Share

Jun 14, 2016

ஆன்ம லாபம்


கமல் ஹாசனும் ரகுவரனும் இணைந்து நடிக்கும் படம் வரவேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் அப்படி நடக்கவேயில்லை. ஏன்? ரஜினி படம் தாண்டி இந்திப்படங்களில் கூட நடித்த ரகுவரன். 

ரகுவரன் நடிப்பை கமல் ஹாசன் பயன்படுத்தியிருக்க வேண்டும். பூவிழி வாசலிலே, பாட்ஷா, முதல்வன் பாணி வில்லனாகத்தான் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றில்லாவிட்டாலும் 
கூட்டுப்புழுக்கள்,அஞ்சலி ரக ரகுவரனாகவாவது கமல் படமொன்றிலாவது நிறுத்திப் பார்த்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் கமல், ரகுவரன் இருவருக்குமே ஒரு நல்ல வித்தியாசமான படம் கிடைத்திருக்கும். காலம் இருக்கிறது. எப்போதாவது நடக்கும் என்று எண்ணியிருந்ததுண்டு. 

காலன் ரகுவரனைக் கொண்டு போய் விட்டான். Scene Stealer ரகுவரன்!

கதாநாயகிகளில் நதியா அப்போது கமலுடன் ஜோடி சேர்ந்ததில்லை.

கமல் ஹாசன் தன் படங்களில் மாதவனுக்கு வாய்ப்பு தந்திருக்கிறார். முன்னதாக, கமல் ஹாசன் ஏதேனும் ஒரு படத்தில் அரவிந்த் சாமிக்கு ஒரு நல்ல வாய்ப்பு தருவார் என்றும் எதிர்பார்த்திருந்ததுண்டு. 

மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தில் தெளிவாகத் தெரிந்த விஷயம் –மீண்டும், மறுபடியும் அரவிந்த்சாமி நல்ல ஃபார்மில் இருக்கிறார்! 

ஜெயம் ரவியின் தனி ஒருவனில் நடித்த அரவிந்த் சாமி அடுத்து ஒரு ’போகன்’ ஆக இணைவதை அறியும் போது கமல் ஹாசனுடன் ரோஜா நாயகனை பார்க்கும் ஆர்வம் அதிகமாகிறது.இதுவே இரண்டு கமல் படங்களில் சேர்ந்திருந்தால் (Ifs and Buts!) பிரமாதமாயிருக்குமே! கமலுக்குத்தான் அவர் சரியான Supporting Actor!

காலம் இருக்கிறது!

…………………………………………

மூன்று மாதங்களுக்கு முன் கூத்துப்பட்டறைக்கு ந,முத்துசாமி சாரை பார்க்க நடிகர் பசுபதி வந்திருந்தார். அவருடைய மனைவியும் உடன் வந்திருந்தார்.
புதிதாக மூன்று நாட்களுக்கு முன் தத்து எடுத்திருந்த மராட்டி பெண் குழந்தையை முத்துசாமி சாரிடம் காட்டி ஆசி பெறுவதற்காக. மூன்றரை வயது குழந்தை!
பசுபதி பற்றி முத்துசாமி சார் நிறைய சொல்வார். 17 ஆண்டுகள் கூத்துப்பட்டறை நடிகராக இருந்தவர். எங்கே ட்ரெயினிங் அனுப்பினாலும் உடனே சென்று வருவார். 

……………………………………………………

பேராசிரியர் செ.ரவீந்திரன் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்று பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார்.
அவரை சந்தித்த போது எனக்கு ஐன்ஸ்டீன் ஞாபகமும் வந்தது. டி.கே.சி ஞாபகமும் வந்தது. ரவீந்திரனின் கண்கள் சிரிக்கிறது. புருவம் சிரிக்கிறது. மீசை சிரிக்கிறது. அவரது தலை முடி சிரிக்கிறது.


மு. நடேஷுக்கு எத்தனையோ குரு நாதர்கள். நாடக மேடை ஒளியமைப்புக்கு குரு செ.ரவீந்திரன்.


”நீராகாராம்” அருந்திக்கொண்டிருக்கிறேன் என்று செல் பேசியில் அவர் சொன்ன போது முதலில் புரியவில்லை. ”மது”வைத் தான் ”நீராகாரம்” என்கிறார்! ”நீரின்றி அமையாது உலகு” என்றார். அவரைப்பொறுத்தவரை “When your pocket and body permit, you can go on drinking!”
....................................


நான் சிகரெட்டோ, மதுவோ தொடாதவன்.
உறவும் சுற்றமும் நட்பும் கேட்கிறார்கள் : "என்ன வைராக்கியம்? மது,புகை,சூது இல்லாமல் இருந்து என்ன சாதித்தாய்? செல்வமெல்லாம் இழந்து இன்று அன்றாடங்காய்ச்சியாய்த்தானே இருக்கிறாய்?என்ன லாபம் கண்டாய்?”
என் பதில் : “ஆன்ம லாபம்”

2 comments:

  1. என் பதில் : “ஆன்ம லாபம்”.

    நன்றாகவே தெரிகிறது உங்களது எழுத்தில்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.