Share

Jun 4, 2016

கமலின் நகைச்சுவைத்திறன்


என்னுடைய மாப்பிள்ளை ஒருவர் ரஜினியின் தீவிர ரசிகர். கல்வியறிவில்லாதவர்.
அவரிடம் கிண்டல் செய்ய வசதியாக நான் கமலின் தீவிர ரசிகர் என்கிற மாதிரி ஒரு முரட்டு முகமூடியை அணிந்து கொண்டு தான் சற்று மிகையான பாவனைகளுடன் பேசுவது வழக்கம்.
’மைக்கல் மதன காமராஜன்’ படம் வெளியாகியிருந்தது.
கடை வீதியில் பஸ் ஸ்டாண்ட் ஒட்டி இருந்த அவருடைய கடையில் அவரை சந்தித்த போது “ அத்தான், வாங்க, உள்ள வாங்க!”
“ மாப்பிள்ள! எங்காளு ( கமல்) படம் ரிசல்ட் பத்தி ஏதாவது கேள்விப்பட்டீங்களா? யாராவது படம் பாத்திருப்பாங்களே!” பரிட்சை  ரிசல்ட் கேட்க தவிக்கும் மாணவ சிறுவன் போல நான் கேட்டேன்.
உடனே அவர் முகம் சற்று சோகமாக மாறியது. நான் எதிர் பார்க்கிற நல்ல ரிசல்ட் கிடையாது என்று அர்த்தம்.
ஒரு பெரு மூச்சு விட்டு “ உள்ள வாங்களேன். சொல்றேன்”
நான் சற்று அவசரமாக பதற்றத்துடன் “ என்ன மாப்பிள்ள?” என்றேன்.
”சிவகாசி,ராஜபாளையம் இரண்டு ஊர்களிலும் போய் படம் பார்த்துட்டு வந்துட்டாங்கே…. உங்க ஆளு ஒர்த்தன் (ஒரு கமல் ரசிகன் என்று அர்த்தம்) இப்பத்தான் வந்து அழுதுட்டு போறான்.” சற்று நிறுத்தி விட்டு கடைக்கு வந்திருந்த கஸ்டமர்களை கவனிக்க ஆரம்பித்து விட்டு காசு வாங்கிப்போட ஆரம்பித்து விட்டார்.
என்னை அவர் இடையிடையே பார்க்கும்போதெல்லாம் நான் முகத்தில் -----சீக்கிரம் சொல்லுங்க மாப்பிள்ள ------- பாவனையில் தவிக்க ஆரம்பித்தேன்.
கஸ்டமர்களை அனுப்பி விட்டு திரும்பி “ எத்தான்! நீங்களே சொல்லுங்க… ஒர்த்தன் பேரு மைக்கலாம். இன்னொருத்தன் பேரு மதனாம்.. இன்னொருத்தன் காமன்.. நாலாவது ஆளு ராஜனாம்… இதெல்லாம் என்ன நல்லாவா இருக்கு? சொல்லுங்க நீங்களே சொல்லுங்க?”
பதில் இப்படி வரவேண்டும் என்பது இந்தக்கேள்வியில் உள்ள கொக்கி - “ ஆமா நல்லாவே இல்லையே ”
நான் பதிலே சொல்லாமல் நகத்தை கடித்தேன்.
அவர் எனக்கு ஆறுதல் சொல்லும் பாவனையில் பெருந்தன்மையுடன் “ எத்தான்! ராமராஜன் படம், விஜயகாந்து படம் எல்லாம் ஓடும்போது உங்காளு படம் ஓடுனா எங்களுக்கு ( ரஜினி ரசிகர்களுக்கு) என்ன வேண்டாம்னா இருக்கு!”
என் கவலையான முகத்தை அவரும் வரவழைத்துக்கொண்ட இறுக்கமான முகத்துடன் பார்த்து சொன்னார் “ உங்காளு சரியில்லை அத்தான்! நான் நடு நிலையா சொல்றேன் பாத்துக்கங்க!”
அவர் எதிர் பார்த்த படி நான் முகத்தை ரொம்பத்தொங்க போட்டுக்கொண்டு “ எனக்கு என்னன்னோ வருது மாப்பிள்ள “
ரஜினி ரசிகரான மாப்பிள்ள “ நீங்க ரஜினி ரசிகரா மாறுங்க அத்தான். என் ஃப்ரெண்ட்ஸ் எத்தன கமல் ரசிகங்க நான் சொல்லி ரஜினி ரசிகரா மாறிட்டாங்கெ தெரியுமா!”
“ மாப்பிள்ள! நான் அனுமார் மாதிரி மாப்பிள்ள! மறந்தும் புறம் தொழ மாட்டேன். மாட்டவே மாட்டேன்.”
”புரியலத்தான்…”
”நான் எப்பவும் கமல் ரசிகன் தான்! மாறவே மாட்டேன்.”
“ ச்சே! உங்களயெல்லாம் திருத்தவே முடியாதுத்தான்..”
ரஜினி ரசிகர் என்ற முகமூடியை வாங்கி நான் அணிந்து கொண்டால் அவருடனான உரையாடலில் சுவாரசியம் சுத்தமாக காணாமல் போய் விடுமே!
..................கமல் ஹாசன் நகைச்சுவை நடிப்பில் மிக நேர்த்தியான பரிமாணங்களை காட்டியவர்.
அவள் ஒரு தொடர்கதையிலேயே அவர் விகடகவி. பாலசந்தர் சில வருடங்களுக்கு முன்னால் அந்த படத்தை எடுக்க நேரிட்டிருந்தால் கமல் செய்த பாத்திரத்தை நாகேஷ் தான் செய்திருப்பார்.
அதாவது நாகேஷ் பாணி ரோலை கமல் பிரமாதமாக செய்து விட்டார்.
பிறகு மன்மதலீலையில் கமல் செய்த அமர்க்களம் வார்த்தையில் விவரிக்க முடியாதது.
அதன் பின் நகைச்சுவை என்பது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல.
எந்த நகைச்சுவை நடிகரும் தொட்டிராத உச்சத்தை கமல் ஹாசன் தன் நகைச்சுவை நடிப்பில் தொட்டிருக்கிறார். அதே போல எந்த கதா நாயக நடிகரும் நகைச்சுவையில் எட்ட முடியாத தூரத்தை அனாயசமாக சாதித்தவர் கமல் ஹாசன்.
இங்கே அந்த படங்களின் பட்டியல் தேவையேயில்லை.
கமல் நகைச்சுவை, ஜோக் எல்லாமே ரொம்ப பாலீஷ்ட் வகையை சேர்ந்தவை என்பதால் நுட்பம் அதிகம். சாதாரணமான சராசரி மனிதர்களுக்கு புரிதல் என்பது ரொம்ப சிரமமாயிருக்கும்.
குறிப்பாக ரஜினி காமெடியெல்லாம் அவருடைய ரசிகர்களின் அதீத ஆராதனை காரணமாக பிரபலமானவை. ஒரு தேர்ந்த புத்திசாலிக்கு அதில் ரசித்து சிரிக்க எதுவுமேயில்லை. ரொம்ப ஜனரஞ்சகமான மேலோட்டமான நகைச்சுவை காட்சிகள் அவர் சூப்பர் ஸ்டார் என்பதால் மட்டும் வெற்றி பெற்றவை.
இதை விளக்குவது என்றால் ஒரு கட்சி எம்.எல்.ஏ கொஞ்சம் கடி ஜோக் டைப்பில் ஏதாவது சொன்னால் அவரை சுற்றியுள்ள தொண்டர்கள் ரொம்ப அலட்டி சிரிப்பார்களே, அந்த ரகம்.
கட்சித்தலைவர் ஒரு சின்ன பொறியாக வாய் பேசும்போது சுற்றி நிற்கிற மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களெல்லாம் ரசித்து சிரிப்பார்களே அது போன்றது! அவர் பஞ்ச் டயலாக் எப்படி ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் உவப்பான விஷயமோ அப்படியே தான் ரஜினி ஜோக்கெல்லாம் பரவலாக எதிர்கொள்ளப்பட்டு ஹாஹாஹா என சிரிக்க காரணமாகிறது.
கமலின் நகைச்சுவை பட்டுப்புடவை நெய்யும் நேர்த்தியுடன், நிறைய கவனத்துடன் பின்னப்படுபவை.
அவரை ஆள்வார் பேட்டை ஆண்டவர் என்று கொண்டாடுபவர்களுக்கானது அல்ல. அதையும் தாண்டி, விரிந்து ‘Your delight and happiness is my sole concern’ என சென்று சேரக்கூடிய தகுதி அந்த நகைச்சுவை நடிப்பிற்கு உண்டு.
1960களில் அபரிமிதமான சாதனை செய்த நாகேஷ் நீர்த்துப்போன பின் கமலின் பிற்கால படங்கள் அனைத்திலும் மிக நன்றாக வெளிப்பட்டதில் ஹாசனின் பங்கு தான் முழுமையானது. ஏனென்றால் கமல் ஹாசனிடன் ஒரு inbuilt humor உண்டு. அது அணையாத நெருப்பின் உக்கிரம் கொண்டது.
கொஞ்சம் சீரியஸாக கமல் காமெடி பற்றி எல்லோரும் திரும்பிப்பார்த்து ஒத்துக்கொள்ள வேண்டும்.
……………………………………………………………………
4 comments:

  1. ம்மக வில் வரும் வசனம், 6, 25 ஆகும், 25 எப்படியா 6 ஆகும், எனக்கு சுஜாதாவை ஞாபகபடுத்தியது

    ReplyDelete
  2. சூப்பர் , கிரேசி மோகன் கூட்டணி யில் கமல் காமெடி இன்னும் ப்ளஸ்

    ReplyDelete