதில் என் மீதோ, எனக்காக சிபாரிசு பேசுபவர்கள் மீதோ என்ன தவறு இருக்கிறது?

வேலையில்லாமல் இருப்பது மரணத்திற்கு சமமானது.
நிர்வாணமாயிருப்பது போல.
A horse! a horse! My kingdom for a horse!
க்ருஷ்ணா நீ பேகனே பாரோ...
என்னுடைய இரண்டு மகன்களும் கூட வேலையில்லாமல் இருந்தார்கள்.

செப்டம்பர் 13ந்தேதி சென்னைக்கு வந்திருந்த நாங்கள் அக்டோபர் 2ந்தேதி இரண்டாவதாக ஒரு வீட்டிற்கு குடியேற நேர்ந்தது.
சுத்தமாக முறிந்து போயிருந்தேன். உடைந்து போயிருந்தேன்.
அசோகமித்திரனிடம் நான் பேசிய அடுத்த நிமிடம் ஞாநிக்கு அவர் போன் செய்து ராஜநாயஹத்துக்கு வேலை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறார்.
அவர் பேசி முடித்த அடுத்த நிமிடம் ஸ்ரீகுமாருக்கு ஞாநி போன் போட்டு சீறியிருக்கிறார்.    “ ராஜநாயஹம் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார். எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருக்கிறார். அசோகமித்திரன் சிபாரிசுக்கு வருகிறார். எதற்காக அசோகமித்திரன் சிபாரிசுக்கு வரவேண்டும்.”
எனக்கே போன் செய்து இதை  தன்மையாக, நயமான முறையில்  சொல்லியிருக்கலாம்.
ஸ்ரீகுமார் என்னிடம் “ ஏன் இப்படி செய்கிறீர்கள்? அசோகமித்திரன் சிபாரிசுக்கு வருவதை ஞாநி விரும்பவில்லை. கோபப்படுகிறார். நீங்க அவருக்கு நிறைய எஸ்.எம்.எஸ் அனுப்புவதாக கோபப்படுகிறார்.”

ஏழ்மையை விட எதிர்கொள்ள நேரும் சிறுமை தான் பெரிய சித்திரவதை.
நான் நொறுங்கிப்போனேன்.
ந.முத்துசாமியை பார்க்க கூத்துப்பட்டறை போன போது அவரும் மாமியும் இளைய மகன் ரவியை பார்க்க சிங்கப்பூருக்கு போயிருந்தார்கள்.
மீண்டும் நவம்பர் 21ம் தேதி போனேன். ந.முத்துசாமி நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தார்.

’எத்தனை சாமி வந்தாரோ, எத்தனை சாமி போனாரோ
அத்தனை சாமி ஒன்னா சேந்து முத்துசாமி ஆனாரோ.’

முத்துசாமியை புஞ்சையில் சுற்றமும் நண்பர்களும் ’கண்ணன்’ என்ற பெயரால் அழைப்பார்கள்.


…………………………………………………..

Jan 13, 2018

ஜாதி அரசியல்Obsession is the single most wasteful human activity, 
because with an obsession you keep coming back and back and back 
to the same question and never get an answer.
- Norman Mailer

ஆண்டாள் பிரச்னை மத அரசியலாகத்தானே இருந்தது.
பாரதிராஜா எழுந்து வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.
Nepotism!
அவர் சொல்வதன் Subtext :
“ நாங்கள்ளாம் தேவர் ஜாதி. நாங்க சிங்கம்டா. ஆயுதத்த கீழ வச்சிருந்தோம். திரும்ப எடுத்தோம்னா நாறிடும்டா. எங்களுக்கெல்லாம் எந்திரிச்சிச்சுன்னு வச்சுக்க மடக்கறதுக்கு இந்தியாவிலேயே ஆளு கிடையாதுடா..”

’வேதம் புதிது’ படத்தில் பாலுத்தேவரை சின்னப்பையன் கேட்பானே. “ பாலு உங்க பேரு. தேவர் என்ன பட்டமா?”
என்னா படம் காமிச்சாரு அன்னக்கி. இன்னக்கி இப்படி ஜாதிய சொல்லி மிரட்டுறாரு.
மதவெறி ஹெச்.ராஜாவை இப்படி ஜாதி அரசியலாலா கண்டிப்பது?
Comedy of Errors.
திருமாவளவன் இதற்கு எதிர்வினையாக பாரதிராஜாவை கண்டித்தாரா?
“ ஹெச்.ராஜாவை உள்ள தூக்கி போடுங்க”ன்றார்.
ஹெச்.ராஜா பரமசிவன் கழுத்துல இருக்கற பாம்புன்றதால தான இந்த சண்டியர்த்தனம். அந்த சண்டியர்த்தனத்தை பாரதிராஜா எதிர்க்கிற வல்லமை பெற்றவரா?
ஜாதி அரசியல் சரியான கவசம் என நினைத்து விட்டார்.


“Convictions are more dangerous foes of truth than lies.”

― Friedrich Nietzsche

இப்பவே மறைமுகமாக மோடி அன் கோ ஆட்சி தான்னு சொல்றாங்க.
ஒரு வேளை தமிழ் நாட்டில் ஜனாதிபதி ஆட்சி வந்தால் .. ..ifs and buts....
ஹெச்.ராஜா தான் கவர்னருக்கு மந்திரி. தமிழிசையும் தான். பவர் இவங்க கையில தான்.
அப்பவும் பாரதிராஜா நாக்க மடிச்சி கடிச்சி ஹெச்,ராஜாவ பாத்து விரல ஆட்டுவாரா?
நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் எம்.ஜி.ஆர் மதுரை திமுக மாநாட்டில் ’அலை ஓசை’ பத்திரிக்கையை தூக்கி வீசி “ராணுவத்தை சந்திக்கத் தயார்” என்று மத்திய அரசுக்கு சவால் விட்ட அபத்தம் மாதிரி தான் பாரதிராஜாவின் சவடாலும்.

எம்.ஜி.ஆரோடு பாரதிராஜாவை ஒப்பிட்டு விட்டேன் என்பதல்ல. ’ராணுவத்தை சந்திக்க தயார்’ என்ற வார்த்தைகளோடு தான் பாரதிராஜாவின் Subtextஐ ஒப்பிடுகிறேன்.

................................................

http://rprajanayahem.blogspot.in/2018/01/blog-post_10.html