Share

Jul 30, 2022

எம்.ஜி.ஆரும், க.நா.சு.வும், சி.சு.செல்லப்பாவும்

"எம். ஜி. ஆரைப் பற்றி உனக்கு தெரியாது. 
அவன் பெரியவன். 
க. நா.சுவை விடப் பெரியவன். " 

- சி. சு. செல்லப்பா 
 இப்படி சுந்தர ராமசாமியிடம் 
சொல்லியிருக்கிறார் 

சி.சு.செல்லப்பா என்றாலே அவருடைய கோபம், பிடிவாத குணம் தான் உடனே நினைவுக்கு வரும். சிட்டி மகன் விஸ்வேஸ்வரம் என்னிடம் சொன்ன ஒரு விஷயம். சிட்டியை சந்திக்க செல்லப்பா வந்தால் கொஞ்ச நேரத்தில் இருவருக்கும் சண்டை வந்து விடும். ’போடா அறிவு கெட்டவனே, உனக்கு ஒன்னும் தெரியாது’ என்று செல்லப்பா
 கோபித்துக் கொண்டு கிளம்பி விடுவாராம்!

செல்லப்பா தான் தனக்கு ரிஷிமூலம், 
’எழுத்து’ பத்திரிக்கை தான் தன் நதிமூலம் 
என்றே அன்றும் இன்றும்
 அசைக்க முடியாத நம்பிக்கை 
கொண்டிருப்பவர் ந.முத்துசாமி. 
’எழுத்து’ பள்ளிக்கே ’கூத்துப்பட்டறை’
  நாடக செயல்பாடுகளை
 பெருமிதத்துடன் சமர்ப்பிப்பவர். 
செல்லப்பாவின் கோபம்
 இவரையும் தீண்டியிருக்கிறது.

 இலக்கிய சிந்தனை ஆண்டு விழாவொன்றில் கலந்து கொண்ட
 அன்றைய அமெரிக்க கான்சல் ஜெனரல் ஃப்ராங்க்ளின்
 தமிழ் மொழியில் சிறுகதை பற்றிய அபிப்ராயமாக ‘ முத்து சாமி ஸ்கூல்’ என்று சொல்லியிருக்கிறார். ‘INDIVIDUAL CHOICE’ என்பது
 எவருக்குமே உள்ள உரிமை. 
முத்துசாமியை தூக்கிப்பிடித்து 
ஃப்ராங்க்ளின் தன் அழுத்தமான கருத்தை 
அன்று வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதற்குப் பிறகு சில நாட்கள் கழித்து செல்லப்பாவை சந்திக்க 
அவருடைய வீட்டிற்குச்சென்ற முத்துசாமி அவமானப்பட நேர்ந்திருக்கிறது. 
தான் படிக்கக்கொடுத்திருந்த
 சில நல்ல புத்தகங்கள்
 தன் மீது செல்லப்பாவால் 
ஆக்ரோஷமாக, ஆவேசமாக 
தூக்கி எறியப்பட்டதைப்பார்த்து 
அதிர்ந்து போய் விட்டார். 

 சுந்தர ராமசாமியின் நினைவோடை சி.சு.செல்லப்பா பற்றி படிக்கும்போது அவர் சு.ரா.வின் படைப்புகளை நிராகரித்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அப்படிப்பட்ட செல்லப்பாவிடம் சுந்தர ராமசாமி எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்திருக்கிறார்! தன்னுடைய முன்னோர்களில் ஒருவராக எப்போதும் சி.சு.செல்லப்பாவை கனப்படுத்தியவர்.

சுந்தர ராமசாமி சொல்கிறார்:
’எழுத்து’ பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது அவர் கையில் ஒரு நயாபைசா கூடக் கிடையாது. 
அவர் மனைவியின் நகைகளை அடகு வைத்துப் பத்திரிக்கையைத் தொடங்கினார். 
அவரது மனைவிக்கு உள்ளூர வருத்தம். 
ஏதோ கொஞ்சம் நகைகள் தான் இருந்தன. அதையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார் என்று. அவர் வெளியே கொண்டு போன சாமான்கள் திரும்பி வீட்டுக்கு வந்ததாகச் 
சரித்திரமே கிடையாது.
 ‘ சார் இப்படிச் செய்யனுமா. நகைகளை அடகு வைத்து பத்திரிக்கை நடத்த வேண்டுமா’ என்று கேட்டதற்கு, 'அடகு தானே வச்சிருக்கேன். பணத்தைக் கொடுத்து மீட்டு விடலாமே’ என்பார்.

 ’அப்படி முடியலைன்னா நகை கையை விட்டுப் போயிடுமே’ என்றேன். 
அதுக்கு அவர் ‘இந்த ’எழுத்து’ தொடர்ந்து 
நடந்தாக வேண்டும். நீ இப்போ 
ஒரு ஐயாயிரம் ரூபாய் தாயேன். 
அந்த நகைகளை மீட்டு 
அவளிடம் தந்து விடுகிறேன்.’ என்றார். 

ஆனால் ஒரு விஷயம். நான் ரூபாய் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ள மாட்டார். அநியாயமான சுயகௌரவம் அவருக்கு உண்டு. நாம் வறுமையில் வாடிச் செத்துப்போனாலும் போகலாம்;அடுத்தவரிடம் இருந்து எதையும் பெற்றுக்கொள்ளக்கூடாது என்பதில் அபாரமான வைராக்கியம் இருந்தது.
பின்னால் பல பரிசுகளை அவர் வாங்க மறுத்தார். தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலிருந்து பரிசுத்தொகை தந்தபோது அதை மறுத்து விட்டார். ’விளக்கு’ பரிசை அவர் மறுத்து விடுவாரோ என்று பயந்தார்கள். அவர் பரிசுப்பணமாக ஏற்க மறுத்து 'என் புத்தகங்களை வேண்டுமானால் வெளியிடுங்கள்' என்றார். அதனால் புத்தகத்தை அச்சேற்ற உதவினார்கள். 
ஒரு ஆள் நமக்குப் பணத்தைக் கொடுக்க முன் வருகிறார் என்றால் அதை ஏற்றுக்கொள்வதை அகௌரவமாக அவர் நினைத்தார்.’

எம்.ஜி.ஆர் மீது அவர் தி.மு.கவில் இருந்த காலத்திலேயே  சி.சு.செல்லப்பாவுக்கு 
மிகுந்த அபிமானம். 
சுந்தர ராமசாமிக்கு இந்த அபிமானத்திற்கு காரணம் எம்.ஜி.ஆர் இருந்த கட்சி
 எதுவாக இருந்த போதிலும் 
அவர் மனதில் இருந்ததெல்லாம்
 காந்தி, நேரு, காமராஜர் இவர்கள் தான். 
அதே காரணத்தால் தான் செல்லப்பாவுக்கும் எம்.ஜி.ஆரை பிடித்திருக்கிறது
 என்று தோன்றுகிறது. 

வாக்கு வாதம் முற்றி செல்லப்பா பிடிவாதமாக
 “ எம்.ஜி.ஆரைப் பற்றி உனக்குத் தெரியாது. 
அவன் பெரியவன். க.நா.சு வை விடப் பெரியவன்” 
என்று சொல்லியிருக்கிறார். 

எம்.ஜி.ஆருக்கும் க.நா.சுவுக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு அவர்களை ஒப்பிடணும்? எம்.ஜி.ஆரை ஆதரிப்பதன் மூலம் க.நா.சுவின் பலத்தைக் குறைத்து விடமுடியுமா என்ன?

சி.சு.செல்லப்பாவிற்கு க.நா.சு. மேல் ஒரு obsession இருந்தது. எப்போதும் க.நா.சு வைத்திட்டிக்கொண்டே தான் இருப்பார். க.நா.சு. உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய குற்றவாளி என்ற அளவில் சி.சு.செல்லப்பா அபிப்ராயப்படுவார். க.நா.சு.,சி.சு.செ.இருவருக்கும் இலக்கிய நோக்கு வேறு பட்டது. இலக்கியம் பற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாடு, விமர்சனம் பற்றிய எதிர் மறை நிலை செல்லப்பாவை  க. நா.சு மீது கடும் துவேசம், வன்மம் என்ற அளவிற்கு அதீதமாக பாதித்தது. இது கூட கிராமியனின் ' இலக்கியம் வாழ்க்கைக்கு விரோதமானது' என்ற கோட்பாட்டை வலுப்படுத்தவே செய்கிறது. அது எந்த அளவிற்கு வினோதமாக சுந்தர ராமசாமியுடனான வாக்குவாதத்தில் இலக்கியஸ்னாப்ராப்தியே இல்லாத எம்,ஜி.ஆர்  க.நா.சு வை விட பெரியவன் என்று சொல்லுமளவிற்கு செல்லப்பாவை  ஏதோ பள்ளிக்கூட சிறுவன் போல மாற்றியிருக்கிறது பாருங்கள். 
இந்த வாக்குவாதம் 1960களில் நடந்திருக்கிறது!

செல்லப்பா உடை பற்றி “ அவர் வேஷ்டியைச் சலவை செய்து கொள்ளாமல் துவைத்து துவைத்துப் பழுப்பேறிப் போயிருக்கும்”

அழகிரிசாமி நினைவோடையில் ’நான் சொன்ன மாதிரியே செல்லப்பாவைப் பற்றி அழகிரிசாமியும் சொல்லியிருக்கிறார்.  ”செல்லப்பா சட்டையையும் வேஷ்டியையும் ஆறு மாதத்திற்கு ஒரு தடவையாவது சலவை செய்யக்கூடாதா? “ என்று வருத்தப்பட்டிருக்கிறார்’ என்கிறார் சுந்தர ராமசாமி.

அந்த அளவுக்கு உடை விஷயத்தில் எளிமையாக இருந்தவர் சி.சு.செல்லப்பா எனத் தெரிய வருகிறது.

1960களில் இப்படி இருந்த வத்லகுண்டு சி.சு.செல்லப்பா 1935 கால கட்டத்தில் எப்படியிருந்திருக்கிறார்!

குண்டூசி கோபால் ’ஜெயபாரதி’ பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டிருந்த போது நடந்த விஷயம்.
’பி.எஸ்.ஆர்.கோபாலின் குண்டூசி’ நூலில் வாமனன் குறிப்பிடுகிறார்:
‘ஒரு நாள் தஞ்சாவூர் மைனர் போல் கட்டுக்குடுமி, பட்டுச்சொக்காய், கைவிரல்களில் மோதிரங்கள், கைக்கடிகாரம், கழுத்தில் தங்கச்சங்கிலி, 
ஜரிகை அங்கவஸ்திரம், 
மயில்கண் ஜரிகை வேஷ்டி- 
இந்த அலங்காரங்களுடன் ஒருவர் புதிதாக 
உதவி ஆசிரியர் வேலைக்கு வந்து சேர்ந்தார். 
கோபாலின் எதிரே வந்து அமர்ந்தார். 
உங்கள் பெயரென்ன என்று
 விசாரித்தார் கோபால். 
’சி.சு.செல்லப்பா’ என்று பதில் வந்தது. 
பின்னாள் ‘எழுத்து’ ஆசிரியரின் அந்நாள் 
மெருகுடன் கூடிய புது மாப்பிள்ளை வேடம் அது!’

..................................................................

மீள்

Jul 28, 2022

இளைய ஜனாதிபதி

இந்தியாவின் ஜனாதிபதியாகியிருக்கும் 
திரௌபதி முர்மு அவர்கள் தான் இதுவரை வந்துள்ள ஜனாதிபதிகளில் வயதில் இளையவர் என்று சொல்லப்படுகிறது. 64 வயது.

1969ல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளர் 56 வயது சஞ்சீவரெட்டி அப்போது ஜெயித்திருந்தால் அவரே இப்போதும் இளைய வயதில் ஜனாதிபதியானவர் என்ற பெருமையை தக்க வைத்திருப்பார். 

ஜனாதிபதி தேர்தலுக்கு முந்தைய நாள் இரவில் பிரதமர் இந்திரா காந்தி 'Vote according to conscience'  என்று சொல்லியதால் அப்போது குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ரெட்டி தோற்க நேரிட்டது.

ரொம்ப வித்தியாசமான விசித்திரமான ஜனாதிபதி தேர்தலாக இந்திய சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது.

எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் தேஷ்முக்.

சுயேட்சை வேட்பாளர் வெங்கட்ட வராக கிரி வெற்றி பெற்று ஜனாதிபதியானார். V.V. Giri

1969 ஜனாதிபதி தேர்தலில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.

அப்போது நடந்த அரசியல் சுவாரசியங்களை வைத்து இந்திராகாந்தியை கதாநாயகியாக வோ அல்லது வில்லியாகவோ விவரித்து பிரமாதமாக நாவலே எழுதிப்பார்க்கலாம்

அப்புறம் சஞ்சீவரெட்டி 1977ல் ஜனாதிபதியான போது அவருக்கு  இன்றைய ஜனாதிபதி போல 64 வயது தான்.

நீலம் சஞ்சீவ ரெட்டியும் 64 வயதில் ஜனாதிபதி ஆனவர் தான்.

Jul 21, 2022

உளவுத்துறை ஐ.ஜி. டாக்டர் செந்தில் வேலன்

உளவுத்துறை ஐ.ஜி செந்தில் வேலன் 

செந்தில் வேலன் சகோதரியின் பூப்பு நீராட்டு விழாவுக்கு
 என் எதிர்கால மாமனாருடன் நான் சென்ற போது செந்தில்வேலனின் அப்பா அர்ஜுனன் ரொம்பவும் நெகிழ்ந்து சொன்னார்.“ நீங்க ரொம்ப மக்னானிமஸ்! நான் அழைப்பிதழ் தராமலே எங்க வீட்டு விசேஷத்துக்கு வந்திட்டீங்க.தேங்க்ஸ்.’’ மீண்டும் இதையே சொன்னார்.
அப்போது செந்தில் வேலன் சிறுவன்.

என் திருமணப்பத்திரிக்கையை கொடுக்க கேப்ரன் ஹால் எதிரே இருந்த அர்ஜுனன் வீட்டிற்கு சென்ற போது பத்திரிக்கையை ஓடி வந்து செந்தில் வேலன் வாங்கியது இப்போதும் கண்ணுக்குள் இருக்கிறது.

பட்டாளம் என்று எங்களால் அன்போடு அழைக்கப்படும் சிவசங்கரன் (செந்தில் வேலனின் அப்பாவின் உடன் பிறந்த சகோதரர் சிவசங்கரன் என் மாமனாரின் சகோதரி கணவர்.) இறந்த வீட்டில் நடந்த நிகழ்வு. என் மூத்த மகன் கீர்த்தி அப்போது இரண்டு வயது குழந்தை. எதற்கோ கோபப்பட்டு அழுகையை அடக்கமுடியாமல் அழகாக உதட்டைப்பிதுக்கினான். அதை ரசித்து செந்தில் வேலனின் சகோதரிகள்  கீர்த்தியின் அந்த முகபாவத்தை ரசித்தபோது அங்கே சிரித்துக்கொண்டு நின்ற சிறுவன் செந்தில் வேலன்.

செந்தில் வேலனின் அப்பா அர்ஜுனன் மதுரையில் பிரபலமான பொது ஜன தொடர்பு அதிகாரி. அடிக்கடி பத்திரிக்கையில் அவர் புகைப்படம் வரும். எப்போதும் ஒயிட் பேண்ட்,ஒயிட் சர்ட்டில் ஸ்மார்ட்டாக இருப்பார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வந்திருந்த அர்ஜுனன் உடல் நலக்குறைவால் அவருடைய மாப்பிள்ளை குணசேகரன் மனைவியின் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்த போது அவரைப் போய் பார்த்து விட்டு அவருக்கு படிப்பதற்கு இந்தியா டுடே மாகசின் கொடுத்து விட்டு வந்தேன்.

குணசேகரனின் டாக்டர் மனைவியாரின் ஆஸ்பத்திரியில் தான் என் மகன்கள் கீர்த்தி,அஷ்வத் இருவருமே பிறந்தார்கள்!
குணசேகரன் ஸ்ரீவில்லிபுத்தூரில் நான் இருந்த போது என்னுடன் நட்போடு பழகிய நல்ல உறவினர்.

பட்டாளம் சிவசங்கரன் மறைந்த சில வருடங்களில் மதுரையில் செந்தில் வேலனின் அப்பா அர்ஜுனன் திடீர் மறைவு எல்லோருக்குமே அதிர்ச்சி. அப்பாவை இழந்த பிள்ளைகளை ஆசிரியையான அவருடைய அம்மா  வளர்த்து ஆளாக்கினார்.

செந்தில் வேலன் எம்.பி.பி.எஸ் படித்ததும் பின் ஐ.ஏ.எஸ் பாஸ் செய்ததும் ஐ.பி.எஸ் தான் வேண்டும் என்று தேர்ந்தெடுத்ததும் எனக்கு செவிவழிச்செய்தி.
காவல் துறை சாதனைகள் பத்திரிக்கையில் பார்க்க கிடைத்தன. அவருடைய நேர்மை ரொம்ப பெருமையாயிருக்கிறது.
தூத்துக்குடியில் செந்தில் வேலன் காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த போது என் சொந்த அத்தை மகனின் மகன் திருமணம் அங்கே நடந்தது. அத்தை மகனின் மகளின் கணவர் செந்தில் வேலனின் மனைவியின் சகோதரர்.

திருமணத்திற்கு வந்திருந்த செந்தில் வேலனை என் அத்தை மகன் சீனிக்குமார் அறிமுகம் செய்த போது அந்த எஸ்.பி.யின் தாயார் என் மனைவியைப்பார்த்து வியந்து சொன்னார். “ சின்ன மலர் எங்களுக்கு எப்போதுமே சின்ன பொண்ணு தான். சின்ன மலர ஒரு பொம்பளயாவே நினைச்சிப்பாக்க முடியல!சின்ன மலருக்குமா வயசாகுது!”
என் மனைவி மலர்விழியை உறவினர்கள் அனைவருமே சின்ன மலர் என்று தான் சொல்வார்கள்.

செந்தில் வேலனின் மாமனார் போஸ் நல்ல கான்வர்சேஸனலிஸ்ட்.

என் தகப்பனார் மறைந்த போது செந்தில் வேலனின்  மாமனாரும் மாமியாரும் துக்கம் விசாரிக்க வந்திருந்தார்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=2771091533104295&id=100006104256328

https://www.facebook.com/100006104256328/posts/2771611203052328/

https://m.facebook.com/story.php?story_fbid=3364697370410372&id=100006104256328

Jul 12, 2022

மாயவநாதனும் மலேஷியா வாசுதேவனும்

'டெல்லி டூ மெட்ராஸ்'னு
படம்.
தமிழ் திரையில் ஸ்ரீவித்யா 'கதாநாயகி முழு அந்தஸ்தில்' நடித்த முதல் படம் என்று சொல்லலாம்.
ஜெய்சங்கர் கதாநாயகன்.

பாலச்சந்தரின் நான்கு சுவர்கள், நூற்றுக்கு நூறு படங்களுக்கு அடுத்த வருடம் வந்த 'டெல்லி டூ மெட்ராஸ்' இயக்குநர் I.N.மூர்த்தி. இசை V. குமார்.

படத்தின் பாடல்கள் எழுதியவர் கவிஞர் மாயவநாதன்.
இந்த படத்தின் டைட்டிலில் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

படத்தில் ஒரு உதவி இயக்குநர்
 எம். ஆர். கணேசன்.
பின்னர் இவர் 
நடிகர் அம்ஜத்குமார்.

இந்த அம்ஜத் குமார் சிபாரிசில் தான் மலேஷியா வாசுதேவன் 
முதல் முதலாக இந்த படத்தில் பின்னணி பாடகராக முதல் வாய்ப்பு பெற்றார்.
" பாலு விக்கிற பத்துமா, 
ஒன் பாலு ரொம்ப சுத்தமா?"


டைட்டிலில் 'மலேசியா வாசுதேவ்'.

'டெல்லி டூ மெட்ராஸ்' சாதாரண படம்.
கவனம் பெற வேண்டிய ஒன்றல்ல.
ஆனால் இதிலும் கவனிக்க அர்த்தப்பூர்வமாக, விஷேசமாக எவ்வளவு விஷயங்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=3354745338072242&id=100006104256328

http://rprajanayahem.blogspot.com/2012/08/blog-post_2081.html?m=0

Jul 7, 2022

தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன் பற்றி இயக்குநர் மகேந்திரன்

"என்னுடைய படங்களில், 
எனது அணுகுமுறை இயல்பாக, யதார்த்தமாக நான் கற்றுக்கொண்டதே தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன் இருவரையும் படித்துத் தான்.
 இவர்களின் எழுத்தில் இட்டுக்கட்டும்  சமாச்சாரமே இருக்காது. 
அவர்கள் சந்தித்த மனிதர்கள், சம்பவங்கள், 
உற்றுக்கவனித்த
 சுற்றுச் 
சூழ்நிலைகள், 
அவர்களில் - அவைகளில்... 
அந்த எழுத்தாளர்கள் கண்ட விதவிதமான உணர்வுகள் - அவற்றை அவர்கள் நாவல்கள், சிறுகதைகள் மூலம் சொல்லும்போது எனக்கு நாவல் படிக்கும் உணர்வு ஏற்படாது. படம் பார்ப்பது போலவே இருக்கும்.

 நாமெல்லாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களையும்,
 சுற்றி நடக்கும் சம்பவங்களையும் கொஞ்சம் விழித்துப் பார்த்து, ரசிக்கும் வித்தையை தி.ஜானகிராமன் நாவல்களைப் படித்தால் புரியும்."

- இயக்குநர் மகேந்திரன்

'வண்ணத்திரை'
சினிமா பத்திரிகையில்
1991 பிப்ரவரி முதல் வார இதழில்

காளி


ஒரு அசுரனைக் கொல்றதுக்கு முன்னாலே
"இருடா, கொஞ்சம் மதுவைச் சாப்பிட்டுட்டு வரேன்"னு சாப்பிட்டு, அப்புறம் அந்த அசுரனை வீழ்த்தினாளாம் பராசக்தி. கெட்டதுகளைக் கொல்றதுக்குக் கூட தன்னை மறக்க வேண்டியிருக்கு. இல்லெ அதுகள் மேலேயும் ஏதாவது அசட்டுக் கருணை பிறந்து வளர விட்டுவிடுமோன்னு பயந்துட்டாளோ என்னமோ தேவி...!"

- தி.ஜானகிராமன்

நளபாகம் நாவலில்

Jul 3, 2022

கோல்டன் பீச் ரிஸப்சனிஸ்ட் பெரியகுளம் சோமு




பெரியகுளம் சோமு.
வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் ரிஸப்சனிஸ்ட் ஆக இருந்தார்.


'சிகப்பு ரோஜாக்கள்' பட ஆரம்பத்தில்
 கமலுக்கு செக்ரட்டரியாக 
(ஜெயில் கேட்) காட்சியொன்றில்
  தலை காட்டியிருக்கிறார். சோமுவுக்கு டயலாக்கெல்லாம் கிடையாது.

இவருக்கு ஸ்ரீப்ரியா தயாரித்து நடித்த "நீயா?" படத்தில் முக்கியத்துவம் இருந்தது. படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகளில் தான் வருவார்.

படத்தில் கமல் கதாநாயகன்.
விஜயகுமார், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ் இவர்களுடன் இந்த பெரியகுளம் சோமுவும் கமலின் நண்பராக வருவார். கதாபாத்திரம் பெயர் சலீம்.


இந்த ஆறு பேரும் கை நீட்டி நீயா என்பதாக கேட்கிற போஸில் 'நீயா?' பட போஸ்டர்.

தினத்தந்தி பத்திரிகையில் முழு பக்க விளம்பரம் வெளியிடப்பட்டது.

ஆண் இச்சாதாரி பாம்பை பதற்றத்தில் பெரியகுளம் சோமு தான் சுட்டுக்கொன்று விடுவதாக கதை.

முத்துராமனுக்கு கூட ஜெய்கணேஷுடன் மோதும் சண்டை காட்சி உண்டு.

டைட்டிலில் நடித்த நட்சத்திரங்களுக்கு நன்றி என்று போட்டு நடிகர்கள் பெயர் போடுவதை தவிர்த்து விட்டார்கள்.
பிஸியான துரை தான்
 'நீயா?'இயக்குநர்.

நடிகராக ஸ்ரீகுமார் என்ற பெயரில் 
பெரிய குளம் சோமு இருந்தார்.

பொன்னகரம் படத்திலும் ஸ்ரீகுமார் என்ற பெயரில் பெரியகுளம் சோமு நடித்தார்.
பொன்னகரம் ஷோபா, சரத்பாபு நடித்த படம். ஷோபாவின் மறைவுக்குப் பின் வெளியாகியிருந்தது.


நான் உதவி இயக்குனராக பணி புரிந்த படத்தின் பாடல் காட்சிக்காக வி.ஜீ.பி. கோல்டன் பீச் போன போது அங்கே என்.டி.ராமாராவ் ஸ்ரீதேவியுடன் ஆடிப்பாடும் டூயட் காட்சி தாசரி நாராயணராவ் இயக்கத்தில் சுறுசுறுப்பாக
நடந்து கொண்டிருந்தது. 
தெலுங்கு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் சலீம்.

வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் 'நீயா?' போஸ்டர் நாயகன் பெரிய குளம் சோமு அப்போதும் கூட
 ரிஸப்சனிஸ்ட் ஆகத்தான் இருந்தார்.

ஷுட்டிங் ப்ரேக்கில் அவரிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.