0

Paradise will be a kind of library

 
1995 செப்டெம்பர் மாதம் கோணங்கியின் கல்குதிரை சிறப்பிதழ் ஒன்று வெளிவந்தது. கேபோவுக்குத் தான். லத்தீன் அமெரிக்க உலகம் அன்போடு கேபிரியல் கார்ஸியா மார்க்வஸ் என்பவரை ”கேபோ” என்று தான் குறிப்பிடும்.

மாஜிக்கல் ரியலிசம்...1982ல் வாங்கிய நோபல் பரிசு... பாப்லோ நெரூடாவின் நண்பர்.. ஃபிடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பர் ......

கல்குதிரைக்கு GABRIEL என்ற பெயரைக் குறிப்பிடுவதிலேயே ரொம்ப சிரமம் இருந்தது. அட்டையில் ’காப்ரியல்’.  முதல் பக்கத்தில் ’காப்ரியேல்’ என்று சந்தேகத்துடன் இரண்டு விதமாக அச்சேற்றியிருந்தார்கள். இத்தனைக்கும் கேபிரியல் என்ற கிறிஸ்தவப் பெயர் ஒன்றும் அன்னியமானது ஒன்றும் இல்லை.
பைபிளில் கன்னி மேரியிடம் காட்சி தரும் ஏஞ்சல் “ I am Gabriel! The angel of God!" என்று தன்னை சுய அறிமுகம் செய்து கொள்கிற காட்சி உண்டு.
அதோடு அதற்கு பல வருடங்களுக்கு முன்னாலே GABRIEL Shock absorbers விளம்பரம் மிகவும் பிரபலம்.
 நவீன தமிழ் இலக்கிய கர்த்தாக்களுக்கு இவ்வளவு குழப்பம் கேபிரியல் என்ற பெயரில் இருந்த போது கல்குதிரை அவர் படைப்புகளை ஆங்கில வழியாக தமிழில் மொழி பெயர்ப்பதில் எத்தகைய துயர அனுபவமாய் இருந்திருக்கும் என்பதை சொல்லவேண்டியதே இல்லை.


 அப்போதெல்லாம் கல்குதிரை ஒவ்வொரு இதழுக்கும் கணிசமான தொகை நான் நன்கொடையாக கொடுப்பது வழக்கம். முதல் இதழை கோணங்கி என்னிடம் கொடுத்த போது, நான் ஒரு நன்கொடை கொடுத்தேன்.அவன் சொன்னான்.- “ வண்ணதாசன் கூட இவ்வளவு பெரிய தொகை தரவில்லை.”

கேபிரியல் கார்ஸியா மார்க்வஸ் சிறப்பிதழ் கல்குதிரையின் 12 வது இதழ்.


GABRIEL என்ற பெயரை கேப்ரியல் என்று எழுதுவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ”ப்” என்பது ”B” உச்சரிப்பாக இல்லாமல்  ”P” உச்சரிப்பாக அதாவது GAPRIEL என்று மாற வாய்ப்பு அதிகம் என்பதால் ’கேப்ரியல்’ என்று எழுதாமல் ’கேபிரியல்’ என்றே எழுத வேண்டியுள்ளது.
கிறிஸ்தவர்களிலும் ப்ராட்டஸ்டண்ட் இனத்தவர்கள் சரியாக ’கேபிரியல்’ என்று சரியாக உச்சரிக்கிறார்கள். ஆனால் ரோமன் கத்தோலிக்க பிரிவினர் GABRIEL என்பதை தமிழ்ப் படுத்தி ”கபிரியேல்” என்று பாடாய் படுத்துகிறார்கள்.

இப்போது காலச்சுவடு க்ளாசிக் வரிசையில் வரிசை வெளியீடு “தனிமையின் நூறாண்டுகள்” நூலில் “ காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு : சுகுமாரன்.  
ஆல்பர் காம்யூ பெயரை ஒவ்வொருவரும் ஒவ்வோர் விதமாக உச்சரிப்பதைப் பற்றி சுந்தர ராமசாமி ’ஜேஜே சில குறிப்புகள்’நாவலில் குறிப்பிட்டு விட்டு தன் அத்தை மகள் பெயர் காமு என்பதால் ’ நான் வசதிக்காக  காமு என்று சொல்ல ஆரம்பித்தேன்’ என்பார்.


லத்தீன் அமெரிக்கப் படைப்புகளை ஆங்கில மொழிபெயர்ப்பாகப் படிப்பது தான் ஓரளவு நல்லது.  தமிழ் மொழிபெயர்ப்புகளில் படிப்பது தலைவிதி தான். ஆங்கிலம் தெரியாத வாசகர்களும், எழுத்தாளர்களும் தமிழ் இலக்கிய உலகில் மிக, மிக அதிகம். மொழி பெயர்ப்பே மூல ஆசிரியரை சிதைக்கிற விஷயம் என்கிறபோது ஆங்கிலமொழிபெயர்ப்பின் வழியாக தமிழில் மொழிபெயர்த்து, அதை படிப்பதென்பது ஒருவகை ’ஊனம்’.


  

ஆல்பர் காம்யூ வின் ’அந்நியன்’ பிரஞ்சு மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டதால் விசேஷமானதாய் இருந்தது.

நாகார்ஜுனன் பிரஞ்சு மொழியிலிருந்து ரைம்போ, பாதலேர் கவிதைகளை ஆங்கில வழியாக அல்லாது தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

சாதாரணமாக ஒரு முதியவர் இறப்பென்பது அனுபவச்செறிவு காரணமாக துயரமானது. ஒரு நூலகம் மறைந்து போவதைப் போன்றது.
  I have always imagined that Paradise will be a kind of library.

போர்ஹே சொல்வார்: சொர்க்கம் என்பது எப்படி இருக்கும்? எனக்கென்னவோ சொர்க்கம் என்பது ஒரு வகையான லைப்ரரி தான் என்பார்.

87 வயதில் கேபிரியல் கார்ஸியா மார்க்வெஸ் இறந்திருக்கிறார்.

ஒரு முதிய எழுத்தாளரின் மறைவு நிஜமாகவே மிக மகத்தான இழப்பு தான். ஒரு பிரமாதமான, பிரமிப்புக்குரிய அற்புத நூலகம் திடீரென்று காணாமல் போய் விடுகிறது என்றால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வேதனையின் பரிமாணம் கூடிப்போய் விடுகிறது.

Followers