Share

Dec 13, 2019

ஏன்டா? ஏன்?

காலை உணவு தாமதமாகிறது.
முதல்வர் கோட்டைக்கு கிளம்ப தயாராகிக்கொண்டிருக்கிறார்.
அசெம்ப்ளி நடந்து கொண்டிருக்கிறதா?
அல்லது கவர்னரை சந்திக்க வேண்டியிருந்ததோ? மந்திரி சபை முக்கிய ஆலோசனை அன்று காலையில்?
ஒரு வேளை அன்று கோட்டையில் முக்கிய சந்திப்புக்காகவும் இருந்திருக்கும்?
உட்கட்சியிலேயே அவருக்கு எதிரான கலகங்கள் அவ்வப்போது இருக்கும்போது கட்சித்தலைவராகவும் அவருக்கு எவ்வளவு பதற்றம்?

முரசொலி அடியாராய் இருந்தவர்
இவரால் நீரோட்டம் அடியாராய் மாறியவர் கூட கட்சியை விட்டு வெளியேறி அப்போது குடும்பரீதியாக அந்தரங்கத்தை கிளறி கண்டபடி பேசிக்கொண்டிருந்த விஷயம்
”ஒரு முதலமைச்சராயிருக்கும் போது ஒரு கல்யாண வீட்டில்
’ நான் ஜானகியோடு பல வருடம் வாழ்ந்து விட்டு அப்புறம் தான் கல்யாணம் செய்து கொண்டேன்’ என்று பேசுறானேய்யா! உண்மையா இருந்தா கூட ஒரு முதலமைச்சர் பொண்ணு மாப்பிள்ளைய வாழ்த்திப்பேசும்போது இப்படியா பேசுவான்?”
அடியார் மதுரை மேல மாசி வீதியில் மேடையில் ஏகாரத்தில் சகட்டு மேனிக்கு பேசும்போது பழக்கடை பாண்டியின் ஆட்கள் கலவரம் செய்ய,
அடியார் மிரண்டு போய் பயத்துடன் குரல் நடுங்கி
“ டேய் பாண்டி, இது ஒன் வேல தான்டா. நான் பயப்பட மாட்டேன்டா “ என்று சொல்லி விட்டு மேடையில் இருந்து இறங்கி அம்பேல்.
அடியார் ஜூட்.

அன்று அரசியலிலும் ஆட்சியிலும் எம்.ஜி.ஆருக்கு தான் கருணாநிதியை சமாளிப்பது மட்டுமா பெரும் பிரச்னை?

மேக் அப் முடித்து, சின்ன விக் கூட பின் பக்க முடிக்காக வைத்துக் கொண்டு, கிளம்ப தயாராகி விட்ட அவசர நேரத்தில் காலை உணவு இன்னும் வரவில்லை. 
நல்ல பசியில் எம்.ஜி.ஆர்.
தோட்டத்தில் அன்று காலை கிளம்பு முன் யாரையும் சந்திக்க முடியாது என்று ஏற்கனவே தகவல் கண்டிப்பாக சொல்லி விட்டார்.
நேராய் கோட்டைக்குத் தான் போக இருக்கிறார்.
ரொம்ப முக்கிய காரியமாயிருக்கும்.
பசி. இண்டர்காமை தலைவர் அழுத்துகிறார்.
கிச்சனில் சமையல்காரரை உடனே ப்ரேக் பாஸ்ட் மாடிக்கு கொண்டு வரச்சொல்லுகிறார்.

சின்னவருக்கு உணவு கொடுப்பதை விட சமையல்காரருக்கு ராமாவரம் தோட்டத்தில் என்ன பெரிய வேலை இருக்க முடியும்.? 

மீண்டும் எம்.ஜி.ஆர் இண்டர்காமில் “ டேய், பசிக்குதுடா”
சில நிமிடங்கள் பொறுத்திருக்கிறார்.
கிளம்பி விட்டார். பசியுடன் இப்போது கோபமும்.

படியில் வேகமாக இறங்குகிறார்.
எதிரே சமையல் காரர் சுடச்சுட தோசை, கருவாட்டு குழம்புடன் மேலே படியேறி வருகிறார்.
எம்.ஜி.ஆர் கையை ஓங்கி தட்டை தட்டி விடுகிறார்.
சமையல் காரருக்கு கன்னத்தில் ஒரு ’பளார்’

” ஓத்தா, ஏன்டா ராமச்சந்திரன பட்டினி போடுற?
ஏன் ராமச்சந்திரன பட்டினி போடுற?”

மின்னல் வேகத்தில் இறங்கிப் போய்
காரில் ஏறி விட்டார்.

When Caesar says " 'Do it', it is performed."
- Shakespeare

கஜலட்சுமி   கடாட்சம்  மிகுந்த தமிழக முதல்வருக்கு அன்று
அன்னலட்சுமி அருள் இல்லை.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.