Share

Dec 27, 2018

பிறர்க்கின்னா, தமக்கின்னா




கோனக்கழுத்துக்காரன் காக்காய் பிடிப்பதை கவனமாக செய்பவன். காக்காய் பிடிக்கப்பட்டவர்க்கு கொஞ்சம் கூட சந்தேகம் வராமல் காக்காய் பிடிப்பான். கழுத்து வெட்டி வெட்டி இழுக்கும்.
நான் அஸிஸ்டண்ட் டைரக்டராக ஒரு பெரிய டைரக்டரிடம் சேர்ந்த போது அங்கே அவன் ஏற்கனவே அதே அதே ஆக இருந்தான்.
அவன் எடுக்கப்போகிற படங்களின் கதையெல்லாம் ஒரே ஃப்ரேமில் ஆறு ஹெலிகாப்டர் கீழே நிற்கும் நாற்பது கார்கள் மீது குண்டு போட்டு தூள் தூளாக்குகிற கதைகள். பெரிய பங்களா வெடி வைத்து தூள் தூளாகும் போது பக்கத்தில் உள்ள வீடுகளும் நாசமாகும் கதைகள் தான். கதாநாயகன் ஏகே 47 கையில் வைத்துக்கொண்டு ரொம்ப பதட்டத்துடன் படம் பூரா தவிச்சி தக்காளி விக்கிற கதை தான். பிரமாண்டமாய் படம் எடுப்பது தான் லட்சியமாம்.
காலையில் ஆறுமணிக்கு கிளம்பி சூட்டிங் ஸ்பாட் போனால் நின்று கொண்டே தான் இருக்க வேண்டும்.
மாலையில் ஒரு ஷாட்டுக்கும் இன்னொரு ஷாட்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் நெருஞ்சிப்பேட்டை வீட்டில் திண்டில் நான் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய உட்கார்ந்தேன்.
அந்த நேரத்தில் கதாநாயகனும் இயக்குனருமான நடிகர் சிகரெட் பற்றவைத்துக்கொண்டு ஒரு சேரில் உட்கார்ந்திருந்தார்.
பக்கத்தில் ஒரு ஸ்கூட்டர் இருந்திருக்கிறது. கேமராமேன் அந்த ஸ்கூட்டர் இருக்கும் இடம் அடுத்த ஷாட்டில் வருவதால் அதை அங்கிருந்து அகற்ற வேண்டியிருக்கிறார்.
நடிக இயக்குனர் சுவாதீனமாக அதை நகர்த்த ஆரம்பிக்கும் போது, கோண கழுத்தன் அவரைப்பார்த்தான். திண்டில் உட்கார்ந்திருந்த என்னையும் பார்த்தான். கழுத்தை வெட்டி வெட்டி இன்னொரு தடவை பார்த்தான்.
உடனே என்னைத்தவிர எல்லோருமே கவனிக்கும்படியாக ‘அய்யோ, அய்யய்யெ..இங்க பாருங்க. டைரக்டர் ஸ்கூட்டர் தள்ளும்போது இவரு எனக்கென்னன்னு உட்கார்ந்திருக்கறத பாருங்க.” அபச்சாரம், அபச்சாரம் என்று பெரிய சீன் பண்ணி விட்டான். இத்தனைக்கும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே எனக்கு தெரிந்திருக்கவில்லை.
கவனமாய் காக்காய் பிடித்தவன் ஆனதால் டைரக்டரின் சொந்த தயாரிப்பில் ரெண்டு டப்பா படம் கூட இயக்குகிற வாய்ப்பு கிடைக்கப்பெற்றான். ’புதுவெள்ளம்’ என்ற பழைய படத்தை காப்பியடித்து ஒரு படம். இன்னொரு படமும் அப்படித்தான் வேறொரு பழைய படமாய் இருந்திருக்கும்.
சில வருடங்களுக்கு முன் ஒரு நடிகர் ஒரு ஃப்ராடு பெண்ணிடம் சிக்கி அவளால் போலீஸ் பிரச்னைக்கு ஆளான போது, அவருக்கு முன் சில காலம் முன் அந்தப்பெண்ணுடன் இந்த கோண கழுத்தன் தான் இடுப்புக்கு கீழே எட்டு சுத்து பின்னி படர்ந்து கொண்டிருந்தவன் என்பதும் ஹாட் டாபிக்காக இருந்தது.

காலம் உருண்டதோ ஓடியதோ பறந்ததோ.

கொஞ்ச காலம் முன் வரை ஒட்டுண்ணியாக அந்த பிரபல இயக்குனரிடம் தான் இருந்திருக்கிறான். எங்கோ போய் விட்டு, அவருடைய ஆஃபிஸில் நடுநிசிக்கு மேல் சுவரேறிக் குதித்து வந்து படுப்பானாம். குடி போதை தான் எப்போதும்.
அந்த டைரக்டர் “ச்சீ போய்த்தொலை” என்று துரத்தி விட்டார்.


போன மாசம் சாலிகிராமத்தில் ஒரு அறையில் செத்துக்கிடந்தானாம். ரெண்டு நாள் கழித்து கதவை உடைத்துத் தான் நாறுன பொணத்தை எடுத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.