Share

Dec 12, 2018

பெரு நஷ்டம்


உள்ளூர் அதிமுககாரன் ஒருவன். எம்.எல்.ஏ சீட்டுக்கும், கட்சியில் பெரிய பதவிக்காகவும் ஏங்கிக்கொண்டிருந்த திருவாழத்தான் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க பகீரத பிரயத்தனம் செய்தான்.
அந்த அப்பாயிண்ட்மெண்ட் ஒரு மந்திரியின் நண்பனான உள்ளூர் வக்கீல் மூலம் கிடைக்க மந்திரியை குளிப்பாட்டினான்.
கட்சித்தலைவரை வெறுங்கையுடன் போய் பார்க்க முடியுமா? அந்த நேரத்தில் நினைத்தே பார்க்கமுடியாத பெருந்தொகைக்கு தங்கம்,வெள்ளி ஜாமான்கள் உட்பட வாங்கிக்கொண்டான்.
தௌமிய பட்டரை ஸ்லோகங்கள் சொல்லி மகிழ்விக்க தன் கூடவே அழைத்துச் சென்றான். இரண்டு நிமிட நேரம் தான் ஒதுக்கப்பட்ட நேரம். தௌமிய பட்டர் சுறுசுறுப்பானவன். அதற்குள் ஸ்லோகம் எல்லாம் தௌமியன் சொல்லி முடித்தவுடன், உடனே,உடனே “இவங்கள வெளிய அனுப்பி கதவ சாத்து” என்ற அளவேயான மரியாதையை ஏற்றுக்கொண்டு அதிமுக திருவாழத்தான் ஊர் வந்து தன் கடையில் (வீட்டிலும் தான்) பெரிய போட்டோ ஃப்ரேம் செய்து மாட்டிக்கொண்டான்.
கங்கு பட்டர் வந்து “ஓய் பிரமாதங்காணும். தௌமியன் சொன்னான். அம்மா பரவசத்தில கை கூப்பி கண்ண மூடி திறக்கவேயில்லையாமே.”
கண்ண திறக்கறதுக்குள்ள தான் கழுத்த பிடிச்சி வெளிய தள்ளிட்டாங்களே.
கங்கு பட்டர் “ என்ன ஓய், இப்பல்லாம் உங்காத்துல மட்டன், சிக்கன் சமைச்சா சாப்பிடக் கூப்பிடவே மாட்டேன்றீர். நாக்கு துறு துறுன்னு மாமிச பட்சணம் சாப்பிட துடிக்கிறது ஓய். நான் போய் புரோட்டா கடையில ஒக்கார முடியுமா? எள்ளி நகையாடிடுவாளே ஓய். வர்ற ஞாயித்துக்கிழமை வரட்டுமா”
போயஸ்கார்டன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த வக்கீலே அந்த உள்ளூர் அரசியல்வாதியைப்பற்றி “இவன மாதிரி கால் (1/4) முட்டாப்பயல பாக்கவே முடியாது. அம்மாவ கௌரவப்படுத்துறானாம். பரப்பெடுத்த பய. இவ்வளவு செலவு செய்யணுமா?” என்று கமெண்ட் அடித்தான்.
பெருந்தொகை செலவழித்து விட்டதால் கட்சி மரியாதை இன்னேரம் கிடைச்சிருக்கணுமே என்று அந்த உள்ளூர் அதிமுக கார திருவாழத்தான், சபாஷ் மீனா பட காமெடி மாதிரி இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே என்று நாக்க தொங்கப்போட்டு தவிச்சி தக்காளி வித்து ஒன்னும் நடக்கவில்லை. எம்.எல்.ஏ வாகவும் இல்லை. கட்சி பெரிய பதவியும் கிடைக்கவேயில்லை.
ஊர அடிச்சி ஒலையில போட்டு, கடன் தொல்லை தாங்க முடியாமல் கடையை மூடி விட்டு தலை மறைவான திருவாழத்தானுக்கு சதுர கிரி சுந்தர மஹாலிங்கம் கோவிலுக்கு போய் உண்ட கட்டி மட்டும் சாப்பிட நிறைய கிடைத்தது. தலையில ஓத்த விதின்னு சலிச்சிக்கிட்டான்.
கங்குவும் தௌமியனும் பெரிய வைஷ்ணவ கோவிலில் பிசியான பட்டர்கள்.
அயக்ரீவர் சன்னதிக்கு போனால், கல்விக்கான துடியான தெய்வம் இது தான். ’குழந்தைகள் படிப்புக்கு பிரார்த்திச்சிக்கோங்க.’ என்று தௌமியன் கேன்வாஸ் செய்வான். தட்டில வசூல் கொட்டனுமே. சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு போனா கங்கு பட்டர் “சீர்த்த முலை பற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பசுக்கள்” என்று தட்டை நீட்டுவான்.
கங்குவும் தௌமியனும் ஓய்ந்த நேரத்தில் புது பிசினஸ் பற்றி ஆலோசனையில். கூடவே ராகவய்யங்கார்.
தௌமியன் : நான் எப்பவும் அதிகாலையில எந்திரிச்சிடுவன். குயில் கூவுறச்ச. தெரியுமோல்லியோ. அதி காலை குயில் கூவுற சத்தம் ஏழேழு லோகத்திலும் கேக்கும்.
பிரமாதமான டவர் இருக்கும்போல என்று ராகவன் நினைத்துக்கொண்டிருக்கும் போதே
கங்கு : டேய் தௌமி, ராகவனோட ஒன்னரை செண்டு எடம் பரந்தாமன் புரத்தில இருக்கோல்லியோ. அந்த இடத்தில ஒரு சின்னக்கோவில கட்டணும்னு சொல்லிண்டே இருக்கான்.
தௌமியன் : சின்னதா சிலாக்கியமா ஒரு சுவர், இப்போதைக்கு மேல கூரை போட்டுண்டுடலாம். நல்ல விக்ரஹம் பிரதிஷ்டை பண்ணிடலாம். டேய் ராகவா அந்த எடத்த மட்டும் என் பேருல எழுதிக்கொடுத்துடு. கோவில நான் பாத்துண்டறேன். கங்குவுக்கு பார்ட் டைம்.
தௌமியன் தோல் இருக்க சொள முழுங்கி. போரெல்லாம் பொரி பொறுக்கி.
ராகவன் துண்ட காணோம், துணியக்காணோம் என்று தலை தெறிக்க ஓடியே போய் விட்டான்.
கங்கு: காரியத்த கெடுத்துட்டியேடா தௌமி, நாம பட்டர்னால நம்ம கோவில் தானேடா. வெண்ண தெரண்டு வரும் போது தாழிய ஒடச்சிட்டியடா..தன்னுடைமை வெறிய இப்படி வெளிப்படயா சொல்லலாமாடா மட்டி.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.