Share

Jun 29, 2016

தேரோட்டம்


ந.முத்துசாமியின் ”வண்டிச் சோடை”

வண்டி சென்ற பாதை தான் வண்டிச் சோடை.
இந்த நாடகத்தில் தேரோட்டம்
”தேர் இழுத்த பரம்பரை நாங்க……… மண்ணில் மறையும் வடம் சக்தியாய்ச் சுடரும் தேர் இழுக்கும் பேர்வழி நாங்க… இம் இழு..இழுத்து இழுத்து முறைத்த பார்வையில் முகத்தசை நார்கள் ஒரே விதமாய் விறைத்து ஒரு மூஞ்சியைப் பலர் அணிந்து கொண்டோம். முகமூடிகள் என்று முகத்தைப் பிய்த்துக் கொள்ளாமல் தப்பித்தோம். இழு.”
கோவிந்தா…ஏலி…கந்தையா…ஏலி…ராமையா…ஏலி..
”தேர் நிலை சேர நாளானால் அத்தனை நாளும் திருவிழா நாட்கள்!”
”நமக்குச் சலுகையில்லே. இழு..”
இம்..இழு..கோவிந்தா…ஏலி…கந்தையா..ஏலி..ராமையா..ஏலி…
(சக்கரம் நகரவில்லை)
”ஆள் சக்தி பத்தாது – நெம்புகோல் வேணும்.”
”ஏய் கட்டை கடப்பாறை கொண்டாங்க டோய்…”
“மல்லாரியில் நகராத தேருக்கு பறை கொட்டும் வேணும்”
”பறை கொட்டும் பத்தாது. சாட்டை சொடுக்க வேணும்.”
“ பாட்டன்மார் புண்ணியம் உன் வியர்வையில் வடிய இழு..”
”நம் செய்கையில் பல சக்கரங்கள் உருளும் இழு..”
”நம் செய்கை இருளில் சுடர் விடும் இழு..”
“ நம் செய்கையில் சக்தியிருக்குது இழு…”
” நம் செய்கையில் கவனக்குறைவானவனைத் தாக்கும் சாரம் இருக்குது. இழு…”
“ நம் செய்கையில் அறியாமல் நேரும் விபத்துகளும் உண்டு. இழு…”
கோவிந்தா..ஏலி.. நாராயணா..ஏலி…கந்தையா..ஏலி.. கிட்ணய்யா..ஏலி..
(சக்கரம் உருளத்தொடங்குகிறது)


…………………………………………..
மாயவரம் பள்ளியில் ந.முத்துசாமியுடன் படித்தவர்
கவிஞர் ஞானக்கூத்தன். 

அவர் எழுதியுள்ள கவிதை கீழே.
தேரோட்டம்
காடெ கோழி வெச்சுக்
கணக்காக் கள்ளும் வெச்சு
சூடம் கொளுத்தி வெச்சு
சூரன் சாமி கிட்ட
வரங்கேட்டு வாரீங்களா
ஆரோ வடம் புடிச்சி
அய்யன் தேரு நின்னுடுச்சி
கற்கண்டு வாழெ வெச்சு
விருட்சீப் பூவ வெச்சுப்
பொங்கல் மணக்க வெச்சு
வடக்கன் சாமி கிட்ட
வரங்கேட்டு வாரீங்களா
ஆரோ வடம் புடிச்சி
அய்யன் தேரு நின்னுடுச்சி
இளநீ சீவி வெச்சு
இரும்பாக் கரும்ப வெச்சுக்
குளிராப் பால வெச்சுக்
குமரன் சாமி கிட்ட
வரங்கேட்டு வாரீங்களா
தெரு ஓடும் தூரமின்னும்
வடமோடிப் போகலியே
வடம்போன தூரமின்னும்
தேரோடிப் போகலியே
காலோயும் அந்தியிலே
கண் தோற்றம் மாறையிலே
ஆரோ வடம் புடிச்சி
அய்யன் தேரு நின்னுடுச்சி
………………………………………………………………………………..
தேர் இழுக்க ஜேசிபி பொக்லைன் பயன் படுத்துகிற காலமிது!
………………………………………….


1 comment:

  1. தேர் இழுப்பது ஒரு வகை. தூக்குவது இன்னொரு வகை. தூக்கு தேரில் ஆலம் விழுது தண்டுகள் பூட்டி இளைஞர் படை தூக்கி வர முதியவர்கள் வழி நடத்திய காலம் போய் எல்லா குடிகாரர்களும் வண்டிச் சக்கரம் பூட்டிய தேரை தள்ளி வருகிறார்கள்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.