Share

Apr 30, 2015

Cock a snook at Mother
 அல்டாப்பு வலம்புரி ஜான் ஒரு பத்திரிக்கைக்கு ஆசிரியராய் இருந்தார். பத்திரிக்கையின் பெயர் "தாய்"!  எம்.ஜி.ஆர் – ஜானகியின் வளர்ப்பு மகன் அப்பு என்ற ரவீந்திரன் தான் பத்திரிக்கை அதிபர்.
 ஜெயகாந்தன் மடத்திற்கு போயிருந்த வக்கீல் ஹபீப் ராஜா (’ஏழாவது மனிதன்’ படத்தின் அசிஸ்டண்ட் டைரக்டர்) ஜெயகாந்தனின் அடைமழை பிரசங்கத்தின் இடையில் கொஞ்சம்  கேப் கிடைத்த போது “இந்த ‘தாய்’ பத்திரிக்கையில ஒங்களைப் பத்தி..” 

ஜெயகாந்தனோ வாக்கியம் முடியுமுன்னே மின்னலாக சீறினார் “அந்த  ‘த்தாயோளி’ பத்திரிக்கையெல்லாம் நீங்க ஏன் படிக்கிறீங்க?”
.............................

‘அம்மா வந்தாள்’ நாவல் தி.ஜானகிராமனின் மிகப்பிரபலமான நாவல்.
‘மோகமுள்’ நாவலை பிரமாதமாக புகழ்ந்த க.நா.சுவுக்கு ‘அம்மா வந்தாள்’ பிடிக்கவில்லை. 

டெல்லியில் ‘THOUGHT’ ஆங்கிலப்பத்திரிக்கையில் அம்மா வந்தாளுக்கு எழுதிய விமரிசனத்திற்கு க.நா.சு கொடுத்த தலைப்பு ‘Janakiraman’s Mother’. அம்மா வந்தாள் படித்திருந்தால் தான் இந்த தலைப்பின் வக்கிரம் புரியும்.
.....................

ஹேம்லட் தன் தாய் மீதான வெறுப்பை உமிழ்ந்த போது சொன்ன வார்த்தை - "Frailty! Thy name is woman!" - One of the mighty lines of Shakespeare - one of the memorable expressions. 

..............................................


த்ரூஃபோ ( Francois Truffaut ) எடுத்த படம் Bed and Board.  படம் பார்க்கும்போது அதில் ஒரு சுவாரசியமான தகவல். “Mother’s day” was invented by the German Nazis, During  the second world war!

Apr 26, 2015

''ச்சீ..என்னய்யா இது கெட்டப்பு....."இயக்குனர்களில் ரொம்ப sadist மனோபாவம் கொண்டவர்கள் உண்டு. கதாநாயக நடிகர்கள், கதா நாயகி நடிகைகள் தவிர மற்ற நடிக நடிகைகள், அஸிஸ்டண்ட் டைரக்டர், டெக்னீசியன்ஸ்,புதிதாய் நடிக்க வருகிறவர்களை இந்த டைரக்டர்கள் குதறி எடுத்து விடுவார்கள்.

மிகப்பழைய இயக்குனர் கே.சோமு- சிவாஜி, என்.டி.ராமராவையெல்லாம் சம்பூர்ண ராமாயணத்தில் இயக்கியவர்.

பட்டினத்தார் படம் டி.எம்.எஸ் கதாநாயகன். இந்தப்படம் மேஜர் சுந்தர்ராஜனுக்கு முதல் படம். ஒரே காட்சியில் தான் வருவார். ஆனால் மஹாராஜாவாக! இதற்கு மேக்கப் போட்டு விட்டு ஷாட்டுக்கு வந்தார். டி.எம்.எஸ் காம்பினேஷன். பட்டினத்தார் டி.எம்.எஸ். அமர்ந்திருக்க, அரசன் சுந்தர்ராஜன் நின்றிருக்க!

சோமு முகஞ்சுளித்து, முகத்திலடித்தாற்போல “யோவ்! என்னய்யா நடிக்கற?ச்சீ..போய்யா. யாருய்யா இந்தாள கூட்டிட்டு வந்தவன்....” கண்டபடி திட்டி அவமானப்படுத்தி விட்டார். மேக்கப் மேன் சொக்கலிங்கத்திடம் மேஜர் அழுதே விட்டார். “ நான் ஒரு சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ஆபிஸர். என்னை இப்படி கேவலமா திட்றாரு..” அப்போது டெலிபோன்ஸ் இன்ஸ்பெக்டராய் இருந்தார்.“கன்னிப்பருவத்திலே” பி.வி.பாலகுருவிடம் நான் கேட்டேன். 'அந்தக்காலத்தில் குரூரமான Sadist இயக்குனர்கள் யார்?யார்?'
 அவர் வெற்றிலையை மென்று கொண்டே சொன்னார்.
“ இயக்குனர் கே.சங்கர். அப்புறம் எம்.ஏ.திருமுகம்..ரெண்டு பேரும் ரொம்ப கொடூரமான ஆளுங்க..”


பாலகுரு எம்.ஆர் ராதா நாடக்குழுவில் நடிகராய் இருந்தவர். எம்.ஜி.ஆர் நடித்த “தாழம்பூ” படத்தில் அஸிஸ்டண்ட் டைரக்டர்.ஒரு முறை ஸ்டுடியோவிற்கு நடந்து வரும்போது நடிகை அஞ்சலிதேவி வீட்டு நாய் இவரை கடித்துவிட்டதாம். பாலகுரு தேம்பித்தேம்பி அழுது விட்டார்.


“பதினாறு வயதினிலே”யில் பாரதிராஜாவின் அஸோசியேட் பாலகுரு தான் பாக்யராஜை அஸிஸ்டண்ட் ஆக சேர்த்து விட்டவர்.
பாக்யராஜ் கொடி கட்டிப்பறக்கும்போது டிஸ்கஸன்,ப்ரொஜகசஷன் என்று நள்ளிரவாகி விடும்போது ஆபிஸில் கிடைக்கிற இடத்தில் பாலகுரு தரையில் தலை வைத்துப் படுத்துத்தூங்குவார்.


பெரியவர் எம்.ஜி.சக்ரபாணியின் சம்பந்தி கே.சங்கர். எடிட்டிங் நிபுணர். ஆனால் எடிட்டிங் கத்திரிக்கோலாலே அஸிஸ்டண்ட்களை அடித்து விடுவார்.

ரா.சங்கரன் இவரிடம் அஸிஸ்டண்ட் டைரக்டராய் இருந்தவர். ‘ஆடிப்பெருக்கு’ படத்தில் “பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்” பாட்டில் ஜெமினியுடன் உட்கார்ந்து கலாட்டா செய்வார். பின்னால் பாரதிராஜாவின் ‘புதுமைப்பெண்’ணில் ரேவதிக்கு அப்பாவாக நடித்தவர். பல படங்கள் இயக்கியவர் ரா.சங்கரன்.
இவர் க்ளாப் அடிக்கும் முன் நடிகரிடம் “எங்க டைரக்டர் பயங்கரமான ஆளுய்யா! ஒழுங்கா நடிக்கலன்னா அடிச்சிடுவார்யா..பாத்துய்யா..” மிரட்டி விட்டு “பை டூ டேக் ஒன்”  க்ளாப் அடித்து விட்டு ஓடிவிடுவார். பாவம் நடிகர் மிரண்டு ஷாட்டில் சொதப்பி கே.சங்கர் நரசிம்மமாகி...


கே.சங்கர் முன் நிஜமாகவே சாட்சாத் கடவுள் பரமசிவன் கழுத்தில் நாக பாம்புடன் வந்து நின்னாலும் “யோவ் என்னய்யா இது? என்னய்யா இது கெட்டப்பு..கெட்டப்பே சரியில்லையே....ச்சீ போய்யா..டேய் கூப்ட்றா மேக் அப் மேன... ஏன்டா! இப்படி தான் மேக் அப் பண்ணுவியா.. காஸ்ட்யூமர் எங்கடா... இப்டித்தான் பரமசிவனுக்கு ட்ரஸ்ஸா.. அஸிஸ்டண்ட் டைரக்டர் வாடா... வேற ஆளே இல்லயாடா பரமசிவன் ரோலுக்கு..பாம்பு கொண்டாந்தவன் யார்ரா?”

டைரக்டர் கே.சங்கர் ஆலயமணி, ஆண்டவன் கட்டளை,மிருதங்க சக்கரவர்த்தி போன்ற சிவாஜி படங்களையும் குடியிருந்த கோயில், அடிமைப்பெண் என்று எம்.ஜி.ஆர் படங்களையும் இயக்கியவர். பின்னால் சாமி படங்கள் எடுத்து ஆன்மீகப்பட்டமெல்லாம் பெற்றார்.


சாண்டோ சின்னப்பா தேவரின் உடன் பிறந்த தம்பி தான் டைரக்டர் எம்.ஏ.திருமுகம். எத்தனை 'தேவர் பிலிம்ஸ்' எம்.ஜி.ஆர் படங்கள் .. கணக்கு போட்டுக்கொள்ள வேண்டியது தான்.

............................................................................


Apr 23, 2015

INTEGRITYவருடம் 1999.டெல்லி தெற்கு லோக் சபா தொகுதியில் போட்டியிடும் மன்மோகன் சிங்.

தேர்தல் செலவுகளுக்கே நெருக்கடி.

 குஷ்வந்த் சிங் உதவ முடியுமா என்று தன் மகளுடைய கணவரையே அனுப்புகிறார்.

அரசியல் உலகம் பற்றி எந்த ‘ஜீவித அறிவாளி’க்கும் உள்ள ஆயாசம் குஷ்வந்த் சிங்கிற்கும் உண்டு என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனால் அந்த ஆயாசம் அவருக்கு ஆச்சரியமாகிப்போனது.

முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர், இந்திய அரசில் முன்னாள் நிதி அமைச்சராய் இருந்த மன்மோகன் சிங் இரண்டு லட்சம் கடன் கேட்கிறார்! குஷ்வந்த் சிங் அந்தத்தொகையை உடனே கொடுத்தனுப்புகிறார்.
Manmohan Singh participated in direct elections only once. That was in 1999 from South Delhi.
அந்த தேர்தலில் மன்மோகன் சிங் தோற்றுப்போகிறார். சில நாட்களில் மன்மோகன் சிங்கிடமிருந்து போன். உங்களை சந்திக்க நேரம் ஒதுக்கமுடியுமா என்று குஷ்வந்த் சிங்கிடம் கேட்கிறார். மன்மோகன் சிங் வந்து ஒரு பாக்கெட்டை கொடுக்கிறார். “நான் உங்களிடம் வாங்கிய தொகையை செலவு செய்யவேயில்லை.” இவருடைய மருமகனிடம் குஷ்வந்த் கொடுத்த அந்த இரண்டு லட்சம்! That kind of thing no politician would do!
http://rprajanayahem.blogspot.in/2014/03/khushwant-dies.html

http://rprajanayahem.blogspot.in/2014/04/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2010/01/blog-post_13.html

http://rprajanayahem.blogspot.in/…/amrita-sher-gils-self-po…


.........................


Apr 19, 2015

லா.ச.ரா - கிருத்திகா‘ராசுக்குட்டி’ டப்பிங் வேலை அப்போது APN Dubbing theatre ல் நடந்து கொண்டிருந்தது. நான் மாலை 4 மணிக்கு ஏபிஎன் தியேட்டரில் இருந்து கிளம்பி டி.டி.கே. ரோட்டில் நடந்தேன். கொஞ்சம் தாமதமாக கிளம்பலாம்.ஆனால் இலக்கிய கூட்டம் நடக்கும் இடத்தையே இனி தான் கண்டு பிடிக்கவேண்டும்.

லா.ச.ரா – கிருத்திகா இருவருக்கும் சேர்த்து ஒரு விழா நடக்குமிடம் எது என்று அரை மணி நேரத்தில் தேடி கண்டு பிடித்தேன். அது ஒரு ரொம்ப சின்ன ஹால்.


கூட்டம் ஆரம்பிக்க இன்னும் ரொம்ப நேரம் இருக்கிறது.
மீண்டும் வந்த வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்து வரும்போது ஒரு மிகப் பிரம்மாண்டமான மண்டபம். அங்கே ரொம்ப பெரிய குடும்பங்களின் திருமணம் நடத்த முடியும். அல்லது பெரிய அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த முடியும். சில ஆயிரக்கணக்கான பேர்கள் அதனுள் அடங்கமுடியும். மிகப்பிரமாண்டமான படிக்கட்டுகள். அந்த படிக்கட்டுகளில் லா.ச.ராவை அவருடைய பிள்ளைகள் கைத்தாங்கலாக ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு அந்த அபத்தம் உடனே உறைத்தது.
உடனே ஓடி பல படிகள் ஏறிவிட்ட அவர்களை நெருங்கி “ சார்! உங்களுக்கு நடக்கும் பாராட்டு கூட்டம் இந்த மஹாலில் கிடையாது சார்! இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. நானும் அந்த கூட்டத்திற்கு தான் கிளம்பி வந்துள்ளேன்.” லா.ச.ரா வின் மகன்களில் ஒருவர் “அப்படியா! ரொம்ப நன்றி சார்! “ முதிய லா.ச.ராவை படிகளில் இருந்து கீழே கவனமாக இறக்கினார்கள்.
ஒரு தமிழ் எழுத்தாளருக்கு இவ்வளவு பிரமாண்டமான கூடத்தில் பாராட்டுக்கூட்டம் நடக்கும் என்ற லா.ச.ராவின் அசட்டு நம்பிக்கை விசித்திரமாய் அப்போது தெரிந்தது.

லா.ச.ரா என்னைப் பார்த்து “ நீங்க யாரு? எனக்கு தெரியலியே?”
“ நான் உங்கள் வாசகன். என் பெயர் ராஜநாயஹம். உங்களுக்கு 1990ல் சாகித்ய அகாடமி பரிசு கிடைத்த போது நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். அப்போது நீங்கள் “ உங்கள் வாசகத்தின் அன்பில் எனக்கு பரிசு கிடைத்தது மகிழ்ச்சி தான் “ என்று பதில் எழுதியிருந்தீர்கள். லா.ச.ரா என் கைகளைப்பிடித்துக்கொண்டார்.

கூட்டம் எங்கே நடக்கப்போகிறது என்று சிரமப்பட்டு அலைந்து கண்டுபிடித்த நான் இப்போது Chief Guest லா.ச.ராவிற்கு வழி சொல்லி அனுப்பி வைத்தேன்.


அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றேன். சிட்டி வந்தார். சினிமாவில் நான் இருப்பதை சொன்னேன். ஆனால் அவர் “எப்ப வீட்டுக்கு வர்றேள்?’ என்றார். அவரோடு அவர் மகன் வேணுவும் 'கடலோடி' நரசய்யாவும்.


இந்திரா பார்த்தசாரதி வந்தார். இந்திரா மாமி இறந்து விட்டதற்கு துக்கம் விசாரித்தேன். இ.பா என்னிடம் “உங்களை சினிமா இன்னும் விட மாட்டேன்றது!”


அசோகமித்திரன் தன் மகனோடு வந்தார். சிலமாதங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கையில் அவரை பற்றி ஒரு கட்டுரை கொடுக்க வேண்டும் என்று திருச்சியில் இருந்த என்னிடம் கேட்டிருந்தார். நான் சினிமாவில் கமிட் ஆகி விட்டதால் இயலவில்லை. “ஏன் இப்படி செய்து விட்டீர்கள். என்னய்யா..” கிட்டத்தட்ட கோபமாக கேட்டார். எனக்கே தெரியாது திடீரென்று இப்படி பாக்யராஜ் படத்தில் பங்கேற்கவிருக்கிறேன் என்பது.. ராசுக்குட்டி அனுபவம் அந்த மூன்று மாதத்திலேயே என்னை மன அளவில் முறித்துப்போட்டிருந்தது. அசோகமித்திரனின் எரிச்சலுக்கு நான் பதில் சொல்லவில்லை.

கிருத்திகாவை சிட்டி அறிமுகப்படுத்தினார்.

1950களில்,1960களில் மிக,மிக அழகாக இருப்பாராம் டெல்லியில் இருந்த மதுரம் பூதலிங்கம் என்ற கிருத்திகா. அந்தக்கால ஐ.சி.எஸ் ஆஃபீசர் பெஞ்சாதி. ‘புகை நடுவில்’ ,’வாசவேஸ்வரம்’, ‘புதிய கோணங்கி’, ‘நேற்றிருந்தோம்’ ஆகிய நாவல்களை எழுதிய கிருத்திகா. தி.ஜாவிற்கு மிகவும் பிடித்த பெண் எழுத்தாளர்.

சிட்டி மீண்டும் “எப்ப எங்க வீட்டுக்கு வர்றேள்?”


கூட்டம் முடிந்ததும் நான் அப்போது தங்கியிருந்த அயனாவரம் கிளம்பிப்போனேன்.
.......................

Apr 11, 2015

A Double drop - 2

 நாகூர் ஹனிஃபா 

“இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை” பாடல் அறியாதவர் கிடையாது.
‘எல்லோரும் கொண்டாடுவோம்,அல்லாவின் பேரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி’ பாவமன்னிப்பு பாடலில் சௌந்தர்ராஜனுடன் சேர்ந்து ‘கறுப்பில்ல வெளுப்பும் இல்லே
கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவும் இல்லை
கடவுளில் பேதமில்லைபாடிய ஹனிஃபா

‘அழைக்கின்றார்,அழைக்கின்றார்,அழைக்கின்றார் அண்ணா!’

'ஓடி வருகிறான் உதய சூரியன்!'

‘கல்லக்குடி கொண்ட கருணா நிதி வாழ்கவே!’ 

‘எங்கள் வீட்டுப்பிள்ளை,ஏழைகளின் தோழன், தங்க குணம் கொண்ட கலை மன்னன், மக்கள் திலகம் எங்கள் எம்ஜியார் அண்ணன்!’

எம்.ஜி.ஆர் அதிமுக ஆரம்பித்து பின், 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது நாகூர் ஹனிஃபா தி.மு.க பிரச்சாரத்தில் பாடிய சவால் பாடல்
 “நன்றி கெட்ட கிழவனுக்கும் நாணயமில்லா குள்ளனுக்கும்
நாங்கள் ஒன்று சொல்லுகிறோம்.
வந்து பாரும், திண்டுக்கலில் நின்று பாரும்!
நன்றி கெட்ட மோகனுக்கும் நாணயமில்லா சுப்பனுக்கும்
நாங்கள் ஒன்று சொல்லுகிறோம்
வந்து பாரும், திண்டுக்கலில் நின்று பாரும்!”

இந்த பாடலில் குறிப்பிடப்படுபவர்கள்
கிழவன் = எம்ஜியார்
குள்ளன் = மதியழகன் ( எம்.ஜி.ஆர் பிரிந்த போது சட்டமன்ற சபாநாயகர்)
மோகன் = மோகன் குமாரமங்கலம் ( அப்போது மத்திய அமைச்சர் )
சுப்பன் = சி.சுப்பிரமணியம் ( அப்போது மத்திய அமைச்சர் )

இந்த தேர்தலில் நான்கு முனைப்போட்டி. வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் இடம் பெற்ற ஸ்தாபன காங்கிரஸ் மீது கூட மூன்றாமிடம் பெற்ற ஆளும் கட்சி தி.மு.க.விற்கு கோபமில்லை. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அ.தி.மு,க. மீதும் நான்காமிடத்தில் படுதோல்வியடைந்த இந்திரா காங்கிரஸ் மீதும் தான் கடும் வெறுப்பு.
...............................


ரங்கராஜ் பாண்டே


1999ல் மார்ச் 27ம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்க்டன் லைப்ரரியில்  நான் அசோகமித்திரனை அறிமுகப்படுத்தி பேசினேன். நிகழ்ச்சி முடிந்த பின் மேடையில் அசோகமித்திரனை பலரும் சந்தித்து அளவளாவிய போது ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் அசோகமித்திரனிடம் “ பாலகுமாரனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்க நான் உடனே சொன்னேன். “Balakumaaran – Poor man’s Janakiraman!”  
உடனே  “ ஏன்? அப்படி சொல்றீங்க?” - மென்மையாக கேட்ட அந்த இளைஞன் ரங்கராஜ் பாண்டே! 

 நான் “அப்படித்தான் சொல்லனும்.” 

அசோகமித்திரனுக்கு பதில் சொல்வதைத் தவிர்த்து விட்ட ஆசுவாசம். மென்மையாக இருவரையும் பார்த்து சிரித்தார்.
 ....................................................

http://rprajanayahem.blogspot.in/…/a-double-drop-intense-mi…


Apr 7, 2015

Applause - Honor - DisgraceApplause!

Enjoy the applause. But never, never believe it.The coming of honor or disgrace!
Once you have honor, the next thing you should expect is disgrace.

People say that I deserve so much honor, but what I feel is, that I don't deserve so much disgrace.
..........................................