Share

Oct 1, 2012

காஞ்சியிலே நேத்து....சொல்லட்டுமா இன்று


சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் தன் 80வயதில் என்னை நண்பராக ஏற்றவர்.பழனியில் என் வீட்டுக்கு மாமியுடன்  வந்திருந்த போது இரவில் பேசிக்கொண்டிருக்கையில் பரமாச்சாரியாள் பற்றி சொன்னார். அவருடைய ஐம்பத்தைந்து வயது வரை பூஜை,புனஸ்காரங்கள்,அனுஷ்டானங்கள் இன்றி இருந்தவர். ஆல் இண்டியா ரேடியோவிற்காக பரமாச்சாரியாளை சந்தித்தவர் அன்று தொடங்கி அவருடைய அத்தியந்த பக்தராக மாறியிருக்கிறார்.என் மீது அவருக்கு உள்ள அபிமானத்தில் நானும் பரமாச்சாரியாளை சங்கர மடத்திற்கு வந்து தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். நானும் அப்போது ஆத்திகன் என்பதால், ஆன்மீகத்தேடல் தேவை என்ற பிரமையும் எனக்கு இருந்ததாலும் சம்மதித்தேன்.

செல்லும் வழியில் சிட்டி பரமாச்சாரியாள் பற்றி அவருடைய பல அனுபவங்களை சொல்லிக்கொண்டு வந்தார். வயோதிகம் காரணமாக உள்ள இயல்பான உபாதைகள் காஞ்சிக்கு செல்லும்போது தனக்கு எப்போதுமே இருந்ததில்லை என்றார். ஜெயேந்திர சரஸ்வதி பற்றி அவருக்கு கொஞ்சமும் நல்ல அபிப்ராயம் கிடையாது என்பதுடன் அவரை பிடிக்காது.ஆனால் குட்டிப்பெரியவாள் விஜயேந்திர சரஸ்வதி மேல் மிகுந்த நம்பிக்கை.பரமாச்சாரியாளின் சரியான வாரிசு இவர் தான் என்பதில் சிட்டிக்கு எந்த சந்தேகமும் இல்லை.

காஞ்சி மடத்தில் நுழைந்தவுடன் சிட்டி அங்கிருந்த அடிப்பொடி ஒருவனைத்தொட்டு “பரமாச்சாரியாள் எங்கே” என்றார். அவன் உடனே ஒதுங்கி கோபமாக “தொடாதே” என்றான்.

 என் முன்னால் சிட்டிக்கு ஏற்பட்ட இந்த அவமானம். ஆனால் மஹான்களைச் சுற்றி இப்படி அல்லக்கைகளின் அராஜகம் இருக்கத்தான் செய்யும்.

அப்போது அங்கே குட்டிப்பெரியவாளின் ஆசிரியர் வந்தார். அவர் சிட்டியின் நண்பர். அவரிடம் சிட்டி என்னை அறிமுகம் செய்தார். “இவர் ராஜநாயஹம்.தி.ஜானகிராமனின் ரசிகர்.” குட்டிப்பெரியவாளின் ஆசிரியரும் தி.ஜா வின் ரசிகர். மடத்திற்கு எதிரே உள்ள சிறு குளமருகே பெரிய பெரியவாள் பரமாச்சாரியாள் இருக்கிறார்.

அங்கே சென்றோம். சந்திரசேகரேந்திரர் இருந்தார்.கண்மூடி நிஷ்டையில்.என் கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது.தொண்டையில் விம்மலும்.

அவர் தியானத்தில் இருப்பதால் அவரோடு பேசமுடியாது.தேவையேயில்லை.பார்த்ததே போதும் என்ற திருப்தி நிலை தான்.

அங்கே ஒரு மணி நேரம் அமர்ந்தோம். புகைப்படம் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.எழுந்தோம்.பெரியவர் சிலை போலவே தான் இன்னமும் இருந்தார்.

மீண்டும் மடத்தில் நுழைந்தோம்.நடுப்பெரியவாள் அன்று மடத்தில் இல்லை. சிட்டி அதற்கு சந்தோஷப்படவே செய்தார்.குட்டிப்பெரியவாளை பலர் சூழ்ந்திருந்தனர்.அப்போது அவருக்கு 17,18 வயதிருக்கும். எல்லோரும் தெய்வ தரிசனப் பரவசத்தில் தான். சிட்டியைப் பார்த்ததும் “சிட்டி வா” என்றார். சிட்டி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

“இவர் ராஜநாயஹம் என் நண்பர். A voracious reader..

விஜயேந்திரர் கனிவுடன் என்னைப்பார்த்து புன்னகைத்தபோது அணுக்கமும் வாத்சல்யமும் தெரிந்தது.

அங்கே ஒரு பெரியவர் சில ஸ்லோகங்களை உச்சரித்தார்.அதைக்கேட்ட விஜயேந்திரர் பரவசப்பட்டார்.ஆகாகாரம் செய்தார்.

நான் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன்.

உடனே பிரக்ஞையுடன் அவர் ஆசி வழங்கும் நிலையில் நின்றார்.அவ்வப்போது தன் நெஞ்சில் கை வைத்து நின்றார். ஒரு ஏழெட்டு ஃப்ளாஷ்.

திரும்பி நடந்தார்.படியேறும்போது சத்தமாக “ராஜநாயஹம்”என்றார்

.உடனே அவர் பின் நின்ற ஆசிரியர் திரும்பி ஒடு நடையில்வந்து “ராஜநாயஹம் பெரிவா உங்களைக்கூப்பிடறார்.”

அங்கிருந்த அத்தனை பிராமண குடும்பங்களும் என்னை பிரமிப்புடன் பார்த்தார்கள்.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

நான் மாடிப்படியருகே சென்றேன். விஜயேந்திரர் நான்கைந்து படியேறிய நிலையில் “ ராஜநாயஹம்! போட்டோஸ் அனுப்பி வையுங்கள்.” என்றார்.

லௌகீகம்!!

நான் மீண்டும் கேமராவை முடுக்கினேன்.அவர் அடுத்தடுத்து சில வெவ்வேறான சாது போஸ் கொடுக்க ஆரம்பித்தார்.

“போட்டோஸ் அனுப்பி வையுங்கள்.”
எல்லா புகைப்படங்களுக்கும் பல பிரதிகள் அனுப்பி வைத்தேன்.

7 comments:

  1. தங்கள் பதிவுக்கு அடிக்கடி படிப்பதற்காக வருபவன், தங்கள் பதிவை திறந்த உடன் வரும் இசை ஒரு சிலருக்கு இடைஞ்சலாக(எனக்கு இருக்கிறது) இருக்கலாம். உங்களால் முடியுமெனில் அதை நீக்கவும்.

    ReplyDelete
  2. என் நண்பர் Chilled Beers எவ்வளவோ முயற்சி செய்தும் இதை நிறுத்த முடியவில்லை. என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை.யாராவது இதை நிறுத்த உதவினால் நல்லது.

    ReplyDelete
  3. ஆனால் அந்த இசை எப்போதும் வருவதில்லை.எப்போதாவது தான் வருகிறது கோடை மழை மாதிரி.!அதுவரைக்கு சற்று ஆறுதலே!

    ReplyDelete
  4. //என் நண்பர் Chilled Beers எவ்வளவோ முயற்சி செய்தும் இதை நிறுத்த முடியவில்லை. என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை.யாராவது இதை நிறுத்த உதவினால் நல்லது.// Yes its coming sometime but if you can please. Somebody help RP

    ReplyDelete
  5. Sir, It is hard to find, where is the link for music in the blogger base html!
    Option 1) go to google blogger settings > Template > Dynamic View... but this template is different and new types. but this option can stop the music.
    Option 2)you can choose, new blogger template (free blogger template available)

    ReplyDelete
  6. கிருத்திகா என்ற பெண் எழுத்தாளர் (எம்.எஸ்.சுவாமிவாதன் மாமியார்) 40 வருடங்களாக சிட்டியுடன் பல் வேறு விஷயங்களை கடிதங்கள் மூலம் பகிரந்து கொண்டிருந்தனராம். அதன் தொகுப்பு (ஆங்கிலம்) நரசய்யா சமீபத்தில் வெளியுட்டுள்ளார்.

    ReplyDelete
  7. இந்த நிகழ்வை திருப்பூர் (TMF Hospital ) அரிமா சங்கத்தில் சுப்ரபாரதி மணியனுடன் உலக சினிமா பார்க்கும்போது பகிர்ந்து கொண்டீர்கள்.சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கிறேன். (ஞாயிறு வேளைகளில்)

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.