Share

Nov 9, 2018

Woollen Elephant


என்னுடைய எழுத்தில் ஞாபக சக்தி பற்றி ரொம்ப ரொம்ப பேர் சிலாக்கியமாக சொல்வதுண்டு. எப்படி இது சாத்தியம் என்று பிரமிப்பதை அடிக்கடி கேட்டு விட்டேன். ”குறிப்பு எடுத்துக் கொள்வீர்களா?”
மையமாக ஒரு புன்னகை தான் என் பதில்.
பியரெத் ஃப்லுசியோ (Pierrette Fleutiaux) என்ற பெண் எழுத்தாளர் எழுதிய பிரஞ்சு நாவலை நேரடியாக தமிழுக்கு வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்திருக்கிறார்.  ’சின்ன சின்ன வாக்கியங்கள்’. க்ரியா வெளியீடு. அதை இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன்.Short sentences.
“ எழுத்தாளர் ஒருவர் எதிர் கொள்ளும் கேள்விகளில் அடிக்கடி இடம் பெறுவது இந்த கேள்வி: ‘ நீங்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்வீர்களா?’ என்னுடைய பதில்: இல்லை, மனதில் ஒன்று தங்கவில்லையென்றால் அது முக்கியமானதில்லை என்று பொருள்.” நாவலின் 96ம் பக்கத்தில் பியரெத் ஃப்லுசியோ இப்படி சொல்கிறார்.
ரொம்ப பால்யத்தில், பள்ளிக்காலத்தில், கல்லூரி காலத்தில் அதன் பிறகும் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக பழகியவர்களைப் பற்றிக்கூட அவர்கள் பேசிய விஷயங்கள் பற்றி நான் சொல்லும்போது எப்போதும் பிரமித்துப் போய் கேட்பார்கள். ’இதையெல்லாம் எப்படி ஞாபகம் வைத்திருக்கிறாய்?’
தாமரையிலைத் தண்ணீராய் ஒரு விலக்கம் என்னிடம் இருந்த போதிலும் நான் பழகிய எல்லாருக்கும் முக்கியத்துவம் கொடுப்பவன். அதனால் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் மறக்காமல் சொல்ல முடிகிறது.
பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் போது ஒரு இளம் ஆசிரியர் புதிதாக பள்ளியில் வேலைக்கு சேர்ந்தவர் எங்கள் வகுப்புக்கு தான் முதன்முதலாக பாடம் எடுத்தார். அன்று அவர் பதற்றத்துடன் இதை சொன்னார்.
நான் அவரை 20 வருடங்கள் கழித்து திருச்சி தெப்பக்குளத்தில் சந்தித்த போது முதன் முதலாக ஆசிரியராக அவருடைய
maiden attempt எங்கள் வகுப்பில் தான் என நினைவு கூர்ந்தேன். புருவத்தை உயர்த்தினார். அது மட்டுமல்ல. அந்த முதல் நாள் அவர் ரோஸ் கலர் சர்ட், க்ரீன் கலர் பேண்ட் அணிந்திருந்ததையும் சொன்னேன். ஆச்சரியத்தில் மூழ்கி விட்டாரென்று சொல்லத்தேவையில்லை.
எனக்கே தெரிகிறது. எனக்கு ஞாபகத்தில் உள்ள விஷயஙகள் போல வேறு யாருக்குமே ஞாபகப்படுத்திக்கொள்வது அசாத்தியம்.
Memory is my fate. I’m sick of many griefs.

நான் அறியாத, அபூர்வ விஷயம் பற்றி அறிய வரும்போது இப்போது குறிப்பு எடுக்கிறேன். ஆனால் எழுதுவதற்காக எந்த குறிப்பையும் பயன்படுத்தியதில்லை.
என்னுடைய ப்ளாக்கில் 1166 பதிவுகள் இன்று வாசிக்கப்பட்டு இருபது லட்சம் ஹிட். 
Everything which exalts life adds at the same time to it’s absurditity – Albert Camus.
இந்த பதிவு 1167 வது பதிவு.
இடாலோ கால்வினோ
‘ love far from home’ சிறுகதையில் சொல்வது போல எல்லா கிறுக்கல்களும் சேர்ந்து ஒரு பிரம்மாண்டமான ’Woollen Elephant’ ஆக மாறியிருக்கிறது.
கம்பளி யானையாய் மிரட்டும் என் எழுத்து?
பிக்காஸோவின் ஓவியங்கள் அவனுடைய உன்மத்தத்திற்கேயான Therapy.

Nov 3, 2018

அண்டங்காக்காய தேடி போகணும்


ஒரு கல்லின் மேல் உட்கார்ந்திருந்த பச்சோந்தி தலையைத் தூக்கி, தூக்கி பார்த்துக்கொண்டிருந்தது. அதனை உற்றுப்பார்த்த டால்ஸ்டாய் அதனிடம் சத்தமாக சொன்னாராம் “ஆமாம், நானும் சோகமாக துயர மனநிலையில் தான் இருக்கிறேன்.”
பச்சோந்தி எப்போதும் மரங்களில் தான் மகிழ்ச்சியுடன் இருக்கும். கல்லின் மேல் இருப்பதென்பது  ’ஸ்தான சலனம், கௌரவ பங்கம்’. துக்கமாகத் தானே கல்லில் பச்சோந்தி இருக்க முடியும்.
ஒரு அரபு பழமொழி. “ A Chameleon does not leave one tree until he is sure of another.”
பிரமிள் ஞாபகம் வருகிறது. அவருடைய அருமை தெரிந்தவர்கள் எப்போதும் தங்கள் வீட்டிற்கு சந்தோஷமாக அழைப்பார்கள். அவரும் போவார். ஒரு மாதம், ரெண்டு மாதம், அதற்கு மேலும் கூட தங்குவார். பொதுவாக சண்டை போட்டு விட்டு தான் கிளம்புவார். ஆனால் ஒன்று. அடுத்து அவருக்கான ஒரு தங்குமிடம் பற்றி தெளிவாக உறுதியான பின் தான் இந்த வீட்டில் சண்டை போட்டு விட்டு கிளம்புவார். முத்துசாமிக்கும் எனக்கும் கூட பிரமிள் நண்பர் தான்.
என் வீட்டில் ஃப்ரன்ச் விண்டோவை ஒட்டி நிற்கும் பாதாம் மரம். அதில் இரண்டு அண்டங்காக்காய்கள் கிளையில் அமர்ந்திருக்கின்றன.
கூத்துப்பட்டறையில் ஊஞ்சலில் அமர்ந்து நான் முத்துசாமி சாருடன் பேசிக்கொண்டிருக்கும் போது மரங்களை அவருடைய கண்கள் துலாவிய பின் வானத்தை வெறித்து பார்த்து விட்டு அமைந்த குரலில் சொல்வார். “அண்டங்காக்காய தேடி போகணும்” ’அண்டங்காக்காய்கள் ஏன் காணப்படவில்லை’ என்பார். இப்படி ஒரு தடவை இரு தடவையல்ல. பல முறை சொல்லியிருக்கிறார்.

அவை என் வீட்டில் இப்போது தென்படுகின்றன. நான் உரத்த குரலில் இன்று காலை சொன்னேன்.

“அடப்பாவிகளா, முத்துசாமி உங்களை தேடிக்கொண்டிருந்தார் தெரியுமா?”

அந்த அண்டங்காக்காய்கள் என்னை கவலையோடு பார்த்தன. அதற்கு அர்த்தம் ”இனி என்ன செய்ய?    ஒரு நாள் முத்துசாமி வீட்டு முன் போய் நின்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தோம். எப்போதும், எல்லோரும் இங்கேயே இருப்போம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது எவ்வளவு தவறு.”

நான் ”அட ஆண்டாளே, தேடுறார்னு தெரிஞ்சே தான் கண்ணாமூச்சி விளையாடுனீங்களா?”

Listen to the birds and the reptiles. They talk.

( என் வீட்டு பாதாம் மர அண்டங்காக்காய்கள் இரண்டை மூத்த மகன் கீர்த்தி
படம் பிடித்தான்.)

Oct 30, 2018

ஆறாது, ஆறாது அழுதாழும் தீராது - 24.10.2018


24.10.2018
N.Muthuswamy dies. There are no words that can fill the void in my life.
It hurts when I lose my god father.
A piece of my heart is broken forever.
When someone that is special to us is gone it can be difficult to continue living life.
எங்க மாமிக்கும் நடேஷ் சாருக்கும் ரவி சாருக்கும் எப்படி ஆறுதல் சொல்வது?
எத்தனை சாமி வந்தாரோ, எத்தனை சாமி போனாரோ
அத்தனை சாமி ஒன்னா சேந்து முத்துசாமி ஆனாரோ
பத்து சாமி வந்தாலும் முத்துசாமி ஆவாரோ என்று அவர் பிறந்த நாள் அன்று பாடினேன்.

ஆலமரம் விழுந்து விட்டது,
மகான் மறைந்து விட்டார்,
போன்ற வார்த்தைகளெல்லாம் cliche.
இவரால் எப்படி ஆயிரம் பேருக்கும் மேல் அப்பாவாக இருக்க முடிந்திருக்கிறது.


மீளவே முடியாத துயரில்.
ந.முத்துசாமி சார் இழப்பு தாங்கவே முடியாத நிலை.
ஆறாது, ஆறாது
அழுதாழும் தீராது, ஆனாலும் வழியென்ன தாயே..
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல.

Oct 29, 2018

ரோகி இச்சிச்சதும் பாலு,வைத்தியன் கற்பிச்சதும் பாலுடெங்கு காய்ச்சல் வந்தா ட்ரிப் ஏத்துவாங்க. நோயாளி பழங்கள் நிறைய சாப்பிடனுமாம். 
எனக்கு பழங்கள் ரொம்ப பிடிக்கும். டெங்கு வந்தா ஹையா ஜாலி தான். நான் நிறைய பழங்கள் சாப்பிட்டுக்கொண்டே மண்டய போடுவேன்.
சொலவடை. ’ரோகி இச்சிச்சதும் பாலு, வைத்தியன் கற்பிச்சதும் பாலு’. நோயாளிக்கு பசும்பால் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஏங்கியிருக்கிறான். டாக்டர் வந்து “ நிறைய பால் நல்லா சூடா குடிங்க” என்று சொன்னாராம். நோயாளிக்கு வாயெல்லாம் பல்லு.
பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என்று பயமுறுத்திக்கொண்டிருக்கிறது.
நான் பாலகனாய் இருந்த போது டிங்கி ஜுரம் பிரபலம்.
டிங்கி ரொம்ப நல்ல காய்ச்சல். மூன்று நாள் தான் ஒருத்தர படாத பாடு படுத்தும். அப்புறம் போயிந்தே! காணாமல் போய் விடும். நான் நாலாவது நாள் எந்திரிச்சி குளிச்சி பள்ளிக்கூடம் போகணும்னு பிடிவாதம் பண்ணேன். வீட்டில விடல. நாளைக்கு போகலாம்னு அம்மா, அப்பா சொல்லிட்டாங்க.
பள்ளிக்கூடத்துக்கு போனா மூணு மிஸ்ங்க டிங்கி காய்ச்சல் லீவு. ஒரே ஜாலி.
ஆனா பசங்க எல்லாம் ’உனக்கு டிங்கி வந்துடுச்சா’ ’எனக்கு டிங்கி வந்துட்டு போயிடுச்சு’ன்னு குசலம் பேசிக்கிட்டானுங்க. ஒருத்தன் ‘ எனக்கு இனிமே தான் டிங்கி’ன்னு பரவசமானான்.
காய்ச்சல்னா அப்படி ’டிங்கி’ மாதிரி இருக்கணும்.
இப்ப டெங்கு, பன்றிகாய்ச்சல்லாம் கொலகார காய்ச்சலா இருக்கு.
ம்.. காலம் கெட்டுப்போச்சு.
அந்தக்காலத்துல காய்ச்சல் refresh button மாதிரி. நல்ல காய்ச்சல் வந்து போன பின் முகத்துல ஒரு அழகான களை வரும். உடம்பு கூட பூசுன மாதிரி ஆகி ஒரு பாலீஷ் வந்துடும்.
Feed a cold, Starve the fever னுவாங்க. ஜலதோஷமா? மூச்சு முட்ட நல்லா சாப்பிடு. சளி பறந்துடும். காய்ச்சலா? வயித்த காயப்போடு.
இன்னொரு காய்ச்சல். மன்மதன் அம்பால் வருவது.
ஸ்டீஃபனோ பென்னி சொன்னது “ If you meet an angel, you will have fever".
தாஸ்தயேவ்ஸ்கி நாவல்கள் படிப்பது எவ்வளவு அற்புதமான விஷயம். திரும்ப ரிவைஸ் பண்ணுவது எவ்வளவு நல்லது. Crime and punishment, Brothers Karamazov, Idiot, White nights..
ஆனா மெரிடித் சொன்னான் “ தாஸ்தயேவ்ஸ்கி நாவல்கள் படிப்பதால் சீக்கிரமாகவோ, தாமதமாகவோ மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட நேரிடும்”
இது நிச்சயம் தாஸ்தயேவ்ஸ்கிக்கு compliment தான்.

Oct 26, 2018

கூத்துக்கு பிள்ளை பெத்து கோமாளின்னு பேர் விட்ட கதை


என் அம்மாவிடம் எப்போதும் கோமாளி சேட்டை நிறைய செய்வேன். மிகையான நடிப்புடன் கொனஷ்டையுடன் ஏதாவது செய்வேன்.
“ தாயும் தன் பிள்ளையை தள்ளிடப்போமோ?” - இதை நிறைய விதமாக பல விதங்களில் உருக்க பாவம் சொட்ட சொட்ட ஆடிப் பாடுவேன்.
வினோதமாக கைநாட்டு பாமர பாணியில், முகத்தை அஷ்ட கோணலாக்கி உச்ச குரலில் சோகம் தளும்பிச் சொட்ட பாடுவேன்.
“ சிலர் சிரித்தான், சிலர் அழுதான், சிலர் சிரித்துக்கொண்டே அழுதான்”

In the trueman there is a joker concealed.

’லாலி பப்பி, லாலி மம்மி 
லாலி பப்பி, லாலி மம்மி’ தொர இங்க்லீஷ் பாட்டு கூட பாடுவேன்.
இது ஏதோ சிறுவனாய் இருந்த காலத்தில் மட்டுமல்ல. திருமணமாகி, இரண்டு பிள்ளைகள் பெரியவர்களாகி, அம்மாவின் கடைசி காலம் வரை.
அம்மாஎப்போதுமே சிரிக்காமல், திகைத்தவாறு சொல்வாள்
“ கூத்துக்கு பிள்ளை பெத்து கோமாளின்னு பேர் விட்ட கதையாய் இருக்கு”
Mighty lines.
அம்மா இறந்த இரண்டு வருடத்தில் கூத்துப்பட்டறைக்கே வந்து சேர்ந்தேன். ’எங்கும் சுற்றி ரங்கனைச்சேர்’. முத்துசாமியிடம் வந்து சேர்ந்தேன்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். அம்மாவிடம் செய்த கோமாளி சேட்டைகளையெல்லாம்
என் மனைவியிடம் ஆடி பாடிக்காட்டிக்கொண்டிருக்கிறேன்.
தாய்க்குப் பின் தாரம்.
எப்போது இந்த பாடி நடிக்கிற ஆசை, தாகம் தீரும்?
கைக்கட்டு, வாய்க்கட்டு. கால்கட்டோடு பாடையில் ஏறும் போது தான்.
Oct 21, 2018

வட சென்னை சிறைக்காட்சிகள்

சிறைச்சாலை மனித மனத்தை வளப்படுத்துவதில்லை. சிறையில் குற்றத்திற்கு தண்டனை இல்லை. சிறையில் கைதிக்கு பாதுகாப்புமில்லை. எதற்கு தான் சிறைச்சாலை? கைதிகளை மனித குணத்திலிருந்து உடைத்தெடுக்கிற சிறை, ஒருவருக்கொருவர் அபாயகரமானவர்களாகவும் ஆக்கி விட சிறந்த இடம்.

மகாநதியில் கமல் ஹாசன் சிறையின் சிக்கலான இழைகளை மனதை பிசைகிற விதமாக காட்டி கலங்க வைத்ததுண்டு.
அதற்கு பிறகு வெற்றி மாறனின் வடசென்னையில் கோரமான சிறை முகத்தை இன்னும் தெளிவாக பார்க்க முடிந்தது.
மனம் பதைபதைக்கும் விதமாக.
ரொம்ப திகைப்பாக, பயமாயிருக்கிறது.
இப்படியா? இவ்வளவிற்கா?
விலங்கு பூட்டப்பட்டவர்கள் சிறையில் மனித விலங்குகளாவது தான் யதார்த்தமா?
வட சென்னையில் உச்சமான விஷயம் சிறைச்சாலை சூழல் படமாக்கப்பட்டுள்ள விதம்.
யதார்த்தம் இது தான் எனும் போது வெளியே அரசியல், கட்சி, மீடியா எல்லாமே மிகப்பெரிய பகடி தான் என்றாகிறது.
மற்ற படி வடசென்னை படத்தில் எதுவுமே புதியதானதோ, புதிரானதோ இல்லை.

சந்திரா கதாபாத்திரம் விசித்திரம். ஆண்ட்ரியா புருஷன் அமீர் கொல்லப்பட்ட பின் சமுத்திர கனி மனைவியாகி, கொலைகாரர்களை பழிவாங்க தனுஷை தயார் படுத்துவதாக, காய் நகர்த்தும் சூத்ரதாரியாக கொக்கு தலையில் வெண்ணைய் வைத்து, காதை பின்னால் சுற்றி வளைத்து தொடுவதாக காட்டுவதெல்லாம் லாஜிக்கே இல்லாத திரைக்கதை விந்தை.

கதாநாயகி வசனத்தில் ’மக்குக்கூதி’  அசத்தல்.
One more feather in Dhanush’s cap.

https://rprajanayahem.blogspot.com/2018/02/blog-post_27.html

Oct 19, 2018

கம்புக்கூட்டன்


ஒரு சொலவடை. ’வேதநாயகம் பிள்ளை போல சடைச்சிக்கிறானே’ன்னு. அவரு எந்த வேதநாயகம்பிள்ளை? மாயூரம் வேதநாயகம் பிள்ளையா? அல்லது வேறு யாராவதா? யாருக்கும் தெரியாது.
சின்ன வயசில அதாவது வாலிப வயசில கம்புக்கூட்டன் தன் ஒட்டிப்போன கன்னத்தை எப்படி உப்ப வைப்பது என்று ரொம்ப சடைச்சிக்குவான். அது அவனுடைய ஆதாரக்கவலையாய் இருந்தது. கன்னம் இன்று வரை உப்பவே இல்லை.

இப்ப கம்புக்கூட்டனுக்கு அறுபத்தஞ்சு வயசு. எப்படியிருக்கான்னு விசாரிச்சா, இப்ப ’சாப்பிடுறதுக்கு பல் இருந்தா போதும்’னு சடைச்சிக்கிறான். எப்பவும் இந்த கவலை தான்.
ஆசைகளும், நம்பிக்கைகளும் எந்த அளவுக்கு வியர்த்தமானவை?

இளந்தாரியா இருக்கிறப்ப கம்புக்கூட்டன் அவனோட பொக்கவாய்  பாட்டிய கன்னத்தில, கை விரல்களை மூடி  குத்துகிற மாதிரி வைத்து அழுத்துவானாம். இதனால் முகம் பக்கவாட்டில் திரும்பிய நிலையில் பாட்டி சிரமமெடுத்து ஈனஸ்வரத்தில் கூக்குரல் எழுப்பி கத்துவாளாம். “கம்புக்கூட்டா, கருவாயா, கம்புக்கூட்டா, கருவாயா”
ஆரப்பாளையம் பார்க்கில் கிழவி கத்துவதை அப்படியே குருவிமண்டையன் நடித்துக்காட்டியதுண்டு.
கூப்பாட்டை ஆம்ப்ளிஃபையர் வைத்து விஸ்தாரமாக பெருக்கியது போல அலறலாக செய்து காட்டுவது
காதில் இன்னமும் கூட ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஏ.ஏ.ரோட்ல கம்புக்கூட்டன் யாராவது ஒருத்தனுக்கு ஒரு நாள் சாயந்தரம் அஞ்சு மணிக்கு டீ வாங்கிக்கொடுத்தான்னா, மறு நாள் அதே நேரத்துக்கு வந்து முந்தின நாள் இவன் கிட்ட டீ வாங்கி குடிச்சவன முழிச்சி முழிச்சி பார்ப்பான். ’இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே’ என்ற தோரணையில். இன்னேரம் டீ சாப்பிட கூப்பிட்டிருக்கணுமேன்னு.
’சபாஷ் மீனா’ படத்தில கண்ணாடி ஜன்னல குலதெய்வம் கல் வீசி உடைச்சிருப்பான்னு முடிவு பண்ணி ஜன்னலுக்கு கண்ணாடி மாட்ட வரும் சிவாஜி “இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே” என்று வெள்ளந்தியாக வீட்டுக்காரரை குழம்பிப்போய் பார்க்கும் போது கல் விழும். கொஞ்ச லேட்டு.

இந்த சபாஷ் மீனா காட்சி சார்லி சாப்ளின் நடித்த “The Kid" படத்தில் இருந்து உருவப்பட்டது. அதி மதுர ’மதுர பக்கி’களுக்கு சபாஷ் மீனா தான்  தெரியும்.

Oct 18, 2018

Jose Saramago’s The tale of the unknown island


ஜோஸெ ஸரமாகோ எழுதிய இந்த புனைவை நாவல் என்று சொன்னால் நம்பாதீர்கள். குறுநாவலுமல்ல. இது சிறுகதை தான்.

A man went to knock on the king's door and said, ‘Give me a boat’
அறியப்படாத தீவை தேடிப்போக ஆசைப்படுவதாக ஒருவன் ஒரு படகு வேண்டும் என்று அரசனை கேட்டுப்பெறுகிறான்.
Don't you know, If you don't step outside yourself, you'll never discover who you are.
அவனோடு அரண்மனை வேலைக்காரி ஒருத்தியும் தொழிலில் மாற்றம் வேண்டி அவனுடனே சேர்கிறாள். படகை சுத்தம் செய்கிறாள். படகை செலுத்த மாலுமிகள் கிடைக்கவில்லை. படகில் அவர்கள் சாப்பிட்டு விட்டு தூங்கும் போது அவன் கனவில் அவள் வரவில்லை என்று அவனுக்கு வருத்தம். Follow your dream and your dream will follow.
கடலில் பயணம் சாத்தியமில்லை. அவள் தான் அறியப்படாத தீவா?
His dream makes him realise his unknown island in this woman.
Dreams are skilled magicians, they can change the consistency of things and people.
ஒவ்வொரு மனித ஜென்மமுமே ஒரு தீவு தான்.
வாசகன், கனவுலக சஞ்சாரி, காதலர்கள் இந்த புனைவின் Sub text பற்றி கண்டடைவார்களாக. இதிலுள்ள மனோதத்துவம், மையல் பற்றி புரிந்து கொள்வார்களாக.
Liking probably is the best form of ownership and ownership the worst form of liking.
உங்களுக்கு எது தேவை என்பதில் எச்சரிக்கையாயிருங்கள். அது கிடைத்தாலும் கிடைத்து விடலாம், பார்த்துக்கொள்ளுங்கள்.
..this is the way fate usually treats us, it's right there behind us, it has already reached out a hand to touch us on the shoulder while we're still muttering to ourselves, It's all over, that's it, who cares anyhow.
இந்த கதையில் முழுக்க கமா தான். நிறுத்தற்குறி இல்லை. வாக்கியங்களில் கமாவுக்கு பிறகு, முதல் எழுத்து கேப்பிடல் லெட்டரில் இருப்பது தான் வாசகனுக்கான சலுகை. The entire story is made of one gigantic sentence.

.

Oct 16, 2018

"In the mood for Love" directed by Kar-Wai Wong


ஒரு படத்தின் ஷுட்டிங் பீகிங்கில் நடந்து கொண்டிருக்கிறது. அதன் ஸ்க்ரிப்ட் தரப்பட வேண்டும் என சீன அரசு கேட்கிறார்கள். டைரக்டர் படமெடுக்க ஸ்க்ரிப்ட் உபயோகப்படுத்துபவரல்ல. அதாவது ஸ்க்ரிப்ட் கிடையாது. அதனால் வேறு வழியில்லாமல் பீகிங்கில் இருந்து ஷூட்டிங் விலக்கிக்கொள்ளப்பட்டது.
கேன்ஸ் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட வேண்டிய ஒரு வாரம் முன் கூட ஷூட்டிங் முடிந்திருக்கவில்லை. அவ்வளவு நெருக்கடியில் படத்தை முடிக்க வேண்டியிருந்திருக்கிறது.
“In the mood for love" என்ற ஹாங்காங் படம். 21ம் நூற்றாண்டில் பி.பி.சியின் 100 மிகச் சிறந்த படங்களில் 2வது ரேங்கில் இருக்கிறது.
சாவதற்கு முன் பார்த்து விட வேண்டிய ஆயிரம் படங்கள் என்பதான லிஸ்ட்டில் கூட இருக்கிறது.

கார்-வாய் வாங் இயக்கியிருக்கிறார்.
He remembers those vanished years. As though looking through a dusty window pane, the past is something he could see, but not touch. And everything he sees is blurred and indistinct.
நேற்று கூத்துப்பட்டறையில் பேராசிரியர் டாக்டர் சி.ரவீந்திரன் அவர்கள் வழி காட்டுதலோடு திரையிடப்பட்டது.
கல்யாணமான ஒரு பெண் ஒரு கல்யாணமான ஆணுடன் உறவு கொள்ள நேர்வது என்பது நான்கு பேர் சம்பந்தப்பட்டது.

மன உளைச்சலுக்குள்ளாகும் அவளுடைய கணவனும், அவனுடைய மனைவியும் தான் இதில் முக்கிய பாத்திரங்கள்.
 His wife and her husband are having an affair. 
"For us to do the same thing," they agree, "would mean we are no better than they are." 

இவர்கள் சந்திப்பில் கண்ணியம் காக்கப்படுகிறது. பழி வாங்கும் விதமாக இவர்கள் தங்களுக்குள் காதல் கொண்டு விடாமல், உடல் சம்பந்தம் ஏற்பட்டு விடாமல் தவிர்க்கிறார்கள்.
It is a restless moment. She has kept her head lowered... to give him a chance to come closer. But he could not, for lack of courage. She turns and walks away.
முக்கிய கதாபாத்திரங்களின் ரகசிய extra - marital relationshipல் இருக்கும் அந்த life partners படத்தில் காட்டப்படுவதில்லை.
ஒரு உரையாடலில் வருவது : In the old days, if someone had a secret they didn't want to share... They went up a mountain, found a tree, carved a hole in it, and whispered the secret into the hole. Then they covered it with mud. And leave the secret there forever.

Oct 14, 2018

படிமம்


ஆல்பர் காம்யு இளமையில் விதவையாகி விட்ட தன் அம்மாவுக்கு கணவர் பற்றிய நினைவு காலத்தால் மிஞ்சியிருக்காதது பற்றிய ஒரு உவமானமாக
” காட்டுத்தீயில் எரிந்து போன பட்டாம்பூச்சியின் சிறகின் சாம்பலைப்போல” என்கிறார் ‘முதல் மனிதன்’ நாவலில்.
அலெசாண்ட்ரோ பாரிக்கோவின் ‘ பட்டு’ நாவலில் காட்சி.
ஆகாயத்தில் ஏராளமான பறவைகள்.
நீல நிறத்தில் சிறகுகள் அகலமான, ஏராளமான பறவைகளால் வானம் கீறப்பட்டிருந்தது. சிறகுகளால் ஆகாயத்தையே கிழித்து ஒழித்து விட ஆசைப்பட்டவை போல அந்த பறவைகள் உயரே மேலும் கீழும் பறந்து கொண்டிருந்தன.
ஜான் பான்வில் நாவல் ’கடல்’
கடலின் சின்ன சின்ன அலைகள் உயிரோடு வந்து, மிகப் பழங்காலத்தில் நிகழ்ந்த ஒரு பெரும் அழிவினைக்குறித்து சுவாரசியத்துடன் கள்ளக்குரலில் என்னிடம் பேசுகின்றன. அது ட்ராய் நகர வீழ்ச்சி பற்றியா, அட்லாண்டிஸ் புதைந்தது பற்றியா என்பது காதில் தெளிவாக கேட்கவில்லை.

Oct 12, 2018

’ராஜநாயஹம் நடிப்பு’ பற்றி மருதன் பசுபதி


இந்த அக்டோபர் மாத ”அயல்சினிமா” இதழில் ’அஜ்ஜி’ மராட்டிய படம் பற்றி மருதன் பசுபதி எழுதியிருக்கிறார்.

அந்த கட்டுரையில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“ சுஷ்மா தேஷ்பாண்டேயின் உடல் மொழியை துல்லியமாக செய்யக்கூடிய வெகுசில தமிழ் நடிகர்களில் கூத்துப்பட்டறை குரு சோமசுந்தரத்தையும்
R.P.ராஜநாயஹம் அவர்களையும் சொல்லலாம்.”
சுஷ்மா தேஷ்பாண்டே நடித்து தேவஷீஸ் மகிஜா இயக்கிய படம் அஜ்ஜி.

Oct 8, 2018

குட்டி தமிழ்வாணன்


ஒரு எழுத்தாளர் பற்றி மிகையாக அந்த காலத்தில் கற்பனை கதைகள் சிறுவர்கள் மத்தியில் இருந்தது.
தமிழ்வாணனுக்கு ஒரு கண் கிடையாது. ஒரு கை கிடையாது. இப்படி.
பள்ளிக்கூட லைப்ரரிகளில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் புத்தகங்களுக்கு செம டிமாண்ட்.
சங்கர்லால் துப்பறிகிறார். அப்புறம் துப்பறியும் கதைகள் தமிழ்வாணன் துப்பறிகிறார்.

’கல்கண்டு’ தமிழ்வாணன் ஒரு pompous person.
தன்னைப்பற்றி எப்போதும் மிகப்பெரிய அளவில் பில்ட் அப் பண்ணுவார்.
எம்.ஜி.ஆர் காவல்காரன் படத்தில் நடித்ததற்கு பிறகு தொப்பியுடன் எப்போதும் பொது இடங்களுக்கு வர ஆரம்பித்தார். தொப்பி, கூலிங் க்ளாஸ் சகிதம் தான் எப்போதும் இருக்க ஆரம்பித்தார்.
கல்கண்டு பத்திரிக்கையில் தமிழ்வாணன் கேள்வி பதில்கள் பிரபலமானவை.
கேள்வி : எம்.ஜி.ஆர் இப்போது எப்படியிருக்கிறார்?

தமிழ்வாணன் பதில் : ’எம்.ஜி.ஆர் இப்போது ஒரு குட்டி தமிழ்வாணன் போல் இருக்கிறார். தமிழ்வாணன் தொப்பி வைத்திருப்பது போல அவரும் தலைக்கு ஒரு தொப்பி வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்வாணன் கறுப்பு கண்ணாடி போட்டிருப்பது போல எம்.ஜி.ஆரும் கண்ணுக்கு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் அவர் ஒரு குட்டி தமிழ்வாணன் போல மாறியிருக்கிறார்.’
Worst Arrogance. Thinking too much of oneself.
 Superiority complex.

அன்று எம்.ஜி.ஆருக்கு இருந்த பிரமாதமான அந்தஸ்து தெரிந்தும் இப்படி ஒரு பீற்றல்.
எம்.ஜி.ஆர் என்ன, எம்.ஜி.ஆர் ரசிகர்களே இதைப்பார்த்து எரிச்சல் படாமல் இருக்க முடியுமா?

 கல்கண்டு பத்திரிக்கையில் எப்போதும் எம்.ஜி.ஆர் மலையாளி, கிழவன் என்றெல்லாம் கிண்டல் செய்து கொண்டுமிருந்தார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத் தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆர் ஹாங்காங்கில் தமிழ்வாணன் சட்டையைப் பிடித்து மிரட்டி எச்சரித்த போது மிரண்டு போய்விட்டார். ‘துணிவே துணை’ என்று முழங்கியவர் கல்கண்டு ஆசிரியர்.

Oct 5, 2018

உப்பு விற்கப் போகவில்லை


உப்பு விற்கப்போகவில்லை.
7ந்தேதி அசோகமித்திரன் பற்றி பேசப்போகிறேன்.
மிக கனத்த மழை அன்று என ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.What is likely to occur.

"For me, everything becomes allegory."
- Charles Baudelaire

இதையும் மீறி அன்று இந்த நிகழ்வு நடந்தேறட்டும்.
Rain, rain go away, Come again some other day.

Worrying about the bad weather is the last refuge of monotonous,conventional persons.
When we are together, why should we care about the weather.

............
Rev. Emmanuel Dossan greets R.P.Rajanayahem

"I'd read a few of your posts in your blog even before they appeared on the fb. They are witty, sarcastic and unique in its literary style. Besides your astounding memory exhibited in the details of your writing, they are mostly biographical and autobiographical. Any biographical note always influences the other. Whenever I read your writings I cannot but recall my own past. I think all the readers have the same feel. COngrats sir"
............

Oct 4, 2018

People Advising others


சாணக்கியம் எப்படியெல்லாம் விரிகிறது. ராதாகிருஷ்ணன் பிள்ளையின் தூண்டில்.
How to write a book பெரிய விஷயமா? ஆனால் அடுத்த கொக்கி. How to make it a best seller.. இத வாங்கி படிக்க வெள்ளந்தி எழுத்தாளர்கள் எத்தனை பேரோ?
இந்த புத்தகப் பிரதிகள் எவ்வளவு பிரதி விற்றிருக்கிறதோ?

Advising other wise writers is an insult. 
கல்கண்டு தமிழ்வாணன் “நூறு வயது வரை வாழ்வது எப்படி?” என்று விளக்கமாக ஒரு புத்தகம் எழுதினார். 


தமிழ்வாணனுக்கு அப்புறம் தான் ஐம்பது வயது முடிந்தது. அதன் பின் ஐம்பத்தொரு வயதும் முடிந்து ஒரு ஆறு மாதத்தில் செத்துப்போனார். ஐம்பத்தொன்றரை வயது தான் தமிழ்வாணனுக்கு லபித்தது. 
அவர் இறந்து நாற்பத்தியொரு வருடங்கள் இப்போது ஓடி விட்டது. நூறு வயதாக இன்னும் எட்டு வருடங்கள் இருக்கிறது.

The advise you tell others is the advice you need to follow.

Sep 29, 2018

Piere Bonnard's "Nude in the bath, with a dog"


பியர் பொனார் ஓவியன். 

பாரிஸ் நகர ட்ராம் வண்டியில் இருந்து இறங்கிய ஒரு பெண் மீது உடனே மையல் கொண்டு பின் தொடர்ந்து சென்றிருக்கிறான். அவள் பிணங்களுக்காக தயாரிக்கப்படும் மலர் வளையங்களில் முத்து மணிகளை தைப்பவள்.
நெருங்கிய பழக்கத்தில் வேலையை விட்டு விலகி பொனாருடன் இணைகிறாள். அவள் தன் வயது 16 என்றும், பெயர் மார்த் து மெலினி என்றும் பொய் சொல்கிறாள். முப்பது வருடங்களுக்கு பின் அவள் பெயர் வேறு என்பதும் அவள் சந்தித்த காலத்தில் பொனார் போல 20 ஒட்டிய வயதுடையவள் தான் என்பதும் தெரிய வந்தது.
மார்த் இறப்பதற்கு பதினைந்து வருடம் முன் இருவரும் ஒரு கிராமத்தில் செட்டிலாகிறார்கள். யாருடனும் ஒட்டாத தனிமை வாழ்க்கை.
தினமும் மணிக்கணக்காக மார்த் குளியல் தொட்டியிலேயே கிடந்திருக்கிறாள் மார்த்.
அவளுடைய மரணத்திற்கு ஒரு வருடம் முன் 1941 ல் இருந்து 1946 வரை கூட இந்த ஓவியத்தை பொனார் முடித்திருக்கவில்லை. அதாவது அவள் இறந்து ஐந்து வருடங்களுக்கு பின்னும் இந்த ஓவியத்தை வரைந்து கொண்டிருந்திருக்கிறான்.

 ஓவியத்தில் அவளுடைய டாஷண்ட் நாய் படுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறது.
கடைசியாக தீட்டிக்கொண்டிருந்த அந்த குளியலறை ஓவியங்களில் கிழவி எழுபது வயது ’மார்த்’ தை முதலில் தான் சந்தித்த போது நம்பியிருந்த பதினாறு வயது பெண்ணாகவே தான் வரைந்து கொண்டிருந்திருக்கிறான்.

ஐரிஷ் எழுத்தாளர் ஜான் பான்வில் எழுதியுள்ள
“ The Sea" நாவலில் இந்த ஓவியம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்த “கடல் “ 

மான் புக்கர் பரிசு பெற்றிருக்கிறது.
Nude in the Bath, with Dog
In Nude in the Bath, with Dog, begun in 1941, a year before Marthe’s death and not completed until 1946, left end, and beneath the bath on that side, in the same force-field, the floor is pulled out of alignment too, and seems on the point of pouring away into the corner, not like she lies there, pink and mauve and gold, a goddess of the floating world, attenuated, ageless, as much dead as alive, beside her on the tiles her little brown dog, her familiar, a dachshund, I think, curled watchful on its mat or what may be a square of flaking sunlight falling from an unseen window. The narrow room that is her refuge vibrates around her, throbbing in its colours. Her feet, the left one tensed at the end of its impossibly long leg, seem to have pushed the bath out of shape and made it bulge at the a floor at all but a moving pool of dappled water. All moves here, moves in stillness, in aqueous silence. One hears a drip, a ripple a fluttering sigh. A rust-red patch in the water beside the bather’s right shoulder might be rust or old blood, even.
- John Banville in "The Sea"
...................

Sep 28, 2018

மேற்கு தொடர்ச்சி மலை, மனுசங்கடா


2015ல் சென்னைக்கு வந்த பத்து நாட்களில் வேறு வீடு பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது நானும், என் இளைய மகன் அஷ்வத் துணையுடன் என் ஸ்கூட்டரில் கோயம்பேடில் இருந்து கிளம்பி சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து வந்து திடீரென்று ஒரு சந்தில் இருந்து வெளி வந்த அந்த வினாடி மறக்கவே முடியாது. எதிரே ஏ.வி.எம் ஸ்டுடியோ.
பக்கத்து ஏவிஎம் ராஜேஷ்வரி தியேட்டரில் கூட்டம். விஜய் படம் ரிலீஸ்.
சென்னை பெரிதாக மாறி எனக்கு topography சுத்தமாக புரிந்து கொள்ள முடியவில்லை.
தினமும் நான் அலுவலகம் போல வந்து போய்க்கொண்டிருந்த ஏ.வி.எம்.ஸ்டுடியோ.
அன்றைக்கு இருந்த துக்கத்துடன், பழம் நினைவுகள் மேகமாய் என்னை மூடியது.
அதன் பின் நெற்குன்றத்தில் இருந்த போதும், ஆலப்பாக்கம் வந்து விட்ட பின்னும் எவ்வளவு தடவை அந்த ஆற்காடு ரோட்டிலும், அருணாச்சலம் ரோட்டிலும் கடந்து செல்லும் போதெல்லாம் ஏ.வி.எம்.ஸ்டுடியோவிற்குள் போய் அந்த ஞாபக அடுக்கின் நினைவுகளை மேலெலுப்பி விட வேண்டும் என்று யோசித்திருக்கிறேன்.
சென்ற ஞாயிறன்று மாலை பஸ்ஸில் இருந்து இறங்கி ஏ.வி.எம். குளோப் உருண்டை கொண்ட கேட்டில் நுழையும் போது சில பத்து வருடங்களுக்கு முன் தினம் அந்த கேட்டை நான் நெருங்கி உள் நுழையும் போதெல்லாம் கூர்க்காவால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் கொல்ட்டி பெண்கள் கூட்டம் என்னைப் பார்த்து இறைஞ்சும் குரலில் சொல்லும் வார்த்தைகள் : ’ஏமண்டி, சூட்டிங் சூடாலண்டி….. செப்பண்டி..”

இப்போது அந்த நீண்ட பாதையில் செல்கிறேன்.
ஏ.வி.எம். 'ஜி' தியேட்டர் இப்போது ‘ஜி’ஸ்டுடியோ?
நான் நினைவில் வைத்திருந்த காட்சிகளை இன்றைய சூழல் நிர்த்தாட்சண்யமாக சிதைத்து, உருமாற்றி இருக்கிறது. முழுக்க வேறு கட்டடங்கள். அபார்ட்மெண்ட்ஸ்.

ஆனால் ஏ.வி.எம் எடிட்டிங் பகுதி மட்டும் என்னை திகைக்க வைக்கும்படி மாறாமல், காலத்தின் தவிர்க்க முடியாத தீற்றல்களுடன் அப்படியே இருக்கிறது. ஆர்.ஆர் தியேட்டர் எங்கே என்று நான் பார்க்கவில்லை.

The past beats inside me like a second heart.

Really,one might almost live one's life over, if only one could make a sufficient effort of recollection.
- John Banville in his novel " The Sea"
அக்ரஹாரத்தில் கழுதை ஜான் ஆப்ரஹாமை நான் பார்த்தது இங்கே தான். பீம்சிங்கின் எடிட்டர் பால்துரை சிங்கம், லெனின், கே.ஆர் ராமலிங்கம் எடிட்டிங் ரூம்கள். அதன் முன் இப்போதும் இரண்டு பெஞ்ச்கள்.
புட்டண்ணா கனகல், (கிருஷ்ணன்) பஞ்சு இருவரும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருக்க நான் பக்கத்தில் நின்ற காட்சி.
கமல் ஹாசன், மகேந்திரன், எஸ்.பி.முத்துராமன், ஜி.என்.ரங்கராஜன் அங்கே உழன்று கொண்டிருந்த அந்த கடந்த நாட்கள்.
கண்ணதாசன் மகன் கலைவாணன் “ அழகே, அழகு. தேவதை” என்று வாய் விட்டு ஒரே பாட்டை பாடிக்கொண்டே எடிட்டிங் அறையில் என் போல அஸிஸ்டண்ட் டைரக்டராக சுழன்ற இறந்த நாட்கள்.
Nostalgia..reminiscence.. Evocation.
அந்த சுருள் படிக்கட்டில் அந்தக் காலத்தில் இயக்குனராகத் துடித்த ஒருவன் என்னை உட்கார வைத்து தன் திரைக்கதையை விவரிக்க ஆரம்பித்து, அவன் கண்ணீர் விட்டு, தேம்பிக்கூட அழுத போதும் நான் கல் நெஞ்சுடன் முகத்தை Placid ஆக வைத்திருப்பதைப் பார்த்து “ என்னங்க, கொஞ்சம் கூட என் கதையில் இன்வால்வ் ஆக மாட்டேன்றீங்களே? “ என்று முகம் சுண்டி கேட்டானே.
ரத்தவேர்வையுடன் ஜீசஸ் தவித்த போது உறங்கிக்கொண்டிருந்த சீடர்கள். Gethsemane crisis?


அங்கே பக்கத்தில் இருந்த ரொம்ப ரொம்ப சின்ன தியேட்டரில்  ‘மனுசங்கடா’ படம் பிரிவியூ.
அழையா விருந்தாளியாக சென்ற நான் படம் பார்த்தேன்.
கதை இன்றைய காலத்தில் நடப்பதாக இயக்குனர் சொன்னார். அப்படியானால் தலித் தலைவர்கள், தலித் இயக்கங்கள் கவனத்திற்கு இந்த கதை எப்படி வராமல் போயிருக்க முடியும். ’முன்னே இப்படி நடந்திருக்கலாம். இப்ப நடக்க விட மாட்டோம்’ என்று கண்ணும் கருத்துமாக இருக்கும் தலித் அரசியல் இயக்கங்கள் கவனத்தை மீறி இப்படி நடந்திருக்கிறதா? அது சாத்தியமா? உண்மை சம்பவம் தான் என்று தான் சொல்கிறார்.
தீண்டாமை என்பதை இந்த மொபைல் போன் யுகத்தில் மேல் ஜாதியினரால் இப்படி இந்த படத்தில் காட்டப்படுவது போல செயல் படுத்த முடியுமா?

புதுமைப்பித்தனின் ’புதிய நந்தன்’ 
கு.ப.ராவின் 
‘பண்ணை செங்கான்’ ‘வாழ்க்கை காட்சி’ ந.பிச்சமூர்த்தியின் ‘அடகு’ 
தி.ஜானகிராமனின் ‘எருமைப்பொங்கல்’ போன்ற சிறுகதைகள் எல்லாம் நினைவில் நிழலாடுகிறது.
ஹை கோர்ட் ஜட்ஜ்மெண்ட்டை நடைமுறைப்படுத்த விடாமல் எவ்வளவு பிரக்ஞைபூர்வமாக ஆர்.டி.ஒ, போலீஸ் துறை தடுத்து விடுகிறது. அவர்களுக்கு இருக்கும் ஒரு துருப்புச் சீட்டு “ சட்டம் ஒழுங்கு பிரச்னை.”
“Contempt of court” என்ற வார்த்தை இன்று அரசியல் தலைவர்களை மிரட்டவே பயன் படும் நிலையில் ஒரு கிராமத்து உயர் ஜாதியினரை லோக்கல் அதிகார வர்க்கம் ஒன்றும் செய்ய முடியவில்லை.
விட்டோரியா டெசிக்காவின் “பைசைக்கிள் தீவ்ஸ்” படத்தில் திருடு போகிற சைக்கிளை சுற்றி கதையென்றால் ”மனுசங்கடா”வில் அப்பாவின் பிணம். A death is the problem of survivors. An emotionally devastating event.

ஹை கோர்ட்டுக்கு கூட்டிக்கொண்டு போய், ஆர்டர் வாங்க வழி செய்து, காரில் ”சமரசம் உலாவும் இடமே, நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே” பாடலை முழுமையாக பாடும் அந்த Big Brother பின் பகுதியின் இறுக்கமான தீவிர சூழலில், அரைக்கிணறு தாண்டிய நிலையில் படத்தில் இருந்து காணாமல் போவது உறுத்துகிறது. அவருக்கு அடுத்த பல சமூக பிரச்னைகளை கவனிக்க செல்ல வேண்டியிருந்தது என்று சாதாரணமாக சொல்லி முடியுமா?
ஐம்பது லட்சம் செலவில் இருபத்து மூன்று நாட்களில் “மனுசங்கடா” படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தைப்பற்றிய தலித் தலைவர்கள், தலித் இலக்கியவாதிகளின் அபிப்ராயங்கள் முக்கியம்.
இந்த பணம் மீட்கப்பட நல்ல படம் தேடும் நல்லவர்கள் மட்டுமின்றி இன்னும் மற்றவர்களும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். 
”மேற்கு தொடர்ச்சி மலை” பார்த்தது சமீபத்திய சந்தோஷம். நெஞ்சில் மிக கனமாக உட்கார்ந்த மேற்கு தொடர்ச்சி மலை. மலையிலிருந்து இன்னும் இறங்கவே முடியவில்லை.விரிவாக எதுவுமே பேச அவசியமில்லாமல் செய்த கண்ணீர் சாம்ராஜ்ஜியம்.
………………………………………………………………..