Share

Oct 26, 2012

நடிகரான இசையமைப்பாளர்


உயிர் என்று ஒரு படம் 1971ல் வெளிவந்தது. முத்துராமன்,சரோஜாதேவி,லட்சுமி,நாகேஷ் நடித்த படம்.
பி.ஆர்.சோமு இயக்கத்த்தில்.அந்தப்படம் ரொம்ப சொற்ப நாளில் தயாரிக்கப்பட்டது.
படத்தின் துவக்கத்தில் டைரக்டர் சோமு ஃபுல்சூட்டில் வந்து ஒரு குளோபை உருட்டியவாறு
 ”இறைவன் படைக்கும்போது மனிதனுக்கு கையை கொடுக்க மறக்கலாம்.காலைக்கொடுக்க மறக்கலாம்.கண்ணைக்கொடுக்ககூட மறக்கலாம்.ஆனால் எதைக்கொடுக்க மறந்தாலுமஆண்டவன்  ஒன்றை மட்டும் கொடுக்க மறப்பதே இல்லை. அது உயிர்!உயிர்!உயிர்!” (டைட்டில் ஆரம்பம்!)

பி.ஆர் சோமு அதற்கு முன் தெய்வசங்கல்பம்(1969) ஏ.வி.எம்.ராஜன் ,விஜயகுமாரி, முத்துராமன் நடிப்பில் இயக்கியவர்.

உயிர் படத்திற்குப்பிறகு எங்கள் குலதெய்வம், அழைத்தால் வருவேன், ராஜா யுவராஜா, சர்வம் சக்தி மையம் தாயே நீயே துணைபோன்ற படங்கள் இயக்கியவர்.

உயிர் படத்திற்கு ஆறு பாடல்கள்.இரண்டு பேர் இசையமைப்பாளர்கள் என்று தீர்மானித்து  அந்த இரண்டு இசையமைப்பாளர்களுக்கும் மூன்று மூன்று பாடல்கள் என்று முடிவாகியிருக்கிறது.அந்த இசையமைப்பாளர்கள் ராஜையாவும் ரமணாஸ்ரீதரும்.

ராஜையா அந்தப் பட வாய்ப்பை அவரே துறந்தாரா அல்லது ஏதேனும் அரசியலோ தெரியவில்லை. அப்போது அப்படி தட்டிப்போன வாய்ப்பு அன்னக்கிளியில் 1976ல் கிடைத்து இளையராஜா ஆனார்!

ரமணாஸ்ரீதர் தனி இசையமைப்பாளராக ’உயிர்’படத்தில்அறிமுகமானார்.

’தண்ணீரில் ஏதடி நெருப்பு,இதை தாங்காமல் ஏனிந்த தவிப்பு’

”தனிமையிலும் நாணமா மைவிழியில் ஜாடையா பூமுகத்தை ஏன் மறைத்தாய் நான் வரையும் பொன்னோவியமே”

இந்த சௌந்தர்ராஜன் பாடல்கள் இந்தப்படத்தில் தான்!

இன்னொரு சுவையான தகவல்.கமல்ஹாசன் இந்தப்படத்தில் டான்ஸ் அசிஸ்டண்ட்.
கமல் போட்ட ஸ்டெப்ஸ் பார்த்து முத்துராமன் மிரண்டு போய் “ என்னப்பா கமல்! நான் என் வயசுக்கு நீ போடுற ஸ்டெப்பெல்லாம் போடமுடியுமா?’ என்றாராம்.

இந்த ரமணாஸ்ரீதர் வேறு வாய்ப்புகள் இல்லாமல் மெல்லிசைக்கச்சேரிகள் செய்து வந்தார். இவரிடம் சுவாரசியம் என்னவென்றால் சிவாஜி பாடல்களை சிவாஜியை இமிடேட் செய்து பாடுவார்.எம்.ஜி.ஆர் பாடல்களை எம்ஜிஆர் ஆக்சனில் பாடுவார்.

திருவையாற்றுக்காரரான ரமணி தீவிரமான சிவாஜி கணேசன்ரசிகர்!

பின்னால் ரமணி தன் பெயரை விஜய் ரமணி என்று மாற்றிக்கொண்டார். ’யாகசாலை’ என்று ஒரு படத்தில்  இசையமைத்து ரமணியே பாடிய பாடல்-
” ஒரு ரோசாப்பு சிரிக்கிறது! புது ராசாவை நினைக்கிறது!”
அந்தக்கால ‘சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு,மத்தாப்பு சுந்தரி ஒருத்தி ஒயிலாட வந்தாளாம்” பாட்டோடு ஒப்பிடப்பட்டது.
விஜய் ரமணியாக  விஷேசமாக இவர் சாதிக்காத நேரத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது.

1980ல் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆர் இரண்டே தொகுதிகளை மட்டும் கைப்பற்றும்படியாகிவிட்டது. வெற்றியை மட்டுமே அதுவரை பார்த்து வந்த எம்.ஜி.ஆருக்கு தமிழகத்தில் சிவகாசி,கோபிசெட்டிப்பாளையம் ஆகிய இரண்டே தொகுதிகளே கிடைத்தது.பெரும் சரிவு!

உடனே தமிழகத்தில்  எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அந்த நேரத்தில் ஒரு முக்கியத்திருமணம் நடந்தது. அந்தத்திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் வருகிறார்.மெல்லிசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் கச்சேரியைப்பார்க்க உட்கார்கிறார்.மேடையில் ரமணி பாடகர்.
எம்.ஜி.ஆர் பாணியில் ஆக்சனுடன் பாடியிருக்கிறார்.
’என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே!தன்னாலே வெளிவரும் தயங்காதே! ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!’

 ரமணி கைகளை ஆட்டி பாடியதைப்பார்த்து  எம்.ஜி.ஆர் புன்சிரிப்போடு ரசித்திருக்கிறார்.

‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது
அங்கே சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது!

நான் ஒரு கை பார்க்கிறேன். நேரம் வரும் கேட்கிறேன்.
பூனையல்ல புலி தான் என போகப்போக காட்டுகிறேன்
போகப்போக காட்டுகிறேன்!’

சரம் சரமாக எம்.ஜி.ஆர் பாடல்களை அவர் முன்னேயே ரமணி பாடியிருக்கிறார்.

எம்.ஜி,ஆர் மேடையேறி
‘’ என்னுடைய ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் நான்  
மன அமைதியை இழந்திருந்தேன். இன்று ரமணி என் படப்பாடல்களைப் பாடி என்னை சந்தோசப்படுத்தி விட்டார்! எனக்கு ரொம்ப ஆறுதலாயிருந்தது.அவருக்கு என் வாட்சை அன்பளிப்பாக தருகிறேன்.” என்று கையில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்சை க் கழட்டி விஜய் ரமணிக்கு கொடுத்து விட்டார்!
இப்படி எம்.ஜி.ஆர் எத்தனையோ பேருக்கு வாட்சைக்கழட்டிக்கொடுத்திருக்கிறார்.

....

”ஓரம்போ!ஓரம்போ!ருக்ம்ணி வண்டி வருது”  ராஜையாவுடன் ரமணி அந்தக்காலத்தில் கச்சேரியில் பாடிய “கண்ணம்மா!கண்ணம்மா!” தான்!

சினிமா சான்ஸ் பற்றி ரமணி சொன்னது இன்னும் மறக்கமுடியவில்லை.
“தம்பி!சினிமாவில நாளைக்கு வா நாளைக்கு வான்னு சொல்லியே கொன்னுடுவானுங்க!”


ரமணி பின்னால் எம்.எஸ்.வி, இளைய ராஜாவிடம் இசையமைப்பில் உதவியாளராக பணிபுரிந்தார்.
சில பாடல்களும் பாடியிருக்கிறார்.
அவருக்கு நடிகராக புனர்ஜென்மம் வாய்த்தது.  ராகவேந்தர்!
சிந்துபைரவியில் இவர் நடிகர்களின் பாணியில் பாடும் குணவிசேசத்தை கே.பாலச்சந்தர் பயன்படுத்திக்கொண்டார்.வைதேகி காத்திருந்தாள் படம் இவரை நடிகராக நிலைநிறுத்தியது. கமல் ஹாசனின் “ விக்ரம்” படத்தில்!

நடிகர் ராகவேந்தராகத்தான் இவரை இன்று தெரியும்.
பாடகி கல்பனாவின் தந்தை!

..........


http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_6.html


20 comments:

 1. உயிர் படப் பாடல்களை நினைவில் வைத்திருப்பவர்கள் மிகச் சில பேர். நீங்களும் நானும் ! நான் 1989ல் அறந்தை நாராயணனின் ‘வாரம் தோறும் வயசாகிறது’ நாவலை ‘ விண்ணிலிருந்து மண்ணுக்கு’ என்ற தலைப்பில் தொடராக எழுதி இயக்கித் தயாரித்தபோது, ராகவேந்தர் அதில் ஒரு முக்கியமான் பாத்திரத்தில் நடித்தார். செட்டில் பாடிக் கொண்டேதான் இருப்பார். அவரிடம் உங்க பேரு ரமணாஸ்ரீதர்தானே என்று கேட்டதும் அசந்துபோய் ‘ உயிர்’ படத்தையெல்லாம் நினைவு வெச்சிருக்கறவங்க இருக்காங்களா என்றார். அவர் மகள் கல்பனா இன்று மெல்லிசை மட்டுமல்ல, மேற்கத்திய செவ்வியல் இசை பாடுவதிலும் திறமைசாலி. அவருக்கும் போதுமான வாய்ப்புகள் இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது. ஞாநி

  ReplyDelete
 2. இவரை பற்றி நினைத்தால் நினைவுக்கு வருவது " கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் உன்னிடம்" என சிந்து பைரவியில் பல நடிகர்கள் போல பாடி காட்டுவது தான்

  ReplyDelete
 3. Rare info ! RPR is a film encyclopedia.

  ReplyDelete
 4. மூர்த்தி,மோகன் நன்றி.
  ஞாநி சார்! என் அன்பும் நமஸ்காரமும். இது போல கமெண்ட் வரும்போது தான் பதிவுக்கு கௌரவம் கூடுகிறது! Relevant comment.
  My special wishes to Kannan!

  ReplyDelete
 5. அருமை அருமை சார்

  ReplyDelete
 6. திட்டமிடாமல் மனதில் தேங்கியிருக்கும் நினைவுகளை அப்படியே கொட்டும் போது வரும் இதுபோல எழுத்துக்கு எப்போதுமே தனித்துவம்

  ReplyDelete
 7. ட்விட்டரில் கானா பிரபா ‏@kanapraba

  அருமையான இன்னொரு பதிவு நம் எழுத்துலகத் துரோணரிடம் இருந்து
  => நடிகரான இசையமைப்பாளர் http://rprajanayahem.blogspot.com.au/2012/10/blog-post_26.html …

  ReplyDelete
  Replies
  1. Dear RPR:

   I thought Ramana Sridhar was all but forgotten. But while RPR is there, I should n't have concluded thus!

   Uyir also has another melodious song - வெட்கமா வா பக்கமா!

   I have attended a few light music 'concerts' of Ramana Sridhar you have alluded to! They were free shows taking place at the major street intersections of George Town (Mannady-Broadway etc.) Madras. He used to sing with a gusto that was well appreciated by the audience and would go until late night. These concerts used to sponsored by local temples and would reach their peak around Ganesh festival.

   Ravi

   Delete
 8. RPR Sir, thanks to share such a rare info. I heard that Ragavendar is brother to Latha Rajinikanth. Is that true?

  ReplyDelete
 9. ரவி!
  உங்கள் தகவல்களுக்கு என் நன்றி.

  எழிலரசன்!
  ரஜினியின் மாப்பிள்ளை ராகவேந்தர் “ வாய்ச்சொல்லில் வீரனடி” என்ற விசு படத்தில் கதாநாயகனாக நடித்தவர். ஒய்.ஜி.மகேந்திரன் நாடகக்குழுவின் நடிகர்.அந்த ராகவேந்தர் வேறு. ரமணாஸ்ரீதர் என்ற இந்த ராகவேந்தர் வேறு

  ReplyDelete
 10. இளையராஜா தனது சுய சரிதையில் இவரைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். இவரும் ராஜாவும் நல்ல நண்பர்களாம். தன ஆர்மோனியத்தை வேறொருவர் தொடுவதை பொறுத்துக்கொள்ள ஒருபோதும் இயலாத ராஜா இவர் தன ஆர்மோனியத்தைத் தொட்டு வாசிப்பதை கண்டு கோபத்தில் கதி விட்டாராம். அதற்கு பின்னர் தான் உயிர் படத்துக்கு ரமணி இசை அமைத்தார் என்று ராஜா குறிப்பிட்டு இருக்கிறார். எண்பதுகளின் இறுதியில் வந்த ஒரு தொலைக் காட்சி தொடரில் இளவரசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் ராகவேந்தர் என்ற ரமணி. வில்லன் கதாபாத்திரம் அவர் பெயர் 'எளவு' என்றே அழைக்கப்படும் அத்தொடரில்.

  ReplyDelete
 11. நன்றி சந்தனார்! தம்பி சிவகுமார் சௌக்கியம் தானே!

  ReplyDelete
 12. சிவா நலம் சார்..அவனுக்கு இன்று பிறந்த நாள்!

  ReplyDelete
 13. படிக்க ஆரம்பித்து நடுவில் வரும் போதே, யார் இவர் யார் இவர் என்று தெரிந்து கொள்ள இதயம் துடிக்கிறது. கடைசியுள் பார்த்தால் "அவரா இவர்"
  என ஆச்சரியம் ஆக உள்ளது.

  சிந்து பைரவி வசனம்
  --------------------------------
  "அந்த மான் இந்த மானுக்குத்தான் சொந்தம்
  இந்த மான் எந்த மானுக்கு சொந்தம்"

  சுஜாதாவின் எழுத்து எப்படி நம்மை கட்டி போடுகிறதோ,
  அதே போலதான் உங்கள் எழுத்தும்.

  அறிய தகவல். மிக்க நன்றி நிறைய எழுதுங்கள்.

  முடிந்தால் அவர்களின் புகைப்படம் இணைத்தால், இன்னும் சிறப்பாக இருக்கும்.

  - விபடிக்க ஆரம்பித்து நடுவில் வரும் போதே, யார் இவர் யார் இவர் என்று தெரிந்து கொள்ள இதயம் துடிக்கிறது. கடைசியுள் பார்த்தால் "அவரா இவர்"
  என ஆச்சரியம் ஆக உள்ளது.

  சிந்து பைரவி வசனம்
  --------------------------------
  "அந்த மான் இந்த மானுக்குத்தான் சொந்தம்
  இந்த மான் எந்த மானுக்கு சொந்தம்"

  சுஜாதாவின் எழுத்து எப்படி நம்மை கட்டி போடுகிறதோ,
  அதே போலதான் உங்கள் எழுத்தும்.

  அறிய தகவல். மிக்க நன்றி நிறைய எழுதுங்கள்.

  முடிந்தால் அவர்களின் புகைப்படம் இணைத்தால், இன்னும் சிறப்பாக இருக்கும்.

  - விமல்

  ReplyDelete
 14. இந்த விஜயரமணி (ராகவேந்தர்) மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் இசையில் பாடலும் பாடியுள்ளார், கண்மணிப்பூங்கா படத்திற்காக. பாடல் விவரம் தேடித்தருகிறேன்.

  ReplyDelete
 15. RPR Sir, thankx a lot for the clarrification. Now I can recognise this Ramaniyam Ragavendar.

  ReplyDelete
 16. அருமையான பதிவு ரசித்தேன் ஐயா!

  ReplyDelete
 17. RPR sir, I have been searching for Uyir movie VCd/DVD. So you have any idea about its availability???

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.