Share

Nov 24, 2009

Carnal Thoughts -26

மோகவாதையில் கண்கள்


கலவியின் உச்சம் காணும்போது கண்கள் நிலை ? சொருகி மூடிய கண்கள்!


கு.ப.ராவின் " ராஜபிக்ஷினி '' சிறுகதையில்

"சுக சிகரத்தில் ராஜ்ய ஸ்ரீ
அரசன் கிருகவர்மன் ஓர் இளம் காதலனின் நித்யவேட்கையிலேயே இருந்து கொண்டு , அவள் காதுகளில் ஈரச் சொற்களை இரகசியமாக நிரப்பி, இடைவிடாது ஏகாந்தத்தில் அவளைப் புல்லரிக்கச் செய்தான். சதா கண்மூடி மௌனமாகும் காதல் நிலையை அளித்தான்."

பாரதி தன் பங்குக்கு
அந்த மின்னற்சுவையனுபவ வினாடிகளில்,
மோகவாதையில் கண்கள் நிலை பற்றி குயில் பாட்டில் சொல்கிறார் !

"ஆவிக்கலப்பின் அமுத சுகந்தனிலே

மேவியாங்கு மூடியிருந்த விழி நான்கு "
மோகப்பெருமயக்கு நிலையில்

விழியில் மிதந்த கவிதையெல்லாம் சொல்லில் அகப்படுமா?

Nov 23, 2009

எம் ஆர் ராதா வாழ்வில் பிராமணர்கள் .

சங்கரதாஸ் சுவாமிகளை " நாடக உலகத்தந்தை " என எல்லோரும் சொல்வதை
எம்.ஆர் .ராதா ஏற்றவரல்ல.' நாடக உலகின் தந்தை ஜெகந்நாதய்யர் தான் 'என எப்போதும் உறுதியாக ராதா சொல்வார்.

" மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சனி சபா." முதலாளி ஜெகந்நாத அய்யர்.

ஜகன்னாத அய்யர் நூறு வருடங்களுக்கு முன் தன் நாடகக் கம்பெனியில் நடிகர்களிடம் ' சம பந்தி போஜனம் ' கொண்டு வந்து புரட்சி செய்தவர் .

கிட்டப்பா இந்த நாடக கம்பெனியில் சேர தன் அண்ணன் தம்பிகள் ஐந்து பேரோடு வந்தார் ." கிட்டப்பா ஒருத்தனுக்காக இத்தனை பேரை வெச்சி என்னாலே சமாளிக்க முடியாது ''ன்னு சொல்லி ஜகன்னாத அய்யர் திருப்பி அனுப்பி விட்டார்.

ஜகன்னாத அய்யர் கம்பெனியிலிருந்து என் . எஸ் . கே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி கொல்லம் போய் டி .கே .எஸ் . கம்பெனியில் சேர்ந்து விட்டார். ஜகன்னாத அய்யர் உடனே போலீசில் ' கம்பெனி நகையை திருடி விட்டான் ' என்று என் .எஸ் .கே மீது புகார் கொடுத்து விட்டார் . போலிஸ்
என் .எஸ் . கே யை விலங்கிட்டு அவரை ஜகன்னாதய்யரிடம் அழைத்து வந்தார்களாம் . மீண்டும் கம்பெனியில் சேர்ந்தார் என் .எஸ் .கே .

எம் . ஆர் .ராதாவின் நடிப்பு வாழ்க்கைக்கு அஸ்திவாரம் பலமாகப் போட்டவர் ஜகன்னாத அய்யர் தான் . இவர் மீது ராதாவுக்கு மிகுந்த மரியாதை.

ராதா தன் வாழ்க்கையில் ரொம்ப உயர்ந்த இடத்தில் வைத்து தொழுகையே நடத்திய உத்தமர் ஒருவர் உண்டு . அவர் ஜட்ஜ் கணேசய்யர் ."கண் கண்ட தெய்வம் கணேசய்யர் " என்று நெகிழ்ந்து குறிப்பிடுகிறார்.
"விமலா அல்லது விதவையின் கண்ணீர் " என்ற நாடகத்திற்கு நாகையில் சனாதனிகள் தடை செய்யவேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போது அந்த நாடகத்தை ஜட்ஜ் கணேசய்யர் பார்த்து விட்டு ராதாவை வானளாவ புகழ்ந்து நாடகம் நடப்பதற்கு தடையேதும் இல்லை என தீர்ப்பு வழங்கினார் .தான் காதலித்த ஒரு பெண்ணை சக நடிகர் சைட் அடித்தார் என்பதற்காக ராதா கோபமாகி அந்த நடிகர் மீது திராவகத்தை ஊற்றிய போதும் கணேசய்யர் அந்த கேசில் இருந்து காப்பாற்றினார்.

இந்த திராவகம் வீசப்பட்ட நடிகர் பின்னாளில் ராதா எம்ஜியாரை சுட்ட கேசில் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டார் .ஆனால் அவர் ராதாவுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்துவிட்டார் . ஏனென்றால் அந்த நடிகர் அந்த நேரத்தில் ராதாவின் நண்பர் ஆகியிருந்தார் . நண்பரானது எப்படி என்பது புரியாத புதிர் என்கிறார் ராதா .

திராவிட கழக மாநாடு ஒன்றில் கொடி பிடித்து குதிரையில் ராதா வந்த போது அந்த குதிரையை ஒரு காங்கிரஸ் காரர் சீண்டி அதன் பின்னங்கால்களால் உதை வாங்கி இறந்து போனார் . அவரை எச்சரித்தும் அந்த ஆள் மீண்டும் குதிரையை சீண்டியதை தொடர்ந்ததால், ராதா தான் டெக்னிக் ஆக குதிரை கடிவாளத்தை பிடித்து உதைக்கும்படி செய்திருக்கிறார் . அந்த கேசில் இவருக்கு தூக்கு கூட கிடைத்திருக்க வேண்டியது. அப்போதும் ராதாவுக்கு ஆபத் பாந்தவராக கணேசய்யர் தான் காப்பாற்றியிருக்கிறார் .

இந்த தன் குற்றங்களை சொல்லும்போது ராதா இந்த விஷயங்கள் பத்திரிகையில் வெளிவரும்போது ஜட்ஜ் கணேசய்யர் கெளரவம் பாதிக்கப்படக்கூடாதே என்ற பதற்றத்தையும் வெளிப்படுத்துகிறார் .

இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரிட்டீசாருக்காக யுத்த எதிர்ப்பு நாடகங்கள் நடத்துவதற்கு ராதாவுக்கு மிகப்பெரிய தொகையை ஏற்பாடு செய்து கணேசய்யர் உதவி செய்தார். அவர் வாழ்வில் மகத்தான திருப்பம் இந்த உதவி . அப்போது
எம்.ஆர்.ராதா தளுதளுத்து கண்ணில் நீர் பொங்க கணேசய்யரை கையெடுத்து கும்பிட்டு சொன்னார் " தெய்வம் வெளியே இல்லே. நமக்குள்ளே தான் இருக்குன்னு பெரியவங்க சொல்லக் கேட்டிருக்கிறேன் . இன்னிக்குத் தான் அந்த தெய்வத்தை நேருக்கு நேராப் பார்க்கிறேன். "

ராதா வாழ்விலிருந்து முழுவதுமாக வறுமையை அகற்றியவர் ஜட்ஜ் கணேசய்யர் தான். புகழ், பணம், செல்வாக்கு எல்லாமே அப்புறம் ராதாவைத்தேடி ஓடி வந்து குவிந்தது .

ராதா மதித்த இன்னொரு பிராமணர் திருவாரூர் சர் ஆர் . எஸ் . சர்மா. அவரைப் பற்றி ராதா பூரிப்புடன் சொன்னது " அவர் ஆரியர்களுக்கு கொடுத்ததை விட திராவிடர்களுக்குக் கொடுத்தது தான் அதிகம்."

பரத நாட்டிய கலைக்கு பிராமணர்களால் தான் உன்னதப் பெருமை கிடைத்தது என ராதா அழுத்தமாக நம்பினார்." ஒரு காலத்தில் தாசிகளுக்கே உரிய கலையாயிருந்த பரதக்கலை பிராமணர்களால் புனிதமான கலையாயிடிச்சி. அந்தக் கலைக்காக பிராமணர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை அர்ப்பணம் செய்றாங்களே!" பரவசமாக சொல்கிறார் .

'சிறைச்சாலை சிந்தனைகள் ' என்ற நூல் ராதா அப்போது எம்ஜியார் கேசில் சிறையிலிருந்து வெளி வந்தவுடன் விந்தன் அவரை பேட்டியாக எடுத்தது.
ராதாவின் ஒவ்வொரு அமர்க்களமான,அடாவடியான கருத்துகளுக்கும்
( அவருடைய அபிப்பராயங்கள் பல பாமரத்தனமானவை ) விந்தன் comments தான் நூலில் ஒரு செயற்கையான குறை. ஏனென்றால் ப்ளாகில் வருகின்ற பல அபத்த பின்னூட்டங்கள் போலவே இருக்கின்றன விந்தன் தன் பேட்டியில் எம் ஆர் ராதாவின் பேச்சில் பிரமித்து ஏதேதோ சொல்வது .

கதிரில் வெளிவந்த தொடரை முழுவதும் பைண்ட் செய்து ஒரு நண்பர் வைத்திருந்ததை 25வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன் . ஆனால் இப்போது வெளி வந்துள்ள நூலில் பல விஷயங்கள் எடிட் செய்யப்பட்டுள்ளன என தெரிகிறது .

அவர் காலத்து மற்ற நடிகர்களைப் போலவே ராதா நிறைய..நிறைய்ய பலவீனங்கள் கொண்ட மனிதர். ஆனால் அவரிடம் ஏனைய நடிகர்களிடம் இருந்த hypocrisy கிடையாது என்பது தான் அவரின் குண விஷேசம். தான் செய்த மோசமான தவறுகளைக்களைக்கூட வெளிப்படையாக பேசிய ஒரே தமிழ் நடிகர் ராதா மட்டுமே.
ராதா அவருடைய அபூர்வமான தனித்துவமான நடிப்புக்காக மிகுந்த கவனத்துக்குரியவர்.

Nov 21, 2009

ரசிகர்கள்- தொண்டர்கள் பரவசம்

இப்போது Personality Cult பரவசம் என்பது சம்பந்தப்பட்ட பெருந்தலையை தாண்டி அந்த பெருந்தலையின் தாய்தந்தையர், சகோதரர், மன்றத்தலைவர்கள் ஆகியோருக்கும் தொண்டர்கள், ரசிகர்கள் தீவிர பரவச ராஜ மரியாதை காட்டத்துவங்கி விட்டார்கள் .

கொஞ்ச வருடங்களுக்கு முன் திருப்பூரில் ரஜினி ரசிகர்கள் அவர்களின் தலைமை ரசிகர் மன்ற தலைவர் சத்தியநாராயணா அவர்களுக்கு அவர் கலந்து கொள்ளும் திருமண வைபவங்களில் எல்லாம் ரஜினிக்கு கட் அவுட், பேனர் வைக்கின்ற போதெல்லாம் தங்கள் இதய தெய்வம் ரஜினிக்கு வைப்பது போலவே சத்திய நாராயனாவுக்கும் கணக்கில்லாமல் வழி நெடுக பேனர்கள் கட் அவுட் வைக்கின்ற வழக்கம் மேற்கொண்டார்கள் . ஒரு ரஜினி ரசிகரிடம் இது பற்றி அப்போது கேட்ட போது ,எந்த ஊருக்கு சத்திய நாராயணா போனாலும் இப்படித்தான் அவருக்கு மரியாதை செய்யப்படுகிறது என புல்லரித்து ,செடியரித்து , மரமரித்து பயபக்தியோடு சொன்னார் . பல ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தங்கள் விசிட்டிங் கார்டில் ரஜினி படத்தோடு சத்தியநாராயணா படத்தையும் சேர்த்து அச்சிட்டிருக்கிறார்கள்.


அந்த காலத்தில் அகில உலக எம்.ஜி .ஆர் . ரசிகமன்ற தலைவராயிருந்த திருச்சி சௌந்தர் ராஜன், முசிறிப் புத்தன் இந்த மாதிரி ராஜ மரியாதை , கட் அவுட் , பேனர்கள் எல்லாம் பார்த்ததே இல்லை.அகில உலக சிவாஜி ரசிகர் மன்றங்களின் தலைவராயிருந்த சின்ன அண்ணாமலை,தளபதி சண்முகம்,ராஜசேகரன் போன்றவர்கள் கூட இந்த கட் அவுட், பேனர் மரியாதையெல்லாம் அனுபவித்ததேயில்லை.

நேற்று இங்கே ரஜினியின் சொந்த சகோதரர் சத்தியநாராயண ராவ் ஒரு திருமண வைபவத்திற்கு வந்த போது திருப்பூர் நகரம் தாராபுரம் ரோடு , காங்கேயம் ரோடுமுழுக்க பேனர்கள் . அவினாசி ரோடு , பெருமாநல்லூர் ரோடு , முனிசிபாலிடி ரோடு கூட இப்படித்தான் இருந்திருக்கும் . நான் அந்தப் பக்கம் என் ஸ்கூட்டரில் நேற்று போகவில்லை. எனவே இங்கே அந்த ரோடுகளை சேர்க்கவில்லை.

" மன்னனின் அண்ணனே "

"எங்கள் தெய்வத்தின் தொப்புள்கொடி உறவே "

" எங்கள் தலைவனின் ரத்தத்தின் ரத்தமே ''

' ' அவதாரத்துடன் பிறந்த பலராமனே " ( இது என் சரக்கு. ரஜினி ரசிகர் யாருக்காவது இதை தெரியப்படுத்தினால் அடுத்து எந்த ஊரிலாவது சத்திய நாராயண ராவ் அவர்களுக்கு இந்த ' அவதாரத்துடன் பிறந்த பலராமனே ' வாழ்த்துடன் கட் அவுட் இடம் பெறப் போவது சர்வ நிச்சயம்! )

இங்கே இன்னொரு கல்யாண மண்டபத்திற்கு இளைய தளபதி விஜய் யின் தகப்பனார் எஸ் .ஏ . சந்திரசேகர் வந்திருந்தாராம் . அவருக்கு விஜய் ரசிகர்கள் பரவச பேனர் வாழ்த்து '' எங்கள் தந்தையே !" இரண்டு கைகளாலும் தலையில் அடித்துக்கொள்ளலாம்.

காந்தியாரின் பெற்றோருக்கு , குஜராத்திலோ , பிற இந்திய மாநிலங்களிலோ சிலைகள் நிறுவி மகிழ்ந்திருக்கிறார்களா? ஒரு தகவலுக்காக கேட்டேன் . ஏனென்றால் தமிழகத்தில் திருநெல்வேலி ராதாபுரத்தில் முத்து வேலர் - அஞ்சுகத்தம்மா இருவருக்கும் சிலைகள் திறக்கப்பட்டுள்ளன.

திமுக இரண்டாம் மட்ட, மூன்றாம் மட்டமான தலைவர்களிலிருந்து , அடி மட்ட தொண்டர்கள் வரை இனி திருநெல்வேலி போனால் ராதாபுரம் அவர்களுக்கு ஜெருசலேம் , மெக்கா மதினா தான். பழனி ,திருப்பதி , குருவாயூர் போல புண்ணிய தலம் ! அவனவன் சூடத்தை கொளுத்தி... தேங்காயை ஒடைச்சி, துண்டப் போட்டு தாண்டி .....

அண்ணா திமுக இரண்டாம் மட்ட, மூன்றாம் மட்டமான தலைவர்கள் ஆவேசத்தில் இருக்கிறார்களாம். அம்மா ஆட்சி மீண்டும் வரும்போது (அண்ணாத்துரை சிலை மாடலில்) ' ஆள் காட்டி விரல் மட்டும் காட்டி நிற்கும் சந்தியா ' சிலைகள் தமிழக முக்கிய நகரங்களில் நிறுவி பழிக்கு பழி வாங்க கறுவிக் கொண்டிருக்கிறார்கள் என கேள்வி!

Nov 20, 2009

பெண்ணியமும் குசும்பனும்

Carnal Thoughts -22 ல் வந்த குசும்பன் என்னைப் பார்க்க வந்தான். வரும்போதே " பெண்ணே உன் கதி இது தானா ? உன் பெண்மை ஆண்மைக்கு பலி தானா ?" என்று உருக்கமாக சிதம்பரம் ஜெயராமன் பாடலை பாடிக்கொண்டே வந்தான். " பெண்ணியவாதியாக மாற முடிவு செய்து விட்டேன். " என்றான் .
" நீ சும்பன் மனைவி ஒத்தப்பட்டி தமன்னா பற்றி ரொம்ப பேசியவனாச்சே.நிசும்பன் கூட என்னிடம் சொன்னானே " - நான்.
"இனி எதையுமே ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்கவே மாட்டேன்.
இப்போ ஒத்தப்பட்டி தமன்னா வாழ்க்கையை வேறு கண்ணோட்டத்தில், பல பரிமாணங்களில் அலசிப் பார்க்கிறேன். என் வாழ்வில், என் அறிவில், சிந்தனையில் ,பார்வையில், கண்ணோட்டத்தில் பெரிய transformation நடந்த விஷயம் உனக்கு தெரியாதா ? நிறைய படிக்கிறேன் .நான் பெண்ணியவாதிகளின் ஆதரவாளன் " முகம் சிவக்க சொன்னான் குசும்பன்.
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் பற்றி கடும் அதிருப்தியையும் வெளியிட்டான்.
பெண்ணியவாதிகளுக்கு எதிரான சுன்னியவாதிகளை ஒரு கை பார்க்க சபதம் ஏற்றிருப்பதாக குசும்பன் சொன்னான்.


'இன்று இலக்கியக் கூட்டம் ஒன்றில் பெண்ணியம் சார்பான கருத்துக்கள் பேசப் போகிறேன்.பெண்ணியம் பற்றி பேச சில க்ளூ கொடுக்கமுடியுமா?' என்றான்.
' பெண்ணியம் மீது உனக்கு ஆர்வம் எப்படி ஏற்பட்டது '
' பெண்ணியம் பேசினால் படிக்காத /படித்த பெண் படைப்பாளிகள் நட்பு கிடைக்குமாமே.என் நட்பு வட்டாரம் வண்ண மயமாகுமே! ' -குசும்பன்.

தொடர்ந்து சொன்னான். 'பெண்கள் எப்படியெல்லாம் நசுக்கப்பட்டார்கள். அடிமைகளாய் கொடுமைப் பட்டார்கள் என்பதற்கு சரித்திரத்தில் இருந்து சில விஷயம் நீ சொன்னால் நான் இன்று இலக்கியக் கூட்டத்தில் பிச்சி உதறி விடுவேன். ராஜாக்கள் அந்தகாலத்தில் எப்படி பெண்களை போகப் பொருள்களாக பயன்படுத்தினார்கள். ஒரு ரெண்டு சரித்திர ஆதாரம் சொல்லு .. சொல்லு .. சொல்லு.. '
நான் தொண்டையை செருமிக் கொண்டு யோசித்தேன் .
'எனக்கு வழி விட்டுப் பிசகி நிற்கிற பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆசையுண்டு' என்று சொல்லும் க.நா. சு. என் நினைவுக்கு வந்தார். என்ன அழகாக எழுத்தாளனின் urge பற்றி சொல்லிவிட்டார்! க நா சு ' வாழ்ந்தவர்கள் கெட்டால் ' நாவலில் சொல்கிற விஷயத்தை அவனுக்கு எடுத்துக் காட்டினேன்."தஞ்சாவூர் மன்னர்களில் கடைசியாக ஆண்டு பிரிட்டிஷார் கையில் நகரையும் ,ராஜ்ஜியத்தையும் ஒப்படைத்து விட்டுப்போன சிவாஜி ராஜாவுக்கு ' மனைவிகள் நூற்றி நாற்பத்தி எட்டுப் பேர்! ஆனால் ஒரு குழந்தையும் பிறக்கவில்லை ! ராஜகுடும்பத்துக்கு முற்றுப் புள்ளி வைத்த ஓர் உண்மை !''

குசும்பன் முகம் சிவந்து விட்டது . ' அயோக்கியன்! பெண்களை வாழ விடுங்கள்டா டே " ஆணினத்தையே மானசீகமாக கண் முன் நிறுத்தி உணர்ச்சி வசப்பட்டு கத்தினான். அடுத்த நிமிடமே அவன் முகம் பிரகாசமானது !" பிரமாதம்! இன்னொன்று சொல் போதும் "
இந்திரா பார்த்தசாரதி சொன்ன ஒரு விஷயத்தை அவனுக்கு கவனப் படுத்தினேன்.

"டைப்பீரியஸ் என்ற ரோம மன்னனுக்கு ஒரு விசித்திர ஆசை ஏற்பட்டது . இளஞ்சிறுமிகள் கழுத்து நெரிக்கப் பட்டுக் கொல்லப்படுவதை பார்க்கவேண்டும் என்று விருப்பம். ஆனால் அந்தோ! ரோமானிய மதச்சட்டம் கன்னிப்பெண்கள் கொலை செய்யப் படுவதற்கு தடை விதித்து இருந்தது . ரோம மன்னனோ ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட பரிசேயன். யோசித்து மன்னன் ஒரு தீர்வு கண்டான். ' இளஞ்சிறுமிகள் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப் படுவதற்கு முன்னாலே, கற்பழிக்கப் படவேண்டும் என்று கட்டளையிட்டானாம். "

குசும்பன் இன்றைக்கு பெண்ணியம் பேச இரண்டு விஷயம் கிடைத்து விட்டது என்ற குஷியில் ஜாலியாக குதித்து " பெண்ணே ! உன் கதி இது தானா! உன் பெண்மை ஆண்மைக்கு பலி தானா" என ரொம்ப உற்சாகமாக பாடிக்கொண்டே ஓடியே போய் விட்டான்!
எனக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை.


Nov 19, 2009

திருநாவுக்கரசர் ஞானோதயம்

உங்க ஊர் எதுங்க என்று சமீபத்தில் ஒருவரை கேட்க நேர்ந்தது . அவர் " 'பு 'நால ஆரம்பிச்சு 'டை ' யன்னாலே முடியுற ஊர் தான் என் ஊருங்க " என்றார் . "முதல் எழுத்து ' பு ' .கடைசி எழுத்து 'டை ' " என்று மீண்டும் சொன்னார் .
நான் அதீத ஆரோக்கிய பிரக்ஞை யுடன் இதை அலசி ஆராய்ந்து, இந்த மனிதர் தத்துவார்த்தமாக சித்தர் பாணியில் பேசுகிறார் போலும் என யோசித்தேன்.இவர் கொஞ்சம் வித்தியாசமான கணியன் பூங்குன்றனார்.எல்லோருக்கும் நேடிவ் ப்ளேஸ் பெண்ணின் பிறப்புறுப்பு தானே என பரந்த மனசோடு சொல்கிறாரோ என்னவோ! அவர்' யாதும் ஊரே'என்றார் . இவர்' எல்லோருக்குமே ஒரே.. ஒரே ஒரு ஊர் தான்' என இயம்புகிறாரோ?..

அவரே சஸ்பென்சை உடைத்து சொன்னார் ." புதுக்கோட்டை "
எல்லாரிடமும், எந்த ஊர் என்று யார் கேட்டாலும் எப்போதும் அப்படித்தான் சொல்வாராம்! வெடி சிரிப்பு சிரித்தார்.

புதுக்கோட்டை என்றதும் பக்கத்து ஊர் ஞாபகம் வருது . அறந்தாங்கி . அறந்தாங்கி என்றதும் அந்த ஊர்க்காரர் பால்குடி மறவா திருநாவுக்கரசர் யாருக்கும் நினைவில் வந்து விடுவார் . உண்மையில் நம் அரசியல் தலைவர்கள் எவ்வளவு அப்பாவிகள் !வெள்ளந்திகள் ! திருநாவுக்கரசர் பலவருடங்கள் பி ஜே பி யில் இருந்து பதவி சுகங்கள் அனுபவித்த பின் தான் அவருக்கு ஒரு பெரிய உண்மை தெரியவருகிறது . அய்யய்யோ .. பி.ஜே .பி. என்பது முஸ்லிம்களுக்கும் ,கிறிஸ்தவர்களுக்கும் எதிரான கட்சி! உடனே பதறிப் போய் உடனடியாக காங்கிரசில் சேர்ந்து விடுகிறார்!
விரல் சூப்பிக்கொண்டு ப.சிதம்பரத்திடம் " உங்கா ..உங்கா '' என்றாராம்.
உங்கா = தாய்ப் பால்

ஆமாங்க!

"பொய்யைத் தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்களுண்டு " - பாரதி
D.R.அசோக் ப்ளாகில்

http://ashokpakkangal.blogspot.com/2009/10/blog-post_25.html

நான் மிகவும் இரசித்து படிக்கும் தளங்களில் மிக முக்கியமானவர் R.P.ராஜாநாயகம். ரத்தினசுருக்கம் இவரது எழுத்து. வியக்கவைக்கும் நியாபக சக்தி. அதன் இரகசியம் அறிய ஆசை.
http://www.rprajanayahem.blogspot.com/

விஷய ஞானம் உள்ளவர். பார்த்து அனுகுங்கள். படித்து மகிழுங்கள்.

கிருஷ்ணமூர்த்தி ப்ளாகில்

http://consenttobenothing.blogspot.com/2009/11/blog-post_18.html

முதலாவதாக, நாலு வரியோ, நாற்பது வரியோ, சொல்ல வரும் விஷயத்தை நச்சென்று சொல்லக் கூடிய திறமை உள்ள ஒரே பதிவர் என்னைப்பொருத்த வரை தமிழில்

R P ராஜநாயகம் தான் ! பெயருக்குத் தகுந்தாற்போல, அவர் ராஜநாயகம் தான்!


சாம்பிளுக்கு இங்கே மற்றும் இங்கே!
பச்சையாக எழுதுகிறார் என்று சிலபேர் நினைக்கக் கூடும். வெண்டைக்காய் மாதிரி என்ன சொல்ல வருகிறோம் என்பதையே சொல்லாமல் வழவழவென்று எழுதிக் கொண்டிருப்பவர்களை விட, நேருக்கு நேரான வார்த்தைகளில் உயிரோட்டத்தைச் சொல்ல முடிந்த ஒரே எழுத்தாளர் ராஜநாயகம் மட்டும் தான் என்பது என்னுடையகருத்து.

ஜூன் முப்பதன்று வால்பையன் என்னிடம் சாட்டிங்கில் வருத்தப்பட்டுச் சொன்னது-"இன்றைக்குப் புதுமைப்பித்தனுடைய பிறந்தநாள்! அவரைப் பின் பற்றித்தான் எழுதவே வந்தோம் என்று சொல்லிக் கொள்கிற எவருக்கும் புதுமைப் பித்தனைப் பற்றி நினைக்கக் கூட நேரமில்லை!” - இப்போது எதற்காக இதைச் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா?

இன்றைக்கு தி. ஜானகி ராமனுடைய பிறந்த நாள்!

நினைவு வைத்துக் கொண்டு எழுதிய ஒரே பதிவர் ராஜநாயகம்! தான் வாசித்ததில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் லயித்துப் போய், அதில் இருந்து தெறிக்கும் சின்னச் சின்ன எண்ணச் சிதறல்களை அப்படியே பதிவுகளில் வார்க்கும் வித்தை தெரிந்த ஒரே வலைப்பதிவரும் ராஜநாயகம் தான்!

நிகழ்காலத்தில்... said...November 18, 2009 8:32 PM
ராஜநாயகம் அவர்களின் எழுத்தைப் படித்து பலமுறையும் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். என்னை மறந்து சிரித்து இருக்கிறேன்.சங்கீதம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாவிட்டாலும் அவர் குறிப்பிடுகிற நபர்கள், நுணுக்கங்கள் சபாஷ் போட வைக்கும்.அரசியல், திரைத்துறை என அவரின் வீச்சு பட்டிக்காட்டான மிட்டாய்கடையைப் பார்ப்பது போல் என்னைப் பார்க்க வைக்கும்

Nov 18, 2009

"என்னுள்ளே " ஷங்கி ப்ளாகில்

கலிபோர்னியாவிலிருந்து

"என்னுள்ளே " ஷங்கி ப்ளாகில்2009 ,ஜூலை 3 ம்தேதி

http://wimpystar.blogspot.com/2009/07/3.html

பச்சயாப் பேசுறதுன்னா உங்க அகராதியில என்ன அர்த்தம்? காமத்தத் தூண்டற மாதிரி ஆபாசமாப் பேசறதா? என்னப் பொறுத்த வரைக்கும் பச்சயாப் பேசறதுன்னா இயற்கையா,இயல்பாப் பேசறது. பச்சை, இயற்கையின் நிறம் இல்லையா?! இன்னும் விளக்கமாச் சொல்லணும்னா நாகரீகப் போர்வைக்குள்ள ஒளிஞ்சுக்காம மனசுல தோணுறத அப்படியே சொல்லுறது. ரொம்பக் கொஞ்சம் பேரு தான் இதைச் செய்வாங்க,ஏன்னா நிறையப் பேருக்கு இது பிடிக்காது. இல்லையா?! இந்த மாதிரிப் பேசறது பொளேர்னு பொடனில அறைஞ்ச மாதிரி இருக்கும்.கி.ரா. வோட கரிசக்காட்டுக் கதைகள் இந்த மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன். நம்ம பதிவுலகில திரு R.P. Rajanayahem, இப்படி எழுதுவாரு, படிச்சிருக்கீங்களா

முசிறியும் புதுமைப்பித்தனும்

புதுமைப் பித்தனின் நகைச்சுவை பற்றி பிரமிள் அது WITஅல்ல POWERஎன்பார்.
பொய்க்குதிரை என்ற சிறுகதையில் அந்த POWERபாருங்கள் .
நவராத்திரி கொலுவில் கிராம போன் சங்கீதம் ஒலித்துக்கொண்டிருக்கிறது .அந்த முசிறி சுப்பிரமணி அய்யர் பாட்டை கேட்காமல் லட்சுமியும் ,தோழிகளும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது பற்றி புதுமைப் பித்தன் SARCASTICஆக எழுதுகிறார் -
" கிராம போனில் , முசிறி இவர்களுடைய மனத்தை கவர முயற்சித்தும் முடியவில்லை . ஆனால் வெறுப்பு தோன்றாமல் பாட அவர் கிராமபோன் பிளேட்டாக மாறினால் தான் முடியும் . அது அங்கு நடந்து கொண்டிருக்கிறது."
முசிறி சுப்பிரமணி அய்யர் முகாரி பாடுவதில் விஷேச வல்லமை பெற்றவர் .
" என்றைக்கு சிவகிருபை வருமோ ?" முசிறி குரலில் மந்திரமாய் ஒலிக்கும் .உருக்கம் என்கிற பாவத்தை முசிறி அதி அற்புதமாய் குரலில் வெளிப்படுத்துவார் .

ஹிந்துஸ்தானி இசை பற்றி தி.ஜா


மராத்தி பாடகனின் ஹிந்துஸ்தானி இசை பற்றி தி.ஜானகிராமன் மோகமுள்ளில் :
"இது என்னடா சாரீரம் ! அதள பாதாளங்கள் எல்லாம் போறது! மேலே போனா சத்யலோகம் எல்லாம் போறது !

த்ரிவிக்ரமாவதாரத்திலே , பகவானோட தலை எங்கிருக்கின்னு தெரிஞ்சிக்க முடியலியாம் சிவப் பிரம்மாதிகளாலே.

இவன் போய்எட்டிப் பிடுவான் போலிருக்கே !

அமிர்தத்தாலே காது , உடம்பு , மனசு , ஆத்மா எல்லாத்தையும் நனைச்சுப் பிடறான்."
இன்று நவம்பர்18 ம்தேதி தி.ஜானகிராமன் நினைவு தினம். தி.ஜா இறந்து 27 வருடம் ஓடிவிட்டது.

..............................

Nov 17, 2009

மதுகோடா

இந்தியாவில் ஒன்பது பெரிய நகரங்களில் டெல்லியையும் ,மும்பை ,கொல்கொத்தா சேர்த்து,மொத்தம் எழுபது இடங்களில் இன்கம் டாக்ஸ் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது . இதற்கே அந்த மது கோடாவுக்குகின்னஸ் சாதனைப்புத்தகத்தில் இடம் இன்னொரு முறை தரவேண்டும் ! ஏனென்றால் அவர் ஏற்கனவே கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளராக இடம் பிடித்து விட்டவர் . சுயேச்சை எம் .எல் .ஏ ஆக இருந்து ஜார்கண்ட் முதல்வர் ஆனதற்காக கின்னசில் மது கோடா இடம் பெற்றவர் .இப்போது இரண்டாயிரம் கோடி ... இதை எழுத தயக்கமாய் இருக்கிறது .. இன்னும் ஆயிரம் கோடிங்க ... என நீங்க சொன்னா .. நான் நம்பத்தான் வேண்டும் .ஹவாலா மோசடி..!

மதுகோடா சூடத்தை கொளுத்தி சத்தியம் தான் செய்கிறார் ." நான் ரொம்ப நல்லவன் .. என் பேரை இவனுங்க சதி செய்து கெடுக்கரானுங்க.. என்னை கொல்ல திட்டம் போட்டுட்டானுங்க .."

அயோக்கியனுங்க ஏசு நாதரையே கொன்னவனுங்கய்யா .. காந்தியவே சுட்ட படுபாவிங்க ... மதுகோடா கதியை நினைச்சா நெஞ்சே பதறுதே! என்ன பாடு படுத்தப் போறானுங்களோ.. தெரியலேயே .. மதுகோடாவ சிலுவையிலே அறைஞ்சிடுவான்களோ .. இல்ல ..துப்பாக்கியால சுட்டுக்கொன்னு போடுவாங்களோ .. தெய்வமே ... இந்த அநியாயத்தை கேக்க ஆளே இல்லையா ..தெய்வமே ...தெய்வத்துக்குத் தான் கண்ணே இல்லையே..

Nov 16, 2009

சின்னப்பா பாகவதர் கச்சேரி

ஒரு முழுமையான கச்சேரி பார்த்த திருப்தி 'ஜகதலப் பிரதாபன்' படத்தில் பி.யு. சின்னப்பா மூலம் கிடைக்கும்.
" தாயைப் பணிவேன் அன்புடனே தாயை பணிவேன். ஒரு தாயை பணிவேன் "- கல்யாணி ராகம்.
 இந்த பாடலில் விஷேசம் என்னவென்றால் மொத்தம் ஐந்து சின்னப்பாக்கள் இந்த பாடலில் ! பாடகர் சின்னப்பா .வயலின் வாசிப்பவரும் சின்னப்பா தான். மிருதங்க வித்வானும் சின்னப்பா.இன்னொரு சின்னப்பா கஞ்சிரா வாசிப்பார். மற்றொரு சின்னப்பா கொன்னக்கோல் பாகவதர் !அமர்க்களம் தான். 65வருடங்களுக்கு முன் இப்படி புதுமை.
பின்னால் 'திருவிளையாடல் 'படத்தில் 'பாட்டும் நானே பாவமும் நானே' பாட்டு சிவாஜிக்கு இதே போல அமைத்தார்கள் .
1944 ல் வெளி வந்த படம் ஜகதலப் பிரதாபன். அப்போது சின்னப்பாவுக்கு இருபத்தெட்டு வயது தான்.35வயதில் சின்னப்பா மறைந்து விட்டார். எம்ஜியாரை விட ஒரு வயது தான் மூத்தவர் சின்னப்பா. எம்ஜியார் பிறந்த ஜாதகத்தை வித்வான் வே.லட்சுமணன் 1911ல் வைத்து கணித்து குறித்தார். ( ஏனென்றால் ஜாதகம் குறிக்க உண்மையான பிறந்த நேரம் ,தேதி ,வருடம் தேவையாயிற்றே !)அதன்படி பார்த்தால் எம்ஜியாரைவிட சின்னப்பா ஐந்து வயது இளையவர்.
ஆனால் காலம்
எம்.கே .டி - பி .யு .சின்னப்பா ,
எம்ஜியார் -சிவாஜி ,
கமல் -ரஜினி
என திரைப்பட சகாப்தங்களை பிரித்தது !
எம் கே டி படங்களில் அவர் உட்கார்ந்தால் பாட்டு .. எழுந்தால் பாட்டு ...நடக்கும்போது கூட ஒரு பாட்டு பாடுவார். ஆள் ரொம்ப அழகானவர். அவருடைய காலத்தில் பி யு சின்னப்பா அவருக்கு ஈடான நட்சத்திர நடிகர். குஸ்தி போடுவார்.சொந்தக்குரலில் தான் பாடுவார்.எம்.கே.டியை விட திறமையான நல்ல நடிகர்.
எம்.கே .டி பாடல்கள் ஜனரஞ்சகமானவை .ஆனால் பி .யு. சின்னப்பா பாடல்களை எல்லோரும் பாடிவிட முடியாது. சின்னப்பா தாளஞானம் மிகுந்தவர் என்பதால் அற்புதமாக ஸ்வரம் பாடுவார்.
சமீபத்தில் 'குமுதம்' வார இதழ் ஒன்றில் சின்னப்பாவின் மனைவி நடிகை கண்ணாம்பாஎன்று 'சுனிலிடம் கேளுங்கள் ' பகுதியில் தவறுதலாக ,அபத்தமாக குறிப்பிட்டிருந்தார்கள். கண்ணாம்பா 'கண்ணகி ' திரைப்படத்தில் சின்னப்பாவின் ஜோடியாக நடித்தவர் தான். ஆனால் அவருடைய கணவர் நாகபூசனம் என்பவர். இந்த நாகபூசனம் -கண்ணாம்பா தம்பதி பின்னால் எம்ஜியாரை வைத்து 'தாலி பாக்கியம் ' என்ற படம் தயாரித்து மிகுந்த அவஸ்தைக்கு உள்ளானார்கள். கண்ணாம்பா வின் கணீரென்ற 'மனோகரா ' வசனம் யாராலும் மறக்கமுடியாதது.

Nov 7, 2009

WriterCSK பட்டியல்

இரண்டு நாட்களுக்கு முன் தான் இந்த பட்டியல் என் கவனத்துக்கு வந்தது . சி.சரவண கார்த்திகேயனின் பட்டியல் .2009,ஆகஸ்ட் மாதம் 17 தேதியில் வெளியான பட்டியல்!
WriterCSK

சரவணகார்த்திகேயன் சி.BANGALORE, mailto:Ic.saravanakarthikeyan@gmail.com

தமிழ் : சிறந்த 10 வலைப்பதிவுகள்


R P ராஜநாயஹம் [http://rprajanayahem.blogspot.com/]
திணை இசை சமிக்ஞை [http://nagarjunan.blogspot.com/]
தீராத பக்கங்கள் [http://mathavaraj.blogspot.com/]
பிச்சைப்பாத்திரம் [http://pitchaipathiram.blogspot.com/]
அர்த்தமண்டபம் [http://sudesamithiran.blogspot.com/]
மொழி விளையாட்டு [http://jyovramsundar.blogspot.com/]
மொழியும் நிலமும் [http://jamalantamil.blogspot.com/]
வீணாப்போனவன் [http://veenaapponavan.blogspot.com/]
சிதைவுகள் [http://naayakan.blogspot.com/]
ராஜா சந்திரசேகர் கவிதைகள் [http://raajaachandrasekar.blogspot.com/]

Nov 6, 2009

விளாத்திகுளம் சுவாமிகள்

விளாத்திகுளம் சுவாமிகள் என்றதும் ஒரு காவி கட்டிய உருவம் என நினைத்துவிடாதீர்கள் . விளாத்திகுளம் சுவாமிகள் காவி உடுத்தியது கிடையாது.இவர் காடல்குடி ஜமின்தார். மேலும் இவருக்கு மூன்று மனைவிகள். கம்பள நாயக்கர் இனம். கர்நாடக சங்கீதத்தில் மிகப்பெரும் ஞானி. நல்ல பாடகர் . ஆனால் கச்சேரி செய்பவர் கிடையாது . நல்ல சதஸில் இயல்பாக ஆலாபனை செய்ய ஆரம்பித்தால் ஒரு குறிப்பிட்ட ராகத்தில் பல நாட்கள் தொடர்ந்து பாடுவார் .கீர்த்தனையாக பாடுவது என்று கிடையாது . எந்த ராகம் என்றாலும் ஆலாபனையாக பல நாட்கள் பாடுவார் .தன் ரசிகர்களுக்காக பாடியவர் . ஒரு ரசிகர் இருக்கிறார் . அவருக்காக ஒரு கூட்டத்திற்கே பாடுவார் .குறிப்பிட்ட அந்த ரசிகர் காணாமல் போகிறார் என்றால் தாயைப் பிரிந்த குழந்தை போல தவித்து விடுவார் . தாள ஞானம் இவருக்கு கிடையாது . ஸ்வர ஞானம் உண்டு . ஆனால் ஸ்வரம் பாடத்தெரியாது .
கரிசல் இலக்கிய மன்னர் கி.ரா அவர்கள் விளாத்திகுளம் சுவாமிகள் பற்றி சொல்லக் கேட்பது சுகம் ! கு . அழகிரி சாமி இவரைப் பார்த்தவுடன் கி.ராவிடம் சொன்னாராம் " கம்பர் இப்படித்தான் இருந்திருப்பார் !" இதே போல கு . அழகிரி சாமி ரசிகமணி டி கே சி யைப் பார்த்தவுடன் சொன்னாராம் "அடையா நெடுங்கதவு வீடுகொண்ட சடையப்ப வள்ளல் இப்படித்தான் இருந்திருப்பார் !"
விளாத்திகுளம் சுவாமிகள் நல்ல கருப்பு நிறத்தில் ரொம்ப கம்பீர அழகு கொண்டவர் . பெரிய மீசை உண்டு . ஆனால் சுவாமிகளுக்கு தாடி கிடையாது .
இசை பயிலும் ஆர்வத்தில் கிராவும், அழகிரிசாமியும் அந்த காலத்தில் நாகஸ்வர மேதை காருக்குரிச்சியின் சகளைபாடியான பொன்னுசாமி அவர்களை ஒரு வீடு அமர்த்தி அவரிடம் கர்நாடக இசை பயின்றார்கள் . அப்போது அங்கு விளாத்திகுளம் சுவாமிகள் வருகை தரும்போது பொன்னுசாமி ஆர்மோனியம் வாசிக்க ஆரம்பிக்கும் போது, மெதுவாக ஆலாபனையை ஆரம்பிப்பார் .
விளாத்திகுளம் சுவாமிகள் பாட ஆரம்பிப்பது பற்றி கி ரா சுவாரசியாமாக சொல்வார் : சாமியாடுறவனுக்கு மேளம் அடிச்சவுடன் சாமி வருவது போல காருக்குரிச்சியின் ஷட்டகர் பொன்னுசாமி ஆர்மோனியம் வாசிக்க வாசிக்க விளாத்திகுளம் சுவாமிகள் பாடத்தொடங்குவார் . நினைத்துப் பார்க்கவே சந்தோசமாயிருக்கிறது . ஒரே ராகம் - ஆலாபனை - பல நாட்களுக்கு தொடர்ந்து !
சங்கீத கலாசாலை ஒன்று துவங்கும் முயற்சியின் போது ஹரிஜன் களையும் சேர்க்க வேண்டும் என கிராவும் கு அழகிரிசாமியும் வற்புறுத்தியபோது அதனை விளாத்திகுளம் சுவாமிகள் விரும்பவில்லை . சுவாமிகளின் இன்னொரு முகத்தைப் பார்த்த கிராவும் , கு அழகிரிசாமியும் அதனால் சங்கீத கலாசாலை பற்றிய அவரது முயற்சியிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள் .


கர்நாடக சங்கீதம் இப்போது ( இப்போது என்றால் கடந்த எண்பது வருடங்களாக) 'அரியக்குடி பார்முலா' மேடைக் கச்சேரி என்ற சிறைக்குள் , ஆம் சிறை என்று தான் சொல்லவேண்டும். ஒரு இருபத்தைந்து கீர்த்தனைகளை கற்றுக்கொண்டு வர்ணத்தில் ஆரம்பித்து தில்லானாவுக்குப் பின் மங்களம் என திரும்ப திரும்ப அதனையே பாடிக்கொண்டு வெளிநாட்டில் எட்டு மாதம் ,டிசெம்பர் சீசனை ஒட்டி ஒரு மூணு நாலு மாதம் உள்நாட்டில் வித்வான்கள் வியாபாரம் செய்வது என்று மாறிவிட்டது. இது குறித்த அதிருப்தியை திஜா மோகமுள்ளில் சொல்லியிருக்கிறார் .
ராகங்களை தரிசனம் செய்வது இனி சாத்தியமில்லை . அதாவது தியாகய்யர் தேவகாந்தாரியை ஏழு நாள் பாடியது , தோடி சீத்தாராமய்யர் தோடி ராகத்தை எட்டு நாட்கள் பாடியது போல , பட்ணம் சுப்ரமணிய அய்யர் பேகடா மூன்று நாட்கள் பாடியது போல இனி நடக்குமா ? நடத்திக்காட்ட முயற்சிகள் , இதற்கெனவே பிரத்யேகமான இசை விழாக்கள் நடத்தப்படவேண்டும் . கிராவும் இப்படி ஏங்கிசொல்வார் .
சங்கீதகலாசாரம் மாறுவது மிகவும் அவசியம் .ஒரு ராகம் பல நாட்கள் பாடப்படும்போது எப்படியெல்லாம் விஷ்வரூபம் எடுக்கும் !

'மிருதங்கம் ஒரு ஊமை வாத்யம் . கற்றுக்கொள்வதற்கு ஒரு கர்ப்ப வாசகாலம்
( அதாவது பத்து மாதம் ) போதும் தான் . ஆனால் என்ன வாசிக்கக் கூடாது என்பதை தெரிந்துகொள்வதற்குள் ஆயுசு தீர்ந்து விடும் . ' என்று பாலக்காடு மணி அய்யர் சொல்வார் .
ஒரு ஊமை வாத்தியத்தின் உன்னதத்தன்மையே இத்தகையது என்றால் கந்தர்வ வேதம் எனப்படும் சாஸ்த்திரீய சங்கீதத்தை எப்படி பேணப் போகிறோம் ?

Nov 2, 2009

Poramboke

Catamaran மாதிரி Poramboke என்கிற வார்த்தையும் ஆங்கில அகராதியில் இடம்பெற நேரலாம். கட்டுமரம் - Catamaran. புறம்போக்கு - Poramboke .
நம் தனித்தமிழ் coffeeயை கொட்டை வடிநீர் என்றே பிடிவாதமாய் சொல்லியும் தனித்தமிழ் புலவரே 'காப்பி' என்று தான் சொல்லும்படியாகி விட்டது!
'ஹிந்து 'பத்திரிகையில் புறம்போக்கு நிலம் பற்றி Poramboke என்றே தான் குறிப்பிடுகிறார்கள்.

இந்த உயர்ந்த நீதிபதி பி டி தினகரன் கதை ஈரோடு அடாவடிமுன்னாள் தமிழக அமைச்சர் ராஜாவை மிஞ்சும்படியாயிருக்கிறது . இந்த
land grabbing (197acres in Kaverirajapuram,Tiruvallur Dt.)கதையில் ,கலெக்டர் ,மேஜிஸ்ட்ரேட் துவங்கி வி.ஏ.ஒ வரை தினகரனின் அசகாயசூரத்தனம் பற்றி சொல்லி விட்டார்கள்.
காவேரிராஜபுரம் கிராமத்தார் பெரும்பான்மையோருக்கு அவர்கள் வீடு உள்ள இடத்திற்கே இன்னும் பட்டா கிடைக்கவில்லை!
இந்த பி.டி.தினகரனை நான் சிலவருடங்களுக்கு முன் பார்க்க வாய்ப்பு கிடைத்தது .
நான் பணி புரியும் நிறுவன முதலாளி மீது அபாண்டமான ஒரு கிரிமினல் கேஸ் போடப்பட்டது . அதை எதிர்த்து சேலத்தில் stay வாங்கியது துவங்கி உயர்நீதிமன்றத்தில் அந்த கேசை நடத்துவது வரை என் பொறுப்பில் இருந்தது . அப்போது மக்கள் தீர்ப்பாயம் (Lok Adalat) முன் உயர் நீதிமன்றத்தில்
08-07-2006
அன்று என் எம் .டி சார்பில் ஆஜர் ஆக நான் போயிருந்தேன் . அங்கே பாஷா, ரவி ராஜ் பாண்டியன் ஆகிய நீதிபதிகளோடு வழக்குகளை பைசல் செய்ய தினகரனும் இருந்தார். எங்கள் எம் டி மீது கேஸ் போட்டவர் பத்து லட்சத்திற்கு ஐந்து லட்சம் கொடுத்தாலே போதும் என்றும் நான்கு வருடங்களுக்கு வட்டியும் வேண்டாம் என்றும் சொன்னார் . கேஸ் அபாண்டமான பொய் கேஸ்! இதில் அந்த கேஸ் போட்ட சேட்டு தாராள மனசைக்காட்டினார் . தினகரன் என்னிடம் " இது லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்தமாதிரி உங்கள் அதிர்ஷ்டம் . பத்து லட்சத்திற்கு ஐந்து லட்சம் போதும் என்கிறார் . அதோடு நான்கு வருடத்திற்கு வட்டியும் வேண்டாம் என்கிறார் . ஒத்துக்கொள்ளுங்கள் " என்று கறாராக வற்புறுத்தினார் . அங்கு வந்திருந்த ஜுனியர் அட்வகேட்டும் என்னிடம் " பெரிய நீதிபதிகளை மறுக்க வேண்டாம் .'' என்று கேனத்தனமாக மிரண்டு போய் சொன்னார் . நான் பிறகு சீனியர் அட்வகேட் அவர்களையும் ,எங்கள் ஜி.எம் அவர்களையும் கன்சல்ட் செய்து விட்டு அவரிடம் அதற்கு மறுப்பு தெரிவித்து 'கோர்ட் பென்ச்சில் பார்த்துக்கொள்கிறோம் . தவறு செய்யாத போது ஏன் இதற்கு ஒத்துக்கொள்ளவேண்டும் ' என உறுதியாக சொல்லி விட்டேன் . மக்கள் தீர்ப்பாயம் என்றாலே கட்டப்பஞ்சாயத்து போலத்தான் என்று அன்று தெரிய வந்தது . வக்கீல் சம்பந்தப் படாமல் மூன்றுஉயர் நீதிமன்ற நீதிபதிகள் முன் நானே வாதாடியது எனக்கு ரொம்ப த்ரில்லான அனுபவம் .

அன்று இரவு சன் செய்திகள் வால்டாக்ஸ் ரோடு லாட்ஜில் நான் பார்த்தபோது தினகரன் தமிழக முதல்வர் அவர்களை சந்திப்பதை காட்டினார்கள் !
அடுத்த மாதமே (19.08.2006 ) அந்த கேசை இப்போது மறைந்த நீதிபதி எஸ் .அசோக் குமார் (கருணாநிதி நள்ளிரவு கைதில் போலீசை கிண்டியெடுத்த நீதிபதி தான் )அவர்கள் தள்ளுபடி செய்து தீர்ப்பு செய்தார்கள்.