Share

Nov 4, 2012

Gossip and Rumors!


ஐந்து வருடம் முன் திடீரென்று ஒரு போன்.
’ராஜநாயஹமா? ’

”டேய் நான் தான்.. டா? ஐந்தாவதில ஒங்கூட படிச்சனே!”

நினைவு மின்னலில் குறிப்பிட்ட இந்த என் பால்ய நண்பனைத் தேட சிரமமேதும் இல்லை.
பால்ய வயதிற்கு பின்னோக்கி போக எனக்கு எந்த சிக்கலும் ஏற்படவே இல்லை. என் தகப்பனாரும் அவனுடைய தகப்பனாரும் அப்போது திருச்சியில் சுங்க இலாகா அதிகாரிகள்.
ஐந்தாவது படிக்கும்போது அவன் தான் என் நெருங்கிய நண்பன். இருவரும் இரட்டைக்குழந்தைகள் போல எப்போதும் ஒன்றாகவே இருப்போம். சினிமாவுக்கு ஒன்றாகப்  போவோம். என்னென்ன படம் என்பது கூட இன்னும் பசுமையாக ஞாபகமிருக்கிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் விளையாட என் வீட்டுக்கு வருவான். நான் அவன் வீட்டுக்குப் போவேன்.
எவ்வளவு வருடங்கள்!
செல்பேசியில் இது போல் இவ்வளவு காலம் கழித்துப் பேச வாய்க்கும்போது உண்டாகும் இயல்பான பரவசம்.
’டே! எப்படி டா கண்டு பிடிச்சே!’ நான்.
“நான் இப்போது மும்பையில் கஸ்டம்ஸ் சூப்ரிண்ட்.திருச்சியில் இருந்து ஒரு சூப்ரண்ட் இங்கே வந்திருந்தார். அவரிடம் உன் அப்பா பற்றி விசாரித்தேன். அவர் மகன் இப்போது திருச்சி கஸ்டம்சில் சூப்ரண்ட் என்றார். உன் தம்பி என்று தெரிந்தது.அவனுக்கு போன் போட்டேன்.அவன் உன் நம்பர் தந்தான்!”

என் பால்ய நண்பன் ரொம்ப உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தான் என்பது அவன் குரலிலேயே தெரிந்தது.

அந்த ஒன்பது வயதில் எங்கள் வாழ்வின் நினைவுகளை பரவசமாய் மாறி மாறி இருவருமே பகிர்ந்து கொண்டோம். அவன் சொன்ன சில விஷயங்கள் எனக்கு ஞாபகம் இல்லை.நான் சொன்ன சில சம்பவங்கள் அவன் நினைவில் இல்லை.

”உன்னப் பத்தி இன்னொரு விஷ்யமும் எனக்கு தெரியும்! “ ஒரு பிரபல நடிகை பெயரைச் சொல்லி நிறுத்தினான்.
எனக்கு விஷாதம். ஏன் அந்த நடிகை பெயரைச் சொல்லி நிறுத்தி சிரிக்கிறான்.
ரொம்ப வருடங்களுக்கு முன் ஒரு முறை உன்ன பத்தி விசாரித்தேன். நீ சினிமாவில் இருந்திருக்கிறாய் என்று தெரிந்தது.அது மட்டுமல்ல. அந்த நடிகையுடன் You were living together என்றும் கேள்விப்பட்டேன்.”

”டே! இந்த விஷயம் ஏதோ ஒருத்தர் சொன்னது கிடையாது. பலபேரு அப்படி சொன்னாங்க!”
’அதெப்படி பலர் என்னை ஒரே நடிகையுடன் இனணத்துச் சொல்லமுடியும்’


“ அந்த நடிகையை சினிமாவில், டி.வி.யில் பார்க்கும்போதெல்லாம் ராஜநாயஹம் ஞாபகம் தான் வரும்டா!” ஹா..ஹா.. என்று ரசித்து மும்பையில் இருந்து சிரிக்கிறான்.


”ஏதோ ஓர் உக்கிரம் கண்விழித்து வேறோர் ஒழுங்கில் அடுக்கிவிட்டு
மீண்டும் விழிமூடிக்கொண்ட சாகசமோ ”

தேவதேவன் இந்த வரிகளை எந்த சூழலில் எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் இந்த நேரம் அந்த வரிகள் தான் இங்கே என் மனதில்.

Gossip is  the devil's Radio!

நான் என் பால்ய நண்பனிடம் இது உண்மையல்ல என்று மறுதலிக்க ஆரம்பித்தேன். அவன் “ Easy!Easy! " என்று என்னை தேற்ற ஆரம்பித்தான். ”எல்லாம் ஒவ்வொரு நேரம் இப்படித்தான். எனக்குக் கூட ஒரு affair உண்டு.”

ஒரு பிரபல நடிகரின் மகள் என் பால்ய நண்பனின் காதலியாக இருந்திருக்கிறாள். அவள் திருமணமாகி விவாகரத்து பெற்ற பின்னும் கூட இவனைத் தேடி வந்திருக்கிறாள்.

ராஜநாயஹமும் இப்படி சில காலம் ஒரு நடிகையுடன் வாழ்ந்திருக்கிறேன்!
  We were sailing the same boat!

என்னை ஐந்தாம் வகுப்பில் படித்ததற்கு பின் இவன் பார்த்ததேயில்லை.ஆனால் ரொம்ப வருடங்களாக என்னைப் பற்றி ஒரு அபவாதத்தை நம்பிக்கொண்டே இருந்திருக்கிறான்.


யோசித்துப் பார்க்கையில் என்னைப் பற்றி வதந்திகள் அவ்வப்போது நானே கேள்விப்பட்டிருக்கிறேன். வீண் பழி,அபவாதம்,அவதூறு.விதவிதமான வண்ணவண்ண வதந்திகள்.
வதந்திகளை என்ன செய்யமுடியும்.


“Don't waste your time with explanations: people only hear what they want to hear.”   

-Paulo Coelho         

......

http://rprajanayahem.blogspot.in/2008/07/paulo-coelhos-mails-to-rprajanayahem.html


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.