Share

Jul 30, 2022

எம்.ஜி.ஆரும், க.நா.சு.வும், சி.சு.செல்லப்பாவும்

"எம். ஜி. ஆரைப் பற்றி உனக்கு தெரியாது. 
அவன் பெரியவன். 
க. நா.சுவை விடப் பெரியவன். " 

- சி. சு. செல்லப்பா 
 இப்படி சுந்தர ராமசாமியிடம் 
சொல்லியிருக்கிறார் 

சி.சு.செல்லப்பா என்றாலே அவருடைய கோபம், பிடிவாத குணம் தான் உடனே நினைவுக்கு வரும். சிட்டி மகன் விஸ்வேஸ்வரம் என்னிடம் சொன்ன ஒரு விஷயம். சிட்டியை சந்திக்க செல்லப்பா வந்தால் கொஞ்ச நேரத்தில் இருவருக்கும் சண்டை வந்து விடும். ’போடா அறிவு கெட்டவனே, உனக்கு ஒன்னும் தெரியாது’ என்று செல்லப்பா
 கோபித்துக் கொண்டு கிளம்பி விடுவாராம்!

செல்லப்பா தான் தனக்கு ரிஷிமூலம், 
’எழுத்து’ பத்திரிக்கை தான் தன் நதிமூலம் 
என்றே அன்றும் இன்றும்
 அசைக்க முடியாத நம்பிக்கை 
கொண்டிருப்பவர் ந.முத்துசாமி. 
’எழுத்து’ பள்ளிக்கே ’கூத்துப்பட்டறை’
  நாடக செயல்பாடுகளை
 பெருமிதத்துடன் சமர்ப்பிப்பவர். 
செல்லப்பாவின் கோபம்
 இவரையும் தீண்டியிருக்கிறது.

 இலக்கிய சிந்தனை ஆண்டு விழாவொன்றில் கலந்து கொண்ட
 அன்றைய அமெரிக்க கான்சல் ஜெனரல் ஃப்ராங்க்ளின்
 தமிழ் மொழியில் சிறுகதை பற்றிய அபிப்ராயமாக ‘ முத்து சாமி ஸ்கூல்’ என்று சொல்லியிருக்கிறார். ‘INDIVIDUAL CHOICE’ என்பது
 எவருக்குமே உள்ள உரிமை. 
முத்துசாமியை தூக்கிப்பிடித்து 
ஃப்ராங்க்ளின் தன் அழுத்தமான கருத்தை 
அன்று வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதற்குப் பிறகு சில நாட்கள் கழித்து செல்லப்பாவை சந்திக்க 
அவருடைய வீட்டிற்குச்சென்ற முத்துசாமி அவமானப்பட நேர்ந்திருக்கிறது. 
தான் படிக்கக்கொடுத்திருந்த
 சில நல்ல புத்தகங்கள்
 தன் மீது செல்லப்பாவால் 
ஆக்ரோஷமாக, ஆவேசமாக 
தூக்கி எறியப்பட்டதைப்பார்த்து 
அதிர்ந்து போய் விட்டார். 

 சுந்தர ராமசாமியின் நினைவோடை சி.சு.செல்லப்பா பற்றி படிக்கும்போது அவர் சு.ரா.வின் படைப்புகளை நிராகரித்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அப்படிப்பட்ட செல்லப்பாவிடம் சுந்தர ராமசாமி எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்திருக்கிறார்! தன்னுடைய முன்னோர்களில் ஒருவராக எப்போதும் சி.சு.செல்லப்பாவை கனப்படுத்தியவர்.

சுந்தர ராமசாமி சொல்கிறார்:
’எழுத்து’ பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது அவர் கையில் ஒரு நயாபைசா கூடக் கிடையாது. 
அவர் மனைவியின் நகைகளை அடகு வைத்துப் பத்திரிக்கையைத் தொடங்கினார். 
அவரது மனைவிக்கு உள்ளூர வருத்தம். 
ஏதோ கொஞ்சம் நகைகள் தான் இருந்தன. அதையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார் என்று. அவர் வெளியே கொண்டு போன சாமான்கள் திரும்பி வீட்டுக்கு வந்ததாகச் 
சரித்திரமே கிடையாது.
 ‘ சார் இப்படிச் செய்யனுமா. நகைகளை அடகு வைத்து பத்திரிக்கை நடத்த வேண்டுமா’ என்று கேட்டதற்கு, 'அடகு தானே வச்சிருக்கேன். பணத்தைக் கொடுத்து மீட்டு விடலாமே’ என்பார்.

 ’அப்படி முடியலைன்னா நகை கையை விட்டுப் போயிடுமே’ என்றேன். 
அதுக்கு அவர் ‘இந்த ’எழுத்து’ தொடர்ந்து 
நடந்தாக வேண்டும். நீ இப்போ 
ஒரு ஐயாயிரம் ரூபாய் தாயேன். 
அந்த நகைகளை மீட்டு 
அவளிடம் தந்து விடுகிறேன்.’ என்றார். 

ஆனால் ஒரு விஷயம். நான் ரூபாய் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ள மாட்டார். அநியாயமான சுயகௌரவம் அவருக்கு உண்டு. நாம் வறுமையில் வாடிச் செத்துப்போனாலும் போகலாம்;அடுத்தவரிடம் இருந்து எதையும் பெற்றுக்கொள்ளக்கூடாது என்பதில் அபாரமான வைராக்கியம் இருந்தது.
பின்னால் பல பரிசுகளை அவர் வாங்க மறுத்தார். தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலிருந்து பரிசுத்தொகை தந்தபோது அதை மறுத்து விட்டார். ’விளக்கு’ பரிசை அவர் மறுத்து விடுவாரோ என்று பயந்தார்கள். அவர் பரிசுப்பணமாக ஏற்க மறுத்து 'என் புத்தகங்களை வேண்டுமானால் வெளியிடுங்கள்' என்றார். அதனால் புத்தகத்தை அச்சேற்ற உதவினார்கள். 
ஒரு ஆள் நமக்குப் பணத்தைக் கொடுக்க முன் வருகிறார் என்றால் அதை ஏற்றுக்கொள்வதை அகௌரவமாக அவர் நினைத்தார்.’

எம்.ஜி.ஆர் மீது அவர் தி.மு.கவில் இருந்த காலத்திலேயே  சி.சு.செல்லப்பாவுக்கு 
மிகுந்த அபிமானம். 
சுந்தர ராமசாமிக்கு இந்த அபிமானத்திற்கு காரணம் எம்.ஜி.ஆர் இருந்த கட்சி
 எதுவாக இருந்த போதிலும் 
அவர் மனதில் இருந்ததெல்லாம்
 காந்தி, நேரு, காமராஜர் இவர்கள் தான். 
அதே காரணத்தால் தான் செல்லப்பாவுக்கும் எம்.ஜி.ஆரை பிடித்திருக்கிறது
 என்று தோன்றுகிறது. 

வாக்கு வாதம் முற்றி செல்லப்பா பிடிவாதமாக
 “ எம்.ஜி.ஆரைப் பற்றி உனக்குத் தெரியாது. 
அவன் பெரியவன். க.நா.சு வை விடப் பெரியவன்” 
என்று சொல்லியிருக்கிறார். 

எம்.ஜி.ஆருக்கும் க.நா.சுவுக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு அவர்களை ஒப்பிடணும்? எம்.ஜி.ஆரை ஆதரிப்பதன் மூலம் க.நா.சுவின் பலத்தைக் குறைத்து விடமுடியுமா என்ன?

சி.சு.செல்லப்பாவிற்கு க.நா.சு. மேல் ஒரு obsession இருந்தது. எப்போதும் க.நா.சு வைத்திட்டிக்கொண்டே தான் இருப்பார். க.நா.சு. உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய குற்றவாளி என்ற அளவில் சி.சு.செல்லப்பா அபிப்ராயப்படுவார். க.நா.சு.,சி.சு.செ.இருவருக்கும் இலக்கிய நோக்கு வேறு பட்டது. இலக்கியம் பற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாடு, விமர்சனம் பற்றிய எதிர் மறை நிலை செல்லப்பாவை  க. நா.சு மீது கடும் துவேசம், வன்மம் என்ற அளவிற்கு அதீதமாக பாதித்தது. இது கூட கிராமியனின் ' இலக்கியம் வாழ்க்கைக்கு விரோதமானது' என்ற கோட்பாட்டை வலுப்படுத்தவே செய்கிறது. அது எந்த அளவிற்கு வினோதமாக சுந்தர ராமசாமியுடனான வாக்குவாதத்தில் இலக்கியஸ்னாப்ராப்தியே இல்லாத எம்,ஜி.ஆர்  க.நா.சு வை விட பெரியவன் என்று சொல்லுமளவிற்கு செல்லப்பாவை  ஏதோ பள்ளிக்கூட சிறுவன் போல மாற்றியிருக்கிறது பாருங்கள். 
இந்த வாக்குவாதம் 1960களில் நடந்திருக்கிறது!

செல்லப்பா உடை பற்றி “ அவர் வேஷ்டியைச் சலவை செய்து கொள்ளாமல் துவைத்து துவைத்துப் பழுப்பேறிப் போயிருக்கும்”

அழகிரிசாமி நினைவோடையில் ’நான் சொன்ன மாதிரியே செல்லப்பாவைப் பற்றி அழகிரிசாமியும் சொல்லியிருக்கிறார்.  ”செல்லப்பா சட்டையையும் வேஷ்டியையும் ஆறு மாதத்திற்கு ஒரு தடவையாவது சலவை செய்யக்கூடாதா? “ என்று வருத்தப்பட்டிருக்கிறார்’ என்கிறார் சுந்தர ராமசாமி.

அந்த அளவுக்கு உடை விஷயத்தில் எளிமையாக இருந்தவர் சி.சு.செல்லப்பா எனத் தெரிய வருகிறது.

1960களில் இப்படி இருந்த வத்லகுண்டு சி.சு.செல்லப்பா 1935 கால கட்டத்தில் எப்படியிருந்திருக்கிறார்!

குண்டூசி கோபால் ’ஜெயபாரதி’ பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டிருந்த போது நடந்த விஷயம்.
’பி.எஸ்.ஆர்.கோபாலின் குண்டூசி’ நூலில் வாமனன் குறிப்பிடுகிறார்:
‘ஒரு நாள் தஞ்சாவூர் மைனர் போல் கட்டுக்குடுமி, பட்டுச்சொக்காய், கைவிரல்களில் மோதிரங்கள், கைக்கடிகாரம், கழுத்தில் தங்கச்சங்கிலி, 
ஜரிகை அங்கவஸ்திரம், 
மயில்கண் ஜரிகை வேஷ்டி- 
இந்த அலங்காரங்களுடன் ஒருவர் புதிதாக 
உதவி ஆசிரியர் வேலைக்கு வந்து சேர்ந்தார். 
கோபாலின் எதிரே வந்து அமர்ந்தார். 
உங்கள் பெயரென்ன என்று
 விசாரித்தார் கோபால். 
’சி.சு.செல்லப்பா’ என்று பதில் வந்தது. 
பின்னாள் ‘எழுத்து’ ஆசிரியரின் அந்நாள் 
மெருகுடன் கூடிய புது மாப்பிள்ளை வேடம் அது!’

..................................................................

மீள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.