Share

Nov 26, 2012

சங்கீத ரசனையும் வசதியும்

நெய்வேலி சந்தான கோபாலன் கச்சேரியொன்று  பத்து வருடம் முன்.திருச்சியில். என் நண்பர் கோவிந்தராஜிடம்(அப்போது Divisional Engineer BSNL)  என்னைக்காட்டி சந்தான கோபாலன் சொன்னார்.”இவர் என்னமா கச்சேரியை ரசித்தார் தெரியுமா!இந்த மாதிரி சதஸ் இருந்தால் தான் கீர்த்தனைகளும் நன்றாக பாட முடியும்”
என் பெயர் என்ன என்று கேட்டார். நான் “ராஜநாயஹம்” என்றேன். என் பெயரை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள நான்கைந்து முறை ’ராஜநாயஹம்’ என்று கண்மூடி சொல்லிப்பார்த்தவர் சட்டென்று’ வசதி இருக்கிறதா? (சாப்பாடு,உணவு,உறைவிடம்) பொருளாதாரம் எப்படி? அதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.அது இருந்தால் தான் சங்கீத ரசனையெல்லாம்’ என்றார்.அவர் சொன்னது அசரிரி.அடுத்த வருடமே நான் பஞ்சம் பிழைக்க திருப்பூர் வரும்படியானது.


 'விரலில் போனால் குரல் போகும்' என்று சங்கீத உலகில் சொல்வார்கள்.
If you concentrate on beats,melody will be lost.

 ராகங்களில் முதல் ராகம் மோகனம்.
நன்னு பாலிம்ப்ப நடசி வச்சிதிவோ நா ப்ராண நாத
என்னைக்  காப்பாற்ற வேண்டி நடந்தே வந்தாயா!

தமிழ்த்தாய் வாழ்த்து ‘நீராடும் கடலுடுத்த’ மோகனம்.

 ’மாசிலா உண்மைக்காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே’

’பழகத்தெரிய வேணும்’

 ’துள்ளாத மனமும் துள்ளும்’

‘மலர்கள் நனைந்தன பனியாலே’

’நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது’

’அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா’

’வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’

இந்தப்பாடல்கள் எல்லாமே மோகனராகம் தான்.சாருகேசி ராகம்
சாருகேசி என்றால் அழகிய கூந்தல் என்று அர்த்தம்.
இந்த ராகத்தில் தியாகபிரும்மத்தின்  ஆடமோடி கலடே என்ற கீர்த்தனை. சாருகேசி ராகத்தில் தியாகப்ரும்மம் இந்த ஒரே ஒரு கீர்த்தனை தான் இயற்றியிருக்கிறார்.
Tell me why this bad mood now
dear Rama, Please speak
I held your feet with devotion
and called you my friend
and my shelter, so speak.
 இந்த ராகம் திரையில் மிகவும் பயன்படுத்தப்பட்ட ஒன்று.
எம்.கே.டி பாடிய ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ!’ சாருகேசி தான்.
சௌந்தர்ராஜன் பாடிய ‘வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே’சாருகேசி.
மதுரை வீரனில் எம்.எல்.வசந்தகுமாரி பாடி பத்மினி ஆடிய ‘ஆடல் காணீரோ திருவிளையாடல் காணீரோ’
குங்குமம் படத்தில் சிவாஜி -சாரதாவுக்கு ஒரு பாட்டு. தூங்காத கண்ணொன்று ஒன்று’ 
 ஸ்ரீதரின் ‘தேனிலவு’ படத்தில்ஏ.எம்.ராஜா இசையில் ஜிக்கி பாடிய ’ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக்கண்டேன்.அந்த ஒருவரிடம் தேடினேன் உள்ளத்தைக் கண்டேன்’ இதே சாருகேசி.

காத்திருப்பான் கமலக்கண்ணன்’ என்று ஒரு பாடல் இதே ராகம். 

ரஜினியின் நூறாவது படம் ஸ்ரீ ராகவேந்திராவில் இந்த ராகத்தில் ஒரு மெட்டில் ஒரு பாட்டு. ‘ஆடல் கலையே தேவன் தந்தது’

சின்ன மாப்ளே படத்தில் சுகன்யா -பிரபு பாட்டு ‘காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி’ சாருகேசி ராகம்!


சஹானா

சஹானா பாடினாலும் கேட்டாலும் மனம் சாந்தமடையும்.என் அனுபவத்தில் பிலஹரி போல சஹானா கூட கவலையைத்தீர்க்கும்.கவலையில் இருக்கும் போது கதனகுதூகலம் ராகம் (ரகுவம்ச சுதா கீர்த்தனை)கேட்டால் எரிச்சலாயிருக்கும்.
சஹானா என்பதற்கு ’பெருமை காத்தல்’ என்று அர்த்தம்.
சஹானா கோபத்தை தணிக்கும் வல்லமை கொண்டது.சண்டை சச்சரவுகளையும் நீக்கும் என்று ’ராக சிகித்சா’வில் சொல்லப்பட்டுள்ளது.

தியாகப்ரும்மத்தின் ’கிரிபை’ ’வந்தனமு ரகுநந்தனா’ ஆகிய கீர்த்தனைகள் சஹானா ராகத்தில்.
’கிரிபை’ எம்.டி ராமநாதன் பாடியுள்ளதைக் கேட்கவேண்டும்.
’வந்தனமு ரகுநந்தனா’ உன்னி கிருஷ்ணன் பாட அவர் கச்சேரியில் எப்போதும் சீட்டு எழுதிக் கொடுக்கவேண்டும்.

சினிமாவில் சஹானா என்றால் உடனே நினைவுக்கு வருவது “ பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத்துடித்தேன் அந்த மலைத்தேன் இவளென மலைத்தேன்” என்ற பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்.
அவ்வை சண்முகியில் ‘ருக்கு ருக்கு ருக்கு’ சஹானா.


கருடத்வனி ராகம் திருமணத்தில் தாலி கட்டும் சமயம் பாடினால் பொன்னுமாப்பிள்ளைக்கு சீரான சுகங்கள் தருமாம். தியாகராஜ கீர்த்தனை’பரதத்ர மேருக’

  பைரவி ராகம் மரணப்படுக்கையில் இருப்பவருக்கு சுகசாந்தி தரும்.

உபசாரமு ஜேஸே வாருன்னா ரனி மரவகுரா
 உன்னை உபசரிப்பதற்கு சுற்றிலும் சிலர்(சீதை,அனுமன் மற்றும் சகோதரர்கள்) இருக்கிறார்கள் என்பதனால் என்னை மறந்து விடாதய்யா 

சங்கராபரணம் மனநோய்க்கு சிறந்த சுகமருந்து.

’ஸ்வர ராக சுதா ரஸ யுத’
சங்கராபரண ராகத்தில் 
’வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்’
பலே பாண்டியா படத்தில் கதாநாயகன் தற்கொலைக்கு முயற்சிக்கிற மன நோயாளி. இந்த ராகத்தில் தெரிந்தே தான் இசையமைப்பாளர் இந்தப்பாடலை அமைத்தாரா!

’வாடிக்கை மறந்ததும் ஏனோ’ கல்யாண பரிசு

’அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா’

’மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி’

’ஒரு மணியடித்தால் கண்ணே உன் ஞாபகம் டெலிபோன் குயிலே வேண்டும் தரிசனம்’

சங்கராபரண ராக மெட்டில் அமைந்த பாடல்கள் தான்.


ஆனந்த பைரவி ராகம் ரத்தக்கொதிப்புக்கு சுகம் தரும் இயல்பு கொண்டது.

தியாகய்யரின் ஆனந்த பைரவி கீர்த்தனை 
” நீகே தெலியக போ தே 
நே நேமி ஸேயுது ரா”

’உனக்கே தெரியாதென்றால் நான் என்ன தான் செய்ய முடியும்
என் நெஞ்சத்துயரம் உனக்கே தெரியவில்லை என்றால் நான் என்ன தான் செய்ய’

சினிமாவில் ஆனந்த பைரவி
‘போய் வா மகளே போய் வா’

’தென்மேற்கு பருவக்காற்று சேரிப்பக்கம் வீசும் ஒரு சாரல்’

‘கொஞ்ச நாள் பொறு தலைவா’

 

 

Nov 22, 2012

ஏ.பி.நாகராஜன்ஆரம்பகாலத்தில் நாடகத்தில் ஸ்திரிபார்ட் ரோல் செய்தவர்.

டி.கே.எஸ் பிரதர்ஸ் ’குமாஸ்தாவின் பெண்’ நாடகமாக நடத்தப்பட்டபோது அதில் கதாநாயகியாக நடித்தவர் ஏ.பி.நாகராஜன்!

நால்வர்(1953),பெண்ணரசி(1955),நல்லதங்காள்(1955) ஆகிய படங்களில் கதாநாயகன் ஏ.பி.நாகராஜன்! இந்தப்படங்களுக்கு வசனமும் இவரே தான். சாண்டோ சின்னப்பதேவரின் முதல் படம் ’நல்ல தங்கை’(1955)க்கு வசனம் எழுதியதும் நாகராஜன் தான்.

’பொன்னே,புதுமலரே,பொங்கிவரும் காவிரியே 
மின்னும் தாரகையே வெள்ளி நிலவே………
அம்புலி வேண்டுமென்றே அடம்பிடித்தே அழுவாய்
பிம்பம் காட்டி உந்தன் பிடிவாதம் போக்கிடுவேன்
அந்த நாள் மறைந்ததம்மா ஆனந்தம் போனதம்மா’

இந்த டி,எம்.எஸ் பாடல் ’நல்லதங்காள்’ படத்தில் ஏ.பி.நாகராஜனுக்குத்தான்.

’நால்வர்’ படத்தில் என்.என்.கண்ணப்பாவும் நடித்தார்.விஜயகுமாரி கூட ஒரு சின்னரோலில் நால்வர் படத்தில் நடித்தார்.

அதே வருடம் கே.சோமு இயக்கி கண்ணப்பா கதாநாயகனாக நடித்த டவுன் பஸ் படத்திற்கு ஏ.பி.என் தான் வசனம்.

கே.சோமு யூனிட்டில் நாகராஜன் அவர்களின் பங்கு மகத்தானது. 


கே.சோமு இயக்கிய ’சம்பூர்ண ராமாயணம்’(1958) படத்திற்கும் வசனம் இவரே.
 
 கே.சோமுவின் இந்தப் படத்தை ராஜாஜி பார்த்துவிட்டு ’பரதனை மிகவும் ரசித்தேன்’ என்றார். என்.டி.ராமாராவ் ராமனாக நடித்த இந்தப்படத்தில் பரதனாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார்.

(வாசனின் ஔவையார்(1953) படத்தை அதற்கு முன்னதாக இரு முறை பார்த்த ராஜாஜி தன் டைரிக்குறிப்பில்(10-08-1953) அந்தப்படம் பற்றி சிலாக்கியமாக எழுதாமல் குறை கூறி எழுதியிருந்தார் என்று அசோகமித்திரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.)


திரையுலகில் பல மாற்றங்கள்,மேடுபள்ளங்கள் கண்ட ஏ.பி.நாகராஜன் வாழ்வு பிறரிலிருந்து மிகவும் வேறுபட்டது.

அரசியல் நோக்கு கொண்டிருந்தார்.
ம.பொ.சியின் தமிழரசுக்கழகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். 
திரையுலகில் கவி.கா.மு.ஷெரிப் தமிழரசுக்கழகத்தில் மிகத்தீவிரமாக இயங்கியவர்.நாடகஸ்திரிபார்ட்,திரைப்படகதாநாயகன்,வசனகர்த்தா,தயாரிப்பாளர் என்று பலவித அனுபவங்களுக்குப்பிறகு தான் மிகச்சிறந்த சாதனை இயக்குனர் ஆக பரிமளித்தார்.

வி.கே.ராமசாமியுடன் சேர்ந்து சிவாஜி,பானுமதி நடித்த ’மக்களைப் பெற்ற மகராசி’,எம்.ஆர் ராதா நடித்த ‘நல்ல இடத்து சம்பந்தம்’ போன்ற படங்களைத் தயாரித்தார். வி.கே.ஆர் நட்பு கசந்ததில் பின்னால் இவர் பெரிய இயக்குனரான போது ஏபிஎன் படங்களில் வி.கே.ராமசாமி நடித்ததேயில்லை.
பொருளாதாரப் பிரச்னை வாழ்நாள் முழுவதும் இருந்தது.
கடும் நெருக்கடியின்போது எம்.ஆர்.ராதா உதவி செய்தபோது எம்.ஆர்.ராதாவை பக்கத்து அறைக்கு அழைத்து காலில் விழுந்து கும்பிட்டார்.ராதா தன் இயல்புப்படி ’எல்லார் முன் காலில் விழ வெட்கப்பட்டு ரகசியமாக பிறர் அறியாமல் நாகராஜன் என் காலில் விழுகிறான்.’ என்றார்.
ராதாவும் கூட இவர் பின்னால் இயக்கிய எந்தப் படத்திலுமே நடித்ததில்லை.

வடிவுக்கு வளைகாப்பு,குலமகள் ராதை படங்களை இயக்கிய பின் சிவாஜியின் 100வது படம் ’நவராத்திரி’  இயக்கிய பெருமை.
 
 அதன் பின் வாழ்வில் ஒரு மாற்றம். திருவிளையாடல்,சரஸ்வதி சபதம்,கந்தன்கருணை, திருவருட்செல்வர்,திருமால் பெருமை போன்ற படங்களை இயக்கினார். இதனால் இன்று வரை ஏ.பி.என் என்றால் புராணப்பட இயக்குனர் என்றே பரவலாக அறியப்படுகிறார்.

திருமால் பெருமை வந்த அதே வருடம் தான் ஏ.பி.நாகராஜனின் மாஸ்டர் பீஸ் ’தில்லானா மோகனாம்பாள்’ கூட வெளிவந்தது. 
       
நாகேஷ் நடித்த தருமி,வைத்தி கதாபாத்திரங்களை இயக்கி அவரை சிகரத்துக்கு கொண்டு சென்ற இயக்குனர்.

நவராத்திரி,திருவிளையாடல்,தில்லானா மோகனாம்பாள் இவரை இன்று அமரத்துவம் பெறச்செய்து விட்டன.

சிவாஜி ஏனோ அவரை இயக்கிய இயக்குனர்களில் அவருக்குப் பிடித்தவராக ’தெய்வமகன்’ ’பாரத விலாஸ்’ ’பாபு’ படங்களை இயக்கிய ஏ.சி.திருலோகசந்தரைத்தான் சொல்வார்.

திருவிளையாடலில் சிவாஜி,நாகேஷ் நடித்த அந்த பிரபல எபிசோடில் நக்கீரனாக ஏ.பி.என். பிரமாதமாக நடித்தார்.ஆனால் அதன் பின் அவர் இயக்கிய படங்கள் எதிலும் நடித்ததில்லை.

மிக பிரமாண்ட படங்களாக எடுத்த பின் சின்ன பட்ஜெட் படங்களாக திருமலை தென்குமரி,கண்காட்சி எடுத்தார். பின் சின்ன பட்ஜெட் அகத்தியர்,திருமலை தெய்வம் புராணப்படங்கள்.
மீண்டும் பிரமாண்டமாக  ‘ராஜராஜசோழன்’சினிமாஸ்கோப்( டைட்டில் கார்ட்- நடிகர் திலகம் உயர்திரு சிவாஜிகணேசன்)

கமல் இவர் இயக்கத்தில் சிவகுமாருடன் குமாஸ்தாவின் மகள்(1974) – இந்தப் படம் 1941ல் டி.கே.எஸ் சகோதரர்கள் நடித்து வெளி வந்த குமாஸ்தாவின் பெண் ரீமேக். இந்த நாடகத்தில் தான் ஏபிஎன் கதாநாயகியாக நடித்திருந்தார்! இவர் இயக்கிய போது அதில் கதாநாயகி ஆர்த்தி புட்டண்ணா.

கமல் நடித்த இன்னொரு ஏபிஎன் படம் ’மேல் நாட்டு மருமகள்’ அதில் ஒரு நடனமாட பம்பாயிலிருந்து வந்த வாணி கணபதியை  பின்னால் முதல் மனைவியாக்கியது.

ஏபிஎன் வாழ்வில் கடைசியாக  பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக  எம்.ஜி.ஆரை கதாநாயகனாக்கி அவருக்கு ஒன்பது நாயகியர் என்று ’நவரத்தினம்’ படத்தை இயக்கினார்.

நாகராஜனின் குரல் விஷேசமானது.அவர் படங்களில் “ பேரன்பு மிக்க ரசிகப்பெருமக்களுக்கு என்று ஆரம்பித்து படத்தைப் பற்றி பேசுவார்.

கண்காட்சி படத்தில் கே.டி.சந்தானத்தின் சந்தப்பாடல் ’அனங்கன் அன்பன் வசந்தன் மன்மதன் என்று வணங்கும் என்னுயிர் மன்னவா’விற்கு துவக்கத்தில் தொகையறாவாக ஏபிஎன் குரல்:

“வெண்ணிலவைக் குடை பிடித்து வீசு தென்றல் தேரேறி

மென்குயில் தான் இசை முழங்க, மீன் வரைந்த கொடியசைய

கண்கவரும் பேரழகி,கனகமணி பொற்பாவை

அன்ன நடை ரதியுடன்,அழகு மதன் வில்லேந்தி

தண்முல்லை,மான்,தனி நீலம்,அசோகமெனும்

வண்ணமலர் கணை தொடுத்தான்

வையமெல்லாம் வாழ்கவென்றே!”


ஏபி நாகராஜனுக்கு மனைவி மக்கள் இருந்தார்கள்.
நடிகை வடிவுக்கரசியின் அப்பா ராணிப்பேட்டை சண்முகமும் நாகராஜனும் சகலைபாடிகள். வடிவுக்கரசியின் பெரியப்பா ஏ.பி.என்.

நடிகை குமாரி பத்மினி இவருடைய நிழலில் தான் வாழ்ந்தார். கண்காட்சி,திருமலை தென்குமரி போன்ற படங்களில் நடித்தவர்.

ஏபிஎன் மறைந்து பல வருடங்களுக்குப் பின் இந்த நடிகை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

.........

ஏபிஎன் டப்பிங் தியேட்டரில் அவர் புராணப்படங்களுக்காக ரெஃபெர் செய்த புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன்.புரட்டி வாசித்தும் இருக்கிறேன்.


Nov 20, 2012

Never Explain!


’வில் வித்தையின் உச்சகட்டம் அம்பை எய்யாமல் இருப்பதே’ என்ற இந்த ஜென் தத்துவம் என்னால் இன்று  பிரபலமாகியிருக்கிறது.
கே.பாக்யராஜ் என்னிடம் ’ஒரு கதை சொல்லுங்கள்’ என்று கேட்டபோது
நான் மறுத்து விட்டு சொன்ன பதில் : வில் வித்தையின் உச்சகட்டம் அம்பை எய்யாமல் இருப்பதே!

இந்த ஒற்றை வரி தத்துவம் Capacity,Ultimate Power,Real test,Endurance,Reticence,Humbleness,Maturity,Perfection போன்ற இன்னும் பல பரிமாணங்களை உள்ளடக்கிய விஷயம்.  அதனால் இதை மொழிபெயர்ப்பது - 'literal' translation அபத்தம் என்றால் English equivalent ஆக ஒரே ஒரு quotation அல்லது proverb தருவதும் அபத்தம்தான் அல்லவா?
Never Explain! Never miss a good chance to keep silence!  

சுந்தர ராமசாமி எழுதும்போது கவனமாக மேற்கோள்களை தவிர்த்து விலக்குபவர்.இங்கே அவருடைய ஜே.ஜே நாவலிலிருந்து மேற்கோள் காட்டலாம்.
” மௌனம் கேள்வியை உயிரோடு வைத்திருக்கிறது.பதில் உளறல்கள் கேள்வியை துவம்சம் செய்து விடுகிறது.”
 ஆனால் INFORMATION-INTELLECT அமுதசுரபி ஆகிய நான் இதோடு நிறுத்த முடியுமா? கூலரிட்ஜ் சொன்னதையும் பதிய வேண்டித்தான் இருக்கிறது.
”Silence does not always mark wisdom.”

......

“ It is the possibility of having a dream come true that makes life interesting.Never stop dreaming.”

Alchemist நாவலை 1988ல் பவுலோ கொயலோ எழுதியிருக்கிறார்.“ஏதேனும் ஒரு அழகிய கனவு
என்றும் என்னுடன் இருந்து வருகிறது.........
கனவுகள் உடைந்து தகர்வதைப் பற்றி
கவலைப்படக் கூட முடியாமல்
மீண்டும் மீண்டும்
புதிது புதிதாய் முளைக்கும் கனவுகள்

கனவாற்றின் கரைகளில் தானே
வாழ்க்கை கொஞ்சம் தலைசீவி அழகு கொள்கிறது

கனவுகளற்ற பாலை நாட்கள்
வரவே வேண்டாம்
ஏதேனும் ஒரு அழகிய கனவு
என்றும் என்னுடன் இருக்கட்டும்.”

சமயவேலின் மேற்கண்ட கவிதை இடம்பெற்றுள்ள
’காற்றின் பாடல்’ கவிதைத் தொகுப்பு 1987ம் ஆண்டு வெளி வந்திருக்கிறது.

,,,,,,,,,,,,,,,

விகடன் மேடை ஆனந்த விகடன் வாசகர்கள் கேள்விகள் கமல் பதில்கள்.
கமல் ஹாசன் சொல்லியிருந்தார். “சந்திக்காத நபர்களில் காந்தி,பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் திரு எஸ்.வி.ரங்காராவும் அடக்கம்.”

ரங்காராவுக்கு எப்பேர்ப்பட்ட மகுடம்!


மூன்று மாதம் முன் ஒரு விகடனில் அசோகமித்திரன் பேட்டி.

அசோகமித்திரன் : ”நாம் ஒன்றுமே இல்லை என்பது தான் பெரிய உண்மை.என்னுடைய சாம்பலைக்கூடத் திரும்பிப் பார்க்காதீர்கள் என்று தான் என் குடும்பத்தாருக்கே சொல்லி இருக்கிறேன்.”

எமர்சன் சொன்னான் -“A great man is always willing to be little.” 

'Use a humble pen'  என்று சொல்லப்படுவதுண்டு. அசோகமித்திரன் வகை எழுத்து அத்தகையது.

.......................................


ஓவியம் : மு. நடேஷ்
Nov 18, 2012

சிவாஜி கணேசன்

             
திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை, மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை, ’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை. ’ செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி முடிந்ததும் ஒரு நடை.
’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு ஒரு அழகு நடை.
நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி காட்டி விட முடியுமா!!

பராசக்தி மூலம் புயலாக வீசி,
மனோகராவில்கொந்தளித்து ’குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே’ என்று சீறிய, சீரிய கலைஞன்.
உத்தம புத்திரனில் விந்தையான வேந்தனாக காட்டிய ஸ்டைல்!

 ’ராஜா ராணி’ படத்தில் சேரன் செங்குட்டுவனாக ஒரு lengthy single shot ல் மடை திறந்த வெள்ளம் போல  பேசிய  அடுக்கு மொழி வசனங்கள்.
 ”காவிரி கண்ட தமிழகத்துப் புதுமணலில் களம் அமைத்து சேர,சோழ பாண்டி மன்னர், கோபுரத்து கலசத்திலே யார் கொடி தான் பறப்பது என்று இன்று போல் அன்றும் போர் தொடுத்துக்கொண்டிருந்த காலமது!”

எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’
என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.

குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்” என்ற குமுறல்.

வணங்காமுடி படத்தில் ’பாடுடா’ என்று நம்பியார் அதிகாரமாக தங்கவேலுவிடம் வற்புறுத்துவார்.தங்கவேலு திகைத்து தவிக்கும்போது நம்பியார் ஒரு அடி பலமாக  கன்னத்தில் அறைவார். அடுத்த நொடியில் சிவாஜி பாடுவதாக  ” பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் பயன் தருமா- ஓங்காரமாய் விளங்கும் நாதம்” இதில் சிவாஜி கணேசனின் தொண்டை நரம்பு புடைக்கும். எந்த பாடலாயிருந்தாலும் தானே பாடுவதான பிரமையை உண்டாக்கிய நடிகர்.


தமிழர்கள் பாக்கியசாலிகளல்லவா! தமிழ் திரை கண்ட அசுர நடிகன் எங்கள் சிவாஜி கணேசன்.

கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
“அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நாம் ஆடி வரும் ஓரங்கம்
உடல் நான் அதில் உரம் நீ
என உறவு கண்டோம் நேர்மையாய்
பகல் இரவாய் வானத்திலே கலந்து நின்றோம் பிரேமையால்.............
 ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ  வா என் பக்கம்” ஆஅ ஆஅ ஆ...

இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.

”அன்பாலே தேடிய ” என்று அடி வயிற்றில் இருந்து குரல் எடுப்பது போல் பாவனை செய்வார்.

சபாஷ் மீனா ”காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலம் தானோ”

”மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையின் பொன்வண்ணம் கண்டான்”
இந்தப் பாடல் காட்சியை பார்க்கும்போது,அவர் வாயசைக்கும் நேர்த்தி பற்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது.
கைத்துப்பாக்கியை சுடுவதற்குத் தானே யாரும் பயன்படுத்த முடியும். எந்த நடிகனும் எத்தனை ஸ்டைலாக துப்பாக்கியைப்பிடித்தாலும் நோக்கம் சுடுவதாகத்தானே இருக்கும்.ஆனால் ஆவேசமாக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்து,பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு,சுட வந்த கைத்துப்பாக்கி கொண்டு,கண்ணீரை துடைக்க முற்பட்ட ஒரே நடிகன் இந்த உலகத்திலேயே சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே! என்ன ஒரு கவிதாப்பூர்வம்!


”காதலிக்கிறேன் என்றாள். பின் கல்யாண தேதி நிர்ணயித்தாள்.அதன் பின் காத்திருக்கிறேன் உங்களுக்காக என்று கை தேர்ந்த நாடகமாடினாள்.முடிவில் வாக்குத்தவறி விட்டாள்.வந்த வழியே செல்லுங்கள் என்றாள்.நடக்காது நம் கல்யாணம் என்று கூறி விட்டாள். கடைசியாகச் சென்று பார்த்தால் கல்நெஞ்சக்காரி கண்ணுறங்குகிறாள்!நம்பிக்கைக்கு துரோகமா? கல்யாணம் என்று மோசமா? கடைசியில் கண்ணுறக்கமா? ”ஆவேசமான கணேசனின் கணீர் என்ற குரல்...
 இடி.. ..மின்னல்! இடி.. மின்னல்!
’ ராதா!ராதா!ராதா’என்ற கதறல்!
தொடர்ந்து டி.எம்.எஸ் பாடல்
’உன்னைச்சொல்லி குற்றமில்லை
என்னைச்சொல்லி குற்றமில்லை!
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
மயங்கவைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி’

இன்றைக்கு அடிடா அவளை!ஒதடா அவளை!...
why this கொலவெறி..... என்று  வந்த காட்சிகளுக்கெல்லாம் மூலம் இந்த ’குலமகள் ராதை’ தானே! 

ஒரே நேரத்தில் உடலின் அத்தனை அங்கங்களையும் இயக்கி நடிக்கவைத்த கலைக்குரிசில் கணேசன்!

’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று  கலங்கிய கப்பலோட்டிய தமிழன்.

’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா!’ என்று தேம்பிய வெகுளி ரங்கன்.


’கண்ணில் தெரியும் வண்ணப்பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’ - தவித்த பலே பாண்டியா

’சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்’ என்ற வரிகளுக்கு முகத்தின் குளோஸ் அப் மூலம் அர்த்தம் சொன்ன கலை மேதை.

’நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா!
சட்டி சுட்டதடா கை விட்டதடா’

’நவராத்திரி’ நவரச நாயகன்.
’புதிய பறவை’ ஜென்டில்மேன்.

ஸ்டைலாக சிகரெட் குடிப்பதில் எவ்வளவு வகைபாடு காட்டலாம்?’சாந்தி’ படத்தில் -”யார் அந்த நிலவு!ஏனிந்த கனவு!”

சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா??

’நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் அரிதாரம் பூசாமலே ‘முத்துக்களோ கண்கள்!தித்திப்பதோ நெஞ்சம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை’ என்ற நெகிழ்ச்சி!

ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’

’மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்’

உயர்ந்த மனிதன் அவருக்கு 125 வது படம். 124 படங்களுக்குப்பிறகு புதிதான ஒரு பாத்திரத்தை எப்படி சித்தரிக்க முடிந்தது என்பதில் இருக்கிறது கணேசனின் சாதனை வீச்சு.

சுருக்கமாக ’செல்லும்’ இந்த வார்த்தைகளோடு கணேசன் நடித்த படங்களின் அத்தனைக்காட்சிகளும்  முழுமையாக விரிகிற அதிசயம் நிகழ்கிறது.

கிருஷ்ணன் பஞ்சு, எல்.வி.பிரசாத், பி.ஆர்.பந்துலு, பீம்சிங், ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், கே.எஸ்.ஜி, ஏ.சி.திருலோக்சந்தர் போன்ற இயக்குனர்களின் படைப்புகளில் விதவிதமான அவதாரங்கள் எடுத்த மகத்தான கலைஞன்!


1960களில் மேக்கப் இல்லாமல் வேட்டி சட்டை போட்டு நெற்றியில் விபூதி குங்குமம் இட்டு பொது நிகழ்வுக்கு வரும்போது முகவசீகரம்.
அந்த ஸ்பெஷல் கண்கள்! அந்த ஸ்பெஷல் மூக்கு!
அந்த அடர்ந்த இயற்கையான கேசம்! 70 வயதில் கொஞ்ச காலம் குடுமி கூட வைத்துக்கொண்டிருந்தார்!
ஃபுல் சூட் கனகச்சிதமாக பொருந்திய கணவான் கணேசன்.

ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி.
’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,அகங்கார, பணத்திமிர்.
நண்பனையே கொல்லத்துணியும் ’ஆலயமணி’ பொறாமை.
 இமேஜ் பற்றிய பிரக்ஞை கிஞ்சித்தும் இல்லாதஒரே ஹீரோ நடிகர்.
ராமன் எத்தனை ராமனடி படத்தில் மாஸ்டர் பிரபாகர் நடிகர் திலகத்தைப் பார்த்து ’டே சாப்பாட்டுராமா’ என்பான்!


ராஜராஜ சோழன் படத்தை விட்டுத்தள்ளிவிடலாம்.ஆனால் அப்படத்தில் டி.ஆர் மகாலிங்கம் இவர் வீசும் வார்த்தைகளை எடுத்துப்பாடும் காட்சி.

’தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள்.
தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள்
தரணியெல்லாம் புகழ் மணக்க தாயென வந்தாள்

மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்
அணிமுத்து மாலை எட்டுத்தொகையாகும்
அவன் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும்

புலவரெல்லாம் எழுதி வைத்த இலக்கியங்கள்
பொன்மேனி அலங்கார சீதனங்கள்...........’

’ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி.

அவருடைய 24 வயதில் ஆரம்பித்து கடைசி வரை, முதுமை வியாதிகள் அவரை சித்திரவதை செய்த போதும் சிவாஜி கணேசன் ஷூட்டிங் என்றால் சம்பந்தப்பட்ட யூனிட் ஆட்கள் பதறி அடித்துக்கொண்டு காலை ஆறு மணிக்கே தயாராக வேண்டும்.முழு மேக்கப்புடன் ரெடியாக ஸ்பாட்டில் ‘என்னடா ! உங்களுக்கு இன்னும் விடியலயா?’ என்று குறும்பு பேசும் சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்.

நேரில் சந்திக்கிற மனிதர்களை தன் கதாபாத்திரங்களுக்கு பிரதிபலிப்பார்.

’ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு பாடலில் கடைசி ஸ்டான்சாவில் கிருபானந்த வாரியார் (இந்தப் பாடலில் அவருடைய நடை மற்றொரு விஷேசம்) ..கடலை சாப்பிடுகிற அழகு.

திருவருட்செல்வர் ‘அப்பர்’ பாத்திரத்திற்கு காஞ்சி பரமாச்சாரியாள்

காவல் தெய்வம் பட கௌரவ வேடத்திற்கு மதுரை செண்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரம்

 தங்கப்பதக்கம் சௌத்ரி பாத்திரத்திற்கு வால்டர் தேவாரம்

வியட்நாம் வீடு சுந்தரம் சொல்கிறார்:’பிரிஸ்டிஜ் பத்பனாய்யர் பாத்திரத்திற்கு இந்தியா சிமெண்ட் நாராயணசாமி.
’கௌரவம்’பாரிஸ்டர் ரஜினிகாந்த் தோற்றத்திற்கு டி.எஸ் கிருஷ்ணா( டி.வி.எஸ்).
பாரிஸ்டர் பேசும் பாணி பிரபல வக்கீல் கோவிந்த் சுவாமிநாதன்’

1994ல் ஜெமினியோடு நான் ஒரு சில மணி நேரம் இருந்த போது- 
டி.வி யில் ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வயசு இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”

சிவாஜி கணேசன் மரணம் நிகழ்ந்த போது செத்த உடலைப் பார்த்த பிரபலங்கள்,பொதுமக்கள் பெரும்பாலும் வாய் விட்டுப் பேசினார்கள்.
“ அய்யா நீ தானே பிறவிக்கலைஞன்!” ”உனக்குமா சாவு” “உன் சாதனை இனி எவனாலும் முடியாது”
 உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்போது கூட மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகன் ஆவேசத்துடன் ”இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!” என்று ரஜினிகாந்த், வடிவேலுவைப் பார்த்து கத்தினானே!

........


http://rprajanayahem.blogspot.in/2008/08/ok-young-man-i-am-leaving.html
Nov 14, 2012

நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்


சினிமால ஒரு டைரக்டர் கிட்ட அஸிஸ்டண்ட் டைரக்டரா சேரும்போது ஒரு விஷயம் தப்பிக்கவே முடியாது. ’ஒரு கதை சொல்லுங்க’ என்று பிரபல டைரக்டர்கள் அந்தக்காலத்தில் சொல்வாங்க. இந்தக்காலத்தில் எப்படியோ தெரியவில்லை.
இப்படி என்னிடம் கே பாக்கியராஜ் ’ ஒரு கதை சொல்லுங்க’ என்று கேட்டபோது என் பதில் “ வில் வித்தையின் உச்சகட்டம் அம்பை எய்யாமலிருப்பது!”  ஜென் பௌத்தம்!
                                              (  ஓவியம்: மு. நடேஷ் )

“ வில் வித்தையின் உச்சகட்டம் அம்பை எய்யாமலிருப்பது!”
இந்த ஒற்றை வரி தத்துவம் Capacity,Ultimate Power,Real test,Endurance,Reticence,
Humbleness,Maturity,Perfection போன்ற இன்னும் பல பரிமாணங்களை உள்ளடக்கிய விஷயம்.
Never Explain! Never miss a good chance to keep silence!
.............

....

பொதுவா அப்பாவுடைய பாடி லாங்க்வேஜ், பேசும் ஸ்டைல், பிள்ளைகளுக்கு பிடிக்காது. இதை ’டிஸ்க்ரேஸ்’ நாவலில் ஜே.எம்.கூட்சீ  சொல்வார். எனக்கு ஒரு சந்தேகம். டி.ராஜேந்தர் மகன் சிம்புவும், (சங்கர்)கணேஷ் மகன் சின்னத்திரை நடிகர் ஸ்ரீ யும்’ ஏம்ப்பா இப்படி குரங்கு சேட்டை பண்ணுற.லூசாப்பா நீ. எரிச்சலா இருக்கு எனக்கு’ன்னு சொல்ல மாட்டானுகளா!
...........


அந்தக்கால நண்பன்.டீ சாப்பிட காசில்லாமல் டீக்கடையில் பெஞ்சில் அமர்ந்திருப்பான்.(அரை மணிக்கு ஒரு டீ சாப்பிடவேண்டியிருக்கும்போது எவ்வளவு காசிருந்தாலும் மிஞ்சுமா?) நான் அவனருகில் வந்து அமர்வேன்.முகத்தில் எந்த சலனமுமில்லாமல் சோகச்சிலையாக இருப்பான். நான் என் சட்டையில் இரண்டு பட்டனை கழற்றி காலரை இரண்டு பக்கமும் இரு கையால் தூக்கி ஆட்டுவேன். பாக்கெட்டிலுள்ள சில்லறைக்காசுகள் ’ஜல் ஜல் ஜல் ஜல் ’ லென குதிக்கும்.
அவன் முகம் பிரகாசமாகி களை கட்டும். கண்களில் பல்ப் எரியும். காதில் சில்லறைக்காசுகள் விழும் சத்தத்தால் அவன் உடல் சிலிர்த்து விடும். ஒரு கையை காதில் வைப்பான்.மறு கையை நீட்டிசீர்காழி குரலில்கூப்பாடு போடுவான் “தேவ கான ஓசை கேட்டேன்!”
......

’நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்’ என்றான் எட்டயபுரத்தான்.
ஆனால் கவிஞர் சமயவேல் சொல்வது போல
“ஏதேனும் ஒரு காரணத்தின் நிமித்தம் திடுமென மனது உறையத்தொடங்குகிறது.”

அந்தக் கவிதை முடிவது இப்படி-”எதிரெதிர் வண்ணங்களின் இழுப்பில் என் தூரிகை நகர்கிறது.”


I am not running out of Writer's Ink.
.............................................................................


Nov 12, 2012

Miracles never cease !


 ஊரோடி ரகு போனில் அவர்கள் குடும்பம் மெஸ் நடத்துவதை -அந்த தொழில் தந்த அனுபவம் ஆக சொன்ன விஷயம்: ’சாப்பாடு இருக்கும்..பசிக்கிற நேரம் சாப்பிடவே முடியாது’
மெஸ் நடத்துவது எப்பேர்ப்பட்ட சவால்.ஊருக்கு உணவு தரமுடியும். அன்னலட்சுமி அருள் உணவுக்கூடம் நடத்துபவர்களுக்கு வாய்க்காது.

Life of Pi நாவலில் வரும் படேல் என்னும் சிறுவனின் குடும்பம் பாண்டிச்சேரியில் ஒரு zoo நடத்துபவர்கள்.அந்த தொழில் அனுபவம்- ஒரு மிருகக்காட்சிசாலையில் மிக பயங்கரமான மிருகம் என்ன தெரியுமா?
Pi says " In our trade,the most dangerous animal in a zoo is MAN.” வேடிக்கை பார்க்க வருகிற மனிதர்கள் தான் அங்குள்ள மிருகங்களின் கொடூரமான எதிரிகள்.
ஒரு ஆண் யானை குடலில் ரத்தம் கசிந்து துடித்து இறந்தது.காரணம் என்னவென்றால் பார்வையாளன் தந்திரமாக ஒரு உடைந்த பீர் பாட்டிலை அதற்கு உண்ணக்கொடுத்துவிட்டான்.
ஒரு மனிதன் கத்தியோடு ஒரு மான் கூண்டுக்குள் பாய்ந்து விட்டான்.
அவனுக்கு ராமாயணம்,சீதை கடத்தப்படுவது,மான் எல்லாம் நினைவில் வந்திருக்கிறது.ராமாயணகதையை அதன் போக்கில் போக விடாமல் சீதையைக் காக்க இவன் 'குறுக்க' கிளம்பிட்டான்!அடப்பாவி...
’எங்கு கண்டாலும் ராமன்கள் தட்டுப்பட்டால் ராமாயணம் செல்லாக்காசு’ - கி.ராஜநாராயணன் சொன்னது!

இந்த Yaan Martel எழுதிய Life of Pi நாவலைப் பற்றி 2004ம்  ஆண்டு திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் கிளப்பில் நான் ஒரு மணி நேரம் பேசினேன்.

 இப்போது என்.சொக்கன் ட்விட்ட்ரில் இதைப்பற்றி குறிப்பிட்டு இருந்தார் இப்படி-’தீபாவளிக்கு விஜய் டிவியில் ’Life Of Pi’ படத்தைப் பற்றி கமலஹாசன் பேசுகிறாராம்.’


நாளை தீபாவளி.
இன்று சந்தோஷம் தந்த நிகழ்வு ஆஸ்ட்ரேலியாவிலிருந்து வந்துள்ள கானா பிரபாவை திருப்பூரில் சந்திக்க கிடைத்த வாய்ப்பு.என்னுடைய ப்ளாக் இன்று இப்படி ஜெகஜ்ஜோதியாய் இருப்பதற்கு காரணம் கானா பிரபா தான்.Nothing beats the feeling of getting a real nice gift!
தொரகுனா இட்டுவன்டி சேவா என்ற தியாகபிரும்மத்தின் பிலஹரி ராக கீர்த்தனை தான் நினைவுக்கு வருகிறது.பிலஹரி ராகம் பற்றி தெரியுமா? கவலையைத்தீர்க்கிற மூலிகை.
குட்டீஸ்களோடு வந்த பரிசல்காரன் போனில் வந்த தோட்டா ஜெகன் என்னுடனும் உற்சாகமாக பேசினார்.

இன்று இரவு பெங்களூரு B.கணேஷுடன் போனில் பேசினேன்.
குழந்தை மனம்...தெய்வத்துளி!

The funny thing about 'Miracles' is that they happen!


..............................

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_24.html


Nov 9, 2012

அஜீத்


ஞாயிற்றுக்கிழமை. தேதியும் 6ந்தேதி.மாதமும் 6வது மாதம்.தேதி மாதம் வருடம் கூட்டிப்பார்த்தாலும்   கூட்டு எண் 6 தான்.06-06-2010.காலையில் வீட்டிற்கு மீன் வாங்கிக்கொடுத்து விட்டு இண்டியன் எக்ஸ்பிரஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தேன். மொபைல் சிணுங்கியது.இங்கே  விஐபி க்ரூப்ஸ் மாக்ஸ்வெல் மேனேஜராயிருக்கும் என் கசின் போன் செய்தார். ’வசுந்தராவுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம்.உடனே குடும்பத்தோடு கிளம்பி வாருங்கள். உங்க அண்ணனும் வந்திருக்கிறார்.’

 உடனே என் பெரியம்மா மகன் முன்னாள் திமுக ராஜ்யசபா உறுப்பினரான வக்கீல்.R.சண்முக சுந்தரமும் பேசினார்.’துரை! உடனே கிளம்பி வா!’

திடீர் என்று போக வேண்டி நேர்ந்ததால்  நான் மட்டும் கிளம்பினேன்.ஸ்கூட்டரில் வேண்டாம். பஸ்.
அவினாசி ரோடு அணைப்புதூரை ஒட்டி பழங்கரை அருகில் கசின் செல்வராஜ் வீடு.அதற்கு எதிரே உள்ள மண்டபம்( கார்மெண்ட்ஸ் ஃபேர் நடக்கும் இடம்).அதில் தான் அன்று மாலை நேர நிச்சயதார்த்தம். இப்போது வீட்டில் உறவினர்களுக்கு விருந்து.

அணைப்புதூரில் இறங்கி நடந்து  உறவினர் வீட்டுக்குச் சென்றேன். செல்வராஜ் தம்பதிகள் வரவேற்றார்கள்.என் அண்ணன் சண்முகசுந்தரமும் அண்ணியும் முகம் மலர’துரை வா!வா!’
சண்முகசுந்தரமும் செல்வராஜும் சகலைபாடிகள்.அண்ணியின் உடன் பிறந்த தங்கை தான் செல்வராஜின் மனைவியார். செல்வராஜ் தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும். மகளுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம்.
கணபதியும் நானும் கல்லூரிகாலத்தில் பார்த்துக்கொண்டது.அதன் பின் இன்று தான் சந்திக்கிறோம்.கணபதியும் என் அண்ணனின் மற்றொரு சகலைபாடி தான்.  ‘அந்தக்காலத்தில் அமெரிக்கன் கல்லூரியில் கேபி என்று ’அண்ணாந்து தான்’ துரையைப் பார்ப்போம்!’ என்று என்னைப்பற்றி வியந்து சொல்கிறார்.இன்று இந்த கணபதி உயிருடன் இல்லை.
உறவினர்கள் என் மனைவியை,மகன்களை ஏன் அழைத்து வரவில்லை என கேட்கிறார்கள்.

கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்தார்கள்.சைதை துரை சாமி தான் மாப்பிள்ளையின் தகப்பனார். அப்போது அவர் சென்னை மேயர் கிடையாது.

மாப்பிள்ளை வீட்டாருடன் அதிமுக எம்.பி.செம்மலையின் மனைவியாரும் இருந்தார்.சிறிது நேரத்தில் மாப்பிள்ளை தன் நண்பர்களோடு வந்தார். மாப்பிள்ளையின் ஒரு நண்பர் மிர்ச்சி சிவா. ’தமிழ்படம்’ ஹீரோ.
சைதை துரைசாமி எம்.ஜி.ஆர் படப்பாடல்கள் பற்றி சின்னபையன் போல பரவசமாக பேசினார்.சைதை துரைசாமியிடம் நான் ‘பால் சாப்பிடக்கூடாது என்று நீங்கள் வலியுறுத்துவீர்களே!’ என்றேன். அவர் முகம் பிரகாசமாகியது. உடனே சண்முக சுந்தரம் ‘எங்க துரை கிட்ட இதான் ஸ்பெஷாலிட்டி! யாரு கிட்ட என்ன பேசனும்னு இவனுக்குத்தான் தெரியும்!’என்று சைதை துரை சாமியிடம் சொன்னார்.
(சென்ற சட்டசபை தேர்தலில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் இருவரும் தொகுதிகளில் நாமினேஷன் ஃபைல் செய்த போது, கூட இருந்தவர் சண்முகசுந்தரம் தான்!ஸ்டாலினை எதிர்த்து நின்றவர் சைதை துரைசாமி!)
சைதை பால்,தயிர்,வெண்ணை இவற்றால் வரும் நோய்க்கூறுகள் பற்றி உற்சாகமாகச் சொன்னார்.சைதை துரை சாமி நல்ல Conversationalist.சைதை துரைசாமி இருக்கும் இடத்தில் சைதை துரைசாமி தான் பேசவேண்டும் என்ற சீரிய நோக்கு கொண்டவர்.

நடிகர் சிவாவிடம் என் மகன் கீர்த்தி ’தமிழ் படம்’ காட்சிகளின் ரசிகன்.அந்தப் படக்காட்சிகள் டி.வி.யில் வரும்போது ‘இந்த சீனைப் பாருப்பா’ என்று என்னை வற்புறுத்துவான் என்பதை ச்சொன்னேன்.

’கீர்த்தி இப்போ இங்கே வருவாரா?’ என்று சிவா கேட்டார். சிறிது நேரத்தில்
” கீர்த்தி சாயந்திரம் நிச்சயதார்த்தத்துக்கு வருவாரா?”என்று மீண்டும் சிவா கேட்டார்.
நான்  கீர்த்திக்கு போன் செய்து “ இங்கே ’தமிழ் படம்’ ஹீரோ சிவா  வந்திருக்கிறார். உன்னைப் பார்க்க ஆசைப்படுகிறார்.பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பி வாயேன்’ என்றேன்.அவன் கொஞ்சமும் யோசிக்காமல், ஆச்சரியப்படாமல்,அமைதியாக ’ போப்பா!நான் வரல.’ என்று சொல்லி விட்டான்.

இப்படித்தான் கீர்த்தி.ஸ்திதப்ரக்ஞை மிக்கவன்!

சிவாவிடம் பேசியதில் பெரிய பின்புலம் இல்லாமல் தன் சொந்த முயற்சியில் சினிமாவில் கதாநாயகன் ஆகியவர் என்று தெரிந்தது.அவர் குடும்பத்திற்கும் சினிமாவிற்கும் ஸ்னானப்ராப்தி கிடையாது. நான் சொன்னேன்.”சினிமாவில் இப்படி self standing ஆக சாதித்தவர்கள் ரஜினியும்,அஜீத்தும்”

மதிய விருந்து முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டார் ஹோட்டலுக்கு கிளம்பினார்கள்.

மாலை நிச்சயதார்த்த நிகழ்வு- எதிரே தான் மண்டபம் என்பதால் எல்லோரும் நடந்தே கிளம்பினோம்.

மிக வேகமாக ஒரு கார் வந்தது. நின்றது.காரை ஓட்டியவர் கீழே இறங்கினார். அவர் அஜீத்.

சிரித்த முகத்துடன் மண்டபத்திற்குள் நுழைந்தவர்
என்னை தாண்டிப் போனவுடன் நின்று திரும்பி என்னன இரு கரம் கூப்பி வணங்கினார். முதல் வரிசையில் போய் அமர்ந்தார். சைதை துரைசாமியின் மகனுக்கு உற்ற நண்பனாம் அஜீத்.

சைதை துரைசாமியின் ஐ ஏ எஸ் பயிற்சி நிறுவனத்தில் பயின்று வென்ற மாணவர்கள்,மாணவிகள் ஒரே போல உடையணிந்து வந்திருந்தார்கள்.கண்கொள்ளாகாட்சி! பள்ளிக்குழந்தைகளை ப் பார்த்த பரவசம் ஏற்பட்டது. சைதை பெருமிதத்துடன் அந்த மாசு மருவற்ற மாணவ மாணவியரை ஒவ்வொருவராக அழைத்து “ இவர் ஐ.ஏ.எஸ் பரிட்சையில் 5 வது ராங்க். இந்த பெண் 7 வது ராங்க். இந்த தம்பி 13 வது ராங்க்” என்று அறிமுகம் செய்து வைத்தார்!

மாப்பிள்ளை மேடையேறினார். அங்கே எங்கள் உறவினர்கள் ஆண்களும் பெண்களும் அந்தச்சூழல் குறித்து விஷேச மாற்றம் எதுவுமேயின்றி இயல்பாக இருந்தனர். நான் அஜித்தை நெருங்கி பேசத்தொடங்கினேன். அந்த நேரம் முதல்வரைப் பார்த்து அஜீத் ‘ஐயா! மிரட்டுறாங்கய்யா!’ என்று சொல்ல ரஜினி எழுந்து நின்று கைத்தட்டிய விஷயம் பற்றி “ You broke the ice. You have done a wise thing,because there is no wisdom like frankness!" என்றேன்.அஜீத் எழுந்து நின்று ”நீங்க உட்காருங்க சார்!” என்று என் கையைப் பிடித்து அவரருகில் உட்காரவைத்தார். அஜித்துக்கு மறுபக்கம் தமிழ்படம் சிவா. வீடியோ கேமராக்கள் எங்களை நோக்கி சுழல ஆரம்பித்தன. போட்டோ ஃப்ளாஷ் வேறு. அஜீத்திடம் நான் சொன்னேன்.”மதியம் கூட  சிவாவிடம் உங்களைப்பற்றி குறிப்பிட்டேன்.அப்போது மாலை உங்களை சந்திப்பேன் என்று நினைக்கவில்லை.” அஜீத் திரும்பி சிவாவிடம் “ நான் வருவது பற்றி சாரிடம் சொல்லவே இல்லையா?” என்றார். சிவா சிரித்தவாறு
‘ இல்ல. அவருக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமே என்று தான் சொல்லவில்லை’ என்றார். நான் பெண்ணுக்கு சித்தப்பா என்று அஜீத் கேட்டுத்தெரிந்து கொண்டார். ‘எனக்கு மிகவும் பிடித்த அஜீத் படங்கள் ‘ஆசை’, ’காதல் கோட்டை’ என்பதைச் சொன்ன போது அவர் நடித்த நல்ல படங்கள் என்று வரிசைப்படுத்தி ’வரலாறு’ படத்தைக்கூட சொல்ல ஆரம்பித்தார்.
அடர்த்தியான தலைமுடி முழுக்க நரை.ஐந்து நாள் ஷேவ் செய்யாத வெள்ளி தாடியுடன் அஜீத்!
எனக்கென்னவோ அஜீத்துக்கு achievement depression தான் இனிமேல் என்று தோன்றுவதைச் சொன்னேன். அஜீத் சற்றே கண் விரித்து ”achievement depression வந்தாச்சு சார் ” என்றார். நானும் சினிமாவில் இருந்தவன் என்பதை சிவா அப்போது அஜீத்திடம் சொன்னார்.  ஒரு அரை மணி நேரம் இப்படிப் பேசிக்கொண்டிருந்திருப்போம். நிச்சயதார்த்த விழா ஆரம்பிக்கவே அஜீத் எழுந்து மேடைக்கு சென்று மாப்பிள்ளை வீட்டார் பக்கம் நின்றார். நான் பெண் வீட்டாருடன் மேடையில் நின்றேன்.

கணபதி உடனே” துரையும் அஜீத் தும் சேர்ந்து உள்ள புகைப்படம் நாங்க போட்டோகிராபர்களிடம் கேட்டிருக்கோம்!” என்று சிரித்தவாறு என்னைப் பார்த்து உரக்கச்சொன்னார்.

இரவு டின்னர் முடிந்ததும் என் அண்ணன் சண்முகசுந்தரம்,செல்வராஜ்,கணபதி மற்றும் உறவினர் அனைவரிடமும் விடைபெற்றபோது சைதை துரைசாமியிடம்,அஜீத்திடமும்,சிவாவிடமும் சொல்லி விட்டுக் கிளம்பினேன். அணைப்புதூர் வரை நடந்து வந்து இரண்டு பஸ் மாற்றி வீடு வந்து சேர்ந்தேன்.