Share

Aug 20, 2019

ராஜநாயஹம் பற்றி கவிஞர் கலாப்ரியா


கவிஞர் கலாப்ரியா:
” ராஜநாயஹம் பலதுறைகளிலும் ஆழமான வாசிப்பும், யாரும் வாழ்ந்திராத வாழ்க்கை அனுபவமும் உடையவர்.
அவர் கொண்டாடப்பட வேண்டிய கலைஞர்,
ஆவணப்புதையல் சினிமா, அரசியல் நிகழ்வுகள் பற்றிய என் சந்தேகங்களைப் பல முறை அவரிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வேன்.
இப்போதும் நான் ஈடுபட்டிருக்கும் ஒரு நாவல் முயற்சிக்கு அவரிடம் பல தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன். அந்த நாவலை அவருக்கே சமர்ப்பணம் செய்வேன்.”Aug 19, 2019

Match box criminal


தீப்பெட்டிகளில் ஒரு பண்டர்ரோல் என்று கவர்ன்மெண்ட் லேபிள் ஒட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு தீப்பெட்டியிலும்.மத்திய கலால் வரி. அந்த பண்டர்ரோல் சென் ட்ரல் எக்சைஸ் டிபார்ட்மெண்டில் தான் அது பிரிண்ட் செய்யப்பட்டு தீப்பெட்டிகளில் ஒட்ட எல்லா தீப்பெட்டி ஆஃபிஸ்களுக்கும் அனுப்பப்படும்.
அது சென்ட்ரல் எக்சைஸ் லேபிள். 
அந்த காலத்தில் சென்ட்ரல் எக்சைஸ் கண்ட்ரோலில் அனைத்து தீப்பெட்டி ஆஃபிஸ்களும் இருக்கும். சாவியையே மத்திய கலால் வரி ஆஃபிஸில் கொடுத்து வைக்கவேண்டும் என்று கூட ஒரு சட்டம் இருந்ததுண்டு.
அப்போது தமிழ்நாடு கஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ் இரண்டு டிவிசன்களாக பிரிக்கப்பட்டு மதுரை டிவிசனுக்கு கலெக்டர் எம்.எஸ்.சுப்ரமண்யம். இவர் எங்களுக்கு தூரத்து உறவினர்.
சென்னை டிவிசன் கலெக்டராக எழுத்தாளர் கௌசல்யா நாராயண்.
இவர் மோகன் குமாரமங்கலம், தோழர் பாலதண்டாயுதபாணி, கவர்னர் குர்ணாம் சிங் பயணம் செய்து பெரும் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்ததால் அகால மரணமடைந்தவர்.

Irony! அந்த நேரத்தில் கௌசல்யா நாராயண் தினமணி கதிரில் “வாழ்வைத்தேடி” என்று ஒரு தொடர் நாவல் எழுதிக்கொண்டிருந்தார்.

அந்த பயணத்தில் உயிர் பிழைத்தவர் சிவகாசி எம்.பி. ஜெயலட்சுமி.
கஸ்டம்ஸ் கலெக்டர் எம்.எஸ்.சுப்ரமண்யம் காலத்தில் தான் திருச்சி மெய்வழிச்சாலை ரெய்டு. முதல் நாள் ரெய்டில் என் பெரியப்பாவும் சவுரிப்பெருமாளும் தான் மெய்வழிச்சாலை மர்மத்தை கண்டறிந்த அதிகாரிகள். அப்புறம் கலெக்டர் எம்.எஸ்.சுப்ரமண்யமே ப்ரசன்னமானார். அந்த பரபரப்பான தங்க சுரங்க வேட்டையை இண்டியன் நியூஸ் ரெவ்யூ செய்தியாக்கிய போது அதில் பெரியப்பா இடம் பெற்றிருந்தார். இந்தியாவின் அனைத்து சினிமா தியேட்டர்களிலும் அந்த செய்திச்சுருள் ஓட்டப்பட்டது.
எம்.எஸ்.சுப்ரமண்யம் காலத்திலேயே பரபரப்பான மற்றொரு கஸ்டம்ஸ் கேஸ் கள்ள பண்டர்ரோல் கேஸ்.
கையும் களவுமாக சிக்கிய ஆள் பால்ராஜ் என்பவர்.
இந்த பால்ராஜ் பெரிய ஃப்ராட். கலெக்டரின் சொந்த ஊரிலேயே பிரபலமான குடும்பம் ஒன்றின் மூத்த மருமகன்.
அந்த மனிதன் குற்றத்தை ஒப்புக்கொண்டு ஜெயிலுக்கு போனார்.
அதில் ஒரு உண்மை டிபார்ட்மெண்ட்டில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியவில்லை. என் தகப்பனார், பெரியப்பாவுக்கும் கூட.
அந்த பண்டர்ரோல் அடிக்க உபயோபப்படுத்தப்பட்ட முத்திரை எப்படி அந்த பால்ராஜ் கைக்கு போனது என்பது பெரும் ரகசியம் ஆனது.
ஜெயிலுக்கு போன குற்றவாளியிடம் அது குறித்து எந்த தகவலும் பெற முடியவில்லை என்று வழக்கு முடிக்கப்பட வேண்டியிருந்தது. அது வெளிப்பட்டிருந்தால் டிபார்ட்மெண்டில் ஒரு அதிகாரிக்கு பெரும் இழிவும், கடும் விளைவும் ஏற்பட்டிருக்கும்.
பின்னால் பல வருடங்கள் கழித்து இந்த ஆளை நான் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. என் மாமனாரின் தீப்பெட்டி பிசினஸில் இவர் மீடியேட்டர் ஆக நுழைந்தார். வடநாட்டில் சேட்களிடம் ஆர்டர் எடுத்து என் மாமனாரின் தீப்பெட்டி ஆஃபிஸ்களுக்கு கொடுத்து அதற்கு கமிஷன் கேட்டு வந்தார். ஆர்டர் நல்ல ரேட் என்பதால் மாமா ஒப்புக்கொண்டிருந்தார்.
பால்ராஜ் தன் முதல் மனைவியை விட்டு விலகி வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். அந்த பெண்ணும் அவள் தங்கையும் என் மாமனாரின் தீப்பெட்டி ஆஃபிஸில் தீப்பெட்டி ஒட்டும் வேலை பார்த்தனர்.
கஸ்டம்ஸ் குற்றவாளி தன் கள்ள பண்டர்ரோல் கேஸ் பற்றி என்னிடம் சொன்னார்.
கலெக்டர் சுப்ரமண்யம் நேரடியாக இவரை விசாரித்த போது அந்த கள்ள பண்டர்ரோல் அச்சடிக்க அரசாங்க முத்திரை எப்படி கிடைத்தது என்று கேட்டிருக்கிறார்.
பால்ராஜ் மௌனமாய் தலை குனிந்திருக்கிறார்.
தன் கீழ் வேலை பார்க்கும் ஒரு அதிகாரி தான் என்பதில் கலெக்டருக்கு சந்தேகமில்லை. யாரோ?
அந்த முத்திரை கலெக்டரின் நேரடி பொறுப்பில் இருந்திருக்கிறது.
அவர் யார்?
கலெக்டர் மிகவும் நேர்மையானவர். கண்டிப்பானவர் தான்.
எப்போதும் ரொம்ப பெரிய இடம் இப்படி கேட்டவுடன் அந்த சூப்ரண்ட் யார் என்கிற ரகசியத்தை பால்ராஜ் உடைத்திருக்கிறார். நினைத்தே பார்க்க முடியாத பெருந்தொகை கொடுத்திருக்கிறார்.
கலெக்டருக்கு அந்த கறுப்பு ஆடு யார் என்பதை தெரிந்து கொண்ட ஆசுவாசம்.
அந்த அதிகாரியை வெளிச்சம் போட்டு காட்டாமல் கலெக்டர் வேறு மாதிரி தண்டித்திருக்கிறார். வேலையை விட்டு தூக்காமல் ஒரு மத்திய கலால் துறை தலைவர் என்ற அளவில் அந்த அதிகாரியை கூப்பிட்டு கண்டித்து பல்லு பிடுங்கிற வேலையை செய்திருக்கிறார்.
பால்ராஜ் கள்ள பண்டர்ரோல் தயாரிக்க உதவிய அதிகாரி யார் என்று என்னிடமும் சொன்னார்.
பால்ராஜ் என்னிடம் சொல்லும்போது கலெக்டர் உயிருடன் இல்லை.
என் அப்பா, பெரியப்பா பற்றி பால்ராஜுக்கு நன்கு தெரிந்திருந்தது. கலெக்டருக்கு உறவினர்கள் என்பதைக்கூட அந்த பால்ராஜ் தெரிந்து வைத்திருந்தார்.
அந்த கறுப்பு ஆடு கஸ்டம்ஸ் அதிகாரி யார் என்பதை என் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் நான் தான் தெரியப்படுத்தினேன்.
இருவருமே “அவரா?” என்று அதிர்ந்து கேட்டார்கள்.

இனி அடுத்த அத்தியாயம்
என் மாமனார் அந்த பால்ராஜை நம்பி தீப்பெட்டி ஆர்டர் எடுத்து தொழில் செய்தது அப்போது மாமாவின் அண்ணனுக்கு வருத்தம் கொடுத்தது. என்னிடம் தன் வேதனையை தெரிவித்தார் “தொர, அவன் பெரிய ஃப்ராட். ஒன் மாமன் அவனை நம்புறது எனக்கு பிடிக்கல. விளைவு பயங்கரமாயிருக்கும்.” என்றார்.
நான் எச்சரிக்கை மணியடித்தும் மாமா கேட்கவில்லை. என்னேரமும் போதையில் இருப்பவர்.
“அதெல்லாம் நம்ம கிட்ட அவன் வேலய காட்ட மாட்டான். பயப்படாதீங்க” என்று என்னை சமாதானப்படுத்தினார்.
கள்ளன் பெரிசா? காப்பான் பெரிசா?
A criminal is a creative artiste.
பெரிய ஆர்டர். அந்த நேரம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்களை ஏற்றிச் சென்ற லாரி தீப்பற்றி எரிந்து எல்லாம் நாசம்.
பால்ராஜ் ”சரக்கை இன்சுரன்ஸ் செய்யச்சொன்னேன். உங்க மாமா கேக்கல.அவசரப்பட்டு அனுப்பிட்டாரு.”
வழியிலெயே பொருளை இறக்கி விட்டு லாரிக்கு நெருப்பு வைத்து..
பால்ராஜின் கிரிமினல் வேலை என்று தான் முடிவு கட்டும்படியானது.

கோழி களவாணி கோழி மட்டும் தான் திருடுவான். நகை திருடுறவன் நகை தான் திருடுவான்.அது மாதிரி ஒவ்வொரு திருடனுக்கும் ஒவ்வொரு லைன் இருக்கும். அதை விட்டு track மாறவே மாட்டான். இந்த பால்ராஜுக்கு தீப்பெட்டி லைன்.

..

Aug 18, 2019

மம்முட்டி “உண்ட”


மம்முட்டி “உண்ட” (Unda) பார்த்தேன்.
மலையாளத்தில் சோடை போகுமா?
’எட்டு புல்லட் மட்டுமே கையிருப்பில் கொண்ட ஒரு கேரள சப்-இன்ஸ்பெக்டர் தன் கான்ஸ்டபிள்களுடன் சட்டீஸ்கர் மாவோயிஸ்ட் ஏரியாவில் எலக்சன் பாதுகாப்புக்காக போய்’ என்பதே எவ்வளவு மாறுபட்ட கதை.
குணால்சந்த் என்ற சட்டீஸ்கர் மண்ணின் மைந்தனாக வரும் குள்ளமான அந்த நடிகர் ஓம்கார் தாஸ் மணிக்பூரி நடிப்பு விஷேச தரம்.
Age has withered Mammooty. முகத்தில் முதுமை கழுத்து வரை தெரிகிறது. ஆனால் நானூறு படங்களை தாண்டி விட்ட அறுபத்தேழு வயதில் முதுமைக்கான அடையாளம் இல்லாமல் எப்படி இருக்கமுடியும்?

மம்முட்டி ஒரு குறிப்பிட்ட காலத்தில் மூக்குப்பொடி உபயோகப்படுத்தியவர். அது மற்ற நடிகர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுத்தியது.
இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் அசோசியேட் கனக ஷண்முகம்.
ராமண்ணாவின் 'புதுமைப்பித்தன்' துவங்கி பின் அவ்வளவு படங்களிலும் இயக்குனருக்கு உதவியாக இருந்தவர்.
நீ, வீட்டுக்கு ஒரு பிள்ளை, பட்டிக்காட்டு ராஜா படங்களின் இயக்குனர்.
”அம்மன் கோவில் கிழக்காலே” விஜய்காந்த் அப்பாவாக நடித்தவர். பாக்யராஜின் “ஞானப்பழம்” கூட அவர் தலைகாட்டினார்.
பேசும்போது அவர் நடவடிக்கைகள் ரசிக்கும்படியிருக்கும். சுவாரசியமான பல திரையுலக சம்பவங்களை சொல்வார். அவர் சிரிப்பது, விவரிப்பது எல்லாம்.
மலையாள மம்முட்டி பற்றி கனகஷண்முகம் சொன்ன ஒரு தகவல்.
இந்த நிகழ்வை அவர் நிகழ்த்திக்காட்டும் போது சிரிப்பை அடக்கவே முடியவில்லை
இளைஞன் மம்முட்டி திரையுலக New comer ஆக ஆரம்ப நிலையில் நடந்த சம்பவம்.
மலையாளப்படம் தான். மலையாள டைரக்டர் மலையாளத்தில் ஒரு ஷாட் பற்றி விளக்குகிறார்.
’பேசிக்கொண்டே வரும்போது இந்த லைட்ட வாங்கிக்க’ என்று அர்த்தப்படுத்தி சொல்லியிருக்கிறார்.
சாதாரணமாக ஒரு காட்சியில் நடிக்கும் போது இப்படி சொல்லப்படுவதுண்டு. இங்க இந்த லைட்ட வாங்கிக்க, அப்படியே இங்கே நகர்ந்து இந்த டேபிள் அருகில் வரும்போது இந்த லைட்ட வாங்கிக்க
’லைட்ட முகத்தில வாங்கிக்க’ என்று அர்த்தம்.
கேமரா ஓடுகிறது. ஷாட்டில் மம்முட்டி பேசிக்கொண்டே அந்த குறிப்பிட்ட இடம் வந்தவுடன் லைட் மேன் பிடித்துக்கொண்டிருந்த லைட்டை பிடுங்க ஆரம்பிக்க, லைட்மேன் கண்ணில் மிரட்சியுடன் “ம்ஹும் மாட்டேன்” என்று லைட்டை தர மறுக்க, மம்முட்டி எப்படியாவது லைட்டை கைப்பற்றும் முயற்சியில் பிடிவாதமாக பலப்பிரயோகம் செய்ய, லைட் மேன் தளராமல் தம் பிடித்து லைட்டை இறுக்கிப் பிடித்துக்கொள்ள..
டைரக்டர் ’கட்..கட்’ சொல்லி…
All great performances have a ridiculous beginning.

Aug 17, 2019

வல்லிக்கண்ணனும், தி.க.சிவசங்கரனும், போஸ்ட் கார்டும்


”செய்துங்கநல்லூரை பார்க்கும் போதெல்லாம் ’ராஜநாயஹம் ஊர் இது’ என்று எப்போதும் நினைத்துக்கொள்வேன்.பஸ்ஸில் போகும்போது, ரயிலில் போகும்போது” வல்லிக்கண்ணன் போஸ்ட் கார்டில் இது போல இன்னும் எவ்வளவோ அடிக்கடி அன்றெல்லாம் நிறைய எழுதியிருக்கிறார்.

 ”உங்கள் உறவினர் திருநெல்வேலி உட்லண்ட்ஸ் ஓட்டல் முதலாளி ’நெல்லைத் தமிழர்’
இல. ராமகிருஷ்ணன் எனக்கு நண்பர் தான்” என்று ஒரு போஸ்ட் கார்டில் எழுதியிருந்தார்.

தி.க.சியின் கடிதங்கள். 

”தி.ஜாவின் நளபாகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள். ஒரு இரண்டு பக்கம் எழுதி எனக்கு அனுப்புங்கள்”
’ராஜநாயஹம்,இப்போது என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள்’ என்று கேட்டு எழுதுவார்
வண்ணதாசனின் ’சின்னு முதல் சின்னு வரை’ படித்து விட்டு பரவசமாக தி.க.சிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
’என் மகன் எழுத்து பற்றி நான் எதுவும் அபிப்ராயமாகக் கூட சொல்வதில்லை.’ என பதில் எழுதியவர் அடுத்தவர்கள் எழுத்து பற்றி கிட்டத் தட்ட மூக்கை நுழைப்பது போல அவ்வளவு வேகத்துடன் அக்கறை எடுத்து செயல்படும் வேகம்.

வல்லிக்கண்ணன், தி.க.சி இருவருமே எனக்கு எத்தனை கடிதங்கள் தான் எழுதியிருப்பார்கள்.
எவ்வளவு உற்சாகமான கடிதங்கள் அவை. எப்பேர்ப்பட்ட உன்னத உள்ளங்கள்.
எந்தரோ மஹானுபாவலு. இப்படி உயர்ந்த உள்ளம் கொண்ட நல்ல மனிதர்கள் காணக்கிடைக்கவே மாட்டார்கள்.
’உங்களிடமிருந்து கடிதம் வரவில்லையே? உடம்பு சரியில்லையா? வேலைப்பளு அதிகமா?’ என்று கூட வினவி ஒரு போஸ்ட் கார்ட் எழுதுவார்க்ள்
இளைய இலக்கியவாதிகளுக்கு இந்த இரண்டு ரிஷிகளும் எவ்வளவு கடிதங்கள் எழுதியிருப்பார்கள்.
பிரதிபலன் எதுவுமே இருவருமே எதிர் பார்த்ததில்லை என்பதை மறக்க முடியுமா?
போஸ்ட் கார்டில் அழகான கையெழுத்தில் எவ்வளவு நம்பிக்கையோடு, நம்பிக்கையை ஊட்டும் எண்ணங்கள்.
ஏதேனும் ஒரு கிராமத்தில் ஒரு சிறு பத்திரிக்கை என்றாலும் அதற்கும் ஒவ்வொரு இதழுக்குமே கடிதம் எழுதும் மேலான ஆத்மாக்கள்.
அரசாங்கம் ஒரு வேளை ‘இனி போஸ்ட் கார்டு கிடையாது’ என்று தடை போட்டிருந்தால் தி.க.சியும் வல்லிக்கண்ணனும் விக்கித்து, திகைத்துப் போயிருப்பார்கள்.
கோணங்கியிடம் எனக்கு வல்லிக்கண்ணனுடனும் திகசியுடனும் உள்ள கடிதத்தொடர்பு பற்றி சொன்ன போது, நிறைய கடிதங்கள் எனக்கு எழுதிக்கொண்டிருப்பது பற்றி நான் சொல்ல நேர்ந்த போது சிறுவனின் பலூனை உடைப்பது போல பதில் : “யோவ், வல்லிக்கண்ணனும், தி.க.சியும் கடிதம் எழுதுவது என்பது பல் விளக்குவது போல, குளிப்பது போல, சாப்பிடுவது போல நித்திய செயல். போஸ்ட் கார்டில் எழுதுவது அனிச்சை செயல். வல்லிக்கண்ணன் காலையில் எழுந்தார், பல் விளக்கினார், குளித்தார், சாப்பிட்டார், கடிதம் போஸ்ட் கார்டில் எழுதினார். அவ்வளவு தான். இதிலென்ன அதிசயம் இருக்கு”

கோணங்கியின் இயல்பு அது. குழந்தையின் பலூனை உடைப்பது போல தான் அவன் பேச்சு.

Aug 16, 2019

அமைச்சர் ராமையாவும் பெரியப்பாவும்


அப்பா நாகையில் சுங்க இலாகா அதிகாரியாக இருந்த போது பெரியப்பா சிதம்பரத்தில் சுங்க இலாகா அதிகாரி.
முன்னதாக இருவரும் ஒரே ஊரில் (திண்டுக்கல்) இருந்திருக்கிறார்கள். ஆனால் சில மாதங்களில் அண்ணன் தம்பி இருவரும் ஒரே ஊரில் வேலை பார்க்கக்கூடாது என்று அப்போது ஒரு பிரச்னை ஏற்பட்டு அப்பா பழனிக்கு மாற்றப்பட்டார். பெரியப்பா திண்டுக்கல்லுக்குப்பிறகு கரூருக்கு. அப்புறம் நாகப்பட்டினம். அப்பா பழனியிலிருந்து திருச்சி. பின் நாகப்பட்டினம். பெரியப்பா அப்போது சிதம்பரத்தில்.
பெரியப்பாவின் துறுதுறுப்பும் சுறுசுறுப்பும் சொல்லில் அடங்காத விஷயம்.
அப்போது ஒரு Patrolling. ஒரு ரவுண்ட்ஸ் போகும்போது ஜீப்பில் இருந்து இறங்கி சாலையில் நிற்கும் போது ஒரு கார் வந்திருக்கிறது.
பெரியப்பா அந்த காரை நிறுத்தியிருக்கிறார்.
“Please let me do my duty”
உள்ளே இருந்தவர் எரிந்து விழுந்திருக்கிறார்.
“You will be suspended and dismissed. You don’t know who I am?”
அப்போதைய தமிழக அமைச்சர் வி.ராமையாவின் கார்.
மாண்பு மிகு ராமையா தான் என் பெரியப்பாவிடம் மிக கடுமையாக நடந்து கொண்டவர்.
பெரியப்பா ரொம்ப துடியான சாமி. யாருக்குமே பயப்படுவது அவர் வாழ்க்கையில் இருந்ததே இல்லை. கனிவாக அவர் மந்திரியிடம் பேசிப்பார்த்தும் பிரயோஜனப்படவில்லை.
ராமையாவும் பெரியப்பாவும் ஆங்கில சம்பாஷணை காரசாரமாக.
“You will get your dismissal order immediately” ராமையாவின் கார் கிளம்பி விட்டது.
பெரியப்பாவின் பக்கத்தில் இருந்த சப் இன்ஸ்பெக்டரும் (அப்போது கஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸில் சப்- இன்ஸ்பெக்டர் போஸ்ட் இருந்திருக்கிறது.) சிப்பாயும் சிலையாக உறைந்து நின்றிருக்கிறார்கள்.
சிப்பாய் மெதுவாக “ உங்க மேல எந்த தப்பும் கிடையாது சார். நியாயமே இல்லாம அவரு உங்கள அவமானப்படுத்திட்டாரு. இப்ப இவரு மந்திரி. எவ்வளவு காலம் இவுங்க ஆட்டம். அந்தக்கால அரசர்கள் மாதிரியே தான் காங்கிரஸ்காரங்க எல்லாம் நெனச்சிக்கிட்டு இருக்காங்க. அடுத்த வருஷம் இவரெல்லாம் காணாம போயிருவாரு பாருங்க”
மத்திய அரசு உத்தியோகம் என்றாலும் அப்போது காங்கிரஸ் தான் மத்தியிலும் மாநிலத்திலும்.
ஒரு விஷயம் இந்த நிகழ்வில் தெளிவாக தெரிகிறது.
மந்திரி காருக்கு முன்னால பத்து கார், பின்னால பத்து கார் என்பதெல்லாம் அப்போது இருந்திருக்கவில்லை. இப்போது இருப்பது போல மாநிலத்திற்கு நிறைய மந்திரிகள் அன்றெல்லாம் இல்லை. ஒற்றை இலக்கத்தில் தான் அமைச்சர்கள்.

(காங்கிரஸ் மந்திரி கார் தனியாக வந்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை என தோன்றுகிறது.
காங்கிரஸ் தலைவர்கள் பற்றிய முக்கிய விஷயம். தொண்டர்களை 1950களில் 1960களில் அவர்கள் மதித்ததில்லை. அரசராக பாவித்து மேடையில் கூட சுல்தான்கள் போல தலையணை திண்டு போட்டு உட்கார்ந்தவர்கள். கார்களில் போகும் போது தொண்டர்கள் முன்னும் பின்னும் வர இந்த பூர்ஷ்வாக்கள் சம்மதிப்பார்களா என்பதுடன் அந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு கார் ஏது? அதனால் தான் ராமையாவின் கார் தனியாக வந்திருக்கிறது. கழகங்களின் ஆட்சியில் தொண்டர்கள் மந்திரி என் ஃப்ரண்ட், எம்.எல்.ஏ என் ஃப்ரண்ட் என்று தோளில் கை போட்டு பெருமைப்பட்டுக்கொள்ள முடிந்தது)
டிபார்ட்மெண்டில் விசாரணை நடந்திருக்கிறது.
கஸ்டம்ஸ் கலெக்டர் கடைசியில் Official report எழுதியிருக்கிறார்.
“Our honourable minister should apologize to my Inspector”
கலெக்டரும் அப்போது மத்திய அரசாங்கத்துக்கு கூட பயப்படவில்லை.

’போலீஸ் கேஸை Contest செய்ய முடியும். ஜெயிக்க முடியும்.ஆனால் கஸ்டம்ஸ் கேஸை Contest செய்து ஜெயிப்பது சிரமம்’ என்று ஒரு saying உண்டு.

சிப்பாய் தீர்க்கதரிசனம் அடுத்த வருடமே (1967) பலித்து விட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் படுதோல்வி. தி.மு.க.ஆட்சி ஆரம்பம்.
தமிழகத்தில் காங்கிரஸ் அதன் பின் கட்டெறும்பாகிப்போனது சரித்திரம்.


http://rprajanayahem.blogspot.com/2017/04/blog-post_27.html

Aug 15, 2019

மோத்தி


மோத்தி பாக்க அப்ப இருந்த நடிகர் ரவிச்சந்திரன் மாதிரி இருப்பான்.
எம்.ஜி.ஆர் ரசிகன். எம்.ஜி.ஆருக்கு பிரியாணி செய்து கொண்டு போய் கொடுத்ததை சொல்வான்.
நாகப்பட்டணத்தில ரஜுலா கப்பல் சிங்கப்பூரிலிருந்து வந்து கொண்டிருந்த காலத்தில் செழிப்பான வாழ்க்கை வாழ்ந்தவன்.
கொண்டாட்டமான வாழ்க்கை.
திருநெல்வேலியில் பிரபலமான ஒரு வியாபாரி மகளை கூட்டிக்கொண்டு வந்து விட்டான். ஜோதி. அவள் தான் முதல் மனைவி.
இரண்டாவது மனைவி முஸ்லிம் பெண். மூன்றாவது மனைவி யாரென்றால் அந்த இரண்டாவது மனைவியின் தாய்.
இரண்டாவது மனைவியோடு வீட்டுக்குள் நுழைந்த அவளுடைய அம்மா சக்களத்தியாகி விட்டாள்.
இந்த மூன்று பேரையும் ஒரே வீட்டில் தான் வைத்திருந்தான் என்பது பெரிய அதிசயம் என்றே கருத வேண்டும்.
இது தவிர நாகையிலேயே பர்மாக்காரி ஒருத்தி மோத்திக்கு பிள்ளை பெற்றிருக்கிறாள் என்று ஊரே சொல்லும்.
சிங்கப்பூருக்கு அடிக்கடி ரஜுலா கப்பலில் போய் வருவான். அங்கே ஒரு சீனாக்காரி அவனுக்கு. அவளுக்கும் ஒரு குழந்தை கொடுத்திருக்கிறான் என்பார்கள்.
ஆள் ரொம்ப கலகலப்பானவன்.
வெளி நாட்டு சாமான்கள் சப்ளை செய்வான்.
அவனுக்கு ஃபேமிலி ஃப்ரண்ட்ஸ் சினிமாக்காரர்களில் உண்டு.
எப்போதும் கவி.கா.மு.ஷெரிஃப் பற்றி சொல்வான். ‘சினிமால பாட்டெல்லாம் எழுதுவாருடா. ரொம்ப பெரிய மனுசன். மனுசன்னா அவரு தான் மனுசன்.”
எம்.ஆர்.ராதா மகன் வாசு இவனுக்கு நல்ல பழக்கம்.
அவருக்கு வெளி நாட்டு ஜாமான்கள் மோத்தி சப்ளை செய்வான். மோத்தி வீட்டுக்கே எம்.ஆர்.ஆர் வாசு வந்ததுண்டு.
பள்ளிப்படிப்பு திருச்சி செயிண்ட் ஜோசப்ஸ். அப்போதும் அப்பா கஸ்டம்ஸில் அதிகாரியாக நாகையில் இருந்தார். லீவுக்கு வரும்போது மோத்தி தான் தோஸ்த். ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன். ’டேய், மோத்தி’ என்று தான் கூப்பிடுவேன். ’டேய் தொர’ சந்தோஷமா கலகலப்பா மோத்தி சிரிப்பான்.
மூணு,நாலு பொண்டாட்டிக்காரன நான் எப்போதும் “டேய், மோத்தி”ம்பேன்.
அவன் முதல் மனைவி என்னை சினிமாவுக்கு கூட்டிக்கொண்டு போயிருக்கிறாள். ஜோதி அக்கா. நெல்லை ஜோதி ஸ்டோர் ஓனர் மகள். இவளுக்கு குழந்தை கிடையாது.
ரெண்டாவது பொண்டாட்டிக்கு தலப்பிரசவம் வீட்டிலேயே நடந்தது.
அவள் பிரசவ வலி தாங்க முடியாது அய்யோ, அம்மா என்று குரலெடுத்து அழுத போது ’தொர அழுகய பார்றா’ன்னு குலுங்கி குலுங்கி சிரித்தான் மோத்தி. நான் அப்போது அவன் வீட்டில் இருந்தேன்.
” தொர, எம்.ஆர்.ஆர் வாசு இந்த இடத்தில ஒக்காந்து எத்தன தடவ சாப்பிட்டுருக்கான் தெரியுமாடா?”
”டேய் மோத்தி, அடுத்த தடவ வாசு வந்தா சொல்லுடா. நான் பாக்கணும்.”
குழந்தை பிறந்து விட்டது. குவா,குவா. ஆம்பள குழந்தை.
”தொர, கொழந்தைக்கு நீ தான் பேர் விடணும். ஒரு முஸ்லீம் பேரா வைடா”
நான் “ அப்துல் ஹமீது”
அந்த பேரில் தான் அந்த குழந்தை வளர்ந்தான்.
”அப்பா, உங்க மகன் தொர தான் எம்பிள்ளைக்கு பேர் வச்சான்” என்னுடைய அப்பாவிடமே கலகலவென்று சிரித்தவாறு சொல்வான். மட்டுமல்ல. ஊருக்கே இதை தம்பட்டமாக சொல்வான்.
அவனை “டே மோத்தி”ன்னு நான் கூப்பிடுவதில் ரொம்ப பெருமையும் சந்தோஷமும் அடைந்தவன். “ தொர, என்ன ‘டேய் மோத்தி’ன்னு தான் கூப்பிடுவான்.” பாக்கிறவர்களிடம் எல்லாம் என்னை காட்டி சொல்லி குரலெடுத்து குலுங்கி சிரிப்பான்.
ஜோதி அக்கா தன்னை மோத்தி குடி போதையில் அடித்ததாக ஒரு நாள் என்னிடம் சொன்னாள்.
“ஏண்டா அக்காவ அடிச்ச”ன்னு அவனுக்கு கன்னத்தில் பளார் பளார்னு நாலு கொடுத்தேன்.
வலிக்கும்படியான அடி தான். ஆனால் மோத்தி சிரித்துக்கொண்டே “இனிமே அடிக்க மாட்டன்டா”
’ என்னய தொர இன்னக்கி அடிச்சிட்டான்.’ என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமெல்லாம் அன்று சொல்லிக்கொண்டிருந்தான். மறு நாள் பத்து பேர் பெரியவர்களே என்னிடம் கேட்டார்கள். “மோத்திய அடிச்சியா, அவன் சொல்றான்”
பெரிய படிப்பெல்லாம் மோத்திக்கு கிடையாது. ஆனால் ஆங்கில அறிவு உண்டு. சில அபூர்வமான வார்த்தைகளை பிரயோகப்படுத்துவான்.
”தொர, மதார் ஒரு லோஃபர்” பன்னிரெண்டு வயதில் நான் மோத்தி சொல்லி தான் Loafer முதல் முறையா கேட்டேன்.
(நம்ப பாசமலர் பீம்சிங் டைரக்ட் செய்த தர்மேந்திரா இந்தி படம் ”Loafer”லாம் அப்புறந்தான்.
இப்ப Loafer shoe நான் வைத்திருக்கிறேன்.)
மதாரும் கூட மோத்தி வயசு தான். மதாரையும் ’டேய், மதார்’ என்பேன்.
ஒரு தடவை அப்பா அடித்த போது கடலில் விழப்போகிறேன் என்று ஓடினேன். மதாரை அப்பா என்னை பிடிக்க சொல்லி அனுப்பினார்.
மதார் தான் சமாதானப்படுத்தி மீண்டும் என்னை வீட்டுக்கு அழைத்து வந்தவன்.
கரூருக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆன போது மதார் தேம்பி, தேம்பி அழுதான்.
அதன் பிறகு அப்பா கரூர், மதுரையை அடுத்து நாகைக்கு மீண்டும் ட்ரான்ஸ்பரில் வந்த போது நான் கல்லூரி படிப்பு முடித்திருந்தேன்.
மோத்தியை அவனுடைய முஸ்லிம் மனைவி தலாக் சொல்லி விலகி இன்னொருவனை திருமணம் செய்து கொண்டு விட்டாள். அவள் அம்மா (மோத்தியின் மூன்றாவது மனைவியும் மாமியாருமானவள் இறந்து விட்டாள்)
ஜோதி இடையில் ஒருவனோடு ஓடி போய் விட்டாள்.
மீண்டும் அவள் நாகைக்கே திரும்பி (இரண்டாவது மனைவியின் மகன்) அப்துல் ஹமீதை மகனாக ஏற்றுக்கொண்டு மோத்தியை மறுதலித்து விட்டாள். அப்துல் ஹமீதுக்கு தன் தாயையும் பிடிக்கவில்லை. அப்பாவையும் பிடிக்கவில்லை. அம்மாவின் புதிய கணவனையும் பிடிக்கவில்லை. அவன் அப்பாவின் முதல் மனைவி ஜோதியைத்தான் ’அம்மா’ என்று ஒட்டிக்கொண்டான்.
மோத்தி இப்ப சாப்பாட்டுக்கே வழியில்லாத Loafer. எப்படியோ கள்ளசாராயம் அவனுக்கு கிடைத்துக்கொண்டிருந்தது.
எங்கள் வீட்டு திண்ணையில் வந்து உட்கார்ந்து மோத்தி “பசிக்கிது, சாப்பாடு வேணும்” என்று ஒப்பாரி.
நான் வெளியே வந்து பார்த்தேன். நல்ல போதையில் மோத்தி. அவனுக்கு சாப்பாடு வீட்டில் என் அம்மாவிடம் வாங்கி வந்து கொடுத்தேன்.
”இனிமேல் குடித்து விட்டு எங்க வீட்டுக்கு வரக்கூடாது. சாப்பாடு வேண்டுமென்றால் குடிக்காமல் வாடா”
ஆள் எப்படி நடிகர் ரவிச்சந்திரன் போல இருப்பான். இப்ப பிச்சைக்கார கோலம்.
மறுபடியும் குடித்து விட்டு திண்ணைக்கு வந்து “சாப்பாடு வேண்டும்” என்றான்.
நான் அடித்து விட்டேன்.
“இருடா, அப்பா கிட்ட சொல்றேன்.” என்று கஸ்டம்ஸ் ஆஃபிஸ் போய் “தொர என்ன அடிச்சிட்டாம்ப்பா” என்று அழுதிருக்கிறான்.
ரோட்டில் எங்கே பார்த்தாலும் அவனை சாப்பிட வைப்பேன்.
”டேய் தொர, என்ன நீ அடிச்சில்ல. ஏன்டா சின்னப்பயலா இருக்கும்போதே நீ என்ன கன்னத்திலே அடிச்சவன் தான?” என்று மழலையாக போதையில் உளறுவான்.
என் திருமணத்திற்கு பிறகு ஒரு முறை சின்ன டூரில் காரில் நாகை வந்தேன்.
மதார் ஓடி வந்து அழுதான். “ தொர, நீ தான்டா என் தம்பி, நீ தான்டா நல்லவன்”
மோத்தி பரிதாபமான தோற்றத்துடன். மிகவும் மெலிந்து மோசமான நிலையில்.
மதார், மோத்தி இருவருமே என் மனைவியிடம் “நாங்க வளத்த புள்ளமா ஒன் புருஷன். டேய்னு தான் கூப்பிடுவான்” என்று பெருமையாக சொன்னார்கள்.
என் மாமனாரிடம் மோத்தியை காட்டி “மாமா, மோத்தியும் உங்கள மாதிரி எம்.ஜி.ஆர் ரசிகன் தான். இவன் மூனு பொண்டாட்டிய ஒரே வீட்டில வச்சி குடும்பம் நடத்துனவன்”
என்று நான் சொன்ன போது,
மிகவும் அனுபவசாலியான அவர் அவனை ஆச்சரியமாக பார்த்து விட்டு “என்ன மாப்ளே சொல்றீங்க. இவனா? நிஜமாவா? மூனு பொண்டாட்டிய ஒரே வீட்டில வச்சிருந்தானா? நம்பவே முடியலயே, அது முடியவே முடியாதே.ஏம்ப்பா மோத்தி, ஒன் மேல எனக்கு ரொம்ப மரியாத வர்துடா. நீ ரொம்ப பெரிய ஆள்டா”
மோத்தி ரொம்ப நாள் உயிரோட இருக்க மாட்டான் என்பது பார்த்தாலே அப்போது தெரிந்தது.

Aug 13, 2019

காற்று கொட்டுகிற கோபுரவாசல்- 2


வெள்ளை சட்டை பெரியவர் தான் பெரும்பாலும் லெக்சரர்.
டொனால்ட் ட்ரம்ப், மோடியையெல்லாம் அனாயசமாக தன் கண்டிப்பில் நிறுத்தினார். அமித் ஷா பற்றி அவ்வளவு தீர்க்கமான முடிவுக்கு இன்னும் இவரால் வரமுடியவில்லை. ’பின்னால பாத்துப்போம்.எப்படி வாரானோ, தெரிய மாட்டங்கு’(அன்னக்கி ஆகஸ்ட் ரெண்டாம் தேதி. அஞ்சாம் தேதி ’காஷ்மீர் 370’  க்கு என்ன மாதிரி ரீயாக்ட் செய்திருப்பார்?)
எடப்பாடி, ஓபிஎஸ், ஸ்டாலின் எல்லோரும் அவருடைய  நிர்த்தாட்சன்ய நுனி நாக்கில்.

பேங்க் மானேஜர் இவரிடம் ஒரு கையெழுத்து கேட்டிருக்கிறார். ‘ நான் என் கிரிப்ப விட முடியுமா? முடியாதுன்னேன். ’இல்ல இதுல ஒரு கையெழுத்து கட்டாயம் போடனும்’னார். சரின்னு போட்டேன்.
’இன்னொரு கையெழுத்து உங்க பெண்சாதி போடனும்’னார். எனக்கு பகீருன்னது.
‘அவ கையெழுத்து எதுக்கு. என் கையெழுத்து போதும்’
’இல்ல நாமினி அவங்க தான். கட்டாயம் இதில அவங்க கையெழுத்து வேணும்.’
என்ன செய்ய. வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்காரி கிட்ட “கொஞ்சம் பேங்க்குக்கு வரணுமே’
அவ உடனே வெறச்சிக்கிட்டா.
’எதுக்கு?’
’ஒரு கையெழுத்து போடனும்..’
ரொம்ப சுதாரிப்பா கவனமா ஆயிட்டா “கையெழுத்தா?”
“ஆமா, ஒன் கையெழுத்து”
ஒடனே “ நா மாட்டேன்.. நா கையெழுத்தல்லாம் எங்கயும் போட மாட்டேன்”
பிடிவாதமா ’முடியவே முடியாது’ன்னுட்டா. பாத்துக்க.
’ஒன்னய நம்பி நா எதுலயும் கையெழுத்து போடவே மாட்டன்’னு நின்ன நெலயில நின்னுட்டா.’
அவ்வளவு தான் வீட்டுல உள்ளவ குடுக்கற மரியாத.
அடுத்து பேச்சை ரசித்து கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் பற்றி வெள்ளை சட்டைக்காரர் மற்றவரிடம் சொன்னார்.
’தென்காசில எங்க, என்ன, எந்த கடையில ருசியாயிருக்கும்னு இவனுக்குத் தான் தெரியும், பாத்துக்க. எங்க இட்லிக்கு பொடி நல்லாருக்குன்னு பாத்து தான் நொழயிறான். தோச எங்க நல்லாருக்கும். சாம்பார் எங்க, ரசம் எந்த கட, எந்த பலகாரம் எங்க ருசியாருக்கும்’னு அத்துப்படி.’
ரசிகரான பெரியவர் “ ஆமா, இதிலென்ன இருக்கு. குடுக்கற காசுக்கு பெலன் வேண்டாமா? சும்மா காச தூக்கி குடுத்துட முடியுமா? “
அந்த தென்காசி கோயில் கோபுர வாசல் காற்றின் சுகம். சென்னப்பட்டணம் வந்த பின்பும் மறக்கவே முடியவில்லை.

https://rprajanayahem.blogspot.com/2019/08/blog-post.html

http://rprajanayahem.blogspot.com/…/what-angel-shall-bless-…

Aug 11, 2019

கும்பளாங்கி, வேலூரு, உயர்ந்த மனிதன்கும்பளாங்கி நைட்ஸ் ஒரு வழியா நானும் கூட பாத்துட்டேன்.

எப்பவுமே ஒரு சிக்கல் உண்டு. ஒரு நல்ல மளையாளப்படம் பார்க்க வாய்த்து விட்டால் தொடர்ந்து ஒரு பத்து மளையாளப்படம் பார்த்தே தீர வேண்டும் என்று temptation கொன்று எடுத்து விடும். The one thing I can't resist is, this Malayala movies temptation.
செம்மீன்ல இருந்தே இப்படித்தான். சத்யன், ப்ரேம் நசீர், மது, ஷீலா, சாரதா, ஜெயபாரதி, ஸ்ரீவித்யா, சோமன், ஜெயன், பிரதாப் போத்தன் துவங்கி மோகன்லாலும், மம்முட்டி, திலகன், எல்லாம் வரிசை கட்டி நினைவில் நிற்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
'பாவாட ப்ராயத்தில் நின்னை ஞான் கண்ட'
வாய் முணுமுணுக்கிறது.
......

வேலூர் ஜகஜ்ஜால வேடிக்கையில 
மந்திரவாதி யாரு?
ரத்தங்கக்குனது யாரு?....'உயர்ந்த மனிதன்' சிவாஜியின் 125 வது படம். 
124 படங்கள் நடித்த பின், புதிதாக ஒரு பாத்திரத்தை சிறப்பாக சித்தரிப்பதில் நயமான நேர்த்தியை நிகழ்த்திக்காட்டியதில் இருக்கிறது நடிகர் திலகத்தின் சாதனை வீச்சு. உயர்ந்த மனிதன் சிவாஜி கணேசன்